வாக்குப்பதிவு ஒடுக்கப்பட்ட போதும், சோசலிச வேட்பாளர் வில் லெஹ்மன் UAW தேர்தலில் ஆயிரக் கணக்கான வாக்குகள் ஜெயிப்பதை நோக்கி முன்னேறி வருகிறார்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

ஐக்கிய வாகனத் துறைத் தொழிலாளர்கள் சங்க (UAW) வரலாற்றிலேயே முதன்முறையாக நடந்த இந்த நேரடி தேர்தலின் ஆரம்ப முடிவுகள், சாமானிய தொழிலாளியும் சோசலிச வேட்பாளருமான வில் லெஹ்மனுக்கு ஒரு முக்கிய அளவில் ஆதரவு இருப்பதையும், அத்துடன் படுமோசமான 10 சதவீத வாக்குப்பதிவானது பரந்த வாக்குகள் ஒடுக்கப்பட்டிருப்பதையும் UAW தொழிற்சங்கத்தில் இருந்து சாமானிய தொழிலாளர்கள் அன்னியப்பட்டிருப்பதையும் காட்டுகின்றன.

மூன்றில் ஒரு பங்கு வாக்குகள் எண்ணப்பட்டுள்ள நிலையில், UAW அதிகாரத்துவத்தின் முக்கிய வேட்பாளர்களான தற்போதைய ரே கார்ரி மற்றும் நீண்டகால UAW நிர்வாகி ஷான் ஃபைன் ஆகியோர் முறையே 13,132 மற்றும் 14,458 வாக்குகளுடன் (36 மற்றும் 39 சதவீதம்) பெரும்பான்மை வாக்குகளைப் பெறுவதற்கு மிகவும் நெருக்கத்தில் உள்ளதாக உத்தியோகபூர்வமற்ற வாக்கு எண்ணிக்கை தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சதவீதங்களே இருந்தாலும், முக்கிய வேட்பாளர்களில் ஒவ்வொருவரும் பாரிய UAW எந்திரத்தை அணுக முடிந்திருந்த போதும், அவர்கள் தகுதி உடைய சுமார் 1 மில்லியன் வாக்காளர்களில் 3 சதவீதத்திற்கும் குறைவானவர்களின் ஆதரவையே பெற்றிருப்பார்கள் என்று அர்த்தப்படும். யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காவிட்டால், இரண்டாம் கட்ட தேர்தல் நடத்தப்படும்.

பிராந்தியம் 9 (பென்சில்வேனியா, நியூ யோர்க்கின் வடக்குப் பகுதி மற்றும் நியூ ஜெர்சி), பிராந்தியம் 1A (கிழக்கு மிச்சிகன் மற்றும் மெட்ரோ டெட்ராய்ட் பகுதியின் சில இடங்கள்), பிராந்தியம் 2B (இண்டியானா மற்றும் ஓஹியோ), பிராந்தியம் 9A (நியூ யோர்க் மற்றும் மாசசூசெட்ஸ்) ஆகியவற்றின் வாக்குகள் இதுவரை எண்ணப்பட்டு உள்ளன. ஒன்று மாற்றி ஒன்றாக உள்ளூர் கிளைகளில், வாக்குப்பதிவு தகுதியான உறுப்பினர்களில் சுமார் 10 சதவீதம் அல்லது அதற்கும் குறைவாக உள்ளது. ஒட்டுமொத்தமாக, கண்காணிப்புக் குழுவால் 106,790 வாக்குகள் மட்டுமே பெறப்பட்டன, இடப்பட்ட வாக்குகளின் நிஜமான எண்ணிக்கை குறைவாக இருக்கின்ற அதேவேளையில், பல வாக்குகள் செல்லாததாக ஆக்கப்பட்டன அல்லது வாக்காளர் உயிருடன் இல்லை அல்லது பல ஆண்டுகளுக்கு முன்னரே UAW ஐ விட்டு வெளியேறிவிட்டார் என்று எழுத்துபூர்வ அறிவிப்புகளுடன் திருப்பி அனுப்பப்பட்டன.

