இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.
இலங்கையில் சோசலிச சமத்துவக் கட்சி (சோ.ச.க.), திங்கட்கிழமை தோழர் ஆர்.எம். குணதிலகவின் 85வது பிறந்தநாளைக் கொண்டாடியது. இதில் குடும்ப உறுப்பினர்கள், கட்சி உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்களுமாக சுமார் 60 பேர் கலந்து கொண்டனர். அவர் சோசலிச சமத்துவக் கட்சியின் மூத்த உறுப்பினர், ட்ரொட்ஸ்கிசத்திற்காகப் போராடுவதில் சமரசமற்ற வரலாற்றைக் கொண்டவர்.
இந்தக் கூட்டம் ஒரு நிகழ்நிலை நிகழ்வாக ஏற்பாடு செய்யப்பட்டது. தோழர் குணதிலக, அவரது மனைவி ஹேமாவதி ரத்நாயக்க, இரண்டு மகள்கள் மற்றும் மகன் மற்றும் ஏழு பேரக்குழந்தைகளும் பதுளைக்கு அருகிலுள்ள ஹாலி-எலவில் உள்ள அவரது வீட்டிலிருந்து இணைந்து கொண்டனர். சோசலிச சமத்துவக் கட்சியின் பண்டாரவளை கிளையின் உறுப்பினர்களும் ஆதரவாளர்களும் கூட்டத்தை ஏற்பாடு செய்ய முன்முயற்சி எடுத்தனர்.
சோசலிச சமத்துவக் கட்சியின் முன்னோடியான புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் (பு.க.க.) 1968 ஜூனில் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் இலங்கைப் பிரிவாக ஸ்தாபிக்கப்பட்ட சில வாரங்களுக்குப் பிறகு குணதிலக அதில் இணைந்தார். அவர் அரசுக்குச் சொந்தமான இலங்கைப் போக்குவரத்து சபையின் (CTB) ஊழியராக இருந்தார்.
கூட்டத்திற்குத் தலைமை தாங்கிய சோசலிச சமத்துவக் கட்சியின் பொதுச் செயலாளர் தீபால் ஜயசேகர பேசும்போது, குணதிலக பு.க.க.யில் சேர்ந்ததிலிருந்து, ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக பு.க.க./சோ.ச.க.யின் சர்வதேச சோசலிச முன்னோக்கு மற்றும் வேலைத்திட்டத்திற்காக உறுதியாகப் போராடினார் என்று கூறினார்.
'ட்ரொட்ஸ்கிசத்தின் கொள்கைகளுக்கு அவர் உறுதியாக அர்ப்பணித்தமையும், அந்த முன்னோக்கிற்கான அவரது சளையாத போராட்டமும், ஐந்து தசாப்தங்களுக்கும் மேலான அவரது புரட்சிகர வாழ்க்கையின் அடிப்படை சாராம்சமாகும்.'
அரசின் பழிவாங்கல்கள், குண்டர்களின் தாக்குதல்கள் மற்றும் தொழிற்சங்க அதிகாரத்துவங்களின் துரோகம் உட்பட மிகப்பெரும் சிரமங்களை எதிர்கொண்ட போதிலும், தொழிலாள வர்க்கம் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்கள் மத்தியில் புரட்சிகர கொள்கைகளுக்கான தனது போராட்டத்தில் இருந்து குணதிலக ஒரு துளி கூட பின்வாங்கவில்லை என்று ஜயசேகர கூறினார். 'அதுதான் நாம் அவரது வாழ்க்கையிலிருந்து பெற வேண்டிய உதாரணம்' என்றும் அவர் தெரிவித்தார்.
