முன்னோக்கு

பிரிட்டன் அரசாங்கம் வேலைநிறுத்தம் செய்து வரும் தொழிலாளர்களுக்கு எதிராக அரசு தாக்குதல் தொடுக்கிறது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

பிரிட்டனின் பழமைவாத அரசாங்கம் வளர்ந்து வரும் ஒரு வேலைநிறுத்த இயக்கத்திற்கு எதிராக ஆயுதப் படைகளைப் பயன்படுத்தத் தயாராகி வருகிறது. தபால்துறை மற்றும் இரயில்வே தொழிலாளர்களின் தொடர்ந்து கொண்டிருக்கும் தேசிய வேலைநிறுத்தங்களுக்குப் பக்கவாட்டில், வரவிருக்கும் வாரங்களில், நூறாயிரக்கணக்கான செவிலியர்கள், ஆம்புலன்ஸ் பணியாளர்கள், நெடுஞ்சாலைத் துறைத் தொழிலாளர்கள், விமான சேவை தொழிலாளர்கள் மற்றும் அரசு பணியாளர்களால் வேலைநிறுத்தங்கள் நடத்தப்பட உள்ளன.

பிரிட்டனில் தொழிலாளர்களின் போராட்டம் சர்வதேச அளவில் அபிவிருத்தி அடைந்து வரும் ஒரு தொழிலாள வர்க்க இயக்கத்தின் ஒரு முன்னேறிய வெளிப்பாடாகும். ஒவ்வொரு நாட்டிலும், தொழிலாளர்கள் அவர்களின் வாழ்க்கைத் தரங்கள், வேலை நிலைமைகள், ஓய்வூதியங்கள் மற்றும் வேலைகளைத் தியாகம் செய்ய வேண்டும் என்ற அரசாங்கங்கள் மற்றும் பெருநிறுவனங்களின் கோரிக்கைகளுக்கு எதிராகத் திருப்பி போராடி வருகிறார்கள். இந்தக் கோரிக்கையானது அதிகபட்ச இலாபங்களுக்காகவும் மற்றும் இந்தப் பெருந்தொற்றின் போது பெருவணிகங்களைப் பிணையெடுக்கப் பாய்ச்சப்பட்ட பத்து பில்லியன் கணக்கான பவுண்டுகள், டாலர்கள் மற்றும் யூரோ செலவுகளை ஈடுக்கட்டவும், உக்ரேனில் ரஷ்யாவுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் நேட்டோவின் விரிவாக்கப்பட்டு வரும் போருக்கு மத்தியில் இராணுவ வரவு-செலவு திட்டக்கணக்கை அதிகரிப்பதற்காகவும் கோரப்படுகிறது.

இந்தாண்டு இரண்டாவது முறையாக, கடந்த வாரம் இத்தாலியில் ஒரு பொது வேலைநிறுத்தம் நடத்தப்பட்டது, ட்ரெனிடாலியா (Trenitalia) மற்றும் ட்ரெனார்டு (Trenord) இரயில்வே தொழிலாளர்கள் உட்பட அனைத்து தொழில்துறைகளின் தொழிலாளர்களும் அதில் ஈடுபட்டனர். நவம்பரில், பெல்ஜியம் மற்றும் கிரீஸில் பொது வேலைநிறுத்தங்கள் இருந்தன, பிரான்சில் ஒரு பாரிய வேலைநிறுத்தம் இருந்தது. இந்தாண்டு இரண்டாவது முறையாக கிரீஸின் பொது வேலைநிறுத்தம் இருந்தது.

கடந்த வாரம், பிரான்ஸ் மற்றும் நெதர்லாந்தின் சுத்திகரிப்பு துறைத் தொழிலாளர்களின் வேலைநிறுத்தங்களைத் தொடர்ந்து, பெல்ஜிய இரயில்வே தொழிலாளர்கள் மூன்று நாள் வேலைநிறுத்தம் நடத்தினர்.

