ஜேர்மன் சான்சலர் ஷோல்ஸ் சீனாவுக்கு பயணித்ததற்காக விமர்சிக்கப்படுகிறார்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

ஜேர்மன் சான்சிலர் ஓலாப் ஷோல்ஸ் வெள்ளியன்று பெய்ஜிங்கிற்கு விஜயம் செய்தார். அவர் ஒரு பெரிய வணிகக் குழுவுடன், ஜனாதிபதி ஜி ஜின்பிங் மற்றும் அரசாங்கத் தலைவர் லீ கெகியாங்கை சந்தித்தார்.

மூன்று ஆண்டுகளுக்கு முன்பு கொரோனா வைரஸ் தொற்றுநோய் வெடித்ததிலிருந்தும், அக்டோபர் கட்சி காங்கிரஸில் ஜி தனது அதிகாரத்தை உறுதிப்படுத்தியதிலிருந்தும், ஜி7 தலைவர் ஒருவர் சீனாவுக்கு மேற்கொண்ட முதல் பயணம் இதுவாகும். இது சர்வதேச அளவிலும் ஜேர்மனியிலும் கடுமையான விமர்சனங்களை சந்தித்தது. சான்சிலர் தனது சொந்த போக்குவரத்து விளக்குக் கூட்டணியில் இருந்தும், குறிப்பாக பசுமைக் கட்சியினரிடமிருந்து தாக்குதலுக்கு உள்ளானார்.

ஷோல்ஸை சீன அதிபர் ஜி ஜின்பிங் மக்களின் பெரிய மண்டபத்தில் வரவேற்றார் [Photo by Bundesregierung/Imo]

ஷோல்ஸின் முன்னோடியான அங்கேலா மேர்க்கெலுக்கு இத்தகைய பயணங்கள் வழக்கமானவை. தனது 16 வருட பதவிக் காலத்தில், ஜேர்மன் சான்சிலர் சீனாவிற்கு மொத்தம் 12 முறை விஜயம் செய்தார். ஜேர்மனியும் சீனாவும் அரசாங்கங்களுக்கு இடையேயான கூட்டு மாநாடுகளை நடத்தியதுடன், சீன உயர்மட்ட பிரதிநிதிகள் ஜேர்மனிக்கு தவறாமல் வருகை தந்தனர். 2014 ஆம் ஆண்டில், புதிய பட்டுப்பாதை முன்முயற்சியின் ஒரு பகுதியாக சீனாவிற்கும் ஜேர்மனிக்கும் இடையே வழக்கமான சரக்கு இரயில் இணைப்பை ஆரம்பிப்பதற்காக ஜி ஜின்பிங் தனிப்பட்ட முறையில் டியூஸ்பேர்க் நகரத்திற்குச் சென்றார்.

ஆனால் சீனா இப்போது அமெரிக்கா மற்றும் அதன் ஐரோப்பிய நட்பு நாடுகளின் இலக்காக மாறியுள்ளது. அமெரிக்கா அணு ஆயுத சக்தி மீது பொருளாதார, இராணுவ அழுத்தத்தை அதிகரித்து போருக்கு தயாராகி வருகிறது. பைடென் நிர்வாகத்தின் தேசிய பாதுகாப்பு மூலோபாயம் 2020இனை ரஷ்யா மற்றும் சீனாவுடனான மோதலில் அமெரிக்கா 'வெற்றி பெறும்' 'தீர்மானமான தசாப்தம்' என்று விவரிக்கிறது. ஐரோப்பிய ஒன்றியம் சீனாவை 'மூலோபாய போட்டியாளர்' என்றும் விவரிக்கிறது.

நேட்டோ திட்டமிட்ட முறையில் தீவிரமடையவைத்த உக்ரேனில் ரஷ்யாவிற்கு எதிரான போர், ரஷ்யா இராணுவத் தோல்வியை அடையும் வரை தொடர உத்தேசித்துள்ளது. உக்ரேன் மோதலில் சீனா இராணுவரீதியல்லாத ஆதரவுடன் ரஷ்யாவை ஆதரிப்பது வாஷிங்டன் மற்றும் ஐரோப்பிய தலைநகரங்களில் சீற்றத்தைத் தூண்டியுள்ளது. இதுதான் ஷோல்ஸின் பயணம் மீதான விமர்சனத்தின் பின்னணியாகும்.

