மக்ரோன் ஓய்வூதிய வெட்டுக்களை பாராளுமன்ற வாக்கெடுப்பு இல்லாமல் சுமத்துவதால் பிரான்ஸ் முழுவதும் மோதல்கள் வெடித்துள்ளன 

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.

பாரீஸ் பாராளுமன்றத்துக்கு அருகில் நடந்த போராட்டத்திற்குப் பிறகு, பிளாஸ் டூ லா கொன்கார்டில் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது போலீஸ் தாக்குதலில் இறங்கியது. மார்ச் 16, 2023, வியாழன், (AP Photo/Thomas Padilla) [AP Photo/Thomas Padilla]

ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோனின் ஓய்வூதிய வெட்டுக்களை அரசாங்கம் பாராளுமன்றத்தில் வாக்கெடுப்பு இல்லாமல் சுமத்த திட்டமிட்டுள்ளதாக பிரதம மந்திரி எலிசபெத் போர்ன் அறிவித்ததை அடுத்து, நேற்று இரவு பிரான்ஸ் முழுவதிலும் உள்ள நகரங்களில் பாரிய எதிர்ப்புக்கள் வெடித்துள்ளன. புரட்சிகர தாக்கங்களுடன் மக்ரோன் அரசாங்கத்துடன் நேரடி மோதலில் நுழையும் தொழிலாள வர்க்கத்தின் கோபம் அதிகரித்து வருகிறது.

மக்ரோனின் பொலிஸ் அரசு இயந்திரம் ஜனநாயகத்தையும் மக்களின் விருப்பத்தையும் காலில் மிதித்து தள்ளுகிறது. அவர் தனது வெட்டுக்களுக்கு முக்கால்வாசி பிரெஞ்சு மக்களின் எதிர்ப்பைப் புறக்கணித்துள்ளார், மேலும் மில்லியன் கணக்கான தொழிலாளர்கள், வெட்டுக்களுக்கு எதிராக நாடு தழுவிய எதிர்ப்பு போராட்டங்களிலும், வேலைநிறுத்தங்களிலும் இரண்டு மாதங்களாக ஈடுபட்டு வருகின்றனர்.  60 வீதமான மக்கள் பொருளாதாரத்தைத் முடக்கும் பொது வேலைநிறுத்தத்தை ஆதரித்து, வெட்டுக்களைத் திரும்பப் பெறுமாறு மக்ரோனை நிர்பந்திக்கின்றனர். வேலைநிறுத்தங்கள் மற்றும் எதிர்ப்பு போராட்டங்கள் என்பன பிரான்சில் அதிகரித்து வருகின்றன.

மார்சேய், லியோன், லில், துலூஸ், போர்தோ, நான்ந், ரென், ப்ரெஸ்ட், டிஜோன், ஆங்கர்ஸ் மற்றும் பெசன்சோன் ஆகிய நகரங்களில் ஆயிரக்கணக்கான எதிர்ப்பு போராட்டக்காரர்களை காவல்துறையினர் தாக்கியுள்ளனர். பாரிஸில் உள்ள பிளாஸ் டூ லா கொன்கார்டில் பல்லாயிரக்கணக்கான மக்கள் அணி திரண்டனர், அங்கு எலிசேயிலுள்ள ஜனாதிபதி மாளிகை, பாராளுமன்றம் மற்றும் அமெரிக்க தூதரகம் உள்ளிட்ட மூலோபாய கட்டிடங்கள் உள்ள பகுதியில் கண்ணீர்ப்புகை, தண்ணீர் பீரங்கி, ரப்பர் புல்லட் பிஸ்டல்கள் மற்றும் தாக்குதல் துப்பாக்கிகளுடன் காவல்துறையினர் ஆயுதம் ஏந்தியிருந்தனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது காவல்துறையினர் தாக்குதல் நடத்தியதை அடுத்து மோதல்கள் வெடித்தன. மத்திய பாரிஸ் முழுவதிலும் உள்ள தெருக்களில் போராட்டக்காரர்கள் கலக தடுப்பு போலீசாருடன் சண்டையிட்டதால் அப்பகுதிகளில் தீ எரிந்தது. குறைந்தது 120 போராட்டக்காரர்கள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.

