இலங்கை ஜனாதிபதி “தேசிய நல்லிணக்க” மாநாட்டை நடத்தினார்

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.

இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க டிசம்பர் 13 அன்று, 'தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பது' எப்படி என்பது பற்றி கலந்துரையாட அனைத்துக் கட்சி மாநாட்டிற்கு (APC) அழைப்பு விடுத்தார். அரசாங்கம் அமுல்படுத்தும் சர்வதேச நாணய நிதியம் (IMF) கட்டளையிட்டுள்ள சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிராக சமூக சீற்றம் அதிகரித்து வருவதற்கு மத்தியில், எதிர்க்கட்சிகளின் ஆதரவைப் பெற விக்கிரமசிங்க மேற்கொண்ட மற்றொரு அவநம்பிக்கையான சூழ்ச்சியே இதுவாகும்.

ஆளும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி (ஸ்ரீ.ல.பொ.ஜ.மு.), எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி (ஐ.ம.ச.) மற்றும் அதன் அங்கம் வகிக்கும் கட்சிகளும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் தமிழ் மக்கள் தேசிய கூட்டணி ஆகியவை இந்த மாநாட்டில் பங்களுபற்றிய கட்சிகளில் அடங்கும். இந்த மாதம் பல சர்வ கட்சி கூட்டங்கள் நடைபெறும்.

எதிர்வரும் பெப்ரவரி 4 அன்று நடைபெறவுள்ள நாட்டின் 75வது சுதந்திரக் கொண்டாட்டத்திற்கு முன்னர், அனைத்து அரசியல் கட்சிகளும் 'இனப்பிரச்சினைக்கான தீர்வை வழங்குவதற்கான பொதுவான உடன்படிக்கையை' எட்ட வேண்டும் என்று விக்கிரமசிங்க அழைப்பு விடுத்தார். 'நாட்டின் தமிழ் சிறுபான்மையினரின் குறைகளுக்கு ஒரு நிரந்தர தீர்விற்கு' அவர் அழைப்பு விடுத்தார்.

விக்கிரமசிங்கவின் ஆடம்பரமான பிரகடனங்கள் ஒருபுறம் இருக்க, இந்த அனைத்துக் கட்சி மாநாடு ஒரு முழுமையான மோசடி மட்டுமன்றி தமிழ் சிறுபான்மையினருக்கான ஜனநாயக உரிமைகளைப் பெறுவதற்கும் இதற்கும் எந்தத் தொடர்பும் கிடையாது. 1948 இல் சுதந்திரம் எனப்படுவதில் இருந்தே அடுத்தடுத்து ஆட்சிக்கு வரும் இலங்கை அரசாங்கங்கள் திட்டமிட்ட முறையில் தமிழர்களுக்கு எதிரான பாரபட்சங்களை மேற்கொண்டு வருகின்றன. ஆளும் வர்க்கம், தொழிலாள வர்க்கத்தை சிங்களம் மற்றும் தமிழர்கள் என்ற வழிகளில் பிரித்து, முதலாளித்துவ ஆட்சிக்கு முட்டுக் கொடுப்பதற்காக இனவாதத்தை சுரண்டிக்கொண்டுள்ளதோடு தொடர்ந்தும் அதையே பின்பற்றி வருகின்றது.

1983 இல், விக்கிரமசிங்கவின் ஐக்கிய தேசியக் கட்சி (ஐ.தே.க.), பல தசாப்த கால தமிழர்-விரோத பாகுபாட்டின் பின்னர், பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக ஒரு இனவாதப் போரைத் தூண்டியது. அந்த ஐ.தே.க. அரசாங்கங்களில் அமைச்சராக இருந்த விக்கிரமசிங்க, இலங்கைத் தமிழர்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்ட இரத்தக்களரி அட்டூழியங்களுக்குப் பங்காளியாவார். தீவின் தெற்கில் உள்ள ஏனைய அனைத்துக் கட்சிகளும், கடந்த மாதக் கூட்டத்தில் பங்குபற்றியவையும் இந்தப் போரைத் தொடர்ந்து முன்னெடுத்த அரசாங்கங்களுக்குத் தலைமை தாங்கியவை அல்லது ஆதரவாளித்தவை ஆகும்.

