ஜேர்மனியின் கூட்டணி அரசாங்கம் போருக்கும், சிக்கனத்திற்குமான வரவு-செலவுத் திட்டத்தை நிறைவேற்றுகிறது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

வெள்ளியன்று ஜேர்மன் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 2023 வரவு-செலவுத் திட்டம் உழைக்கும் மக்கள் மீதான போர்ப் பிரகடனமாகும். அதன் மத்தியில் இராணுவ செலவினங்களுக்கான பாரிய அதிகரிப்பும், சுகாதாரம், கல்வி மற்றும் சமூக நலன் ஆகிய துறைகளில் தீவிர வெட்டுக்களும் உள்ளன.

ஜூன் மாதம், சமூக ஜனநாயகவாதிகள் (SPD), தாராளவாத ஜனநாயவாதிகள் (FDP) மற்றும் பசுமைக் கட்சிகளின் 'போக்குவரத்து விளக்கு' கூட்டணியின் உத்தரவின் பேரில், ஆயுதப்படைகளுக்கான பிரத்தியேக சொத்துக்களுக்கு நிதியுதவியை மத்திய நாடாளுமன்றம் நிறைவேற்றியது. 100 பில்லியன் யூரோக்களுக்கும் அதிகமான தொகையுடன் இது இரண்டாம் உலகப் போரின் முடிவில் இருந்து மிகப்பெரிய மறுஆயுதமயமாக்கலை தொடங்கியது. முன்னணி அரசு பிரதிநிதிகள் ஜேர்மனியின் ஆக்கிரோஷமான வெளிநாட்டு மற்றும் பெரும் அதிகாரக் கொள்கைக்கு திரும்புவதாக அறிவித்த 2013/14 வெளியுறவுக் கொள்கை மாற்றத்துடன் தொடங்கப்பட்ட புதுப்பிக்கப்பட்ட ஜேர்மன் இராணுவவாதத்தின் நீண்டகால விளைவுகள், இந்த வரவு-செலவுத் திட்டத்தில் பிரதிபலிக்கிறது.

பெருமளவில் அதிகரித்து வரும் ஒரே செலவு இராணுவ செலவு மட்டுமே. அதற்கு மொத்தம் 58.6 பில்லியன் யூரோ 2023 வரவு-செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டோடு ஒப்பிடுகையில் 8.2 பில்லியன் அதிகரிப்பாகும். இதற்கு 8.5 பில்லியன் சிறப்பு நிதியிலிருந்து வருகின்றது. இது உத்தியோகபூர்வமாக பாதுகாப்பு அமைச்சக வரவு-செலவுத் திட்டத்தின் பகுதியாக இல்லை. இந்த கூடுதல் பணம், F35 போர் விமானங்கள், CH-47 கனரக போக்குவரத்து ஹெலிகாப்டர்கள், பூமா காலாட்படை கவச வாகனங்கள், நான்கு F126 போர் கப்பல்கள் மற்றும் படையினருக்கான தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்களை வாங்குவதற்கு பயன்படுத்தப்படும்.

எதிர்வரும் ஆண்டுகளில், பாதுகாப்பு வரவு-செலவுத் திட்டம் இன்னும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பாதுகாப்பு மந்திரி கிறிஸ்டின லம்பிரைக்ட் (SPD) நாடாளுமன்றத்தில், 'இந்த வரவு-செலவுத் திட்டம் எதிர்காலத்தில் அதிகரிக்க வேண்டும் என்று இன்று பல்வேறு தரப்பிலிருந்தும்' கூறப்படுவதை கேட்டதற்கு 'மிகவும் நன்றியுள்ளவளாக' இருப்பதாகக் கூறினார். தற்போதைய அதிகரிப்பு 'ஓரளவிற்கு சமாளிக்கப்' போதுமானது என்று அவர் இழிந்த முறையில் கூறினார்.

'ஆயுதப்படைகளுக்கான சிறப்பு சொத்து நிதிகளுக்காக 'தாராளவாத ஜனநாயவாதிகளுக்கான பாராளுமன்றக் குழுவில் அமர்ந்துள்ள கார்ஸ்டன் கிளைன், இதில் சம்பந்தப்பட்ட தொகைகளை பற்றி தெளிவுபடுத்தினார். 'இந்த ஜேர்மன் நாடாளுமன்றம் மூலம் 300 பில்லியன் யூரோக்கள், வரி செலுத்துவோர் மூலம் மத்திய அரசாங்கத்தால் நமது ஆயுதப்படைகளை ஆயுதமயமாக்குவதற்கும், ஆயுதங்களை வாங்குவதற்கும் பாதுகாப்பு அமைச்சகத்திற்கு வழங்கப்படுகிறது. இந்த பதவிக்காலத்தில் மட்டும் 300 பில்லியன் யூரோக்கள்!”.

