அசான்ஜ் ‘வாரங்களுக்குள்’ நாடுகடத்தப்படலாம் என விக்கிலீக்ஸின் தலைமை ஆசிரியர் எச்சரித்துள்ளார்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

ஜூலியன் அசான்ஜ் சில வாரங்களுக்குள் அமெரிக்காவிடம் ஒப்படைக்கப்படலாம் என விக்கிலீக்ஸின் தலைமை ஆசிரியர் கிறிஸ்டின் ஹ்ராஃப்ன்சன் எச்சரித்துள்ளார். அவர் பத்திரிகையாளர் க்ளென் கிரீன்வால்டிடம், அசான்ஜின் ‘நேரம் முடிந்துவிட்டது’ என்றும், அவர் சட்டவிரோதமாக நாடுகடத்தப்படுவதை சவால் செய்ய இலண்டனில் உள்ள சட்டப்பூர்வ வழிகள் தீர்ந்துவிட்ட நிலையில், அமெரிக்காவில் ‘அவருக்கு அங்கு ஒரு நியாயமான விசாரணை கிடைக்காது’ என்றும் கூறினார்.

விக்கிலீக்ஸின் தலைமை ஆசிரியர் கிறிஸ்டின் ஹ்ராஃப்ன்சன் பிரேசிலில் க்ளென் கிரீன்வால்ட் உடன் பேசுகிறார். [Photo: screenshot: System Update, Rumble]

ஹ்ராஃப்ன்சன் இந்த அவசர எச்சரிக்கையை வழங்கிய நேர்காணல், திங்களன்று Rumble வீடியோ தளத்தில் வெளியிடப்பட்டது. அவர் கிரீன்வால்ட்டிடம், “நீதிமன்ற நடவடிக்கைகளின் மூலம் நியாயமான தீர்வைப் பெறுவதற்கான அனைத்து சாத்தியக்கூறுகளும் ஜூலியனின் வழக்கில் முடிவுக்கு வருகிறது. அவர் நாடுகடத்தப்படுவதற்கு எதிராக இலண்டனில் போராடி வருகிறார். சில வாரங்களில் அவர் நாடுகடத்தப்படலாம்” என்று கூறினார்.

ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானில் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் போர் குற்றங்களையும், மற்றும் அமெரிக்க அரசாங்கம் மற்றும் உலகெங்கிலும் உள்ள அதன் உளவுத்துறை அமைப்புகளின் ஜனநாயக விரோத சதித் திட்டங்களையும் விக்கிலீக்ஸின் வெளியீடுகள் அம்பலப்படுத்தியதற்காக 1917 உளவுச் சட்டத்தின் கீழ் அசான்ஜ் குற்றம் சாட்டப்பட்டுள்ளார். குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால், 51 வயதான பத்திரிகையாளரும், மூன்று குழந்தைகளின் தந்தையுமான அசான்ஜ் 175 ஆண்டுகள் அமெரிக்க மத்திய சிறையில் அடைக்கப்படுவார். அசான்ஜ் குற்றம்சாட்டப்படாமல் மூன்று ஆண்டுகள் பெல்மார்ஷ் உச்சபட்ச பாதுகாப்பு சிறையில் அடைக்கப்பட்டுள்ளது உட்பட, ஏற்கனவே ஒரு தசாப்தத்திற்கும் மேற்பட்ட காலத்தை இங்கிலாந்தில் தடுப்புக்காவலில் அவர் உள்ளார்.

ஏப்ரல் 2019 இல் ஈக்வடோர் தூதரகத்திலிருந்து அசான்ஜ் கைப்பற்றப்பட்டதற்கு முன்னோட்டமாக, அமெரிக்க அரசாங்கத்தின் அழுத்தத்தின் கீழ் வெளி உலகத்துடனான அவரது தொடர்பு துண்டிக்கப்பட்டதன் பின்னர் 2018 இல் ஹ்ராஃப்ன்சன் விக்கிலீக்ஸின் ஆசிரியராக நியமிக்கப்பட்டார். விருது பெற்ற பத்திரிகையாளரான ஹ்ராஃப்ன்சன் தனது சொந்த விருப்பத்தின் பேரில் விக்கிலீக்ஸின் மிகவும் பிரபலமான கூட்டுக்கொலை வீடியோ வெளியீட்டை சரிபார்க்கும் பணியில் அசான்ஜூடன் இணைந்து பணியாற்றினார், இவர் 2010 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் அமெரிக்க AH-64 அப்பாச்சே ஹெலிகாப்டர்களிலிருந்து ஏவப்பட்ட இலக்கு வான்வழித் தாக்குதல்களால் கொல்லப்பட்ட பொதுமக்களின் உறவினர்களை நேர்காணல் செய்ய ஈராக்கிற்குச் சென்றார்.

