இங்கிலாந்து நெருக்கடி உலக நிதி அமைப்பின் ஸ்திரத்தன்மை பற்றிய எச்சரிக்கைகளுக்கு எரியூட்டுகின்றது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

ஊடக வர்ணனையாளர்கள் மற்றும் ஆய்வாளர்கள் மத்தியில் பிரித்தானிய நிதிய நெருக்கடி உலகளாவிய நிதிய அமைப்பின் செயல்பாடுகளில் ஒரு திருப்புமுனையின் வெளிப்பாட்டைக் குறிக்கிறது என்ற உணர்வு உள்ளது.

அதாவது, அடிக்கடி பயன்படுத்தப்படும் வார்த்தைப் பிரயோகத்தை பயன்படுத்தினால் இது ஒரு நெருக்கடியின் வெடிப்புக்கான நிலக்கரி சுரங்கத்தில் உள்ள கனாரி பறவையாகும். இவ்வெடிப்பு ஒன்றரை தசாப்தத்திற்கும் மேலாக மத்திய வங்கிகளால் நிதியச் சந்தைகளுக்கு டிரில்லியன் கணக்கான டாலர்களை வழங்குவதன் மூலம் ஒடுக்கப்பட்டது.

இங்கிலாந்தின் நிதி ஸ்திரத்தன்மைக்கு 'பொருளாதாய ஆபத்தை' தடுக்க அவசர நடவடிக்கை எடுப்பதால், Bank of England தற்காலிக பத்திரங்கள் வாங்கும் திட்டத்தைத் தொடங்கியுள்ளது [AP Photo/Frank Augstein]

கடந்த வாரம் Bank of England இன் அவசரகால தலையீட்டில் 65 பில்லியன் பவுண்டுகள் வழங்கப்பட்ட பிரித்தானிய நிகழ்வான பங்குப்பத்திரச் சந்தையின் சரிவைத் தடுக்கும் பொருட்டு அக்டோபர் 14 வரை தினசரி 5 பில்லியன் பவுண்டுகள் உட்செலுத்தப்படுபவை இதற்கு ஒரு எடுத்துக்காட்டாகும்.

இந்த நெருக்கடி, ஓய்வூதிய நிதியை மையமாகக் கொண்டதாகும். கடந்த காலத்தில், இந்த நிதிகள் நிலையான வட்டிவிகிதத்தில் கில்ட்ஸ் எனப்படும் 10 மற்றும் 30 ஆண்டு கால அரசாங்கப் பத்திரங்களில் முதலீடு செய்வதன் மூலம் தங்கள் செலுத்துமதியை பூர்த்தி செய்ய முடிந்தது. ஆனால் 2008 க்கு பின்னர், மத்திய வங்கியின் வட்டி விகிதக் குறைப்புகளுடன் இணைந்து, பணப்புழக்கத்தின் அதிகரிப்பின் ஆரம்பத்துடன் இப்பத்திர இலாபம் வரலாற்றில் குறைந்த மட்டத்திற்கு குறைந்தது.

அவர்களின் பாரம்பரிய வருமானத்திற்கான மூலஆதாரங்கள் வறண்டு போகும் சூழ்நிலையில் அவர்களின் செலுத்துமதியை பூர்த்திசெய்ய, ஓய்வூதிய நிதிகள் தங்கள் பொறுப்புகளைச் நிறைவேற்றுவதற்காக பெருநிறுவன கடன், பங்குகள் மற்றும் சொத்து போன்ற ஆபத்தானவற்றில் முதலீடுகளை மேற்கொள்ள வேண்டியிருந்தது.

பங்குப்பத்திரம் மூலம் நிதிச் சந்தை செயல்பாடுகளால் இத்தகைய முதலீடுகளிலிருந்து தங்கள் அபாயங்களைத் தடுக்க அவர்கள் முயன்றனர். இவற்றிற்கான பிணை உறுதி வழங்க அனைத்து சொத்துக்களிலும் பாதுகாப்பானதாகக் கருதப்படும் அரசாங்கப் பத்திரங்களை அடமானமாகப் பயன்படுத்தி அவர்கள் இந்த நோக்கத்திற்காக நிதியைக் கடன் வாங்கினார்கள்.

