அரசாங்கத்தின் கொடூரமான சிக்கனவெட்டு தாக்குதல்களுக்கு எதிரான வேலைநிறுத்தத்திற்கு ஆதரவை அணிதிரட்டுவோம்! ஜனாதிபதியின் கொடூரமான அத்தியாவசிய சேவை உத்தரவுகளை நீக்கு! சமூக மற்றும் ஜனநாயக உரிமைகளை பாதுகாக்க சோசலிச வேலைத்திட்டத்திற்காகப் போராடுவோம்!

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.

சர்வதேச நாணய நிதியத்தின் கட்டளையின் கீழ் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்தினால் அமுல்படுத்தப்பட்டு வரும் கொடூரமான சிக்கன வேலைத்திட்டத்திற்கும் ஜனநாயக உரிமைகளுக்கு எதிரான தாக்குதல்களுக்கும் எதிராக இன்று வேலைநிறுத்தம் செய்யும் இலட்சக்கணக்கான தொழிலாளர்களுடன் சோசலிச சமத்துவக் கட்சி (சோ.ச.க.) ஒன்றாக நிற்கிறது.

துறைமுகம், பெற்றோலியம், மின்சாரம், நீர் வழங்கல், சுகாதாரம் மற்றும் வங்கி உட்பட்ட துறைகளில் கிட்டத்தட்ட அரை மில்லியன் தொழிலாளர்கள் இன்றைய வேலைநிறுத்தத்தில் பங்கேற்கின்றனர். இதுதவிர, அரச மற்றும் அரை அரச நிறுவனங்களில் பணிபுரியும் இலட்சக்கணக்கான ஆசிரியர்கள், ஊழியர்கள் பகல் வேளைகளில் மறியல் போராட்டம் மற்றும் கறுப்பு பட்டி போராட்டத்திலும் ஈடுபடுகின்றனர்.

22 பெப்ரவரி 2023 அன்று கொழும்பு கோட்டையில் வரி அதிகரிப்புக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட திரளான மக்கள்

50 சதவீதத்திற்கு மேல் பணவீக்க உயர்வு, விண்ணைத் தொடும் வரி உயர்வு, செலுத்த முடியாத அளவிற்கு மின்சாரக் கட்டணங்கள் உயர்வு, சுகாதார சேவை சீர்குலைவு போன்ற தாக்குதல்களுக்கு மத்தியில், தொழிலாளர்களும் ஏழைகளும் பாதிக்கப்படுவதோடு இலட்சக்கணக்கான மக்கள் வறுமை, ஏழ்மை மற்றும் ஊட்டச்சத்து குறைபாட்டிற்கு ஆளாகின்றனர். இந்த சூழ்நிலையில் தொழிலாளர்கள் மத்தியில் கோபம் கொந்தளிக்கும் நிலையிலேயே தொழிற்சங்கங்கள் இந்த வரையறுக்கப்பட்ட நடவடிக்கைகளுக்கு அழைப்புவிடுக்க நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளன. வரிச்சுமையைக் குறைத்தல், பணவீக்க இழப்பீடாக மாதாந்தம் 20,000 ரூபா வழங்குதல், கடனுக்கான வட்டியை நீக்குதல் உள்ளிட்ட கோரிக்கைகள் இன்று முன்வைக்கப்பட்டுள்ளன.

இன்றைய வேலைநிறுத்தம் அறிவிக்கப்பட்ட உடனேயே ஜனாதிபதி விக்கிரமசிங்க கடுமையாக பாய்ந்துள்ளார். திங்கள்கிழமை இரவு, அவர் துறைமுகங்கள், நெடுஞ்சாலைகள், ரயில் மற்றும் விமானப் போக்குவரத்து உட்பட்ட போக்குவரத்து சேவைகளை அத்தியாவசிய பொதுச் சேவைகள் சட்டத்தின் உத்தரவுகளுக்கு கீழ் கொண்டுவந்தார். சுகாதாரம், பெற்றோலியம், மின்சாரம் போன்றவற்றை அவர் கடந்த ஆண்டு முதல் அத்தியாவசிய சேவைகளாக ஏற்கனவே வரையறுத்துள்ளார். இந்த கட்டளை ஒவ்வொரு மாதமும் நீட்டிக்கப்பட்டு வருகின்றது. இந்த உத்தரவுகளின் கீழ், வேலைநிறுத்தங்கள் குற்றமாக்கப்பட்டு தொழிலாளர்கள் தண்டனைக்கு உட்படுத்தப்படுவர்.

