மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்
வகுப்புகளுக்குத் திரும்பும் மாணவர்கள் 20 ஆம் நூற்றாண்டின் இரண்டு உலகப் போர்களுக்குப் பின்னர் முதலாளித்துவ அமைப்புமுறையின் ஆழமான சர்வதேச நெருக்கடியை எதிர்கொள்கின்றனர். இந்த நெருக்கடி தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் முன் அரசியல் முன்னோக்கு குறித்து எரியும் கேள்விகளை எழுப்புகிறது.
ஏற்கனவே, உக்ரேனில் நேட்டோவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையிலான போரில் நூறாயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டுள்ளனர், இது ஐரோப்பாவையும் உலகையும் மூழ்கடிக்கும் அச்சுறுத்தலைக் கொண்டுள்ளது. வாஷிங்டனும் ஐரோப்பிய ஏகாதிபத்திய சக்திகளும் பெரும் சக்திகளுக்கு இடையே போர்களை நடத்துவதற்காக தங்கள் படைகளை பலப்படுத்தி வருகின்றன. வசந்த காலத்தில் மக்ரோனின் ஓய்வூதிய சீர்திருத்தத்தைப் போலவே, வெளிநாடுகளில் போர் தொடுக்கும் நேட்டோ நாடுகள் உள்நாட்டில் தொழிலாளர்களைத் தாக்குகின்றன: அதாவது உண்மையில், இந்தச் சீர்திருத்தம் 2030 வரை பிரெஞ்சு இராணுவ வரவுசெலவுத் திட்டமான 100 பில்லியன் யூரோக்களை அதிகரிப்பதற்கு நிதியளிக்க பயன்படுத்தப்படுகின்றது.
அணுஆயுதப் போரைத் தூண்ட அச்சுறுத்தும் நேட்டோ-ரஷ்யா மோதலை நிறுத்துவதற்கு அவசியமாக இருப்பது, தொழிலாளர்களும் இளைஞர்களும் தொழிலாள வர்க்கத்தின் சர்வதேசிய புரட்சிகர மரபுகளுடன் இணைப்பை நிறுவும் ஒரு அரசியல் மூலோபாயத்தையும் முன்னோக்கையும் பின்பற்ற வேண்டும். உண்மையில், தொழிற்சங்க அதிகாரத்துவங்களால் கட்டுப்படுத்தப்படும் அணிதிரட்டல்கள் மூலம் நேட்டோ அரசாங்கங்களுக்கு 'அழுத்தம் கொடுப்பதன்' மூலம் அவர்களால் போரை நிறுத்தவோ அல்லது கணிசமாக குறைவாக்கவோ முடியாது.
நேட்டோவின் ஏகாதிபத்திய அரசாங்கங்கள் வெகுஜன அழுத்தத்தை புறக்கணித்து, தொழிலாளர்களின் எதிர்ப்பை நசுக்குவதன் மூலம் போர் மற்றும் சமூக தாக்குதல்களை தீவிரப்படுத்தி வருகின்றன. இவை, மக்களுக்கு எதிராக வெளிப்படையாக ஆட்சி செய்ய தயங்க மாட்டார்கள். நிதியச் சந்தைகள் மற்றும் நேட்டோவின் இராணுவத் தலைமையின் ஆதரவுடன், மக்ரோன் பிரெஞ்சு மக்களில் முக்கால்வாசியினரின் எதிர்ப்பை எதிர்கொண்டு ஏப்ரல்-மே மாதங்களில் தனது ஓய்வூதிய சீர்திருத்தத்தை திணித்தார்.
நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் (ICFI) பிரெஞ்சுப் பிரிவான சோசலிச சமத்துவக் கட்சி (PES), ஓய்வூதிய சீர்திருத்தத்திற்கு எதிரான அணிதிரட்டலின் போது, மக்ரோனுக்கு எதிரான அரசியல் போராட்டத்தில் தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்டுவது இன்றியமையாதது என்று விளக்கியது. மக்ரோனை வீழ்த்த போராடுவதன் மூலமே வங்கிகளின் சேவையாளரான மக்ரோனுக்கும் தொழிற்சங்க அதிகாரத்துவங்களுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடத்திய ஒரு பிற்போக்குத்தனமான சீர்திருத்தம் தடுக்கப்படும் என்று கூறியது. அத்தகைய ஒரு போராட்டம் அதிகாரத்திற்காகவும் சோசலிசத்தைக் கட்டியெழுப்புவதற்காகவும் தொழிலாள வர்க்கத்தின் போராட்டத்தை அவசியமாக குறிக்கிறது.