தற்போது, சாமானிய தொழிலாளர்களின் வேட்பாளர் வில் லெஹ்மன், 2,220 வாக்குகள் அல்லது மொத்த வாக்குகளில் 4.8 சதவீத வாக்குகளைப் பெற்றுள்ளார். லெஹ்மனுக்கு அளிக்கப்பட்டுள்ள ஒவ்வொரு வாக்கும், அதிகாரத்துவத்தை ஒழிப்பதற்கும், அதிகாரத்தை சாமானிய தொழிலாளர்களுக்கு கைமாற்றுவதற்கும் லெஹ்மன் விடுத்த அழைப்பை ஆதரிக்க பெரும் விருப்பத்துடன் நனவுபூர்வமாக எடுக்கப்பட்ட முடிவாகும். லெஹ்மன் ஒரு வெளிப்படையான சர்வதேசிய சோசலிச வேலைத்திட்டத்துடன் போட்டியிட்டார், இலாபத்திற்காக அல்லாமல் மனித தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக வாகனத் தொழில்துறையைத் தொழிலாளர்களின் ஜனநாயகக் கட்டுப்பாட்டின் கீழ் வைப்பதை அறிவுறுத்தினார்.

லெஹ்மன் அவருடைய சொந்த உள்ளூர் கிளை சங்கமான பென்சில்வேனியாவின் அலென்டவுன் லோக்கல் 877 கிளையில் 19 சதவீத வாக்குகள், அத்துடன் டெட்ராய்ட் புறநகர் பகுதியில் உள்ள ஸ்டெல்லாண்டிஸ் வாரன் ட்ரக் ஆலையில் 8.4 சதவீத வாக்குகள், ஓஹியோ சின்சினாட்டிக்கு அருகே GE இல் 8.8 சதவீத வாக்குகள் மற்றும் பிட்ஸ்பேர்க்கிற்கு வெளியே AK எஃகு ஆலையில் 12.5 சதவீத வாக்குகள் பெற்றது உட்பட, நாடெங்கிலும் பரந்தளவிலான வேலையிடங்களில் கணிசமான ஆதரவைப் பெற்றுள்ளார்.

குறிப்பிடத்தக்க வகையில், அமெரிக்க இராணுவத்திற்கு M1A1 டாங்கிகளை உற்பத்தி செய்யும் ஓஹியோ லிமாவில் உள்ள ஜெனரல் டைனமிக்ஸ் ஆலையிலும் லெஹ்மன் 8.2 சதவீத வாக்குகளை வென்றார். பின்னணியில் பல டாங்கிகள் மற்றும் மிகப் பெரிய அமெரிக்க கொடி பறக்க 2019 இல், டொனால்ட் ட்ரம்ப், இந்த ஆலையில் இருந்து தான் ஒரு பாசிச உரை வழங்கினார். வாக்களித்த தொழிலாளர் படையின் ஒரு கணிசமான சதவீதத்தினர் வெளிப்படையாகவே ஏகாதிபத்திய-விரோத சோசலிச வேட்பாளர் ஒருவரை ஆதரித்தனர் என்ற உண்மை, அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் 'வலிமை' மற்றும் தீவிர பகட்டாரவார சித்தாந்த பசை எல்லாம் உண்மையில் ஒரு பலவீனமான அஸ்திவாரத்தில் நிற்கின்றன என்ற உண்மையை வெளிப்படுத்துகிறது.

சமானிய தொழிலாளர்கள் வாக்குப்பதிவு செய்வதை ஒடுக்குவதற்கான UAW எந்திரத்தின் முயற்சிகளை வைத்து பார்த்தால், லெஹ்மனுக்குக் கிடைத்த வாக்குகள் குறிப்பிடத்தக்கவை, அவர்களில் பரந்த பெரும்பான்மையினருக்கு தேர்தல் நடத்தப்படுவது குறித்து முறையாக தகவல் கூட தெரிவிக்கப்படவில்லை. நிர்வாகப் பதவிகளுக்கு நேரடி தேர்தல்கள் நடத்த UAW ஐ நிர்பந்தித்த 2021 கருத்து வாக்கெடுப்பில் பதிவான வாக்குகளை விட இந்த நேரடி தேர்தல்களில் அண்மித்து 40,000 வாக்குகள் குறைவாக இடப்பட்டன. UAW அதிகாரத்திற்குப் பரந்த எதிர்ப்பைக் காட்டும் மற்றொரு அறிகுறியாக, பிரையன் கெல்லர் கடைசி எண்ணிக்கையில் 6,229 வாக்குகளில் (14.8 சதவீத வாக்குகளுடன்) ஜெயித்துள்ளார்.

