இலங்கையில் உள்நாட்டுப் போர் தொடங்கி நாற்பது ஆண்டுகள்

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.

நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு, 1983 ஜூலை கடைசி நாட்களில், ஐக்கிய தேசியக் கட்சி (ஐ.தே.க.) அரசாங்கத்தினதும் பாதுகாப்புப் படைகளினதும் ஆதரவுடன் சிங்களப் பேரினவாத குண்டர்கள் கொழும்பு மற்றும் இலங்கையின் பிற பகுதிகளில் தமிழர்களுக்கு எதிரான படுகொலைகளை கட்டவிழ்த்துவிட்டனர். இது பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக அடுத்தடுத்து வந்த அரசாங்கங்களால் நடத்தப்பட்ட 26 ஆண்டுகால இனவாதப் போரைத் தூண்டியது.

1 ஆகஸ்ட் 1983 அன்று இலங்கையின் கொழும்பு நகரின் புறக்கோட்டை பகுதியில் தமிழர்களின் கடைகள் எரிக்கப்பட்டன. இனக் கலவரத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழர்களின் கடைகளும் வீடுகளும் அழிக்கப்பட்டன. [AP Photo/JLR]

யுத்தமானது தமிழ், சிங்களம் மற்றும் முஸ்லீம்களுமாக இலட்சக் கணக்கான உயிர்களை காவுகொண்டதுடன் பலரின் வாழ்க்கை நிலைமைகளை, பிரதானமாக தீவின் வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள தமிழ் சிறுபான்மையினரின் வாழ்க்கை நிலைமைகளை அழித்தது. 2009 மே மாதம் விடுதலைப் புலிகள் இராணுவத்தால் நசுக்கப்பட்டு பல்லாயிரக்கணக்கான தமிழ் பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டதன் மூலம் மோதல் இரத்தக்களரியில் முடிவுக்கு வந்தது.

இந்த நீடித்த உள்நாட்டுப் போர் இலங்கையிலும் சர்வதேச அளவிலும் உள்ள தொழிலாள வர்க்கத்திற்கு முக்கியமான மூலோபாய படிப்பினைகளைக் கொண்டுள்ளது. யுத்தம் முடிவடைந்து 14 வருடங்கள் நிறைவடைந்த போதிலும், மோதலுக்கு வழிவகுத்த அரசியல் பிரச்சினைகள் தீர்க்கப்படாமல் தொடர்ந்தும் இலங்கையை சீரழித்துக்கொண்டிருக்கின்றன.

40 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட படுகொலைகள் 1983 ஜூலை 23 அன்று புலிகளால் கொல்லப்பட்ட 13 இலங்கை இராணுவத்தின் மரணத்தால் தூண்டப்பட்டது. அரசாங்கத்தின் ஒப்புதலுடன், அதே நாள் இராணுவம் சடலங்களை கொழும்புக்கு கொண்டு வந்து, தமிழர் விரோத வன்முறைக்கு சாக்குப்போக்கு அளித்தது.

துப்பாக்கிகள், வெடிமருந்துகள், கோடாரிகள், கத்திகள் மற்றும் தடிகளுடன் நன்கு ஒழுங்கமைக்கப்பட்ட குண்டர்கள், தேர்தல் வாக்காளர்கள் பட்டியல்களையும் பெற்றுக்கொண்டு, தமிழர் வீடுகள் மற்றும் வணிகங்களை குறிவைத்தனர். ஜனாதிபதி ஜே.ஆர். ஜயவர்தனவின் ஐ.தே.க. அரசாங்கத்தின் பூரண ஆதரவுடனேயே இந்தக் கும்பல் செயற்பட்டது. சில அமைச்சர்கள் தாக்குதல்களை ஒழுங்கமைப்பதிலும் வழிநடத்துவதிலும் ஈடுபட்டனர். ஆயுதப் படைகளும் பொலிசும் வன்முறையில் நேரடியாகப் பங்கேற்றன, அல்லது கண்டும் காணாதது போல் இருந்துவிட்டன.

அதிகாரப்பூர்வமாக, கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 300, ஆனால் உண்மையான எண்ணிக்கை குறைந்தது ஆயிரம் இருக்கும். நூற்றுக்கணக்கான தமிழ் பெண்கள் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டனர். 2 இலட்சத்து 50 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் இடம்பெயர்ந்தனர். கொழும்பு வெலிக்கடை சிறைச்சாலையில் 52 தமிழ் கைதிகள் சிறை அதிகாரிகளின் துணையுடன் படுகொலை செய்யப்பட்டனர். தமிழர்களுக்குச் சொந்தமான ஆயிரக்கணக்கான வீடுகள், கடைகள் எரித்து நாசமாக்கப்பட்டன.

