வரி அதிகரிப்புக்கு எதிராக இலங்கை தொழிலாளர்கள் போராட்டம் நடத்துகின்றனர்

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.

புதனன்று, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அரசாங்கத்தால் நடைமுறைப்படுத்தப்படும் சர்வதேச நாணய நிதியத்தின் கட்டளைகளுக்கு எதிராக 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திற்கு வெளியே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கொழும்பு துறைமுக ஊழியர்கள், மின்சார சபை ஊழியர்கள், வங்கி ஊழியர்கள் மற்றும் வைத்தியர்கள், பல்கலைக்கழக ஆசிரியர்கள் உட்பட ஏனைய தொழில் வல்லுநர்களும் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர்.

22 பெப்ரவரி 2023 அன்று கொழும்பு கோட்டையில் வரி அதிகரிப்புக்கு எதிரான பாரிய ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட வங்கி ஊழியர்கள் குழு.

கொழும்பில் ஆர்ப்பாட்டக்காரர்கள் 'விக்கிரமசிங்க அரசாங்கத்தை விரட்டியடி', 'விலைகள் மிக அதிகமாக உயர்கின்றன' மற்றும் 100,000 ரூபாய்க்கு மேல் மாதாந்த சம்பளத்திற்கு, புதிய ஊதியத்திற்கு ஏற்ப (PAYE) வரிகளை சுமத்துவதைக் குறிப்பிடும் வகையில் 'நியாயமற்ற வரியை விலக்கிக்கொள்' போன்ற கோஷங்களை எழுப்பினர். நூற்றுக்கணக்கான அரச ஊழியர்கள் மத்திய மாகாணத்தில் கண்டி மற்றும் மேல் மாகாணத்தில் வாதுவ உட்பட பல நகரங்களிலும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

புதன்கிழமை, எதிர்ப்பாளர்கள் பல வீதிகளை மறித்து ஜனாதிபதியின் அலுவலகத்திற்குள் நுழைய திட்டமிட்டுள்ளதாகக் கூறி, காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை கொழும்பு கோட்டை பகுதியில் எந்த ஒரு ஆர்ப்பாட்டமும் நடத்தக்கூடாது என்று நீதிமன்ற உத்தரவைப் பெற பொலிஸ் முயற்சித்தது. 

நீதவான் இந்த ஆர்ப்பாட்டத்தை முற்றிலுமாக தடை செய்யவில்லை, மாறாக வீதிகளை மறிக்கவோ, ஜனாதிபதி அலுவலகம் மற்றும் பிற கட்டிடங்களுக்குள் நுழையவோ அல்லது பொது சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்கவோ கூடாது என்று உத்தரவு பிறப்பித்தார். இந்த உத்தரவானது, போராட்டத்தை நிறுத்த பொலிசுக்கு விரிவான அதிகாரம் வழங்கியது. ஆர்ப்பாட்டக்காரர்களை மிரட்டுவதற்கும் எந்த ஒடுக்குமுறைக்கும் தயார்படுத்துவதற்கும் அயல் பிரதேசங்களில் ஆயுதமேந்திய பொலிசாரும் தண்ணீர் பீரங்கி வண்டிகளும் படையினரும் நிறுத்தப்பட்டனர்.

புதன் கிழமை ஆர்ப்பாட்டம் 40 தொழிற்சங்கங்களின் கூட்டினால் அழைப்பு விடுக்கப்பட்டது. அதில் தொழில் வல்லுநர்களின் தொழிற்சங்கக் கூட்டமைப்பு மற்றும் மின்சாரம், துறைமுகம் மற்றும் பெட்ரோலியத் தொழிலாளர்களின் தொழிற்சங்கங்களின் கூட்டணி ஆகியவை பங்குபற்றின. சம்பளத்திற்கு ஏற்ப வரி செலுத்துதல், அரச நிறுவனங்களை தனியார்மயமாக்குதல், அரச வேலைகளை அழித்தல், ஊதியக் குறைப்பு மற்றும் மின்சாரக் கட்டண அதிகரிப்பு மற்றும் பிற பொது பயன்பாட்டுக் கட்டணங்கள் அதிகரிப்பு உட்பட சர்வதேச நாணய நிதியத்தின் கோரிக்கைகள் தொடர்ந்தும் அமுல்படுத்தப்படும் என்று விக்கிரமசிங்க வலியுறுத்திய நிலைமையிலேயே இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