26 ஆண்டுகால மோதலின் போது இலட்சக்கணக்கான தமிழ் பொதுமக்கள் கொல்லப்பட்டனர், அதன் இறுதி மாதங்களில் 40,000 பேர் இராணுவத்தால் படுகொலை செய்யப்பட்டனர் என ஐ.நா. மதிப்பிட்டுள்ளது. 2009 மே மாதம் புலிகளின் தோல்வியுடன் யுத்தம் முடிவடைந்த போது, இராணுவத்திடம் சரணடைந்த புலிகளின் தலைவர்களைக் கொன்று, பின்னர் சுமார் 300,000 பொதுமக்களை இராணுவக் கட்டுப்பாட்டு முகாம்களில் அடைத்து வைத்தது. டிசம்பர் 13 நடந்த கூட்டத்தில் அனைத்து அரசியல் கட்சிகளும் இந்த குற்றங்களை 'பயங்கரவாதத்திற்கு எதிரான போரில்' நியாயமானவை என்று கூறி பாதுகாத்துள்ளன.

2006 ஜூன் 21, புதன் கிழமை, இலங்கையின் கொழும்பில் இருந்து வடகிழக்கே சுமார் 300 கிலோமீட்டர் (186 மைல்) தொலைவில் உள்ள யாழ்ப்பாணத்தில் இலங்கை சிப்பாய்கள் ரோந்து செல்கின்றனர் [AP Photo/Eranga Jayawardena]

வடக்கு மற்றும் கிழக்கில் வசிக்கும் மக்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்ட அழிவு, அடிப்படை வசதிகள் இன்றி, ஆயிரக்கணக்கான போர் விதவைகள் உட்பட கொடூரமான வறுமையில் வாழும் பலருடன் அவர்களை முடிவில்லா துயரத்திற்கு தள்ளியுள்ளது. போரினால் பாதிக்கப்பட்ட மாகாணங்கள் இன்னமும் கடுமையான இராணுவ ஆக்கிரமிப்பின் கீழ் இருப்பதுடன் தமிழ் மக்கள் குறிப்பாக இளைஞர்கள் தொடர்ந்து துன்புறுத்தப்பட்டு அச்சுறுத்தப்படுகின்றனர்.

டிசம்பர் 13 கூட்டத்தில் உரையாற்றிய விக்கிரமசிங்க, 'காணாமல் போனவர்களுக்கு இழப்பீடு வழங்குதல்,' அவர்களின் குடும்பங்களுக்கு இறப்புச் சான்றிதழ் வழங்குதல் மற்றும் தற்போது இராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்ட காணிகளை விடுவிப்பதற்கே முன்னுரிமை கொடுக்கப்படும் என அறிவித்தார். 'காணாமல் போனவர்கள்' உண்மையில், போரின் போது இராணுவத்தால் கடத்தப்பட்டு இரகசியமாக கொலை செய்யப்பட்டிருக்கலாம். வடக்கு மற்றும் கிழக்கிற்கு 'அதிகாரப் பகிர்வு' போன்ற முக்கிய விடயங்கள் பின்னர் கலந்துரையாடப்படக் கூடும் என்றும் அவர் கூறினார். அதிகாரப் பகிர்வு என்பது, தொழிலாள வர்க்கத்தைக் கூட்டாகச் சுரண்டுவதன் பேரில், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை ஆளுவதற்கு தமிழ் உயரடுக்குக்கு வரையறுக்கப்பட்ட அதிகாரப் பகிர்வு ஏற்பாடுகளை ஸ்தாபிப்பதாகும்.

ஒரு ஜனநாயகவாதியாக காட்டிக்கொண்ட எதிர்க்கட்சியான ஐ.ம.ச. தலைவர் சஜித் பிரேமதாச, இந்த கலந்துரையாடல் 'மிகப்பெரிய முக்கியத்துவம் வாய்ந்தது' என்றும், 'திட்டத்திற்கான கால எல்லையைக் கொண்டிருப்பதில் மகிழ்ச்சியடைகிறேன்... [அது] நாட்டுக்கு பெரும் நன்மை பயக்கும்' என்றும் கூறினார். மற்ற பங்கேற்பாளர்கள் அனைவரும் விக்கிரமசிங்கவின் அழைப்புகளை வரவேற்றனர்.