இப்போது, நேட்டோ-ரஷ்யா போரை எதிர்கொண்டுள்ள நிலையில், பிரான்சிலும் ஐரோப்பா மற்றும் உலகெங்கிலும் ஒரு அரசியல் பாய்ச்சல் அவசியமாகும். வங்கிகள் மற்றும் முதலாளித்துவ அரசாங்கங்களின் நலன்களிற்கான சேவையாக ஊடகங்களால் மறைக்கப்பட்டுள்ள அரசியல் யதார்த்தம் குறித்து தொழிலாளர்களுக்கும் இளைஞர்களுக்கும் எச்சரிக்கப்பட வேண்டும். முதலாளித்துவம், 20 ஆம் நூற்றாண்டைப் போலவே, மீண்டும் ஒரு உலகப் போரிலும் அதிதீவிர வலதுசாரிகளின் பிற்போக்குத்தனத்திலும் மூழ்குகிறது.
தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களுக்கு முன் நிறையவே பணிகள் உள்ளன. இந்த போரின் தன்மையானது கடந்த வாரம் நாஜி போர் குற்றவாளியான வாஃபென்- SS இன் 98 வயதான உக்ரேனிய உறுப்பினரான யாரோஸ்லாவ் ஹுங்காவுக்கு கனேடிய பாராளுமன்றம் வழங்கிய ஒருமித்த வரவேற்பில் வெளிப்படுகிறது.
அனைத்து கனேடிய நாடாளுமன்றக் கட்சிகளும் ஒரு நாஜி ஒத்துழைப்புவாதியை ரஷ்ய-விரோத தேசிய விடுதலையின் நாயகன் என்று ஏன் பாராட்டின? முதலாவதாக நேட்டோ, உக்ரேனிய அதிவலதுகளான அசோவ் பட்டாலியன் மற்றும் நாசிசத்துடனான உக்ரேனிய ஒத்துழைப்பின் தலைவரான ஸ்டீபன் பண்டேராவை பாராட்டும் பிற ஒட்டுக் குழுக்களுடன் கூட்டு சேர்வதன் மூலம் தனது போரை நடத்தி வருகிறது. பிரதான ஊடகங்கள் இந்த யுத்தத்தை ஒரு ஜனநாயகப் போராட்டமாக சித்தரிப்பது பொய்களின் தொகுப்பாகும்.
இன்னும் பரந்த அளவில், பெரும் சக்திகளுக்கு இடையிலான புதிய அதிஉயர்-தீவிரம் கொண்ட போர்களுக்கு தன்னை மீண்டும் கட்டியெழுப்பவும், ஐரோப்பாவில் சமூக எதிர்ப்பை நசுக்கவும், ஏகாதிபத்தியம் பாசிசத்தின் பயங்கரமான பாரம்பரியத்தை சட்டபூர்வமாக்குவதைத் தவிர வேறு எந்த அரசியல் பாதையையும் காணவில்லை. இது ஐரோப்பா முழுவதிலும் நவ-பாசிசக் கட்சிகள் மற்றும் ஒடுக்குமுறை போலிஸ் அரசுகளின் ஒருங்கிணைப்புடன் கைகோர்த்துச் செல்கிறது.
மக்ரோனின் சீர்திருத்தங்களைப் போலவே, இந்த வளர்ச்சியும் பிரான்சிலும் அதற்கு அப்பாலும் உள்ள தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களின் மிகப் பெரும்பான்மையான எதிர்ப்பை எதிர்கொள்கிறது. ஆனால், ஆளும் உயரடுக்கின் எந்தக் கட்சியும் அல்லது தொழிற்சங்க அதிகாரத்துவங்களுடன் தொடர்புடைய போலி-இடது அரசியல் மத்தியிலும் இந்த எதிர்ப்புகள் அணிதிரட்டப்படவில்லை. இந்த போரை ரஷ்யாவிற்கு எதிரான உக்ரேனின் 'ஜனநாயக' போராட்டம் போல் தோற்றமளிக்கும் ஏகாதிபத்திய ஊடகங்களுக்கு இவர்கள் அனைவரும் தலைவணங்குகின்றனர்.
நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவும் (ICFI) பிரான்சில் சோசலிச சமத்துவக் கட்சியும் (PES) போர் மற்றும் நேட்டோ அரசாங்கங்கள் மற்றும் முன்னாள் ஸ்ராலினிச ரஷ்ய மற்றும் உக்ரேனிய ஆட்சிகளுக்கு எதிரான போராட்டத்தில் தொழிலாளர்களை ஐக்கியப்படுத்தும் திறன் கொண்ட ஒரு புரட்சிகர வரலாற்று மற்றும் அரசியல் முன்னோக்குடன் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களை ஆயுதபாணியாக்கும் போராட்டத்தை வழிநடத்துகின்றன. போர் மற்றும் சமூக பிற்போக்குத்தனத்திற்கு எதிரான தொழிலாளர்களின் எதிர்ப்பின் மீது உத்தியோகபூர்வ ஊடகங்களும் அரசியல் வர்க்கமும் திணித்துள்ள நெருக்கடி உடைக்கப்பட வேண்டும். இதற்கு தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களிடையே அவர்களை அரசியல்ரீதியாக ஆயுதபாணியாக்குவதற்கும் இயக்கத்தை தயாரிப்பதற்கும் மிகவும் பரந்த கூட்டங்களையும் கலந்துரையாடல்களையும் ஒழுங்கமைப்பது அவசியமாகிறது.
நேட்டோ-ரஷ்யா போரானது, ஏகாதிபத்தியம் மற்றும் ஸ்ராலினிசத்தின் கூட்டு பிற்போக்குத்தன நடவடிக்கையின் விளைபொருளாகும். 1991 இல், ஸ்ராலினிச அதிகாரத்துவம் 1917 அக்டோபர் புரட்சியால் உருவாக்கப்பட்ட சோவியத் ஒன்றியத்தை கலைத்து, முதலாளித்துவத்தை மீட்டெடுத்து, இப்போது ஒருவருக்கொருவர் போரில் இருக்கும் தேசிய முதலாளித்துவ குடியரசுகளை உருவாக்கியது. நேட்டோவிற்கு பிரதான இராணுவ மற்றும் அரசியல் எதிர்பலத்தின் (சோவியத் ரஷ்யா) கலைப்பு 30 ஆண்டுகால ஏகாதிபத்திய போரை துவக்கியது: அதாவது ஈராக், யூகோஸ்லாவியா, ஆப்கானிஸ்தான், லிபியா, சிரியா, மாலி ஆகிய நாடுகளிலாகும்.
இது அக்டோபர் புரட்சியின் தலைவரும், ஸ்ராலினிச அதிகாரத்துவத்தின் புரட்சிகர எதிர்ப்பாளரும், நான்காம் அகிலத்தின் ஸ்தாபகருமான ட்ரொட்ஸ்கியின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுகிறது. முதலாளித்துவத்திற்கும் எதிர்ப்புரட்சிகர சோவியத் அதிகாரத்துவத்திற்கும் அதன் மார்க்சிச எதிர்ப்பானது நேட்டோவையும் மற்றும் ரஷ்ய மற்றும் உக்ரேனிய ஆட்சிகள் இரண்டையும் எதிர்ப்பதற்கான அரசியல் அடித்தளத்தை வழங்குகிறது. நேட்டோ, புட்டின் மற்றும் செலன்ஸ்கிக்கு எதிராக தொழிலாளர்களை அணிதிரட்டுவதற்காக, சோசலிச சமத்துவக் கட்சி (PES) இந்த ஆண்டு ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின் வரலாற்று ஆண்டு நிறைவுகளின் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறது.
100 ஆண்டுகளுக்கு முன்பு, 1923ல், ட்ரொட்ஸ்கி சோவியத் ஒன்றியத்தில் உருவாகி வந்த ஸ்ராலினிச அதிகாரத்துவத்திற்கு எதிரான இடது எதிர்ப்பு அணியை ஸ்தாபித்தார். ஸ்ராலினிசம் 'ஒரு நாட்டில் சோசலிசம்' என்ற தேசியவாத மற்றும் பொய்யான கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்டது. அக்டோபர் புரட்சியின் தத்துவார்த்த அடிப்படையான நிரந்தரப் புரட்சிக்கு எதிரான இந்த ஸ்ராலினிச பிற்போக்குத்தனம், ஸ்ராலினிச களையெடுப்புகளுக்கும் இறுதியில் சோவியத் ஒன்றியத்தின் கலைப்புக்கும் வழிவகுத்தது. ஸ்ராலினிசத்திற்கு எதிராக, ட்ரொட்ஸ்கி மார்க்சிச சர்வதேசியவாதத்தின் தொடர்ச்சியை பாதுகாத்தார்.