வருடாந்த வரவு-செலவுத் திட்டங்களின் அடிப்படையில், 2024, 2025 மற்றும் 2026 ஆம் ஆண்டுகளில் ஆண்டு சராசரியாக 80.5 பில்லியன் யூரோக்கள் இராணுவத்திற்கு கிடைக்கும். அதுவும் ஒரு ஆரம்பம் மட்டுமே. ஜேர்மனியை மீண்டும் 'முன்னணி இராணுவ சக்தியாக' (லம்பிரெக்ட் இன் கூற்று) மற்றும் Bundeswehr ஐ 'ஐரோப்பாவில் சிறந்த ஆயுதம்தரித்த ஆயுதப் படையாக' (சான்சிலர் ஓலாஃப் ஷோல்ஸ் இன் கூற்று) மாற்றும் அறிவிக்கப்பட்ட இலக்கை ஆளும் வர்க்கம் தொடர்கிறது.

சான்சிலர் ஓலாஃப் ஷோல்ஸ் (SPD) 23 நவம்பர் 2022 அன்று நாடாளுமன்ற விவாதத்தில் பேசுகிறார் [AP Photo/Markus Schreiber]

புதன்கிழமை விவாதத்தில் தனது உரையில், ஷோல்ஸ் பைத்தியக்காரத்தனமான மறுஆயுதமயமாக்கல் திட்டங்களைப் பற்றிய உட்பார்வையைக் கொடுத்தார். 'சிறப்பு சொத்துக்கள்' நிதியானது ஜேர்மனியை 'ஒரு ஒழுங்கான, விவேகமான பாதை மாற்றத்தை ஒழுங்கமைக்க உதவும்' என்று அவர் கூறினார். நாங்கள் பொருளாதார உற்பத்தியில் 2 சதவீதத்தை ஆயுதப்படைகளுக்கு செலவிட விரும்புகிறோம்' என்று அவர் அறிவித்தார்.

தற்போது முக்கியமாக ரஷ்யாவிற்கு எதிராக இயக்கப்பட்டுள்ள போர் போக்கை செயல்படுத்துவதற்காக முன்னரே முடிவெடுக்கப்பட்ட பொருளாதாரத்தை ஆயுதங்களை நோக்கி திருப்ப ஆளும் வர்க்கம் செயல்பட்டு வருகிறது. 'புதிதாக உருவாக்கப்படவேண்டிய பொருட்களுக்காக தொழிற்சாலைகள் மற்றும் இயந்திரங்கள் புதிதாக உருவாக்கப்படுவதை நாங்கள் உறுதி செய்ய வேண்டும்' என்று ஷோல்ஸ் கூறினார். இது 'ஆயுதப்படைகள் பல தசாப்தங்களாக செயல்படும் வகையில் அவற்றினை ஆயுதமயப்படுத்தப்பட வேண்டும். அதற்குத்தான் இந்த சிறப்பு நிதி: இது ஒரு நீண்ட கால திட்டமாகும்”.

இந்த 'நீண்ட கால' மறுஆயுதமயமாக்கல் தொழிலாள வர்க்கத்தின் வாழ்க்கைத்தரத்தின் மீதான வரலாற்றுரீதியான தாக்குதல்களுடன் ஒன்றிணைந்து செல்கிறது. ரஷ்யாவிற்கு எதிரான நேட்டோ தாக்குதலின் காரணமாக எரிசக்தி விலைகள் விண்ணைத் தொடும் அதேவேளையில், பல தசாப்தங்களில் மிக உயர்ந்த பணவீக்க விகிதம் மில்லியன் கணக்கானவர்களை ஏற்கனவே வறுமையில் தள்ளுகிறது. போரின் செலவுகள் முற்றிலும் உழைக்கும் மக்களின் மீது சுமத்தப்படுகின்றது. பணவீக்கத்தினை தவிர்த்து, இவை இரண்டாம் உலகப் போரின் முடிவின் பின்னரான மிகப்பெரிய வெட்டுக்களாகும்.

