சீனாவின் ஷெங்ஷோவுவில் ஃபாக்ஸ்கான் ஆலை தொழிலாளர்கள் மத்தியில் கோபம் வெடித்தது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

உலகின் பாதியளவு ஆப்பிள் ஐபோன்களை உற்பத்தி செய்யும் ஷெங்ஷோவுவில் உள்ள மிகப்பெரிய ஃபாக்ஸ்கான் ஆலையில் செவ்வாயன்று இரவு ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் ஈடுபட்ட ஆர்ப்பாட்டங்கள் வெடித்தன. முக்கியமாக சமூக ஊடகங்கள் வழியாக பரவிய இந்த குழப்பம் தொடர்பான செய்திகள் கடுமையான உத்தியோகபூர்வ தணிக்கைக்கு உட்படுத்தப்பட்டதால் குறைவான தகவல்களே வெளியாகின.

Loading Tweet ...
Tweet not loading? See it directly on Twitter

ஆயினும்கூட, தொழிலாளர்கள் வழங்கப்படாத ஊக்க ஊதியம், மோசமான வேலை மற்றும் வாழ்க்கை நிலைமைகள் குறித்து போராடிய நிலையில், பெருமளவிலான பொலிசாருடன் அவர்கள் மோத நேரிட்டதாகத் தெரிகிறது. மேலும், கோவிட்-19 நோயால் பாதிக்கப்படும் சாத்தியமுள்ள மற்றவர்களுடன் சேர்ந்து ஒருபுறம் வேலை செய்யவும், மற்றும் தங்குமிடங்களில் அவர்களுடன் சேர்ந்து வாழவும் வேண்டிய கட்டாயம் இருப்பது குறித்தும் தொழிலாளர்கள் தங்கள் கவலையை தெரிவித்தனர்.

அக்டோபரில் கோவிட்-19 வெடிப்பிற்கு நடவடிக்கை எடுக்கும் விதமாக, ஃபாக்ஸ்கான் ஆரம்பத்தில் நோய்தொற்றுக்களைப் புறக்கணிக்க முயன்றது, பின்னர் உற்பத்தியை தடையின்றி தொடரும் நோக்கில் மூடப்பட்ட-வளைய அமைப்பு (closed-loop system) என்றழைக்கப்பட்ட நடவடிக்கையைத் திணித்தது. அதாவது, ஒட்டுமொத்த தொழிலாளர்களும் ஆலையிலேயே அடைத்து வைக்கப்பட்டனர், அதேவேளை பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் அவர்களின் தங்குமிடங்களில் தங்கியிருக்க கட்டாயப்படுத்தப்பட்டனர்.

ஃபாக்ஸ்கான் ஷெங்ஷோவு ஒரு சிறிய நகரமாகும், இங்கு உச்ச வேலைக் காலங்களில் 350,000 தொழிலாளர்கள் வரை இருப்பார்கள். அதன் முழு திறனளவில், ஆலை ஒரு நாளைக்கு 500,000 தொலைபேசிகளை தயாரிக்க முடியும். 10 அல்லது 12 அடுக்கு மாடிகள் கொண்ட பிரமாண்டமான தங்குமிட வளாகங்களில் ஒரு அறைக்கு எட்டு தொழிலாளர்கள் வீதம் அடைக்கப்பட்டுள்ளனர்.

ஆலையில் நிலவும் பயங்கரமான நிலைமைகள் மற்றும் நோய் தொற்றுவது குறித்த பயம் ஆகியவற்றினால் ஏற்பட்ட விரக்தியால் நவம்பர் தொடக்கத்தில் ஆலையில் பாரிய வெளிநடப்பு நடத்தப்பட்டது. ஷெங்ஷோவு நகரில் கோவிட்-19 நோய்தொற்று வெடித்ததை அடுத்து, பொதுப் போக்குவரத்து முடக்கப்பட்டிருந்ததால், தொழிலாளர்கள் தங்கள் உடமைகளுடன் தொழிற்சாலையை விட்டு கால்நடையாக வெளியேறுவதை சமூக ஊடக வீடியோக்கள் காட்டின.

