பூமியில் எட்டு பில்லியன் மக்கள்: மனிதகுலத்திற்கு ஒரு மைல்கல்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

நவம்பர் 15, 2022 அன்று, உலகம் முழுவதும் சுமார் 367,000 பெண்கள் குழந்தைகளை பெற்றெடுத்தனர். ஐக்கிய நாடுகள் சபையின் புள்ளிவிவரக் கணிப்புகளின்படி, இந்த புதிதாகப் பிறந்த குழந்தைகளுடன் பூமியில் இப்போது எட்டு பில்லியன் பேர் உயிருடன் இருக்கின்றார்கள். உலக மக்கள் தொகை ஏழு பில்லியனைத் தாண்டியதில் இருந்து, மேலும் ஒரு பில்லியன் மனிதர்களை அதனுடன் சேர்க்க 12 ஆண்டுகள் எடுத்ததாக ஐக்கிய நாடுகள் சபையின் மதிப்பீடு குறிப்பிட்டது.

உலக மக்கள்தொகையின் விரைவான வளர்ச்சி நவீன வரலாற்றின் மைய அம்சங்களில் ஒன்றாகும்

ஒவ்வொரு நாட்டினதும் மக்கள்தொகை விகிதத்திற்கு ஏற்ப ஒவ்வொரு நாட்டினதும் அளவை கொண்ட உலக வரைபடம் [Photo by Our World in Data / CC BY 4.0]

மக்கள்தொகை மதிப்பீடுகளின்படி, உலக மக்கள் தொகை ஒரு பில்லியன் மைல்கல்லை எட்டுவதற்கு 1804 வரை எடுத்தது. அந்த நேரத்தில் கூட, சில தொழில்நுட்ப வளர்ச்சி இருந்தபோதிலும், முக்கியமாக ஐரோப்பாவில், உலகின் ஒவ்வொரு பகுதியிலும் ஆயுட்காலம் எதிர்பார்ப்பு மோசமானதாக இருந்தது. குழந்தை இறப்பு மிகவும் அதிகமாக இருந்தது மற்றும் முதுமையை அடைவது மிகவும் அரிதானது, பிறக்கும்போதே ஆயுட்காலம் வெறும் 30 ஆண்டுகள் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

அதிக குழந்தை பருவ இறப்பு மற்றும் தொற்று நோய்களால் இறப்பு ஆகியவை நீண்ட ஆயுளுக்கு பெரும் தடையாக இருந்தன, இதன் விளைவாக, இன்றையதை விட பிறப்பு விகிதம் அதிகமாக இருந்தபோதிலும் மக்கள்தொகையின் அதிகரிப்பு மெதுவாக இருந்தது. 1927 இல் இரண்டு பில்லியன் மக்கள் இந்த கிரகத்தில் வசிக்க இன்னும் 123 ஆண்டுகள் எடுத்தன. மூன்றாவது பில்லியனுக்கு 33 ஆண்டுகளும் மற்றும் அண்ணளவாக 1974 இல் நான்காவது பில்லியனுக்கு 14 ஆண்டுகள் அதிகமாகவும், மக்கள் தொகை 1987 இல் ஐந்து பில்லியனையும், 1999 இல் ஆறு பில்லியனையும், 2010 இல் ஏழு பில்லியனையும் எட்டியது.

சமீபத்திய பில்லியன், முரண்பாடாக ஒரு மெதுவாகிய நிலையின் தொடக்கத்தை அறிவுறுத்துகிறது. ஏனெனில் ஏழு பில்லியனை அடைய எடுத்த 11 ஆண்டுகளை விட இப்போது குழந்தை பெறும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்திருந்தாலும் கூட 12 ஆண்டுகள் எடுத்தது. கருத்தடை சாதனங்கள் கிடைப்பதன் மூலமும், அவர்களின் குழந்தைகள் முதிர்ச்சியுடன் வாழ்வார்கள் என்ற நம்பிக்கையினாலும், பெண்களும் அவர்களது ஆண் கூட்டாளிகளும் எப்போது குழந்தைகளைப் பெறுவது என்பதைத் தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம்.

