மக்ரோனின் சீர்திருத்தங்கள் வேண்டாம்! தொழிலாளர்கள் போருக்கு விலை கொடுக்கக் கூடாது!

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம் 

இன்று, மில்லியன் கணக்கான தொழிலாளர்கள் இமானுவல் மக்ரோனின் ஓய்வூதிய சீர்திருத்தத்திற்கு எதிராக பிரான்சில் அணிதிரண்டுள்ளனர். பிரெஞ்சு மக்களில் 60 சதவிகிதத்தினர் மக்ரோன் மீது ஒரு தோல்வியை ஏற்படுத்துவதற்காக பொருளாதாரத்தை முடக்குமாறு தொழிலாளர்களுக்கு அழைப்பு விடுக்கும் அதேவேளையில், பெப்ரவரி பள்ளி விடுமுறை நாட்களில் தொழிற்சங்க அதிகாரத்துவங்களால் ஒழுங்கமைக்கப்பட்ட வேலைநிறுத்தங்களுக்கான இடைநிறுத்தம் முடிவுக்கு வந்துள்ளது. உலோகத் தொழிற்துறை மற்றும் உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் வேலைநிறுத்தங்களுக்கும், எரிசக்தி மற்றும் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகளில் புதுப்பிக்கத்தக்க வேலைநிறுத்தங்களுக்கும் அழைப்புகள் பரவலாகி வருகின்றன.

தொழிலாள வர்க்கத்தின் ஒவ்வொரு மாபெரும் வரலாற்றுப் போராட்டத்திலும், யதார்த்தமும் சூழ்நிலைமையின் தன்மையும் மிகவும் தெளிவாக வெளிப்படும் தருணங்கள் உள்ளன. பிரான்சில் குறைந்தபட்ச ஓய்வு பெறும் வயதை இரண்டு ஆண்டுகள் உயர்த்தியிருப்பது மிகவும் பரந்த சமூக கோபத்தை பிரதிபலிக்கிறது. பொருளாதாரத்தைத் முடக்குவதற்கான வெகுஜனங்களின் அழைப்பானது அதாவது பொது வேலைநிறுத்தத்திற்கான அழைப்பானது ஒருபுறம் தொழிலாள வர்க்கத்திற்கும் மறுபுறம் முதலாளித்துவ அரசுகள் மற்றும் நிதிய தன்னலக்குழுக்களுக்கும் இடையே, ஐரோப்பிய மற்றும் உலக அளவில் சூழ்ந்துள்ள ஒரு புரட்சிகர மோதலின் அடையாள முன்னறிவிப்பாகும்.

நேட்டோ மற்றும் ரஷ்யா அரசாங்கங்கள், நாஜி ஆட்சியின் வீழ்ச்சிக்குப் பின்னர் ஐரோப்பாவில் மிகப்பெரிய போரை நடத்தி வரும் நிலையில், ஒரு சர்வதேச போராட்ட அலை ஐரோப்பாவை உலுக்கி வருகிறது. மில்லியன் கணக்கான தொழிலாளர்கள் ஜேர்மனியிலும் இங்கிலாந்திலும் ஊதியங்களுக்காகவும் பணவீக்கத்திற்கு எதிராகவும் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர், அல்லது ஸ்பெயினில் பொது மருத்துவமனையைப் பாதுகாக்க ஆர்ப்பாட்ட அணிவகுப்பு செய்து வருகின்றனர். இத்தாலி, பெல்ஜியம் மற்றும் கிரேக்கத்தில் இந்த வாரம் தேசிய இரயில் வேலைநிறுத்தங்கள் வெடித்திருக்கின்றன. போர்த்துக்கலில், ஒரு ஆசிரியர் இயக்கத்தை மையமாகக் கொண்ட ஒரு சக்திவாய்ந்த வேலைநிறுத்தம் நூறாயிரக்கணக்கான தொழிலாளர்களை அணிதிரட்டுகிறது.