சனிக்கிழமை கொழும்பில் நடைபெற்ற ரோட்டரி கழக மாவட்ட மாநாட்டில் உரையாற்றிய விக்கிரமசிங்க, பொருளாதார மீட்சியே தனது முன்னுரிமை என்றும், தனது கொள்கைகளுக்கு எதிரான எந்த எதிர்ப்பையும் அடக்குவேன் என்றும் அறிவித்தார்.

'இந்த ஆண்டு, எனது முதல் முன்னுரிமை பொருளாதார மீட்பாகும்... பொது ஒழுங்கு இல்லாமல் பொருளாதார மீட்சி இருக்க முடியாது' என்று அவர் பிரகடனம் செய்தார். பெப்ரவரி 8 அன்று, 'நினைவில் கொள்ளுங்கள், நான் ஜனரஞ்சகமாக இருக்க இங்கு வரவில்லை... தேசத்தின் நலனுக்காக மக்கள் விரும்பத்தகாத முடிவுகளை எடுக்க நான் தயாராக இருக்கிறேன்,' என்று அவர் பாராளுமன்றத்தில் கூறினார்,

தொழிலாளர்கள் சமூகத் தாக்குதல்களை எதிர்த்துப் போராடுவதில் உறுதியாக உள்ள போதிலும், தொழிற்சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ள எதிர்ப்புக்கள் மற்றும் மட்டுப்படுத்தப்பட்ட வேலைநிறுத்தங்களும், இந்த எதிர்ப்பைக் கலைத்து, ஊதியத்துக்கேற்ற வரி செலுத்துதல் போன்ற ஒற்றைப் பிரச்சினைகளுக்குள் போராட்டங்களைக் கட்டுப்படுத்தி வைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளன. எல்லாவற்றிற்கும் மேலாக, தொழிற்சங்கங்கள் அரசாங்கம் மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிராக தொழிலாள வர்க்கத்தின் ஐக்கியப்பட்ட இயக்கத்தைத் தடுப்பதில் உறுதியாக உள்ளன.

விக்கிரமசிங்க ஆட்சிக்கு எதிராக பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ள தொடர் எதிர்ப்புக்கள் மற்றும் வேலைநிறுத்தங்களின் ஒரு பகுதியே புதனன்று நடந்த ஆர்ப்பாட்டங்கள் ஆகும். இவை கடந்த ஆண்டின் பிற்பகுதியில் ஆரம்பித்தன. அதன் தொடர்ச்சியாக பெப்ரவரி 9 அன்று அரசாங்கத்தின் தாக்குதல்களுக்கு எதிராக 50,000 தொழிலாளர்களால் தேசிய வேலைநிறுத்தம் நடத்தப்பட்டது. இலங்கைத் தொழிலாளர்களின் அதிகரித்துவரும் போர்க்குணம், சமூக மற்றும் ஜனநாயக உரிமைகள் மீதான அரசாங்கத்தினதும் முதலாளிகளதும் தாக்குதல்களுக்கு எதிராக வள்ர்ந்து வரும் தொழிலாள வர்க்கத்தின் உலகளாவிய இயக்கத்தின் ஒரு பகுதியாகும்.

22 பெப்ரவரி 2023 அன்று கொழும்பு கோட்டையில் அரசாங்க வரி அதிகரிப்புக்கு எதிராக தொழிலாளர்கள் நடத்திய ஆர்ப்பாட்டம்.

