முன்னோக்கு

அவர்களுக்கு ஏன் இவ்வளவு காலம் எடுத்தது? நியூ யோர்க் டைம்ஸ், கார்டியன் இறுதியில் அசான்ஜின் விடுதலைக்கு அழைப்பு விடுக்கின்றன

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

விக்கிலீக்ஸ் பதிப்பாசிரியர் ஜூலியன் அசான்ஜ் இலண்டனில் உள்ள ஈக்வடோர் தூதரகத்தில் தஞ்சமடைந்து பத்தாண்டுகளுக்குப் பின்னர், அவர் கைது செய்யப்பட்டு தனிச்சிறையில் அடைக்கப்பட்டு மூன்று ஆண்டுகளுக்குப் பின்னர், நியூ யோர்க் டைம்ஸ், தி கார்டியன், லு மொண்ட்(Le Monde), எல் பைஸ் (El País) மற்றும் டெர் ஸ்பீகலின் (Der Spiegel) பதிப்பாசிரியர்களும் செய்தி ஆசிரியர்களும் அசான்ஜ் மீதான வழக்கை கைவிடுமாறு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடெனுக்கு அழைப்பு விடுத்து ஒரு பகிரங்க கடிதம் வெளியிட்டுள்ளனர்.

அசான்ஜ் வெளியிட்ட ஆவணங்கள் இன்றியமையா பொது நலனும் முக்கியத்துவமும் கொண்டவை என்பதை இறுதியில் இந்த வெளியீடுகள் ஒப்புக் கொள்கின்றன, அவர் வெளியிட்டவை 'சர்வதேச அளவில் ஊழல், இராஜாங்க மோசடிகள் மற்றும் உளவு விவகாரங்களையும்' மற்றும் 'நாட்டின் உயிர்களையும் பணத்தையும் மிகக் கடுமையாக பாதிக்கும் முடிவுகளையும் அம்பலப்படுத்தின' என்று அவர்கள் குறிப்பிட்டனர்.

இப்போது அவர்கள் எழுதுகிறார்கள், 'பத்திரிகையாளர்களும் மற்றும் வரலாற்றாசிரியர்களும் அந்த தனித்துவமான ஆவணக் களஞ்சியத்தைப் பயன்படுத்தி, அறியப்படாத புதிய உண்மைகளைத் தொடர்ந்து வெளியிடுகிறார்கள்.”

அந்தக் கடிதம் குறிப்பிட்டது, “ஏப்ரல் 12, 2019 இல், அமெரிக்கக் கைது ஆணையின் பேரில் அசான்ஜ் இலண்டனில் கைது செய்யப்பட்டார், இப்போது அவர் மூன்றரை ஆண்டுகளாக வழமையாக பயங்கரவாதிகளுக்கும் மற்றும் ஒழுங்கமைத்தக் குற்றங்கள் புரியும் குழுக்களின் உறுப்பினர்களுக்கும் பயன்படுத்தப்படும் உயர் பாதுகாப்பு பிரிட்டிஷ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் அமெரிக்காவுக்கு நாடு கடத்தப்படுவதையும், அதிகபட்ச பாதுகாப்பு கொண்ட அமெரிக்க சிறையில் 175 ஆண்டுகள் வரையிலான தண்டனையையும் எதிர் கொண்டுள்ளார்.”

'ஒரு பதிப்பாசிரியர் அல்லது ஒளிபரப்பாளர் மீது வழக்கு தொடுக்க ஒருபோதும் பயன்படுத்தப்பட்டு இல்லாத, ஒரு பழைய சட்டமான 1917 உளவுபார்ப்பு சட்டத்தை' (முதலாம் உலகப் போரின் போது உளவாளிகள் என்று சந்தேகிக்கப்பட்டவர்களைத் துன்புறுத்த வடிவமைக்கப்பட்ட இதை) அசான்ஜிற்கு எதிராகப் பயன்படுத்துவதை அவர்கள் எதிர்க்கிறார்கள்.