ஜனாதிபதி ஜயவர்த்தன ஜூலை 28 அன்று தேசிய தொலைக்காட்சியில் தோன்றி இனவாத படுகொலைகளை நியாயப்படுத்தினார். “பயங்கரவாதிகளின் வன்முறையின் காரணமாக, சிங்கள மக்கள் தாங்களே எதிர்வினையாற்றியுள்ளனர்” என்று ஜயவர்தன கூறினார். நாட்டைப் பிரிப்பதை ஆதரிக்கும் அமைப்புகளை தடை செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அறிவித்த அவர், “சிங்கள மக்களின் இயல்பான விருப்பத்தையும் கோரிக்கையையும் திருப்திப்படுத்துவதற்கான ஒரே வழி இதுதான்” என்றும் அறிவித்தார்.

ஆகஸ்ட் 4 அன்று, அரசாங்கம் ஆறாவது அரசியலமைப்புத் திருத்தத்தை நிறைவேற்றி, “ஒற்றை ஆட்சிக்கு” விசுவாசப் பிரமாணம் செய்யாத அரசியல் கட்சிகள், பாராளுமன்றத்துக்கு அல்லது உள்ளூராட்சி சபைகளுக்குள் நுழைவதைத் தடைசெய்தது. ஒவ்வொரு அரசு ஊழியருக்கும் பணிநீக்கம் செய்யப்படக்கூடிய பீதியில் இதேபோன்ற உறுதிமொழியை எடுக்க உத்தரவிடப்பட்டது.

வடக்கும் கிழக்கும் உத்தியோகப் பூர்வமாக யுத்தப் பிரதேசங்களாக அறிவிக்கப்பட்டு, இந்த மாகாணங்களில் “இராணுவ நடவடிக்கைகளுக்கான உத்திகள்” இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் திஸ்ஸ வீரதுங்கவினால் வரையப்பட்டு ஆரம்பிக்கப்பட்டன.

1983 தமிழர் விரோதப் படுகொலைகள் முன்னெச்சரிக்கையின்றி தலைதூக்கவில்லை. அதன் திறந்த சந்தை கொள்கைகளுக்கு தொழிலாளர்கள் மத்தியில் வளர்ச்சிகண்ட பரவலான எதிர்ப்பை எதிர்கொண்ட ஜயவர்தன அரசாங்கம், கொழும்பு அரசியல் ஸ்தாபனம் கையிருப்பில் வைத்துக்கொண்டுள்ள பிற்போக்கு சூழ்ச்சியை நாடி, தொழிலாள வர்க்கத்தை பிளவுபடுத்த தமிழ்-விரோத பேரினவாதத்தையும் வன்முறையையும் தூண்டியது.

தேசிய பொருளாதார ஒழுங்குமுறை மற்றும் இறக்குமதி மாற்றீடு கொள்கையை முடிவுக்கு கொண்டு வந்து, சுதந்திர சந்தை திட்டத்தை ஏற்றுக்கொண்ட உலகின் முதல் நாடுகளில் இலங்கையும் ஒன்றாகும். ஆழமான பொருளாதார நெருக்கடியின் மத்தியில், 1977ல் ஆட்சிக்கு வந்த ஜயவர்தன அரசாங்கம், ரூபாயின் மதிப்பைக் குறைத்து, அரசுக்குச் சொந்தமான நிறுவனங்களை மூட அல்லது தனியார்மயமாக்கத் தொடங்கியதுடன், அத்தியாவசிய சமூக சேவைகளுக்கான செலவைக் குறைத்ததோடு அரிசி மற்றும் கோதுமை மா போன்ற அடிப்படை உணவுப் பொருட்களின் விலை மானியங்களையும் வெட்டிக் குறைத்தது.