தொழிற்சங்கங்கள், ஜனாதிபதி விக்கிரமசிங்கவைப் பற்றிய வாய்வீச்சுக் கண்டனங்கள் தெரிவிப்பதன் மூலம் அவரது அரசாங்கத்தின் சிக்கன நடவடிக்கைகளில் ஒப்பனை மாற்றங்களை செய்ய வேண்டுகோள்கள் விடுப்பதன் மூலமும் தொழிலாளர்களை ஏமாற்ற முயல்கின்றன.

புதனன்று, இலங்கை வங்கி ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ரஞ்சன் சேனநாயக்க, மார்ச் 1 ஆம் திகதிக்குள் அரசாங்கம் தனது புதிய வரிக் கொள்கையை விலக்கிக்கொள்ளவில்லை என்றால், 'ஒவ்வொரு துறையிலும் உள்ள தொழில் வல்லுநர்கள் வீதியில் இறங்குவார்கள்' என்று ஆர்ப்பாட்டக்காரர்களிடம் கூறினார்.

பல்கலைக்கழக ஆசிரியர் சங்க சம்மேளனத்தின் பேச்சாளர் சாருதத்த இளங்கசிங்க அறிவித்ததாவது: “வரிப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்பட வேண்டும் என்று நாங்கள் அரசாங்கத் தலைவர்களிடம் வலியுறுத்தி வருகிறோம். நாங்கள் ஏற்கனவே மிகப் பெரிய தொழிற்சங்கக் கூட்டமைப்பைக் கட்டியெழுப்பியுள்ள போதிலும், இன்னும் வெகுஜனங்கள் மீது எந்த அழுத்தத்தையும் நாங்கள் கொடுக்கவில்லை என்றாலும், மார்ச் மாதத்தில் இருள் சூழ்ந்த ஒரு சகாப்தம் தொடங்கலாம். அப்படிப்பட்ட நிலைக்கு எங்களைத் தள்ளாதீர்கள்.”

இலங்கை மின்சார சபையின் தொழிற்சங்கக் கூட்டமைப்புகளின் கூட்டணியின் அழைப்பாளர் ரஞ்சன் ஜெயலால் கூறியதாவது: “நீங்கள் [விக்கிரமசிங்க] ஏப்ரல் மாதத்திற்குள் [வரி] கொள்கையை விலக்கிக்கொள்ளவில்லை என்றால் நாங்கள் அரசாங்கத்தை விரட்டியடிப்போம். அரசாங்கத்துக்கு பொது வேலைநிறுத்தம் தேவைப்பட்டால், நாங்கள் அதை செய்வோம், இந்த போராட்டம் வெற்றியுடன் முடிவடையும் என்பது உறுதி.”

மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) உடன் இணைந்த அகில இலங்கை பொது துறைமுக ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் நிரோஷன் கோரகன, 'மார்ச் 1 ஆம் திகதிக்கு இன்னும் ஒரு வாரம் உள்ளது. நீங்கள் முடிவு எடுக்க வேண்டும்,' என்று அரசாங்கத்தை எச்சரித்தார்.

ஜெயலாலும் கோரகனவும் ஜே.வி.பி.யின் முன்னணி உறுப்பினர்கள் ஆவர். ஜே.வி.பி.க்கு சர்வதேச நாணய நிதியத்தின் சிக்கன திட்டத்துடன் எந்த அடிப்படை வேறுபாடுகளும் இல்லை. ஜே.வி.பி.யும் அதன் தேசிய மக்கள் சக்தியும் (தே.ம.ச) வெகுஜன கோபத்தை அதன் பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை உயர்த்திக்கொள்ள இழிந்த முறையில் பயன்படுத்திக் கொள்ள முயற்சிக்கின்றன. ஜே.வி.பி. அரசாங்கத்தை வென்றால், அது இதே போன்ற சமூகத் தாக்குதல்களை கட்டவிழ்த்து விடும்.