இந்த நேரடி தேர்தல்களை எந்திரத்திற்கு உள்ளேயே அதைச் சுற்றியுள்ளவர்களுக்கு உள்ளே நடக்கும் உள் விவகாரமாக நடத்துவதே அந்த அதிகாரத்துவத்தின் இரண்டு கன்னைகளின் நோக்கமாக இருந்தது. அந்த தொழிற்சங்க எந்திரம் உள்ளூர் கிளைகளுக்கோ அல்லது வேலையிடங்களுக்கோ வாக்குச்சீட்டுக்களை வினியோகிக்க மறுத்ததோடு, சுயேட்சை வேட்பாளர்கள் உறுப்பினர்களைத் தொடர்பு கொள்வதையும் தடுத்தன. UAW அதிகாரத்துவம் முதலில் அதன் உள்விவகார தொடர்புகளுக்காக தயாரித்திருந்த ஒரு மின்னஞ்சல் பட்டியலை வழங்கியது, பின்னர் 10 சதவீத உறுப்பினர்களுக்கும் சற்று அதிகமானவர்களை உள்ளடக்கி மிகவும் சிறியளவில் மட்டுமே விரிவாக்கப்பட்ட ஒரு பட்டியலை வழங்கியது.

லெஹ்மனின் பிரச்சாரக் குழு உறுப்பினர்கள் ஓஹியோ டேட்டனில் இருந்து, வாக்குப்பதிவு எண்ணுவதைக் கண்காணித்து வருவதுடன், தகுந்த வாக்குகள் நிராகரிக்கப்படாமல் இருப்பதை உறுதிப்படுத்த போராடிக் கொண்டிருக்கிறார்கள். தலைமை பாரியளவில் நிராகரிக்கப்பட்டிருப்பதால், அதிகாரத்துவத்தின் கார்ரி அணியினர், வாக்கு எண்ணுமிடத்தில், நெருக்கடி நிலையில் இருப்பது உணரக் கூடியதாக உள்ளது.

மின்னஞ்சல் வாக்குகளில் நிறைய பிரச்சினைகள் இருப்பதாக குறிப்பிட்டு கணிசமான வாக்குச்சீட்டுக்கள் திருப்பி அனுப்பப்பட்டு விட்டதாக லெஹ்மனின் மேற்பார்வையாளர்கள் தெரிவிக்கின்றனர். நீண்ட காலத்திற்கு முன்னரே காலமாகிவிட்ட அல்லது பல ஆண்டுகளுக்கு முன்னரே UAW இல் இருந்து விலகி இருந்த பலருக்கும் வாக்குச்சீட்டுக்கள் அனுப்பப்பட்டு இருந்தன. 2004 இல் இருந்து உறுப்பினராக இல்லாதவர்களில் ஒருவரான முன்னாள் உறுப்பினர் ஒருவர், “நீங்கள் இன்னமும் எனக்கு வாக்குச்சீட்டுக்கள் அனுப்புகிறீர்கள். இதை உங்கள் மோசடி என்று கூறலாமா?” என்று எழுதினார்.

மற்ற உறுப்பினர்கள் UAW ஐ கண்டித்து குறிப்புகள் எழுதி உள்ளனர்: 'இந்த பட்டியலில் உள்ள யாரையும் எனக்குத் தெரியாது, UAW எனக்கு எதுவும் செய்யவில்லை' என்று தனது வாக்குச்சீட்டை வெறுமையாக விட்டு ஓர் உறுப்பினர் எழுதினார். 'UAW ஒரு கேலிக்கூத்து!' என்று எழுதிய மற்றொருவர், வாக்குச்சீட்டின் ஒவ்வொரு பகுதியிலும் குறுக்காக கோடிட்டார். மற்றொருவர் கூறினார், “என்ன வித்தியாசம்? நீங்கள் எல்லோருமே ஏமாற்றுக்காரர்கள்!' மற்றொருவர் கூறினார், “காயமடைந்த தொழிலாளர்களை இந்தத் தொழிற்சங்கம் இன்னும் குடைந்தெடுக்கிறது! காயமடைந்த தொழிலாளர்களைக் கவனிப்பதற்குத் தான் ஓர் அலுவலகம் தேவைப்படுகிறது.”