பிழை செய்துவிடாதீர்கள்! விக்கிரமசிங்க ஆரம்பித்திருப்பது ஒரு வர்க்கப் போர் ஆகும். பல வாரங்களாக உள்ளுராட்சி மன்றத் தேர்தலை நிறுத்துவதற்காக சூழ்ச்சி செய்து வந்த விக்கிரமசிங்க, கடந்த வாரம் அதை நடத்த விடமாட்டேன் என அறிவித்து மக்களின் வாக்குரிமையைப் பறித்தார். முந்தைய தொழிலாளர் போராட்டங்களில் ஆயுதம் ஏந்திய பொலிசை நிலைநிறுத்திய அரசாங்கம், ஞாயிற்றுக்கிழமை மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) ஏற்பாடு செய்திருந்த போராட்டத்தின் மீது தாக்குதல் நடத்தியதில் ஒருவர் கொல்லப்பட்டார்.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய இராஜபக்ச, மக்கள் எழுச்சிக்கு மத்தியில் நாட்டை விட்டு வெளியேறி பதவி விலகிய போது, ​​ஆளும் வர்க்கத்தின் சதியில் பாராளுமன்ற சூழ்ச்சியின் மூலம் ஜனாதிபதி கதிரையில் அமர்ந்த விக்கிரமசிங்க, அரசியலமைப்பை மீறி தனது எதேச்சதிகாரமான நிறைவேற்று அதிகாரத்தை பயன்படுத்தி, தொழிலாளி வர்க்கம் மற்றும் ஏழைகளின் உரிமைகளை பறித்து வருகின்றார். போராட்டக்காரர்களுக்கு எதிராக பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தைத் பயன்படுத்தும் அவர், கொடூரமான அவசரகால விதிகளைப் பயன்படுத்துவது பற்றி இப்போது பரிசீலிக்கின்றார் என்பதில் சந்தேகமில்லை. விக்கிரமசிங்க இப்போது ஒவ்வொரு போராட்டத்தையும் ஒடுக்க ஆயுதம் தாங்கிய பொலிஸாரையும் இராணுவத்தையும் நிலைநிறுத்தி தாக்குதலை ஆரம்பித்துள்ளார்.

8 பெப்ரவரி 2023 அன்று கொழும்பு கோட்டைக்கு அருகில் அணிதிரட்டப்பட்டிருந்த இலங்கை இராணுவத் துருப்புக்கள் [Photo: Facebook Malainadu]

புறநிலையாக வெளிப்பட்டிருப்பது தொழிலாள வர்க்கத்தின் போராட்டங்கள் அரச அதிகாரத்துடன் வெளிப்படையாக மோதும் நிலைமைகள் ஆகும். தொழிலாள வர்க்கமானது ஏழைகளின் ஆதரவையும் திரட்டிக் கொண்டு, தங்கள் சொந்தப் போராட்டங்களை ஒழுங்கமைக்க வேண்டிய தேவை எழுந்துள்ளது.

தொழிலாளர்களையும் ஏழைகளையும் தாக்க கொடூரமான சர்வாதிகார அதிகாரங்களைப் பயன்படுத்தும் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை உடனடியாக ஒழிக்க வேண்டும் என்று சோ.ச.க. கோருகிறது.

