பிரான்சில், பாசிச குடியேற்றச் சட்டத்திற்கு எதிர்ப்பு அதிகரித்து வருகிறது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை, ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோனின் குடியேற்றச் சட்டத்திற்கு எதிராக பிரான்ஸ் முழுவதும் 160 ஆர்ப்பாட்டங்களில் 150,000 பேர் பங்கேற்றனர். இந்த பாசிச சட்டம் தற்போது அரசியலமைப்பு சபையால் ஆராயப்பட்டு வருகிறது, இது வியாழன் அன்று இறுதி முடிவை எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மக்ரோனின் மறுமலர்ச்சிக் கட்சி, குடியரசுக் கட்சி, மற்றும் மரின் லுப்பெனின் நவ பாசிச தேசிய பேரணி (RN) ஆகியவற்றுக்கு இடையேயான பாராளுமன்றக் கூட்டணி, பாராளுமன்றத்தில் இந்த சட்டத்துக்கு வாக்களித்தன.

பாரிஸின் ட்ரோகாடெரோ சதுக்கத்தில் ஞாயிற்றுக்கிழமை ஆர்ப்பாட்டம்

மக்ரோனின் குடியேற்றச் சட்டத்திற்கு எதிரான போராட்டம், காஸாவில் ஏகாதிபத்திய ஆதரவு, இஸ்ரேலிய ஆட்சியின் இனப்படுகொலைக்கு எதிரான பாரிய சர்வதேச எதிர்ப்பு போராட்டங்களுடன், அண்டை நாடான ஜேர்மனியில் இரயில்வே வேலைநிறுத்தங்கள், பாசிச எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் மற்றும் விவசாயிகளின் ஆர்ப்பாட்டங்களுடன் குறுக்கிடுகிறது. அனைத்து ஏகாதிபத்திய அரசாங்கங்களாலும் திணிக்கப்பட்ட போர், சமூக சிக்கன நடவடிக்கை மற்றும் பேரினவாத புலம்பெயர்ந்தோர் எதிர்ப்பு ஆகியவற்றின் தீவிர வலதுசாரி நிகழ்ச்சி நிரல் சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் எதிர்ப்பை எதிர்கொள்கிறது.

மக்ரோனின் குடியேற்றச் சட்டம், வேலையின்மை காலத்தில் குடும்பம் மற்றும் வீட்டு உதவி உட்பட புலம்பெயர்ந்தோருக்கான சமூக நலன்களைக் கட்டுப்படுத்துகிறது. ஒவ்வொரு ஆண்டும் எத்தனை புலம்பெயர்ந்தோர் நாட்டிற்குள் நுழைய அனுமதிக்கப்படுவார்கள் என்பதைத் தீர்மானிக்கும் குடிவரவு ஒதுக்கீட்டை அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு நாடாளுமன்றம் அமைக்கும். நோய்வாய்ப்பட்ட வெளிநாட்டினருக்கான சுகாதார சேவையை முழுமையாக அகற்றுவது மசோதாவின் இறுதிப் பதிப்பில் இருந்து நீக்கப்பட்டாலும், 2024 ஆம் ஆண்டில் இந்த விடயத்தை மறுபரிசீலனை செய்ய அரசாங்கம் உறுதியளித்துள்ளது.

குடியுரிமைக்கான பிறப்புரிமையையும் சட்டம் கட்டுப்படுத்துகிறது. பிரான்சில் பிறந்தவர்கள் இனி தானாகவே பிரெஞ்சு குடியுரிமையை பெற மாட்டார்கள். அதற்கு அவர்கள் 16 வயதில் விண்ணப்பிக்க வேண்டும். 16 வயதுக்கு முன்னர் குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்கள் பிரெஞ்சு குடியுரிமையைப் பெற முடியாது. அத்தோடு, ஒருவரின் மனைவிக்கு இடமளிக்க போதுமான நிதி ஆதாரங்கள் உள்ளன என்பதை நிரூபிக்க வேண்டிய கட்டாயம் உட்பட, புலம்பெயர்ந்தவர்கள் குடும்பம் மீண்டும் ஒன்றிணைவதற்கான நிபந்தனைகளும் பலப்படுத்தப்பட்டுள்ளன.