டோரி கட்சியின் தலைவர் நாதிம் ஜஹாவி, ஞாயிற்றுக்கிழமை ஸ்கை நியூஸின் சோஃபி ரிட்ஜிடம் கூறுகையில், அரசாங்கத்திடம் 'அவ்வப்போதைக்கு அவசியமான திட்டங்கள் உள்ளன. … நாங்கள் இராணுவத்தைப் பரிசீலித்து வருகிறோம், நாங்கள் ஒரு சிறப்பு அதிரடி படையின் … திறனை அதிகரிக்க பரிசீலித்து வருகிறோம்,” என்றார். துருப்புக்களைக் கொண்டு 'ஆம்புலன்ஸ்களை ஓட்ட' முடியும், வேலைநிறுத்தங்களின் போது பிரிட்டன் எல்லைகளில் வேலை செய்ய வைக்க முடியும். இந்த கோடையில் இருந்து வேலைநிறுத்தம் செய்து வரும் இரயில்வே தொழிலாளர்களைப் 'புட்டினின் கைக்கூலிகள்' என்ற கண்டனங்களையே எதிரொலிக்கும் விதத்தில், பிரிட்டனைப் 'பிளவுபடுத்த' “இது நேரமில்லை' என்று 'திரு. புட்டினுக்கு மிகவும் தெளிவான ஒரு சேதியை அனுப்ப' வேலைநிறுத்தம் செய்ய வேண்டாமென ஜஹாவி செவிலியர்களை வலியுறுத்தினார்.

வேலைநிறுத்த நடவடிக்கை நடந்தால் பல்வேறு சேவைகளுக்கு உதவுவதற்காக, சுமார் 2,000 இராணுவத்தினர் மற்றும் பொதுப்பணித்துறை பணியாளர்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டு வருவதை அமைச்சரவை அலுவலகம் ஒப்புக் கொண்டது. டிசம்பர் 21 மற்றும் 28 இல் 10,000 இக்கும் அதிகமான ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் செய்ய இருப்பது குறித்து செவ்வாய்கிழமை அறிவிப்பு வரும் என்று எதிர்பார்த்து டவுனிங் வீதி இந்த அச்சுறுத்தல்களை விடுத்திருந்தது. பணவீக்கம் 14 சதவீதத்திற்கு மேல் அதிகரிக்கின்ற வேளையில், அனைத்து தேசிய சுகாதார சேவை தொழிலாளர்களுக்கும் செய்யப்பட்டதைப் போலவே, அவர்களுக்கும் ஓர் அற்ப சம்பள உடன்படிக்கை வழங்கப்பட்டு வருகிறது.

டிசம்பர் 15 மற்றும் 20 இல் சுமார் 100,000 செவிலியர்களின் திட்டமிடப்பட்டுள்ள வேலைநிறுத்தத்தைத் தொடர்ந்து, இந்த ஆம்புலன்ஸ் வேலைநிறுத்தம் நடைபெறும். பத்தாயிரக் கணக்கான தீயணைப்பு வீரர்கள் வேலைநிறுத்தத்திற்கு வாக்களித்து வருகிறார்கள், இந்த முடிவு ஜனவரியில் அறிவிக்கப்பட உள்ளது.

இந்த வாரம் அமைச்சரவையின் அமைச்சர்கள் தேசிய அவசரநிலைமைகள் அல்லது மிகப்பெரும் இடையூறுகளைக் கையாள்வதற்கான பல கோப்ரா கூட்டங்களில் கலந்து கொள்ள டவுனிங் வீதியில் ஒன்று கூடுகிறார்கள். தி டைம்ஸ் புதனன்று குறிப்பிட்டது, “மூன்று தசாப்தங்களில் முதல்முறையாக துணை-மருத்துவ பணியாளர்களின் நாடு தழுவிய வேலைநிறுத்தத்திற்குத் தொழிற்சங்கங்கள் அழைப்பு விடுத்ததை அடுத்து, ஆம்புலன்ஸ்களை ஓட்டுவதற்கு ஆயுதப் படையினரை அழைப்பது குறித்து அமைச்சர்கள் இன்று பேச்சுவார்த்தை நடத்துகிறார்கள்.”

'பொதுப்பணி அதிகாரிகளின் நெறிமுறை அல்லது Maca க்கு இராணுவ உதவி வழங்குமாறு முறையான உதவி கோரி முறையீடு வரக்கூடும் என்று அதற்கு முன்னதாக சுகாதாரத் துறை மற்றும் பாதுகாப்புத்துறை அமைச்சகம் விவாதங்களை நடத்தி வருகின்றன.'