'அமெரிக்காவில் இருந்து பேர்லின் தன்னைத் தூர விலக்கிக் கொள்ள வேண்டும் என்று பெய்ஜிங்கின் நீண்டகால பிளவுபடுத்தி வெற்றிகொள்ளும் வாதத்திற்கு இந்தப் பயணம் சாதகமாக உள்ளது என்று சில கூட்டாளிகள் கவலைப்படுகிறார்கள்' என்று வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் எழுதுகிறது. பிரெஞ்சு நாளிதழ் Le Monde, “சீனாவில் இருந்து பொருளாதாரரீதியாக தன்னைத் துண்டித்துக் கொள்ள அமெரிக்கா திட்டமிட்டுள்ள நிலையில், ஐரோப்பிய ஒன்றியம் அதனது போக்கு கவலையளிக்கும் ஒரு ஆட்சியிலிருந்து தன்னைத் தூர விலக்கிக் கொள்ள முயற்சித்தாலும், பேர்லின் இன்னும் ‘வழக்கம் போல்’ தனது நிலைப்பாட்டை அமைத்துக் கொள்வது போல் தெரிகிறது” என புகார் கூறியது.

தொழில்துறை மற்றும் உள்நாட்டு சந்தைக்கான ஐரோப்பிய ஆணையாளரும் ஒரு பிரெஞ்சுக்காரருமான தியரி பிரெட்டோன் ஷோல்ஸை பின்வருமாறு எச்சரித்தார்: 'அப்பாவித்தனத்திற்கான நேரம் முடிந்துவிட்டது. நாம் விழிப்புடன் இருக்க வேண்டும். சீனாவை நோக்கிய தனிப்பட்ட ஐரோப்பிய ஒன்றிய உறுப்பினர்களின் நடத்தை ஒருங்கிணைக்கப்பட்டதாக இருக்க வேண்டுமே தவிர 'சீனா வெளிப்படையாக விரும்புவதுபோல்' தனியாக முடிவு செய்யக்கூடாது. ஐரோப்பிய ஒற்றுமையை நிரூபிக்க பிரெஞ்சு ஜனாதிபதி இமானுவல் மக்ரோனும் ஷோல்ஸும் சீனாவிற்கு பிற்காலத்தில் ஒன்றாகச் செல்ல வேண்டும் என்று பரிந்துரைத்தார். இந்த ஆலோசனையை ஷோல்ஸ் புறக்கணித்தார்.

கிறிஸ்தவ ஜனநாயக ஒன்றித்தின் (CDU) வெளியுறவுக் கொள்கை நிபுணர் நோர்பேர்ட் ரொட்கன் ஷோல்ஸை கடுமையாகத் தாக்கினார். அவர் தனது பயணத்தின் போது ஜேர்மனியின் வெளியுறவுக் கொள்கையை சேதப்படுத்தியதாக அவர் குற்றம் சாட்டினார். “ஏனெனில் இது எங்கள் கூட்டாளிகளின் நம்பிக்கையை இழக்க வைக்கின்றது. இது சீனர்களுடனான நமது நற்பெயரைக் கூட வலுப்படுத்தாது, ஏனென்றால் அவர்கள் பலத்திற்கு மட்டுமே பிரதிபலிப்பை காட்டுவார்கள் மற்றும் பலவீனத்தை கவனத்திற்கெடுக்க மாட்டார்கள்”.

வெளியுறவு மந்திரி அன்னலெனா பெயர்பொக் (பசுமைக்கட்சி) சான்சலரை எச்சரித்தார். அவர் பெய்ஜிங்கிற்கு 'நியாயமான போட்டி நிலைமைகள், மனித உரிமைகள் பற்றிய கேள்வி மற்றும் சர்வதேச சட்டத்தை அங்கீகரிப்பது பற்றிய கேள்வி ஆகியவை சர்வதேச ஒத்துழைப்பிற்கான எங்கள் அடிப்படையாகும் என்பதை தெளிவுபடுத்த வேண்டும்”. ஒருவர் 'எங்கள் மதிப்புகளைப் பகிர்ந்து கொள்ளாத ஒரு நாட்டை இனி அடிப்படையில் சார்ந்து இருக்கக்கூடாது. இறுதியில் அவர்கள் நம்மை அச்சுறுத்தலாம்' என்றார்.