தொழிலாளர்கள் மற்றும் நகர்ப்புற மற்றும் கிராமப்புற ஏழைகளுக்கு இதனால் ஏற்பட்ட விளைவுகள் பேரழிவை ஏற்படுத்தியதுடன் பெருகிய எண்ணிக்கையிலான வேலைநிறுத்தங்கள் மற்றும் எதிர்ப்புகளைத் தூண்டியது. 1980 ஜூலையில், அரசாங்க ஊழியர்கள் 300 ரூபாய் ஊதிய உயர்வைக் கோரி ஒரு பொது வேலைநிறுத்தத்தைத் தொடங்கிய போது, அரசாங்கம் 100,000 ஊழியர்களை வேலை நீக்கம் செய்து அதற்கு பதிலடி கொடுத்தது. லங்கா சமசமாஜக் கட்சி (ல.ச.ச.க.), ஸ்டாலினிச கம்யூனிஸ்ட் கட்சி (CP) மற்றும் மத்தியவாத நவசமசமாஜக் கட்சி (ந.ச.ச.க.) ஆகிய பிரதான தொழிலாள வர்க்கக் கட்சிகள், ஐ.தே.க. அரசாங்கத்தை வீழ்த்துவதற்கான அரசியல் போராட்டத்தை நடத்த மறுத்ததை அடுத்து வேலைநிறுத்தம் இறுதியில் நசுக்கப்பட்டது.

பரவலான எதிர்ப்புக்கு முகங்கொடுக்க, பெருந்தோட்ட மாவட்டங்களில் உள்ள தமிழ் தொழிலாளர்கள் மீது உட்பட, தீவு முழுவதும் ஏற்கனவே வன்முறைத் தாக்குதல்களுக்கு வழிவகுத்திருந்த தமிழர்-விரோத தாக்குதலை ஜயவர்த்தன தீவிரப்படுத்தினார். இதனால், நூற்றுக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதுடன் கிட்டத்தட்ட 100,000 பேர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற நிர்ப்பந்திக்கப்பட்டனர்.

1981 ஜூனில், பாதுகாப்புப் படையினர் மற்றும் பொலிசின் ஆதரவுடன், கொழும்பில் இருந்து திரட்டப்பட்ட குண்டர்கள், வடக்கு நகரான யாழ்ப்பாணத்திற்கு சென்று வெறியாட்டம் ஆடி, ஈடுசெய்ய முடியாத கையெழுத்துப் பிரதிகள் உட்பட மதிப்புமிக்க புத்தகங்களை சேமித்து வைத்திருந்த யாழ் பொது நூலகத்திற்கு தீ வைத்து எரித்தனர். இதற்குப் பின்னர் 1983 ஜூலை படுகொலை மற்றும் இனவாத யுத்தம் வெடித்தது.

1948ல் பிரித்தானிய காலனித்துவ ஆட்சியிலிருந்து உத்தியோகபூர்வ சுதந்திரம் பெற்ற பின்னர் உருவாக்கப்பட்ட இலங்கை அரசின் அடித்தளத்திலேயே ஜயவர்த்தன அரசாங்கத்தின் தமிழர்-விரோத பேரினவாதத்தை காணலாம். இரண்டாம் உலகப் போரின் பின்னர், பிரிட்டிஷ் காலனித்துவத்தின் கடைசி ஆண்டுகளில், குறிப்பாக 1946 மற்றும் 1947 இல் நடந்த பொது வேலைநிறுத்தங்கள் உட்பட, தோட்டத் தொழிலாளர்களதும் ஏனைய தொழிலாளர்களதும் வர்க்கப் போராட்டத்தின் அபிவிருத்திகளை ஆளும் வர்க்கம் எதிர்கொண்டது.

1948ல் ஆட்சிக்கு வந்த ஐ.தே.க. அரசாங்கத்தின் முதல் நடவடிக்கைகளில் ஒன்று, பெருந்தோட்டங்களில் வேலை செய்வதற்காக இந்தியாவிலிருந்து ஒப்பந்தத் தொழிலாளர்களாகக் கொண்டுவரப்பட்ட இலட்சக்கணக்கான தமிழ்த் தொழிலாளர்களின் குடியுரிமை மற்றும் வாக்குரிமையை இல்லாதொழித்தது ஆகும். தொழிலாள வர்க்கத்தை இன ரீதியாக பிரித்து பலவீனப்படுத்துவதே இதன் நோக்கமாக இருந்தது.

எவ்வாறாயினும், பொது வேலைநிறுத்தங்களில் முன்னணி பாத்திரம் ஆற்றிக்கொண்டிருந்த நான்காம் அகிலத்தின் இலங்கைப் பிரிவான போல்ஷிவிக்-லெனினிஸ்ட் கட்சியின் (பி.எல்.பீ.ஐ.) ட்ரொட்ஸ்கிஸ்டுகள், குடியுரிமைச் சட்டத்தை எதிர்த்து, தொழிலாள வர்க்கத்தின் ஐக்கியத்துக்காக உறுதியுடன் போராடினர்.