ஸ்ராலினிச பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவரான ஃபேபியன் ரூசல், ஜோன் லூக் மிலோன்சோனின் அடிபணியாத பிரான்ஸ் (LFI) கட்சியின் மனோன் ஆப்ரி மற்றும் உயர் தொழிற்சங்க அதிகாரிகளும் கலந்து கொண்ட இந்தப் பேரணியில் WSWS செய்தியாளர்கள் ஆர்ப்பாட்டக்காரர்களிடம் உரையாடினர்.

ஆவணமற்ற தொழிலாளியும் CGT தொழிற்சங்கத்தின் உறுப்பினருமான அடமா WSWS இடம், “இவை இம்மானுவேல் மக்ரோனால் எடுக்கப்பட்ட பழைய தேசிய முன்னணியின் கருத்துக்கள். நாம் அனைவரும் யதார்த்தத்தை அறிவோம். புலம்பெயர்ந்தோர் இல்லாவிட்டால், நாடு முடங்கிவிடும். புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், அனைத்து சமூக நிதிகளுக்கும் பங்களிக்கிறார்கள், அவர்கள் இந்த நாட்டின் பொருளாதார வாழ்க்கையில் பெருமளவில் பங்கேற்கிறார்கள்” என்று கூறினார்:

அடாமா ஒரு சுலோக அட்டையை எடுத்துச் செல்கிறார்: “புலம்பெயர்ந்தோர் இல்லாத ஒரு நாள் எப்படி இருக்கும்? அவர்கள் இங்கே வேலை செய்கிறார்கள், இங்கே வாழ்கிறார்கள், இங்கேயே இருக்கிறார்கள். அனைத்து ஆவணமற்ற தொழிலாளர்களுக்கும் சட்ட அந்தஸ்து கொடுங்கள். தேசிய இனங்களுக்கிடையே ஒற்றுமை வாழ்க!

மக்ரோனின் அரசியல் வஞ்சகத்தை விமர்சித்த ஆடாமா, அவர் தீவிர வலதுசாரிகளை எதிர்ப்பதாக உறுதியளித்தார், ஆனால், பின்னர் குடியேற்றத்திற்கு எதிராக ஒரு பாசிச சட்டத்தை இயற்றியுள்ளார். “அதிதீவிர வலதுசாரிகளை திருப்திப்படுத்த, இனவாதிகளை திருப்திப்படுத்த, எந்த விலையிலும் அதிகாரத்தைப் பெற விரும்புபவர்கள், வேலை செய்பவர்கள் மற்றும் அரசு உதவியில் வாழாதவர்கள் உட்பட, ஒவ்வொரு நாளும் புலம்பெயர்ந்தவர்களைக் கண்டிக்கிறார்கள், நான் வேலை செய்ய அதிகாலை 4 மணிக்கு தூக்கத்திலிருந்து எழுகிறேன். நான் நாட்டின் பொருளாதார வாழ்க்கையில் பங்கேற்கிறேன், மற்றும் வரலாற்றின் மூலம் நான் பிரான்சுடன் இணைக்கப்பட்டுள்ளேன்” என்று அவர் குறிப்பிட்டார்.

காஸாவில் இஸ்ரேலிய ஆட்சியின் போர் மற்றும் இனப்படுகொலைக்கு எதிரான சர்வதேச இயக்கத்துடனான தனது ஒற்றுமையை அடாமா வலியுறுத்தினார்: “நான் ஒடுக்கப்பட்ட அனைவருடன் ஒற்றுமையாக நிற்கிறேன். பாலஸ்தீனிய மக்கள் ஒடுக்கப்படுகிறார்கள். ஒருவர் போரில் வெற்றி பெறலாம், ஆனால் போர் மூலம் வெற்றி பெற முடியாது.”

WSWS ஒரு மருத்துவர் மார்ட்டினிடமும் பேசியது. அவர் விளக்கினார்: ““நான் ஒரு மருத்துவர் மற்றும் குடியேறியவன் என்பதால் இன்று வந்தேன். அரசு மருத்துவ உதவியை (AME) அகற்றுவது மிகவும் மனிதாபிமானமற்ற மற்றும் எதிர்மறையான ஒன்றாக எனக்குத் தோன்றுகிறது. அவர்கள் உதவியை [தற்போதைய] சட்டத்தில் இருந்து அகற்றினாலும், பின்னர் அதை மீண்டும் சேர்க்கலாம், அது ஒரு அரசியல் தந்திரம். மருத்துவ ரீதியாக இது நியாயமற்றது மற்றும் ஆபத்தானது”.

