அமெரிக்காவின் கடனானது உலகப் பொருளாதாரத்திற்கு "குறிப்பிடத்தக்க அபாயங்களை" உருவாக்குவதாக சர்வதேச நாணய நிதியம் (IMF) கூறுகிறது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

சர்வதேச நாணய நிதியம் (IMF) சமீபத்தில் வாஷிங்டனில் அதன் வருடாந்திர வசந்த காலக் கூட்டத்திற்கு வழங்கிய அறிக்கைகளானது, உலகப் பொருளாதாரம் மற்றும் நிதிய அமைப்புமுறையில் ஒரு பெரிய நெருக்கடி கட்டமைக்கப்பட்டு வருகிறது என்பதையும், இதற்கு ஆளும் வர்க்கங்கள் தொழிலாள வர்க்கத்திற்கு எதிரான தாக்குதலைக் கொண்டு பதிலளிக்கப்போகிறது என்பதையும் சுட்டிக்காட்டுகின்றன.

2008 உலக நிதிய நெருக்கடியைத் தொடர்ந்து வந்த வேலைகள், ஊதியங்கள் மற்றும் சமூக நிலைமைகள் மீதான தாக்குதல்களை விட இது மிகவும் ஆழமானதாக இருக்கும், ஏனெனில் அதற்குப் பிறகு கடனளவு பெருமளவில் உயர்ந்துள்ளது. உலகின் முக்கிய மத்திய வங்கிகளில் இருந்து அதி மலிவு பணம் (மிகவும் குறைந்த வட்டிவீதம்) விநியோகிக்கப்பட்டதாலும், அத்துடன் வரலாற்று ரீதியாக முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அரசாங்கக் கடன்கள் அதிகரித்ததாலும் தூண்டப்பட்ட ஒரு ஊகவணிகப் பெருக்கத்தின் விளைவு இதுவாகும்.

அக்டோபர் 2022, வாஷிங்டனில் சர்வதேச நாணய நிதியத்தின் வருடாந்திரக் கூட்டம். [AP Photo/Patrick Semansky]

வளர்ந்து வரும் நெருக்கடியானது உலகப் பொருளாதாரத்தின் இதயத்தானமான அமெரிக்காவில் மையம் கொண்டுள்ளது, மேலும் IMF இன் தலைமைப் பொருளாதார நிபுணர் பியர்-ஆலிவியர் கௌரிஞ்சாஸ் (Pierre-Olivier Gourinchas) செவ்வாயன்று அமெரிக்காவின் நிதிய நிலையானது “குறிப்பிட்ட அளவுக்கு கவலைக்குரியதாக இருக்கிறது” என்று குறிப்பிட்டார்.

பெரும் அமெரிக்கக் கடன் பணவீக்கச் செயல்முறைக்கு அபாயங்களை எழுப்பியது “அத்துடன் நீண்டகால நிதி மற்றும் நிலையற்ற தன்மையை உலகப் பொருளாதாரத்திற்கு அதிகரித்திருக்கிறது. ஏதாவது மாற்ற வேண்டும்.”

அமெரிக்காவில் மட்டுமன்றி மற்றய IMF பெயரிடப்பட்ட இத்தாலி, பிரிட்டன் மற்றும் சீனா போன்ற முக்கியப் பொருளாதாரங்களிலும் மோசமான கடன் நிலைமை இருப்பதாக நேற்று (16-04-2024) வெளியிடப்பட்ட அதன் நிதிக் கண்காணிப்பு அறிக்கையில் மேலும் விரிவாகக் கூறப்பட்டுள்ளது.

அடுத்த ஆண்டு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 7.1 சதவீத நிதிப் பற்றாக்குறையை அமெரிக்கா பதிவு செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இது மற்றய பொருளாதாரங்களுக்கான சராசரியான 2 சதவீதத்தை விட மூன்று மடங்கு அதிகமாகும். 2023 ஆம் ஆண்டில், அமெரிக்கா “குறிப்பிடத்தக்க வகையில் பெரிய நிதிச் சரிவுகளை” வெளிப்படுத்தியிருக்கிறது, பற்றாக்குறை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 8.8 சதவீதத்தை எட்டியது, இது 2022 இல் 4.1 சதவீதமாக இருந்தது.