இது 'ஓர் ஆபத்தான முன்னுதாரணத்தை அமைக்கிறது, அமெரிக்காவின் முதல் அரசியலமைப்பு திருத்தம் மற்றும் பத்திரிகை சுதந்திரத்தை கீழறுக்க அச்சுறுத்துகிறது. பொது நலன்களுக்கு அவசியப்படும் போது முக்கியமான தகவல்களைப் பெறுவதும் வெளியிடுவதும் பத்திரிகையாளர்களின் அன்றாட வேலைகளின் முக்கிய பகுதியாகும். அந்த வேலை குற்றமாக ஆக்கப்பட்டால், பொதுமக்களுக்கான நம் செய்திகளும் நம் ஜனநாயகங்களும் கணிசமாக பலவீனமாக்கப்படுகின்றன … இரகசியங்களை வெளியிட்டதற்காக ஜூலியன் அசான்ஜ் மீது அமெரிக்க அரசாங்கம் வழக்குத் தொடுத்திருப்பதைக் கைவிட இது சரியான நேரமாகும்,” என்று குறிப்பிட்டு அந்தக் கடிதம் நிறைவு செய்கிறது.

அசான்ஜ் ஒரு கொடூரமான அரசு வழக்கு நடவடிக்கைக்கு பலிக்கடா ஆக்கப்பட்டுள்ளார், இதில் அவர் வாழ்வின் பல ஆண்டுகளையும் உடல்நலனையும் விலை கொடுத்துள்ளார், அரசின் குற்றவியல்தன்மையை வெளிக்காட்டியதற்காக, மற்றவர்களுக்கு உறைய வைக்கும் ஒரு முன்னுதாரணத்தை அமைக்க பயன்படுத்தப்பட்டுள்ளார் என்பதை அந்தப் பகிரங்கக் கடிதம் தெளிவுபடுத்துகிறது.

ஆனால் இது பின்வரும் கேள்வியை எழுப்புகிறது: இவ்வளவு காலம் ஏன் எடுத்தது? அசான்ஜ் மீதான வழக்கைக் கைவிடுமாறு அழைப்புவிடுக்க நியூ யோர்க் டைம்ஸ் மற்றும் கார்டியனுக்கு ஏன் 10 ஆண்டுகள் ஆனது?

கடந்த தசாப்தத்தில் இந்த பத்திரிகைகளின் நடத்தை முற்றிலும் கண்டிக்கத்தக்கதாக இருந்துள்ளது. அசான்ஜிற்கு எதிராக பொதுக் கருத்தை விஷமாக்குவதற்கும், அவர் மீது சுமத்தப்பட்ட பொய்யான குற்றச்சாட்டுக்கள் மற்றும் வாதங்களுக்கு நம்பகத்தன்மையை வழங்கவும் அவை செய்த முயற்சிகள், இந்தக் கொள்கைபிடிப்பான மற்றும் துணிச்சலான பத்திரிகையாளர் மீது அமெரிக்க அரசு வழக்குத் தொடுக்க ஒத்துழைத்தன.

அந்த இரகசிய ஆவணங்களைப் பிரசுரிப்பதில் பிரிட்டனின் கார்டியன் தான் முதன்முதலில் விக்கிலீக்ஸ் உடன் சேர்ந்து பணியாற்றியது. அவை பிரசுரமாகத் தொடங்கிய ஒரு மாதத்திற்குள் அது உறவுகளைத் துண்டித்துக் கொண்டு, அசான்ஜை ஒரு சர்வதேச அனாதையாக ஒதுக்கக் கோரி உலகின் ஊடகங்கள் எங்கிலும் முன்னெடுக்கப்பட்ட, குணநலனைக் கேடாக சித்தரிக்கும் ஒரு பிரச்சாரத்தை அது வேகமாக தொடங்கியது.

அந்தப் பத்திரிகை விக்கிலீக்ஸ் உடனான அதன் முந்தைய ஒத்துழைப்பை விவரித்து, டிசம்பர் 2010 இல் “விக்கிலீக்ஸ்: அவரும் அவர் சிந்தனையும்' என்ற தலையங்கத்தில், 'சிறு எண்ணிக்கையிலான ஆவணங்களை' மட்டுமே பிரசுரிக்க அது உடன்பட்டிருந்ததாக எழுதியது, மேலும் 'அதைத் திருத்தம் பார்ப்பதிலும், சூழ்நிலையைக் கவனத்தில் கொள்வதிலும், விவரிப்பதிலும் மற்றும் பிரசுரிப்புக்கு ஏற்ற வடிவில் வடிவமைப்பதிலும்' வலிநிறைந்த 'செயல்முறைகள்' இருப்பதாக எடுத்துக் காட்டியது. வேறு வார்த்தைகளில் கூறினால், அந்த ஆவணங்களில் உள்ளடங்கி இருந்த படுகொலை, சித்திரவதை, உளவுபார்ப்பு மற்றும் ஊழல் பற்றிய விவரங்களால் ஏற்படும் பக்கவிளைவுகளைக் கட்டுப்படுத்த அது செயல்பட்டிருந்தது.

