மாஸ்கோ தாக்குதல்: நிரந்தரப் புரட்சி குழுவானது நேட்டோ மற்றும் உக்ரைனின் பங்கை மூடிமறைக்கிறது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.

மாஸ்கோ தாக்குதலுக்கு விடையிறுத்து, மொரெனிஸ்ட்டு வலைத் தளமான நிரந்தரப் புரட்சி (Révolution Permanente) ஆனது, இந்த தாக்குதலில் உக்ரேன் மற்றும் ஏகாதிபத்திய சக்திகளின் ஈடுபாட்டையும், இன்னும் பரந்தளவில் உக்ரேனில் நேட்டோவின் தலையீட்டின் ஏகாதிபத்திய தன்மையையும் பூசி மொழுகி மறைக்க முயற்சிக்கிறது.

இது பப்லோவாத புதிய முதலாளித்துவ-எதிர்ப்புக் கட்சியுடன் (NPA) தொடர்புடைய ஒரு மொரெனிச குழுவான நிரந்தரப் புரட்சி (Révolution Permanente - RP) குழுவை நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் பிரெஞ்சு பிரிவான சோசலிச சமத்துவக் கட்சியையும் (PES) பிரிக்கும் பிளவை வெளிப்படுத்துகிறது. ரஷ்யாவுக்கு எதிராக போர் தொடுப்பதன் மூலமாக ஊழல் நிறைந்த உக்ரேனிய ஆட்சியைப் பாதுகாக்க பிரெஞ்சு துருப்புகளை அனுப்புவதற்கான மக்ரோனின் தயாரிப்புகளை சோசலிச சமத்துவக் கட்சி கண்டனம் செய்கிறது. ஆனால் RP ஆனது நேட்டோ மற்றும் உக்ரேனிய ஆட்சியின் ஆக்கிரமிப்பு மற்றும் அரசியல் குற்றகரத்தன்மையை மறைக்கவும், அவ்விதத்தில் மக்ரோனின் இராணுவத் தீவிரப்பாட்டிற்கு எதிரான தொழிலாளர்களின் எதிர்ப்பை மட்டுப்படுத்தவும் முயன்று வருகிறது.

நியூ யோர்க் டைம்ஸ் அல்லது லு மொன்ட் பத்திரிகைப் பக்கங்களில் காணப்பட்டிருக்கக் கூடியது போன்றதொரு ஒரு பகுப்பாய்வில் மாஸ்கோ தாக்குதல் குறித்து RP வலைத்தளமும் இவ்வாறு எழுதுகிறது:

இந்தத் தாக்குதலுக்கு இஸ்லாமிய அரசு பொறுப்பேற்றுள்ள நிலையில், இன்று காலை உக்ரைன் எல்லைக்கு அருகிலுள்ள பிரையன்ஸ்க் ஒப்லாஸ்ட்டில் தடுத்து நிறுத்தப்பட்ட நான்கு குற்றவாளிகள் உட்பட 11 பேர் கைது செய்யப்பட்டதாக FSB (ரஷ்ய உளவுத்துறையான ஃபெடரல் பாதுகாப்பு சேவை) புட்டினுக்கு அறிவித்தது. தாக்குதல்காரர்கள் உக்ரேனிய தரப்பில் தொடர்புகளைக் கொண்டிருந்ததாகவும், தாக்குதலுக்குப் பின்னர் அதன் பிராந்தியத்தில் தஞ்சம் புகுந்ததாகவும் FSB கூறிய நிலையில், தாக்குதலுக்கு கியேவின் பொறுப்பை அறிவிக்க ரஷ்ய அதிகாரிகளுக்கு இது போதுமானதாக இருந்தது.

ட்ரொட்ஸ்கி மற்றும் பழைய போல்ஷிவிக்குகளைப் படுகொலை செய்த ஸ்ராலினிச இரகசிய போலிஸில் இருந்து உருவான ரஷ்ய உளவுத்துறையான FSB (ஃபெடரல் பாதுகாப்பு சேவை) இன் வாயில் அதை வைப்பதன் மூலமாக உக்ரேனின் ஈடுபாடு குறித்த ஆய்வறிக்கையை RP ஆனது மதிப்பிழக்கச் செய்ய முயற்சிக்கிறது.