பண்டாரவளை மற்றும் பதுளை பகுதிகளில் கட்சியின் அரசியல் பணிகளில் குணதிலகவுடன் நெருக்கமாகப் பணியாற்றிய தனது சொந்த அனுபவங்களை நினைவு கூர்ந்த ஜயசேகர கூறியதாவது: 'கட்சிக் கிளையின் கூட்டங்களின் போது, எந்தவொரு உறுப்பினரும் வெளிப்படுத்தும் எந்தவொரு அரசியல் தவறையும் எதிர்கொள்ள குணதிலக கூர்மையான, மிக ஆழமான கருத்துக்களை வெளியிடுவார். இத்தகைய கருத்துக்கள், அரசியல் ரீதியாக விளக்கி குறித்த தோழர்களுக்கு புரியவைப்பதை நோக்கமாகக் கொண்டிருந்தனவே அன்றி, எந்தவொரு அகநிலை உந்துதலாலும் இயக்கப்படவில்லை.'
தான் வசிக்கும் ஊவா மாகாணத்தில் தோட்டத் தொழிலாளர்கள் மற்றும் கிராமப்புற ஏழைகள் எதிர்கொள்ளும் சமூக மற்றும் அரசியல் பிரச்சினைகள் குறித்து கட்சியின் சிங்கள மற்றும் தமிழ் பத்திரிகைகளுக்கும், பின்னர் உலக சோசலிச வலைத் தளத்திற்கும் குணதிலகவின் முந்தைய பங்களிப்புகளை ஜயசேகர பாராட்டினார்.
இலங்கையில் உலக சோசலிச வலைத் தளத்தின் தேசிய ஆசிரியரான கே. ரட்நாயக்க, கட்சியின் முன்னணி ட்ரொட்ஸ்கிசப் காரியாளராக குணதிலகவின் போராட்டத்தை விளக்கி, அவரது அரசியல் வரலாற்றை வெளிக்கொணர்ந்தார்.
குணதிலக, போர்க்குணமிக்க தொழிலாளர் போராட்டங்கள் இடம்பெற்ற தேயிலைத் தோட்டங்களால் சூழப்பட்ட ஹாலி-எல பகுதியில் வளர்ந்தவராவார். லங்கா சம சமாஜக் கட்சிக்கும் (ல.ச.ச.க.), பின்னர் 1942 இல் அது பரிணமித்த ட்ரொட்ஸ்கிச இந்திய போல்ஷிவிக்-லெனினிஸ்ட் கட்சிக்கும், பெருந்தோட்டங்கள் உட்பட இந்திய மற்றும் இலங்கை தொழிலாளர்கள் மத்தியில் வலுவான ஆதரவு தளங்கள் இருந்தன.
குணதிலக லங்கா சமசமாஜக் கட்சியினால் ஈர்க்கப்பட்டார். 1964 ஆம் ஆண்டு பிரதமர் சிறிமா பண்டாரநாயக்கவின் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான (ஸ்ரீ.ல.சு.க.) அரசாங்கத்தில் இணைந்து கொண்டதன் மூலம் லங்கா சமசமாஜக் கட்சி செய்த வரலாற்றுக் காட்டிக்கொடுப்பின் ஒரு வருடம் கழித்து, 1965 ஆகஸ்டில் அவர் இலங்கை போக்குவரத்து சபையில் சேர்ந்தார். லங்கா சமசமாஜக் கட்சி ஒரு முதலாளித்துவ அரசாங்கத்தில் இணைவது குறித்து தொழிலாளர்கள் மத்தியில் ஒரு சூடான விவாதம் காணப்பட்டது.
குணதிலக அதை எதிர்த்தவர்களின் பக்கம் சாய்ந்து, லங்கா சமசமாஜக் கட்சியின் தொழிற்சங்க அதிகாரிகளின் அச்சுறுத்தல்களை எதிர்கொண்டார். இருப்பினும், மஹரகம இலங்கை போக்குவரத்துச் சபையின் டிப்போவிற்கு வெளியே கம்கரு புவத் (தொழிலாளர் செய்தி) பத்திரிகையை விற்றுக்கொண்டிருந்த பு.க.க. தோழர்களைச் சந்தித்தபோதே, லங்கா சமசமாஜக் கட்சியின் துரோகத்திற்கு தனது எதிர்ப்பை வெளிப்படுத்த அவருக்கு ஒரு அரசியல் வழி கிடைத்தது என்று ரத்நாயக்க கூறினார்.