பெயரளவில், மொத்த வரவு-செலவுத் திட்டம் கடந்த ஆண்டு 495.79 பில்லியன் யூரோக்களில் இலிருந்து 476.29 ஆகக் கிட்டத்தட்ட 20 பில்லியன் குறைந்துள்ளது. 2021 இல், அது இன்னும் 556.6 பில்லியன் யூரோவாக இருந்தது. 2022 இல் 138.9பில்லியன் உடன் ஒப்பிடும்போது அடுத்த ஆண்டு திட்டமிடப்பட்ட புதிய கடன் 45.61பில்லியன் மட்டுமே.

நிதி மந்திரி கிறிஸ்டியன் லிண்ட்னர் (FDP) நாடாளுமன்றத்தில் கடன் உச்சவரம்பு கடைப்பிடிப்பதற்கு இணங்குவதாக பெருமையடித்தார். எதிர்காலத்தில் இன்னும் கடுமையான வெட்டுக்கள் ஏற்பட வாய்ப்புள்ளது என்றார். தற்போதைய சிக்கன வரவு-செலவுத் திட்டத்தில், 'வரவு-செலவு இயல்புநிலை இன்னும் எட்டப்படவில்லை'. மேலும் 'முன்பு சம்பாதித்ததை மட்டுமே செலவழிக்க முடியும் என்ற கொள்கைக்கு விரைவில் திரும்ப வேண்டும் என்பதே இந்தக் கூட்டணியின் கூற்று' ஆகும். 2024 இல், 12.3 பில்லியன் யூரோக்கள் மட்டுமே நிகரக் கடன் வாங்கினால், வரவு-செலவுத் திட்டம் இன்னும் கிட்டத்தட்ட 53 பில்லியன் யூரோக்களால் குறைந்து 423.7 பில்லியன் ஆகும்.

மிகப்பெரிய சேமிப்பு சுகாதாரத்துறையில் உள்ளது. அதற்கான இந்த ஆண்டு, வரவு- செலவுத் திட்டம் நடந்து கொண்டிருக்கும் தொற்றுநோய்க்கு மத்தியில் கிட்டத்தட்ட 40 பில்லியன் யூரோக்கள் குறைக்கப்பட்டு(!) 64.36 யூரோக்களிலிருந்து 24.48 யூரோக்கள் ஆகும். இது ஏற்கனவே ஜேர்மனியில் மட்டும் 157,000 க்கும் அதிகமான உயிர்களை பலிகொண்டுள்ளது. தற்போது, வரவிருக்கும் குளிர்கால அலைக்கு முன்பே, ஒவ்வொரு வாரமும் 1,000 க்கும் மேற்பட்ட மக்கள் வைரஸ் தொற்றுக்கு ஆளாகிறார்கள். ஆளும் வர்க்கம் கடைசியாக எஞ்சியிருக்கும் பாதுகாப்பு நடவடிக்கைகளை முடிவுக்குக் கொண்டு வந்து, தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதற்கான நிதியை முற்றிலுமாக இரத்து செய்வதன் மூலம் இதற்கு பிரதிபலிப்பை காட்டுகின்றது.

எனவே, தடுப்பு மற்றும் சுகாதார அமைப்புகளுக்கான ஒதுக்குதல் €9.57 பில்லியனில் இருந்து €2.59 பில்லியனாக குறைகிறது. இந்த தொகையில் கோவிட்-19க்கு எதிராக போராடுவதற்கான மானியம் €119.4 மில்லியன் (2022: €1.9 பில்லியன்) மட்டுமே. தடுப்பூசி பிரச்சாரமும் முக்கியமாக நிறுத்தப்பட்டுள்ளது. வரவு-செலவு திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ள 'SARS-CoV-2 க்கு எதிரான தடுப்பூசிகளின் மத்திய கொள்முதல் மானியம்' கடந்த ஆண்டின் 7.09 பில்லியனிலிருந்து €3.02 பில்லியனாகக் குறையும்.

ஏற்கனவே உடைந்த சுகாதாரத்துறையின் மற்ற அனைத்து பகுதிகளிலும் கடுமையான வெட்டுக்கள் உள்ளன. எடுத்துக்காட்டாக, 'செவிலியர் பராமரிப்பு மற்றும் பிற சமூகப் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கான' செலவு €2பில்லியனால் குறைக்கப்ப்பட்டு 3.28 பில்லியனிலிருந்து €1.08 பில்லியனாகக் குறையும்.