கொல்வின் ஆர் டி சில்வா [Photo: Wikipedia]

பாராளுமன்ற விவாதத்தில், பி.எல்.பீ.ஐ. தலைவர் கொல்வின் ஆர் டி சில்வா, “அரசு தேசத்தை ஒத்திருக்க வேண்டும், தேசம் இனத்தை ஒத்திருக்க இருக்க வேண்டும்” என்ற ஆபத்தான பாசிசக் கோட்பாட்டைக் கண்டனம் செய்தார். வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள தமிழர்கள் இச்சட்டத்தின் மூலம் குறிவைக்கப்படவில்லை என்றாலும், இலங்கை அரசின் அடித்தளமாக இனவாதக் கொள்கை ஏற்றுக்கொள்ளப்பட்டவுடன், அவ்வாறு இலக்கு வைக்கப்படுவது “விரைவாக மட்டுமன்றி எளிதாகவும் கூட” இருக்கும் என்றும் அவர் எச்சரித்தார்.

இந்த எச்சரிக்கை வேகமாக உறுதிப்படுத்தப்பட்டது. 1953ல், ஐ.தே.க. அரசாங்கம், நாடு தழுவிய ஹர்த்தாலைத் (வேலைநிறுத்தங்கள் மற்றும் கடையடைப்புகள்) தூண்டிவிட்ட ஆழமான பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடியின் முன் மண்டியிட்டது. இந்தப் போராட்டங்கள் உழைக்கும் மக்களை இனவாத எல்லைகளுக்கு அப்பால் ஐக்கியப்படுத்தின.

சோசலிச வார்த்தைகளால் அலங்கரிக்கப்பட்ட வெளிப்படையான சிங்கள-பேரினவாத வேலைத்திட்டத்தின் அடிப்படையில் 1956ல் ஆட்சிக்கு வந்த, புதிதாக உருவாக்கப்பட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் (ஸ்ரீ.ல.சு.க.) பக்கம் திரும்புவதே ஆளும் வர்க்கத்தின் இதற்கான பிரதிபலிப்பாக இருந்தது. ஸ்ரீ.ல.சு.க. தலைமையிலான அரசாங்கம் சிங்களத்தை நாட்டின் ஒரே அரச கரும மொழியாக்கும் அதன் கொள்கையை நடைமுறைப்படுத்தியது. இதனால் வேலை இழந்த பல அரச ஊழியர்கள் உட்பட தமிழர்களை இது கடுமையாகப் பாதித்தது.

1983ல் வெடித்த உள்நாட்டுப் போரின் வேர்கள், வெறுமனே கொழும்பு ஆளும் வர்க்கம் ஊறிப்போயுள்ள தமிழர்-விரோத பேரினவாதத்தில் மட்டும் படர்ந்திருக்கவில்லை. மாறாக, 1950ல் மத்தியவாத ல.ச.ச.க.யில் பி.எல்.பீ.ஐ. கரைத்துவிடப்பட்டதிலும் ல.ச.ச.க.யின் அரசியல் பின்வாங்கலிலும் மற்றும் அது சிங்கள ஜனரஞ்சகவாதத்தையும் ஸ்ரீ.ல.சு.க.யையும் தழுவிக்கொண்டதிலும் அந்த வேர்கள் படர்ந்திருக்கின்றன. 1964ல், ல.ச.ச.க. சோசலிச அனைத்துலகவாதத்தை முழுமையாகக் கைவிட்டு, முதலாளித்துவ ஸ்ரீ.ல.சு.க. தலைமையிலான பிரதமர் சிறிமா பண்டாரநாயக்கவின் அரசாங்கத்தில் நுழைந்துகொண்டது.

ல.ச.ச.க.யின் மாபெரும் காட்டிக்கொடுப்புக்கு, நான்காம் அகிலத்திற்குள் இருந்த மைக்கல் பப்லோ மற்றும் ஏர்னஸ்ட் மண்டேல் தலைமையிலான ஒரு திருத்தல்வாதப் போக்கு உதவியும் ஒத்துழைப்பும் அளித்தது. இந்த திருத்தல்வாத போக்கு, தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகர பாத்திரத்தை நிராகரித்ததுடன் சோவியத் ஒன்றியத்தில் உள்ள ஸ்டாலினிச அதிகாரத்துவம், சமூக ஜனநாயக கட்சிகள் மற்றும் இலங்கை போன்ற நாடுகளில் ஸ்ரீ.ல.சு.க. போன்ற தேசியவாத சக்திகளுக்கும் நான்காம் அகிலத்தை அடிபணியச் செய்ய முயற்சித்தது. 1953 இல் உண்மையான ட்ரொட்ஸ்கிசத்தைப் பாதுகாப்பதற்காக பப்லோவாதிகளிடமிருந்து முறித்துக் கொண்டு உருவாக்கப்பட்டதே நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு (ICFI) ஆகும்.

