இலங்கை ஜனாதிபதி “கடினமான காலங்கள் தவிர்க்க முடியாதவை” என அறிவித்துள்ளார்

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.

அக்டோபர் 19 அன்று நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில், இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனது அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்தின் சிக்கன திட்டத்தை முற்று முழுதாக அமுல்படுத்தும் என்று அறிவித்தார்.

ரணில் விக்கிரமசிங்க [Photo: United National Party Facebook]

'இந்த திட்டத்தில் இருந்து நாங்கள் விலகினால், சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து எங்களுக்கு உதவி கிடைக்காது' என்று அவர் கூறினார். எல்லாவற்றுக்கும் மேலாக, சர்வதேச நாணய நிதிய சான்றிதழ் இல்லாமல், உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் பல்வேறு நாடுகளில் இருந்து மேலும் உதவிகளை அரசாங்கத்தால் பெற முடியாது, என்று அவர் மேலும் தெரிவித்தார்.

கடந்த மாதங்களில் அத்தியாவசிய உணவு, மருந்துகள், எரிபொருள் மற்றும் எரிவாயு ஆகியவற்றின் கடுமையான பற்றாக்குறையை சுட்டிக்காட்டிய அவர், 'அது நடந்தால், நாடு மீண்டும் வரிசைகளின் சகாப்தத்திற்கு வரும்' என்று எச்சரித்தார். அதே மூச்சில், 'கடினமான காலங்கள் தவிர்க்க முடியாதவை' என்று ஜனாதிபதி வலியுறுத்தினார்.

அக்டோபர் 22 அன்று ஒரு நேர்காணலில் ஜனாதிபதியின் கருத்தை எதிரொலித்த மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க, தன்னால் பார்க்க முடிந்தவரை, பொருளாதார மீட்சியை அடைவதற்கு சர்வதேச நாணய நிதியம்தான் 'ஒரே வழி' என்று அறிவித்தார்.

விக்கிரமசிங்கவின் உரையும் வீரசிங்கவின் கருத்துக்களும் அக்டோபர் தொடக்கத்தில் அறிவிக்கப்பட்ட அரசாங்கத்தின் புதிய வரி அதிகரிப்புகள் தொடர்பாக பெருவணிக கருத்தாதரவு குழுக்களின் சலசலப்புக்கு மத்தியில் வந்தன.

பாரிய வரி அதிகரிப்புகள் மூலம் 2026 ஆம் ஆண்டிற்குள் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 14.5 முதல் 15 சதவிகிதம் வரை, அரச வருவாய் சேகரிப்பை உயர்த்த வேண்டும் என்ற சர்வதேச நாணய நிதிய இலக்கை அரசாங்கம் ஒப்புக்கொண்டது. 2022 ஆம் ஆண்டில், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 9 சதவீதம் மட்டுமே வருவாய் இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

விக்கிரமசிங்க, முந்தைய அரசாங்கம் வழங்கிய 50 வீதம் வரையிலான பாரிய வரிச் சலுகைகளை சுட்டிக்காட்டி பெரும் வணிகர்களுக்கு ஆறுதல் கூற முற்பட்டார். இலங்கை பெருநிறுவனங்கள் கடந்த இரண்டு வருடங்களில் முன்னெப்போதும் இல்லாத சாதனை இலாபத்தை அறுவடை செய்துள்ளன.

கூட்டுத்தாபன வரி விகிதத்தை 30 சதவீதமாக அதிகரிக்க அரசாங்கம் முன்மொழிந்துள்ளது. இதுவும் சில தெற்காசிய நாடுகளின் கூட்டுத்தாபன வரி விகிதங்களை விட இன்னும் குறைவான விகிதமாகும். பெரும்பாலான பெரிய வணிக முதலீட்டாளர்கள் பல தசாப்தங்களாக வரி விடுமுறைகள் மற்றும் சலுகைகளை அனுபவித்து வருகின்றனர்.

எவ்வாறாயினும், புதிய வரிகளால் கடுமையாக பாதிக்கப்படுபவர்கள் பெரிய வணிகர்கள் அன்றி, தொழிலாளர்கள், தொழில் வல்லுநர்கள், சுயதொழில் செய்பவர்கள், சிறிய மற்றும் குறுகி வணிகர்களே ஆவர். அரசாங்கம் மாதாந்திர வரிவிதிப்பு வரம்பை 3 இலட்சத்தில் ($US820) இலிருந்து ஒரு இலட்சம் ரூபாயாகக் குறைத்துள்ளது. சில தொழிலாளர்கள் மாதாந்த சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளுடன் சேர்த்து 100,000 ரூபாய் பெறுகின்றனர்.