உக்ரேனில் நேட்டோவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையே இரத்தக்களரியான போருக்கு மத்தியில் வர்க்கப் போராட்டம் வெடித்துள்ள நிலையில், ஐரோப்பா முழுவதும் ஒரு புறநிலை ரீதியாக புரட்சிகரமான சூழ்நிலை உருவாகி வருகிறது. ஜேர்மனி மற்றும் பிரிட்டனில் பணவீக்கம் மற்றும் ஊதிய வெட்டுக்களுக்கு எதிராக மில்லியன் கணக்கானவர்கள் வேலைநிறுத்தம் செய்கின்றனர், நெதர்லாந்து மற்றும் போர்த்துக்கலில் வேலைநிறுத்தங்கள் தொடர்கின்றன, நேற்று கிரேக்கத்தில் ஒரு பொது வேலைநிறுத்தம் நடந்தது. சமூகக் கோபம் ஐரோப்பா முழுவதிலும் பெரும் பரிமாணங்களைப் கொண்டிருந்தாலும், அடக்குமுறையைத் தவிர வழங்குவதற்கு மக்ரோனிடம் எதுவும் கிடையாது.

மக்ரோன் நேற்று காலை தனது மந்திரி சபையில் பிரெஞ்சு அரசியலமைப்பின் 49வது விதியின் 3வது சரத்தை செயல்படுத்துவதாக கூறினார். 49-3 பிரிவானது, அரசாங்கத்தை வீழ்த்துவதற்கு பாராளுமன்றம் வாக்களிக்காத வரை, வாக்கெடுப்பின்றி பாராளுமன்றத்தில் சட்டத்தை ஏற்கும்படி கட்டாயப்படுத்த அரசாங்கத்தை அனுமதிக்கிறது. பாராளுமன்றத்தில் சிறுபான்மையினரை மட்டுமே கொண்ட மக்ரோன், வலதுசாரி குடியரசுக் கட்சியிடமிருந்து (LR) ஓய்வூதிய வெட்டுக்களுக்குப் போதுமான வாக்குகளைப் பெறவில்லை என்ற செய்திகளுக்கு மத்தியில் பிரதமர் போர்னின் அறிவிப்பு வெளிவந்தது. 

பெருகிவரும் நிதி நெருக்கடி, ஐரோப்பிய வங்கிகளின் தோல்விகள் பற்றிய அச்சம் மற்றும் பிரெஞ்சு தேசியக் கடன் மீதான ஊகங்கள் பெருகி வரும் நிலையில், ஓய்வூதிய வெட்டுக்கள் பாரளுமன்றத்திற்குச் சென்று நிராகரிக்கப்பட்டால், அதன் விளைவு பேரழிவை ஏற்படுத்தும் என்று மக்ரோன் அமைச்சர்கள் குழுவிற்கு கூறினார். இது மக்ரோனின் 413 பில்லியன் யூரோ இராணுவ வரவு செலவுத் திட்டத்திற்கு நிதியளிக்கும் முயற்சியையும், ஓய்வூதிய வெட்டுக்கள் மூலம் உக்ரேனில் ரஷ்யாவுடனான நேட்டோவின் போரில் அவர் பங்கேற்பதையும் தடுக்கும் என்பதும் தெளிவாக இருக்கும்.

“எனது அரசியல் ஆர்வமும் எனது அரசியல் விருப்பமும் வாக்கெடுப்புக்கு (சட்டசபையில் ஓய்வூதிய வெட்டுக்கள் குறித்து) செல்ல வேண்டும் என்பதாகும். உங்கள் அனைவருக்கும் மத்தியில், ஒருவரது நிலைப்பாட்டையும், நாடாளுமன்ற உறுப்பினர் பதவியையும் பணயம் வைப்பவன் நான் அல்ல. ஆனால் தற்போதைய சூழ்நிலையில், நிதி மற்றும் பொருளாதார அபாயங்கள் மிக அதிகமாக இருப்பதாக நான் கருதுகிறேன்’’ என்று மக்ரோன் கூறினார்.