'ஒரு தீவிரமான கலந்துரையாடலில், சந்தர்ப்பவாத பப்லோவாத போக்கு ட்ரொட்ஸ்கிசத்தை கைவிட்டமை எவ்வாறு ல.ச.ச.க. காட்டிக்கொடுப்புக்கு துணை போனது என்பதை விளக்கிய பு.க.க. தோழர்கள், காட்டிக்கொடுப்பின் வேர்களை விளக்கினர். இந்த திருத்தல்வாத போக்கை எதிர்த்துப் போராட 1953 இல் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு நிறுவப்பட்டது. பு.க.க.யின் ஸ்தாபக பொதுச் செயலாளர் மறைந்த கீர்த்தி பாலசூரியவும், அவருக்குப் பின்னர் வந்த விஜே டயசும் இந்தப் போராட்டத்தை இந்தப் பிராந்தியத்தில் வழிநடத்தினர்.
'சில வாரங்களில், குணதிலக பு.க.க.யில் சேர முடிவு செய்தார். இந்தக் கோட்பாட்டு அடித்தளம் கட்சியின் முன்னோக்கிற்கான குணதிலகவின் எதிர்காலப் போராட்டத்தை வடிவமைத்தது.
'தொழிலாள வர்க்கத்தின் ஏனைய பிரிவுகளைப் போலவே, 1970களில் இரண்டாவது கூட்டணி அரசாங்கத்திற்கு எதிரான போராட்டத்தில் இ.போ.ச. தொழிலாளர்கள் மத்தியில் வலுவான அடித்தளத்தை பு.க.க.வால் வென்றெடுக்க முடிந்தது. 'ல.ச.ச.க. மற்றும் சி.பி.யும் (ஸ்ராலினிச கம்யூனிஸ்ட் கட்சி) கூட்டணி அரசாங்கத்திலிருந்து முறித்துக் கொண்டு தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகள் அரசாங்கத்தை அமைக்க வேண்டும்' என்று பு.க.க. முன்வைத்த கோரிக்கை, இந்த சந்தர்ப்பவாதக் கட்சிகளை அம்பலப்படுத்துவதன் மூலம் தொழிலாளர்களுக்கு கல்வி கற்பிப்பதில் பெரிதும் உதவியதுடன், அதன் மூலம் கட்சி சிறந்த பிரிவினரை வென்றெடுக்க முடிந்தது.
'இந்தப் போராட்டத்தின்போது, குணதிலக தொழிற்சங்க அதிகாரிகளின் அச்சுறுத்தல்கள் மற்றும் தொழிற்சங்கத்திலிருந்து வெளியேற்றப்படல், பொலிஸ் கைது, வேலையில் இருந்து இடைநீக்கம் மற்றும் ஒரு டிப்போவிலிருந்து மற்றொரு டிப்போவிற்கு இடம் மாற்றல் உட்பட அரச துன்புறுத்தல்களை எதிர்கொண்டார். 'எனினும், அவரது புரட்சிகர விருப்பத்தை உடைக்க முடியவில்லை,' என்று ரத்நாயக்க விளக்கினார்.
1977இல் ல.ச.ச.க. மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியின் துரோகங்களின் விளைவாக, ஜனாதிபதி ஜே.ஆர். ஜயவர்தனவின் ஐக்கிய தேசியக் கட்சி (ஐ.தே.க.) அரசாங்கம் ஆட்சிக்கு வந்தது. திறந்த சந்தை பொருளாதாரக் கொள்கைகளை செயல்படுத்தத் தொடங்கியது அது, நலன்புரித் திட்டங்கள் மற்றும் அரச நிறுவனங்களை கலைத்தது.
ல.ச.ச.க., கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் மத்தியவாத நவ சமசமாஜக் கட்சி மற்றும் தொழிற்சங்கத் தலைமைகளின் காட்டிக்கொடுப்பால் தொழிலாளர்களின் எதிர்ப்பை ஈவிரக்கமின்றி ஜயவர்தன அடக்கினார். 1980 ஜூலையில், அரச ஊழியர்களின் ஒரு பொது வேலைநிறுத்தம் சுமார் 100,000 ஊழியர்களை வேலைநீக்கம் செய்வதன் மூலம் அடக்கப்பட்டது.
