உள்ளூராட்சித் தேர்தல்கள் இரத்து செய்யப்படுவதற்கு எதிராக ஞாயிற்றுக்கிழமை நடந்த ஆர்ப்பாட்டத்தின் மீதான பொலிஸ் தாக்குதலை இலங்கை சோ.ச.க. கண்டிக்கிறது

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.

இலங்கையில் சோசலிச சமத்துவக் கட்சி (சோ.ச.க.) ஞாயிறன்று கொழும்பில் 10,000 பேர் வரை கலந்து கொண்ட பலமான வெகுஜன ஆர்ப்பாட்டத்தின் மீது விக்கிரமசிங்க அரசாங்கம் நடத்தி கொடூர பொலிஸ் தாக்குதலை கடுமையாகக் கண்டிக்கிறது. மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) தலைமையிலான தேசிய மக்கள் சக்தி (தே.ம.ச.), மார்ச் 9 நடக்கவேண்டிய உள்ளாட்சித் தேர்தலை அரசாங்கம் ஜனநாயக விரோதமாக இரத்து செய்ததற்கு எதிராக இந்த ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்திருந்தது.

26 பெப்ரவரி 2023 அன்று உள்ளாட்சித் தேர்தலை இரத்து செய்தமைக்கு எதிராக தே.ம.ச. நடத்திய ஆர்ப்பாட்டத்திற்கு எதிராக கொழும்பு நகரசபை பகுதியில் அணிதிரட்டப்பட்டிருந்த கலகத் தடுப்பு பொலிஸ்.

முந்தைய பாய்ச்சல்களைப் போலவே, அரசாங்கம் கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரை பீரங்கியுடன் ஆயுதபாணியாக்கப்பட்ட ஆயிரக்கணக்கான பொலிசாரை நிலைநிறுத்தியது. ஆர்ப்பாட்டக்காரர்கள் விக்டோரியா பூங்காவில் இருந்து லிப்டன் சதுக்கம் வரை பேரணியாகச் சென்ற போது, அங்கு அவர்களை தடுத்த பொலிஸ், கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரை அடித்து கூட்டத்தை கலைத்தது. டசின் கணக்கானவர்கள் காயமடைந்ததுடன் சுமார் 20 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் ஒருவரான உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் தே.ம.ச. வேட்பாளர் நிமல் அமரசிறி படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் நேற்று உயிரிழந்தார்.

விக்கிரமசிங்க அரசாங்கம் வன்முறைத் தாக்குதலுக்கு நன்கு தயாராக இருந்தது. தே.ம.ச. தனது ஆர்ப்பாட்டத்தை அறிவித்த உடனேயே, தே.ம.ச./ஜே.வி.பி. தலைவர் அனுரகுமார திஸாநாயக்க உட்பட 26 நபர்களுக்கு தடை விதிக்கவும் கொழும்பு நகரின் பல பகுதிகளில் போராட்டங்களை நடத்துவதை தடுக்கவும் பொலிசார் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தை அணுகினர். இந்த நபர்கள் தமது போராட்டத்தின் போது ஜனாதிபதி செயலகம் மற்றும் ஏனைய அரச கட்டிடங்களுக்குள் பிரவேசிக்க திட்டமிட்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

கொழும்பில் உள்ள ஜனாதிபதி செயலகம், ஜனாதிபதி மாளிகை, நிதியமைச்சு மற்றும் காலி முகத்திடல் மைதானத்திற்குள் பிரவேசிக்கவோ அல்லது பயணிகள் மற்றும் வாகனப் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தவோ, பொது மற்றும் தனியார் சொத்துக்களுக்கு சேதம் விளைவிப்பதோ அல்லது வன்முறையில் ஈடுபடவோ கூடாது என திஸாநாயக்க உள்ளிட்டோருக்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

வெகுஜனப் போராட்டங்களைத் தடைசெய்யும் நீதிமன்ற உத்தரவுகளைப் பெறுவதற்கு போலியான குற்றச்சாட்டுகளைப் பயன்படுத்துவது பொலிசின் பொதுவான வழக்கம் ஆகும். பின்னர் ஆர்ப்பாட்டங்களை கலைக்கவும் வன்முறை பொலிஸ் தாக்குதல்களை நியாயப்படுத்தவும் இந்த நீதிமன்ற உத்தரவுகள் பயன்படுத்தப்படுகின்றன.