'ஆம்புலன்ஸ் தொழிலாளர்களின் வேலைநிறுத்தங்களுக்குத் தடை விதிக்கும் தெரிவு குறித்து' டவுனிங் ஸ்ட்ரீட் 'கேட்கப்பட்ட' போது, இது 'வெளிப்படையாக ஒதுக்கப்பட்டு விடவில்லை,” என்று பிபிசி இன் அரசியல் பிரிவு நிருபர் நிக் எர்ட்லி புதன்கிழமை ட்வீட் செய்தார்.

புதன்கிழமை, பிரதம மந்திரி ரிஷி சுனாக் நாடாளுமன்றத்தில் கூறுகையில், வேலைநிறுத்தங்களை எதிர்த்துப் போராடுவதற்கு அவர் 'புதிய கடுமையான சட்டங்களை' தயாரித்து வருவதாகக் கூறினார். ரூபர்ட் முர்டோக்கிற்குச் சொந்தமான சன் பத்திரிகை கடந்த வாரம் அறிவிக்கையில், 'வேலைநிறுத்த தடை மசோதாவை விரைந்து செயல்படுத்த' அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக குறிப்பிட்டது, அது 'ஏனையவற்றுடன் சேர்ந்து சுகாதாரத்துறை, இரயில்வே மற்றும் தபால்துறைத் தொழிற்சங்கங்கள் உடனான அரசாங்கத்தின் போரில் ஒரு புதிய முகப்பைத் திறந்து விடும்' என்றது. 'ஏஜென்சி தொழிலாளர்களைக் கொண்டு வேலைநிறுத்தம் செய்பவர்கள் வகிக்கும் முக்கிய வேலைகளை நிரப்புவதற்கும், வேலைநிறுத்தம் செய்பவர்களை நிரந்தரமாக முதலாளிகள் பிரதியீடு செய்வதைச் சுலபமாக்குவதும் இந்த தொகுப்பில் உள்ளடங்கி இருக்கலாம்.” இது 'இரயில்வே போன்ற முக்கிய தொழில்துறைகளில் வேலைநிறுத்தம் நடக்கும் நாட்களில் ஒரு குறைந்தபட்ச சேவை மட்டத்தை உறுதி செய்வதற்கு, நாடாளுமன்றத்தில் இப்போது முன்நகர்த்தப்பட்டு வரும் சட்டமசோதாவுடன் இணைக்கப்படலாம்.”

வேலைநிறுத்தங்களின் போது குறைந்தபட்சம் 20 சதவீத இரயில்கள் இயக்குவதைத் தொழிற்சங்கங்கள் உத்தரவாதப்படுத்துவதை குறைந்தபட்ச சேவை மட்டங்களின் (MSLs) சட்டமசோதா கட்டாயமாக்கும் அல்லது அவை 1 மில்லியன் பவுண்டு அபராதத்தை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.

தொழிலாளர்களின் உரிமைகள் மீதான இந்தத் தாக்குதலும் சர்வதேச அளவில் ஆளும் வர்க்கத்தின் ஓர் உலகளாவிய விடையிறுப்பாகும். கடந்த வாரம் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடெனின் ஜனநாயகக் கட்சி நிர்வாகம், பத்தாயிரக் கணக்கான இரயில்வே தொழிலாளர்கள் நிராகரித்த ஒரு தேசிய இரயில்வே ஒப்பந்தத்தைத் திணிப்பதற்கும், வேலைநிறுத்த நடவடிக்கையை சட்டவிரோதமாக்கவும் காங்கிரஸ் சபையில் நிறைவேற்றப்பட்ட ஒரு சர்வாதிகார சட்டமசோதாவைச் சட்டமாக மாற்றி கையெழுத்திட்டது.

குறைந்தபட்ச சேவைகள் சட்டமசோதா ஏற்கனவே ஐரோப்பா முழுவதும் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது என்பதோடு, 2008 உலக நிதியச் சரிவுக்குப் பின்னர் இருந்து, கடுமையான சிக்கன நடவடிக்கைகளை அமுலாக்குவதற்காக நேரடியான அரசு ஒடுக்குமுறைக்குத் திரும்புவதில் அது தாக்குமுகப்பாக இருந்ததுள்ளது.