ல.ச.ச.க. காட்டிக்கொடுப்பு தொழிலாள வர்க்கத்தினுள் பெரும் குழப்பத்தையும் திசைதிருப்பலையும் உருவாக்கியது. இது, இனவாத அரசியலை அடிப்படையாகக் கொண்ட பல்வேறு குட்டி-முதலாளித்துவ தீவிரவாதக் குழுக்களுக்கு கதவைத் திறந்து விட்டது. தெற்கில், 1966ல் மாவோவாதம், காஸ்ட்ரோவாதம் மற்றும் சிங்கள ஜனரஞ்சகத்தினதும் கலவையைக்கொண்டு மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) உருவாக்கப்பட்டதுடன் அது ஒடுக்கப்பட்ட கிராமப்புற இளைஞர்கள் மத்தியில் ஒரு தளத்தைப் பெற்றது.

1972 இல், ஸ்ரீ.ல.சு.க.-ல.ச.ச.க.-கம்யூனிஸ்ட் கட்சி கூட்டணி அரசாங்கம், சட்டமா அதிபர் மற்றும் ல.ச.ச.க. தலைவர் கொல்வின் ஆர் டி சில்வாவினால் வரையப்பட்ட, சிங்களம் மட்டும் மொழிக் கொள்கையுடன் பௌத்தத்தை அரச மதமாக உத்தியோகபூர்வமாக இணைத்து, ஒரு புதிய அரசியலமைப்பைக் கொண்டுவந்து. இது அரசாங்க வேலைவாய்ப்பு, பல்கலைக்கழக நுழைவு ஆகியவற்றில் தமிழர்களுக்கு எதிரான பாரபட்சமான நடவடிக்கைகளையும் சட்டமாக்கியது.

வடக்கில் தமிழ் இளைஞர்கள் பாரம்பரிய தமிழ் முதலாளித்துவக் கட்சிகளை கைவிட்டு, தனித்தமிழ் அரசிற்கான ஆயுதப் போராட்டத்தை முன்வைத்த விடுதலைப் புலிகள் உட்பட பல்வேறு தமிழ் குழுக்களைத் தழுவினர்.

ல.ச.ச.க. காட்டிக்கொடுப்பை எதிர்த்த ஒரு இளைஞர் குழு, 1968ல், சோசலிச சமத்துவக் கட்சியின் முன்னோடியான புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்தை (பு.க.க.) நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் இலங்கைப் பிரிவாக உருவாக்கியது.

புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்தின் பொதுச் செயலாளர் கீர்த்தி பாலசூரிய 1970 இன் ஆரம்பத்தில் புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகக் கூட்டத்தில் உரையாற்றுகிறார், துரதிர்ஷ்டவசமாக, தோழர் பாலசூரிய 1987 இல் முப்பத்தொன்பதே வயதில் இறந்தார்.

புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் மட்டுமே சோசலிச அனைத்துலகவாத வேலைத்திட்டத்தை முன்னிறுத்தி, அனைத்து வகையான இனவாத அரசியலையும் எதிர்த்ததுடன் சிங்களம், தமிழ் மற்றும் முஸ்லிம்களுமாக தொழிலாள வர்க்கத்தின் ஐக்கியத்திற்காகப் போராடியது. இறுதியாக 1983 இல் மோதல் வெடித்த போது, தொடர்ந்து போரை எதிர்த்த, தமிழர்களின் ஜனநாயக உரிமைகளை பாதுகாத்து, வடக்கு மற்றும் கிழக்கில் இருந்து இலங்கை இராணுவத்தை நிபந்தனையின்றி திரும்பப் பெறுமாறு கோரிய ஒரே கட்சி புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் மட்டுமே ஆகும்.