ஞாயிற்றுக்கிழமை நடந்த பொலிஸ் வன்முறை தாக்குதல், விக்கிரமசிங்க அரசாங்கமானது அரச நிறுவனங்கள் மறுசீரமைப்பு மற்றும் தனியார்மயமாக்கல், வேலை மற்றும் ஊதிய வெட்டுக்கள், அதிக வருமான வரிகள் மற்றும் சமூக மானியங்களை வெட்டுதலையும் உள்ளடக்கிய சர்வதேச நாணய நிதியம் கட்டளையிட்ட 2023 வரவு செலவுத் திட்டத்திற்கு எதிரான எந்தவொரு எதிர்ப்பையும் பொறுத்துக்கொள்ளாது என்ற உண்மையை மேலும் அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. உழைக்கும் மக்களின் சமூக நிலையின் மீதான அவரது தாக்குதலுக்கு எதிர்ப்பு அதிகரித்து வரும் நிலையில் உள்ளூராட்சி தேர்தலை இரத்து செய்யுமாறு விக்கிரமசிங்க கோரினார்.

நடந்த ஆர்ப்பாட்டத்தின் மீது பொலிஸ் நடத்திய கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரை தாக்குதல்களில் இருந்து தப்பிக்க முயற்சிக்கும் தேசிய மக்கள் சக்தி ஆதரவாளர்கள் [AP Photo/Eranga Jayawardena]

ஜே.வி.பி./தே.ம.ச. மற்றும் அவர்களின் முதலாளித்துவ சார்பு அரசியல் செயல்திட்டத்துடன் கொள்கைரீதியான மற்றும் நீண்டகால வேறுபாடுகள் இருந்தபோதிலும், ஞாயிற்றுக்கிழமை ஆர்ப்பாட்டங்கள் மீதான பொலிஸ் ஒடுக்குமுறையை சோசலிச சமத்துவக் கட்சி கண்டிக்கிறது.

விக்கிரமசிங்க-ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி (ஸ்ரீ.ல.பொ.ஜ.மு.) அரசாங்கத்துடன் ஜே.வி.பி./தே.ம.ச. கொண்டிருக்கும் வேறுபாடுகள் முற்றிலும் தந்திரோபாயமானவை மட்டுமே. விக்கிரமசிங்க ஆட்சியைப் போலவே, அவர்களும் சர்வதேச நாணய நிதியத்தின் திட்டத்திற்கு முழுமையாக அர்ப்பணிப்புடன் உள்ளனர். உள்ளூராட்சித் தேர்தல்கள் இரத்து செய்யப்படுவதை அவர்கள் எதிர்க்கும் அதே வேளை, ஜனநாயக உரிமைகளின் பாதுகாவலர்களாக தங்களைக் காட்டிக்கொள்வது போலியானதாகும். ஜே.வி.பி. முன்பு ஜனநாயக உரிமைகளை ஈவிரக்கமின்றி நசுக்கிய ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி (ஸ்ரீ.ல.சு.க.) மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கங்களின் பங்காளிகளாகவோ அல்லது ஆதரவாளர்களாகவோ இருந்துள்ளது.

ஜே.வி.பி./தே.ம.ச. அரசாங்கத்திற்கு எதிராக அதிகரித்து வரும் கோபத்தை சுரண்டிக்கொண்டு, உள்ளூராட்சி தேர்தலில் ஆதரவை வென்று பொதுத் தேர்தலுக்கு அழுத்தம் கொடுக்க முயல்கின்றது. விக்கிரமசிங்க அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்தின் கட்டளைகளை அமுல்படுத்த இலாயக்கற்றது என கவலை கொண்டுள்ள தே.ம.ச., தமக்கு 'மக்கள் ஆணை' இருப்பதாக கூறி, அதன் சொந்த அரசாங்கத்தை அமைத்து அதே வேலைத்திட்டத்தை முன்னெடுக்க முடியும் என நம்புகிறது.

ஜனநாயக உரிமைகளின் பாதுகாவலர்களாக காட்டிக்கொள்கின்ற ஜே.வி.பி., மேற்கு ஏகாதிபத்திய சக்திகளிடம் முறையிடுவதாக கூறியது. கடந்த புதனன்று, அதன் பிரச்சார செயலாளர் விஜித ஹேரத், உள்ளூராட்சித் தேர்தலை விக்கிரமசிங்க இரத்து செய்தது பற்றி, கட்சி 'ஐரோப்பிய ஒன்றியம், ஐக்கிய நாடுகள் மற்றும் மனித உரிமைகள் அமைப்புகளின் இராஜதந்திரிகளுக்கு விளக்கமளிக்கும்' என அறிவித்தார்.

