சோ.ச.க.  (இலங்கை)  யாழ்ப்பாண மாவட்டத்தில் திறந்தவெளி தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தை நடத்தியது

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.

இலங்கை சோசலிச சமத்துவக் கட்சி (சோ.ச.க.), சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக இளைஞர் மற்றும் மாணவர் (IYSSE) அமைப்புடன் இணைந்து, பெப்ரவரி 19 அன்று,  காரைநகர் ஊரி கிராமத்தில் ஒரு திறந்தவெளிக் கூட்டத்தை நடத்தியது. சோசலிச சமத்துவக் கட்சி உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்களுடன் மீனவர்கள், விவசாயிகள், தினக்கூலித் தொழிலாளர்கள், இளைஞர்கள் மற்றும் வீட்டுப்பெண்கள் உட்பட சுமார் 60 பேர் கூட்டத்தில் கலந்து கொண்டிருந்தனர். 

19 பெப்ரவரி 2023 அன்று யாழ்ப்பாண மாவட்டத்தில் காரைநகர் ஊரி கிராமத்தில் சோசலிச சமத்துவக் கட்சியின் தேர்தல் கூட்டம்

சோ.ச.க.,  காரைநகர் பிரதேச சபைக்கு 13 வேட்பாளர்களை நிறுத்தியிருந்ததோடு, கொழும்பில் கொலன்னாவ நகர சபை மற்றும் நுவரெலியாவில் மஸ்கெலியா பிரதேச சபை ஆகிய உள்ளூராட்சி மன்றங்களுக்கும் தனது வேட்பாளர்களை நிறுத்தியிருந்தது. 

பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக, ஆட்சியில் இருந்த கொழும்பு அரசாங்கங்களால் நடத்தப்பட்ட 26 ஆண்டுகால இனவாத யுத்தத்தின் போது பெரிதும் சேதமடைந்த வட மாகாணத்தில், யாழ்ப்பாணக் குடாநாட்டுடன் ஒரு தரைப்பாதையால் காரைநகர் தீவு இணைக்கப்பட்டுள்ளது.

கூட்டத்திற்கு முன்னதாக, சோ.ச.க./ஐ.வை.எஸ்.எஸ்.இ. உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் காரைநகர் மற்றும் அதைச் சூழ வாழும் தொழிலாளர்கள், விவசாயிகள், இளைஞர்கள் மற்றும் மீனவர்கள் மத்தியில் பிரச்சாரம் செய்தனர். தொழிலாளர்கள் மற்றும் கிராமப்புற ஏழைகள், தங்கள் ஜனநாய மற்றும் சமூக உரிமைகளைப் பாதுகாப்பதற்குப் போராடுவதற்காக தங்கள் வேலைத்தளங்கள், தொழிற்சாலைகள் மற்றும் சுற்றுப்புறங்களில் தங்களுடைய சொந்த சுயாதீன நடவடிக்கைக் குழுக்களைக் கட்டியெழுப்புமாறு சோ.ச.க. விடுத்துள்ள அழைப்பு சம்பந்தமாக அவர்கள் விளக்கினர். 

சோசலிச சமத்துவக் கட்சியின் தேர்தல் அறிவிப்புத் துண்டுப்பிரசுரத்தின் ஆயிரக்கணக்கான பிரதிகள் பிரச்சாரகர்களால் விநியோகிக்கப்பட்டன. அவர்கள் பெருகிவரும் உலகப் போரின் அபாயத்திற்கு எதிராக தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களின் சர்வதேச போர் எதிர்ப்பு இயக்கத்தை கட்டியெழுப்புவதற்கான நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் போராட்டத்தின் முக்கியத்துவத்தையும் விளக்கினர். இந்த பிரச்சாரம் தொழிலாளர்கள், மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் கணிசமான ஆதரவை ஈர்த்தது. ஊரி கிராம மக்கள் சோசலிச சமத்துவக் கட்சியின் தேர்தல் நிதிக்கு ஆயிரக்கணக்கான ரூபாய் நன்கொடை அளித்தனர்.

