அந்தோனி ஃபவுசி கோவிட் ‘ஆய்வக கசிவு’ சதி கோட்பாடிற்கு உதவியும் வசதியும் வழங்குகிறார்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

ஒவ்வாமை மற்றும் தொற்று நோய்களுக்கான தேசிய நிறுவனத்தின் இயக்குநர் டாக்டர் அந்தோனி ஃபவுசி Meet the Press தொலைக்காட்சியில் ஞாயிற்றுக்கிழமை ஒளிபரப்பப்பட்ட ஒரு நேர்காணலில், அவர் உட்பட சீன மற்றும் அமெரிக்க விஞ்ஞானிகள் கோவிட்-19 ஐ உருவாக்கிய பாசிச சதிக் கோட்பாடு குறித்து ‘திறந்த மனதுடன்’ இருப்பதாக கூறினார்.

ஒவ்வாமை மற்றும் தொற்று நோய்களுக்கான தேசிய நிறுவனத்தின் இயக்குநர் டாக்டர் அந்தோனி ஃபவுசி [AP Photo/Sarah Silbiger]

“ஆய்வகக் கசிவு ஒரு சாத்தியமான கோட்பாடா என்பதைக் கண்டுபிடித்து வகைப்படுத்த நாம் மொத்தத்தில் என்ன செய்ய முடியும்?” என்று சக் டோட் என்ற ஒரு நடுநிலையாளர் கேட்டதற்கு, “நாங்கள் அதைப் பற்றி வசதியாக உணரும் அளவுக்கு சீனா வெளிப்படையாக இல்லை” என்று ஃபவுசி பதிலளித்தார்.

மேலும், “இது பற்றி இப்போது நீங்கள் எந்த நிலையில் இருக்கிறீர்கள்? அதாவது, ‘ஆய்வகக் கசிவு கோட்பாடு தொடர்பாக ஃபவுசி எந்த நிலையில் இருக்கிறார்?’ என்பது குறித்து அறிய அனைவரும் எப்போதும் ஆர்வமாக இருக்கிறார்கள்” என்று டோட் கேட்டார்.

இதற்கு, ஃபவுசி, “நான் திறந்த மனதுடன் இல்லை என்று மக்கள் கூறினாலும், அதைப் பற்றி நான் முழுமையாக முற்றிலும் திறந்த மனதுடன் இருக்கிறேன்” என்று பதிலளித்தார். அவர் மேலும், “இது ஒரு இயற்கை நிகழ்வு என்பதை ஆதாரங்கள் வலுவாக சுட்டிக்காட்டுகின்றன,” என்ற எச்சரிக்கையை வெளிப்படுத்தி, “தோற்றம் என்ன என்பதைப் பற்றி நாம் அனைவரும் இன்னும் திறந்த மனதுடன் வைத்திருக்க வேண்டும்” என்று கூறி முடித்தார்.

‘ஆய்வகக் கசிவு’ கோட்பாடு என்பது பாசிச சித்தாந்தவாதி ஸ்டீவ் பானன் மற்றும் அவரது வெளிநாட்டு சீன வணிக கூட்டாளர் மைல்ஸ் குவோ ஆகியோரால் உருவாக்கப்பட்ட சதிக் கோட்பாட்டைக் குறிக்கிறது. அதன்படி சீனாவின் வூஹான் வைராலஜி நிறுவனம், ஃபவுசியின் கீழ் உள்ள தேசிய சுகாதார நிறுவனங்கள் மற்றும் பீட்டர் டஸாக்கின் கீழ் உள்ள EcoHealth Alliance நிறுவனம் ஆகியவற்றின் ஒத்துழைப்புடன் கோவிட்-19 ஐ உருவாக்கி, அதை வேண்டுமென்றே அல்லது தற்செயலாக சீனாவின் வூஹான் நகரத்தில் வெளிவிட்டது.

சதித்திட்டம் பற்றி ஃபவுசி ‘திறந்த மனதுடன்’ இல்லை என்று ‘மக்கள்’ கூறுவதற்கு காரணம், அவர் முன்பு அதை திட்டவட்டமாக நிராகரித்ததுடன், அதன் ஆதரவாளர்களை பொய்யர்கள் என்று குறிப்பாக அழைத்தது தான்.