மேலும், அரச ஊழியர்களின் வேலைநிறுத்தங்களை குற்றமாக்க பயன்படுத்தப்படும் அத்தியாவசிய பொது சேவைகள் சட்டம் விலக்கிக்கொள்ளப்பட வேண்டும் என்று சோ.ச.க. கூறுகிறது. பாதுகாப்புப் படையினருக்கு பொலிஸ் அரச அதிகாரங்களை வழங்கும் இழிவான பயங்கரவாதத் தடைச் சட்டம் மற்றும் பொது மக்கள் பாதுகாப்புச் சட்டமும் விலக்கிக்கொள்ளப்பட வேண்டும் என்றும் நாம் கோருகிறோம்.

எதிர்காலத்தில் விக்கிரமசிங்க அரசாங்கம் பொருளாதாரத்தை புத்துயிர் பெறச் செய்து பொதுமக்களின் சுமையை குறைக்கும் என்ற கூற்றுக்கள் வெற்றுப் பேச்சுக்கள் ஆகும். பாரிய வரிகள், அத்தியாவசியப் பொருட்களின் விலை வானளவு உயர்வு, மின்சாரக் கட்டண உயர்வு, தனியார்மயமாக்கல், இலவச மருத்துவம் மற்றும் கல்விக்கான செலவு வெட்டுக்கள், அரச வேலைகளை பாதியாகக் குறைத்தல் போன்றவை, சர்வதேச நாணய நிதியத்தின் கட்டளைகளின் ஒரு பகுதியாகும்.

கடந்த ஆண்டு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 10 சதவீதமாக இருந்த பொதுச் செலவினப் பற்றாக்குறையைக் குறைத்து, அடுத்த ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் உபரியாகக் காட்ட அரசாங்கம் கடமைப்பட்டுள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் சர்வாதிகாரமே இலங்கையில் இயங்கி வருகின்றது. சர்வதேச நாணய நிதியத்தின் 15 கட்டளைகள் ஏற்கனவே நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக கடந்த வாரம் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

உழைக்கும் ஏழை மக்கள் இவ்வாறு வெளிநாட்டுக் கடனை அடைப்பதற்காக எலும்பு வரை சுரண்டப்படுகின்றனர். கடந்த வாரம் கூடிய அமைச்சரவை இவ்வாறு சுரண்டப்படும் பணத்தை, இந்த ஆண்டு 2.6 பில்லியன் டாலர் கடன் தவணை மற்றும் வட்டியை செலுத்துவதற்கு பயன்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டது.

இலங்கையின் பொருளாதார நெருக்கடியானது உலக நெருக்கடியின் ஒரு பகுதியாகும். கொவிட்-19 தொற்றுநோய் மற்றும் ரஷ்யாவிற்கு எதிராக அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஏகாதிபத்திய சக்திகள் தொடுத்துள்ள போரும், ஒவ்வொரு நாட்டிலும் போலவே இலங்கையிலும் நெருக்கடியை உக்கிரமாக்கியுள்ளன.

இந்த கேடுகெட்ட சிக்கன திட்டத்திற்கு எதிராக தொழிலாள வர்க்கம் போராட்டத்தை தங்கள் கையில் எடுக்க வேண்டும். இன்று வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ள தொழிற்சங்கங்களும், எதிர்காலத்தில் வேலைநிறுத்தங்களுக்கு அழைப்பு விடுப்போம் என்று சபதம் செய்யும் தொழிற்சங்கங்களும், தொழிலாளர்களின் போராட்டங்களை மட்டுப்படுத்தவும், பிளவுபடுத்தவும், தவறாக வழிநடத்தவும் முயற்சிக்கின்றன.