2010 இல், ஸ்பெயினின் சோசலிஸ்ட் கட்சி அரசாங்கம் ஒரு தன்னிச்சையான திடீர் வேலைநிறுத்தத்தை முறியடிக்க 2,200 விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர்களைத் துப்பாக்கி முனையில் மீண்டும் வேலைக்குத் திரும்ப நிர்பந்தித்தது. அவர்கள் வேலையை நிறுத்தினால் அவர்களை உடனடியாக கைது செய்யும் அச்சுறுத்தலோடு, ஆயுதமேந்திய சிப்பாய்கள் அவர்களுக்கு அருகிலேயே நின்றிருந்தார்கள்.

ஸ்பெயினின் சோசலிஸ்ட் கட்சி (PSOE)-பொடேமோஸ் (Podemos) அரசாங்கத்தால் இந்தக் கோடையில் ஸ்பானிய விமானச் சேவை நிறுவனம் மற்றும் உலோகத் துறைத் தொழிலாளர்கள் குறைந்தபட்ச சேவை உத்தரவுகளுக்கு உட்படுத்தப்பட்டனர், பல தொழிலாளர்கள் சட்டபூர்வமாக வேலையை நிறுத்துவதைத் தடுத்து ரைன்எயர் (Ryanair) குறைந்தபட்ச சேவை அவசியப்பாடுகளைத் திணித்தது. இதற்கு முந்தைய மாதம், ஹங்கேரியின் தீவிர வலதுசாரி அரசாங்கம் குறைந்தபட்ச சேவை மட்டங்களை விதித்தது, இது பெரும்பாலான ஆசிரியர்கள் வேலைநிறுத்தங்களில் இணைவதைத் தடுத்தது.

அக்டோபரில், பிரான்சின் மக்ரோன் அரசாங்கம் வேலைநிறுத்தம் செய்து வந்த சுத்திகரிப்பு ஆலை தொழிலாளர்களை மீண்டும் வேலைக்குத் திரும்ப நிர்பந்தித்து அவர்களை கட்டாயப்படுத்தியது, பொருளாதாரத்தின் நாடிநரம்புகளையே பாதிக்க இருந்த ஒரு சக்தி வாய்ந்த நடவடிக்கையை முறியடித்தது.

பிரிட்டனின் தொழிலாள வர்க்கத்திற்கு எதிரான ஓர் அரசு தாக்குதலுக்குக் களத்தைத் தயாரித்து வரும் டோரி அரசாங்கம், பரந்த வேலைநிறுத்த நடவடிக்கையை நசுக்கவும் பொலிஸ் வேலைகளைச் செய்யவும் அது மேற்கொண்டு வரும் முயற்சிகளை ஆழப்படுத்த தொழிற்சங்க அதிகாரத்துவத்தைச் சார்ந்துள்ளது.

பல மாதங்களாக தொழிற்சங்கத் தலைவர்கள், இரயில்வே, தபால்துறை, தொலைத்தொடர்பு துறை மற்றும் பல்கலைக்கழக பணியாளர்களின் வேலைநிறுத்தங்களை தனிமைப்படுத்தவும் கட்டுப்படுத்தவும் மற்றும் பொது வேலைநிறுத்தமாக அது ஒன்றுதிரள்வதைத் தடுக்கவும் அவர்களால் முடிந்த அனைத்தையும் செய்துள்ளனர். தொடர்ந்து நடந்து வரும் நான்கு தேசிய வேலைநிறுத்தங்களில் ஒன்றை முடிவுக்குக் கொண்டு வரும் நோக்கில், கடந்த வாரம் தகவல்தொடர்பு தொழிலாளர்கள் சங்க அதிகாரத்துவம், 40,000 தொழிலாளர்களுக்குப் பணவீக்கத்திற்கும் மிகக் குறைவான சம்பள ஏற்பாட்டை முடித்து வைக்க பிரிட்டிஷ் டெலிகாமுடன் உடன்பட்டது. இதேபோன்றவொரு அழுகிய ஓர் ஒப்பந்தத்தைத் திணிக்கும் நம்பிக்கையில் இரயில்வே, கல்வித்துறை மற்றும் சுகாதாரத்துறை தொழிற்சங்கங்களுக்கும் அரசாங்கத்திற்கும் இடையே தொடர்ந்து பேச்சுவார்த்தைகள் நடத்தப்படுகின்றன.