அந்த எண்களை வேறு அளவுகோலால் ஒருவர் பார்த்தால், உலக மக்கள் தொகை ஒன்றிலிருந்து இரண்டு பில்லியனாக இருமடங்காக அதிரிக்க 123 ஆண்டுகள் (1804 முதல் 1927 வரை) ஆனது. அடுத்த இரட்டிப்பான நான்கு பில்லியனாக 47 ஆண்டுகள் ஆனது. அடுத்த இரட்டிப்பான எட்டு பில்லியனாக மேலும் கூடுதலாக ஒரு வருடம் எடுத்து 48 ஆண்டுகள் ஆனது.

குழந்தை இறப்பு வீழ்ச்சியைத் தொடர்ந்து வரும் பிறப்பு வீதத்தின் வீழ்ச்சி இப்போது உலகின் ஒவ்வொரு மூலையையும் எட்டியுள்ளதால் விரைவான இரட்டிப்பு காலம் இப்போது முடிந்துவிட்டது என்பதை மக்கள் தொகை ஆய்வாளர்கள் ஒப்புக்கொள்கிறார்கள். மக்கள் தொகை வளர்ச்சி சுமார் 10 பில்லியனாக இருக்கும் என்பது அவர்களின் எதிர்பார்ப்பு.

மார்க்சிசம் எதிர் மால்தூசியனிசம்

விஞ்ஞான அறிவு, உற்பத்தி நுட்பம் மற்றும் பொது சுகாதாரம் ஆகியவற்றின் முன்னேற்றங்களாலும், உலகின் ஒவ்வொரு நாட்டிற்கும் இவை நீட்டிக்கப்படுவதாலும் சாத்தியமாக்கப்பட்ட மனித இனத்தின் எண்ணிக்கையில் அதிகரிப்பை ஒரு மிகப்பெரிய சாதகமான ஒன்றாக மார்க்சிஸ்டுகள் கருதுகின்றனர்.

மக்கள்தொகை வளர்ச்சியை அனைத்து தீமைகளுக்கும் மூல காரணம் என்று கூறும் நவீன-மால்தூசியர்களின் புலம்பலையும் நிராகரித்தலையும் நாங்கள் திட்டவட்டமாக நிராகரிக்கிறோம், குறிப்பாக காலநிலை நெருக்கடி மற்றும் பிற சுற்றுச்சூழல் பேரழிவுகளுக்கு அதைக் குறை கூறுகிறார்கள். எங்கள் பார்வையில், இவை திட்டமிடப்படாத முதலாளித்துவ அராஜகத்தால் ஏற்படுகின்றனவே தவிர 'அதிக மக்கள் தொகையால்' அல்ல.

அத்தகைய ஒரு வர்ணனை நவம்பர் 13 ஆம் தேதி நியூ யோர்க் டைம்ஸில், கனடா மற்றும் ஜேர்மனியின் கல்வி ஆராய்ச்சியாளர்களான தோமஸ் ஹோமர்-டிக்சன் மற்றும் ஜோஹன் றொக்ஸ்ட்ரோம் ஆகியோரின் ஆசிரியர் கருத்து பத்தியில் வெளிவந்தது. போர், தொற்றுநோய், அதிகரிக்கும் பணவீக்கம், சுற்றுச்சூழல் சரிவு போன்ற பல நெருக்கடிகளின் சங்கமத்தை அவர்கள் அடையாளம் கண்டனர். மேலும் இந்த நெருக்கடிகள் பின்வரும் இரண்டு காரணிகளின் விளைவு என அவநம்பிக்கையுடன் அறிவித்தனர்: 'மனிதகுலத்தின் பாரிய மூலவள நுகர்வு அளவு' மற்றும் இணையம், போக்குவரத்து, தொலைத்தொடர்பு மேம்பாடுகள் காரணமாக நவீன உலகின் 'பரந்த அளவில் அதிக இணைப்பை' அதற்கான காரணமாக குறிப்பிடுகின்றனர்.

இக்கருத்து அதன் விடயத்தை தலைகீழாக காட்டுகின்றது. அது அடையாளம் காட்டும் இரண்டு காரணிகளான, உற்பத்தி சக்திகளின் வளர்ச்சி மற்றும் பூகோளமயமாக்கல் ஆகியவை உண்மையில் ஆழமடைந்து வரும் சமூக நெருக்கடியின் உந்து சக்திகளாகும். ஆனால் அவை இலாப நோக்கு அமைப்பு மற்றும் முதலாளித்துவ தேசிய அரசின் கட்டமைப்பிற்குள் மட்டுமே உலகளாவிய சிதைவிற்கான தன்மையை கொண்டிருக்கின்றன. தொழிலாள வர்க்கத்தால் நடத்தப்பட்டும் ஒரு சோசலிசப் புரட்சியால் அந்த கட்டுத்தளையிலிருந்து அந்த இரண்டு காரணிகளும் விடுவிக்கப்பட்டால், முற்றிலும் நேர்மறையான முக்கியத்துவத்தைக் கொண்டிருக்கும்.