26 ஆண்டுகால யுத்தம், இலங்கை ஆளும் வர்க்கத்திற்கு எதிரான குற்றப்பத்திரிகையாக இருப்பதோடு லியோன் ட்ரொட்ஸ்கியின் நிரந்தரப் புரட்சிக் கோட்பாட்டையும் நிரூபித்துள்ளது. முதலாளித்துவ அபிவிருத்தி காலதாமதமான நாடுகளில் உள்ள முதலாளித்துவ வர்க்கம், வெகுஜனங்களின் ஜனநாயக மற்றும் சமூக அபிலாஷைகளை பூர்த்தி செய்ய இயல்பாகவே இலாயக்கற்றது என்பதை ட்ரொட்ஸ்கி விளக்கினார். சோசலிச அரசியலையும் சர்வதேச அளவில் சோசலிசத்திற்கான போராட்டத்தையும் செயல்படுத்த, தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் அரசாங்கத்திற்கான போராட்டத்தின் ஒரு பகுதியாக, அந்த பணி தொழிலாள வர்க்கத்தின் மீது சுமத்தப்படுகின்றது.

இந்தியாவின் ஆதரவுடன் தீவின் வடக்கு மற்றும் கிழக்கில் தனி ஈழத்தை உருவாக்க முயன்ற புலிகளின் பிரிவினைவாதக் கொள்கையையும் இந்தப் போர் விளக்கச்சித்திரம் போல் அம்பலப்படுத்தியுள்ளது. அதன் பல்வேறு சோசலிச வாய்ச்சவடால்கள் ஒருபுறம் இருக்க, விடுதலைப் புலிகளின் தனிநாடுக்கான அழைப்பு, தமிழ்த் தொழிலாளர்களைச் சுரண்டுவதன் மூலம் இலாபம் பெறுவதற்கான ஒரு களத்தைத் தேடும் தமிழ் முதலாளித்துவத்தின் நலன்களைப் பிரதிநிதித்துவப்படுத்தியது.

1987 ஜூலை, நெருக்கடியில் மூழ்கிய ஜயவர்த்தன ஆட்சியை பிணை எடுப்பதற்காக இந்திய அரசாங்கம் இந்திய-இலங்கை ஒப்பந்தத்தை கைச்சாத்திட்ட போது, புலிகள் இந்திய முதலாளித்துவத்தைப் பற்றி ஊக்குவித்த மாயைகள் அம்பலமாயின. மட்டுப்படுத்தப்பட்ட மாகாண சுயாட்சி வழங்கும் வாக்குறுதியின் பேரில், தமிழ் ஆயுதக் குழுக்களை நிராயுதபாணியாக்க வட இலங்கைக்கு இந்திய “அமைதி காக்கும்” துருப்புக்களை அனுப்பிய இந்த உடன்படிக்கையை புலிகள் ஆதரித்தனர். தெற்கில் கிராமப்புற அமைதியின்மையை நசுக்க ஜயவர்த்தன தனது இராணுவத்தை அனுப்புவதற்கு இந்த ஒப்பந்தம் அனுமதித்தது.

இந்த உடன்படிக்கைக்கு விடுதலைப் புலிகள் அளித்த ஆதரவு, தேசிய விடுதலை இயக்கங்கள் என்று அழைக்கப்படுவனவற்றுக்கு குழிபறித்த சர்வதேச அளவிலான ஆழமான முன்னெடுப்புகளை பிரதிபலித்தது. 1980 களில் உற்பத்தியின் பூகோளமயமாக்கல், தேசிய பொருளாதார ஒழுங்குமுறையின் அடிப்படையிலான அனைத்து திட்டங்களுக்கும் குழி பறித்ததுடன், இது கிழக்கு ஐரோப்பாவில் ஸ்டாலினிச ஆட்சிகளின் சரிவு மற்றும் 1991 இல் சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டதிலும் மிகத் தெளிவாக வெளிப்படுத்தப்பட்டது. தமது சோசலிச சோடனைகளையும் ஏகாதிபத்திய-எதிர்ப்பையும் விரைவில் கழற்றியெறிந்த புலிகள், வெளிநாட்டு மூலதனம் மலிவு உழைப்பைத் தமிழரிடம் இருந்து சுரண்டக்கூடியவாறான ஒரு தனி அரசை அமைப்பதற்கு உதவிபெற பெரும் வல்லரசுகளின் பக்கம் திரும்பியது.