குறிப்பிடத்தக்க வகையில், மக்கள் விடுதலை முன்னணி (ஜேவிபி) அல்லது அது வழிநடத்தும் தேசிய மக்கள் சக்தி அனைத்துக் கட்சி மாநாட்டில் பங்கேற்கவில்லை. ஜே.வி.பி. இனவாத யுத்தத்தை முழுமையாக ஆதரித்ததுடன் அதன் அனைத்து குற்றங்களையும் நியாயப்படுத்தியது.

சமீபத்திய ஆண்டுகளில், ஜே.வி.பி., தனது இனவாத அரசியலை மூடிமறைக்கும் முயற்சியில், இனப் பாகுபாட்டை எதிர்ப்பதாகக் கூறி வருகிறது. எவ்வாறாயினும், தெற்கில் சிங்களவர்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதிகளில் பாராளுமன்ற ஆதரவைப் பலப்படுத்தும் முயற்சியில் தற்போது பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள ஜே.வி.பி., தன்னை அனைத்துக் கட்சி மாநாட்டுடன் அடையாளப்படுத்திக்கொள்ள விரும்பவில்லை.

விக்கிரமசிங்கவின் மோசடியான அனைத்துக் கட்சி மாநாடானது, நாட்டின் பொருளாதாரப் பேரழிவை மக்கள் மீது சுமத்துவதற்காக அரசியல் ஸ்தாபனத்தின் அனைத்துக் கட்சிகளிடமிருந்தும், குறிப்பாக தமிழ்க் கட்சிகளிடமிருந்தும் ஆதரவைப் பெறுவதற்கான ஒரு முயற்சியாகும்.

ஏனைய நாடுகளைப் போலவே, கோவிட்-19 தொற்றுநோய் மற்றும் ரஷ்யாவிற்கு எதிரான அமெரிக்க-நேட்டோ போரினால் இலங்கை நெருக்கடி தீவிரமடைந்துள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் கோரிக்கைகளுக்கு இணங்க, விக்கிரமசிங்கவின் 2023 வரவு செலவுத் திட்டத்தில் அரச நிறுவனங்களின் தனியார்மயமாக்கல், பல்லாயிரக்கணக்கான தொழில் வெட்டுக்கள், மானியங்களில் வெட்டுக்கள், உழைக்கும் மக்கள் மீதான அதிக வரிகள் மற்றும் கட்டண அதிகரிப்பும் அடங்கும்.

பிரதான தமிழ் பாராளுமன்றக் கட்சியான தமிழ் தேசியக் கூட்டமைப்பு, ஜனாதிபதியின் அனைத்துக் கட்சி மாநாட்டுக்கான அழைப்பின் தீவிர ஆதரவாளனாகும். கடந்த நவம்பரில் நடந்த வரவு செலவுத் திட்ட வாக்கெடுப்பின் போது அது வாக்களிப்பில் இருந்து விலகி, கடுமையான நடவடிக்கைகளை பாராளுமன்றத்தில் நிறைவேற்ற அனுமதித்தது. ஒரு சிடுமூஞ்சித்தனமான சூழ்ச்சியில், தமிழ் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் அதன் பகிஷ்கரிப்பை நியாயப்படுத்தினார்: 'நாங்கள் இந்த வரவு செலவுத் திட்டத்தை எதிர்க்கிறோம், ஆனால் ஒரு காரணத்திற்காக நாங்கள் அதற்கு எதிராக வாக்களிக்க வேண்டாம் என்று முடிவு செய்துள்ளோம்... எமக்கு சந்தேகம் இருந்தாலும், நீண்டகாலமாக இருந்து வரும் தமிழ் தேசியப் பிரச்சினைக்கு தீர்வு காண நடவடிக்கை எடுத்து வருவதாக ஜனாதிபதி கூறியுள்ளார்,” என அவர் தெரிவித்தார்.

தமிழ் கூட்டமைப்பின் நடவடிக்கைகள், உழைக்கும் மக்கள் மற்றும் ஏழைகளின் ஜனநாயக அல்லது சமூக உரிமைகள் பற்றி அதற்கு எந்த அக்கறையும் இல்லை, மாறாக கொழும்புடன் அதிகாரப் பகிர்வு ஏற்பாட்டின் மூலம் தனது சொந்த சிறப்புரிமைகளைப் பெறுவதில் முழுவதுமாக ஈடுபட்டுள்ளது என்பதற்கு மற்றொரு அறிகுறியாகும்.