நவம்பர் 12, 2022 சனிக்கிழமை, இந்தியாவின் புது டெல்லியில் உள்ள சந்தையில் வாடிக்கையாளர்கள் கூட்டம் கூட்டமாக தெரு உணவுகளை உண்கிறார்கள் [AP Photo/Altaf Qadri]

ஆசிரியர்கள் எதனை முன்மொழிவார்கள்? மிகவும் சுருங்கிய அளவிலான உற்பத்தி மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட, உள்ளூர்மயப்படுத்தப்பட்ட சமூக இடைத்தொடர்புகளுக்கு திரும்புவது என்பது ஒரு மகத்தான, முன்னோடியில்லாத வரலாற்றுப் பின்னடைவாகும். இது உலகப் போர் மற்றும் சமூகச் சரிவுக்குப் பின் மட்டுமே நிகழக்கூடிய ஒன்றாகும்.

தொழிலாள வர்க்கத்தின் வளர்ச்சி

உலக மக்கள்தொகையின் விரிவாக்கத்தின் மற்றொரு நேர்மறையான அம்சம் உள்ளது. இது தற்செயலாக அல்லாது, நகரங்களினதும், தொழிலாள வர்க்கத்தினதும் வளர்ச்சி காரணமான மகத்தான முக்கியத்துவம் வாய்ந்த மக்கள் தொகையினரின் இடமாற்றத்துடன் தொடர்புடையது. இந்த்த இரண்டுமே முதலில் மேற்கிலும் பின்னர் கிழக்கிலும் விவசாய உற்பத்தியின் வளர்ச்சி தொழிற்துறைமயமாக்கப்பட்டதன் விளைவாக முதலாளித்துவ உறவுகள் மிகவும் பழமையான மற்றும் பின்தங்கிய உற்பத்தி வடிவங்களை இடம்பெயர்த்ததால் உருவானதாகும்.

கோடிக்கணக்கான விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்கள், சிறிய நிலங்கள் அல்லது பெரிய பண்ணைகளில் இருந்து இடம்பெயர்ந்து, வேலை தேடி நகரங்களுக்குள் வெள்ளமாகப் புகுந்து, பாட்டாளி வர்க்கத்தின் எண்ணிக்கையை பெருக்கி, அதன் மூலம் வர்க்கப் போராட்டத்தில் புதிய படைப்பிரிவுகளை உருவாக்கி, இறுதியில் முதலாளித்துவத்திற்கு முடிவுகட்டி உலக சோசலிச சமுதாயத்தை நிறுவுவார்கள்.

கிரகம் முழுவதும், இப்போது 500 க்கும் மேற்பட்ட நகரங்கள் உள்ளன, அவை ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்களைக் கொண்டுள்ளன, இது உலக மக்கள்தொகையில் 23 சதவீதமாகும். 10 மில்லியனுக்கும் அதிகமான மக்கள்தொகை கொண்ட குறைந்தபட்சம் 31 பெரு நகரங்கள் உள்ளன. சமீபத்தில் மற்றும் மனிதகுல வரலாற்றில் முதல் முறையாக உலகின் பெரும்பான்மையான மக்கள் நகர்ப்புற சூழலில் வாழ்கின்றனர். 2030 க்குள் இந்த எண்ணிக்கை 60 சதவீதத்தை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. தொழிலாள வர்க்கத்திற்கும் முதலாளித்துவத்திற்கும் இடையிலான மோதலை வரையறுக்கும் அனைத்து வர்க்க வேறுபாடுகளும் முரண்பாடுகளும் கொண்ட, உலக மக்கள் தொகையில் பெரும்பாலோர் இப்போது பாட்டாளி வர்க்கமாக உள்ளனர் என்பதே இதன் அர்த்தமாகும்.