அமெரிக்காவிலும் சர்வதேச அளவிலும் கிறிஸ்துமஸ் பண்டிகை பருவகால விற்பனைக்கு சரியான நேரத்தில் புதிய ஐபோன் 14 மாடலின் உற்பத்தியை அதிகரிக்க ஆப்பிள் நிறுவனம் கொடுத்த அழுத்தத்தின் கீழ், ஃபாக்ஸ்கான் நிறுவனம் உள்ளூர் அரசாங்கத்துடன் இணைந்து 100,000 புதிய தொழிலாளர்களை பணியமர்த்த ஊதியம் மற்றும் ஊக்க ஊதியங்களுக்கான வாக்குறுதிகளை வழங்கி ஒரு பாரிய ஆட்சேர்ப்பு பிரச்சாரத்தைத் தொடங்கியது.

இந்த வார ஆர்ப்பாட்டங்கள், முக்கியமாக வாக்குறுதிப்படி ஊதியமும் ஊக்க ஊதியங்களும் வழங்கப்படாததால் கோபமடைந்த புதிதாக பணியமர்த்தப்பட்ட தொழிலாளர்கள் மத்தியில் வெளிப்படையாக எழுந்தன.

ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் ஒரு அறிக்கை நிலைமையை இவ்வாறு விவரித்தது: “ஒரு வீடியோ பதிவின்படி, ’எங்கள் சம்பளத்தை எங்களுக்குக் கொடுங்கள்!’ என்று கோஷமிட்ட தொழிலாளர்கள், முழு ஹஸ்மத் உடை அணிந்தவர்களால் சூழப்பட்டிருந்தனர், சிலர் தடிகளை ஏந்தியிருந்தனர். மற்ற வீடியோ பதிவுகள் தொழிலாளர்கள் மீது கண்ணீர்ப்புகைகள் பாய்ச்சப்படுவதையும், தடுப்புக்காவல் தடைகளை அவர்கள் அகற்றுவதையும் காட்டின.”

Gizmodo.com வலைத் தளம் இவ்வாறு தெரிவித்தது: “ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் ஒரே இரவில் ஐபோன் தொழிற்சாலை வளாகத்திற்குள் நுழைந்து, தடுப்புக்களையும் பாதுகாப்புச் சோதனைச் சாவடிகளையும் உடைத்துக்கொண்டு முன்னேறும் காட்சியை வியத்தகு வீடியோக்கள் படம் பிடிக்கின்றன. போராட்டக்காரர்களை பொலிசாரும் பாதுகாப்புப் படையினரும் பாதுகாப்பு கேடயங்கள் கொண்டு தடுத்ததாகவும், அவர்கள் மீது தடியடி நடத்தியதாகவும், மற்றும் மூடப்பட்ட தெருக்களில் அவர்களை தடுத்து வைத்து அவர்கள் மீது கண்ணீர்ப்புகைகளை பாய்ச்சியதாகவும் அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

“போராட்டக்காரர்கள் பொலிசார் மற்றும் பாதுகாப்புப் படையினருடன் மோதுவதையும், அவர்களில் பெரும்பாலோர் தலை முதல் கால் வரை மூடிய வெள்ளை ஹஸ்மத் உடையில் இருப்பதையும் வீடியோக்கள் காட்டுகின்றன. மற்ற வீடியோக்கள் எதிர்ப்பாளர்கள் பெரும் அலையாக திரண்டு தடுப்புகளை கடந்து செல்வதைக் காட்டுகின்றன, மேலும் இணையத்தில் நேரடியாக காட்டப்பட்ட வீடியோக்கள் ஆர்ப்பாட்டக்காரர்கள் ஐபோன் தொழிற்சாலையில் பாதுகாப்புச் சோதனைச் சாவடிகளை அழிப்பதைக் காட்டுகின்றன.”