கொழும்பில் புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் மற்றும் தொழில் வல்லுநர்கள், உலக சோசலிச வலைத் தள செய்தியாளர்களுடன் பேசினர். அவர்கள் அரசாங்கத்தின் தாக்குதல்கள் பற்றியும் தொழிற்சங்கங்கள் மீதான அவர்களின் அவநம்பிக்கை குறித்தும் தங்கள் கோபத்தை வெளிப்படுத்தினர். ஒரு பெட்ரோலிய கூட்டுத்தாபன தொழிலாளி, தனது சக தொழிலாளர்களுக்கு அவர்களின் தொழிற்சங்கம் நடத்தும் ஆர்ப்பாட்டம் பற்றி அறிவித்திருக்கவில்லை என்று எமது நிருபர்களிடம் தெரிவித்தார்.

22 பெப்ரவரி 2023 அன்று விக்கிரமசிங்க அரசாங்கத்தின் அதிக வருமான வரி விகிதங்களுக்கு எதிராக கொழும்பு கோட்டையில் பாரிய ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள தொழில்வல்லுனர்கள் குழு.

அரசின் வருமான வரி விகிதங்கள் முற்றிலும் நியாயமற்றவை என்று மின்சாரப் பொறியாளர் ஒருவர் தெரிவித்தார். “இந்த வரி எங்களுக்கு மிகவும் கடினமாக உள்ளது. நான் இந்த வரியைச் செலுத்திவிட்டு, வீட்டுக்கடன் மற்றும் இதர கடன்களும் ஏனைய கழிவுகளும் எடுக்கப்பட்ட பிறகு, என்னுடைய சம்பளத்தில் சுமார் 80,000 ரூபாய் மட்டுமே மீதம் இருக்கும். ஆனால் பிரச்சனை வரி மட்டும் அல்ல. அன்றாடச் செலவுகள், குழந்தைகளின் கல்விச் செலவுகளைச் சமாளிக்க முடியாத அளவுக்கு எல்லாவற்றின் விலையும் அதிகரித்து வருகிறது’’ என்றார்.

எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் அல்லது தே.ம.ச.யின் கீழ் தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் நிலைமை வேறுபட்டதாக இருக்காது என்று அந்த பொறியாளர் கூறினார். “ஆம், மக்கள் [ராஜபக்ஷ] அரசாங்கத்தை வெளியேற்றினார்கள். ஆனால் என்ன நடந்தது? ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாகி, தற்போது அனைத்து தரப்பு மக்களையும் தாக்கி தொழிலாளர்களின் போராட்டங்களை நசுக்குகிறார். சர்வாதிகாரி போல் செயல்படுகிறார்,'' என அவர் கூறினார்.

ரஷ்யாவிற்கு எதிரான உக்ரேனில் நடந்து வரும் போர், இலங்கையின் தொழில்துறைகள், ஏற்றுமதிகள் மற்றும் மக்களின் அன்றாட வாழ்வில் தாக்கத்தை ஏற்படுத்தியதாக அவர் மேலும் கூறினார். இது மின்சார உற்பத்தியையும் பாதிக்கிறது. நிலக்கரி விலை உயர்வுக்கு இந்தப் போர்தான் காரணம். அணு ஆயுதப் போராக மாறினால் உலகம் அழிந்துவிடும். நீங்கள் கூறியது போல், சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் போர் எதிர்ப்பு இயக்கத்தை கட்டியெழுப்புவது மிகவும் அவசியமானது.