கடந்த வாரம் பிரேசிலில் ஹ்ராஃப்ன்சன் பேசுகையில், அசான்ஜ் நாடுகடத்தப்படுவதற்கு எதிராக மேல்முறையீடு செய்வதற்கான சட்ட வழிகள் வேகமாக முடிவடைந்து வருவதாகக் கூறினார். ஜூன் மாதம், அப்போதைய இங்கிலாந்து உள்துறை செயலர் பிரிதி பட்டேல், மருத்துவ காரணங்களுக்காக அவரை நாடு கடத்துவதைத் தடுக்கும் முந்தைய நீதிமன்றத் தீர்ப்பை உயர் நீதிமன்றம் இரத்து செய்ததை அடுத்து, அசான்ஜை நாடு கடத்த அனுமதித்தார். CIA, அசான்ஜை கடத்தி கொலை செய்ய திட்டமிட்டது தொடர்பான பெரும் ஆதாரங்களை புறக்கணித்து, அசான்ஜ் அடக்குமுறையை எதிர்கொள்ள மாட்டார் என்ற அமெரிக்க அரசாங்கத்தின் வீணான உத்தரவாதங்களை உயர் நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது.

பிரிட்டிஷ் நீதிமன்றங்கள் அசான்ஜூக்கு எதிராக சட்டபூர்வ பழிவாங்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன, ஒரு வெளியீட்டாளரும் பத்திரிகையாளருமான அவரது அடிப்படை சட்ட மற்றும் ஜனநாயக உரிமைகளை மீறும் வகையில் ஒப்படைப்பு கோரிக்கைக்கு ஒப்புதல் அளித்துள்ளது. உயர் நீதிமன்றமும் உச்ச நீதிமன்றமும், அவரை கொலையாளிகளிடம் ஒப்படைப்பதை விரைவுபடுத்துவதற்காக வடிவமைக்கப்பட்ட தீர்ப்புகளை வழங்கியுள்ளன. மார்ச் மாதம், உயர் நீதிமன்றம் அதன் முந்தைய தீர்ப்புக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வதற்கான அசான்ஜின் விண்ணப்பத்தை மறுத்துவிட்டது. அதன் பின்னர், உள்துறை செயலரின் நாடு கடத்தல் உத்தரவை எதிர்த்து அவரது வழக்குரைஞர்கள் மேல்முறையீடு செய்தனர்.

“இலண்டனில் உள்ள மேல்முறையீட்டு நீதிமன்றமான உயர் நீதிமன்றம், ஒப்படைப்புக்கு எதிரான ஜூலியனின் மேல்முறையீட்டை விசாரணை செய்யுமா என்பது குறித்து எங்களுக்கு பதிலளிப்பதற்கு நாங்கள் காத்திருக்கிறோம். மேல்முறையீட்டை விசாரணை செய்ய வேண்டாம் என்று அவர்கள் முடிவு செய்தால் –அது ஏற்கனவே அவதூறாக இருக்கும்– அடுத்து உச்ச நீதிமன்றம் உள்ளது, அதுவும் வழக்கை விசாரிக்க வேண்டாம் என்று விரைவாக முடிவெடுக்கக்கூடும் என்றால், உங்களுக்குத் தெரியும் ‘பொதுமக்களுக்கு முக்கியத்துவம் இல்லை’… இந்த மோசமான சூழ்நிலையில், சில வாரங்களுக்குள் அவர் அமெரிக்காவிற்கு கொண்டு செல்லப்படலாம்” என்று ஹ்ராஃப்ன்சன் கூறினார்.

மேலும் அவர், “எனது பார்வையில், இலண்டனில் நடந்த அனைத்து நடவடிக்கைகளிலும் நான் கலந்துகொண்டிருக்கிறேன் என்ற வகையில், இலண்டனில் நடந்த அனைத்து ஒப்படைப்பு நடவடிக்கைகளும் ஒரு விஷயத்தை மட்டுமே அம்பலப்படுத்தியுள்ளன, இந்த வழக்கு நீதிமன்றத்தில் வெற்றிபெறப் போவதில்லை என்பதுதான் உண்மை. இலண்டனில் உள்ள நீதிமன்ற அறைகளில் இதற்கு நீதி கிடைக்காது. இது வெளிப்படையானது என்பதுடன், அமெரிக்காவைப் பற்றி நான் குறிப்பிட வேண்டியதில்லை, அசான்ஜ் நாடு கடத்தப்படுவதை எதிர்த்துப் போராடுவதற்கான பாதுகாப்பின் சாராம்சங்களில் அது ஒன்றாகும், அவர் அங்கு ஒருபோதும் நியாயமான விசாரணையைப் பெற முடியாது. எனவே, நமக்கு நேரம் முடிந்து கொண்டிருக்கிறது. நாம் இதை வேறு மட்டத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டும், அதாவது, அரசியல் ஆதரவைப் பெறுவதற்கு நாங்கள் சுற்றுப்பயணம் செல்ல வேண்டும் என்று நான் முடிவு செய்துள்ளேன், ஏனென்றால் அரசியல் துன்புறுத்தலை எதிர்த்துப் போராடுவதற்கான ஒரே வழியாக இருப்பது அரசியல் வழிமுறைகள்தான்” என்றும் கூறினார்.