புறநிலை ரீதியாக ஒரு புரட்சிகர சூழ்நிலைமை உருவாகி வருகிறது. இது தொழிற்சங்கப் போராட்டங்களின் தொடர் அல்ல, அதன் முடிவு ஒவ்வொன்றும் தேசிய மண்ணில் முதலாளித்துவ அரசு மற்றும் தொழிற்சங்க அதிகாரத்துவங்களுக்கு இடையே பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாக இருக்கும். ஒரே ஒரு சர்வதேச அரசியல் போராட்டம் ஐரோப்பா முழுவதையும் கடக்கிறது: அதாவது உலக முதலாளித்துவத்தின் பணவீக்க நெருக்கடி, சிக்கன நடவடிக்கைகள், சுகாதார நெருக்கடி, இராணுவவாதம் மற்றும் ஒடுக்குமுறை ஆகியவற்றிற்கு எதிராக தொழிலாளர்கள் அணிதிரள்கின்றனர். அவர்கள் உடனடியாக ஐரோப்பாவின் அனைத்து அரசாங்கங்களின் வன்முறையான பொலிஸ் ஒடுக்குமுறையை எதிர்கொள்கின்றனர்.

நெருக்கடியில் இருக்கும் ஒரு முதலாளித்துவ அமைப்புமுறையின் அபத்தத்தை ஒரு புள்ளிவிவரம் சுருக்கமாகக் கூறுகிறது: பிரெஞ்சு மக்களின் ஓய்வூதியங்களில் இருந்து மக்ரோன் பறிக்க விரும்பும் 13 பில்லியன் யூரோக்கள், ஒரு பில்லியனரான பெர்னார்ட் அர்னால்ட்டின் வருடாந்திர செல்வ அதிகரிப்பில் மூன்றில் ஒரு பங்கிற்கும் குறைவானதாகும்.

முதலாளித்துவ வர்க்கம் தனது தலையை இழந்து, அதன் அருவருக்கத்தக்க செல்வ போதையில், பிடிவாதமாக தற்கொலை அரசியலில் மூழ்கிக் கொண்டிருக்கிறது. சமூக சமத்துவமின்மையின் தீவிரம் இந்த கோரமான உச்சங்களை அடைகிறது. ஆனால் வாஷிங்டன் மற்றும் ஐரோப்பிய தலைநகரங்களிலுள்ள மந்திரவாதிகளின் பயிற்சியாளர்கள் ஐரோப்பாவையும் உலகையும் மூழ்கடிக்க அச்சுறுத்தும் அணுஆயுத சக்திகளுக்கு இடையிலான ஒரு போரை தீவிரப்படுத்த நூற்றுக்கணக்கான பில்லியன்களைக் கண்டுபிடிப்பதற்காக சமூக செலவினங்களைக் குறைத்து வருகின்றனர்.

இது இன்று அணிதிரளும் பிரான்ஸ், ஐரோப்பா மற்றும் உலகெங்கிலுமுள்ள வெகுஜன தொழிலாளர்களுக்கு ஒரு அரசியல் மற்றும் வரலாற்று சவாலை முன்வைக்கிறது. நிதிய தன்னலக்குழுவின் பொருளாதார சக்தியை அழிக்காமல் மனிதகுலத்தின் பெரும்பான்மையினரின் நலன்களுக்காக இந்தப் பல சர்வதேச நெருக்கடிகளைத் தீர்ப்பது சாத்தியமற்றது. இதற்கு தொழிலாளர்களுக்கு மிகவும் ஆழமான அரசியல் மறுநோக்குநிலை தேவைப்படுகிறது.

ஐரோப்பாவிலும் சர்வதேச அளவிலும் நடந்து வரும் போராட்டங்கள் தவிர்க்கவியலாமல் பொருளாதாரத்தின் முடக்கத்தை நோக்கிய பாதையை எடுக்கின்றன. ஆனால் பொருளாதாரம் முடக்கப்பட்டு, தொழிலாள வர்க்கத்தின் மகத்தான சக்தி நிரூபிக்கப்பட்டவுடன் என்ன செய்வது? தொழிலாளர்களின் அதிகாரத்திற்கான போராட்டம், நிதிய தன்னலக்குழுவை பறிமுதல் செய்தல், மற்றும் சோசலிசப் புரட்சி ஆகியவற்றைத் தவிர வேறு எந்த முற்போக்கான தீர்வும் இருக்காது—அதாவது, தொழிலாளர்கள் சர்வதேச பொருளாதார மற்றும் தொழில்துறை கருவியின் கட்டுப்பாட்டைக் கைப்பற்றி, சமூகத் தேவைகளைப் பூர்த்தி செய்ய அதைப் பயன்படுத்த வேண்டும்.