ஜூலை 2021 இல் செனட் குழுவின் முன்பு ஃபவுசி சாட்சியம் அளித்தபோது, தீவிர வலதுசாரி செனட்டர் ராண்ட் பால் ‘உலகளவில் தொற்றுநோயால் நான்கு மில்லியன் மக்கள் இறப்பதற்கு அவர் தான் பொறுப்பு’ என்று குற்றம் சாட்டினார். மேலும், ‘அனைத்து ஆதாரங்களும் இது ஆய்வகத்தில் இருந்து வந்தது என்பதைச் சுட்டிக்காட்டுகிறது, நீங்கள் உட்பட ஆய்வகத்திற்கு நிதியளித்தவர்கள் தான் இதற்கு பொற்றுப்பாவீர்கள்’ என்றும் பால் கூறினார்.

ஃபவுசி பதிலளித்தார், 'நான் அதை முற்றிலும் எதிர்க்கிறேன்… யாராவது இங்கே பொய் சொன்னால், செனட்டர், அது நீங்கள் தான்.”

மே 2020 இல், ஆய்வக கசிவு 'கோட்பாடு' பற்றிய ஒரு நிருபரின் கேள்விக்கு ஃபவுசி பதிலளிக்கையில், 'காலப்போக்கில் படிப்படியான பரிணாமத்தைப் பற்றிய அனைத்தும் [இந்த வைரஸ்] இயற்கையில் உருவாகி பின்னர் இனங்களில் தாவின என்பதை வலுவாகக் குறிக்கிறது” என்றார்.

ஃபவுசி இந்த கருத்துக்களைக் கூறியதிலிருந்து, கோவிட்-19 இன் இயற்கையான தோற்றத்தைச் சுட்டிக்காட்டும் ஏராளமான ஆதாரங்கள் வெளிவந்துள்ளன. மேலும் ‘ஆய்வகக் கசிவு’ சதிக் கோட்பாட்டை உறுதிப்படுத்த எதுவும் இல்லை.

டிசம்பர் 2021 மற்றும் மார்ச் 2022 க்கு இடைப்பட்ட காலகட்டத்தில் வெளியிடப்பட்ட தொடர் ஆவணங்களில், விஞ்ஞானிகள் மைக்கேல் வொரோபே மற்றும் கிறிஸ்டியன் ஆண்டர்சன் ஆகியோர் சதிக் கோட்பாட்டை அழித்து, ஆரம்பகால கோவிட்-19 நோய்தொற்றுக்களின் இருப்பிடத்திற்கும் வூஹான் உயிர்-விலங்கு சந்தைக்கும் இடையேயான நேரடி தொடர்பை ஏற்படுத்தினர். இந்த சந்தை தான் நோயின் மையமாக இருந்தது என்பதைக் காட்டுகிறது மற்றும் வனவிலங்குகளில் இருந்து மனிதர்களுக்கு கோவிட்-19 பரவிய பாதையை ஆவணப்படுத்துகிறது.

‘ஆய்வகக் கசிவு’ கோட்பாடு குறித்த ஃபவுசியின் புதிய திறந்த தன்மை விஞ்ஞானத்தை அடிப்படையாகக் கொண்டது அல்ல. மாறாக அரசியலை அடிப்படையாகக் கொண்டது. இடைத்தேர்தலில், ட்ரம்பிற்கு மக்கள் ஆதரவு இல்லாதபோதிலும் மற்றும் 'திருடப்பட்ட தேர்தல்' பற்றிய அவரது பாசிச கூற்றுக்கள் இருந்தபோதிலும், குடியரசுக் கட்சி பைடென் நிர்வாகத்தின் மீதான பொதுமக்களின் அதிருப்தியைப் பயன்படுத்தி பிரதிநிதிகள் சபையில் குறுகிய பெரும்பான்மையைப் பெற முடிந்தது.

தேர்தலுக்கு அடுத்த நாள், ‘எனது குடியரசுக் கட்சி சகாக்களுடன் இணைந்து பணியாற்ற நான் தயாராக இருக்கிறேன்’ என்று பைடென் அறிவித்தார். குடியரசுக் கட்சியினர், தங்கள் தலைமையின் கீழ் பிரதிநிதிகள் சபையின் முக்கிய கவனம், ‘ஆய்வகக் கசிவு’ சதிக் கோட்பாட்டை ஊக்குவிப்பதன் மூலம் விஞ்ஞானிகளை சூனிய வேட்டையாடுவதற்கான முயற்சியாகவும், அத்துடன் தொற்றுநோய்க்கு எதிராக மிகக் கடுமையான தணிப்பு நடவடிக்கைகளுக்காக வாதிட்டதற்கு ஃபவுசி உட்பட விஞ்ஞானிகளை குறிவைப்பதாகவும் அது இருக்கும் என்பதைத் தெளிவுபடுத்தியுள்ளனர்.