ஆனால் யதார்த்தத்தில், ஆதாரங்கள் உக்ரேனிய உளவுத்துறை மற்றும் நேட்டோ ஈடுபாட்டை சுட்டிக்காட்டுகின்றன. மத்திய ஆசியாவில் உள்ள முன்னாள் சோவியத் குடியரசான தஜிகிஸ்தான் நாட்டிலிருந்து புலம்பெயர்ந்தவர்களால் குரோகஸ் நகர மண்டபம் மீதான தாக்குதலில் 143 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 500 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். நேட்டோ தலைமையிலான போர்களுடன் நெருக்கமாக தொடர்புடைய பயங்கரவாத வலையமைப்பான இஸ்லாமிய அரசு-கொராசான் (IS-K) உரிமை கோரிய தாக்குதலுக்குப் பிறகு பயங்கரவாதிகள் உக்ரைனுக்கு தப்பிச் செல்வார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இந்தத் தாக்குதல் நேட்டோவின் ஒப்புதலுடன் உக்ரேனிய உளவுத்துறை மற்றும் இராணுவ சேவைகளால் ரஷ்ய பிராந்தியத்தில் நடத்தப்படும் தொடர்ச்சியான தாக்குதல்களின் பாகமாகும். சமீபத்திய தாக்குதலாக உக்ரேனிய எல்லையில் இருந்து 1,000 கி.மீ தொலைவில் உள்ள ரஷ்யாவின் டாடர்ஸ்தான் பிராந்தியத்தில் ஒரு ட்ரோன் உற்பத்தி ஆலை மற்றும் ஒரு எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை மீது நடந்தது.

IS-K மற்றும் அல்-கெய்தா (Al-Qaïda) போன்ற வலையமைப்புகள் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் தலையீடுகள், மத்திய கிழக்கு மற்றும் மத்திய ஆசியாவில் அதன் தசாப்த கால போர்களில் இருந்து எழுகின்றன. ஆப்கானிஸ்தானில் சோவியத் சார்பு ஆட்சிக்கு எதிராக போர் தொடுக்க ஒசாமா பின் லேடன் தலைமையிலான இஸ்லாமிய வலையமைப்புகளை வாஷிங்டன் அணிதிரட்டிய 1980 களில் இருந்து, தஜிகிஸ்தான் அண்டை நாடான ஆப்கானிஸ்தானின் ஆயுத மோதலில் சிக்கியுள்ளது.

1991 இல் சோவியத் ஒன்றியம் ஸ்ராலினிசத்தால் கலைக்கப்பட்டதற்குப் பின்னர், ஈராக் மற்றும் சிரியாவில் ஏகாதிபத்தியத்தால் நடத்தப்பட்ட நவ-காலனித்துவ போர்களின் விளைபொருளே இஸ்லாமிய அரசு (IS) ஆகும். 2003 இல் ஈராக் மீதான சட்டவிரோத படையெடுப்புக்குப் பின்னர், லிபியா மற்றும் சிரியாவில் 2011 இல் அது தொடங்கிய போர்களில் நேட்டோ மீண்டும் இஸ்லாமிய வலையமைப்புகளை ஒன்றுதிரட்டியது. உண்மையில், லிபியா மற்றும் சிரியாவில் போர்களைத் தொடுக்க அல் கெய்தா தொடர்புபட்ட வலையமைப்புகளை ஒன்றுதிரட்டுவதைப் பாதுகாப்பதில் பிரெஞ்சு ஏகாதிபத்தியம் ஒரு மத்திய பாத்திரம் வகித்துள்ளது.

RP ஆனது அன்று இன்னும் இந்தப் பெயரில் அழைக்கப்படவில்லை, மாறாக சிரிய எதிர்ப்பை ஒரு “புரட்சியை” நடத்துவதாக பாராட்டிய NPA இன் ஒரு கன்னையாக அன்று செயற்பட்டது. NPA இன் செய்தித் தொடர்பாளரும் முன்னாள் ஜனாதிபதி வேட்பாளருமான ஒலிவியே பெசன்ஸநோ 2014 இல் RFI வானொலிக்கு கூறுகையில், “ஃபாபியுஸ் [பிரெஞ்சு வெளியுறவு அமைச்சர்] பல மாதங்களாக இதைத்தான் கூறி வருகிறார். அவர் சிரியப் புரட்சியாளர்களுக்கு இலவசமாக ஆயுதங்களை வழங்கட்டும்.”

