இலங்கை: காஸாவில் இஸ்ரேலின் இனப்படுகொலைப் போரை நிறுத்துமாறு யாழ்ப்பாணத் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.

சோசலிச சமத்துவக் கட்சி (சோ.ச.க.) மற்றும் சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக இளைஞர் மற்றும் மாணவர் (IYSSE) அமைப்பும் காஸாவில் பாலஸ்தீனியர்களுக்கு எதிரான இஸ்ரேலின் இனப்படுகொலைப் போரை எதிர்த்து வட இலங்கையின் தலைநகரான யாழ்ப்பாணத்தில் மத்திய பேருந்து நிலையம் அருகே கடந்த வாரம் பிரச்சாரம் செய்தனர்.

காஸா மீதான இஸ்ரேலின் தாக்குதலுக்கு எதிராக யாழ்ப்பாணம் பேருந்து நிலையத்தில் IYSSE உறுப்பினர்கள் பிரச்சாரம் செய்தபோது.

“காஸா மீதான இஸ்ரேலின் தாக்குதலை நிறுத்து!” “உலகத் தொழிலாளர்களே காஸா மக்களைப் பாதுகாக்க ஒன்றுபடுங்கள்!” மற்றும் “ஏகாதிபத்திய போர் மற்றும் முதலாளித்துவத்திற்கு எதிராக அமெரிக்க, ஐரோப்பிய, இஸ்ரேலிய, பாலஸ்தீனிய தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களின் ஐக்கியப்பட்ட இயக்கத்திற்காக!” என்ற சுலோகங்கள் அடங்கிய பதாகைகளை பிரச்சாரகர்கள் ஏந்தியிருந்தனர்.

சோ.ச.க./ஐ.வை.எஸ்.எஸ்.இ. உறுப்பினர்கள் “நெதன்யாகுவின் அரசாங்கத்தை வீழ்த்துவோம்! காசாவிற்கு எதிரான ஏகாதிபத்திய ஆதரவு சியோனிச தாக்குதலை நிறுத்து!” என்ற தலைப்பிலான நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் அறிக்கையின் நூற்றுக்கணக்கான பிரதிகளையும் உலக சோசலிச வலைத் தளத்தில் இருந்து இன்னும் பல கட்டுரைகளையும் விநியோகித்தனர்.

காஸாவில் பாலஸ்தீனிய எழுச்சி ஏன் வெடித்தது, அமெரிக்க மற்றும் ஐரோப்பிய ஏகாதிபத்திய சக்திகள் இஸ்ரேலின் இனச் சுத்திகரிப்புப் போரை ஏன் ஆதரிக்கின்றன என்பது பற்றிய ஆழமான கலந்துரையாடலை இந்தப் பிரச்சாரம் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் தூண்டியது.

1983 ஜூலையில் தொடங்கி, இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள தமிழ் மக்கள் பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக அடுத்தடுத்து ஆட்சிக்கு வந்த கொழும்பு அரசாங்கங்களால் முன்னெடுத்த இரத்தக்களரி 26 ஆண்டுகால இனவாத யுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களாவர். மோதலின் இறுதி மாதங்களில் பல்லாயிரக்கணக்கான தமிழ் பொதுமக்கள் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, 2009 மே மாதம் போர் முடிவுக்கு வந்தது.

எவ்வாறாயினும், காஸா மீதான இஸ்ரேலிய தாக்குதலின் முதல் நாட்களில் தமிழ் முதலாளித்துவ கட்சிகள் கிட்டத்தட்ட மௌனமாகவே இருந்தன. வெகுஜன கோபம் அதிகரித்துள்ள நிலையில், அவற்றின் செய்தித் தொடர்பாளர்கள் இஸ்ரேலின் நடவடிக்கைகள் குறித்து வெட்கக்கேடான மற்றும் மெலிதான விமர்சனங்களைச் செய்துள்ளனர். இந்த அமைப்புகள் காஸாவில் இனப்படுகொலைக்கு எதிரான எந்தவொரு போராட்டத்திற்கும் எதிராக இருப்பதற்கு காரணம், அவை அமெரிக்கா மற்றும் ஐக்கிய நாடுகள் உட்பட அதை மேற்பார்வை செய்யும் ஏகாதிபத்திய நிறுவனங்களை நம்பி இருப்பவை ஆகும்.

யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஜி. காசிந்தன் சோசலிச சமத்துவக் கட்சி/ஐ.வை.எஸ்.எஸ்.இ. உறுப்பினர்களிடம் கூறியதாவது: “காஸா மீதான இஸ்ரேலின் தாக்குதலை நான் எதிர்க்கிறேன், கண்டிக்கிறேன். இஸ்ரேலின் இந்த தாக்குதல்களுக்கு அமெரிக்காவும், ஐரோப்பிய நாடுகளும் ஆதரவு அளித்து வருகின்றன. உலகம் முழுவதையும் தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்காக அமெரிக்கா இந்த வகையான காட்டுமிராண்டித்தனமான போர்களை நடத்தி வருவதுடன் தனது பினாமி நாடுகள் போர் நடத்துவதற்கு ஆதரவாக செயற்படுகிறது. இதற்கு முன்பு அமெரிக்கா பல்வேறு நாடுகளில் தலையிட்டு அவர்களின் வளங்களை கொள்ளையடித்தது. ஈராக்கில் எண்ணெய் வளத்தை கைப்பற்றுவதற்காக அங்கு படையெடுத்தது.

“பாலஸ்தீனத்தையே இஸ்ரேல் ஆக்கிரமிக்கிறது; அதன் ஆக்கிரமிப்பு சட்டவிரோதமானது. இஸ்ரேலின் தாக்குதல்களை எந்த நாடும் ஆதரிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது, ஆனால் இந்த நாடுகள் மக்கள் இறப்பதை பார்த்து மகிழ்வது போல் தெரிகிறது. இந்த நாடுகள் போரில் ஈடுபடும்போது, ​​அணுவாயுத மூன்றாம் உலகப் போருக்கு உண்மையான வாய்ப்பு உள்ளது. இது நிறுத்தப்பட வேண்டும்” என்றார்.

யாழ்.மாவட்ட கூட்டுறவு அபிவிருத்திச் சபையின் முன்னாள் செயலாளர் ஆர். வேதவள்ளி, பாலஸ்தீனம் மீதான இஸ்ரேலின் போர் நீண்டகாலமாக நடந்து வருகிறது. நிச்சயமாக இது உலகின் பல நாடுகளில் போர்களை நடத்திய அமெரிக்காவின் ஆதரவுடன் அதன் நலன்களுக்காக நடத்தப்படும் போர் ஆகும், எனத் தெரிவித்தார்.

“பாலஸ்தீனத்தில் குழந்தைகள் மற்றும் பொதுமக்கள் கொல்லப்படுவது உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். அதற்கு காஸா மீதான இஸ்ரேலின் காட்டுமிராண்டித்தனமான போர் முடிவுக்கு வர வேண்டும். உலக மக்கள் அனைவரும் தலையிட்டு போரை எதிர்க்க வேண்டும். இதனால்தான் நீங்கள் முன்னெடுக்கும் போருக்கு எதிரான பிரச்சாரத்தை நான் ஆதரிக்கிறேன்.”

விளையாட்டு அதிகாரி ஏ.ஜஸ்டின் கூறியதாவது: உலகில் எங்கு போர் நடந்தாலும் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். காஸா மீதான இஸ்ரேலின் கொலைகாரப் போரை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். உணவு இல்லை, மருந்து இல்லை, குடிநீர் இல்லை; காஸாவில் உள்ள மில்லியன் கணக்கான மக்களுக்கு எதிராக இஸ்ரேலின் இரத்தக்களரி நடவடிக்கை அனுமதிக்கப்படக்கூடாது.

காஸாவில் உள்ள பாலஸ்தீன மக்கள் இப்போது எதிர்கொள்ளும் அதே வகையான கொடிய யுத்த சூழ்நிலையை பதினான்கு ஆண்டுகளுக்கு முன்பு, இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கில் வாழும் மக்கள் அனுபவித்தனர். போரின் பயங்கரம் பற்றி எங்களுக்குத் தெரியும் என்பதால், காஸா மக்களைப் பாதுகாக்க நாம் இப்போது முன்வர வேண்டும்.

காஸா மீதான இஸ்ரேலிய தாக்குதலுக்கு எதிரான பிரச்சாரத்தின் போது எஸ். பாலசிங்கம் (இடது) யாழ்ப்பாணத்தில் சோ.ச.க. உறுப்பினரிடம் பேசிய போது.

“காஸா மக்களை நிபந்தனையின்றி பாதுகாக்க வேண்டும். அவர்களின் ஜனநாயக உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும். இந்த கொடூர யுத்தம் தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் நிலைப்பாடுகள் கேலிக்குரியவை. இலங்கையில் இறுதிக்கட்டப் போரின் போது எமது மக்கள் கொல்லப்பட்ட போது, ​​எங்களைக் காக்க ஐ.நா. எதுவும் செய்யவில்லை என எஸ். பாலசிங்கம் கூறினார்.