தமிழ் மற்றும் சிங்கள தொழிலாளர்களை ஒன்றிணைக்கும் ஒரு வழிமுறையாக,” தமிழ் மக்களுக்கான சுயநிர்ணய உரிமைக்காக” வாதிட்ட புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம், நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவில் நடந்த பரந்த கலந்துரையாடலின் ஒரு பகுதியாக, அந்த கோரிக்கையில் இனி எந்த முற்போக்கான உள்ளடக்கமும் இல்லை என்ற முடிவுக்கு வந்தது. வடக்கு மற்றும் கிழக்கில் இருந்து இலங்கை ஆயுதப் படைகள் உடனடியாக வெளியேற வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை விடுத்து வரும் அதே வேளை, தெற்காசியாவிலும் சர்வதேச அளவிலும் சோசலிச குடியரசுகளின் ஒன்றியத்தின் ஒரு பகுதியாக ஸ்ரீலங்கா-ஈழம் சோசலிச குடியரசுக்கான அழைப்பை எங்கள் கட்சி அபிவிருத்தி செய்தது.

இனவாத யுத்தம் 2009 வரை இழுத்தடிக்கப்பட்ட அதேவேளை, விடுதலைப் புலிகளின் பிரிவினைவாத முன்னோக்கு அதை மேலும் மேலும் தனிமைப்படுதலை விளைவாக்கியது. இலங்கை இராணுவத்தின் குற்றங்களுக்கு சிங்கள மக்கள் மீது பழி சுமத்திய புலிகள், அப்பாவி சிங்கள மக்கள் மீது தாக்குதல் நடத்தியமை, கொழும்பு அரசாங்கத்தின் கைகளை மட்டுமே பலப்படுத்தியது. வடக்கு மற்றும் கிழக்கில், புலிகள் தமது அடக்குமுறையான ஜனநாயக விரோத ஆட்சியின் மூலம் தமிழ் உழைக்கும் மக்களை அதிகளவில் அந்நியப்படுத்தினர்.

விடுதலைப் புலிகளின் தோல்வி வெறும் இராணுவப் பேரழிவாக இருக்கவில்லை மாறாக அதன் அரசியல் வேலைத்திட்டத்தின் வங்குரோத்து நிலையை எடுத்துக்காட்டியது. இலங்கை இராணுவம் கொல்வதற்காக சுற்றிவளைத்த நிலையில், விடுதலைப் புலிகளால் இந்தியா மற்றும் சர்வதேச அளவில் உள்ளவர்கள் ஒருபுறம் இருக்க, இலங்கையில் உள்ள தொழிலாள வர்க்கத்திடம் கூட ஆதரவைக் கோர முடியவில்லை. மாறாக, அது “சர்வதேச சமூகத்திற்கு”, அதாவது கொழும்பின் போரை அரசியல் ரீதியாகவும் இராணுவ ரீதியாகவும் ஆதரித்து வந்த அமெரிக்கா மற்றும் இந்தியா போன்ற பெரும் வல்லரசுகளுக்கு தொடர்ந்து வீண் வேண்டுகோள்களை விடுத்தது.

நீடித்த உள்நாட்டுப் போரின் பிரச்சினைகள் எதுவும் தீர்க்கப்படவில்லை. இலங்கை இராணுவம் வடக்கு மற்றும் கிழக்கில் அதன் கடுமையான ஆக்கிரமிப்பைப் பேணி வருவதோடு, தமிழர்களின் அடிப்படை ஜனநாயக உரிமைகள் தொடர்ந்து நசுக்கப்படுவதுடன் முன்னெப்போதும் இல்லாத பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில், இனவாத பதட்டங்கள் மீண்டும் கிளறிவிடப்படுகின்றன.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்தால் கட்டளையிடப்பட்ட கடுமையான சிக்கன நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்துகிறது. இது சிங்களம் மற்றும் தமிழ் தொழிலாளர்கள் மற்றும் கிராமப்புற மக்கள் மத்தியில் பரவலான எதிர்ப்பையும் அமைதியின்மையையும் எதிர்கொள்கின்றது. தனது அரசாங்கத்தை ஸ்திரப்படுத்துவதற்கான அவநம்பிக்கையான முயற்சியில், விக்கிரமசிங்க, மாகாண சபைகளுக்கு அதிக அதிகாரப் பகிர்வை வழங்குவதன் மூலம் முதலாளித்துவ தமிழ் நாடாளுமன்றக் கட்சிகளின் ஆதரவை நாடுகிறார்.

கொழும்பில் தமிழர் விரோத இனவாதம் உடனடியாக அதன் தலையை தூக்கியுள்ளது. சிங்களப் பேரினவாதக் குழுக்கள் ஏற்கனவே தமிழர்களுக்கு அதிக அதிகாரம் கொடுத்து நாட்டைப் பிளவுபடுத்தத் தயாராகி வருவதாக விக்கிரமசிங்கவை கண்டிக்கும் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளன.