ஊரி கிராமவாசி ஒருவர் சோ.ச.க. தேர்தல் நிதிக்கு நன்கொடை அளிக்கிறார்.

கூட்டத்தில் உரையாற்றிய சோசலிச சமத்துவக் கட்சியின் அரசியல் குழு உறுப்பினரும் உள்ளூராட்சி தேர்தல் வேட்பாளருமான பரமு திருஞானசம்பந்தர், ஜனாதிபதி விக்கிரமசிங்கவின் அடக்குமுறை அரசாங்கத்திற்கு தமிழ் முதலாளித்துவக் கட்சிகள் எவ்வாறு முட்டுக் கொடுத்தன என்பதை விளக்கினார்.

'இலங்கைத் தமிழ் அரசு கட்சி, (ஜனநாயக) தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, தமிழ் மக்கள் கூட்டனி உட்பட அனைத்துத் தமிழ்க் கட்சிகளும் ஏகாதிபத்திய சக்திகளின் முகவர்களாகச் செயற்படுகின்றன” என்று அவர் விளக்கினார். 'அமெரிக்கா, இந்தியாவின் ஆதரவுடன் சீனாவிற்கு எதிராக போருக்குத் தயாராகி வரும் நிலையில், இந்த நகர்வுகளுக்கு ஆதரவளிக்கும் தமிழ்க் கட்சிகள், அதற்கு ஈடாக கொழும்புடனான அதிகாரப் பகிர்வு ஏற்பாட்டிற்கு வாஷிங்டனின் ஆதரவை எதிர்பார்க்கின்றன.'

தமிழ் முதலாளித்துவக் கட்சிகள் “போரினால் பாதிக்கப்பட்ட தமிழ் தொழிலாளர்கள், இளைஞர்கள் மற்றும் கிராமப்புற மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை தங்கள் ஏகாதிபத்திய சார்பு அரசியலை முன்னெடுப்பதற்காக சுரண்டிக் கொள்கின்றன,” என பேச்சாளர் கூறினார். “அவர்கள் சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் தொழிலாளர்களின் வர்க்க ஒற்றுமைக்கு எதிராக நிற்கின்றனர்” என அவர் விளக்கினார்.

கூட்டத்திற்கு தலைமை தாங்கிய சோசலிச சமத்துவக் கட்சியின் அரசியல் குழு உறுப்பினர் மகாலிங்கம் டிலக்க்ஷன், நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் இலங்கைப் பிரிவாக சோசலிச சமத்துவக் கட்சியின் ட்ரொட்ஸ்கிச அடித்தளங்களை சுருக்கமாக விளக்கினார். “காலாவதியான முதலாளித்துவ அமைப்பை தூக்கி எறிந்து சோசலிச சமுதாயத்தை கட்டியெழுப்ப நாங்கள் போராடி வருகிறோம்” என அவர் தெரிவித்தார்.

ஐ.வை.எஸ்.எஸ்.இ. உறுப்பினர் முருகானந்தன் சுதன் இளைஞர்கள் எதிர்கொள்ளும் பாரதூரமான பிரச்சினைகளை மதிப்பாய்வு செய்தார். இளைஞர்கள், இலங்கையில் அதிகரித்து வரும் வேலையின்மையை எதிர்கொள்கின்றனர், என அவர் கூறினார்.

“யுத்தத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட வட மாகாணத்தில், இளைஞர்கள் மிகவும் மோசமான நிலைமைகளை எதிர்கொள்கின்றனர். அவர்கள் வேலையில்லாத் திண்டாட்டத்தை எதிர்கொள்கின்றனர். பாடசாலைக் கல்வியை முன்கூட்டியே கைவிடுவதுடன் போதைப்பொருளுக்கு அடிமையாவதால் ஏற்படும் ஆபத்துகளை எதிர்கொள்கிறார்கள்,” என்று சுதன் கூறினார். இந்த அழிவை எதிர்கொள்வதற்கு சோசலிசத்திற்காக போராட ஐ.வை.எஸ்.எஸ்.இ. மற்றும் சோ.ச.க.யில் சேருமாறு அவர் இளைஞர்களுக்கு அழைப்பு விடுத்தார்.