அது பெயரிடப்பட்ட நான்கு நாடுகளும் (அமெரிக்கா, இத்தாலி, பிரிட்டன் மற்றும் சீனா) “செலவு மற்றும் வருவாய்களுக்கு இடையே உள்ள அடிப்படை ஏற்றத்தாழ்வுகளை நிவர்த்தி செய்ய கொள்கை நடவடிக்கை எடுக்க வேண்டும்”. இது செய்யப்படாவிட்டால், அது “உலகப் பொருளாதாரத்திற்கு ஆழமான விளைவுகளை ஏற்படுத்தலாம் மற்றும் பிற பொருளாதாரங்களில் அடிப்படை நிதிக் கணிப்புகளுக்கு கணிசமான அபாயங்களையும் ஏற்படுத்தலாம்.”

அமெரிக்காவில் தளர்வான நிதிக் கொள்கை மற்றும் இறுக்கமான நாணயக் கொள்கை ஆகியவை “நீண்டகால அரசாங்க ஆதாயங்களில் [பத்திரங்கள் மீதான அதிக வட்டி விகிதங்கள்] அதிகரிப்பதற்கும், அமெரிக்காவில் அவற்றின் உயர்ந்த ஏற்ற இறக்கத்திற்கும் பங்களிப்பு செய்துள்ளன, இது வட்டி விகிதங்களில் ஏற்படும் மாற்றங்கள் மூலமாக மற்ற இடங்களில் அபாயங்களை உயர்த்துகிறது” என்று அந்த அறிக்கை குறிப்பிட்டது.

அறிக்கையின் மூலம் எழுப்பப்பட்ட கேள்வி, கடனை அடைக்க பணம் எங்கிருந்து வரும்?

உலகப் பொருளாதாரத்தின் விரிவாக்கப்பட்ட வளர்ச்சியில் இருந்து அல்ல, ஏனெனில், உலகப் பொருளாதாரக் கண்ணோட்ட அறிக்கை (World Economic Outlook) குறிப்பிட்டது போல, வளர்ச்சி 2008ல் இருந்து தொடர்ந்து சரிவைச் சந்தித்து வருகிறது, மேலும் அடுத்த ஐந்தாண்டுகளுக்கான கணிப்பு வரலாற்று சராசரியை விட மிகக் குறைவாகவே இருக்கும்.

கொள்கையானது செலவினத்தின் பக்கமாக இருக்க வேண்டும். அறிக்கையின் முக்கிய சுருக்கமான புள்ளிகளில் கூறப்பட்டுள்ளதன்படி: அதாவது “பொது நிதிகளைப் பாதுகாக்கவும் மற்றும் நடுத்தர கால வளர்ச்சி வாய்ப்புகள் மற்றும் அதிக உண்மையான வட்டி விகிதங்களை குறைக்கும் சூழலில் இருப்புக்களை மீண்டும் வலுப்படுத்தவும் நீடித்த நிதி ஒருங்கிணைப்பு முயற்சிகள் தேவை.

இந்த மொழியின் உண்மையான உள்ளடக்கம், எப்பொழுதும் அவர்களின் சமூக மற்றும் வர்க்க உள்ளடக்கத்தை வெளிக்கொணராமல் இருட்டடிப்பு செய்வதை நோக்கமாகக் கொண்ட இத்தகைய அறிக்கைகளின் பொதுவான உள்ளடக்கமாக இருக்கிறது, இருப்பினும், அறிக்கையின் முக்கிய பகுதியில் அதுபற்றி மறைமுகமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

“வயதான மக்கள்தொகை கொண்ட பல மேம்பட்ட பொருளாதாரங்கள், சரிசெய்தல் மாற்றச் சீர்திருத்தங்கள் மற்றும் பிற நடவடிக்கைகள் மூலம் சுகாதாரம் மற்றும் ஓய்வூதியங்கள் மீதான அழுத்தங்களைக் கட்டுப்படுத்துவதில் கவனம் செலுத்த வேண்டும்” என்று அது கூறியிருக்கிறது.

இதன் அர்த்தம், ஏற்கனவே பலவீனமான சுகாதார சேவைகளின் மேலதிக குறைப்புடன் சேர்ந்து அமெரிக்காவில் நீண்டகாலமாக பின்பற்றப்பட்டு வரும் சமூகப் பாதுகாப்பை அகற்றும் நோக்கம் தீவிரப்படுத்தப்படும். மற்றய நாடுகளுக்கும் இது பொருந்தும்.