வேறு வார்த்தைகளில் கூறுவதானால், உக்ரேனில் ரஷ்யாவிற்கு எதிராக போர் தொடுத்துள்ள மற்றும் மத்திய கிழக்கு மற்றும் ஆப்கானிஸ்தானில் மில்லியன் கணக்கானவர்களைக் கொன்ற அதே சக்திகள் இலங்கையில் ஜனநாயகத்தை 'பாதுகாக்கும்' என்ற மாயைகளை ஜே.வி.பி. ஊக்குவிக்கின்றது.

விக்கிரமசிங்க ஆட்சியின் ஜனநாயக விரோத நடவடிக்கைகள், 'சர்வதேச நாணய நிதியத்தால் கட்டளையிடப்பட்ட அரசாங்கத்தின் கொடூரமான சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிரான எதிர்ப்பை நசுக்குவதற்கான தயாரிப்பில், ஜனநாயக உரிமைகள் மீது மேற்கொள்ளப்படும் பரந்த தாக்குதல்களின் ஒரு பகுதியாகும்' என்று பெப்ரவரி 20 அன்று சோசலிச சமத்துவக் கட்சி வெளியிட்ட அறிக்கை விளக்கியது.

விக்கிரமசிங்க-ஸ்ரீ.ல.பொ.ஜ.மு. ஆட்சியானது, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய இராஜபக்ஷவையும் அவரது அரசாங்கத்தையும் வெளியேற்றிய கடந்த ஆண்டு போராட்டங்களைப் போன்று, தொழிலாள வர்க்கத்தின் எழுச்சி பெறும் விரோதம் வெகுஜன எழுச்சியாக வளர்ச்சியடையும் என்ற அச்சத்தால் பீடிக்கப்பட்டுள்ளது.

திங்கட்கிழமை இரவு, விக்கிரமசிங்க ஒரு அசாதாரண வர்த்தமானியை வெளியிட்டு, பரந்த அளவிலான துறைகளை 'அத்தியாவசிய சேவைகளாக' அறிவித்தார். பெட்ரோலியம், துறைமுகங்கள், மின்சாரம், வங்கிகள், சுகாதாரம் மற்றும் ஏனைய பிரதான துறைகளில் உள்ள தொழிற்சங்கங்களால் மார்ச் 1 அன்று நடத்தவிருந்த ஒரு நாள் பொது வேலைநிறுத்தத்தை நிறுத்துவதற்கான அவநம்பிக்கையான முயற்சியே இதுவாகும்.

ஞாயிறு ஆர்ப்பாட்டத்தின் மீதான அரசாங்கத்தின் வன்முறை ஒடுக்குமுறை அதன் 'அத்தியாவசிய சேவை' வேலைநிறுத்தத் தடையும் தொழிலாள வர்க்கத்திற்கு ஒரு எச்சரிக்கையாகும். உழைக்கும் வெகுஜனங்களுக்கு எதிராக ஒரு வர்க்கப் போரை கட்டவிழ்த்து வரும் இலங்கையின் ஆளும் உயரடுக்கு, ஜனநாயக உரிமைகள் மீதான அதன் தாக்குதலை எந்த வகையிலும் நிறுத்தப் போவதில்லை.

தொழிலாள வர்க்கம் தனது சொந்த நலன்களுக்காக அரசியல் ரீதியாக தயார் செய்து போராட வேண்டும். இதற்கு விக்கிரமசிங்க உள்ளூராட்சித் தேர்தல்களை இரத்து செய்ததற்கு எதிராக மட்டுமன்றி, அதன் அனைத்து அடக்குமுறை நடவடிக்கைகளுக்கும் எதிராக தொழிலாள வர்க்கம் சுயாதீனமாக அணிதிரட்டப்படுவது அவசியமாகும். அடிப்படை ஜனநாயக உரிமைகளுக்கான போராட்டம் சமூக உரிமைகளுக்கான போராட்டத்துடன் பிரிக்க முடியாத வகையில் பிணைந்துள்ளது.

விக்கிரமசிங்க அரசாங்கம் உள்ளூராட்சித் தேர்தலை இரத்து செய்ததற்கு எதிராக 26 பெப்ரவரி 2023 அன்று கொழும்பில் தே.ம.ச. நடத்திய ஆர்ப்பாட்டத்தின் ஒரு பகுதி.

தொழிலாள வர்க்கத்தின் ஒரு சுயாதீன இயக்கத்தின் வளர்ச்சிக்கு தொழிற்சங்கங்கள் பிரதான தடையாக உள்ளன. கடந்த ஆண்டு அரசாங்க எதிர்ப்பு வெகுஜன எழுச்சியின் போது செய்ததைப் போலவே, தொழிற்சங்கங்கள் சிக்கன திட்ட நிரல் தொடர்பாக விக்கிரமசிங்க அரசாங்கத்துடனும் முதலாளித்துவ வர்க்கத்துடனும் ஒரு அரசியல் மற்றும் தொழில்சார் எதிர்ப்பைத் தடுக்க தீவிரமாக வேலை செய்கின்றன.