மக்ரோன் தனது ஓய்வூதிய வெட்டுக்கள் பிரெஞ்சு ஓய்வூதிய முறையின் நிதியியல் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்த வேண்டியதன் அவசியத்தால் கட்டளையிடப்படுகின்றன என்ற பொய்யை உதறித்தள்ளினார். இது உண்மையில் வங்கிகளுக்கும் போர் இயந்திரத்திற்கும் வழங்கப்படும் ஒரு பெரிய பிச்சையாகும்.

ஆரம்ப வர்த்தகத்தில் கடுமையாக வீழ்ச்சியடைந்த பிரான்சின் CAC-40 பங்குச் சுட்டெண், பிரதமர் போர்ன் பாராளுமன்றத்தில் 49-3 வது சரத்தை பயன்படுத்தப் போவதாக கூறியதைத் தொடர்ந்து உயர்ந்தது. நிதியாளர்கள் மேலும் அதிக லாபத்தை எதிர்பார்க்கும் நிலையில், CAC-40, 120 புள்ளிகளுக்கு மேல் அதிகரித்து 7,000க்கு மேல் சென்றது.

மக்ரோன் அரசாங்கம் ஓய்வூதிய வெட்டுக் குறைப்புகளைச் சுமத்துவதில் உறுதியாக உள்ளது. பிரதமர் போர்ன் TF1 தொலைக்காட்சிக்கு ஒரு முக்கிய நேர்காணலை அளித்தபோது, அதில் தனது சாதனையை ஆதரித்தார், ஓய்வூதிய வெட்டுக்களுக்கு பாரிய மக்கள் எதிர்ப்பு பற்றிய செய்தியாளர்களின் கேள்விகளை நிராகரித்த அவர், மேலும் வெட்டுக்கள் தொடரும் என்று உறுதியளித்தார்.

சமூக ஜனநாயகவாத, பிரெஞ்சு ஜனநாயக தொழிலாளர் கூட்டமைப்பு (CFDT) மற்றும் ஸ்ராலினிச தொழிலாளர் பொதுக் கூட்டமைப்பு (CGT) உட்பட கடந்த இரண்டு மாதங்களாக தேசிய வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ள தொழிற்சங்க கூட்டணியும் நேற்று இரவு ஒரு சுருக்கமான செய்தியாளர் மாநாட்டை நடத்தியது. மார்ச் 23 அன்று மற்றொரு ஒரு நாள் வேலைநிறுத்தத்திற்கு அவர்கள் அழைப்பு விடுத்தனர்.

இது பிரான்ஸ் மற்றும் ஐரோப்பா முழுவதும் உள்ள தொழிலாளர்களுக்கு முட்டுச்சந்தாக இருக்கிறது. தன்னுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு எதுவும் இல்லை என்றும், பொதுக் கருத்தின் மீது முரட்டுத்தனமாக நடந்து கொள்வதில் உறுதியாக இருப்பதாகவும் மக்ரோன் தெளிவுபடுத்தியுள்ளார். தொழிலாள வர்க்கத்தை வறுமையில் ஆழ்த்தும் மற்றும் போருக்கு இழுக்கும் மக்ரோனின் முயற்சிகளை முறியடிக்க, தொழிலாளர்கள் முதலில் தொழிற்சங்க அதிகாரத்துவங்களின் கைகளில் இருந்து போராட்டத்தை எடுத்துக் கொள்ள வேண்டும். அத்துடன், மக்ரோன் அரசாங்கத்தை வீழ்த்த, அரசியல் போராட்டத்தை நடத்த சாமானிய தொழிலாளர்களின் நடவடிக்கை குழுக்களை உருவாக்க வேண்டும்.