அமெரிக்காவில், காங்கிரஸின் பட்ஜெட் அலுவலகத்தின் கூற்றுப்படி, ஆண்டுப் பற்றாக்குறையில் எப்போதும் அதிகரித்து வரும் பகுதியான அரசாங்கக் கடன், வங்கிகள் மற்றும் பிற நிதி நிறுவனங்களின் வட்டித் தொகைகள், அடுத்த இரண்டு ஆண்டுகளில் $1 டிரில்லியனுக்கும் அதிகமாக உயரும்.

பொது நிதியை வலுப்படுத்துவதற்கான முயற்சிகளை தாமதப்படுத்துவது-அதாவது, ஓய்வூதியம், சுகாதார சேவை மற்றும் பிற முக்கிய சேவைகள் மீதான தாக்குதல்களை நிறுத்தி வைப்பது - “பாதிப்புகளை அதிகரிக்கலாம் மற்றும் எதிர்கால நெருக்கடிகளைச் சமாளிக்க நிதிக்கான இடத்தை மட்டுப்படுத்தலாம், மேலும் வலிமிகுந்த நிதியைச் சரிசெய்தல் மற்றும் பாதகமான நிதிச் சிக்கல்களுக்கு வழிவகுக்கும் “ என்று IMF கூறியது.

இதன் பொருள் இப்பொழுது கடன் குறைக்கப்படாவிட்டால், பிரிட்டன், அமெரிக்கா மற்றும் பிற இடங்களில் உள்ள அரசாங்கங்கள் மற்றொரு நெருக்கடி வரும்போது போதுமான பணம் இருக்காது, தவிர்க்க முடியாமல் பெருநிறுவனங்கள் மற்றும் நிதிய நிறுவனங்களை அவை கடந்த காலத்தில் செய்தது போல் பிணை எடுப்பு செய்யும்.

வேகமாக அதிகரித்து வரும் இராணுவ செலவினங்களுக்கு நிதியளிப்பதற்காக அரசாங்கங்களும் கடனை குறைக்க வேண்டியிருக்கிறது.

IMF பகுப்பாய்வின் மற்றொரு முக்கிய அங்கமாக இருப்பது, பெருநிறுவனங்கள் மற்றும் நிதி நிறுவனங்களுக்கு நிதி ஆதாரமாக தனியார் கடன் வளர்ச்சி உள்ளது ஆனால் இது பற்றி அதிகம் தெரிவிக்கப்படவில்லை. உலகளாவிய நிதி நிலைத்தன்மை (Global Financial Stability) அறிக்கையானது நிதி அமைப்பின் இந்தப் பகுதிக்கு ஒரு முழு அத்தியாயத்தையும் அர்ப்பணித்துள்ளது.

கடன் இந்தத் துறையில் $2 டிரில்லியன் அளவாக இருப்பதாக மதிப்பிட்டுள்ளது, இந்த தொகையில் அதிகளவு அமெரிக்காவில் மையமாக கொண்டிருக்கின்றன. ஆனால் ஜேபி மோர்கனின் (JP Morgan) ஆராய்ச்சியின்படி, பைனான்சியல் டைம்ஸில் வெளியிடப்பட்ட முடிவுகளின் படி இது $3.14 டிரில்லியன் ஆக இருக்கிறது. இது மாபெரும் தொகையாகும்.

இந்த வேறுபாட்டிற்கான காரணங்களில் ஒன்று, இந்த பகுதி “வெளிப்படைத்தன்மையற்றதாக” இருக்கிறது, அதாவது நிதி அதிகாரிகளுக்கு அதன் செயல்பாடுகள் பற்றி அதிக அறிவு இல்லை.

IMF பகுப்பாய்வின் படி, எந்தவொரு உடனடி சிக்கலையும் தள்ளுபடி செய்யும் போது, இந்த நிலைமை மிகவிரைவாக மாற்றமடையக்கூடிய பல காரணிகளைச் சுட்டிக்காட்டியது.