இது சம்பந்தமாக, உழைப்பு வர்க்கத்தின் மகத்தான உற்பத்தித் திறனை சுருக்கமாக பட்டியலிடுகிறது. கடந்த நூற்றாண்டில் தொழிலாளர்கள் எந்த ஒரு புள்ளியிலிருந்தும் இன்னொரு இடத்திற்கு பொருட்கள் மற்றும் சேவைகளை கொண்டு செல்லும் 40 மில்லியன் மைல்களுக்கு மேல் சாலைகளை அமைத்துள்ளனர். 2021 ஆம் ஆண்டுக்கான வருமானம் 2.86 டிரில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்த உலகளாவிய வாகன உற்பத்தித் துறையை அவர்கள் உருவாக்கியுள்ளனர். உலகளவில் கடந்த ஆண்டு 26.3 மில்லியன் வர்த்தக வாகனங்கள் விற்பனையாகியுள்ளன.

2021 ஆம் ஆண்டில் உள்நாட்டு மற்றும் சர்வதேச விமானங்களின் எண்ணிக்கை 22.2 மில்லியனாக இருந்தது. சர்வதேச வர்த்தகத்தில் ஈடுபடுவதற்காக சுமார் 55,000 வணிகக் கப்பல்கள் கடல்களில் பயணம் செய்தன. ஐந்து தசாப்தங்களில், எரிசக்தி வழங்கல் 2.6 மடங்கு அதிகரித்து 606 எக்ஸாஜூல்ஸ் அல்லது 105 பில்லியன் பீப்பாய்கள் எண்ணெய்க்கு சமமானதாக உள்ளது என சர்வதேச எரிசக்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இவை அனைத்தும் தொழிலாள வர்க்கத்தின் உழைப்பின் விளைபொருளாகும்.

2020 ஆம் ஆண்டில், உலகம் 761 மில்லியன் மெட்ரிக் தொன் கோதுமையை உற்பத்தி செய்தது. இருப்பினும் கடந்த இரண்டு தசாப்தங்களாக, உணவுப் பொருட்களுக்கான தேவை அதிகரித்து வருவதால், தீவன தானியங்கள், எண்ணெய் விதைகள் மற்றும் உணவு தானியங்களுக்கான உலக ஒருங்கிணைந்த அறுவடைப் பிராந்தியம் 1,000 மில்லியன் ஹெக்டேராக 15 சதவீதத்தினால் அதிகரித்துள்ளது.

பெரிய நில மாற்றம் மற்றும் உணவு விலை பணவீக்கத்தை ஈடுகட்ட, பல பயிர்கள் மற்றும் மகசூல் வளர்ச்சியை மேம்படுத்துவதற்கான ஆராய்ச்சியை நோக்கி கொள்கை வகுப்பாளர்கள் உடனடி கவனம் செலுத்த வேண்டும். தாவர இனப்பெருக்க முறைகள் மற்றும் மரபணு மாற்றம் உள்ளிட்ட உணவு உற்பத்தியை இன்னும் அதிகரிக்க தொழில்நுட்பங்கள் இப்போது உள்ளன. அத்துடன் பயிர் விளைச்சலைக் கண்காணிக்கும் மற்றும் சிறந்த விவசாய இயந்திரங்களை உருவாக்குவதற்குமான அமைப்புமுறைகளும் உள்ளன.

இந்த புள்ளிவிவரங்கள் தொழிலாள வர்க்கத்தின் உற்பத்தித் திறனைப் பற்றிய ஒரு பார்வையை மட்டுமே தருகின்றன. உலகெங்கிலும் உள்ள மக்களின் பன்முகத்தன்மையையும் உழைப்பையும் அவை பிரதிபலிக்கத் தொடங்கவில்லை, அது அவர்களின் வாழ்க்கை மற்றும் கலாச்சாரத்திற்கு வடிவத்தையும் பொருளையும் கொடுக்கிறது. உண்மையில், சர்வதேச தொழிலாள வர்க்கம் 7,100 வெவ்வேறு மொழிகளை பேசக்கூடும். ஆனால் தொழிலாளர்கள் பொதுவாக தங்கள் எதிர்காலம் மற்றும் அவர்களது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களின் எதிர்காலத்திற்கான விருப்புகளையும், அபிலாஷைகளையும் பகிர்ந்து கொள்கிறார்கள்.

