மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்
செவ்வாய்கிழமை மாலை, பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகளுக்கு முன்னதாக, ஜனாதிபதி இமானுவல் மக்ரோன் தேசிய தொலைக்காட்சியில் தோன்றி, ஜூலை 7 தேர்தலில் தோற்றாலும் கூட, அவரது குழுமக் கட்சியின் (Ensemble party) அரசாங்கம் பதவியில் இருக்கும் என்று அறிவித்தார். அவர் நியமித்த அமைச்சர்கள் ஆகஸ்ட் மத்தியில் விளையாட்டுக்கள் முடிவடையும் வரையில் அதிகாரத்தில் இருப்பார்கள் என்று அறிவித்த அவர், காஸாவில் இஸ்ரேலிய இனப்படுகொலைக்காக உலகெங்கிலும் வெறுக்கப்படும் இஸ்ரேலிய பிரதம மந்திரி பெஞ்சமின் நெதன்யாகுவை ஒலிம்பிக்கில் கலந்து கொள்ளுமாறு ஆத்திரமூட்டும் வகையில் அழைப்புவிடுத்தார்.
அவரால் தேர்தல் முடிவை காலில் போட்டு மிதித்து, நெதன்யாகுவை வெட்கமின்றி அரவணைக்க முடிகிறது என்றால், அது அனைத்திற்கும் மேலாக மக்ரோனின் உதவியாளர்களாக செயல்படும் ஜோன்-லூக் மெலோன்சோன் மற்றும் அவரது புதிய மக்கள் முன்னணி கூட்டணியின் திவால்நிலையால் ஆகும்.
ஜூலை 7 தேர்தலில், NFP முதலிடம் பெற்ற பின்னர், தேசிய பேரணியின் (RN) ஆச்சரியமான தோல்வி மற்றும் மக்ரோன் அனுபவித்த படுதோல்வி ஆகியவற்றின் மீது மக்கள் உற்சாகம் அதிகரித்தது. மக்ரோன் இராஜினாமா செய்ய வேண்டும் மற்றும் கடந்த ஆண்டு அவர் திணித்த செல்வாக்கற்ற ஓய்வூதிய வெட்டுக்களை இரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகள் பரவி வந்தன. வாஷிங்டனில் ஜூலை 9 அன்று நேட்டோ உச்சிமாநாட்டில் கலந்து கொண்ட மக்ரோன், உக்ரேனில் ரஷ்யாவை எதிர்த்துப் போரிட, தரைப்படை துருப்புகளை அனுப்புவதற்கான அவரது அழைப்பைப் பகிரங்கமாக மீண்டும் வலியுறுத்த துணியவில்லை.
ஆனால் NFP ஆனது அந்த அரசியல் வாய்ப்பை வீணடித்தது. முதலில் இது, மக்ரோனுடன் தேர்தல் கூட்டணிகளை அமைப்பதன் மூலம் நவ-பாசிசவாதிகளைத் தடுக்கலாம் என்ற பொய்யான அடித்தளத்தை கட்டமைத்தது. பின்னர் மக்ரோனின் கொள்கைகளை நடைமுறைப்படுத்துவதில் இன்னமும் பொறுப்பேற்றுள்ள ஒரு அரசாங்கத்தில் இணைவதா என்று பகிரங்கமாக விவாதித்தது. மக்ரோனின் சமீபத்திய பலப்படுத்தலானது மெலோன்சோன் முன்னெடுத்த கோட்பாடற்ற கூட்டணிகள் மீதான ஒரு கசப்பான படிப்பினையாகும். நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் பிரெஞ்சு பிரிவான சோசலிச சமத்துவக் கட்சி (Parti de l’égalité socialiste -PES), மக்ரோன் முன்கூட்டிய தேர்தல்களுக்கு அழைப்பு விடுத்து மெலோன்சோன் NFP கூட்டணியை உருவாக்கிய பின்னர், எச்சரித்ததைப் போல, புதிய மக்கள் முன்னணிக் (NFP) கூட்டணியானது தொழிலாளர்களுக்கு ஒரு பொறியாகும் என்று அறிவித்தது.