மார்ட்டின் “அரசு மருத்துவ உதவியின் கொலைக்கு எதிராக” என்ற வாசகத்தை எடுத்துச் செல்கிறார்.

“இது மருத்துவ விதிகளுக்கும் பொதுவாக மருத்துவர்கள் மற்றும் பராமரிப்பாளர்களின் அர்ப்பணிப்புக்கும் முரணானது. எனவே அவர்கள் தொடர்ந்து அவர்களுக்கு சிகிச்சையளிப்பார்கள் என்று நான் நினைக்கிறேன், நான் உறுதியாக நம்புகிறேன், ஆனால் என்ன வழிமுறைகள் என்று எனக்குத் தெரியவில்லை” என்று அவர் மேலும் தெரிவித்தார்.

நேற்றைய ஆர்ப்பாட்டம் Collectif des Sans-Papiers (ஆவணமற்ற தொழிலாளர்கள் கூட்டு – CSP) ஆல் புறக்கணிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது, இது ஜனவரி 14 அன்று பிரான்ஸ் முழுவதும் குடியேற்ற சட்டத்திற்கு எதிராக, 40,000க்கும் மேற்பட்ட மக்களின் ஒரு ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்தது. தொழிற்சங்க அதிகாரிகள் அதன் முந்தைய போராட்டத்திற்கு ஆதரவளிக்க மறுத்ததையும், முந்தைய ஆர்ப்பாட்டத்தின் போது முன்வைத்த ஆவணமற்ற தொழிலாளர்களின் உரிமைகள் தொடர்பான பிற கோரிக்கைகளை கைவிடுவதற்கான அவர்களின் முடிவையும் இந்தக் கூட்டு விமர்சித்தது.

புறக்கணிப்பு அறிவிப்பில், CSP ஜனவரி 21 அன்று ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு விடுத்த பிரெஞ்சு தொழிற்சங்க அதிகாரத்துவங்களைக் கண்டித்தது: “போராட்ட ஒற்றுமையை கட்டியெழுப்ப வேண்டிய இடத்தில், ஜனவரி 21 போராட்டத்திற்கான அழைப்பை ஆரம்பித்தவர்கள் இந்த இனவாத சட்டத்திற்கு எதிராக பல மாதங்களாக போராடி வந்தவர்களுடன் பிளவு விதைகளை விதைத்துள்ளனர். எங்களைப் பொறுத்தவரை, சமூகத்தில் சம உரிமைக்கான போராட்டம் என்பது போராட்டத்தின் அமைப்பிலேயே சம உரிமைகளாக மாற வேண்டும்” என்று அதன் அறிக்கையில் குறிப்பிட்டது.

“ஜனவரி 14 இன் ஆர்ப்பாட்டங்கள் பாரிஸ் பிராந்தியத்தின் ஆவணமற்றவர்களின் கூட்டுக்களால் தொடங்கப்பட்டது மற்றும் 500 அமைப்புகளுடன் ஏற்பாடு செய்யப்பட்டது, அவற்றில் பல உள்ளூர் கட்டமைப்புகள். சுமார் முப்பது நகரங்களில் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளில் 40,000க்கும் அதிகமான மக்கள் ஈடுபடுத்தப்பட்டனர். 14ம் தேதி நடந்த இந்த ஆர்ப்பாட்டங்கள், ஆவணமற்ற மக்களையும், ஆவணங்களை வைத்திருக்கும் பிரெஞ்சு மற்றும் குடியேறியவர்களையும் ஒருங்கிணைத்து, இதற்கு பதில் இருப்பதைக் காட்டியது“ என்று அந்த அறிக்கை தெரிவித்தது.

ஜனவரி 25 அன்று திட்டமிடப்பட்ட சட்டத்திற்கு எதிராக வேலைநிறுத்தம் மற்றும் பிப்ரவரி 3 அன்று தொழிற்சங்கத் தலைமையிலிருந்து சுயாதீனமாக ஒரு புதிய தொடர் ஆர்ப்பாட்டங்களுக்கான அழைப்புகளையும் இந்தக் கூட்டமைப்பு ஆதரித்தது.