ஆளும் பிரெஞ்சு ஸ்தாபனத்திற்குள் ஒரு பீதி நிறைந்த சூழலில், முதலாளித்துவ பத்திரிகையாளர்களும், போலி-இடது அரசியல்வாதிகளும், தொழிலாளர்கள் மக்ரோனின் மனதை மாற்றுமாறு கெஞ்சுவது அல்லது பாராளுமன்ற உறுப்பினர்களிடம் அவரது அரசாங்கத்தை கண்டித்து புதிய தேர்தலை நடத்துமாறு கெஞ்சுவதுடன் தங்களை மட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கோஷமிடுகின்றனர். இது நிலைமையைக் கட்டுப்படுத்தி, மக்ரோனுக்கு எதிரான ஒரு புரட்சிகரப் போராட்டத்தைத் தடுப்பதற்காக, தொழிற்சங்க அதிகாரத்துவத்திற்கு கால அவகாசம் கொடுப்பதற்கான  அவநம்பிக்கையான முயற்சியாகும்.

BFM-TV யின் தலையங்க ஆசிரியர் பெர்னார்ட் டுஹாமெல் அவநம்பிக்கையுடன், மரியான் பத்திரிகை தலைமை ஆசிரியர் நட்டாச்சா போலோனியிடம் இதுபற்றி கேட்டபோது, 'இது கட்டுப்பாட்டை மீறிச் செல்லும் ஒன்றின் தொடக்கமாகும். … பிரதிநிதித்துவ ஜனநாயகம் இனி மக்களின் குரலை வெளிப்படுத்த அனுமதிக்காது. ஆபத்து என்னவென்றால், தொழிற்சங்கம் நடத்தாது, தொழிற்சங்கத் தலைமைகளால் நடத்த முடியுமா?' என்று கருத்துத் தெரிவித்தார்.

2022 ஜனாதிபதி வேட்பாளரான ஜோன் லூக் மிலோன்சோனின் புதிய மக்கள் ஒன்றியக் கூட்டணியின் உறுப்பினர்கள், மக்ரோனும் ஆளும் உயரடுக்கும் திடீரென வெட்டுக்களைக் கைவிடுவார்கள் என்ற மாயையை விதைத்துள்ளனர்.  'நாங்கள் ஒரு பெரிய அரசியல் நெருக்கடியில் இருக்கிறோம்,' என்று பசுமைக்கட்சி அரசியல்வாதியான சாண்ட்ரின் ரூசோ கூறினார். வலதுசாரி LR கட்சியை நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு உறுதியான வாக்குகளை வழங்குமாறும் புதிய தேர்தல்களை நடத்துமாறும் அவர் கேட்டுக் கொண்டதோடு, 'விஷயங்கள் அமைதியாக இருக்க வேண்டும், விஷயங்களை அமைதிப்படுத்தும் பொறுப்பு அரசாங்கத்திற்கு உள்ளது' என்று மேலும் கூறினார்.

“சமூக நல்லிணக்கம் மீண்டும் நிலைநாட்டப்பட வேண்டும். திரு. மக்ரோன் சுயநினைவுக்கு வர வேண்டும்,” என்று மிலோன்சோனுடைய  அடிபணியாத  பிரான்ஸ் (La France Insoumise - LFI) கட்சியின் பிரான்சுவா ரபின் கூறினார். பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சியின் (PCF) ஸ்ராலினிசத் தலைவர் ஃபேபியன் ரூசல், மக்ரோனிடம் தனது நிலைப்பாட்டை மறுபரிசீலனை செய்யும்படி நான்கு மில்லியன் கையெழுத்துக்களை சேகரிக்க ஒரு மனு பிரச்சாரத்தை ஏற்பாடு செய்வதாக உறுதியளித்துள்ளார். “இத்தகைய மனுவை எந்தக் குடியரசுத் தலைவர் அவமதித்து செயல்படுவார்?’’ என்று  ரூசல் இழிந்த முறையில் கேட்டார்.

இது ஒரு மோசடியாகும். பிரான்சில் 50 மில்லியன் மக்கள் மற்றும் 3 மில்லியன் வேலைநிறுத்தக்காரர்களின் எதிர்ப்பை மிதிக்க மக்ரோன் தயாராக இருந்தால், அவர் 4 மில்லியன் கையெழுத்துக்கள் கொண்ட மனுவை எளிதாக நிராகரிக்க முடியும்.