கஜகஸ்தான் மற்றும் உஸ்பெகிஸ்தான் அரசாங்கங்களுடன் பேச்சு வார்த்தை நடத்திய மத்திய ஆசியா வழியாக ஒரு பயணத்தின் போது பெயர்பொக் அக்கருத்தை வெளிப்படுத்தியதன் மூலம் இந்த மனித உரிமை பிரச்சாரத்தின் பொய்மை காட்டப்படுகிறது. இரு நாடுகளுமே இந்த ஆண்டு எதிர்ப்புக்களை இரத்தம் சிந்தியபடி நசுக்கியுள்ளதுடன், எதிர்கட்சி உறுப்பினர்களை துஷ்பிரயோகம் செய்து சிறையில் அடைத்துள்ளனர். இவை ஒன்றும் அவருக்கு கவலையளிப்பதாக இருக்கவில்லை. ரஷ்யா மற்றும் சீனாவின் செல்வாக்கிலிருந்து உடைத்து சோவியத் ஒன்றியத்திலிருந்து வெளிப்பட்ட பெரிய மூலப்பொருட்களை கொண்டுள்ள இரண்டு நாடுகளை ஜேர்மனியுடன் நெருக்கமாகப் பிணைக்கும் குறிக்கோளை அவர் பின்பற்றினார்.

சீனாவுக்கான தனது பயணத்தின் மூலம், பெயர்பொக் போன்றே அதே ஏகாதிபத்திய நலன்களையே ஷோல்ஸும் பிரதிநிதித்துவப்படுத்துகிறார். எவ்வாறாயினும், பசுமைவாதிகளைப் போலல்லாமல், ஜேர்மனி அமெரிக்காவை முழுமையாகச் சார்ந்து இருக்கக் கூடாது என்றும், சீனாவுடனான பொருளாதார உறவுகளின் திடீர் முறிவுக்கு தன்னைத் தள்ள அனுமதிக்ககூடாது என்றும் அவர் நம்புகிறார். இதில் சம்பந்தப்பட்ட பணத்தின் தொகை மிகப்பெரியது.

மேர்க்கெலும் பின்னர் ஷோல்ஸும் நீண்டகாலமாக எதிர்த்து வந்திருந்த, ரஷ்யாவில் இருந்து எரிவாயு இறக்குமதியை நிறுத்தியமை ஏற்கனவே பேரழிவுகரமான விளைவுகளை ஏற்படுத்தியுள்ளன. ஜேர்மனி இப்போது அமெரிக்காவிலிருந்து உட்பட விலையுயர்ந்த திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு இறக்குமதியை சார்ந்துள்ளது. இதனாலான விளைவுகளைத் தணிக்க மத்திய அரசு 200 பில்லியன் யூரோக்களை ஒதுக்கியுள்ளது. ஆனால் இது ஒரு தற்காலிக நடவடிக்கை மட்டுமே. இது நிதி நெருக்கடியை மேலும் தீவிரமாக்கி, கூடுதல் சமூக செலவின வெட்டுக்களுக்கும் வழிவகுக்கும்.

சீனாவுடனான முறிவு மந்தநிலையின் தொடக்கத்தில் உள்ள ஜேர்மன் பொருளாதாரத்திற்கு இன்னும் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும். 12.4 சதவீத இறக்குமதி மற்றும் 7.4 சதவீத ஏற்றுமதியுடன், சீனா ஜேர்மனியின் மிகப்பெரிய வர்த்தக பங்காளியாக உள்ளது. ஒரு மில்லியனுக்கும் அதிகமான வேலைகள் நேரடியாகவும் இன்னும் பல மறைமுகமாகவும் சீனாவின் வர்த்தகத்தை சார்ந்துள்ளது. கூடுதலாக, அரிய தாதுப்பொருட்கள், இடைநிலை பொருட்கள் மற்றும் சூரிய ஒளியிலிருந்து எரிசக்தி உருவாக்கும் தொகுதிகள் மற்றும் வாகன மின்கலன்கள் போன்ற முக்கியமான எரிசக்தி மாற்றத்திற்கான மூலப்பொருட்களின் வினியோகத்தராக சீனா உள்ளது.