எவ்வாறாயினும், செப்டம்பர் 23 அன்று டோரி அரசாங்கத்தின் இடைக்கால வரவு-செலவுத் திட்டத்தை தொடர்ந்து பத்திரங்களின் விலை சரிந்தது. இத்திட்டம் பெருநிறுவனங்கள் மற்றும் பெரும் பணக்காரர்கள் மீதான வரிகளை 45 பில்லியன் பவுண்டுகள் வரை குறைத்தது. எனவே பிணை உறுதி வழங்கலின் மதிப்பு வீழ்ச்சியடைந்தது, மேலும் ஓய்வூதிய நிதிகள் கடன் வழங்கியவர்களிடமிருந்து கூடுதல் தொகைகளை செலுத்துவதற்க்கான அழைப்புகளை எதிர்கொண்டன.

இந்த கடன் வழங்கியவர்களின் நிதியங்களின் கோரிக்கைகளை பூர்த்தி செய்ய முற்பட்டதால், இது மேலும் பத்திர விற்பனைக்கு வழிவகுத்தது. இது பத்திரங்களின் விலைகளில் சரிவை அதிகப்படுத்தியதுடன், கூடுதல் பிணை உறுதிக்கான கோரிக்கைகளுக்கும் வழிவகுத்தது. இந்த நிலை தொடர்ந்திருந்தால், இதுவரை 1.5 டிரில்லியன் பவுண்டு சொத்துக்களை வைத்திருக்கும் 90 சதவீத ஓய்வூதிய நிதிகள் திவாலாகியிருக்கலாம்.

எல்லா நெருக்கடிகளையும் போலவே, இதுவும் அதன் சொந்த தேசிய வடிவங்களைக் கொண்டிருந்தது. ஆனால் இறுதி ஆய்வில் இது உலகளாவிய செயல்முறைகளின் விளைவு என்று கவலை தெரிவிக்கப்படுகிறது.

பங்குச் சந்தைகளை உயர்த்திய கடந்த 15 ஆண்டுகளில் மிகக் குறைந்த வட்டி விகித முறை இப்போது உலகம் முழுவதும் மத்திய வங்கிகளால் பின்வாங்கப்படுகின்றது. அமெரிக்க மத்திய வங்கியின் தலைமையில், மத்திய வங்கிகள் நான்கு தசாப்தங்களில் மிக உயர்ந்த பணவீக்கத்தை எதிர்கொண்டு தொழிலாளர்களின் ஊதியக் கோரிக்கைகளை நசுக்க முற்படுவதால், நிதிய கொள்கைகள் இறுக்கப்படுகின்றன.

பிரித்தானிய நெருக்கடி குறித்த சமீபத்திய கருத்து ஒன்றில், Wall Street Journal பத்தியாளர் ஜேம்ஸ் மெக்கிண்டோஷ், இது உலகளாவிய சந்தைகளில் ஒரு அதிர்ச்சி அலையை அனுப்பியதாக எழுதினார். இது 'நாம் நுழையும் புதிய பொருளாதார சகாப்தத்தின் ஆபத்துகள் பற்றி எல்லா இடங்களிலும் உள்ள அரசாங்கங்களுக்கு ஒரு எச்சரிக்கையை வழங்கிறது' என்றும், அது பிரித்தானியாவில் அரசியல், பணவீக்கம் மற்றும் அதிக வட்டி விகிதங்களின் நச்சு கலவையின் மூலம் வெளிப்படுத்தப்படுகிறது” என்றார்.

சந்தை பற்றி அறிக்கையிடலில் மிகைப்படுத்தப்படுபவற்றில் “கொந்தளிப்புகள்” அடிக்கடி பயன்படுத்தப்படுகின்றன என்றாலும் பிரித்தானியாவில் 'உண்மையில் அசாதாரணமானது' என்று அவர் குறிப்பிட்டார்.

டோரி அரசாங்கத்தின் நடவடிக்கைகளான 'அதிகமான வட்டி விகிதங்கள், அதிக கடன்கள், மோசமான தகவல்தொடர்புகள் மற்றும் நாட்டின் நிறுவன நம்பகத்தன்மையின் அரிப்பு ஆகியவற்றின் பரந்த பின்னணியின் காரணமாக' ஒரு பெரிய விளைவை ஏற்படுத்தியது எனவும் இதனது நிலைமைகளை வளர்ச்சியடைந்த உலகம் முழுவதின் நிலைமைக்கு கிட்டத்தட்ட பிரயோகிக்க கூடியதாக உள்ளது'.