ஏற்கெனவே பாதிக்கப்பட்டுள்ள கல்வித் துறைக்கும் உதவி வெட்டப்படுகிறது. கல்வித்துறைக்கான வரவு-செலவுத் திட்டம் உத்தியோகபூர்வமாக 500 மில்லியன் யூரோக்கள் அதிகரித்து 21.46 பில்லியன் யூரோக்கள் ஆகும் (2022: 20.89 பில்லியன் யூரோக்கள்). ஆனால் பணவீக்கத்திற்கு ஏற்றவாறு மாற்றியமைக்கப்படும், இது மிகப்பெரிய குறைப்பைக் குறிக்கிறது. அதே நேரத்தில், கல்வித் துறையானது போர்க் கொள்கைக்கு சேவை செய்வதற்கு அதிகளவில் ஈடுபடுத்தப்படுகிறது. உதாரணமாக, பீலபெல்ட் நகர பல்கலைக்கழகத்தில் மோதல் மற்றும் வன்முறைக்கான இடைநிலை ஆராய்ச்சிக்கான நிறுவனத்தில் 'மோதல் கல்வித்துறையை' (“Conflict Academy”) நிறுவுவதற்கு வரவு-செலவுத் திட்டத்திற்கு €2.1 மில்லியன் அடங்கும். எதிர்வரவிருக்கும் வரவு-செலவுத் திட்ட ஆண்டுகளில், இது மற்றும் இதே போன்ற திட்டங்களுக்கு இன்னும் மில்லியன் கணக்கான நிதியளிக்கப்படவுள்ளது.

'சமூக சீர்திருத்தங்கள்' என்று இந்த கூட்டணி அரசினால் அழைக்கப்படுபவற்றால் இந்த வரவு-செலவுத் திட்டத்தினால் அடிக்கோடிட்டுக் காட்டப்படும் அதன் வர்க்கத் தன்மையை மறைக்க முடியாது. கிறிஸ்துவ ஜனநாயகக் கட்சியினரின் (CDU/CSU) வாக்குகளுடன் வெள்ளிக்கிழமையன்று நிறைவேற்றப்பட்ட 'குடிமகன் வருமானம்' வெறுக்கப்படும் 'ஹார்ட்ஸ்-IV' நலன்புரி உதவிதிட்டத்திற்கு வேறு பெயரே தவிர வேறொன்றுமில்லை. ஷோல்ஸின் 200 பில்லியன் யூரோ பாதுகாப்பு குடை போன்ற 'உதவி பணம்' என்று அழைக்கப்படுவதில் பெரும்பகுதி, 2020 இல் கொரோனா வைரஸ் உதவிப் பொதிகளை போலவே, பெரிய நிறுவனங்கள் மற்றும் பெரும் பணக்காரர்களின் பைகளில் பாய்கிறது.

அனைத்து ஸ்தாபகக் கட்சிகளின் சதித்திட்டத்தை உழைக்கும் மக்கள் எதிர்கொள்கின்றனர் என்பதை நாடாளுமன்றத்தில் நடந்த முழு 'விவாதமும்' அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. வரவு-செலவுத் திட்டம் பற்றி விமர்சனம் ஏதாவது இருந்தால், அது அடிப்படையில் வலதுசாரிகளிடம் இருந்து வந்தது. CDU/CSU, தீவிர வலதுசாரி ஜேர்மனிக்கான மாற்றீடு (AfD) பிரதிநிதிகள் மறுஆயுதமாக்கல் இன்னும் வேகமாக முன்னெடுக்கப்படவில்லை என்று புகார் கூறினர்.

இடது கட்சியின் பேச்சாளர்களிடம் பாதுகாப்பு வரவு-செலவுத் திட்டத்தைப் பற்றிய பாசாங்குத்தனமான விமர்சனங்கள் இருந்தபோதிலும், அவர்கள் இராணுவமயமாக்கலுக்கு பின்னால் நிற்கிறார்கள் என்பதையும் தெளிவுபடுத்தினர். உதாரணமாக, 'ஆயுதப்படைகளுக்கான சிறப்பு நிதி' குழுவில் உள்ள இடது கட்சியின் பிரதிநிதியான கெஸீன லொட்ஷ், 'தேசிய பாதுகாப்பிற்காக நன்கு ஆயுதம் ஏந்திய இராணுவம்' என்பது 'எங்கள் அரசியலமைப்புரீதியாக உத்தரவாதம் அளிக்கப்பட்ட நிலைப்பாடு' என்று விவரித்தார். வாரத்தின் தொடக்கத்தில், துரிங்கியா மாநிலத்தின் 'இடதுசாரி' மாநிலப் பிரதம மந்திரியும், தற்போதைய கூட்டாட்சி மேல்மன்றத்தின் தலைவருமான போடோ ரமேலோ கூட உக்ரேனுக்கு ஆயுதங்கள் வழங்குவதற்கும், கட்டாய இராணுவ சேவையை மீண்டும் அறிமுகப்படுத்துவதற்கும் ஆதரவாகப் பேசியிருந்தார்.