தொழிற்சங்க அதிகாரத்துவமும் திரைக்குப் பின்னால் முதலாளிகளுடன் பேச்சு வார்த்தைகளிலும், இப்போது ஊடகங்களிலும் தொழிலாளர்களை நசுக்க தன்னால் இயன்ற அனைத்தையும் செய்யும் என்று கடுமையாக சமிக்ஞை செய்கிறது. பாரிஸ் பொதுப் போக்குவரத்திற்குப் பொறுப்பான தொழிலாளர் சக்தி (FO) என்ற தொழிற்சங்க அதிகாரத்துவத்தைச் சேர்ந்த ஜோன்-கிறிஸ்தோப் டெப்ரா, 'விஷயங்கள் கட்டுப்பாட்டை மீறும் அபாயத்தில் உள்ளன. எல்லோரும் அவர்கள் விரும்பியதைச் செய்யும், பெரிய குழப்பமாக மாறும் அபாயம் உள்ளது'' என்று புகார் தெரிவித்தார்.

'ஒரு குறிப்பிடத்தக்க கிளர்ச்சி சாத்தியம்' என்று CGT - ஆற்றல்துறை தொழிற்சங்க  அதிகாரத்துவ அதிகாரி ஃபிரடெரிக் பென் எச்சரித்தார். 'நாங்கள் இயக்கங்களின் தீவிரமயமாக்கலுக்கு எதிராக போராடுகிறோம்... ஆனால் மறியல் போராட்டத்தில், CGT உறுப்பினர்கள் மட்டும் இல்லை. தொழிலாளர்கள், அவர்கள் விரும்பியதைச் செய்கிறார்கள்'' என்று குறிப்பிட்டார்.

இந்த அறிக்கைகள் மக்ரோனின் வரவிருக்கும் ஒடுக்குமுறைகளுக்கு எதிரான, எதிர்ப்பை அணிதிரட்டாமல் இருப்பதற்கான உறுதிப்பாட்டை உருவாக்குகின்றன. ஏற்கனவே நேற்று, கலகத்தடுப்பு பொலிசார் பாரிஸில் வேலைநிறுத்தம் செய்த குப்பை சேகரிப்பவர்களின் மறியல் போராட்டங்களை கலைத்ததோடு, CGT ஆற்றல்துறை வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், தொழிலாளர்களின் வீடுகளுக்கு இலவச மின்சாரத்தை விநியோகித்ததற்காக பலரைக் கைது செய்தனர்.

ஒரு புரட்சிகர சோசலிச முன்னோக்குடன் ஆயுதபாணியாக்கப்பட்ட, தொழிலாள வர்க்கத்தின் சுயாதீனமான மற்றும் சாமானிய நடவடிக்கை அமைப்பினால் மட்டுமே, தொழிலாளர்களின் போராட்டங்களை கழுத்தை நெரித்து மக்ரோனுக்கு வெற்றியைக் கொடுக்கும் அதிகாரத்துவத்தின் முயற்சிகளை முறியடிக்க முடியும். பிரான்சில் வெளிப்படுவது மக்ரோன்-போர்ன் அரசாங்கத்துடன் பேச்சுக்களால் தீர்க்கப்படக்கூடிய அல்லது அதனை திருத்தக்கூடிய ஒரு தேசிய நெருக்கடி அல்ல. மாறாக, இது பிரான்சில் உலக முதலாளித்துவத்தின் தீர்க்க முடியாத பொருளாதார மற்றும் இராணுவ நெருக்கடியின் வெளிப்பாடாகும்.

அத்தோடு, இந்த நெருக்கடியை சீர்திருத்தங்கள் அல்லது பாராளுமன்ற சூழ்ச்சிகளால் தீர்க்க முடியாது. மாறாக, பிரான்சிலும் ஐரோப்பா முழுவதிலும் மற்றும் சர்வதேச அளவிலும் சோசலிசத்தை கட்டியெழுப்ப போராடும் தொழிலாள வர்க்க அமைப்புகளுக்கு அரச அதிகாரத்தை மாற்றுவதன் மூலம் மட்டுமே இதனைத் தீர்க்க முடியும்.

Loading