ஜே.வி.பி. தலைமையிலான தொழிற்சங்க ஒருங்கிணைப்பு மையம் (TUCC) வேலை நிறுத்தத்தில் பங்குபற்றுகின்றது. ஜே.வி.பி.யின் அனைத்து கூட்டுத்தாபன ஊழியர் சங்கம் மற்றும் சுகாதார வல்லுநர்கள் சங்கம் உட்பட பல தொழிற்சங்கங்கள், டி.யு.சி.சி. இல் அடங்கியுள்ளன. சர்வதேச நாணய நிதியத்தின் சிக்கன வேலைத்திட்டம் விலக்கிக்கொள்ளப்பட வேண்டும் என்று டி.யு.சி.சி.க்கு தலைமை தாங்கும் அனைத்து கூட்டுத்தாபன ஊழியர் சங்கத்தின் தலைவரும் ஜே.வி.பி.யின் பிரதான தலைவருமான வசந்த சமரசிங்க, இல்லையெனில் தொடர் வேலை நிறுத்தம் செய்வதாக அறிவித்துள்ளார். அழுத்தம் கொடுப்பதன் மூலம் அரசாங்கத்தை வீழ்த்த முடியும் என்ற மாயைக்குள் தொழிலாளர்களை சிக்க வைப்பதை நோக்கமாகக் கொண்டதே இந்த அச்சுறுத்தல் ஆகும்.

இந்த தொழிற்சங்கங்கள் இப்போது தொழிலாளர்களிடையே வளரும் எதிர்ப்பின் காரணமாக, சர்வதேச நாணய நிதியத்தின் வெட்டுக்களுக்கு எதிர்ப்பைக் காட்டுகின்றன. ஜே.வி.பி. அதன் சொந்த அரசாங்கத்திற்கு 'மக்கள் ஆணையை' பெறவும், சிக்கனத் திட்டத்தை செயல்படுத்தவும் தேசிய மக்கள் சக்தியுடன் பொதுத் தேர்தலுக்கு பிரச்சாரம் செய்கிறது.

அரச வைத்திய அதிகாரிகள் சங்கம், பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் உட்பட 40 தொழிற்சங்கங்கள் இன்று இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன. அவர்களின் கோரிக்கைகள், அதிக வருமான வரிச்சுமையை குறைக்க வேண்டும் என்பது மட்டுமே. கடந்த வாரம் இந்த தொழிற்சங்க தலைவர்கள் ஜனாதிபதியை சந்தித்து நிவாரணம் கோரி மன்றாடினர். ஜனாதிபதியால் எந்த நிவாரணமும் வழங்க முடியாது எனக் கூறி அவர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர். இந்த தொழிற்சங்கங்கள், பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து 'உதவி' பெற வேண்டும் என்பதை ஏற்றுக்கொண்டவை ஆகும். 

இன்று ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு விடுத்து அறிக்கையை வெளியிடும் சமரசிங்க, விக்கிரமசிங்கவுக்கு ஒரு வெற்று எச்சரிக்கையை விடுப்பதற்கு மட்டுமே கடந்த ஆண்டு மக்கள் எழுச்சிக்கு மத்தியில் நடந்த மாபெரும் வேலைநிறுத்தங்கள் பற்றி குறிப்பிட்டுள்ளார். உண்மை எதுவெனில், இந்த தொழிற்சங்கங்கள் மில்லியன் கணக்கானவர்கள் பங்குகொண்ட இந்த வேலை நிறுத்தங்களை, ஒரு இடைக்கால முதலாளித்துவ அரசாங்கத்தை அமைப்பதற்கான முதலாளித்துவ ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஜே.வி.பி.யினதும் கோரிக்கைகளுக்கு ஆதரவாக திசை திருப்பி, காட்டிக் கொடுத்தன. போலி-இடது முன்னிலை சோசலிசக் கட்சி உட்பட குழுக்கள், அதற்கு முழுமையாக ஆதரவளித்தன. முக்கியமாக இந்தக் காட்டிக்கொடுப்பின் விளைவாகவே விக்கிரமசிங்க ஆட்சிக்கு வர அனுமதிக்கப்பட்டார்.

முதலாளித்துவ முறைமை, அதன் கட்சிகள் மற்றும் அரசுடன் பிணைந்துள்ள இந்த தொழிற்சங்கங்களும் போலி-இடது அமைப்புகளும், முதலாளித்துவ அரசாங்கம் மற்றும் முதலாளிகளின் தாக்குதல்களுக்கு எதிராக தொழிலாள வர்க்கத்தை சுயாதீனமாக அணிதிரட்டுவதற்கு விரோதமாக உள்ளன.

