இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.
சோசலிச சமத்துவக் கட்சி (சோ.ச.க.) மற்றும் சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக இளைஞர் மற்றும் மாணவர் (IYSSE) உறுப்பினர்கள், இலங்கைத் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் மேற்கொண்ட பிரச்சாரத்தின் போது காஸாவிற்கு எதிரான இஸ்ரேலின் இனப்படுகொலைத் தாக்குதலுக்கு கணிசமான எதிர்ப்பு வளர்ச்சியடைவதை கண்டறிந்துள்ளனர்.
கடந்த வாரத்தில், சோசக மற்றும் ஐ.வை.எஸ்.எஸ்.இ.யும், கொழும்பு புறநகர்ப் பகுதியான புளூமெண்டலில் உள்ள துறைமுகத் தொழிலாளர்களின் தங்குமிடங்களில் வாழும் துறைமுகத் தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களுடனும் மற்றும் தீவின் வடக்கில் உள்ள யாழ்ப்பாணப் பல்கலைக் கழக மாணவர்களுடனும் காஸா மீது நடத்தப்படும் இனப்படுகொலை பற்றி பேசினார்கள்.
பிரச்சாரகர்கள், இஸ்ரேலின் கொடூரமான இராணுவத் தாக்குதலுக்கு எதிராக சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் ஒன்றுபட்ட நடவடிக்கைக்கு அழைப்பு விடுக்கும் உலக சோசலிச வலைத் தள ஆசிரியர் குழு அறிக்கையின் சிங்கள மற்றும் தமிழ் பிரதிகளை நூற்றுக்கணக்கில் விநியோகித்தனர்.
சோ.ச.க. மற்றும் ஐ.வை.எஸ்.எஸ்.இ. உறுப்பினர்கள் “காஸாவில் பாலஸ்தீனியர்களுக்கு எதிரான இஸ்ரேலின் இனப்படுகொலைப் போரை நிறுத்து!” என்ற தலைப்பில் மூன்று பொதுக் கூட்டங்களுக்கு ஆதரவைக் திரட்டிக் கொண்டனர். முதலாவது கூட்டம், யாழ்ப்பாணத்தில் நவம்பர் 15 இடம்பெற்றது. நவம்பர் 19 அன்று, இன்னொரு கூட்டம் காலியில் இடம்பெற்றது. நவம்பர் 21 அன்று, கொழும்பு பொது நூலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
கொழும்பில் வாழும் ஒரு நடுத்தர வயதுடைய கப்பல்துறை ஊழியர் சோசலிச சமத்துவக் கட்சியிடம் பின்வருமாறு கூறினார்: “இஸ்ரேலிய இராணுவம் குழந்தைகள், முதியவர்கள் மற்றும் நோயாளிகள் ஆகியோரைக் கொல்கிறது, இது ஒரு இனப்படுகொலையாகும். அவர்கள் காஸா மக்களை அகற்ற விரும்புகிறார்கள், அதை நாம் கண்டிக்க வேண்டும். அவர்கள் மருத்துவமனைகள், பள்ளிகள் மற்றும் மத வளாகங்கள் மீது குண்டுகளை வீசுகிறார்கள்.”
மனித உரிமைகளைப் பாதுகாப்பதாகக் கூறும் பல்வேறு சர்வதேச அமைப்புகளைப் பற்றி குறிப்பிட்ட அவர், “ஐக்கிய நாடுகள் சபை பார்த்துக்கொண்டிருக்கிறது. அமெரிக்கா, பிரான்ஸ் மற்றும் ஜேர்மனி போன்ற வல்லரசு நாடுகள் இஸ்ரேலை ஆதரிக்கின்றன,” என்றார். காஸாவில் போர்நிறுத்தம் குறித்த சமீபத்திய ஐநா பொதுச் சபை வாக்கெடுப்பில் இந்தியா வாக்களிக்காமல் இருந்ததற்கு அவர் தனது கண்டனத்தை தெரிவித்தார்.
“இந்தியா, இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவிடம் இருந்து ஆதரவைப் பெற்று வருகிறது,” என்று தெரிவித்த அவர், மத்திய கிழக்கில் வாஷிங்டன் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்கள் மற்றும் போர்க்கப்பல்களை அணிதிரட்டுவது மோதலின் ஆபத்தான விரிவாக்கம் என்று எச்சரித்தார். “தங்களிடமும் ஆயுதங்கள் இருப்பதாக ஈரான் அறிவித்துள்ளது. அதாவது இந்த மோதல் மூன்றாம் உலகப் போரை நோக்கி வளரக்கூடும்.”