தொழிற்சங்கத் தலைவர்கள் தொழிலாளர்களின் முதுகுக்குப் பின்னால் பிற்போக்கு முதலாளித்துவ அரசியல்வாதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர், அவர்கள் சீர்திருத்தத்தை நிறைவேற்றுவதற்கான தங்கள் விருப்பத்தை அறிவிக்கின்றனர். CFDT தொழிற்சங்கத்தின் லோரன்ட் பெர்ஜர் வலதுசாரி பாராளுமன்ற உறுப்பினர்களான ஒரெலியன் பிராடியை சந்திக்கும் அதே வேளையில், CGT தொழிற்சங்கத்தின் பிலிப் மார்டினெஸ் பிரதம மந்திரி எலிசபெத் போர்னுடன் பரிமாறிக் கொள்ளும் 'மரியாதை நிமித்தமான அழைப்புகளை' செய்கிறார். அதே நேரத்தில் CGT தொழிற்சங்க எந்திரம் உக்ரேனில் நேட்டோவிற்கு ஆதரவான பிரகடனங்களையும் ஏற்றுக்கொண்டுள்ளது.

உண்மையில், தொழிற்சங்க அதிகாரத்துவங்கள் மற்றும் மக்ரோனுடனான அவர்களின் உத்தியோகபூர்வ 'சமூக உரையாடலின்' பொறிமுறைகள் மூலம் தொழிலாளர்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்கான எந்தவொரு சாத்தியமும் தீர்ந்துவிட்டது. மக்ரோனுடன் பேச்சுவார்த்தை நடத்தவோ அல்லது அவரிடமிருந்து முற்போக்கான 'சீர்திருத்தத்தை' பெறவோ எதுவும் இல்லை, அவ்வாறு செய்ய முயற்சிப்பவர்கள் தவிர்க்க முடியாமல் வெகுஜனங்களைக் காட்டிக் கொடுப்பார்கள். முதலாளித்துவ பாராளுமன்ற உறுப்பினர்கள், ஆர்ப்பாட்டக்காரர்களை ஒடுக்கும் கலகக் காவல்துறை மற்றும் வளைந்து கொடுக்கும் தொழிற்சங்க அதிகாரத்துவத்தினரின் கூட்டு நடவடிக்கையின் மூலம், மக்களின் வாழ்க்கைத் தரங்களில் ஒரு நீடித்த குறைப்பை திணிப்பதே அதன் நோக்கமாகும்.

நேட்டோ ரஷ்யா மீது போர் தொடுத்துக்கொண்டிருக்கும் போது, மக்ரோன் இராணுவத்திற்காக செலவிட விரும்பும் 413 பில்லியன் யூரோக்களை கண்டுபிடிப்பதற்கு, மக்ரோனுக்கு இருக்கும் ஒரே வழி இதுதான்.

சிக்கன நடவடிக்கைகள், போர் மற்றும் முதலாளித்துவத்தை எதிர்த்துப் போராடுவதற்கு தொழிற்சங்க எந்திரங்களில் இருந்து சுயாதீனமாக தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்டுவதும் சர்வதேசரீதியாக ஒழுங்கமைப்பதும் தீர்க்கமான கேள்வியாகும். இதற்காக, நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவும் (ICFI) மற்றும் அதன் பிரெஞ்சுப் பிரிவான சோசலிச சமத்துவக் கட்சியும் (Parti de l’égalité socialiste - PES), வேலையிடங்கள், உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் மற்றும் தொழிலாள வர்க்க சுற்றுப்புறங்களில் சாமானிய நடவடிக்கை குழுக்களை கட்டியெழுப்ப அழைப்பு விடுக்கின்றன.

போராட்டத்தில் தொழிலாளர்களை அணிதிரட்டுவதற்கும், ஊழல் எந்திரங்களின் செல்வாக்கிலிருந்து அதை அகற்றுவதற்கும் இந்த அமைப்புக்களை கட்டியெழுப்புவது, ஒரு அரசியல் போராட்டத்திலிருந்து பிரிக்க முடியாததாகும். தொழிற்சங்க அதிகாரத்துவங்களின் முதலாளித்துவ-சார்புக் கொள்கைகள் மற்றும் அடிபணியா பிரான்ஸ் (LFI), புதிய முதலாளித்துவ எதிர்ப்பு (NPA) அல்லது Révolution Permanente (RP) போன்ற போலி இடது அமைப்புகளின் தலைமைகளிலுள்ள அவற்றின் அரசியல் பாதுகாவலர்கள் மதிப்பிழந்தாக வேண்டும். தொழிலாள வர்க்கமானது சூழ்நிலைமையின் புரட்சிகரத் தன்மையையும், தொழிலாளர்கள் ஒரு மாற்றத்திற்கான தேவையையும் மற்றும் சமூகத்தை சோசலிசமாக மாற்றுவதைக் குறித்தும் நனவால் நிரப்பப்பட வேண்டும்.