70 ஆண்டுகளுக்கு முன்னர், 1953ல், நான்காம் அகிலத்திற்குள் தோன்றிய மைக்கேல் பப்லோ மற்றும் எர்னஸ்ட் மண்டேல் தலைமையிலான குட்டி-முதலாளித்துவ-ஸ்ராலினிச-சார்பு போக்குடன் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு (ICFI) பிளவுபட்டது. பாசிசத்திற்கு எதிரான எதிர்ப்பின் போது, ஐரோப்பிய தொழிலாளர்களின் கிளர்ச்சி இயக்கத்தின் கழுத்தை நெரித்து, வாஷிங்டன் மற்றும் லண்டனுடன் ஸ்ராலின் மேற்கொண்ட சூழ்ச்சிகளுக்கு அடிபணியச் செய்த அதிகாரத்துவங்களுக்கு பப்லோவாதப் போக்கு அடிபணிந்தது. இந்தப் பிளவானது குட்டி-முதலாளித்துவ-எதிர்ப்பு மார்க்சிச திருத்தல்வாதத்திற்கு எதிரான நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் (ICFI) போராட்டத்தினால் நிறுவப்பட்டது.
இந்த பிளவின் முக்கியத்துவத்தை, ஒரு முக்கிய உண்மையை ஆராய்வதன் மூலம் புரிந்து கொள்ளலாம். நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் (ICFI) பிரிவுகள் ஏகாதிபத்தியத்தையும் புட்டினையும் எதிர்க்கும் அதேவேளை, பப்லோவாதத்தின் இன்றைய வழித்தோன்றல்கள், புட்டினுக்கு எதிராக நேட்டோ மற்றும் உக்ரேனின் ஜனநாயகப் போராட்டம் என்ற பொய்யைப் பரப்புகின்றனர். பப்லோவாதத்தின் ஒரு பகுதியாக இருக்கும் போலி-இடதுகள் ஒரு எதிர்ப்புரட்சிகர பாத்திரத்தை வகிக்கிறது என்ற நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் பகுப்பாய்வுக்கு இது ஒரு காரணத்தை அளிக்கிறது.
ஒரு புறநிலையாக புரட்சிகரமான சர்வதேச நிலைமை உருவாகி வருகிறது. ஆபிரிக்காவில், பிரெஞ்சு ஏகாதிபத்தியம் மற்றும் நேட்டோவிற்கு எதிராக பெருந்திரளான தொழிலாளர்களும் இளைஞர்களும் அணிதிரள்கின்றனர். வசந்த காலத்தில், பாரிய வேலைநிறுத்தங்கள் ஐரோப்பாவை உலுக்கியது. அந்த நேரத்தில், பிரெஞ்சு மக்களில் மூன்றில் இரண்டு பங்கினர், பெரும்பான்மையான தொழிலாளர்கள் உட்பட, தொழிற்சங்க அதிகாரத்துவங்களுக்கும் மக்ரோனுக்கும் இடையிலான 'சமூக உரையாடலால்' எழுந்த போராட்டத்திற்கு எழுந்துள்ள தடையை கடக்க விரும்பினர். அவர்கள் மக்ரோனின் சீர்திருத்தங்களை நிறுத்த, அதாவது பொது வேலைநிறுத்தத்தின் மூலம் மக்ரோனை வீழ்த்த பொருளாதாரத்தை முடக்க விரும்பினர்.
ஆனால், உக்ரேனில் இராணுவ விரிவாக்கம் ஒரு எச்சரிக்கையாகும். ஏகாதிபத்தியம், போர் மற்றும் சோவியத்திற்குப் பிந்தைய முதலாளித்துவ தன்னலக்குழுக்களுக்கு எதிராக தொழிலாளர்களை ஐக்கியப்படுத்த ஒரு புரட்சிகர எதிர்த்தாக்குதலைத் தொடங்குவதில் இழக்க நேரமில்லை. தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களிடையே இந்த போராட்டத்தை வழிநடத்த உதவுமாறும், போருக்கு எதிரான போராட்டம் மற்றும் பாசிசத்தை சட்டபூர்வமாக்குவது குறித்து பல்கலைக்கழகங்கள் மற்றும் பணியிடங்களில் விரிவுரைகளை ஒழுங்கமைக்குமாறும் வகுப்புகளுக்குத் திரும்பும் மாணவர்களை சோசலிச சமத்துவக் கட்சி (PES) கேட்டுக்கொள்கிறது.