அவர்கள் இணையம் வழியாக சமூக ரீதியாகவும் இணைக்கப்பட்டுள்ளனர். சுமார் ஐந்து பில்லியன் செயலில் உள்ள பயனர்கள் தங்கள் செய்திகள், வேலை மற்றும் சமூக தொடர்புகளுக்கு தொழில்நுட்பத்தை நம்பியுள்ளனர். இதில் தகவல் தொடர்பு, கல்வி மற்றும் பொழுதுபோக்கு ஆகியவை அடங்கும். கடந்த ஆண்டு, 190 மில்லியன் புதிய பயனர்கள் சமூக ஊடகங்களில் இணைந்துள்ளனர். இது வருடாந்த வளர்ச்சி விகிதமான 4.2 சதவீதத்திற்கு சமமாகும். வழக்கமான பயனர்கள் சராசரியாக 7.2 வெவ்வேறு சமூக தளங்களைப் பார்வையிடுகிறார்கள் மற்றும் சராசரியாக ஒரு நாளைக்கு இரண்டு முதல் மூன்று மணிநேரம் (அல்லது அவர்கள் விழித்திருக்கும் நாளில் 15 சதவீதம்) இந்த ஊடகங்களில் செலவிடுகிறார்கள். மொத்தத்தில், உலகம் ஒவ்வொரு நாளும் 10 பில்லியன் மணிநேரங்களை சமூக தளங்களில் செலவிடுகிறது. சுருக்கமாக, உலகம் முன்னெப்போதையும் விட மிகவும் ஆற்றல்மிக்க முறையில் ஒன்றோடொன்று இணைக்கப்பட்டுள்ளது.

பூமியில் வசிப்பவர்களில் பெரும்பாலோர் இளம் வயதினர் என்பதும் இப்பொது தெளிவாகிறது. உலக மக்கள் தொகையின் சராசரி வயது 30 ஆக உள்ளது. தற்போது, உலக மக்கள் தொகையில் பாதிப் பேர் 25 முதல் 65 வயதுக்கு இடைப்பட்டவர்களாக, அதாவது வேலை செய்யும் வயதுடையவர்களாக உள்ளனர். கால் பகுதியினர் 14 வயதுக்கு குறைவானவர்களாக இருக்கின்றனர்.

ஆயுட்காலம் குறித்த புதிய அச்சுறுத்தல்கள்

1914-1918 மற்றும் 1939-1945 உலகப் போர்களில் 100 மில்லியனுக்கும் அதிகமானோர் இறந்த போதிலும், அல்லது பெரும் மந்தநிலை போன்ற பயங்கர நிகழ்வுகள் இருந்தபோதிலும், 20 ஆம் நூற்றாண்டு முழுவதும் ஆயுட்காலம் குறிப்பிடத்தக்க வகையில் மேம்பட்டிருந்தது. குறிப்பாக மருத்துவம் மற்றும் உணவு உற்பத்தியிலான விஞ்ஞான வளர்ச்சி, போர்க்கால அணிதிரட்டல்களின் உத்வேகத்தின் கீழும் சில சந்தர்ப்பங்களில் கூட வேகமாக முன்னேறியது.

மருத்துவத்தில் இம் மேம்பாடுகளின் பட்டியல் நீளமானது: மயக்க மருந்து, கிருமி நாசினிகள் மற்றும் அறுவை சிகிச்சை கண்டுபிடிப்புகள் அத்துடன் இரத்தமாற்றம் அதில் குறிப்பிடத்தக்கதாகும். முதலாம் உலகப் போரின் போது உருவாக்கப்பட்ட முதலுதவி சேவைகள் மற்றும் அவசரகால மருத்துவ அமைப்புகள், இப்போது அன்றாட வாழ்க்கையின் ஒருங்கிணைந்த பகுதிகளாக உள்ளன. நவீன அவசர மருத்துவப் பிரிவுகள் வியட்நாம் போரின் போது போரில் ஏற்பட்ட உயிரிழப்புகளை ஆய்ந்த அனுபவத்தில் இருந்து உருவானது.