கடன் வாங்குபவர்களின் பாதிப்புகள் “ஒரு வீழ்ச்சியில் பெரிய, எதிர்பாராத இழப்புகளை உருவாக்கலாம்” என்று அது கூறியது. இந்த இழப்புகள் “காப்பீடு மற்றும் ஓய்வூதிய நிதிகள்” உட்பட குறிப்பிடத்தக்க இழப்புகளை முதலீட்டாளர்களுக்கு ஏற்படுத்தலாம். இது “தனியார் கடன் மற்றும் பிற எளிதாக பணமாக மாற்றமுடியாத முதலீடுகளில் அவர்களின் முதலீடுகளை கணிசமாக விரிவுபடுத்தியிருக்கின்றன.”

ஒரு எளிதில் பணமாக்க முடியாத சொத்து என்பது நெருக்கடியின் போது அல்லது வீழ்ச்சியின் போது கூட எளிதாக பணமாக மாற்ற முடியாது. “அடிப்படை வரவுகளின் செயல்திறனைப் பற்றிய சிறந்த நுண்ணறிவு இல்லாமல், இந்த நிறுவனங்கள் மற்றும் அவற்றின் கட்டுப்பாட்டாளர்கள் சொத்து வகைகள் முழுவதும் கடன் அபாயங்களின் வியத்தகு மறு மதிப்பீட்டின் மூலம் தெரியாமல் பிடிபடலாம்.”

“தரவுக் கட்டுப்பாடுகள்” மேற்பார்வையாளர்களுக்கு “நிதியியல் துறையின் பிரிவுகளுக்கிடையிலான வெளிப்பாடுகளை மதிப்பீடு செய்வதையும் மற்றும் சாத்தியமான ஏற்படும் மாற்றங்களை மதிப்பிடுவதையும்” “சவாலானதாக” ஆக்குகின்ற நிலைமைகளின் கீழ், நிதியியல் அமைப்புமுறையின் ஏனைய பகுதிகளுடன் தனியார் கடன்களின் இடைத்தொடர்புகளிலிருந்தும் நிதியியல் ஸ்திரத்தன்மைக்கான அபாயங்கள் தோன்றக்கூடும் என்றும் சர்வதேச நாணய நிதியம் எச்சரித்தது.

பல்வேறு IMF அறிக்கைகள் தெளிவுபடுத்துவது என்னவென்றால் “மென்மையான தரையிறக்கம்” என்று அழைக்கப்படுவதைப் பற்றிய அனைத்து பேச்சுகளுக்கும் அப்பால், அதாவது - பணவீக்கத்தைக் குறைத்தல், பொருளாதார வளர்ச்சியை மிகக் குறைந்த விகிதத்தில் தொடர்ந்தாலும், மந்தநிலையைத் தடுத்தல், குறைந்தபட்சம் இதுவரை கூறப்பட்டாலும் - உலக முதலாளித்துவ அமைப்புமுறை முறையான நெருக்கடி மற்றும் முறிவுக்குள் சென்று கொண்டிருக்கிறது.

ஆளும் வர்க்கங்கள் மற்றும் IMF போன்ற அவர்களது முகமைகளின் பதில் என்னவென்றால், தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்பங்கள், வயதானவர்கள், நோய்வாய்ப்பட்டவர்கள் மற்றும் கல்வி தேவைப்படும் குழந்தைகளின் சமூக நிலை முழுவதன் மீதான தாக்குதலின் மூலம் அதற்கான விலை கொடுக்க வைக்கப்பட வேண்டும்.

இந்தப் புறநிலை நிலைமையானது, ஒரு சோசலிச பொருளாதாரத்தை ஸ்தாபிப்பதற்கான முதல் படியாக அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றுவதை நோக்கமாகக் கொண்ட ஒரு புரட்சிகர வேலைத்திட்டத்திற்கான போராட்டத்தின் ஊடாக தொழிலாள வர்க்கமானது அதன் சொந்த சுயாதீனமான முறையான தீர்வைக் கொண்டு விடையிறுக்க வேண்டிய அவசியத்தை முன்நிறுத்துகிறது. ஒவ்வொரு நாளும் ஆழமடைந்து வரும் இலாப அமைப்புமுறையின் நெருக்கடிக்கு தொழிலாளர்களுக்கு இதைத்தவிர வேறு எதுவும் ஒரு தீர்வு வழங்காது.

Loading