ஏகாதிபத்திய ஸ்தாபனத்தின் சில பிரிவுகள், சிரிய எதிர்ப்பிற்கு ஆயுதங்களை வழங்குவது பயங்கரவாதிகளுக்கு ஆயுதம் கொடுப்பதற்கு ஒப்பாகும் என்று எழுப்பிய தயக்கங்களை நிராகரித்த பெசன்ஸநோ இவ்வாறு கூறினார்: அதாவது “நாம் ஆயுதங்களைக் கொடுக்கக் கூடாது, ஏனெனில் அது ஜிஹாதிஸ்டுகளிடம்தான் போய் முடியும்’ என்று கூறுபவர்கள், இது ஏற்கனவே அப்படித்தான் உள்ளது... மக்கள் தங்கள் தலைவிதியை தாங்களே தீர்மானிப்பார்கள் என்று நம்புவது ஒரு சர்வதேசியவாதியாக எனது உறுதியாகும்.”

யதார்த்தத்தில், நேட்டோவின் ஏகாதிபத்திய போர்கள், அப்பிராந்திய மக்களுக்கு பேரழிவுகளை உருவாக்கி உள்ளன. 13 ஆண்டுகளுக்குப் பின்னர், லிபியாவும் சிரியாவும் நூறாயிரக்கணக்கான உயிர்களையும் பத்து மில்லியன் கணக்கான அகதிகளையும் ஏற்படுத்தியுள்ள உள்நாட்டுப் போர்களை அனுபவித்து வருகின்றன.

IS-K ஐப் பொறுத்தவரை, 2001 மற்றும் 2021 க்கு இடையில் ஆப்கானிஸ்தானை நேட்டோ ஆக்கிரமித்தபோது அந்த நாட்டில் பயிற்சி பெற்ற சிப்பாய்கள் மற்றும் உளவாளிகளில் இருந்து அது ஆட்சேர்ப்புச் செய்தது. 2021 இல் நேட்டோ ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறியபோது இந்தச் சிப்பாய்கள் தலைமறைவாக இருக்க வேண்டியிருந்தது, மேலும் ஆப்கானிஸ்தான் நவ-காலனித்துவ ஆட்சியானது ஒரு சில நாட்களில் சரிந்தது.

அப்போதிருந்து, IS-K ஆனது நேட்டோ தேவைகளுக்கு ஏற்ப தாக்குதல்களை நடத்தியுள்ளது, அதாவது ஜனவரி மாதம் ஈரானில் நடந்த தாக்குதலில் 84 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் பாக்தாத்தில் அமெரிக்க ட்ரோன் மூலம் படுகொலை செய்யப்பட்ட ஜெனரல் காசெம் சுலைமானியின் இறுதிச் சடங்கில் 284 பேர் காயமடைந்தனர்.

இந்த இஸ்லாமிய சக்திகளானது இப்போது நேட்டோவின் சார்பாக ரஷ்யாவை எதிர்த்துப் போராடி வருகின்றன. ஜனவரி 2023 இல், வடக்கு காகசஸ் மற்றும் மத்திய ஆசியா உட்பட முன்னாள் சோவியத் ஒன்றியம் முழுவதிலும் இருந்து தேசியவாத மற்றும் தீவிர வலதுசாரி கூறுகள் ரஷ்யாவை எதிர்த்துப் போராட உக்ரைனில் குவிந்ததாக நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டது.

டைம்ஸ் தகவலின்படி, “அவர்களில் பெரும்பாலானவர்கள் தாய்நாட்டிற்கு திரும்பி ரஷ்ய மற்றும் பெலருஸ் அரசாங்கங்களைத் தூக்கியெறிவதற்கான நீண்ட-கால அரசியல் அபிலாஷைகளைக் கொண்டுள்ளனர். தன்னார்வலர்களே உண்மைகளை முழுமையாக அறிந்தே, உக்ரேனிய இராணுவம் மற்றும் உளவுத்துறைப் பிரிவுகளின் உத்தரவுகளின் கீழ் செயல்படுவதாகக் கூறுகின்றனர். ரஷ்ய நிலைகளுக்குப் பின்னால் அபாயகரமான உளவுபார்ப்பு அல்லது நாசவேலை நடவடிக்கைகள் உட்பட, அவர்களின் பல நடவடிக்கைகள் இரகசியமாக உள்ளன” என்று எழுதியது.

NPA இன் பிற்போக்குத்தனமான பாத்திரம் குறித்து RP ஆனது மௌனமாக இருக்கிறது, ஆனால் மாஸ்கோ தாக்குதல் புட்டினை “சங்கடப்படுத்துகிறது” என்று குதூகலிக்கிறது. ரஷ்ய மக்களிடையே பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்களுக்கு தாக்குதலின் துயரத் தன்மை குறித்த அதனுடைய பகுப்பாய்வில் எந்த அங்கீகரிப்பும் இல்லை.