மோதல்களில் நேரடியாக ஈடுபட்ட தொழிலாளர்களுக்கு மற்ற தொழிலாளர்களிடமிருந்து தெளிவாக பரந்த அனுதாபம் கிடைத்துள்ளது. ப்ளூம்பேர்க்கின் கூற்றுப்படி, சமூக ஊடக வீடியோக்கள், “பக்கவாட்டிலிருந்து அல்லது பால்கனிகளில் இருந்து இந்த ஆர்ப்பாட்டங்களைக் கவனித்தவர்கள் ‘சண்டை, சண்டை’ என்று கூச்சலிடுவதைக் காட்டின.

ஒரு ஃபாக்ஸ்கான் தொழிலாளி இவ்வாறு கூறியதாக BBC தெரிவித்துள்ளது: “அவர்கள் ஒப்பந்தத்தை மாற்றிவிட்டார்கள், அதனால் அவர்கள் உறுதியளித்தபடி மானியத்தைப் பெற முடியவில்லை. அவர்கள் எங்களைத் தனிமைப்படுத்துகிறார்கள், ஆனால் எங்களுக்கு உணவு வழங்குவதில்லை. அவர்கள் எங்களின் தேவைகளை நிறைவேற்றாவிட்டால், நாங்கள் தொடர்ந்து போராடுவோம்.” மேலும், பொலிசாரின் தடியடி தாக்குதலால் ஒருவர் ‘கடுமையாக காயமடைந்ததை’ தான் பார்த்ததாக அவர் கூறினார்.

ஆலைக்குள் இருக்கும் தொழிலாளர்களுக்கு நெருக்கமான இரண்டு முன்னாள் ஃபாக்ஸ்கான் ஷெங்ஷோவு தொழிலாளர்களை மேற்கோள் காட்டி, South China Morning Post பத்திரிகை, ஆட்சேர்ப்பின் போது நிறுவனம் அளித்த வாக்குறுதிகளுக்கு இணங்காததால் தொழிலாளர்கள் தங்கள் தங்குமிடங்களில் இருந்து செவ்வாய்க்கிழமை மாலை வெளியேறியதாக விளக்கியது.

பிப்ரவரி 15, 2023 வரை ஆலையில் தங்கியிருந்து பணிபுரியும் புதிய ஊழியர்களுக்கு உறுதியளிக்கப்பட்ட ‘தக்கவைப்பு கொடுப்பனவு’ விதிமுறைகள் மாற்றப்பட்டுள்ளதாக ஒரு முன்னாள் தொழிலாளி செய்தித்தாளிடம் தெரிவித்தார். ஊக்க ஊதியம் பெற தொழிலாளர்கள் இப்போது மார்ச் 15 வரை கூடுதலாக ஒரு மாதத்திற்கு தங்கியிருக்க வேண்டும்.

கோபம் வெறுமனே ஊதியம் மற்றும் ஊக்க ஊதியங்கள் பற்றியது மட்டுமல்ல.

பிபிசி, கார்டியன் மற்றும் ராய்ட்டர்ஸ் உள்ளிட்ட மேற்கத்திய ஊடகங்களில் பல செய்திகள் வெளியாகி இருப்பது குறிப்பிடத்தக்கது, கோவிட்-19 நோய்தொற்றுக்களை ஒடுக்கும் நடவடிக்கைகளை தொழிலாளர்கள் எதிர்க்கிறார்கள் என்று பொய்யாகக் கூறி, அவர்கள் வேண்டுமென்றே குட்டையைக் குழப்புகிறார்கள். உண்மை இதற்கு முற்றிலும் எதிரானது – தொழிலாளர்கள் தங்கள் சமூக ஊடக இடுகைகளில் வைரஸ் பரவுவதைத் தடுப்பதற்கு போதுமான நடவடிக்கைகள் எடுக்கப்படாதது குறித்த தங்கள் கவலைகளை தெளிவாக பதிவு செய்துள்ளார்கள்.