துறைமுகத்தில் பளுதூக்கும் அமைப்பில் பணிபுரியும் ஒரு தொழிலாளி “கண்மூடித்தனமான கொலை மற்றும் இனப்படுகொலைக்காக” இஸ்ரேலையும் அமெரிக்காவையும் கண்டித்தார். “அவர்களுக்குச் [பாலஸ்தீனியர்களுக்கு] சொந்தமான இந்தப் பகுதி இஸ்ரேலால் பலவந்தமாக கையகப்படுத்தப்பட்டது. இஸ்ரேலியர்கள் தங்க அனுமதிக்கப்பட்டனர், பின்னர் பாலஸ்தீனியர்கள் துரத்தப்பட்டனர். அதனால், பாலஸ்தீனிய மக்கள் கோபப்படுவது நியாயமானதே… இந்த பகுதியில் எண்ணெய் நிறைய உள்ளது, எனவே இஸ்ரேல் போன்ற ஒரு நாடு பிராந்தியத்தில் உள்ள மற்ற இஸ்லாமிய நாடுகளை ஒடுக்க வேண்டும் என்று அமெரிக்கா விரும்புகிறது.”
ஸ்பெயினின் பார்சிலோனாவில் உள்ள துறைமுகத் தொழிலாளர்கள் இஸ்ரேலுக்கு ஆயுதங்களை ஏற்றுவதையும் இறக்குவதையும் நிறுத்திவிட்டதாகக் குறிப்பிட்ட அவர், இஸ்ரேலுக்கு இராணுவத் தளவாட உற்பத்தி மற்றும் விநியோகத்தை நிறுத்த சர்வதேச தொழிலாள வர்க்கத்திற்கு சோ.ச.க. விடுத்துள்ள அழைப்பை ஆதரிப்பதாகத் தெரிவித்தார்.
இரண்டு குழந்தைகளுடன் வாழும் ஒரு இளம் முஸ்லிம் பெண் கோபத்துடன் பேசினார்: “போர் நிறுத்தப்பட வேண்டும். குழந்தைகள் இறந்தால், யார் வெற்றி பெற்றாலும் அடுத்த தலைமுறை தோற்றுவிடும். மதத்திற்கும் இனத்திற்கும் இந்தப் போருக்கு எந்த சம்பந்தமும் இல்லை. குழந்தைகளுக்கு எதிராக நடத்தப்படும் இதுபோன்ற கொடூரங்களை அவர்கள் காட்டும்போது என்னால் செய்திகளைப் பார்க்க முடியாதுள்ளது. சில குழந்தைகள் சிகிச்சை பலனின்றி இறக்கின்றனர். இவை பயங்கரமான காட்சிகளாக உள்ளன,” என அவர் தெரிவித்தார்.
போருக்கு எதிரான, தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களின் உலகளாவிய இயக்கத்திற்காக சோசலிச சமத்துவக் கட்சி மற்றும் அதன் சர்வதேச சகோதர பிரிவுகளால் நடத்தப்படும் பிரச்சாரம் பற்றிய ஒரு சுருக்கமான கலந்துரையாடலைத் தொடர்ந்து, அவர் பின்வருமாறு பதிலளித்தார்: “ஆம், இந்த வகையான அரசியல் கட்சி முன்வர வேண்டும். ஒரு உண்மையான தொழிலாளர் கட்சி வர வேண்டும், ஆட்சிக்கு வந்ததும் தங்கள் கொள்கைகளை மாற்றும் கட்சி தேவையில்லை.
துறைமுகத்தின் கணினிப் பிரிவில் பணியாற்றும் ஒரு தொழிலாளி பின்வருமாறு கூறினார்: “காஸாவில் நடக்கும் இனப்படுகொலைக்கு எதிராக ஆயிரக்கணக்கான மக்கள் லண்டனில் பேரணியாகச் செல்வதை தொலைக்காட்சியில் பார்த்தேன். ஆனால், எனது கேள்வி என்னவென்றால், ‘இந்த நிகழ்வுகளை இதுமாதிரியான பேரணிகள் மாற்றுமா?’ ஏனெனில், உலகம் முழுவதும் இலாபத்தை மட்டுமே நோக்கமாகக் கொண்ட ஏகாதிபத்திய சக்திகளால் ஆதிக்கம் செலுத்தப்படுகிறது.”