மார்ச் 1 அழைக்கப்பட்ட தேசிய வேலைநிறுத்தம் ஒரு நாளுக்கு மட்டுப்படுத்தப்பட்டதுடன் பிரதானமாக அதிக வருமான வரி விகிதங்களை எதிர்ப்பதற்காக வரையறுக்கப்பட்டது. அது தொழிலாள வர்க்கத்தின் அனைத்துப் பிரிவினரையும் உள்ளடக்கவில்லை. அதன் நோக்கம், அரசாங்கத்தின் சமூகத் தாக்குதல்களுக்கு எதிராக நாடு தழுவிய போராட்டத்தை கட்டுப்படுத்துவதும், அதே சர்வதேச நாணய நிதியத்தின் திட்டத்தை அமுல்படுத்துவதில் உறுதியாக உள்ள ஐக்கிய மக்கள் சக்தி (ஐ.ம.ச), ஜே.வி.பி./தே.ம.ச. போன்ற பாராளுமன்ற எதிர்க் கட்சிகளுடன் போராட்டங்களை அரசியல் ரீதியாக கட்டி வைப்பதும் ஆகும்.

கடந்த ஆண்டு அரசாங்க எதிர்ப்பு வெகுஜன எழுச்சிக்குப் பின்னர் வெளியிடப்பட்ட சோசலிச சமத்துவக் கட்சியின் பல அறிக்கைகளில் விளக்கியுள்ளது போல், தொழிலாளர்கள் பிரச்சினைகளை தங்கள் கைகளில் எடுத்துக் கொள்ள வேண்டும். தங்களின் சமூக மற்றும் ஜனநாயக உரிமைகளுக்காகப் போராட, தொழிலாளர்கள் ஒவ்வொரு தொழிற்சாலையிலும், வேலைத் தளத்திலும், பெருந்தோட்டங்களிலும் மற்றும் நகர்ப்புறங்களிலும் கிராமப்புறங்களிலும், முதலாளித்துவக் கட்சிகள் மற்றும் தொழிற்சங்கங்களிலிருந்து சுயாதீனமாக, நடவடிக்கைக் குழுக்களை அமைக்க வேண்டும்.

சர்வதேச அளவில் சோசலிசத்திற்கான போராட்டத்தின் ஒரு பகுதியாக சோசலிசக் கொள்கைகளுக்கு அர்ப்பணித்துக்கொண்ட தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் அரசாங்கமொன்றுக்கு அடித்தளம் அமைப்பதற்காக தீவு முழுவதும் உள்ள நடவடிக்கைக் குழுக்களில் இருந்து ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளின் அடிப்படையில் ஜனநாயகத்துக்கும் சோசலிசத்துக்குமான தொழிலாளர்களதும் கிராமப்புற வெகுஜனங்களதும் மாநாட்டைக் கட்டியெழுப்ப சோசலிச சமத்துவக் கட்சி போராடுகிறது.

இந்தப் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக, மார்ச் 5, ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணிக்கு சோசலிச சமத்துவக் கட்சி இணையவழி பொதுக் கூட்டமொன்றை நடத்துகிறது. தொழிலாளர்கள், இளைஞர்கள், கிராமப்புற உழைப்பாளிகள் மற்றும் தொழில் வல்லுநர்கள் அனைவரையும் அரசியல் வேலைத்திட்டம் மற்றும் முன்னோக்கு குறித்த இந்த முக்கியமான கலந்துரையாடலில் பங்குகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம். கூட்டத்திற்கு இன்றே பதிவு செய்துகொள்ளுங்கள்.

இலங்கை சுகாதார சேவைகள் 'முழுமையான உடைவை நோக்கி செல்கின்றன'

சர்வதேச நாணய நிதிய சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிராக பெருகிவரும் வெகுஜன எதிர்ப்புக்களுக்கு மத்தியில், இலங்கையின் எதேச்சதிகார ஜனாதிபதி உள்ளூராட்சித் தேர்தல்களை இரத்து செய்கிறார்

இந்த ஞாயிற்றுக்கிழமை சோ.ச.க./IYSSE (இலங்கை) நடத்தும் இணையவழி பொதுக்கூட்டம்: உள்ளாட்சித் தேர்தலை நிறுத்தும் ஜனாதிபதியின் நடவடிக்கையை எதிர்த்திடு! ஜனநாயக மற்றும் சமூக உரிமைகளைப் பாதுகாக்க தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்டு!

Loading