குணதிலக தனது வேலையை இழந்து, தனது சொந்த ஊருக்குத் திரும்ப வேண்டியிருந்தது. மிகப்பெரிய பொருளாதார சிரமங்களை எதிர்கொண்ட அவர், கட்சிப் பணியைத் தொடர்ந்த அதேநேரம் தனது குடும்பத்திற்கு உதவ விவசாயத்தைத் தொடங்கினார். பண்டாரவளையில் பு.க.க./சோ.ச.க. கிளையில் சேர்ந்த அவர், குறிப்பாக தோட்டத் தொழிலாளர்கள் மத்தியில் கட்சியின் பணியை அபிவிருத்தி செய்ய உதவினார். அவர் கொஞ்சம் தமிழ் அறிந்திருந்தார் மற்றும் தமிழ் பேசும் தொழிலாளர்கள் மத்தியில் பு.க.க.யின் பணிகளுக்கு பங்களிப்பு செய்தார்.
ஐ.தே.க.யின் தமிழர்-விரோத இனவெறி பிரச்சாரங்களும் தொழிலாள வர்க்கத்தை இன அடிப்படையில் பிளவுபடுத்தும் முயற்சிகளும், தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான இனவாதப் போரைத் தூண்டிவிட்டன. 2009 மே புலிகளின் தோல்வியுடன் இந்தப் போர் முடிவுக்கு வந்தது.
புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம்/சோசக கட்சி மட்டுமே போரை இடைவிடாமல் எதிர்த்ததோடு, தமிழ் சிறுபான்மையினரின் ஜனநாயக உரிமைகளுக்காகப் போராடியதுடன், சர்வதேச சோசலிச முன்நோக்கின் அடிப்படையில் ஸ்ரீலங்கா-ஈழம் சோசலிசக் குடியரசுக்கான கோரிக்கையை எழுப்பியது.
இந்த அரசியல் போராட்டம் கிராமப்புறங்களில் குறிப்பாக கடினமாக இருந்த போதிலும், குணதிலக தனது பகுதியில் அதற்காக முன்முயற்சி எடுத்தார், என்று ரத்நாயக்க கூறினார்.
“1985-1986 இல் பிரிட்டிஷ் தொழிலாளர் புரட்சிக் கட்சியின் துரோகிகளிடமிருந்து அனைத்துலகக் குழு பிரிந்தமை குறித்து அவரது பிரதிபலிப்பு பற்றி நான் சொல்ல வேண்டும். கட்சியின் போராட்டத்தை வளர்ப்பதற்காக தொழிலாளர் புரட்சிக் கட்சி எவ்வாறு சீரழிந்தது என்பதைப் புரிந்துகொள்வதிலும் அதன் அரசியல் பாடங்களை உள்வாங்குவதிலும் அவர் ஆர்வமாக இருந்தார்,” என்று பேச்சாளர் கூறினார்.
குணதிலக தனது வயதுடன் தொடர்புடைய பல நோய்களை எதிர்கொண்டுள்ள போதிலும், இன்னும் கட்சியின் பணிகளுடன் மிகவும் நெருக்கமாக இருப்பதாக ரத்நாயக்க கூறினார். “அவரது வாழ்க்கை ஒரு புரட்சிகர ட்ரொட்ஸ்கிஸ்ட்டின் வாழ்க்கை, அது நமக்கு பல படிப்பினைகளைக் கொண்டுள்ளது,” என்று அவர் முடித்தார்.
ரொஹந்த டி சில்வா, எம். தேவராஜா, விலானி பீரிஸ், சகுந்த ஹிரிமுத்துகொட, பாணினி விஜேசிறிவர்தன, ஆர்.எம். தயானந்தா மற்றும் சமன் குணதாச உட்பட ஏனைய தோழர்கள் குணதிலகவின் அரசியல் வாழ்க்கையின் பல்வேறு அம்சங்களை சுட்டிக்காட்டி சுருக்கமாக பேசினர்.