ஆகஸ்ட் தொடக்கத்தில், முன்னாள் இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஜகத் டயஸ், கொழும்பில் உள்ள ஒரு பௌத்த மையத்தில் சிங்களப் பேரினவாதக் கூட்டமொன்றில் உரையாற்றினார். அங்கு அவர் “அரசியலமைப்பு வழிவகையில் மூலம் ஈழத்தை நிறுவுவதற்கு உதவும் திட்டம் நடந்து கொண்டிருக்கிறது” என்று அவர் கூறினார். இச்சந்திப்பைப் பற்றி செய்தி வெளியிட்ட, சிங்கள பேரினவாத குழுக்களை ஊக்குவிப்பதில் பேர் போன தி ஐலண்ட் பத்திரிகை, அதிக மாகாண சுயாட்சி கொடுப்பதற்கு எதிரான பிரச்சாரத்தை டயஸ் முன்னெடுப்பார் என்று அறிவித்தது.

மற்றொரு சிங்கள தீவிரவாதக் குழுவான தேசிய சுதந்திர முன்னணி, விக்கிரமசிங்க புது டெல்லியுடனான பொருளாதார உடன்படிக்கைகளின் மூலம் “நாட்டின் இந்தியமயமாக்கலை” விரும்புவதாக குற்றம் சாட்டியுள்ளது. விக்கிரமசிங்க பாராளுமன்ற ஆதரவுக்காக நம்பியிருக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் (ஸ்ரீ.ல.பொ.ஜ.மு.) செயலாளர் சாகர காரியவசம், மாகாண சபைகளுக்கு அதிக அதிகாரங்கள் பகிர்வது பற்றிய கலந்துரையாடல்களுக்கு முன்னுரிமை கொடுப்பதற்கு எதிராக ஜனாதிபதியை எச்சரித்துள்ளார்.

இலங்கையின் முழு வரலாறும், குறிப்பாக தீவை நாசப்படுத்திய கொடூரமான உள்நாட்டுப் போர், தொழிலாள வர்க்கத்திற்கு அதன் வர்க்க நலன்களான கண்ணியமான, நல்ல ஊதியம் பெறும் வேலைகள், சமூக சேவைகள் மற்றும் வாழ்க்கை நிலைமைகளையும், பிளவுபடுத்தும் இனவாத அரசியலின் மூலம் பெற முடியாது என்று தொழிலாள வர்க்கத்துக்கு ஒரு கூர்மையான எச்சரிக்கையை உள்ளடக்கியுள்ளது. மாறாக, முதலாளித்துவ அமைப்பு மற்றும் தொழிற்சங்கங்கள் உட்பட அதன் அனைத்து பாதுகாவலர்களுக்கும் எதிராக, ஒடுக்கப்பட்ட கிராமப்புற உழைப்பாழர்களை அணிதிரட்டிக்கொண்டு, தொழிலாளர்கள் ஐக்கியப்பட்ட போராட்டத்தை நடத்த வேண்டியது மிகவும் அவசியமானதாகும்.

சோசலிச சமத்துவக் கட்சி, தொழிலாளர்கள் தங்களின் அடிப்படை ஜனநாயக மற்றும் சமூக உரிமைகளுக்காகப் போராட, ஒவ்வொரு வேலைத் தளத்திலும் கிராமப்புறங்களிலும், அனைத்து முதலாளித்துவக் கட்சிகளில் இருந்தும் சுயாதீனமாக, ஜனநாயக ரீதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட நடவடிக்கைக் குழுக்களை அமைக்குமாறு தொழிலாளர்களுக்கு அழைப்பு விடுக்கின்றது. அனைத்து வகையான இனவாத பாகுபாடுகளையும் அடக்குமுறைச் சட்டங்களையும் தூக்கியெறிந்து சோசலிசக் கொள்கைகளை அமுல்படுத்துவதற்கு தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகள் அரசாங்கமொன்றை அமைப்பதற்கான போராட்டத்தை முன்னெடுப்பதன் பேரில், நடவடிக்கைக் குழுக்களின் பிரதிநிதிகளை அடிப்படையாகக் கொண்ட ஜனநாயகத்துக்கும் சோசலிசத்துக்குமான தொழிலாளர்களதும் கிராமப்புற வெகுஜனங்களதும் மாநாட்டைக் கட்டியெழுப்ப நாங்கள் பிரச்சாரம் செய்கின்றோம்.

Loading