மக்ரோன் மற்றும் RN இரண்டையும் எதிர்க்க அவருக்கு வாக்குகளை வழங்கிய மில்லியன் கணக்கான தொழிலாளர்களை மெலோன்சோன் ஒருமுறை கூட போராட்டத்தில் அணிதிரட்ட முனைந்ததில்லை. பிரான்சின் அனைத்து தொழிற்சங்க அதிகாரத்துவங்களின் ஆதரவையும் புதிய மக்கள் முன்னணிக் (NFP) கூட்டணி பெற்றிருந்த போதிலும், போர், இனப்படுகொலை மற்றும் பாசிசத்திற்கு எதிராக தொழிலாள வர்க்கத்தின் சக்தியை அணிதிரட்டுவதற்கு ஒரு வேலைநிறுத்தத்திற்கும் கூட அழைப்பு விடுக்கவில்லை. RN உடனான மக்ரோன் அரசாங்கத்தின் இரகசிய பேச்சுவார்த்தைகளை பத்திரிகைகள் அம்பலப்படுத்திய போதும் NFP மௌனமாக இருந்தது.
செவ்வாய்கிழமை இரவு, புதிய மக்கள் முன்னணிக் (NFP) கூட்டணிக்குள் இருந்து ஆதரவு கிடைக்கும் என்பதில் உறுதியாக இருந்த மக்ரோன், ஜூலை 7 தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் ஓர் அரசாங்கம் அமைக்க மறுத்துவிட்டார், “வெளிப்படையாக, ஆகஸ்ட் நடுப்பகுதி வரையில் நாம் விளையாட்டுக்களில் கவனம் செலுத்த வேண்டும்,” என்றார். அவரது ஓய்வூதிய வெட்டுக்களை இரத்து செய்வதற்கான அழைப்புகளையும் அவர் நிராகரித்ததோடு, “நமது நாட்டில் அவசரமானது என்னவென்றால் நாம் இப்போது செய்ததை அழிப்பதல்ல, மாறாக கட்டியெழுப்புவதும் முன்னெடுப்பதும் என்று நான் நினைக்கிறேன்” என்று குறிப்பிட்டார்.
அவர் நவ-பாசிசவாதத்திற்கு அனுதாபம் காட்டுகிறாரா என்ற பரவலான சந்தேகங்கள் குறித்து வினவிய போது, மக்ரோன் அதிவலதின் வளர்ச்சியில் அவர் வகித்த பாத்திரத்தை எவ்வித வருத்தமும் இன்றி ஒப்புக்கொண்டார். “இதோ பாருங்கள், இதில் என் பங்கை நான் ஏற்றுக்கொள்கிறேன். எப்படியிருந்தாலும், ஐரோப்பாவின் எல்லா இடங்களிலும், அதிதீவிரங்கள் அதிகரித்து வருகின்றன, எல்லா இடங்களிலும்” என்று குறிப்பிட்டார்.
உக்ரேனில் நேட்டோ-ரஷ்யா போர் காரணமாக முக்கிய நிகழ்வுகளில் இருந்து ரஷ்ய விளையாட்டு வீரர்களுக்கு அவர் ஒலிம்பிக்கில் தடை விதித்தது குறித்து France2 தொலைக்காட்சியின் கேள்விகளையும் மக்ரோன் நிராகரித்தார். அதே நேரத்தில் காஸா இனப்படுகொலை இருந்தபோதிலும் இஸ்ரேலிய விளையாட்டு வீரர்களுக்கு எந்த கட்டுப்பாடுகளையும் விதிக்கவில்லை. “சூழ்நிலை ஆழமாக வேறுபட்டது. அக்டோபர் 7 அன்று ஹமாஸ் நடத்திய பயங்கரவாத தாக்குதலுக்கு இஸ்ரேல் பதிலடி கொடுத்தது” என்று மக்ரோன் அறிவித்தார்.