சீன மொழி சமூக ஊடகங்களை கண்காணிக்கும் What’s on Weibo இணைய தளம், மற்ற வாக்குறுதிகள் மீறப்பட்டுள்ளதை விளக்கிய ஒரு நீண்ட இடுகையை மேற்கோள் காட்டியது. “ஃபாக்ஸ்கான் நிறுவனம் முதலில் புதிய தொழிலாளர்கள் மற்றும் நிரந்தரத் தொழிலாளர்கள் தனித்தனியாக வாழ்வார்கள் என உறுதியளித்திருந்தது, ஆனால் உண்மையில் அவர்கள் அனைவரும் தங்கும் விடுதியில் ஒன்றாக வாழ்கின்றனர்; மேலும் பழைய ஊழியர்களுக்கு 7-8 நாட்களாக நியூக்ளிக் பரிசோதனை செய்யப்படவில்லை, இதன் பொருள் புதிய தொழிலாளர்களுடன் இணைந்து சாத்தியமுள்ள கோவிட் நோயாளிகள் வாழவும் வேலை செய்யவும் வாய்ப்புள்ளது என்பதே. இது, தாம் ஏமாற்றப்பட்டதாக உணரும் புதிய தொழிலாளர்களிடையே பீதியை ஏற்படுத்தியது. அதுதான் முதல் ஏமாற்றமாக இருந்தது.

“இரண்டாவது ஏமாற்றம் என்னவென்றால், இன்றிரவு அனைவரும் ஃபாக்ஸ்கான் நிறுவனத்திடமிருந்து பெற்ற புதிய ஒப்பந்தம் தான், அதாவது அவர்கள் ஏற்கனவே ஃபாக்ஸ்கான் வளாகத்திற்குள் நுழைந்த புதிய ஊழியர்களாக இருந்தாலும், அல்லது தனிமைப்படுத்தப்பட்டிருக்கும் ஊழியர்களாக இருந்தாலும், ஆட்சேர்ப்பு நேரத்தில் ஃபாக்ஸ்கான் நிறுவனம் அவர்களுக்கு வழங்கிய ஒப்பந்தத்திலிருந்து புதிய ஒப்பந்தம் முற்றிலும் மாறுபட்டதாக இருந்தது. ஃபாக்ஸ்கான் ஆரம்பம் முதலே தங்களை ஏமாற்றி வந்துள்ளதாக அனைவரும் உணர்ந்தனர், அது இன்று கலவரமாக வெடிப்பதற்கு வழிவகுத்தது.”

வலைத் தளம் மற்ற சமூக ஊடக இடுகைகளை மேற்கோள் காட்டியது. “நாங்கள் வேறு எதுவும் கேட்கவில்லை, வழமையான நிக்ளிக் அமில பரிசோதனைக்கும் உணவு விநியோகத்திற்கும் மட்டும் ஏற்பாடு செய்யப்பட வேண்டும் என்று தான் கேட்கிறோம்,” என்று ஒரு பெண் தொழிலாளி சீன மொழி சமூக வீடியோ செயலியான குவைஷோவில் பரவிய வீடியோவில் கூறியுள்ளார்.

“ஃபாக்ஸ்கான் வெறும் குப்பையிலும் குப்பை போன்றது, அவர்கள் தொழிலாளர்களை ஒடுக்க இராணுவ பலத்தைப் பிரயோகித்தனர், அதனால் பல ஊழியர்கள் காயமடைந்தனர், மேலும் சாமானிய தொழிலாளர்களை கொடுமைப்படுத்துவதில் ஷெங்ஷோவு அரசாங்கமும் அவர்களுடன் கூட்டுச் சேர்ந்துள்ளது,” என்று வெய்போ வர்ணனையாளர் ஒருவர் குறிப்பிட்டார்.

அவர்கள் தவறான வாக்குறுதிகளை அளித்தனர் என்பதை மறுக்கும் ஒரு அறிக்கையை ஃபாக்ஸ்கான் வெளியிட்டது, மற்றும் ஒப்பந்த மாற்றங்கள் பற்றிய புகார்களுக்கு அவர்கள் எந்த பதிலும் அளிக்காமல், ஒப்பந்தத்தின்படி கடமைகளை நிறைவேற்றுவதாக அவர்கள் கூறுகின்றனர்.