இடது கட்சியும் முதலில் திட்டமிட்டதை விட 1.8 பில்லியன் யூரோக்கள் அதிகமாக இருந்தாலும் கூட உள்நாட்டு விவகார வரவு-செலவுத் திட்டத்தை வலதுபுறத்தில் இருந்து விமர்சித்தது. செலவில் பாதி பாதுகாப்பு அதிகாரிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. மத்திய உள்துறை அமைச்சகம் மற்றும் அதன் துணை திணைக்களங்கள், உள்நாட்டு இரகசிய சேவை உட்பட 1,607 கூடுதல் பதவி நியமனங்களைப் பெறுவார்கள்.

இது, இடது கட்சிக்கு வெளிப்படையாக போதாது உள்ளது. அவரது உரையில், உள்நாட்டு விவகாரக் குழுவில் கட்சியின் பிரதிநிதியான மார்ட்டினா ரென்னர், 'இன்று வரை, கடந்த வரவு-செலவுத் திட்டத்தில் அதிகரிப்பதாக கூறப்பட்ட பதவிகள் கிட்டத்தட்ட நிரப்பப்படவில்லை' என்று புகார் கூறினார். மத்திய காவல்துறையில் மட்டும் 9,000 காலியிடங்கள் உள்ளன” என்றார்.

இடது கட்சியின் வலதுசாரி முதலாளித்துவ குணாதிசயத்தை அவர்கள் இன்னும் இராணுவம் மற்றும் காவல்துறைக்கு அழைப்பதை விடுவதைத்தவிர வேறு எதுவும் சிறப்பாக விளக்க முடியாது. அரசு எந்திரம் மற்றும் உயர் நடுத்தர வர்க்க அடுக்குகளின் கட்சியாக, இடது கட்சி, முதலாளித்துவப் போருக்கு தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களின் வளர்ந்து வரும் எதிர்ப்பையும், புனித நீருக்குப் பிசாசு அஞ்சுவது போன்ற சிக்கனக் கொள்கைகளையும் கண்டு அஞ்சுகிறது. 2014 ஐரோப்பிய தேர்தல்களில், ஒரு சுதந்திரமான தொழிலாள வர்க்க இயக்கத்தை நசுக்கும்போது ஆளும் உயரடுக்கிற்கு அது தங்கள் பக்கம் நிற்கிறது என்பதை சமிக்ஞை செய்ய 'புரட்சி-வேண்டாம் நன்றி!' என்று பதாகைகளை ஒட்டியது.

சோசலிச சமத்துவக் கட்சி (Sozialistische Gleichheitspartei - SGP) அத்தகையதொரு தொழிலாள வர்க்க இயக்கத்தை தயாரித்து வருகிறது. இந்தக் காரணத்திற்காகவும் பேர்லின் மாநிலத் தேர்தலில் பங்கேற்கிறது. எங்கள் தேர்தல் அறிக்கை பின்வருமாறு கூறுகிறது: “உத்தியோகபூர்வ அரசியலில் இனி வெளிப்படுத்தப்படாத பாரிய எதிர்ப்பிற்கு நாங்கள் குரலையும், சோசலிச முன்னோக்கையும் கொடுக்கிறோம். வங்கிகள் மற்றும் பெருநிறுவனங்களின் அதிகாரத்தை உடைத்து அவற்றை ஜனநாயகக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவராமல் போரை நிறுத்த முடியாததுடன், சமூக அழிவை முடிவுக்கு கொண்டுவர முடியாது”.

போர் வரவு-செலவுத் திட்டம் நிறைவேற்றப்பட்டதானது சோசலிச சமத்துவக் கட்சியின் சோசலிச வேலைத்திட்டத்திற்கு மிகப்பெரிய முக்கியத்துவத்தையும் அவசியத்தையும் கொடுக்கிறது.

Loading