ஹ்ராஃப்ன்சனும் விக்கிலீக்ஸின் தூதர் ஜோசப் ஃபாரெலும் தற்போது இலத்தீன் அமெரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து வருகின்றனர், நவம்பர் 21 அன்று பொகோட்டாவில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி குஸ்டாவோ பெட்ரோ மற்றும் வெளியுறவு மந்திரி அல்வாரோ டுரான் ஆகியோரை கொலம்பியாவில் ஒரு மணி நேரம் தனிப்பட்ட முறையில் சந்தித்துப் பேசியதில் அவர்களின் பயணம் தொடங்கியது.

பிரேசிலில், அவர்கள் நவம்பர் 29 அன்று ஜனாதிபதி லுலா டா சில்வாவுடன் ஒரு தனிப்பட்ட சந்திப்பை நடத்தினர், அதைத் தொடர்ந்து பிரேசில் பாராளுமன்றத்தில் அவர்கள் பேசினர். ரியோ டி ஜெனிரோவில் அவர்கள் பிரேசிலிய பத்திரிகையாளர் சங்கத்தில் ஒரு பொதுக் கூட்டத்தை நடத்தினார்கள், அதைத் தொடர்ந்து பிரபல இசைக்கலைஞர்-இசையமைப்பாளர் கேடானோ வெலோசோவின் வீட்டில் அவர்களுக்கு வரவேற்பு நடந்தது. பின்னர் அவர்கள், ஆர்ஜென்டினாவின் துணை ஜனாதிபதி கிறிஸ்டினா கிர்ச்னர் மற்றும் ஜனாதிபதி ஆல்பர்டோ பெர்னாண்டஸ் ஆகியோரை காசா ரோசாடாவில் தனிப்பட்ட முறையில் சந்தித்தனர். அவர்கள் அடுத்ததாக சிலி மற்றும் மெக்சிக்கோவுக்குச் செல்கிறார்கள்.

ஹ்ராஃப்ன்சன், கிரீன்வால்டிடம் இவ்வாறு கூறினார், “எங்கள் நோக்கம் அரசியல் தலைவர்களை அழுத்தம் கொடுக்க வைப்பதாகும், நீங்கள் அதற்கு அழைப்பு விடுக்க விரும்பினால், அல்லது பைடென் நிர்வாகத்தை மறுபரிசீலனை செய்யக் கோருவதானால், தங்கள் சொந்த கொள்கைகளுக்குப் பின்னால் நிற்க வேண்டும், அந்தக் கொள்கைகள் உலகம் முழுவதும் பத்திரிகை சுதந்திரம் பற்றி பிரசிங்கிக்க வேண்டும், மற்றும் முதல் திருத்தம் மற்றும் அவர்களின் ஒப்பந்தக் கடமைகளின் மீது இந்த அழுத்தத்தை சுமத்தாமல், அடிப்படையில் ஜூலியன் மீதான குற்றச்சாட்டை கைவிட வைக்க வேண்டும்” இதுதான் ஒரே வழி” என்றார்.

இலத்தீன் அமெரிக்காவில் அசான்ஜ் மற்றும் விக்கிலீக்ஸூக்கு மகத்தான ஆதரவு உள்ளது. சிலி, ஆர்ஜென்டினா, பிரேசில், பொலிவியா, நிகரகுவா, எல் சால்வடோர், பனாமா மற்றும் குவாத்தமாலா ஆகிய நாடுகளில் பல்லாயிரக்கணக்கான உயிர்களைக் பலி கொண்டதான அமெரிக்க ஆதரவு இராணுவ சர்வாதிகாரத்தை அப்பகுதியின் தொழிலாளர்களும் ஒடுக்கப்பட்ட மக்களும் அனுபவித்துள்ளனர். ஆனால், இலத்தீன் அமெரிக்காவின் முதலாளித்துவ அரசியல்வாதிகளின் ஆதரவு அறிக்கைகள் அரசியல் ரீதியாக மதிப்பற்றவையே. லுலா, கிர்ச்னர் மற்றும் குழுவினர் சர்வதேச நாணய நிதியத்தின் சிக்கன நடவடிக்கைகள் மற்றும் தொழிலாள வர்க்கத்தின் மீதான அரசு அடக்குமுறையை அமல்படுத்துவதன் மூலம் ஏகாதிபத்தியத்திற்கு தங்கள் விசுவாசத்தைக் காட்டியுள்ளனர்.