புதிய ஊழியர்கள் கோவிட் நோயாளிகளுடன் தங்குமிடங்களைப் பகிர்ந்து கொள்ள வேண்டியுள்ளது என்று கூறுவது ‘முற்றிலும் பொய்’ என்று நிறுவனம் மறுக்கும் அதேவேளை, PCR பரிசோதனைகள் செய்யப்படாதது பற்றிய குற்றச்சாட்டுகளுக்கு எந்த பதிலும் வழங்கவில்லை. தங்குமிடங்களில் கிருமி நீக்கம் செய்யப்படுவதற்கான நிலையான நடைமுறைகளும், அரசாங்கம் உத்தரவிட்டுள்ள சோதனை நடைமுறைகளும் மேற்கொள்ளப்படுகின்றன என்று மட்டும் நிறுவனம் வெறுமனே அறிவித்தது.

நேற்றைய போராட்டத்தை பொலிசார் அடக்கிய பின்னர், ஃபாக்ஸ்கான் நிலைமையை தணிக்க முயன்றதாக கூறப்படுகிறது. பல புதிய தொழிலாளர்களை இழப்பீட்டைப் பெற்றுக் கொண்டு வெளியேறுமாறு கோரப்பட்டுள்ளது. வெளியேற முடிவு செய்யும் எவருக்கும் 10,000 RMB (1,400 அமெரிக்க டாலர்) இழப்பீடு வழங்குவதாக நிறுவனம் வெளிப்படையாக உறுதியளித்தது, ஆனால் பல சமூக ஊடக இடுகைகளின்படி பின்னர் சலுகை திரும்பப் பெறப்பட்டதாகத் தெரிகிறது.

ஷெங்ஷோவு வில் உள்ள ஃபாக்ஸ்கான் ஆலையில் வெடித்த எதிர்ப்புகள், சீனாவின் மந்தமடைந்து வரும் பொருளாதாரம், அதிகரித்து வரும் வேலையின்மை, மற்றும் நாட்டின் பெரும் பணக்கார தன்னலக்குழுக்களுக்கும் பெரும்பான்மை மக்களுக்கும் இடையே உள்ள பரந்த சமூக இடைவெளி ஆகியவற்றால் எரியூட்டப்பட்ட பரந்த சமூக பதட்டங்களை தெளிவாக பிரதிபலிக்கின்றன.

சமூக ஊடகங்களில் பேசும் பெரும்பான்மை மக்கள் ஃபாக்ஸ்கான் தொழிலாளர்களை தெளிவாக ஆதரிப்பதாக What’s on Weibo வலைத் தளம் தெரிவித்துள்ளது. அது இவ்வாறு விவரித்துள்ளது: “சீன தொழிலாள வர்க்கம் புரட்சியை எவ்வாறு வழிநடத்தும் என்பதை எடுத்துக்காட்டும் பழைய பிரச்சார விளம்பரங்களை அவர்கள் பதிவிடுகிறார்கள், மற்றும் மற்ற வெய்போ பயனர்களை கார்ல் மார்க்ஸைப் படிக்க பரிந்துரைக்கின்றனர்.”

அமைதியின்மையைத் தணிக்க சீனக் கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சியின் முயற்சிகள் இருந்தபோதிலும், பரந்த அதிருப்தியை அவர் சுட்டிக்காட்டுகிறார்.

‘நான் இது குறித்து மிகுந்த வேதனைப்படுகிறேன்,’ என்று ஒரு வெய்போ வர்ணனையாளர் ஃபாக்ஸ்கான் நிலைமை பற்றி கூறினார்: ‘இது விழித்தெழ வேண்டிய நேரம்!’ ‘தேசிய கீதத்தின் முதல் வாக்கியம் என்ன?’ ஒரு பதிவர் இவ்வாறு குறிப்பிட்டார்: ‘எழுந்திருங்கள், அடிமைகளாக இருக்க மறுப்பவர்களே!’

Loading