சோசலிச சமத்துவக் கட்சியின் நீண்ட கால உறுப்பினர் இராஜரத்தினம் பாலகௌரி, இலங்கையின் பாரதூரமான பொருளாதார நிலைமையை விளக்கினார். 'நாங்கள், தொற்றுநோய் மற்றும் உக்ரேனில் ரஷ்யாவிற்கு எதிரான அமெரிக்க-நேட்டோ போரால் தீவிரப்படுத்தப்பட்டுள்ள, ஒரு சர்வதேச பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்கிறோம்,' என்று அவர் கூறினார். ஒரு சோசலிச முன்னோக்கு மற்றும் போர்-எதிர்ப்பு வேலைத்திட்டத்தின் அடிப்படையில் தொழிலாள வர்க்கத்தின் ஐக்கியப்பட்ட சர்வதேச இயக்கத்தை அபிவிருத்தி செய்யவேண்டியதன் அவசியத்தை அவர் வலியுறுத்தினார்.

சோசலிச சமத்துவக் கட்சியின் அரசியல் குழு உறுப்பினர் தினேஷ் ஹேமால், காரைநகர் குடியிருப்பாளர்கள் எதிர்கொள்ளும் கடுமையான சமூகப் பிரச்சினைகளை சுட்டிக்காட்டினார்.

புலிகளுக்கு எதிரான, கொழும்பின் பல தசாப்த கால இனவாதப் போரைப் பற்றிக் குறிப்பிடுகையில், அவர் பின்வருமாறு கூறினார்: “யுத்தம் 13 ஆண்டுகளுக்கு முன்னர் முடிவடைந்த போதிலும், மக்கள் எதிர்கொள்ளும் அடிப்படைப் பிரச்சினைகளைத் தீர்க்க அடுத்தடுத்து ஆட்சிக்கு வந்த அரசாங்கங்கள் தவறிவிட்டன. பலர் இன்னும் பொருத்தமற்ற வீடுகளில் வாழ்கின்றனர். பல இளைஞர்கள் வேலையின்றி உள்ளனர். மக்கள் குடிநீர் பிரச்னையை எதிர்கொள்வதால், தனியார் லொரிகளில் தண்ணீர் வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.”

'மீனவர்களும் விவசாயிகளும் மண்ணெண்ணெய் விலையை எதிர்கொள்கின்றனர் [இது அவர்களின் தொழிலுக்கு இன்றியமையாதது]. கடந்த காலப் போராட்டங்களில் தொழிலாள வர்க்கத்தால் வென்றெடுக்கப்பட்ட சமூக நலனை இப்போது முதலாளித்துவ ஆட்சியாளர்கள் அழித்து வருகின்றனர்.”

சோசலிச சமத்துவக் கட்சியின் துணைச் செயலாளர் சமன் குணதாச நிகழ்வில் பிரதான உரையை ஆற்றினார். ஜனாதிபதி விக்கிரமசிங்க உள்ளுராட்சி மன்றத் தேர்தலை முன்னொருபோதும் இல்லாத வகையில் கீழறுப்பதாக அவர் சுட்டிக்காட்டினார்.

சோசலிச சமத்துவக் கட்சியின் துணைச் செயலாளர் சமன் குணதாச 19 பெப்ரவரி 2023 அன்று யாழ்ப்பாண மாவட்டத்தில் காரைநகர் ஊரி கிராமத்தில் தேர்தல் கூட்டத்தில் உரையாற்றிய போது.

'வெகுஜனங்கள் மீது கஷ்ட்டங்களைச் சுமத்தியதால் ஒரு அவமானகரமான தேர்தல் தோல்விக்கு முகம்கொடுப்பதாக அரசாங்கம் கவலைப்படுகின்றது. அத்தகைய தோல்வி அரசியல் ஸ்திரமின்மையை உக்கிரமாக்கி, சர்வதேச நாணய நிதியம் கட்டளையிட்டுள்ள சிக்கன திட்டங்களை கவிழ்த்து விடும் என்றும் அது கவலையடைந்துள்ளது,” என அவர் கூறினார்.