தொழிலாளர்கள் இந்த தொழிற்சங்கங்களில் இருந்து சுயாதீனமாக தங்கள் சமூக மற்றும் ஜனநாயக உரிமைகளுக்கான போராட்டத்தை தங்கள் கைகளில் எடுத்துக்கொள்ளவேண்டும். அதற்காக அவர்கள் ஒவ்வொரு வேலைத் தளத்திலும், தொழிற்சாலைகளிலும், பெருந்தோட்டங்களிலும் மற்றும் அவர்களது சொந்தப் பிரேதேசங்களிலும் அனைத்து முதலாளித்துவக் கட்சிகள் மற்றும் தொழிற்சங்கங்களில் இருந்து சுயாதீனமாக தங்கள் சொந்த நடவடிக்கை குழுக்களை அமைக்க வேண்டும் என்று சோசலிச சமத்துவக் கட்சி கோருகிறது. அதேபோல், கிராமப்புற ஏழைகளும் இதுபோன்று நடவடிக்கை குழுக்களை உருவாக்க செயல்பட வேண்டும்.

நாங்கள் கீழே முன்வைக்கும் தொழிலாளர்கள், இளைஞர்கள் மற்றும் கிராமப்புற ஏழைகளின் அடிப்படை சமூக மற்றும் ஜனநாயக உரிமைகளுக்காகப் பேசும் அடிப்படைக் கோரிக்கைகளைச் சூழ, நடவடிக்கை குழுக்களின் ஊடாக கிராமப்புற மக்களையும் இணைத்துக்கொண்டு தொழிலாள வர்க்கத்தின் ஒரு சுயாதீனமான அரசியல் இயக்கம் உருவாக்கப்பட வேண்டும் என்றும் நாங்கள் கோருகிறோம். 

* சர்வதேச நாணய நிதியத்தின் சிக்கன வெட்டு வேண்டாம்!

* தனியார்மயப்படுத்தலை நிறுத்து!

* வேலை மற்றும் ஊதியத்தை வெட்டாதே!

* தொழிலாளர்கள் மற்றும் தொழில் வல்லுநர்கள் மீது விதிக்கப்பட்டுள்ள உயர் வருமான வரியை விலக்கிக்கொள்!

* மின்சாரம், தண்ணீர் மற்றும் இதர சேவைகளில் கட்டண அதிகரிப்பை விலக்கிக்கொள்!

* உர மானியத்தை மீண்டும் அமல்படுத்து!

* அனைவருக்கும் வாழ்வதற்கு ஏற்ப ஊதியத்துடனான தொழில், வாழ்க்கைச் செலவுக்கேற்ப உயரும் சம்பளம் வேண்டும்!

* மக்களின் வாழ்க்கைக்குத் தேவையான பொருட்களின் உற்பத்தி மற்றும் விநியோகம் மற்றும் பிற சேவைகளை தொழிலாளர்களின் ஜனநாயகக் கட்டுப்பாட்டின் கீழ் வைத்திடு!

* தொழிலாள வர்க்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பெரிய தொழில்கள், தோட்டங்கள், வங்கிகள் உள்ளிட்ட நிதி நிறுவனங்கள் மற்றும் பொருளாதாரத்தின் பிற பகுதிகளை தேசியமயமாக்குங்கள்!

* பில்லியனர்கள் மற்றும் பெருநிறுவனங்கள் குவித்துக்கொண்டுள்ள சொத்துக்களை கைப்பற்று!

* வெளிநாட்டு கடனை செலுத்துவதை நிராகரி! அவற்றுக்கு செலுத்தவுள்ள பணத்தை மக்களுக்கு அத்தியாவசியமான எரிபொருள், மருந்து மற்றும் இதர மருத்துவ உபகரணங்கள் மற்றும் உணவு வழங்குவதற்காகப் பயன்படுத்து!

* கல்வி, சுகாதாரம் உட்பட சேவைகளுக்கு தேவைக்கேற்ப பணம் ஒதுக்கு!

* நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை ஒழித்திடு!