“இந்த நிலைமையை எதிர்கொள்ள தொழிற்சங்கங்களுக்கு சரியான வேலைத்திட்டம் இல்லை. தொழிலாளர்கள் தொழிற்சங்கங்களில் இருந்து சுயாதீனமாக ஒழுங்கமைய வேண்டும் மற்றும் அனைத்து முதலாளித்துவ கட்சிகளிலிருந்தும் சுயாதீனமாக தங்கள் சொந்த அரசியல் இயக்கத்தை கட்டியெழுப்ப வேண்டும் என்பதில் நான் உங்களுடன் உடன்படுகிறேன். தொழிலாளர்கள் மற்றும் கிராமப்புற வெகுஜனங்களின் மாநாட்டிற்கான உங்கள் பிரச்சாரத்தை நான் ஆதரிக்கிறேன், மேலும் அதைப் பற்றி மேலும் கலந்துரையாட விரும்புகிறேன்,' என்றும் அவர் தெரிவித்தார்.

கொழும்பு துறைமுகப் பொறியியல் பிரிவு ஊழியர் ஒருவர், வாழ்க்கைச் செலவு அதிகரித்து வருவதால், தனது குடும்பச் செலவுகளை நிர்வகிப்பது மிகவும் சிரமமாக இருப்பதாகக் கூறினார். “நான் வங்கிக் கடனுக்காக சுமார் 60,000 ரூபாயும், ஊழியர் சேமலாப நிதிக்கு சுமார் 15,000 ரூபாயும் செலுத்த வேண்டியுள்ளது. எனக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர், அவர்களின் கல்வி கட்டணம் மாதம் 20,000 ரூபாய். தற்போது இந்த வெட்டுக்களுக்குப் பிறகு நான் மாதத்திற்கு 50,000-60,000 ரூபாய் மட்டுமே பெறுகிறேன். இந்தப் புதிய வரி விதிப்பு நடைமுறைப்படுத்தப்பட்டால் எனது மாதச் சம்பளத்தில் மேலும் 14,000 ரூபாய் குறைக்கப்படும்.

“இந்த தாக்குதல்களை அரசாங்கம் நிறுத்தப் போகிறது என்று நான் நம்பவில்லை. பல ஆண்டுகளாக தொழிற்சங்கங்கள் பல்வேறு பிரச்சனைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தி வந்தாலும் அதன் விளைவு என்ன? தனியார்மயமாக்கல் இன்னும் தொடர்கிறது. கொழும்பு துறைமுகத்தில் சுமார் 15,000 தொழிலாளர்கள் இருந்தனர், ஆனால் அது தன்னார்வ ஓய்வூதியத் திட்டங்களின் மூலம் பாதியாகக் குறைக்கப்பட்டுள்ளது,” என அவர் விளக்கினார்.

புதனன்று நடந்த போராட்டம், தொழிலாளர்கள் தங்கள் உரிமைகளுக்கான போராட்டத்தை தங்கள் கையில் எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதை மீண்டும் ஒருமுறை வெளிப்படுத்தியுள்ளது. அத்தகைய போராட்டத்திற்கான இன்றியமையாத தொடக்கப் புள்ளி, அனைத்து முதலாளித்துவக் கட்சிகள் மற்றும் தொழிற்சங்கங்களிலிருந்து சுயாதீனமாக, வேலைத் தளங்கள், தொழிற்சாலைகள் மற்றும் சுற்றுப்புறங்களில் அவர்களது சொந்த ஜனநாயக ரீதியில் கட்டுப்படுத்தப்படும் நடவடிக்கைக் குழுக்களை அமைப்பதே ஆகும்.

சர்வதேச நாணய நிதிய சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிராக பெருகிவரும் வெகுஜன எதிர்ப்புக்களுக்கு மத்தியில், இலங்கையின் எதேச்சதிகார ஜனாதிபதி உள்ளூராட்சித் தேர்தல்களை இரத்து செய்கிறார்

உள்ளூராட்சித் தேர்தலை முடக்கும் இலங்கை அரசாங்கத்தின் நடவடிக்கைகளை எதிர்த்திடு! ஜனநாயக உரிமைகளைப் பாதுகாக்க தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்டு! 

இலங்கை சுகாதார சேவைகள் 'முழுமையான உடைவை நோக்கி செல்கின்றன'

Loading