CSP இன் புறக்கணிப்பானது, தொழிற்சங்க அதிகாரத்துவங்கள் மற்றும் அவர்களின் போலி-இடது அரசியல் கூட்டாளிகளின் அதிர்ச்சியூட்டும் காட்டிக்கொடுப்புக்கு, தொழிலாள வர்க்கத்தின் வளர்ந்து வரும் எதிர்ப்பின் முதல் வெளிப்பாடாக இருக்கிறது. ஆளும் ஸ்தாபனத்திற்குள் தங்கள் சொந்த இடத்தை அச்சுறுத்தும் ஒரு இயக்கத்தால் பயந்து, இந்த சக்திகள் கடந்த ஆண்டு மக்ரோனின் பெரும் செல்வாக்கற்ற ஓய்வூதிய வெட்டுக்களுக்கு எதிரான பாரிய வேலைநிறுத்தங்கள் மற்றும் போராட்டங்களை காட்டிக் கொடுத்தன. கடந்த தசாப்தத்தில் மத்தியதரைக் கடலில் 20,000க்கும் அதிகமான புலம்பெயர்ந்தோரை மூழ்கடிக்க வழிவகுத்த ஐரோப்பிய ஒன்றியத்தின் கொலைகார ஐரோப்பிய கோட்டை கொள்கை போன்ற குடியேற்ற எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கான, பிரெஞ்சு தொழிலாள வர்க்க எதிர்ப்பை அடக்குவதற்கு இந்த சக்திகள் பல ஆண்டுகளாக உழைத்துள்ளனர்.

அண்டை நாடான ஜேர்மனியிலும் உலகம் முழுவதிலும் எதிர்ப்புக்கள் வெடித்துள்ள நிலையில், பிரான்சில் தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் தீர்க்கமான கேள்வியானது, ஒரு சர்வதேச தொழிலாள வர்க்க இயக்கத்தை கட்டியெழுப்புவது தொடர்பானதாகும்.

புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் ஒரு தேசிய கட்டமைப்பிற்குள், தேசிய தொழிற்சங்க அதிகாரத்துவங்களின் கட்டுப்பாட்டின் கீழ், அவர்கள் எதிர்கொள்ளும் அச்சுறுத்தல்களை சமாளிக்க முடியாது. அவர்கள் விரிவடைந்து வரும் ஏகாதிபத்திய போர்கள், சமூகத்தினை இராணுவமயமாக்குதல், சமூக சிக்கன நடவடிக்கை மற்றும் பாசிச குடியேற்ற எதிர்ப்பு கொள்கைகளை எதிர்கொள்கின்றனர், அவை ஐரோப்பா மற்றும் சர்வதேச அளவில் ஏகாதிபத்திய சக்திகளால் ஒருங்கிணைக்கப்படுகின்றன. இந்தக் கொள்கைகளை சர்வதேச அளவில், அவற்றைத் திணிக்கும் முதலாளித்துவ வர்க்கத்திற்கு எதிராக மட்டுமே போராட முடியும். இந்தப் போராட்டத்தில், குடியேறியவர்களின் சிறந்த கூட்டாளிகள் ஐரோப்பா மற்றும் உலகம் முழுவதும் உள்ள அவர்களது சக தொழிலாளர்கள் ஆவர்.

தொடர்ந்து விரிவடைந்து வரும் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களின் அடுக்குகள் மத்தியில் அதிகரித்து வரும் அவநம்பிக்கையும், எதிர்ப்பும், போராட்டத்தின் சாமானிய அமைப்புகளையும், தங்கள் உறுப்பினர்களுக்குப் பொறுப்பான மற்றும் தொழிற்சங்க நிர்வாகிகளில் இருந்து சுயாதீனமான செயல் குழுக்களையும் கட்டியெழுப்ப வேண்டிய அவசரத் தேவையை இது அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. அதிகாரத்துவத்தால் தொழிலாளர்களின் போராட்டங்களை நாசவேலை செய்வதை முறியடிக்கவும், சர்வதேச அளவில் இந்தப் போராட்டங்களை ஒருங்கிணைக்கவும், அதிகாரத்துவம் மற்றும் முதலாளித்துவத்தை தூக்கியெறிந்து சோசலிசத்தை கட்டியெழுப்பவும் சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் நேரடிப் போராட்டத்திற்குத் தயாராவதற்கு இத்தகைய அமைப்புக்கள் இன்றியமையாதவை ஆகும்.

Loading