'மிகவும் பிரளயகரமான ஆபத்து என்னவென்றால், அதிக [வட்டி] விகிதங்களுக்கு பிரித்தானியாதான் முதல் பெரிய பலியாகும்' என்று அவர் எழுதினார். கடந்த காலங்களில் அடிக்கடி நடந்தது போல, இது பாதுகாப்பானதாகக் கருதப்படும் ஒரு பகுதியில் உள்ள பிரச்சனைகளான, இந்த விஷயத்தில் ஓய்வூதிய நிதியத்தில் இது சிக்கல்களை ஏற்படுத்தியது.

1980 களில் மத்திய வங்கியின் தலைவர் பௌல் வோல்க்கரின் கீழ் தொடங்கப்பட்ட வர்க்கப் போரில் நடந்ததைப் போல அதிக வட்டி விகிதங்கள் பணவீக்கத்தை நிறுத்த முடியும் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் மத்திய வங்கி அதன் திட்டத்தை அடிப்படையாகக் கொண்டிருந்தது.

ஆனால் பைனான்சியல் டைம்ஸ் கட்டுரையாளர் ஜோன் பிளெண்டர் கருத்துப்படி, “வோல்க்கரின் நாளிலிருந்து நிதிக் கட்டமைப்பில் ஏற்படும் மாற்றங்கள், நிதிய உறுதியற்ற தன்மையை நோக்கிச் செல்கின்றன”.

பிளெண்டரின் கூற்றுப்படி, 'நிதிய அமைப்பின் முக்கிய பங்கு பணவைப்புகளில் எடுத்து கடன்களை உருவாக்குவது அல்ல, ஆனால் உலகளாவிய வளர்ச்சி மற்றும் நுகர்வு ஆகியவற்றைத் தக்கவைக்கும் கடனுக்கு மறுநிதியளிப்பதாகும்'. மேலும் 'இந்த சிக்கலான அமைப்பு உறுதியற்ற பிணை உறுதி வழங்கலை அதிகளவில் சார்ந்துள்ளது.'

மற்றொரு பைனான்சியல் டைம்ஸ் கட்டுரையாளரான ரொபின் விக்லெஸ்வொர்த், ஓய்வூதிய நிதி நடவடிக்கைகள் சில பிரகாசமான தனியார் நிதிய மூலோபாயம் அல்ல. மாறாக 'உங்கள் குடும்ப வரிகளைச் சமர்ப்பிப்பதற்கு ஈடான நிதியச் சந்தையாகும்' என்று குறிப்பிட்டார்.

'உண்மையான பேரழிவான நிதியச் சரிவுகள் முதலீட்டு உத்திகள் மற்றும் நிதிப் பத்திரங்களை உள்ளடக்கியதாக இருக்கும் என்று அவர் குறிப்பிட்டார். இவை சலிப்பாக இருக்கும் என்று எல்லோரும் நினைத்தனர்'. 'உலகளாவிய நிதி அமைப்பின் சாத்தியமில்லாத மூலையில்' 'இது போன்ற வேறு என்ன பதுங்கியிருக்கலாம்' என்ற கேள்வியை அவர் எழுப்பினார்.

'செப்டம்பர் 2022 இன் பத்திரச் சந்தைப் படுகொலை' தொடர்பான அவரது Chartbook வலைப் பதிவில் சமீபத்திய கருத்துரையில், 2008 ஆம் ஆண்டின் உலகளாவிய நிதி நெருக்கடி பற்றிய ஒரு பெரிய ஆய்வின் ஆசிரியரான பொருளாதார வரலாற்றாசிரியர் ஆடம் டூஸ், அழுத்தம் பிரித்தானியாவிற்கு மட்டும் அல்ல என்று குறிப்பிட்டுத் தொடங்கினார்.

'அட்லாண்டிக்கின் மறுபுறத்திலும், டாலர் அமைப்பின் அடித்தளமான அமெரிக்க கருவூல சந்தைகளில் நடுக்கம் ஓடுகிறது' என்று அவர் எழுதினார்.