1930களில் சல்பா மருந்துகள் மற்றும் பென்சிலின் நுண்ணுயிர் எதிர்ப்பிகளின் கண்டுபிடிப்பு, இன்னும் உலகளவில் மரணத்திற்கு முக்கிய காரணமாக இருக்கும் தொற்று நோயின் விரைவான வீழ்ச்சியில் முக்கிய பங்கு வகித்தன. தடுப்பூசியானது முன்னர் கொடிய நோய்களின் தாக்கத்தை வெகுவாகக் குறைத்தது. மேலும் மிகவும் அஞ்சப்படும் தொற்றுநோய்களில் ஒன்றான பெரியம்மை கூட அழிக்கப்பட்டது.

1800, 1950 மற்றும் 2012 இல் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடுகளின் ஆயுட்கால எதிர்பார்ப்பு [Photo by Our World in Data / CC BY 4.0]

Our World in Data அமைப்பின் வரைபடம் குறிப்பிடுவது போல, கடந்த ஒன்றரை நூற்றாண்டுகளில் ஆயுட்காலம் அதிகரிப்பு சீரற்றதாக இருந்தது. முதலில் ஐரோப்பிய நாடுகளுக்கும், முதலாளித்துவ வளர்ச்சியின் ஆரம்ப மையங்களான வட அமெரிக்காவிற்கும் இவ்வதிகரிப்பு சாதகமாக இருந்தது.

ரஷ்யப் புரட்சியும் போல்ஷிவிக்குகளின் வெற்றியும் இடைப்பட்ட தசாப்தங்களில் உலகம் முழுவதும் ஆயுட்காலம் அதிகரிப்பதில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. உலகளவில் நடைமுறைப்படுத்தப்பட்ட பல சீர்திருத்தங்களும், சமூக உதவித் திட்டங்களும் சர்வதேச தொழிலாள வர்க்கத்தால் முன்வைக்கப்பட்ட அச்சுறுத்தலுக்கு ஏகாதிபத்திய சக்திகளின் பிரதிபலிப்பாகும்.

1970 களின் நடுப்பகுதியில் 70 வயதுக்கு மேல் ஆயுட்காலம் தொடர்ந்து உயர்ந்தது. பின்னர், குறைந்த வருமானம் கொண்ட நாடுகளும் கூட, குறிப்பாக 20 ஆம் நூற்றாண்டின் இரண்டாம் பாதியில் நன்மைகளைக் கண்டன.

எவ்வாறாயினும், அதன் உயர்ந்த கட்டத்தில் கூட, முதலாளித்துவ சமூகத்தில் வர்க்கப் பிளவுகள் சுகாதார விளைவுகளில் பிரதிபலித்தன. 2021 இல் British Medical Journal இன் ஒரு அறிக்கை பின்வருமாறு மேற்கோள் காட்டுகிறது:

இறப்பு விகிதத்தில் சமூகப் பொருளாதார சமத்துவமின்மை பரவலாக விவாதிக்கப்பட்டது. அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த 1.7 மில்லியன் பங்கேற்பாளர்களைக் கொண்ட ஒரு பெரிய பன்முகப்படுத்தப்பட்ட ஆய்வில், குறைந்த சமூகப் பொருளாதார நிலை (SES) 26 சதவிகிதம் அதிக இறப்பு அபாயத்துடன் தொடர்புடையது மற்றும் 40 முதல் 85 வயதுக்கு இடையில் 2.1 ஆண்டுகள் உயிர் இழப்பிற்கு காரணமாகிறது. குறைந்த சமூகப் பொருளாதார நிலை, பெண்கள் மற்றும் ஆண்களிடையே 15.3 மற்றும் 18.9 சதவீத இறப்புகளுக்கு பங்களிக்கலாம். 2001 முதல் 2014 வரை, அமெரிக்க பணக்கார ஐந்து சதவீத ஆண்கள் மற்றும் பெண்களிடையே நீண்ட ஆயுட்காலம் முறையே 2.34 மற்றும் 2.91 ஆண்டுகள் அதிகரித்தது. அதேசமயம் ஏழ்மையான ஐந்து சதவீத அமெரிக்க ஆண்கள் மற்றும் பெண்களில் 0.32 மற்றும் 0.04 ஆண்டுகளாக மட்டுமே இருந்தது. இதேபோன்ற போக்குகள் இங்கிலாந்திலும் காணப்பட்டன. அல்லது உயர் கல்வி நிலைகளை குறைந்த கல்வி நிலைகளுடன் ஒப்பிடும் போது இவ்வாறே இருந்தன. எங்கள் பகுப்பாய்வு இறப்பு விகிதத்தில் சமூக பொருளாதார ஏற்றத்தாழ்வின் தாக்கத்தை உறுதிப்படுத்துவதுடன், கண்டுபிடிப்புகளை இரத்தக்குழாய்களில் ஏற்படும் அடைப்பு நோய் மற்றும் இறப்புகளை நோக்கி நீட்டித்தது.