அதிவலது மற்றும் இனப்படுகொலை சக்திகளுடனான அவரது உறவுகளைக் களிப்படையச் செய்த மக்ரோன், நெதன்யாகு “எங்களது கருத்து வேறுபாடுகள் ஆழமானவை என்றாலும், அவர் வரவேற்கப்படுவார்” என்றார். “ஆனால் கருத்து வேறுபாடுகளைக் கொண்டிருப்பது, பயனுள்ள தீர்வுகளைக் காண முயற்சிப்பது, இது அனைத்து உறவுகளையும் முறிப்பது என்று அர்த்தமல்ல,” என்பதையும் அவர் சேர்த்துக் கொண்டார்.
போர், இனப்படுகொலை, சிக்கன நடவடிக்கைகள் மற்றும் பாசிச எதிர்வினை ஆகியவற்றின் வேலைத்திட்டத்தை வாக்காளர்கள் மறுதலித்த பின்னரும், அவற்றை மக்ரோனால் முன்னெடுக்க முடிகிறது. அதற்கு புதிய மக்கள் முன்னணிக் (NFP) கூட்டணியின் பயனற்ற தன்மையே காரணம் ஆகும். மக்ரோன் பேசுவதற்கு ஒரு சில மணி நேரங்களுக்கு முன்னர் வரையில் ஒரு சாத்தியமான பிரதம மந்திரி மீது ஓர் உடன்பாட்டை எட்டுவதில் அது தோல்வியடைந்தது. மக்ரோன் கல்விகற்ற அதே உயரடுக்கு தேசிய நிர்வாகப் பள்ளியில் (ENA) பயிற்றுவிக்கப்பட்ட ஒரு அறியப்படாத நிதி அமைச்சக அதிகாரியான 37 வயதான லூசி காஸ்டெசின் பிரதம மந்திரிக்கான தேர்வுக்கு மெலோன்சோன் இறுதியில் உடன்பட்டார் என்ற உண்மையானது, அவரது அடிபணியாத பிரான்ஸ் கட்சியை (LFI) தொழிலாளர்களிடமிருந்து பிரிக்கும் வர்க்கப் பிளவை அம்பலப்படுத்துகிறது.
மெலோன்சோன் மற்றும் அவரது நடுத்தர வர்க்க “ஜனரஞ்சகவாத” அடிபணியாத பிரான்ஸ் (LFI) கட்சியின் பாத்திரம் குறித்து சோசலிச சமத்துவக் கட்சி (PES) விடுத்த எச்சரிக்கைகளை நிகழ்வுகள் சரியென நிரூபித்துள்ளன. மக்ரோன் மற்றும் RN க்கு எதிரான இடதுசாரி எதிர்ப்பின் குரல்வளையை நெரிக்க LFI கட்டங்களாக வேலை செய்தது. முதலாவதாக, ஜூன் 9 அன்று மக்ரோன் முன்கூட்டிய தேர்தல்களுக்கு அழைப்பு விடுத்த பின்னர், அடிபணியாத பிரான்ஸ் (LFI) கட்சி, பெருவணிக சோசலிஸ்ட் கட்சி (PS) மற்றும் அதன் அரசியல் துணைக் கட்சிகளுடன் இணைந்து NFP கூட்டணியை உருவாக்கியது. சோசலிச சமத்துவக் கட்சி (PES) இவ்வாறு எச்சரித்தது:
இந்தப் புதிய மக்கள் முன்னணி கூட்டணியானது, அதிதீவிர வலதுசாரி மற்றும் பொலிஸ் அரச இராணுவவாதத்தின் எழுச்சியைத் தடுக்க முயல்பவர்களுக்கு ஒரு அரசியல் பொறியாகும். முதலாளித்துவ சோசலிஸ்ட் கட்சி (PS), ஸ்ராலினிச பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சி (PCF) மற்றும் பசுமைவாதிகள் போன்ற முதலாளித்துவ ஆளும் கட்சிகளுடன் ஒரு பலவீனமான கூட்டணிக்குள் தொழிலாளர்களை அடிபணிய வைப்பதன் மூலம் சோசலிசத்திற்கான போராட்டத்தைத் தடுப்பதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த ஊழல்பிடித்த கட்சிகள் தங்கள் ஆதரவாளர்களை பேரழிவுக்குள் மட்டுமே கொண்டு செல்ல முடியும்….