இந்தத் தாக்குதல் நூற்றுக்கணக்கான மக்களின் உயிர்களைப் பலிகொண்ட ஒரு பிற்போக்குத்தனமான நடவடிக்கை அல்ல, மாறாக நேட்டோ மற்றும் கியேவ் ஆட்சியின் முன் ரஷ்ய ஆட்சியைப் பலவீனப்படுத்தும் ஒரு பயனுள்ள தலையீடு என்று குறிப்பிட்டு, RP பின்வருமாறு எழுதுகிறது:

Nord-Ost மற்றும் Beslan தாக்குதல்கள் நடைபெற்ற நேரத்தில் இருந்ததைப் போலவே, புட்டின் இந்த திடீர் தாக்குதலால் சங்கடமடைந்திருப்பதாக தோன்றுகிறது, அது அவருடைய ஆட்சி மக்களுக்கு உத்தரவாதம் செய்வதாக கூறும் “ஸ்திரத்தன்மை” என்ற கட்டுக்கதையை தகர்த்தெறிந்துள்ளது. ‘ஒவ்வொரு தாக்குதலுக்கும் கொடூரமாக பதிலடி கொடுப்போம்’ என்று வாக்குறுதி அளித்து தனது ஆட்சியைத் தொடங்கிய அந்த நபர், தாக்குதல் நடந்து 17 மணி நேரத்திற்கு மேலாகியும் அமைதியாக இருக்கிறார்.

இவ்விதத்தில் RP எழுப்பியுள்ள வினா பெரும் எண்ணிக்கையிலான இறப்புக்கள் ரஷ்யாவிலும் முன்னாள் சோவியத் ஒன்றியத்திலும் இன மற்றும் மத பதட்டங்களை தூண்டிவிடுவதன் மூலம் புட்டினை ஸ்திரமற்றதாக்குமா என்பதுதான். இது, ரஷ்யாவுக்கு எதிராக உக்ரேனிய களத்தில் தலையீடு செய்வதன் மூலமாக மக்ரோனும் நேட்டோவும் நடத்த நம்பிக்கை கொண்டுள்ள பிராந்தியத்தைத் துண்டாடுவதற்கும் கைப்பற்றுவதற்கும் வசதியளிப்பதாகும். காஸா இனப்படுகொலைக்கு ஏகாதிபத்தியத்தின் ஆதரவில் காணப்பட்டதைப் போல, இந்தப் போர் யூரேசியா முழுவதிலும் ஒரு பரந்த பிற்போக்குத்தனமான தாக்குதலின் பாகமாகும்.

இந்தப் பிற்போக்குத்தனமானது RP அதன் முன்னோக்குகளை முற்றிலும் ஏகாதிபத்திய அரசியலின் கட்டமைப்பிற்குள் விரிவுபடுத்துகிறது என்ற உண்மையை உயர்த்திக் காட்டுகிறது. ஸ்ராலினிசத்தின் பிற்போக்குத்தனமான பாத்திரம் பற்றியோ, சோவியத் ஒன்றியத்தில் இருந்து அது கலைக்கப்பட்டமை எவ்வாறு ஏகாதிபத்திய நேட்டோ சக்திகளை மத்திய கிழக்கு முழுவதிலும் போர்களைத் தொடங்க அனுமதித்தது என்பதையோ அல்லது ஏகாதிபத்தியத்திற்கும் இஸ்லாமிய வலையமைப்புகளின் எழுச்சிக்கும் இடையிலான தொடர்பைக் குறித்தோ RP எதுவும் கூறுவதில்லை.

அது புட்டின் ஆட்சிக்கான அதன் எதிர்ப்பை ஸ்ராலினிசத்திற்கு எதிரான ஒரு ட்ரொட்ஸ்கிச எதிர்ப்பின் மீது அல்ல, மாறாக ரஷ்யாவுக்கு எதிரான ஒரு ஏகாதிபத்திய-சார்பு எதிர்ப்பின் அடிப்படையில் அமைக்கிறது.