அமெரிக்காவில், வருமானத்திற்கும் ஆயுட்காலம் அதிகரிப்பதற்கும் இடையிலான இடைவெளி பற்றி பல ஆய்வுகளில் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. இது ஆண்களுக்கும் பெண்களுக்கும் மிக உயர்ந்த மற்றும் குறைந்த வருமானத்திற்கு இடையிலான இடைவெளி 12 முதல் 14 ஆண்டுகளுக்கு மேல் உள்ளது. மேலும் பணக்காரர்களின் ஆயுட்காலம் 80களிலிருந்து 90வரை அதிகரிக்கின்றது.

வரைபடங்கள் வருமானத்தின் அடிப்படையில் ஆயுட்கால சமத்துவமின்மையைக் காட்டுகின்றன [Photo by Our World in Data / CC BY 4.0]

இந்த சமூகப் பொருளாதார காரணிகள் ஏற்கனவே ஆயுட்காலம் அதிகரிப்பதில் குறிப்பிடத்தக்க மந்தநிலையை உருவாக்கியிருந்த ஒரு கட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றுநோய் தாக்கியது. இது ஒரு சமூகத்தின் முன்னேற்றத்தின் மிக அடிப்படையான ஒரு அளவீடாக இருக்கலாம்.

ஒரு வகையான சமூக கொலை போன்ற, தொற்றுநோய் பரவுவதற்கு வேண்டுமென்றே அனுமதிக்கும் கொள்கை, கோவிட் தொற்றுநோயை விரைவாக முடிவிற்கு கொண்டுவருவதைத் தடுத்தது. இது உலகளாவிய ஆயுட்காலத்தை இரண்டு முழு வருடங்களால் குறைத்து, ஒரு தசாப்தத்திற்கும் மேலான முன்னேற்றத்தை இல்லாதொழித்துவிட்டது. இந்த தாக்கத்தின் சுமைகளை ஏழைகள் மற்றும் குறைந்த வருமானம் உள்ள நாடுகளில் வசிப்பவர்களால் உணரப்பட்டது.

இது, கொரோனா வைரஸை ஒழிப்பதற்குப் பதிலாக உலகில் உள்ள ஒவ்வொரு நாடும் பல்வேறு வடிவங்களில் பின்பற்றிய 'நோயை விடக் குணப்படுத்துவது மோசமாக இருக்கக்கூடாது' என்ற மூலோபாயத்தின் துணை விளைவாகும். சுருக்கமாகக்கூறினால், உலக மக்கள் தொகைக்கு வாழ்நாளில் இவ்வளவு பெரிய நன்மைகளைக் கொடுத்த150 ஆண்டுகால பொதுச் சுகாதார முயற்சிகளில் அடைந்த வெற்றிகள் இலாபக் குவிப்புக்கு அடிபணிய வைக்கப்பட்டுவிட்டது.

சில முடிவுகள்

புதிய மக்கள்தொகை மதிப்பீட்டைப் பற்றி கருத்து தெரிவித்த ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளர் அன்டனியோ குட்டரெஸ், எட்டு பில்லியன் மக்கள் எண்ணிக்கையானது, 'விஞ்ஞான முன்னேற்றங்கள், ஊட்டச்சத்து, பொது உடல்நலம் மற்றும் சுகாதாரத்தில் மேம்பாடுகளுக்கு ஒரு சான்றைக் குறிக்கிறது' என்று குறிப்பிட்டார்.