வேலைநிறுத்த-தடுப்பு சட்டமசோதாவைக் கொண்டு அச்சுறுத்துவது அதிகாரத்துவத்திற்கு எதிராக திருப்பப்பட்டதல்ல, மாறாக சாமானிய தொழிற்சங்க உறுப்பினர்களுக்கு எதிராக பயன்படுத்த அதற்கு வெடிமருந்துகளை வழங்குவதை நோக்கமாக கொண்டதாகும். ஒரு பொது வேலைநிறுத்தத்தைச் சட்டவிரோதமாக்கும் வகையில் துணை நடவடிக்கையைச் சட்டத்திற்குப் புறம்பாக ஆக்கியது உட்பட, அடுத்தடுத்து வந்த டோரி அரசாங்கங்கள் திணித்த பல வேலைநிறுத்தத் தடை நடவடிக்கைகளை, கடந்த நான்கு தசாப்தங்களாக, தொழிற்சங்க காங்கிரஸும் (TUC) அதனுடன் இணைந்த தொழிற்சங்கங்களும், சவால் விடுக்க மறுத்துள்ளன. இந்தச் சட்டத்தை மதித்து வேலைநிறுத்தத்தைக் கைவிட வேண்டுமென வலியுறுத்துவதன் மூலம், ஆயுதப் படைகள் பயன்படுத்துவதற்கும் மற்றும் MSL உத்தரவுகள் திணிக்கப்படுவதற்கும் தொழிற்சங்கங்கள் விடையிறுக்கும்.

தொழிற்சங்க அதிகாரத்துவத்தில், வர்க்கப் போராட்டத்தை நசுக்க அர்ப்பணிப்புடன் உள்ள எதிரிகளையே தொழிலாளர்கள் எதிர்கொள்கின்றனர். கட்டுப்படுத்துவதற்கும் அடிபணிய செய்வதற்குமான அவர்களின் முயற்சிகள் இல்லாவிட்டால், மில்லியன் கணக்கான தொழிலாளர்களுக்கும் முதலாளித்துவ வர்க்கத்திற்கும் இடையிலான வர்க்க சக்திகளின் சமநிலை மிகவும் தீவிரமாக மாற்றப்பட்டு இருக்கும், இந்த இலாபகர அமைப்புமுறையைக் காப்பாற்ற இராணுவமோ அல்லது எத்தனையோ ஒடுக்குமுறை சட்டங்களோ போதுமானதாக இருக்காது.

ஒவ்வொரு நாட்டின் தொழிலாளர்களும் முதலாளித்துவ அரசு தாக்குதலுக்கு எதிராகப் போராடுகின்ற நிலையில், அவர்கள் போராட்டங்கள் மீதான கட்டுப்பாட்டைத் தொழிற்சங்க அதிகாரத்துவத்திடமிருந்து கைப்பற்றி, கடைநிலை பணியாளர்களுக்குத் திரும்ப ஒப்படைப்பதே அவர்களின் மிக முக்கிய பணியாகும். தொழிலாளர்கள் அவர்களின் சொந்த போராட்ட அமைப்புகளை கட்டியெழுப்ப வேண்டும், அதாவது ஜனநாயகரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்டு தொழிற்சங்க அதிகாரத்துவத்தின் மூச்சுத் திணறடிக்கும் பிடியில் இருந்து சுயாதீனமாக செயல்படும் அவர்களின் சாமானிய தொழிலாளர் குழுக்களைக் கட்டியெழுப்ப வேண்டும்.

இத்தகைய நடவடிக்கை குழுக்களுக்கு வழிகாட்டவும் அவற்றை ஒருங்கிணைக்கவும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு (ICFI) சமானிய தொழிலாளர் குழுக்களின் சர்வதே தொழிலாளர் கூட்டணியை (IWA-RFC) நிறுவி உள்ளது.

Loading