முந்தைய நாள், கொழும்பு ரோட்டரி கழக நிகழ்வில் விக்கிரமசிங்க ஆற்றியை உரையைப் பற்றி குணதாச குறிப்பிட்டார்.  அங்கு, 'சட்டம் மற்றும் ஒழுங்கை' பேணுவதாகவும் 'அராஜகத்தை' தடுக்கப்போவதாகவும் சபதமெடுத்த விக்கிரமசிங்க. 'பொருளாதார மீட்சியே' தனது முன்னுரிமை என்றும் அவர் அறிவித்தார்.

இது தொழிலாள வர்க்கம், இளைஞர்கள் மற்றும் கிராமப்புற வெகுஜனங்களுக்கு ஒரு நேரடியான அச்சுறுத்தல் ஆகும் மற்றும் இது, அடிப்படை ஜனநாயக உரிமைகளை தாக்குவதற்கு அவரது அரசாங்கம் தயாராகி வருவதை சமிக்ஞை செய்கின்றது என குணதாச தெரிவித்தார். பொருளாதார மீட்சி பற்றியே விக்கிரமசிங்க அக்கறை காட்டுகிறார், 'உழைக்கும் மக்களின் துன்பம் பற்றிய அல்ல' என கூறிய பேச்சாளர், இது சர்வதேச நாணய நிதியத்தின் கட்டளையின் பேரில், கொடூரமான சிக்கன நடவடிக்கை அமல்படுத்தும் நோக்கம் கொண்டதாகும். கடந்த ஆண்டு, கோட்டாபய இராஜபக்ஷவை நாட்டை விட்டும் ஜனாதிபதி பதவியிலிருந்தும் விரட்டியடித்த வெகுஜன எழுச்சியிலிருந்து விக்கிரமசிங்கவும் ஆளும் உயரடுக்குகளும் பாடங்களைக் கற்றுக்கொண்டுள்ளன. இது போன்ற வெகுஜன இயக்கம் மீண்டும் நிகழாமல் தடுக்க அவர்கள் முயற்சிக்கின்றனர்,” என்று குணதாச விளக்கினார். 

'இந்த அச்சுறுத்தல்களை தொழிலாள வர்க்கம் எதிர்கொள்வது எப்படி?'  என குணதாச கேள்வியெழுப்பினார்.

“சோசலிச சமத்துவக் கட்சி மட்டுமே, கடந்த ஆண்டு வெகுஜன எழுச்சியின் போது தொழிலாள வர்க்கத்தின் அடிப்படை சமூக மற்றும் ஜனநாயகக் கோரிக்கைகளுக்காக போராடுவதற்கு தேவையான புரட்சிகர வேலைத்திட்டத்தை வழங்குவதற்காக போராடிய ஒரே அரசியல் கட்சியாகும். எதிர்க்கட்சிகள், தொழிற்சங்கங்கள், போலி-இடது கட்சிகள் மற்றும் மத்தியதர வர்க்க சிவில் சமூக அமைப்புகள் யாவும், அனைத்துக் கட்சி அரசாங்கத்தை அமைப்பதற்கு ஊக்குவித்தன. இதுவே விக்கிரமசிங்க ஜனாதிபதியாவதற்கு வழி வகுத்தது. அவர்கள் ‘அரசியல் வேண்டாம்’ என்ற பதாகையின் கீழ் ஒரு புரட்சிகர வேலைத்திட்டத்தை வலுக்கட்டாயமாக தடுத்தனர்.