மெலன்சோனின் மக்கள் முன்னணியானது, அமைதி மற்றும் ஜனநாயகத்திற்கான சக்தி அல்ல. மாறாக, இந்த மக்கள் முன்னணியின் முன்னோக்கு, பிரெஞ்சு ஏகாதிபத்தியத்தின் நலன்களைப் பாதுகாக்கும் முதலாளித்துவ சொத்து உறவுகளின் மீது தாங்கி நிற்கும் அரசாங்கத்தை கொண்டிருக்கிறது. இது, உக்ரேனுக்கான உதவி என்ற போர்வையில் ரஷ்யாவுடனான போரை ஆதரிக்கும் சிக்கனச் சார்பு சோசலிசக் கட்சியுடன் (PS) தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களை கட்டிப்போடுகிறது. சோசலிஸ்ட் கட்சியானது, 1971 இல் முன்னாள் நாசி ஒத்துழைப்பாளர் பிரான்சுவா மித்திரோனால் நிறுவப்பட்டதில் இருந்து அதிதீவிர வலதுசாரிகளுடன் பின்-வழி உறவுகளுடன் அதன் தோற்றத்தைக் கொண்டுள்ளது.
NFP ஆனது உக்ரேனுக்கு பிரெஞ்சுத் துருப்புக்களை அனுப்புவதற்கும் பிரெஞ்சு இராணுவம், பொலிஸ் மற்றும் உளவுத்துறை அமைப்புக்களை வலுப்படுத்துவதற்கும் ஆதரவு கொடுக்கும் ஒரு தேர்தல் திட்டத்தை ஏற்றுள்ளது. இது, ஜூன் 30 தேர்தலின் முதல் சுற்றுக்குப் பின்னர், RN ஐ எதிர்த்துப் போராடுவதாக கூறிக் கொண்டு, மக்ரோனின் சொந்த குழும கூட்டணியுடன் ஒரு கூட்டணி அமைப்பதற்கான முன்னறிவிப்பாக இருந்தது. இந்தக் கூட்டணிக்கு எதிராக எச்சரித்து, சோசலிச சமத்துவக் கட்சி (PES) அறிவித்தது:
மெலோன்சோனும் NFP உம் போர் மற்றும் பாசிசத்திற்கு எதிராக தொழிலாள வர்க்கத்தில் ஒரு பாரிய இயக்கத்தைக் கட்டியெழுப்புவதற்கான ஒரு வழியை தொழிலாளர்களுக்கு வழங்கவில்லை. …
அதற்கு பதிலாக தேசிய முன்னணியானது அத்தகைய போராட்டத்தின் கழுத்தை நெரிக்க வேலை செய்கிறது. மெலோன்சோன் மக்ரோனின் பிரதம மந்திரியாக சேவையாற்றக் கூடிய ஒரு முதலாளித்துவ கூட்டணி அரசாங்கத்தை உருவாக்குவதற்காக, தொகுதி தொகுதியாக அது தேர்தல் உடன்படிக்கைகளை செய்து கொண்டிருக்கிறது.
ஜூலை 7 க்குப் பின்னர் NFP இன் பாத்திரம் இந்த பகுப்பாய்வுகளை ஊர்ஜிதப்படுத்தியது. சோசலிஸ்ட் கட்சி (PS), PCF மற்றும் பசுமைக் கட்சியினர், பேராசிரியர் லோரன்ஸ் துபியானாவை சாத்தியமான பிரதமராக ஊக்குவித்தனர். அவர் NFP இன் வேலைத்திட்டத்தில் சமூக செலவினங்கள் குறித்த அற்ப வாக்குறுதிகளை கைவிட்டுவிட்டு அதற்கு பதிலாக மக்ரோனுடன் ஒரு அரசாங்கத்தை உருவாக்குவதற்கு பகிரங்கமாக அழைப்புவிடுத்தார். ஒரு வலதுசாரி, மக்ரோன் தலைமையிலான அரசாங்கமாக இருக்கக்கூடிய ஒன்றுக்குள் NFP இன் பரந்த அடுக்குகளை ஒருங்கிணைக்க முயற்சிக்க மக்ரோனுக்கு இது பச்சைக்கொடி காட்டியது.