இதற்கு போலி-இடதுகளுக்கு எதிரான சமரசமற்ற அரசியல் போராட்டம் தேவைப்படுகிறது. Révolution permanente குழுவின் தலைவரான ஜுவான் சிங்கோ, ட்ரொட்ஸ்கிசத்துடன் முறித்துக் கொண்ட பல்வேறு குட்டி-முதலாளித்துவ துரோகிகளின் வழித்தோன்றல்களின் பெரும் எண்ணிக்கையிலான அமைப்புக்களை உயிர்ப்பிக்கும் முன்னோக்கை மிகத் தெளிவாக முன்வைக்கிறார். வார இறுதியில் ஒரு நேர்காணலில், 'நிலைமை புரட்சிகரமானது அல்ல, நான் அதை ஒப்புக்கொள்கிறேன்' என்று அவர் வலியுறுத்தினார்.

அதனது முன்னோக்கு முதலாளித்துவத்திற்குள் ஜனநாயகத்திற்காக போராடுவதாகும். இது 'பாராளுமன்றம் மற்றும் நிர்வாகத்துறை, ஒரே மன்றத்தை உருவாக்குவது போன்ற அத்தகைய ஜனநாயக வேலைத்திட்டத்தின் கூறுகளை உருவாக்க' முன்மொழிகிறது. 'முதலாளித்துவ பிரதிநிதித்துவ ஜனநாயகத்தை பரிசோதிக்க வெகுஜன இயக்கத்திற்கு உதவுவதே அதன் நோக்கம்' என்றும், … சுய-அமைப்பு பற்றிய நனவை வளர்ப்பது, என் பார்வையில் இது மட்டுமே சாத்தியமான ஜனநாயக முன்னோக்கு' என்று அவர் கூறுகிறார்.

1789 இல் நிலப்பிரபுத்துவ எஜமான் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தாதது போல, 2023 இல், முதலாளித்துவ வர்க்கம் இனி மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தவில்லை என்பது மறுக்க முடியாதது. ஜனநாயகத்திற்கான போராட்டமானது நிதிய தன்னலக்குழுவின் செல்வம் பறிமுதல் செய்வதற்கும் சோசலிசத்தை கட்டியெழுப்புவதற்கும் ஒரு புரட்சிகர போராட்டத்தில் இருந்து பிரிக்க முடியாததாகும். இந்த வழியில் மட்டுமே வாழ்க்கைத் தரங்கள், ஓய்வூதியங்கள், கண்ணியமான ஊதியங்கள் மற்றும் தரமான பொது சேவைகளை உருவாக்க தேவையான பில்லியன் கணக்கான யூரோக்களை நாம் பெற முடியும்.

1991ல் சோவியத் ஒன்றியத்தை ஸ்ராலினிசம் கலைத்ததானது, ரஷ்யாவில் லெனின் மற்றும் ட்ரொட்ஸ்கி தலைமையில் சோசலிசத்திற்காக அக்டோபர் 1917 புரட்சியால் திறக்கப்பட்ட மார்க்சிசத்துக்கான போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவரவில்லை. உலகப் போர், பாசிசத்திற்கு எதிரானதும் மற்றும் புரட்சிகர சர்வதேசியவாதத்திற்கான போராட்டம் என அவர்கள் எழுப்பிய அனைத்து இன்றியமையாத எரியும் கேள்விகள் தற்போதைய நிகழ்வுகளை கொண்டவையாக இருக்கின்றன. இந்த போராட்ட மரபைத் தொடரும் திறன் கொண்ட ஒரு புரட்சிகர முன்னணிப் படையை, தொழிலாள வர்க்கத்தில் உருவாக்குவதே தீர்க்கமான பணியாகும்.

இந்த முன்னோக்குடன் உடன்படும் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள், சோசலிச சமத்துவக் கட்சி (PES) மற்றும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு, மற்றும் அதன் சர்வதேச வெளியீடான உலக சோசலிச வலைத் தளத்தை ஆதரிக்குமாறும், சோசலிச சமத்துவக் கட்சி செயற்பாட்டாளர்களை அவர்களது பணியிடங்களிலோ அல்லது கல்விகற்கும் இடங்களிலோ பேசுவதற்கு அழைக்குமாறும் சோசலிச சமத்துவக் கட்சி அழைப்பு விடுக்கின்றது.

Loading