குணதிலக, இந்தக் கொண்டாட்டத்தை ஏற்பாடு செய்தவர்களுக்கு நன்றி தெரிவித்ததோடு, ஒரு கட்சி ஊழியராக அவரது பங்கிற்கு பாராட்டு தெரிவித்தார். “கட்சி எனக்கு அரசியல் ரீதியாகவும் தத்துவார்த்த ரீதியாகவும் கல்வி கற்பித்ததால், அதில் எனது சிறிய பங்கை வகிக்க முடிந்தது என்பதை நான் உங்களுக்குச் சொல்ல விரும்புகிறேன். மார்க்சிய கோட்பாடு மற்றும் புரட்சிகர கட்சி இல்லாமல் தொழிலாள வர்க்கம் அதிகாரத்தை கைப்பற்ற முடியாது என்பது நமக்குத் தெரியும்,' என்று அவர் கூறினார்.
“தொழிலாள வர்க்கத்தின் நனவை மாற்றுவதற்கான கட்சியின் தலையீட்டின் மூலம் மட்டுமே அதை ஒழுங்கமைத்து ஆயுதபாணியாக்கி அதிகாரத்தைக் கைப்பற்ற முடியும். லெனின் மற்றும் ட்ரொட்ஸ்கி தலைமையிலான போல்ஷிவிக் கட்சியின் கீழ் 1917 இல் ரஷ்யாவில் நடந்தது இதுதான். ரஷ்ய புரட்சி ஒரு சர்வதேசிய முன்னோக்கால் வழிநடத்தப்பட்டது.
“பு.க.க. தோழர்களைச் சந்திக்கும் அதிர்ஷ்டம் எனக்குக் கிடைத்தது. அந்த நேரத்தில், விவசாயிகளால் புரட்சிக்குத் தலைமை தாங்க முடியும் என்ற ஒரு யோசனை எனக்கு இருந்தது - அது எனது விவசாயப் பின்னணியிலிருந்து வந்ததாக நான் நினைக்கிறேன். ரஷ்யப் புரட்சியின் முக்கியமான படிப்பினைகளை விளக்கிய தோழர் கீர்த்தி பாலசூரியா என்னைத் திருத்தினார்.
“தொழிலாள வர்க்கத்தின் முன்னணி புரட்சிகரப் பங்கை வலியுறுத்தும் லியோன் ட்ரொட்ஸ்கியின் நிரந்தரப் புரட்சிக் கோட்பாட்டிலும் அவர் எனக்குக் கல்வி கற்பித்தார். விஜே, ரத்நாயக்க மற்றும் விக்ஸ் உட்பட பிற தோழர்கள், கோட்பாட்டு ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் வளர்வதற்கு எனக்குப் பெரிதும் உதவியுள்ளனர்.
“தோழர்கள் தங்கள் உரைகளில் சிறப்பித்துக் காட்டியபடி, நாம் சோசலிசப் புரட்சியின் தசாப்தத்தைக் கடந்து செல்கிறோம்,” என்று அவர் கூறினார்.
தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களுக்கு கல்வி கற்பிப்பதிலும் அவர்களுக்கு சோசலிச முன்னோக்கை வழங்குவதிலும் உலக சோசலிச வலைத் தளத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்திய குணதிலக, “நான் இளைஞர்களுக்கு அறிவுறுத்துகிறேன்: தயவுசெய்து மார்க்சிய கோட்பாட்டைப் படிக்கவும்; கட்சி மேற்கொண்ட கடந்த காலப் போராட்டங்களை; மற்றும் 20 ஆம் நூற்றாண்டின் முக்கியமான படிப்பினைகளைப் படிக்கவும். இதில், டேவிட் நோர்த்தின் 'முடிவுறாத இருபதாம் நூற்றாண்டு” மற்றும் “ரஷ்யப் புரட்சியை ஏன் படிக்க வேண்டும்' என்ற இரண்டு தொகுதிகளைப் படிப்பது மிகவும் முக்கியம்.