ஓய்வு பெற்றவர்கள் பலரும் கூட அவர்கள் வாக்குச்சீட்டில் கோபமான குறிப்புகளை எழுதி இருந்தார்கள். ஒருவர் குறிப்பிட்டு இருந்தார், “தயவு செய்து ஓய்வு பெற்றவர்களுக்கு உதவுங்கள்! பல ஆண்டுகளாக எங்களுக்கு எதுவும் கிடைக்கவில்லை. நான் பணி புரிந்த போது ஒவ்வொரு ஒப்பந்தத்திலும் உறுதியளிக்கப்பட்ட COLA (வாழ்க்கைச் செலவு அதிகரிப்பை சரிசெய்யும் உதவி) கிடைக்கவே இல்லை. அதிக சுமையோடு நாங்கள் வேலைகளைச் செய்த பின்னரும் இலாபத்தில் பங்கு இல்லை. என் இரண்டு கைகளிலும் மணிக்கட்டு நரம்பு பாதையில் அறுவை சிகிச்சை செய்துள்ளேன். நம் தலைவர்கள் மில்லியன் கணக்கான டாலர்களைத் திருடிக் கொள்கிறார்கள், நமக்கு ஒன்றும் கிடைப்பதில்லை!” மற்றொருவர் எழுதினார், “ஓய்வு பெற்றவர்களுக்கு உயர்வுகள் எங்கே?! இந்த சர்வதேச சங்கத்தின் அடிமடியில் உயர்வுகள் கிடைக்கிறது என்று நான் பந்தயம் கட்டுவேன். நீங்கள் ஏமாற்றுக்காரர்கள்!” என்றார்.

UAW தலைமை, தேர்தல் விதிகளையும் மீறி வாக்கு எண்ணும் செயல்முறையில் ஆதிக்கம் செலுத்த அனுமதிக்கப்பட்டுள்ளது, கண்காணிப்புக் குழு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

சான்றாக, வாக்குச்சீட்டு எண்ணிக்கையை ஒரு 'நடுநிலையான' முறையில் நடத்துவதில் கண்காணிப்புக் குழுவுக்கு 'ஆலோசனை வழங்க' UAW இன் ஐந்து நிர்வாகிகள் அனுமதிக்கப்பட்டுள்ளதாக, வெவ்வேறு பிரச்சாரக் குழுவின் மேற்பார்வையாளர்களுக்குக் கண்காணிப்புக் குழு செவ்வாய்கிழமை தெரிவித்தது. ஆனால் இந்த 'நடுநிலை ஆலோசகர்களில்' ஒருவரான, சாலிடாரிட்டி ஹவுஸ் சங்க நிர்வாக உதவியாளர் டேவிட் ஸ்டால்னேக்கர் (சம்பளம் $170,000), ரே கார்ரியின் பிரச்சாரக் குழுவைத் தீவிரமாக ஆதரிப்பவர் என்பதோடு சமூக ஊடகங்களில் பகிரங்கமாகவே அவருக்காகப் பிரச்சாரம் செய்து வருகிறார் என்று லெஹ்மன் பிரச்சாரக் குழுவுக்குத் தெரிய வந்தது.

ஆலோசகராக இருப்பதில் இருந்து ஸ்டால்னேக்கரை நீக்க வேண்டும் என்று கோரி கண்காணிப்புக் குழுவிடம் லெஹ்மன் ஒரு புகார் அளித்த போது, ஆலோசகராக இருப்பதில் இருந்து அவரை நீக்க முடியாது என்று கண்காணிப்புக் குழு தெரிவித்தது. இதை விட, கார்ரியின் பிரச்சாரக் குழு மேற்பார்வையாளர்கள் வாக்கு எண்ணும் பகுதியில் செல்போன் பயன்படுத்துவதற்கான தடையை வழக்கமாக மீறி வருகிறார்கள். அதிகாரத்துவத்தின் விருப்பத்திற்குரிய வேட்பாளர்களுக்கு எதிராக வாக்களித்த தொழிலாளர்களை அது பழிவாங்க முயலும் என்று தொழிலாளர்களிடையே பரந்த கவலை இருப்பதால், இவை எல்லாம் மிகவும் முக்கியமான விஷயங்களாகும்.