ஏப்ரல் மாதம் முதல் பல மாதங்களாக பாரிய வேலைநிறுத்தங்கள் மற்றும் எதிர்ப்புக்களுக்கு வழிவகுத்த உழைக்கும் மக்கள் மீதான சுமைகளை குறைத்ததாக விக்கிரமசிங்க கூறுவது பொய்யாகும். அரசாங்கம் சில பொருட்களின் விநியோகத்தை மட்டுப்படுத்தப்பட்ட விதத்தில் அதிகரித்துள்ளது, ஆனால் அனைத்து அத்தியாவசிய பொருட்களின் விலை இரண்டு மற்றும் மும்மடங்காக உயர்ந்துள்ளதால், சாதாரண மக்களால் செலவை தாங்க முடியாதுள்ளது.

அதிக பணவீக்கத்தால் தொழிலாளர்கள் மற்றும் ஏழைகள் பாதிக்கப்பட்டுள்ள நிலையிலேயே புதிய வரிச்சுமைகள் வந்துள்ளன. அரசாங்கத்தின் புள்ளிவிபரங்களின்படி, செப்டம்பரில் தேசிய அளவில் வருடாந்திர பணவீக்க விகிதம் 70 சதவீதமாக உயர்ந்துள்ள அதே நேரம், உணவுப் பற்றாக்குறை 80 சதவீதத்திற்கும் அதிகமாக அதிகரித்துள்ளது. உணவுப் பற்றாக்குறை விகிதம் 2020ல் இருந்து 102 சதவீதமாக உயர்ந்துள்ளது, அதாவது ஊதியத்தின் உண்மையான மதிப்பு சுமார் 50 சதவீதம் குறைந்துள்ளது.

அந்நியச் செலாவணியின் கடுமையான பற்றாக்குறை காரணமாக, ஏப்ரல் மாதத்தில் வெளிநாட்டுக் கடன்களை தற்காலிகமாகத் திருப்பிச் செலுத்தவில்லை என இலங்கை அறிவித்தது. திருப்பிச் செலுத்துவதை உறுதி செய்வதற்காக, கடனைத் திருப்பிச் செலுத்தாத கடன்களை மறுசீரமைக்க, கடனாளர்களுடன் இலங்கை பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று சர்வதேச நாணய நிதியம் கோருகிறது. இந்தத் தேவையை நிறைவேற்ற, அரசாங்கம் சர்வதேச நாணய நிதிய சிக்கனத் திட்டத்தைச் செயல்படுத்தி, சர்வதேச நிதி மூலதனத்தின் சுறாக்களுக்குத் திருப்பிச் செலுத்த தொழிலாளர்கள் மற்றும் ஏழைகளை நெருக்க வேண்டும்.

நேரடி விலை உயர்வு மற்றும் வரி உயர்வுகள் தவிர, அரசாங்கம் அரசுக்கு சொந்தமான நிறுவனங்களை தனியார்மயமாக்க வேண்டும் அல்லது வணிகமயமாக்க வேண்டும், இலட்சக் கணக்கான அரச தொழில்களை குறைக்க வேண்டும் மற்றும் நலன்புரி மானியங்களை மேலும் குறைக்க வேண்டும்.

கோவிட்-19 தொற்றுநோய் மற்றும் உலகெங்கிலும் உள்ள அரசாங்கங்களின் 'நோய் பரவ அனுமதிக்கும்' கொள்கையினாலும் உக்ரேனில் ரஷ்யாவிற்கு எதிரான அமெரிக்க-நேட்டோ போனாலும் மோசமடைந்து வரும் உலகப் பொருளாதார நெருக்கடியின் கூர்மையான வெளிப்பாடே, இலங்கையின் பொருளாதாரக் கொந்தளிப்பு ஆகும்.

அக்டோபர் 12 அன்று வெளியிடப்பட்ட இலங்கை பற்றிய உலக வங்கி அறிக்கை குறிப்பிட்டதாவது: 'தற்போதைய நெருக்கடி வறுமை விகிதத்தை 2021 மற்றும் 2022 க்கு இடையில் 13.1 சதவிகதத்தில் இருந்து 25.6 சதவிகிதம் (2017இல் தலைக்கு 3.65 டொலர் ஆக இருந்ததை) இரட்டிப்பாக்கி, ஏழைகளின் எண்ணிக்கையை 2.7 மில்லியன் அதிகரிக்கச் செய்துள்ளது.'