இது நிறைவேறியது, கார்டியனும் மற்றும் பிற வெளியீடுகளும் அசான்ஜை நோக்கி விசமத்தனமாக திரும்பியதுடன், அசான்ஜின் பெயரைக் களங்கப்படுத்தவும், அவரைப் பாதுகாப்பாக பிடிப்பதற்கும், அவரை அமெரிக்காவிடம் ஒப்படைப்பதற்கு தயாரிப்பு செய்யவும் வடிவமைக்கப்பட்ட, இட்டுக்கட்டப்பட்ட சுவீடன் பாலியல் தாக்குதல் விசாரணை மற்றும் வேறு நாட்டிடம் ஒப்படைப்பதற்கான கோரிக்கை மீது அவற்றின் தாக்குதலை மையப்படுத்தின.

அந்த வழக்கு அப்போதிருந்தே முழுமையாக அம்பலமாகி கைவிடப்பட்டது என்றாலும், அது அசான்ஜை ஏழாண்டுகளுக்குத் திறம்பட எதேச்சதிகார தடுப்புக் காவலில் வைக்க சேவையாற்றியதுடன், இலண்டனின் ஈக்வடோர் தூதரகத்திற்கு வெளியே ஒரு பொலிஸ் அதிரடிப் படை நிற்க அங்கே அவர் தஞ்சம் கோர நிர்பந்திக்கப்பட்டார். இந்த காலகட்டத்தில் அமெரிக்க உளவுத்துறை அசான்ஜை உளவுபார்த்ததுடன் கடத்தி கொலை செய்வதற்கான திட்டங்களில் அவர் இலக்கு வைக்கப்பட்டிருந்த நிலையில், இந்தக் காலகட்டத்தைக் குறித்து அந்த பகிரங்க கடிதம் ஒன்றும் குறிப்பிடவில்லை.

அதேவேளையில் ஒட்டுமொத்தமாக, அசான்ஜின் தனிமனிதயியல்புகள் மீதான தாக்குதல்கள் தொடர்ந்தன. 2016 அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் தலையிடுவதற்கான ரஷ்ய அரசாங்கத்தின் சூழ்ச்சி என்று கூறப்பட்டதில் அசான்ஜையும் உடந்தையாக ஆக்கும் அதன் பிரச்சாரத்தின் பாகமாக, கார்டியன், அசான்ஜிற்கும் டொனால்ட் ட்ரம்ப்பின் கூட்டாளி பௌல் மனஃபோர்டுக்கும் இடையே ஒரு சந்திப்பை ஏற்பாடு செய்யும் அளவுக்குச் சென்றது, இது சிறப்புச் செய்தியாக வெளியிடப்பட்டது.

ஏப்ரல் 2019 இல் அசான்ஜுக்கு எதிரான அமெரிக்க வழக்கின் முழுமையான நோக்கம் வெளிப்பட்ட போதும் கூட, உளவுபார்ப்பு சட்டத்தைப் பயன்படுத்துவதற்கு சிக்கல்களை உருவாக்காத வகையில், அவரை மௌனமாக்கும் ஒரு வழியாக சுவீடனுக்கு அவரை நாடு கடத்த மீண்டும் பரிந்துரைத்ததே கார்டியனின் முதல் விடையிறுப்பாக இருந்தது.

இந்தப் பத்திரிகைகளின் செய்தி ஆசிரியர்களும் பதிப்பாசிரியர்களும், அசான்ஜ் எந்த குற்றமும் செய்யாத ஓர் அப்பாவி பத்திரிகையாளராக செயல்பட்டு வந்தார் என்பதை ஆரம்பத்தில் இருந்தே புரிந்து வைத்திருந்தனர் என்பதை இந்தக் கடிதம் தெளிவுபடுத்துகிறது.