ஃபவுசியின் கருத்துக்களைத் தொடர்ந்து நடந்த குழு விவாதம் இந்த ஒத்துழைப்பின் அரசியல் உள்ளடக்கத்தை வெளிப்படுத்தியது.

தேசிய குடியரசுக் கட்சியின் காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தகவல் தொடர்பு இயக்குநர் மாட் கோர்மன் இவ்வாறு கருத்துத் தெரிவித்தார்:

கோவிட் நோயின் தோற்றுவாய் குறித்த ஒரு விஷயம் என்று வரும்போது குடியரசுக் கட்சியின் பழைமைவாதிகளையும் (Freedom Caucus) பைடென் அரசுகளில் உள்ளவர்களினதும் அதிகமான கவனத்தை ஈர்க்கும் என நான் நினைக்கிறேன். அதை தனிப்பட்ட விஷயமாக எடுத்துக்கொள்ளாமல், “இதோ, மற்றொரு உலகளாவிய தொற்றுநோயைத் தடுப்பது எப்படி” என்று சிந்திக்க வேண்டும், மற்றும் “அவர்கள் எதை மூடி மறைக்கிறார்கள்?” என்ற சீனாவைப் பற்றிய உங்கள் கருத்துடன் சீனாவை எதிர்கொள்வதனால் நீங்கள் ஒருபோதும் வாக்காளர்களை இழக்க மாட்டீர்கள்.

இதற்கு நடுவர் சக் டோட் இவ்வாறு பதிலளித்தார், “டாக்டர் ஃபவுசியைப் பாருங்கள், அவர் இதேபோன்ற உரையாடல்களை நடத்தத் தயாராக இருக்கிறார். வேறு எங்கிருந்தாவது தொடங்குவதை விட இது மிகவும் ஒன்றிணைக்கும் இடம் என்பதில் நீங்கள் தவறாக கருதவில்லை என்று நான் நினைக்கிறேன்.”

ஃபவுசியின் அறிக்கைகள், கோவிட்-19 இன் தோற்றம் பற்றிய மதிப்பிழந்த ‘ஆய்வகக் கசிவு’ கோட்பாட்டைப் புதுப்பிக்க அரசியல் ஸ்தாபகத்திற்குள் நிகழ்த்தப்படும் ஒரு பரந்த முயற்சியின் ஒரு பகுதியாகும். இது இரண்டு காரணிகளால் தூண்டப்படுகிறது.

முதலாவதாக, அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் புவிசார் அரசியல் கட்டாயங்கள் உள்ளன, இது சீனாவை ஒரு முக்கிய பொருளாதார மற்றும் இராணுவ போட்டியாளராகக் கருதுகிறது. ட்ரம்ப் நிர்வாகத்தின் போது தொற்றுநோயின் ஆரம்ப நாட்களில் தொடங்கி, கோவிட்-19 நோய் பரவலுக்கு சீனாவை குற்றம் சாட்டும் முயற்சியானது, அமெரிக்க ஆளும் வர்க்கத்தின் பரந்த சீன எதிர்ப்பு பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக எப்போதும் இருந்து வருகிறது.

இரண்டாவதாக, வேண்டுமென்றே அல்லது தற்செயலாக வைரஸைக் கட்டவிழ்த்துவிட்டதற்கு சீனா தான் பொறுப்பு என்ற பொய்யை விளம்பரப்படுத்துவது, ஆளும் வர்க்கத்தின் குற்றவியல் கொள்கைக்கு ஒரு பிறிதொருவரை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது, குறிப்பாக அமெரிக்காவில், இது பாரியளவு மரணத்திற்கு வழிவகுத்தது.