JP மோர்கனின் தரவுகளின் அடிப்படையில் சமீபத்திய ப்ளூம்பேர்க் அறிக்கையை டூஸ் மேற்கோள் காட்டினார். அதன்படி, 'கருவூலச் சந்தையில் பணப்புழக்கம் மிகவும் குறைவாக உள்ளது' ஏனெனில் நிலைமைகள் 'தொற்றுநோய்க்காலம் மற்றும் லெஹ்மன் நெருக்கடிக்குப் பிந்தைய காலப்பகுதிகளில்' நிலவியதைபைபோல் காணப்படுகின்றன”.

Bank of England பிணை எடுப்பில் இருந்து சரியாகப் பயனடைந்தது யார் என்பது தனக்குத் தெளிவாகத் தெரியவில்லை. மேலும் இது 'நலன்களின் மோதல்களால் கிழிக்கப்பட்ட' ஒரு அமைப்பை நாங்கள் கையாள்கின்றோம் என்பதை எடுத்துக்காட்டுவதாக குறிப்பிட்டார்.

'ஓய்வூதியம் மற்றும் வீட்டுஅடமானங்கள் போன்ற அடிப்படை நிதியியல் தயாரிப்புகளின் இலாப உந்துதல்களில் பேரழிவுகரமான அபாயங்கள் மீது கட்டமைக்கப்பட்ட ஒரு அமைப்பை நிலைநிறுத்தி பாதுகாப்பது உண்மையில் அர்த்தமுள்ளதா?' என அவர் தொடர்ந்தார்.

நெருக்கடியானது சில 'சில கற்பனாவாத நிச்சயமற்ற தன்மையின்' விளைவு அல்ல, மாறாக 'முரண்பாடான, ஒத்திசைவற்ற மற்றும் அபாயகரமான இலாப உந்துதல் அமைப்பின் விளைவாகும். இது தற்போதைய நிலையை உறுதிப்படுத்துகிறது' என்று அவதானிப்புடன் அவர் முடித்தார்.

ஆனால் தன்னை ஒரு 'இடது தாராளவாதி' என்று வர்ணித்துக்கொள்ளும் சமூக ஜனநாயகவாதியாக டூஸ் இப்போதுள்ள அமைப்புமுறையான முதலாளித்துவ இலாப அமைப்பைப் பாதுகாக்கிறார். இதனை பொருளாதார அமைப்பின் ஒரே சாத்தியமான வடிவமாக அவர் கருதுகிறார். எனவே அதன் செயல்பாடுகள் பற்றிய தனது சொந்த குற்றச்சாட்டிலிருந்து எழும் தேவையான முடிவுகளை எடுப்பதை நிறுத்துகிறார்.

ஏனென்றால், அவ்வாறு செய்வது அதைத் தூக்கி எறிந்து, சோசலிசத்தை நிறுவுவதற்கான அவசியத்தை எழுப்பும். எல்லாவற்றிற்கும் மேலாக அவர் அவ்வாறான ஒரு முன்னோக்கை வெறுக்கிறார். எனவே, அவர் ஒருவித சீர்திருத்தத்தின் வாய்ப்பிற்கான ஒரு வெற்றிடத்தை வைத்திருக்கிறார்.

எவ்வாறாயினும், தொழிலாள வர்க்கம் இந்த புராணக்கதைகளை நிராகரித்து, அதன் சொந்த வாழ்க்கை சூழ்நிலையை அடிப்படையாகக் கொண்டு, நெருக்கடிக்கு அதன் சொந்த சுயாதீனமான தீர்வை முன்னெடுக்க வேண்டும். முதலாளித்துவப் பொருளாதாரத்தின் தொடர்ச்சியான சிதைவு மற்றும் எப்போதும் வளர்ந்து வரும் போரின் ஆபத்து, காலநிலை மாற்றத்தின் பேரழிவு விளைவு, கோவிட் தொற்றினாலான பாரிய மரணம் போன்ற சமூக மற்றும் பொருளாதார பேரழிவுகளின் எதிர்காலத்தை கொண்டு வருதலுடன் ஆகியவற்றுடன் இணைந்துள்ளது. சோசலிச அடித்தளத்தில் பொருளாதாரத்தை மறுகட்டமைப்பதற்கான வழியைத் திறக்க அரசியல் அதிகாரத்திற்கான போராட்டத்தை முன்னெடுக்கவேண்டும்.

Loading