பெய்ஜிங்கிற்கு ஷோல்ஸுடன் வருகை தந்திருக்கும் பொருளாதார பிரதிநிதிகள் இரு நாடுகளின் பொருளாதாரம் நெருங்கி சார்ந்திருப்பதை பிரதிபலிக்கிறது. கடந்த ஆண்டு சீனாவில் முறையே 40 சதவீதம் மற்றும் 33 சதவீதம் கார்களை விற்று, அங்கு ஏராளமான ஆலைகளை பராமரித்த வோக்ஸ்வாகன் மற்றும் BMW வாகன நிறுவனங்களின் தலைவர் சான்சிலருடனான குழுவில் இருந்தனர். 2030 ஆம் ஆண்டிற்குள் சீனாவில் 10 பில்லியன் யூரோக்கள் முதலீடு செய்யத் திட்டமிடும் BASF என்ற இரசாயனக் குழு, மருந்து நிறுவனமான பயர், தடுப்பூசி உற்பத்தியாளர் பயோன்டெக் மற்றும் இலத்திரனியல் குழுவான சீமென்ஸ் ஆகியவையும் அதில் பிரதிநிதித்துவப்படுத்தப்பட்டன. 2022 ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டில், சீமென்ஸ் அதன் உலகளாவிய வருவாயில் எட்டில் ஒரு பங்கான 18 பில்லியன் யூரோக்களை சீனாவில் உருவாக்கியது.

இருப்பினும், அமெரிக்காவுடன் ஒரு வெளிப்படையான மோதலை ஜேர்மனி ஏற்படுத்த முடியாது, அது பெருகிய முறையில் கடுமையான பொருளாதாரத் தடைகளால் சீனாவை கொடுமைப்படுத்துகிறது. இது சீனாவுடனான உடைவு போன்ற அழிவுகரமான பொருளாதார விளைவுகளை ஏற்படுத்துவது மட்டுமல்லாமல், ஐரோப்பாவில் ஜேர்மனியை தனிமைப்படுத்த அமெரிக்கா தனது செல்வாக்கையும் இராணுவ சக்தியையும் பயன்படுத்துவதையும் உருவாக்கும்.

எனவே ஷோல்ஸ் கவனமாக சமநிலைப்படுத்தும் செயலைச் செய்தார். அவர் ரஷ்யா மீது அழுத்தம் கொடுக்க சீன தலைமையின் மீது ஜேர்மன் செல்வாக்கைப் பயன்படுத்த முயன்றார். ஜி ஜின்பிங் மற்றும் லீ கெகியாங் உடனான சந்திப்பிற்குப் பின்னர், 'ரஷ்யா மீது சீனா தனது செல்வாக்கைப் பயன்படுத்துவது முக்கியம் என்று நான் ஜனாதிபதி ஜியிடம் தெரிவித்ததாக' கூறினார். ரஷ்ய அணு ஆயுத அச்சுறுத்தல்களை ஏற்றுக்கொள்ள முடியாது என்று இரு அரசாங்கங்களும் ஒப்புக்கொண்டன.

அணுசக்தி அச்சுறுத்தல்கள் குறித்தும் எச்சரித்த ஜி, சமாதானப் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்தார். 'செல்வாக்கு மிக்க நாடுகளாக, சீனாவும் ஜேர்மனியும் சமாதான மற்றும் வளர்ச்சியை மேம்படுத்துவதற்கு மாற்றமடைந்துவரும் மற்றும் குழப்பமான காலங்களில் இணைந்து செயல்பட வேண்டும்' என்று அவர் கூறினார். லி ரஷ்யக் கொள்கையில் இருந்து முன்பை விட தெளிவாக விலகிக் கொண்டார். 'இன்னொரு மோதல் தீவிரமயமாக்கலை நாங்கள் ஏற்க முடியாது' என்று அவர் கூறினார். 'பிராந்திய ஸ்திரத்தன்மை குழப்பப்படுவதையும், சர்வதேச உற்பத்தி மற்றும் விநியோகச் சங்கிலிகள் சீர்குலைவதையும் நாங்கள் விரும்பவில்லை' என்றார்.