நகர்ப்புறங்களில் வறுமை விகிதம் இதே காலத்தில் 5 முதல் 15 சதவீதம் வரை மூன்று மடங்கு அதிகரித்துள்ளது. “பெருந்தோட்டப் பகுதிகளில் உள்ள பாதி மக்கள் இப்போது வறுமைக் கோட்டின் கீழ் வாழ்கின்றனர். மாவட்டங்களில், முல்லைத்தீவு தொடர்ந்து வறுமையில் உள்ளது (2022 இல் 57 சதவீத வறுமை), அதைத் தொடர்ந்து கிளிநொச்சி மற்றும் நுவரெலியா,' உள்ளன என்று அறிக்கை கூறுகிறது.

12 செப்டம்பர் 2022, இலங்கை, நுவரெலியா மாவட்டம், மஸ்கெலியாவில் உள்ள டீசைட் தோட்டத்தைச் சேர்ந்த இளம் குடும்பம்.

இருப்பினும், பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பொருளாதாரப் புள்ளிவிபரவியல் துறையின் சமீபத்திய கணக்கெடுப்பு வறுமைக் கோட்டிற்குக் கீழே உள்ளவர்களின் எண்ணிக்கையை 9.6 மில்லியன் அல்லது சனத்தொகையில் 45 சதவீதம் எனக் கூறியுள்ளது.

உலக வங்கியின் கூற்றுப்படி, மொத்த தேசிய உற்பத்தியின் வளர்ச்சி விகிதம் இந்த ஆண்டு எதிர்மறையாக 9.2 சதவீதமாக இருக்கும், மேலும் சரிவு அடுத்த ஆண்டிலும் தொடரும். தொழில் மற்றும் சேவைத் துறைகள் 11 சதவிகிதம் மற்றும் 8 சதவிகிதம் குறைந்து அரை மில்லியன் வேலைகளை அழிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

மேலும், விக்கிரமசிங்கவும் மத்திய வங்கியின் தலைவரும் கூறுவது போன்று இது பொருளாதார மீட்சி அல்ல. அமெரிக்க பெடரல் ரிசர்வ் மற்றும் பிற மத்திய வங்கிகள் வட்டி விகிதங்களை உயர்த்துவதன் மூலம் சர்வதேச அளவில் அதிகரித்து வரும் மந்த நிலைமைகள் மோசமடையும்.

சர்வதேச நாணய நிதியத்தின் திட்டத்திற்கு நாட்டில் உள்ள அனைத்து எதிர்க்கட்சிகளும் ஆதரவு தெரிவித்துள்ளன. பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் (ஐ.ம.ச.) முன்னணி பாராளுமன்ற உறுப்பினரான ஈரான் விக்கிரமரத்ன, 'சர்வதேச நாணய நிதியம் நிர்ணயித்த இலக்குகள் நியாயமானதாகவும், அடையக்கூடியதாகவும் இருக்க வேண்டும்' என்றார்.

நாடு திவாலாகிவிட்டதாக பிரகடனப்படுத்திய பின்னர் சர்வதேச நாணய நிதியத்தின் திட்டத்தை நடைமுறைப்படுத்துவது தவிர்க்க முடியாதது என மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) தலைவர் ஒருவர் கடந்த வாரம் ஹிரு தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் தெரிவித்தார். மக்கள் பல வருடங்களாக கஷ்டங்களை அனுபவிக்க வேண்டியிருக்கும் என்றும், இந்த திட்ட நிரலை நிறைவேற்றுவதற்காக பொதுத் தேர்தலின் மூலம் அரசாங்கத்தை அமைப்பதற்கு ஜே.வி.பி. தயாராக இருப்பதாகவும், அவர் கூறினார்.

தொழிற்சங்கங்களும் சர்வதேச நாணய நிதியதிட்டத்தை ஏற்கின்றன. சனிக்கிழமையன்று, 500,000 உறுப்பினர்களைக் கொண்ட இலங்கை அரசாங்க உத்தியோகத்தர்களின் தொழிற்சங்க சம்மேளனத்தின் தேசிய அமைப்பாளர் பிரதீப் பஸ்நாயக்க, மோர்னிங்நியூஸ் இற்கு கூறுகையில், 'அரசாங்கம் தனது ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்க முடியாவிட்டால், பொருளாதாரம் மீண்டு வரும் வரை அது அவர்களுக்கு இடைக்கால கொடுப்பனவை வழங்க வேண்டும்,' என்றார்.