கார்டியன், நியூ யோர்க் டைம்ஸ் மற்றும் இன்னும் பல பத்திரிகைகளும், அப்படியே முகத்தை மாற்றிக் கொண்டு, இப்போது அசான்ஜை வழக்கில் இழுப்பதை வெளிப்படையாக எதிர்க்கின்றன என்றால், அமெரிக்க போர் குற்றங்களை அம்பலப்படுத்திய ஒரு பத்திரிகையாளர் மீதான ஜோடிப்பு வழக்கு பைடென் நிர்வாகத்திற்கு ஒரு மிகப் பெரிய அரசியல் நெருக்கடியை ஏற்படுத்தும் என்ற கவலையினால் ஆகும்.

அசான்ஜ் மீதான எந்தவொரு வழக்கும் பாரியளவில் மக்கள் எதிர்ப்பைச் சந்திக்கும் என்பதோடு, பைடென் துணை ஜனாதிபதியாக சேவையாற்றிய பராக் ஒபாமாவின் ஜனநாயகக் கட்சி நிர்வாகத்தின் கீழ் நடந்த குற்றங்கள் உட்பட, அமெரிக்க ஏகாதிபத்தியம் நடத்திய குற்றங்களைக் கூடுதலாக வெளிச்சத்திற்குக் கொண்டு வரும்.

ரஷ்ய அட்டூழியங்களைத் தடுக்க அமெரிக்க தலையீடு அவசியம் என்ற அடித்தளத்தில் விற்பனை செய்து, ரஷ்யாவுக்கு எதிராக உக்ரேனில் நடக்கும் பினாமி போரை அமெரிக்கா விரிவாக்கி வரும் ஒரு நேரத்தில், அமெரிக்க போர்க்குற்றங்கள் பற்றிய இந்த வெளியீடுகள் வந்து விடக்கூடும்.

அனைத்திற்கும் மேலாக, எந்தவொரு விசாரணையும், அசான்ஜை துன்புறுத்த உதவியதில் நியூ யோர்க் டைம்ஸ் மற்றும் கார்டியன் வகித்த கண்டிக்கத்தக்க பாத்திரத்தின் மீதும் வெளிச்சத்தைப் பாய்ச்சும்.

அசான்ஜின் விடுதலையை நிர்பந்திக்கத் தொழிலாள வர்க்கம் அதன் போராட்டத்தை இரட்டிப்பாக்க வேண்டும். அமெரிக்க அரசாங்கம் 'ஒவ்வொரு இடத்திலும் பத்திரிகையாளர்கள், பதிப்பாசிரியர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களைத் துன்புறுத்துவதற்கான நிலைமைகளை உருவாக்க' முயன்று வருகிறது என்றாலும் அசான்ஜ் 'உலகின் மிகவும் சக்தி வாய்ந்த அரசாங்கங்கள், உளவுத்துறை முகமைகள் மற்றும் பெருநிறுவன ஊடகங்களில் உள்ள அவற்றின் ஊதுகுழல்கள் சம்பந்தப்பட்ட குற்றகரமான ஒரு கொடூர சதிக்கு பலிகடா' ஆக்கப்பட்டார் என்று உலக சோசலிச வலைத் தளம் எச்சரித்தது.

அசான்ஜின் பாதுகாப்புக்கான இயக்கமானது, அரசாங்கங்கள், உளவுத்துறை முகமைகள் மற்றும் பெருநிறுவனங்கள் என அனைத்தும் ஒட்டுமொத்தமாக இருந்தாலும் அதை விட மிகவும் பலம் வாய்ந்த ஒரு சக்தியான சர்வதேச தொழிலாள வர்க்கத்தை அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டும், அது ஜனநாயக மற்றும் சமூக உரிமைகள் மீதான அனைத்து தாக்குதல்கள் மற்றும் இராணுவவாதத்திற்கு எதிரான ஓர் எதிர்தாக்குதலின் மையப் புள்ளியாக அவர் பாதுகாப்பை முன்வைக்க வேண்டும். நியூ யோர்க் டைம்ஸ், கார்டியன் மற்றும் ஏனையவற்றின் உத்வேகமான ஆதரவுடன் நேட்டோ-ரஷ்யா போர் தொடர்ந்து கொண்டிருக்கும் இவ்வேளையில், இந்தப் போராட்டம் முன்பினும் அதிக முக்கியத்துவம் பெறுகிறது.

Loading