* அத்தியாவசிய சேவைகள் சட்டம், பயங்கரவாதத் தடைச் சட்டம், பொது மக்கள் பாதுகாப்புச் சட்டம் மற்றும் அவசரகாலச் சட்டங்கள் போன்ற அனைத்து அடக்குமுறைச் சட்டங்களையும் இரத்து செய்!

கடந்த ஆண்டு அரசாங்கத்திற்கு எதிரான மக்கள் எழுச்சிக்கு மத்தியில் சோ.ச.க. ஆரம்பித்துவைத்த ஜனநாயகத்துக்கும் சோசலிசத்துக்குமான தொழிலாளர்களதும் கிராமப்புற வெகுஜனங்களதும் மாநாட்டைக் கட்டியெழுப்புவதற்கான பிரச்சாரத்தின் அவசரம், வளர்ந்து வரும் வர்க்கப் போராட்டம் மற்றும் விக்கிரமசிங்க அரசாங்கத்தின் வர்க்கப் போர் தயாரிப்புகளுக்கு மத்தியில் சக்திவாய்ந்த முறையில் வெளிப்பட்டுள்ளது. நாடு முழுவதும் நிறுவப்படும் தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் சுயாதீன நடவடிக்கை குழுக்களில் இருந்து ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளால் இந்த மாநாடு கட்டியெழுப்பப்பட வேண்டும்.

அந்த மாநாடு சோசலிச வேலைத்திட்டத்திற்கு அர்ப்பணித்துக்கொண்ட தொழிலாளர்-விவசாயி அரசாங்கத்திற்கான அடித்தளத்தை அமைக்கும். இது தெற்காசியாவிலும் உலகளவிலும் உள்ள தொழிலாளர்களுடன் இலங்கை தொழிலாள வர்க்கத்தின் ஐக்கியத்தை கட்டியெழுப்புவதன் மூலம் முன்னெடுக்கப்படும் சோசலிசத்திற்கான பரந்த சர்வதேச போராட்டத்தின் ஒரு பகுதியாகும். அரசாங்கங்கள் மற்றும் முதலாளிகளின் தாக்குதல்களுக்கு எதிராக அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் தெற்காசியா உட்பட உலகெங்கிலும் உள்ள தொழிலாளர்களின் வளர்ந்து வரும் போராட்டங்களின் மத்தியில் இத்தகைய ஐக்கியத்திற்கான புறநிலை நிலைமைகள் உருவாக்கப்பட்டுள்ளன.

சோ.ச.க. உடன் இந்தப் போராட்டத்தில் இணையுமாறும், எங்கள் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக மார்ச் 5 அன்று ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணிக்கு நடக்கவுள்ள இணையவழி கூட்டத்தில் பங்கேற்குமாறும். தொழிலாளர்கள், இளைஞர்கள், கிராமப்புற ஏழைகள் மற்றும் தொழில் வல்லுநர்களை நாங்கள் கேட்டுக்கொள்கிறோம். இணையவழி கூட்டத்திற்கு இங்கு பதிவுசெய்துகொள்ளவும்.
https://us06web.zoom.us/meeting/register/tZAod-GhqzsuHNy3m-SRSk_Ha62fm0fi3-99

சர்வதேச நாணய நிதிய சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிராக பெருகிவரும் வெகுஜன எதிர்ப்புக்களுக்கு மத்தியில், இலங்கையின் எதேச்சதிகார ஜனாதிபதி உள்ளூராட்சித் தேர்தல்களை இரத்து செய்கிறார்

உள்ளூராட்சித் தேர்தலை முடக்கும் இலங்கை அரசாங்கத்தின் நடவடிக்கைகளை எதிர்த்திடு! ஜனநாயக உரிமைகளைப் பாதுகாக்க தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்டு! 

ஜனநாயகத்திற்கும் சோசலிசத்திற்குமான இலங்கை தொழிலாளர்களினதும் கிராமப்புற வெகுஜனங்களினதும் மாநாட்டிற்காக!

Loading