“அரசியலமைப்புத் திருத்தம் மற்றும் அதிகாரப் பகிர்வு பற்றி பின்னர் பேசுவோம்” என விக்கிரமசிங்க சர்வகட்சி மாநாட்டில் கூறியபோது, “அரசியலமைப்பில் உள்ள ஏற்பாடுகளில் பெரிய திருத்தங்கள் ஏதுமின்றி அதிகாரப் பகிர்வு தொடர்பான ஏனைய சட்டங்கள் அமுல்படுத்தப்பட வேண்டும். மாகாண சபை தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும்” என சுமந்திரன் பதிலளித்தார்:

இது, தீவின் ஒருங்கிணைந்த வடக்கு மற்றும் கிழக்கிற்கு மாகாண அதிகாரங்களைப் பகிர்ந்தளிப்பதைக் குறிக்கும் 1987ல் ஒரு ஆழமான நெருக்கடியின் மத்தியில் கொண்டுவரப்பட்ட அரசியலமைப்பின் 13வது திருத்தம் பற்றியே சுமந்திரம் இங்கு குறிப்பிடுகின்றார். இது, விடுதலைப் புலிகளை நிராயுதபாணியாக்கவும் உழைக்கும் மக்களின் எதிர்ப்பை அடக்கவும் இந்திய அமைதி காக்கும் படையினர் வட இலங்கைக்கு அனுப்பப்பட்ட இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாகும்.

விக்கிரமசிங்கவின் அனைத்துக் கட்சி மாநாடு, அமெரிக்கா மற்றும் தெற்காசியாவில் வாஷிங்டனின் பிரதான கூட்டாளியான இந்தியாவிற்கும் ஒரு சமிக்ஞையாகும். புதுடில்லியும் வாஷிங்டனும் இலங்கையில் 'இன நல்லிணக்கத்திற்கு' அழைப்பு விடுக்கின்றன. கொழும்பின் இனவாதப் போரை ஆதரித்த இந்த நாடுகளுக்கு, இலங்கைத் தமிழர்களின் ஜனநாயக உரிமைகள் பற்றி எந்த அக்கறையும் கிடையாது, மாறாக அவை கொழும்புக்கு அழுத்தம் கொடுப்பதற்காக இந்த பிரச்சினையை சுரண்டிக்கொள்கின்றன.

கொழும்புடனான பெய்ஜிங்கின் பொருளாதார உறவுகள் குறித்து அமெரிக்காவும் இந்தியாவும் கவலை கொண்டுள்ளன. குறிப்பாக வாஷிங்டன், பெய்ஜிங்குடனான அதன் உறவுகளைத் துண்டிக்குமாறு கொழும்புக்கு அழுத்தம் கொடுக்க போரின் போது இலங்கையின் மனித உரிமை மீறல்களைப் பயன்படுத்துகிறது. தமிழ் தேசியக் கூட்டமைப்பும் இதர தமிழ் கட்சிகளும், சீனாவிற்கு எதிரான அமெரிக்க போர் உந்துதலுக்கு ஆதரவளித்தால், அதற்கு பதிலாக, கொழும்புடனான அதிகாரப் பகிர்வு ஒப்பந்தத்தை பெறுவதில் வாஷிங்டனும் புதுடில்லியும் உதவும் என எதிர்பார்க்கின்றன. இந்த தமிழ் கட்சிகள் கொழும்புக்கு எதிராக அமெரிக்காவினால் முன்வைக்கப்பட்ட மனித உரிமைகள் தீர்மானங்களை ஆதரித்து வந்துள்ளன.

கடந்த ஆண்டு ஏப்ரல்-ஜூலையில் ஜனாதிபதி கோட்டாபய இராஜபக்ஷ மற்றும் அவரது அரசாங்கத்தையும் இராஜினாமா செய்யக் கோரி இன எல்லைகளுக்கு அப்பால் தொழிலாளர்கள் மற்றும் வறியவர்களின் பாரிய ஆர்ப்பாட்டங்கள் நடந்த போது. தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைமையின் கீழ்த்தரமான பாத்திரம் அம்பலமானது. வெறுக்கப்படும் இராஜபக்ஷ ஆட்சி மற்றும் ஏனைய முன்னணி இலங்கை அரசியல்வாதிகளுடன் தமது கட்சி கலந்துரையாடியதாக சுமந்திரன் அண்மையில் வெளிப்படுத்தினார். பேச்சுவார்த்தைகள், ஆர்ப்பாட்டங்களுக்கு முடிவுகட்டி, சர்வதேச நாணய நிதியத்தின் சிக்கன கோரிக்கைகளை அமுல்படுத்துவதற்கான அரசியல் 'ஸ்திரத்தன்மையை' உருவாக்குவதையே நோக்கமாகக் கொண்டிருந்தன.