நவ-பாசிசவாதிகளுக்கு எதிரான எதிர்ப்பு என்ற கவசத்தை விட்டுக்கொடுத்து, அதுபோன்றவொரு அரசாங்கம் உருவாக்கப்பட்டால், RN இன் தலைவர் மரின் “லு பென் உடனடியாக 10 சதவீத வாக்குகளை கூடுதலாகப் பெறுவார்” என்று இந்த வாரம் இத்தாலிய நாளிதழ் லா ரிபப்ளிக்கா க்கு மெலோன்சோன் தெரிவித்தார். ஆனால், மெலோன்சோன் உருவாக்கிய NFP இன் பெரும்பகுதி இதைத்தான் செய்து கொண்டிருக்கிறது.
இறுதியில் மக்ரோன் எந்த அரசாங்கத்தை அமைத்தாலும், அது மக்களுக்கு எதிராக ஆட்சி செய்வதோடு தொழிலாளர்களுடன் போரில் இருப்பதைக் காணும். பிரான்சில் 10 பேரில் ஒன்பது பேர் இராணுவ விரிவாக்கத்திற்கு நிதியளிக்க அவர் ஓய்வூதிய வெட்டுக்களையும் மற்றும் உக்ரேனுக்கு துருப்புக்களை அனுப்புவதற்கான அவரது அழைப்புகளையும் எதிர்க்கின்றனர். ஆனால் NFP அதிகாரத்துவங்கள் மக்ரோனை எதிர்க்கும் வரை தொழிலாளர்கள் காத்திருக்க முடியாது: மாறாக, அவை மக்ரோனின் அரசாங்கத்தை ஆதரிக்கின்றன. மக்ரோன் மற்றும் லு பென்னுக்கு எதிரான போராட்டங்களை, ஏகாதிபத்தியப் போர், இனப்படுகொலை, சிக்கன நடவடிக்கைகள் மற்றும் முதலாளித்துவத்திற்கு எதிராக நடத்துவதற்கு, அதிகாரத்துவங்களில் இருந்து சுயாதீனமாக அணிதிரட்டப்பட்ட சாமானிய தொழிலாளர்களின் அமைப்புகளால் மட்டுமே முடியும்.
RN மற்றும் மக்ரோனைத் தோற்கடிப்பதற்கு NFP க்கு இடதில் ஒரு மாற்றீட்டைக் கட்டியெழுப்புவது அவசரமாக அவசியப்படுகிறது. ஸ்ராலினிசம் மற்றும் நடுத்தர வர்க்க போலி-இடதுகளுக்கு எதிராக தொழிலாள வர்க்கத்தின் அரசியல் சுயாதீனத்தையும் ட்ரொட்ஸ்கிசத்தின் பாரம்பரியத்தையும் பிரெஞ்சு சோசலிச சமத்துவக் கட்சி (PES) பாதுகாப்பதே இதற்கான அடிப்படையாகும். பப்லோவாத புதிய முதலாளித்துவ-எதிர்ப்புக் கட்சி (NPA), தொழிலாளர் போராட்டம் (LO), மற்றும் மொரேனோவாத நிரந்தரப் புரட்சி (Révolution permanente) குழு உட்பட இந்த ஒட்டுமொத்த போலி-இடதுகளும் NFP ஐ வழிமொழிந்திருப்பது, அதை ஏகாதிபத்தியத்தின் ஒரு கூட்டாளி என்பதை அம்பலப்படுத்துகிறது.
மெலோன்சோனின் திவால்நிலையால் வேலைத்திட்டமும் முன்னோக்கும் நிரூபிக்கப்பட்டுள்ள கட்சியான, இப்போது கட்டியெழுப்பப்பட வேண்டிய கட்சியாக சோசலிச சமத்துவக் கட்சி (PES) இருக்கிறது.