“தொழிலாளர்கள் தங்கள் வேலைத் தளங்களில் அவர்களது சொந்த நடவடிக்கைக் குழுக்களை அமைக்குமாறும், விடயங்களைத் தங்கள் கைகளில் எடுத்துக் கொள்ளுமாறும் சோசலிச சமத்துவக் கட்சி வலியுறுத்தியதுடன் தொழிலாள வர்க்கத்தின் அதிகார மையமாக ஜனநாயகத்துக்கும் சோசலிசத்துக்குமான தொழிலாளர்களதும் கிராமப்புற வெகுஜனங்களதும் மாநாட்டை கட்டியெழுப்புமாறும் முன்மொழிந்தது. இந்தத் தேர்தல் பிரச்சாரத்தில் சோசலிச சமத்துவக் கட்சி முன்னெடுத்துச் செல்லும் வேலைத்திட்டம் இதுவே ஆகும்.

'உக்ரேனைப் பயன்படுத்திக் கொண்டு, அமெரிக்கா மற்றும் நேட்டோவால் ரஷ்யாவிற்கு எதிராக நடந்து வரும் போர், அணுவாயுத மோதலுடன் மனிதகுலத்தை அச்சுறுத்துகிறது' என்று குணதாச எச்சரித்தார். “ஏகாதிபத்தியவாதிகளின் குறிக்கோள் அனைத்தின் மீதும் தங்களின் உலகளாவிய மேலாதிக்கத்தைப் பாதுகாப்பதாகும். ரஷ்யாவைக் கொள்ளையடிப்பது அவர்களின் திட்டம் ஆனால் அவர்களின் பிரதான இலக்கு சீனாவே ஆகும்.

ஏகாதிபத்திய போரை நிறுத்தக்கூடிய ஒரே சக்தி சர்வதேச தொழிலாள வர்க்கம் மட்டுமே என்று பேச்சாளர் விளக்கினார். கோவிட்-19 தொற்று நோயால் கொல்லப்பட்ட மில்லியன் கணக்கானவர்களையும் துருக்கி மற்றும் சிரியாவில் நிலநடுக்கத்தில் கொல்லப்பட்ட பல்லாயிரக்கணக்கான மக்களையும் பற்றிக் குறிப்பிட்ட பேச்சாளர், முதலாளித்துவ ஆளும் உயரடுக்கிற்கு உயிர் இழப்புகள் பற்றி எந்த கவலையும் இல்லை என்று சுட்டிக்காட்டினார்.

“சோசலிச சமத்துவக் கட்சியில் இணைந்து, முதலாளித்துவத்தை தூக்கி எறிந்து, சோசலிசக் கொள்கைகளை நடைமுறைப்படுத்தவும் தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் அரசாங்கத்திற்கான அதன் போராட்டத்தை முன்னெடுக்குமாறு அவர் தொழிலாளர்களுக்கும் இளைஞர்களுக்கும் அழைப்பு விடுத்தார். 'இந்த வேலைத்திட்டம் அடுத்தடுத்து ஆட்சிக்கு வந்த முதலாளித்துவ அரசாங்கங்களின் கடன்களை தள்ளுபடி செய்யும். தொழிலாள வர்க்கம் உற்பத்தி மற்றும் விநியோகத்தின் மீது கட்டுப்பாட்டை எடுத்துக் கொள்ளும், ஆளும் உயரடுக்கின் வளங்கள் மற்றும் செல்வங்களைக் கைப்பற்றி, சமூகத் தேவைகளின் அடிப்படையில் அவற்றை விநியோகிக்கும்' என்று கூறி அவர் முடித்தார்.

இலங்கை ஜனாதிபதி “தேசிய நல்லிணக்க” மாநாட்டை நடத்தினார்

சர்வதேச நாணய நிதிய சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிராக பெருகிவரும் வெகுஜன எதிர்ப்புக்களுக்கு மத்தியில், இலங்கையின் எதேச்சதிகார ஜனாதிபதி உள்ளூராட்சித் தேர்தல்களை இரத்து செய்கிறார்

உள்ளூராட்சித் தேர்தலை முடக்கும் இலங்கை அரசாங்கத்தின் நடவடிக்கைகளை எதிர்த்திடு! ஜனநாயக உரிமைகளைப் பாதுகாக்க தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்டு! 

Loading