அதே நேரத்தில், ஷோல்ஸ், ஜேர்மனியின் சீனாவின் மீதான பொருளாதார சார்புநிலையை எந்தவித திடீர் முறிவும் இல்லாமல் தளர்த்த முயற்சிக்கிறார்.

அவர் சீனாவுக்குப் புறப்படுவதற்கு முன், FAZ இதழுக்கான விருந்தினர் கட்டுரையில் தனது விஜயத்தின் நோக்கத்தை விளக்கினார். 'எதிர்காலத்தில் உலக அரங்கில் ஒரு முக்கிய பங்கை வகிக்கும்' மற்றும் 'ஜேர்மனி மற்றும் ஐரோப்பாவிற்கு ஒரு முக்கியமான பொருளாதார மற்றும் வர்த்தக பங்காளியாக இருக்கும்' என்று கூறி சீனாவை புகழ்ந்து பேசினார். அதே நேரத்தில், அவர் சீனா நியாயமற்ற பொருளாதார நடைமுறைகளை குற்றம் சாட்டி, பின்வருமாறு அச்சுறுத்தினார். 'எனவே புத்திசாலித்தனமான வித்தியாசப்படுத்தல் என்ற அர்த்தத்தில் ஒருதலைப்பட்சமான சார்புநிலையைக் குறைப்போம்.' 'அத்தகைய வணிகமானது ஆபத்தான சார்பு நிலையை உருவாக்குகிறதா அல்லது பலப்படுத்துகிறதா' என்பதை தீர்மானிக்க ஜேர்மனியில் சீன முதலீடுகளை ஆய்வு செய்வது அவசியம்” என்றார்.

சீனாவுடனான மோதலை மேலும் தீவிரப்படுத்துவதில், ஜேர்மனி அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளுக்கு பக்கபலமாக இருக்கும் என்பதில் ஷோல்ஸ் ஒருபோதும் சந்தேகத்தையும் விட்டுவிடவில்லை.

ஜேர்மன் அரசாங்கம் ஏற்கனவே 2014 இல் உக்ரேனில் வலதுசாரி சதிக்கு ஆதரவளித்தது. இது இறுதியில் தற்போதைய போருக்கு வழிவகுத்தது. அதே நேரத்தில், பேர்லின் ரஷ்யாவுடன் பொருளாதார உறவுகளை பராமரிக்க முயன்றது. இது சாத்தியமில்லாதபோது, ஜேர்மனி மிகவும் ஆக்கிரோஷமான போர்வெறியாளராக மாறியது. இராணுவச் செலவினங்களை மும்மடங்காக்குவதற்கும், மீண்டும் ஐரோப்பாவின் வலிமையான இராணுவ சக்தியாக ஆவதற்கு அதனை பெருமளவில் மேம்படுத்துவதற்கும் அது போரை ஒரு போலிக்காரணமாகப் பயன்படுத்தியது.

போர் நடந்தால் அது எந்தப் பக்கம் நிற்கும் என்பதை ஜேர்மன் அரசாங்கம் சீனாவிடம் சுட்டிக்காட்டியுள்ளது. ஜேர்மன் இராணுவம் (Bundeswehr) சீனாவிற்கு எதிரான இராணுவ நடவடிக்கைகளில் போர்க்கப்பல்களுடனும் விமானங்களுடனும் பங்கேற்கிறது. அவரது விஜயத்தின் போது, ஷோல்ஸ் வழக்கமான குற்றச்சாட்டுகளையும் அச்சுறுத்தல்களையும் முன்வைத்தார். தைவானில் இராணுவத் தலையீட்டிற்கு எதிராக அவர் சீனாவை எச்சரித்தார். இது உக்ரேனில் பின்பற்றப்பட்ட அதே கொள்கையின் அடிப்படையில் அமெரிக்காவால் பெருமளவில் ஆயுதமயப்படுத்தப்பட்டு வருகிறது. அவர் மனித உரிமைகள் உலகம் முழுவதற்கும் பொருத்தமானது என்று அழைப்பு விடுத்து சீன அரசாங்கம் சின்ஜியாங்கில் முஸ்லிம் சிறுபான்மையினரை துன்புறுத்துவதாக குற்றம் சாட்டினார். இது 'உள் விவகாரங்களில் தலையிடுவது அல்ல' என்று ஷோல்ஸ் கூறினார்.

Loading