ஏகாதிபத்திய நேட்டோ சக்திகளின் நவ-காலனித்துவ தாக்குதலின் ஆக்ரோஷமான குணாம்சத்தை RP மறுக்கிறது, வாஷிங்டன் போரை விரும்பவில்லை என்று பொய்யாக பின்வருமாறு கூறுகிறது:

அமெரிக்கா இனியும் உலகின் பொலிஸ்காரரின் பாத்திரத்தை வகிக்க விரும்பவில்லை... இந்த நுட்பமான சமநிலைப்படுத்தும் செயலில், விரிவாக்கத்தைத் தூண்டாமல் பலவீனமாக இருப்பது போல் காட்டிக் கொள்ளாமல், பைடென் நிர்வாகம் இதற்கு விடையிறுக்கும் வகையில் ஈராக் மற்றும் சிரியாவில் தெஹ்ரானுடன் இணைந்த 85 இலக்குகளைத் தாக்கியது ஆனால் ஈரானை நேரடியாகத் தாக்காமல் இருப்பதில் கவனமாக இருந்தது.

இது ஒரு பிற்போக்குத்தனமான பொய்மைப்படுத்தலாகும். வாஷிங்டன் போர்களில் சண்டையிட விரும்பவில்லை என்றால், அது ஏன் கிட்டதட்ட ஆயிரம் பில்லியன் யூரோக்கள் பாதுகாப்பு முயற்சிக்கு வாக்களிக்கிறது, உக்ரேனுக்கு துருப்புகளை அனுப்பவும், பிரான்ஸ் மற்றும் ஐரோப்பாவில் ஒரு “போர் பொருளாதாரத்தை” கட்டியெழுப்பவும் மக்ரோன் ஏன் அழைப்பு விடுக்கிறார்? யதார்த்தத்தில், ஏனைய நேட்டோ நாடுகளைப் போலவே பிரான்சிலும் இராணுவ கட்டளையகம் “உயர்-தீவிர போருக்கு” தயாராக இருக்க தொடர்ந்து அழைப்பு விடுக்கிறது.

இந்தப் பொய்மைப்படுத்தல், RP ஆனது அதன் ஒரு பாகமாக இருக்கின்ற குட்டி-முதலாளித்துவ மொரெனிஸ்ட்டுப் போக்கின் ட்ரொட்ஸ்கிச-விரோத போக்கின் வரலாற்று ரீதியான ட்ரொட்ஸ்கிச-விரோத பரிணாமத்துடன் உயிர்ப்புடன் பின்னிப்பிணைந்துள்ளது. 1953 ஆண்டு நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவிலிருந்து உடைத்திருந்த பப்லோவாதப் போக்குடன் ஒரு கோட்பாடற்ற மறுஐக்கியத்தை முன்னெடுப்பதற்காக மொரெனிஸ்ட்டுகள் 1963 இல் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவுடன் முறித்துக் கொண்டது. சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் எந்தவொரு சுயாதீனமான புரட்சிகர அரசியலையும் நிராகரிப்பதும், ஸ்ராலினிச கருவிகள் ஒரு புரட்சிகர பாத்திரத்தை ஆற்றும் என்ற தவறான பப்லோவாத கருத்துருவை ஏற்றுக்கொள்ளுவதுமே இந்த மறுஐக்கியத்தின் அரசியல் அடித்தளமாக இருந்தது.

மொரெனிஸ்டுகள் பப்லோவாதிகளுக்குப் பின்னால் அணிவகுத்து நின்றனர், சோவியத் ஒன்றியம் கலைக்கப்படுவதற்கும் ஜனநாயக சீர்திருத்தமாக முதலாளித்துவத்தை மீட்சி செய்வதற்கும் பாதையைத் தயாரித்த கோர்பச்சேவின் முன்முயற்சிகளை வரவேற்பதில் ஏகாதிபத்திய ஆய்வாளர்களை அவர்கள் எதிரொலித்தனர். இவ்வாறாக, ஸ்ராலினிச இயந்திரத்திற்கு எதிரான தொழிலாளர்களின் ஒரு அரசியல் புரட்சியால் மட்டுமே சோவியத் ஒன்றியத்தில் தொழிலாளர்களின் ஜனநாயகத்தை மீட்சி செய்ய முடியும் என்று வலியுறுத்திய ட்ரொட்ஸ்கியை அவர்கள் தாக்கினர்.

பின்னர் இது, சோவியத்துக்குப் பிந்தைய காலகட்டத்தில், லிபியா மற்றும் சிரியாவிலான நேட்டோவின் ஏகாதிபத்திய போர்களையும், அத்துடன் உக்ரேனில் நேட்டோவின் தலையீட்டையும் “ஜனநாயகப் புரட்சிகள்” என்று அழைக்கப்படுபவை என்று பாராட்டுவதற்கு அவர்களைத் தயார்படுத்தியது.