ஆசியக் கண்டத்தில் உள்ள அரசாங்கங்கள், பெரும் வல்லரசுகளுடன் உடந்தையாக இருப்பதற்காக அவர் கண்டனம் தெரிவித்தார். இலங்கையின் ஆளும் வர்க்கமும் ஏனைய அரசாங்கங்களும் பாலஸ்தீனத்தின் மக்கள் எழுச்சி மற்றும் அதன் சர்வதேச தாக்கத்தினால் அச்சமடைந்துள்ளதாக கூறிய அவர், துறைமுக தொழிற்சங்கங்கள் காஸா போரைப் பற்றி எதுவும் பேசவில்லை என்றும் குறிப்பிட்டார்.
“எவ்வாறாயினும், இந்த இனப்படுகொலையை நாம் எதிர்க்க வேண்டும், போராட்டங்கள் தொடர வேண்டும்... கடந்த காலங்களில், பாலஸ்தீனிய மக்கள் அல்லது ஹமாஸே பயங்கரவாதிகள் என்று எங்களுக்குச் சொல்லப்பட்டது, ஆனால் இப்போது சமூக ஊடகங்கள் மூலம் உண்மையில் யார் இனப்படுகொலை செய்கிறார்கள் என்பதைக் காண்கிறோம்.”
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக அரசியல் விஞ்ஞான பிரிவு மாணவரும் WSWS இன் வழக்கமான வாசகருமான எஸ். திருச்செல்வம் கூறியதாவது: “நான் இந்தப் போரை எதிர்க்கிறேன். அழிவையும் அதன் கொடூரமான விளைவுகளையும் நாம் நம் கண்களால் பார்க்க முடியும். காஸாவில் நடக்கும் போரிலும் உக்ரேனில் ரஷ்யாவுக்கு எதிராக நடக்கும் போரிலும் பின்னணியில் அமெரிக்காவே உள்ளது. அமெரிக்கா தனது உலகளாவிய மேலாதிக்கத்தை மீட்டெடுக்க முயற்சிக்கிறது.
“அமெரிக்கா மற்றும் இந்தியாவுடன் நெருங்கிய உறவுகளைக் கொண்டுள்ள தமிழ் தேசியவாதக் கட்சிகள், காஸா போரைப் பற்றி பேச வேண்டாம் என்று முடிவு செய்துள்ளன. ஏனெனில் அவர்கள் இந்த அரசாங்கங்களுடனான தங்கள் உறவை இழக்க விரும்பவில்லை அல்லது இந்த போர் குற்றவாளிகளுக்கே வேண்டுகோள் விடுக்கும் அவர்களின் வங்குரோத்து முன்னோக்கு அம்பலப்படுவதை விரும்பவில்லை. இலங்கை ஜனாதிபதி விக்கிரமசிங்க ஒரு அமெரிக்க கைப்பாவை என்பது அனைவரும் அறிந்த உண்மை, எனவே அவரது அரசாங்கம் இஸ்ரேலின் பின்னால் அணிவகுத்து நிற்பது குறித்து ஆச்சரியப்படுவதற்கு எந்த காரணமும் இல்லை.”
முஸ்லிம்களை பயங்கரவாதிகளாக முத்திரை குத்தும் பல்வேறு அரசாங்கங்கங்கள் மீது கண்டனம் தெரிவித்த திருச்செல்வம், இது முன்னர், இலங்கை அரசாங்கம், தமிழர்களை பயங்கரவாதிகளாக முத்திரை குத்தியதைப் போன்றது, எனவும் தெரிவித்தார்.
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் சட்டக்கல்லூரி மாணவர் டி. ரிஸ்வான் பின்வருமாறு கூறினார்: “உலகம் முழுவதிலும் உள்ள அரசாங்கங்கள் தங்கள் உரிமைகளுக்காகப் போராடும் எவரையும் ‘பயங்கரவாதி’ என்று அழைப்பது வழமையான நடைமுறையாகும். பாலஸ்தீனியர்கள், இஸ்ரேலின் நீண்டகால அடக்குமுறையை எதிர்த்தபோது, கிட்டத்தட்ட அனைத்து நாடுகளும் எழுச்சியை பயங்கரவாதம் என்று கண்டித்துக் கொண்டு, இஸ்ரேலின் தாக்குதல்களின் பின்னால் அணிவகுத்தன. இந்த அரசாங்கங்களின் தலைவர்களின் கூற்றுப்படி, சிறிய குழந்தைகள் கூட பயங்கரவாதிகள் என்று அழைக்கப்படுகிறார்கள்.”