அசான்ஜை ஒரு ‘உயர்-தொழில்நுட்ப பயங்கரவாதி’ என சித்தரிக்கும் பைடெனிடம் முறையீடு செய்வது இன்னும் வெற்றுத்தனமானவை. முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கடந்த வாரம் அரசியலமைப்பை ‘நீக்க’ அழைப்பு விடுத்த பின்னரும், பைடென் மௌனம் சாதித்தார். 2021 ஜனவரியில் ட்ரம்பின் பாசிச ஆட்சிக்கவிழ்ப்பு முயற்சியால் கூட அரசியலமைப்பைப் பாதுகாக்க அவரைத் தூண்ட முடியவில்லை, பேச்சுரிமை, பத்திரிகை மற்றும் ஒன்றுகூடல் ஆகியவற்றிற்கு அதன் முதல் திருத்தம் உத்தரவாதம் அளிக்கிறது. கடந்த வாரம், பல்லாயிரக்கணக்கான இரயில்வே தொழிலாளர்களை வெள்ளை மாளிகை-பேச்சுவார்த்தை கூட்டு பேர ஒப்பந்தம் மற்றும் வேலைநிறுத்தங்களை தடைசெய்யும் ஒரு முக்கிய சட்டத்தை இயற்றியதற்கு பைடென் பொறுப்பேற்றார்.

அசான்ஜ் மீதான துன்புறுத்தலானது, ஜனநாயக உரிமைகள் மீதான பாரிய தாக்குதலின் முன்னோடியாக உள்ளது, மேலும் பேச்சுரிமையை அழிக்கவும், புலனாய்வு பத்திரிகையை சட்டவிரோதமாக்கவும், விமர்சகர்களை மிரட்டவும் மற்றும் அச்சுறுத்தவும், அரசாங்க குற்றங்கள் அம்பலப்படுத்தப்படுவதை தடுக்கவும் மற்றும் சமூக சமத்துவமின்மை மற்றும் போருக்கு எதிரான பாரிய மக்கள் எதிர்ப்பை நசுக்கவும் நோக்கம் கொண்டதாகும். இராணுவத்தை அணிதிரட்டுவதற்கான அதன் அச்சுறுத்தல்கள் உட்பட, வேலைநிறுத்தங்களை தடைசெய்யும் பிரிட்டிஷ் அரசாங்கத்தின் திட்டங்கள், அசான்ஜின் தலைவிதி தொழிலாள வர்க்கத்துடன் பிரிக்க முடியாத வகையில் இணைக்கப்பட்டுள்ளது என்பதைக் காட்டுகிறது.

ரஷ்யாவிற்கு எதிரான நேட்டோவின் அதிகரித்து வரும் போர் சர்வாதிகார நடவடிக்கைகளுடன் இணைந்தே நடக்கிறது. பிரிட்டிஷ் அரசாங்கத்தின் ‘அவசரகால அதிகாரங்கள்’ வேலைநிறுத்தம் செய்பவர்களை ‘புட்டனின் கைக்கூலிகள்’ என கண்டனம் செய்வதுடன் இணைக்கப்பட்டுள்ளன – அசான்ஜ் மற்றும் விக்கிலீக்ஸூக்கு எதிரான பென்டகனின் கதையை வார்த்தைக்கு வார்த்தை மீண்டும் கூறுகிறது.

அசான்ஜின் தலைவிதியை லுலா, பைடென் மற்றும் தொழிலாள வர்க்கத்தின் பிற எதிரிகள் போன்ற அரசியல் சக்திகளின் கைகளில் விடக்கூடாது. முதலாளித்துவ சிக்கன நடவடிக்கை, அரசு அடக்குமுறை மற்றும் போருக்கு எதிரான உலகளாவிய போராட்டத்தில் நுழையும் மில்லியன் கணக்கான தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களிடையே அசான்ஜின் பாதுகாப்பிற்கான ஒரு சக்திவாய்ந்த வெகுஜன தளம் –மற்றும் அவரது சுதந்திரத்தை வென்றெடுப்பதற்கான போராட்டம்– உருவாகி வருகிறது.

Loading