நவம்பர் 28 காலக்கெடுவைத் தொடர்ந்து பெறப்பட்ட தகுதியான வாக்காளர்களின் வாக்குச்சீட்டுகள் அனைத்தையும் கணக்கில் கொண்டு வந்து எண்ண வேண்டுமெனக் கோரி நேற்று லெஹ்மனின் வழக்குரைஞர் கண்காணிப்புக் குழுவுக்குக் கடிதம் எழுதினார். “இது அவசியம் ஏனென்றால் கணிசமான எண்ணிக்கையிலான UAWஉறுப்பினர்களுக்கு முதலிலேயே வாக்குச்சீட்டுகள் கிடைக்கவில்லை அல்லது உரிய நேரத்தில் வாக்களிக்க வசதியாக மாற்று வாக்குச்சீட்டுகளும் கிடைக்கவில்லை.”

UAW மற்றும் கண்காணிப்புக் குழு மீது கடந்த வாரம் வழக்குத் தொடர்ந்த லெஹ்மன், வாக்களிப்பதற்கான காலக்கெடுவை 30 நாட்கள் நீடிக்குமாறு டெட்ராய்ட் கூட்டாட்சி நீதிமன்றத்திடம் கோரினார். பெடரல் நீதிபதி டேவிட் லோசன், லெஹ்மனுக்குத் தனிப்பட்ட முறையில் ஒரு வாக்குச்சீட்டு கிடைத்துள்ளதுடன் வாக்களிக்க அனுமதிக்கப்பட்டுள்ளதால் அவர் தரப்பு வலுவாக இல்லை என்ற அடித்தளத்தில் லெஹ்மனின் கோரிக்கையை மறுத்தார். நீதிபதி காலக்கெடுவை நீட்டி இருந்தால், இன்னும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வாக்களிக்க அனுமதிக்கப்பட்டு இருப்பார்கள்.

உலக சோசலிச வலைத் தளத்திற்கு ஓர் அறிக்கையில் வில் லெஹ்மன் பின்வருமாறு குறிப்பிட்டார்:

'எனக்கு வாக்களித்த ஒவ்வொருவருக்கும் என் நன்றியைத் தெரிவிக்க விரும்புகிறேன், பெருநிறுவனங்களின் தனிப்பட்ட இலாபங்களுக்காக இல்லாமல் தொழிலாள வர்க்க நலன்களின் அடிப்படையில் சமூகத்தை மறுஒழுங்கமைக்க நாம் போராடிய வேலைத்திட்டத்திற்கு சார்பாக பிரச்சாரம் செய்த ஒவ்வொருவருக்கும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இதுதான் என்னுடைய பிரச்சாரத்திற்கும் மற்றவர்களின் பிரச்சாரத்திற்கும் இடையில் இருந்த அடிப்படை வித்தியாசம். இது தொழிலாள வர்க்க இயக்கத்தின் வளர்ச்சியில் ஒரு முக்கிய படியாகும்.

'நான் மட்டுந்தான் ஒரு சோசலிச வேலைத்திட்டத்திற்கு வாக்களிக்க விரும்புகிறேனா என நிறைய தொழிலாளர்கள் நினைத்துக் கொண்டிருந்தார்கள், யாரும் நினைத்துப் பார்க்காத அளவுக்கு நம்மில் நிறைய பேர் இருக்கிறார்கள் என்பதை இந்த முடிவுகள் எடுத்துக்காட்டுகின்றன. ஒவ்வொரு வேலையிடத்திலும் சாமானியத் தொழிலாளர் குழுக்களைக் கட்டமைக்க அடித்தளம் இருக்கிறது என்பதை இந்த பலமான எண்ணிக்கை நமக்கு எடுத்துக் காட்டியுள்ளது. அமெரிக்காவில் நம் வேலைத்திட்டத்திற்குக் கிடைத்திருக்கும் பல ஆயிரக் கணக்கான நனவுபூர்வமான வாக்குகள், ஒரு சமூக சக்தியைப் பிரதிநிதித்துவம் செய்கிறது, இது அதிகாரத்துவவாதிகளின், அவர்களின் மனைவிகள் மற்றும் மாமியார்களின் வாக்குகளை விட மிகவும் சக்தி வாய்ந்தது. என் பிரச்சாரம் முடிந்துவிடவில்லை, இந்த போராட்டம் இப்போது தான் ஆரம்பமாகி இருக்கிறது.”

Loading