பாலஸ்தீனியர்களை “மனித விலங்குகள்” என்று இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் யோவ் கலன்ட் குறிப்பிட்டதை ரிஸ்வான் கண்டித்தார். அத்தோடு, காஸாவிற்கு எதிராக அணு ஆயுதங்களைப் பயன்படுத்த இஸ்ரேலின் மரபுரிமைகள் அமைச்சர் விடுத்த அச்சுறுத்தல்களையும் அவர் கண்டித்தார்.
“இரண்டாம் உலகப் போரின் போது ஜப்பானில் உள்ள ஹிரோஷிமா மற்றும் நாகசாகியில் அணு ஆயுதங்களின் விளைவுகளை நாங்கள் பார்த்தோம். அணுவாயுத் தாக்குதல்கள் சிறிய காஸா பகுதியுடன் மட்டும் நின்றுவிடப் போவதில்லை,” என்று அவர் கூறினார்.
“நீங்கள் சுட்டிக் காட்டியது போல், பாலஸ்தீனிய தொழிற்சங்கங்கள் மற்றும் பிற நாடுகளில் உள்ள தொழிலாளர்களின் ஆதரவுடன், இஸ்ரேலுக்கு இராணுவ உபகரணங்களை அனுப்புவதை நிறுத்துவதற்காக விடுத்துள்ள அழைப்பு, காஸாவில் இனப்படுகொலையை எதிர்த்துப் போராடுவதற்கான மிகவும் பயனுள்ள மற்றும் நடைமுறை வழி என்று நிரூபிக்கப்பட்டுள்ளது.”
மட்டக்களப்பைச் சேர்ந்த யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவி ஆர். கிருஜலினி, காஸா மீதான இஸ்ரேலின் சட்டவிரோதத் தாக்குதல்களைக் கண்டித்ததுடன், பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான இலங்கை அரசாங்கத்தின் இனவாதப் போரைப் பற்றியும் குறிப்பிட்டார்.
“அவர்களால் [தமிழ்த் தேசியக் கட்சிகள் மற்றும் பல்கலைக்கழக மாணவர் சங்கம்] இந்தப் போரை எந்த தாமதமும் இன்றி உறுதியாக எதிர்க்க முடியாவிட்டால், அவர்கள் மனசாட்சி இல்லாத மனிதர்கள் மற்றும் கபடத்தனமானவர்கள். அப்படிப்பட்டவர்களால் தமிழர்களின் ஜனநாயக உரிமைக்காகப் போராட முடியாது. இந்தப் போருக்கு எதிராக நாம் கண்டிப்பாக வெளியில் வர வேண்டும், ஏனென்றால் போரின் வலி எங்களுக்குத் தெரியும்,” என்று அவர் கூறினார்.
யாழ்ப்பாண பல்கலைக்கழக விஞ்ஞானப் பட்டதாரியான சுபன் கூறும்போது, “இந்தப் போரை இன-மத அடிப்படையில் விளக்க முடியாது. இது வெளிப்படையாக ஒரு ஏகாதிபத்திய போர். அமெரிக்கா தனது விமானம் தாங்கிக் கப்பல்களை மத்தியதரைக் கடலுக்கு அனுப்புவதன் மூலம் பதிலளிப்பதில் மிக விரைவாக இருந்தது. ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராக்கில் அமெரிக்காவின் சாதனையை கருத்தில் கொண்டு பார்த்தால், காஸாவின் நிலைமையை ஈரானுடன் போருக்குச் செல்வதற்கான ஒரு சந்தர்ப்பமாக அவர்கள் பயன்படுத்துகிறார்கள் என்பது தெளிவாகிறது. அதற்காக அப்பாவி பாலஸ்தீனர்கள் தங்கள் உயிரைக் கொடுக்க வேண்டியுள்ளது. இந்தப் போரை நான் எதிர்க்கிறேன்,” என்றார்.