அதே நேரத்தில் அவர் பின்வருமாறு எச்சரித்தார், “கோடிக்கணக்கான மக்கள் போராடுகிறார்கள், நூற்றுக்கணக்கான மில்லியன் மக்கள் பட்டினி மற்றும் பஞ்சத்தை எதிர்கொள்கிறார்கள். கடன்கள், கஷ்டங்கள், போர்கள், காலநிலை பேரழிவுகள் ஆகியவற்றிலிருந்து தப்புவதற்கான வாய்ப்புகள் மற்றும் நிவாரணம் தேடி பாரியளவிலானோர் நகர்கின்றனர். உலகில் இருப்பவர்களுக்கும் இல்லாதவர்களுக்கும் இடையே உள்ள பாரிய இடைவெளியைக் குறைக்காவிட்டால், பதட்டங்கள் அவநம்பிக்கை, நெருக்கடி மற்றும் மோதல்கள் நிறைந்த எட்டு பில்லியன்-பலமான உலகில் நாங்கள் இருப்போம்”.

அதன் இறுதிக் கட்டத்தில் தன்னைக்காணும் முதலாளித்துவத்தின் கீழ், வாழ்க்கையை வரையறுக்கும் பாரிய ஏற்றத்தாழ்வுகளைப் பற்றி அவர் குறிப்பிடுகிறார். ஒரு சில பில்லியனர்கள் கிரகத்தின் ஏழ்மையான பாதியின் செல்வத்தைக் கட்டுப்படுத்துகிறார்கள். மேல்மட்டத்தில் ஒரு சதவிகிதத்தினர் தங்கள் வங்கிக் கணக்குகள் மற்றும் முதலீட்டுத் துறைகளை உலக வருமானத்தில் ஐந்தில் ஒரு பங்கைக் கொண்டு நிறைத்திருக்கையில், அதிக வருமானம் கொண்ட நாடுகளில் வசிப்பவர்கள் ஏழ்மையானவர்களை விட அவர்கள் 30 ஆண்டுகள் அதிகமாக வாழ்வார்கள் என்று எதிர்பார்க்கலாம்.

முன்னேறிய முதலாளித்துவ நாடுகளில் உள்ளவர்களுக்கும் உலகின் மிகவும் ஒடுக்கப்பட்ட நாடுகள் மற்றும் பிராந்தியங்களில், குறிப்பாக துணை-சஹாரா ஆபிரிக்கா மற்றும் இந்திய துணைக் கண்டத்தில் உள்ள வெகுஜனங்களின் வாழ்க்கை நிலைமைகளுக்கும் இடையே நிச்சயமாக, மிகப்பெரிய வேறுபாடுகள் உள்ளன. ஐக்கிய நாடுகள் சபையின் கணிப்புகளின்படி, வரும் தசாப்தங்களில் மக்கள் தொகை வளர்ச்சியானது துல்லியமாக இந்த பகுதிகளில்தான் குவிந்திருக்கும்.

2050 ஆம் ஆண்டளவில் 1.7 பில்லியன் உலக மக்கள்தொகை அதிகரிப்பில் பாதிக்கும் மேற்பட்டவை கொங்கோ, எகிப்து, எத்தியோப்பியா, இந்தியா, நைஜீரியா, பாகிஸ்தான், பிலிப்பைன்ஸ் மற்றும் தான்சானியா ஆகிய நாடுகளில் ஏற்படும். இந்த நாடுகளில், நகரமயமாக்கல் சமூகத்தை விரைவாக மாற்றியமைக்கிறது. அதே நேரத்தில் பசி, புதிய (மற்றும் பழைய) நோய்கள், கல்வியறிவு விகிதம் குறைதல், குழந்தை இறப்பு மற்றும் வறுமை அதிகரித்தல் போன்ற சமூக நெருக்கடிகள் சமூக கோபத்தையும் பதட்டத்தையும் உயர்த்தும்.

எவ்வாறாயினும், அங்கேயும் ஒரு சுயாதீனமான அரசியல் சக்தியாக தொழிலாள வர்க்கத்தின் தலையீடு தீர்க்கமானதாக இருக்கும். உலகப் பொருளாதாரத்தின் மறுஒழுங்கமைப்பு மற்றும் பூகோளமயமாக்கப்பட்ட உலக சமுதாயத்தின் ஒரு பகுதியாக ஒன்றோடொன்று இணைக்கப்பட்ட இந்த பிராந்தியங்களின் வளர்ச்சி மட்டுமே வாழ்க்கைத் தரத்தையும் பொது சுகாதார வசதிகளையும் சமமான நிலைக்கு உயர்த்தி, மனிதகுலத்தின் பெரும் திரளானோருக்கு முன்னோக்கி செல்வதற்கான வழியை காட்டும்.

Loading