அமெரிக்காவில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் கோவிட்-19 நோயால் இறந்துள்ளனர். இந்த இறப்புக்கள் ட்ரம்ப் மற்றும் பைடென் நிர்வாகத்தின் கீழ் ஏற்றுக்கொள்ளப்பட்ட ‘சமூக நோயெதிர்ப்பு சக்தி பெருக்கும்’ கொள்கைகளின் நேரடி விளைவாகும், முகக்கவசம் அணிவதை முக்கியமற்றதாக்கும் இரு ஜனாதிபதிகளின் பொது அறிக்கைகளுடன் சேர்ந்து, கோவிட்-19 பரவலைக் கண்காணிக்கும் உள்கட்டமைப்பை முறையாக அகற்றியதைத் தொடர்ந்து, பள்ளிகளும் வணிகங்களும் முன்கூட்டியே மீளத் திறக்கப்படுவதை இது கண்டது.

இதில் ஃபவுசி ஒரு பங்கு வகித்தார். ட்ரம்ப் மற்றும் பைடென் இருவர் நிர்வாகத்தின் கீழ், ஃபவுசி அரசாங்கக் கொள்கையை விஞ்ஞானபூர்வமாக வழங்குவதற்குப் பணியாற்றினார், இவர் ட்ரம்பின் அறிக்கைகள் குறித்து அரை விமர்சன அணுகுமுறையை பின்பற்றினார். ஆனால் அதேவேளை பைடெனின் கீழ் நடைமுறைப்படுத்தப்பட்ட அதே கொள்கைகளை விமர்சனமின்றி திறம்பட ஆதரித்தார்.

இன்றுவரை தொடரும் நோயின் மிகப்பெரிய எழுச்சிக்கு மத்தியில் டிசம்பர் 2021 இல், நோய் கட்டுபாடு மற்றும் தடுப்பு மையங்கள் அதனால் பரிந்துரைக்கப்பட்ட தனிமைப்படுத்தல் காலத்தை பத்து நாட்களிலிருந்து ஐந்து நாட்களாக குறைத்தது, இதை “சமநிலையில், பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் சமூகத்தை சீர்குலைக்காமல் இருக்க வேண்டியதன் அவசியத்தை நீங்கள் கவனத்தில் கொண்டால், இது ஒரு நல்ல தேர்வாகும்” என்று கூறி, ஃபவுசி இந்த நடவடிக்கையை நியாயப்படுத்தினார்.

தனிமைப்படுத்தல் காலம் குறைக்கப்பட்டது, தொழிலாளர்கள் நோய்வாய்ப்பட்டிருக்கும் போது அவர்களை வேலைக்குத் திரும்ப நிர்ப்பந்திக்கும் வாய்ப்பை அளித்தது, மற்றும் ஒவ்வொரு தொழிற்சாலை, கடை, மருத்துவமனை, பள்ளி, விமான நிலையம் மற்றும் கிட்டங்கிகள் ஆகியவற்றை நோய்க்கான காப்பகமாக மாற்றியது.

ஜனவரி 2022 இல், ஓமிக்ரோன் மாறுபாட்டின் எழுச்சியை எதிர்கொண்டு பொது சுகாதார நடவடிக்கைகளை அகற்றுவதைக் கண்டிப்பதற்குப் பதிலாக, ஓமிக்ரோன் மாறுபாடு ‘நேரடி வைரஸ் தடுப்பூசிக்கு சமமானதாக இருக்கும்” என்ற வாய்ப்பை ஃபவுசி எழுப்பினார்.

இந்தக் கொள்கைகளின் விளைவாக, கடந்த ஆண்டில், 250,000 க்கும் மேற்பட்ட அமெரிக்கர்கள் கோவிட்-19 ஆல் உயிரிழந்தனர்.

ஒரு கட்டத்தில் இந்த சமூக மற்றும் அரசியல் குற்றத்திற்கு பொறுப்புக்கூறலைக் கோரும் இயக்கம் உருவாகும் என ஆளும் வர்க்கம் அஞ்சுகிறது. இவ்வாறு மில்லியன் கணக்கான மக்களின் மரணத்திற்காக அல்லது முடக்கப்பட்டதற்காக, அதிலிருந்து அமெரிக்க முதலாளித்துவத்தை விடுவிக்கும்போது அது ஒரு வெளிப்புற எதிரி மீது தொற்றுநோய்க்கான பழியை சுமத்த முயற்சிக்கிறது.

Loading