கடந்த காலத்தைப் போலவே, விக்கிரமசிங்கவின் அனைத்துக் கட்சி மாநாட்டில் தமிழ் கட்சிகளின் பங்கேற்பானது, ஒட்டுமொத்த தொழிலாள வர்க்கத்திற்கும் எதிராக முதலாளித்துவ உயரடுக்கின் அனைத்து பிரிவுகளின் ஐக்கியத்தை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. அவர்களின் அச்சம் முதலாளித்துவ ஆட்சிக்கு எதிரான தொழிலாள வர்க்கத்தின் ஒன்றுபட்ட போராட்டமே ஆகும்.

தமிழ்த் தேசியவாதக் கட்சிகளின் இழிவான அரசியல் சூழ்ச்சிக்கும் இனப் பாரபட்சத்தை நிறுத்துவதற்கும் தொடர்பு இருப்பதாக என்ற மாயையையும் தமிழ்த் தொழிலாளர்களும் இளைஞர்களும் கொண்டிருக்கக் கூடாது.

தெற்காசியாவிலும் சர்வதேச அளவிலும் சோசலிசத்திற்கான பரந்த போராட்டத்தின் பாகமாக ஸ்ரீலங்கா-ஈழம் ஐக்கிய சோசலிசக் குடியரசை உருவாக்குவதற்கான போராட்டத்தில், இலங்கையில் உள்ள சிங்களம், தமிழ் மற்றும் முஸ்லிம் தொழிலாள வர்க்கத்தின் ஐக்கியப்பட்ட இயக்கத்தின் மூலம் மட்டுமே சிறுபான்மை தமிழ் மக்களுக்கு எதிரான பல தசாப்தங்களாக நீடித்த இனப் பாரபட்சங்களை, முடிவுக்கு வர முடியும். இது சோசலிச சமத்துவக் கட்சி (சோ.ச.க.) மற்றும் அதன் முன்னோடியான புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்தின் (பு.க.க.) வேலைத்திட்டமாகும்.

1917 ரஷ்யப் புரட்சியின் லெனினுடன் இணைத் தலைவரான லியோன் ட்ரொட்ஸ்கி தனது நிரந்தரப் புரட்சிக் கோட்பாட்டில் விரிவாகக் கூறியது போல், முதலாளித்துவ வளர்ச்சி தாமதமான நாடுகளில் உள்ள தேசிய முதலாளித்துவத்தின் எந்தப் பிரிவினராலும் ஜனநாயகப் புரட்சியின் அடிப்படைப் பணிகளை இட்டுநிரப்ப முடியாது. சோசலிசப் புரட்சியின் துணை விளைபொருளாக, ஏனைய ஒடுக்கப்பட்ட மக்களை அணிதிரட்டிக்கொண்ட தொழிலாள வர்க்கத்தால் மட்டுமே அவற்றை யதார்த்தமாக்க முடியும்.

இந்த முன்னோக்கின் அடிப்படையில் இலங்கை தொழிலாள வர்க்கத்தை ஐக்கியப்படுத்துவதற்கும் அணிதிரட்டுவதற்கும் போராடும் ஒரே கட்சி சோ.ச.க. மட்டுமே. இதனால்தான் சோசலிச சமத்துவக் கட்சியானது, அந்தப் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வதற்காக, அனைத்து முதலாளித்துவக் கட்சிகள் மற்றும் அவற்றின் தொழிற்சங்கங்களில் இருந்தும் சுயாதீனமாக, ஒவ்வொரு வேலைத் தளங்கள், தொழிற்சாலைகள், பெருந்தோட்டங்கள், சுற்றுப்புறங்கள் மற்றும் கிராமப்புறங்களில் இருந்து ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட நடவடிக்கைக் குழுக்களின் பிரதிநிதிகளை அடிப்படையாகக் கொண்டு, தொழிலாளர்களதும் கிராமப்புற வெகுஜனங்களதும் ஜனநாயத்துக்கும் சோசலிசத்துக்குமான மாநாட்டைக் கட்டியெழுப்ப ஒரு பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளது.

Loading