ரஷ்யாவுக்கு எதிரான நேட்டோவின் தாக்குதலுக்கு ஐரோப்பிய மற்றும் சர்வதேச தொழிலாள வர்க்கத்தில் ஆழமான எதிர்ப்பு உள்ளது. பிரெஞ்சு மக்களில் 68 சதவீதத்தினரும், ஜேர்மனியர்களில் 80 சதவீதத்தினரும் மற்றும் போலந்து மக்களில் 90 சதவீதத்தினரும் ரஷ்யாவை எதிர்த்துப் போரிட துருப்புகளை அனுப்புவதற்கு விரோதமாக உள்ளனர். ஆனால் புதிதாக உருவாகி வரும் மூன்றாம் உலகப் போருக்கு எதிராக இந்த எதிர்ப்பை அணிதிரட்டுவதென்பது, RP போன்ற பப்லோவாத போக்குகளால் கூறப்படும் அரசியல் மற்றும் வரலாற்றுப் பொய்களுக்கு எதிரான ஒரு போராட்டத்தின் மூலமாக மட்டுமே முன்னெடுக்கப்பட முடியும்.

வசதி படைத்த சமூக அடுக்குகள் மற்றும் CGT தொழிற்சங்கம் அல்லது அதன் பல்கலைக்கழக சுற்றுவட்டத்தின் ஸ்ராலினிச அதிகாரத்துவத்துடன் தொடர்புடைய மாணவர்களின் சடரீதியான நலன்களை RP ஆனது பிரதிபலிக்கிறது. லிபியா மற்றும் சிரியாவிலான போர்களில் NPA கடைப்பிடிப்பது குறித்தும், அத்துடன் மக்ரோனுக்கு எதிரான “மஞ்சள் உடையாளர்கள்” போராட்டத்தை NPA கண்டனம் செய்தது மீதும் தந்திரோபாய விமர்சனங்களை செய்த பின்னர், RP ஆனது, 2021 இல் NPA ஐ விட்டு விலகியது. ஆனால் ரஷ்ய-விரோத ஏகாதிபத்திய பிரச்சாரத்துடன் அது அணிசேர்ந்திருப்பது, இந்த உடைவானது ஏகாதிபத்திய கொள்கையில் அவர்களின் சொந்த உடந்தையாக இருப்பதை மூடிமறைக்க மட்டுமே சேவையாற்றியது என்பதை எடுத்துக்காட்டுகிறது.

NPA உடனான இந்த உடைவு, 2022 ஜனாதிபதித் தேர்தல்களில் NPA க்கு வாக்களிக்க அழைப்பு விடுப்பதில் இருந்து RP ஐத் தடுக்கவில்லை, இது உக்ரேன் போருக்கு ஒரு முழு ஆதரவை அளித்துள்ளதைத்தான் இது காட்டுகிறது. நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவும் அதன் பிரெஞ்சு பிரிவான PES உம் மட்டுமே புதிய முதலாளித்துவ எதிர்ப்புக் கட்சி (NPA) மீதும் பின்னர் ஏகாதிபத்தியத்திற்கான RP இன் ஆதரவின் மீதும் ஒரு ட்ரொட்ஸ்கிச விமர்சனத்தை சூத்திரப்படுத்தின. தொழிலாளர்களை அணிதிரட்டுவதற்காகவும், நேட்டோ மற்றும் புட்டின் ஆட்சிக்கு எதிரான போர்களுக்கு எதிராக ஒரு சர்வதேச மற்றும் சோசலிச இயக்கத்தைக் கட்டியெழுப்ப வேண்டியதன் அவசியம் குறித்த அவர்களின் விழிப்புணர்வை எளிதாக்குவதற்காகவும், அவை பெருமளவில் போர்-எதிர்ப்பு போராட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்களை ஊக்குவிக்கின்றன.

இதுபோன்றவொரு தொழிலாளர்களின் அணிதிரள்வுக்கான முன்நிபந்தனையானது, ஏகாதிபத்தியம் மற்றும் பயங்கரவாத குற்றங்களில் ஏகாதிபத்திய உடந்தையாக இருப்பதை உள்ளடக்கிய குட்டி-முதலாளித்துவ போக்குகளுக்கு எதிராக, ஒரு ட்ரொட்ஸ்கிச முன்னோக்கிற்கான போராட்டமாகும், அதாவது ஒரு சர்வதேச சோசலிசப் புரட்சிக்கான போராட்டமாகும்.

Loading