இதுவே அனைத்து தொழிற்சங்கங்களின் நிலைப்பாடு ஆகும். தொழிலாள வர்க்கம் சுமையை சுமக்க வேண்டியிருப்பதோடு மட்டுப்படுத்தப்பட்ட சலுகைகளுக்காக அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுக்க வேண்டும் என்று அவர்கள் முதலாளித்துவ வர்க்கத்துடன் உடன்படுகிறார்கள். வெடித்துள்ள வெகுஜன எதிர்ப்பை தடம் புரட்டவும், பிளவுபடுத்தவும், ஒடுக்கவும் தொழிற்சங்கங்கள் கருவியாக செயற்படுகின்றன. இந்த தொழிற்சங்கங்கள் அனைத்தும் சர்வதேச நாணய நிதிய திட்டத்தை ஆதரிக்கும் அரசாங்க மற்றும் எதிர் அரசியல் கட்சிகளின் கட்டுப்பாட்டில் உள்ளவை அல்லது பின்னணியில் உள்ளவை ஆகும்.

சோசலிச சமத்துவக் கட்சி (சோ.ச.க.) தொழிலாள வர்க்கம் மற்றும் கிராமப்புற வெகுஜனங்களுக்கு சர்வதேச நாணய நிதியத்தின் சிக்கன நடவடிக்கை திட்டத்தை எதிர்க்கவும் அரசாங்கத்தின் தாக்குதல்களுக்கு எதிராக போராட அதன் சுயாதீன பலத்தை அணிதிரட்டவும் அழைப்பு விடுக்கிறது.

முதல் படியாக, சோ.ச.க. நாடு முழுவதும் வேலைத் தளங்கள், பெருந்தோட்டங்கள் மற்றும் சுற்றுப்புறங்களில், தொழிற்சங்கங்கள் மற்றும் முதலாளித்துவக் கட்சிகள் சாராத, ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட தொழிலாளர்களின் நடவடிக்கைக் குழுக்களை அமைக்க அழைப்பு விடுக்கிறது. சோ.ச.க., தொழிலாள வர்க்கம் மற்றும் கிராமப்புற ஏழைகளின் இத்தகைய போராட்ட அமைப்புகளை கட்டியெழுப்புவதற்கு அதன் அரசியல் உதவியை வழங்க தயாராக உள்ளது.

தொழிலாள வர்க்கம் அதன் வர்க்க நலன்களின் அடிப்படையில் பொருளாதார நெருக்கடிக்கு அதன் சொந்த தீர்வை அபிவிருத்தி செய்ய வேண்டும். வங்கிகள், பெருநிறுவனங்கள் மற்றும் பெருந் தோட்டங்களை தேசியமயமாக்குவதற்கும், உற்பத்தி மற்றும் விநியோகத்தை தொழிலாள வர்க்கத்தின் ஜனநாயகக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவருவதற்கும் சோ.ச.க. அழைப்பு விடுக்கிறது. சர்வதேச நிதி மூலதனத்தின் கழுகுகளுக்கு ஒரு ரூபாய் கூட கொடுக்க வேண்டாம், அனைத்து வெளிநாட்டு கடன்களையும் திருப்பி செலுத்துவதை நிராகரி!

இந்தத் வேலைத்திட்டத்திற்காகப் போராடுவதற்கு, செல்வந்தர்களின் இலாபங்களை பெருக்குவதைப் பற்றி அன்றி, பெரும்பான்மையினரின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கான ஒரு சோசலிச வேலைத்திட்டத்தைப் பற்றி கலந்துரையாட, நடவடிக்கைக் குழுக்களின் பிரதிநிதிகளை அடிப்படையாகக் கொண்ட ஜனநாயகத்துக்கும் சோசலிசலிசத்துக்குமான தொழிலாளர் மற்றும் கிராமப்புற வெகுஜனங்களின் மாநாட்டைக் கட்டியெழுப்ப சோ.ச.க. அழைப்பு விடுக்கிறது. இத்தகைய மாநாடு, சோசலிச வழியில் சமூகத்தை மேலிருந்து கீழாக மறுசீரமைக்க தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் அரசாங்கத்தை ஸ்தாபிக்க வழி வகுக்கும்.

உலகளவில் மோசமடைந்துவரும் சமூகப் பேரழிவிற்கும் அதிகரித்துவரும் உலகப் போரின் அச்சுறுத்தல்களுக்கும் எதிராகப் போராடுவதற்கு இலங்கைத் தொழிலாளர்கள் சர்வதேச வர்க்க சகோதர சகோதரிகளிடம் உதவி கோரி அவர்களுடன் இணைய வேண்டும்.

Loading