இலங்கை போக்குவரத்துச் சபையின் நடத்துனர் ஒருவர் தெரிவித்ததாவது: “ஒவ்வொரு நாட்டிலும் நடக்கும் அனைத்து குற்றங்கள் மற்றும் துயரங்களின் பின்னணியில் அமெரிக்கா உள்ளது என்று நான் சொல்ல வேண்டும். காஸாவிற்கு எதிரான இஸ்ரேலின் போருக்கு இந்தியா, இலங்கை உட்பட அனைத்து நாடுகளும் ஆதரவளிக்கின்றன. அவை அனைத்தும் அமெரிக்காவைப் போன்ற மோசடி அரசுகள். ஹமாஸை ‘பயங்கரவாதிகள்’ என்ற அதிகார வர்க்கத்தின் அனைத்துப் பொய்களையும் ஊடகங்கள் பரப்புகின்றன. அவர்களை நான் பயங்கரவாதிகளாகக் கருதவில்லை, அவர்கள் பாதிக்கப்பட்டவர்கள், பல ஆண்டுகளாக ஒடுக்கப்பட்டவர்கள், அவர்கள் விடுவிக்கப்பட வேண்டும்”.

புலிகளுக்கு எதிரான கொழும்பு போரின் போது தமிழ் மக்களுக்கு எதிராக இலங்கை இராணுவம் கட்டவிழ்த்துவிட்ட இரத்தக்களரி அட்டூழியங்களை குறிப்பிட்ட அவர் மேலும் கூறியதாவது: “இந்த குற்றவியல் அரசாங்கத்திடம் முறையிட்டதன் மூலம் எங்கள் மக்களுக்கு எந்த நீதியும் கிடைக்கவில்லை, மேலும் குற்றவாளி என்ற வார்த்தையை தமிழ் தேசியவாதிகளுக்கே பயன்படுத்தலாம். அவர்கள் அனைவரும் மோசடி செய்பவர்கள். எங்களின் பிரச்சினைகளைத் தீர்க்க சர்வதேச சமூகம் என்பதற்கு அவர்கள் விடுக்கும் அழைப்பு, எங்களை ஏமாற்றுவதைத் தவிர வேறில்லை. இந்த தமிழ் கட்சிகளை நான் ஒருபோதும் நம்பவில்லை.

“இந்தப் போரை நிறுத்துவதற்கான இயக்கத்தை நான் ஆதரிக்கிறேன், ஆனால் முதலாளித்துவ அரசாங்கங்களின் எதிர்ப்பால் அது கடினமாக இருக்கும். உண்மையான தொழிலாளர்கள் தங்கள் வேலைத் தளங்களில் கோரிக்கைகளை எழுப்பினால், அவர்கள் நிர்வாகம் மற்றும் நிர்வாகத்தை ஆதரிக்கும் தொழிற்சங்க தலைவர்களின் அடக்குமுறையை எதிர்கொள்ள நேரிடும்.”

காஸா மீதான இஸ்ரேலின் தாக்குதல்கள், பாலஸ்தீன நிலத்தை இஸ்ரேல் சட்டவிரோத ஆக்கிரமிப்பது, மக்கள் மீதான தொடர்ச்சியான அடக்குமுறை ஆகியவற்றை நான் எதிர்க்கிறேன். என முச்சக்கர வண்டி ஓட்டுநரான எஸ். தேவானந்த் கூறினார். “கடந்த முப்பது வருட கால யுத்தத்தை அனுபவித்த நாம், காஸா மக்களின் துயரங்களை அறிந்துள்ளோம். அந்த மக்களைப் பாதுகாக்க உங்கள் கட்சியின் போர் எதிர்ப்புப் பிரச்சாரத்தை நான் வரவேற்கிறேன்.”

காஸாவிற்கு எதிரான இஸ்ரேலின் போரைப் பற்றிய தமிழ் தேசியவாதக் கட்சிகளின் அணுகுமுறை பற்றிக் கேட்ட போது அவர் கூறியதாவது: “அவர்கள் அமெரிக்காவையும் இந்தியாவையும் ஆதரிப்பதால் இந்தப் போருக்கு எதிராக அவர்கள் ஒருபோதும் பேச மாட்டார்கள், மேலும் அமெரிக்கா இஸ்ரேலை ஆதரிக்கிறது. இலங்கை அரசின் போரின் போது கூட அமெரிக்காவுக்கு எதிராக விடுதலைப் புலிகள் குரல் கொடுத்ததில்லை.”

Loading