இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.
இலங்கையை பல தசாப்தங்களின் பின்னர் தாக்கிய மிக மோசமான இயற்கை பேரழிவுகளில் ஒன்றான டிட்வா சூறாவளியால் வியாழன் மாலை நிலவரப்படி 481க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டுள்ளதுடன் தீவு முழுவதும் கிட்டத்தட்ட ஒரு மில்லியன் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 345க்கும் மேற்பட்டோரை இன்னும் காணவில்லை. தேடுதல் நடவடிக்கைகள் தொடர்வதால், வரும் நாட்களில் மரண எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நாட்டை துவம்சம் செய்த டிட்வா சூறாவளியால் பெருக்கெடுத்த பேரழிவு வெள்ளத்தாலும் மற்றும் குறிப்பாக கடுமையாக பாதிக்கப்பட்ட மத்திய மாகாணத்தில் ஏற்பட்ட பாரிய நிலச்சரிவுகளாலும் முழு கிராமங்களே அடித்துச் செல்லப்பட்டுள்ளதோடு குடும்பங்கள் உயிருடன் புதைக்கப்பட்டுவிட்டன.
25 மாவட்டங்களிலிருந்தும் 1 இலட்சத்து 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் 919 தற்காலிக தங்குமிடங்களில் தஞ்சம் புகுந்துள்ளனர். வளிமண்டலவியல் திணைக்களமும் அனர்த்த முகாமைத்துவ நிலையமும் கூறியுள்ளவாறு 20 மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. 309,607 குடும்பங்களைச் சேர்ந்த மொத்தம் 1,118,929 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மத்திய மலைநாட்டில் பெய்த பலத்த மழையால், நிலம் நனைந்து, நிலைகுலைந்து, ஆபத்தான நிலச்சரிவுகள் ஏற்பட்டன. டிட்வா சூறாவளி நாட்டைக் கடந்து போன பகுதிகளில் மழைப்பொழிவு 500 மில்லிமீட்டரைத் தாண்டியது. நிரம்பி வழியும் நீர்த்தேக்கங்கள் மற்றும் ஆறுகள் 10 முதல் 20 அடி வரை உயர்ந்ததால் குடியிருப்பாளர்கள் தப்பிக்க சிறிது நேரம் மட்டுமே கிடைத்ததுடன் இது பயனுள்ள முன்கூட்டிய எச்சரிக்கை முறைமைகள் இல்லாததை அம்பலப்படுத்தியது.
நவம்பர் 27 அன்று இரவு கண்டி மாவட்டத்தில் கம்பொலவின் புறநகரான குடமகேயில் நடந்த மிகவும் துயரமான சம்பவத்தில், 13 அடி உயரத்திற்கு வெள்ள நீர் பாய்ந்து திடீரென சுமார் 100 குடும்பங்களைக் கொண்ட ஒரு கிராமத்தை மூழ்கடித்தது. பலர் தப்பிக்க முடிந்தாலும், 66 பேர் கொல்லப்பட்டதுடன் பலர் காணாமல் போயுள்ளனர்.
பல மாவட்டங்களில் முழு நகரங்களும் நீரில் மூழ்கி, பிரதான பாலங்கள் அடித்துச் செல்லப்பட்டுள்ளதுடன் முக்கியமான உள்கட்டமைப்புகள் இடிந்து விழுந்துள்ளன. நூற்றுக்கணக்கான வீதிகளும் ரயில் பாதைளும் நிலச்சரிவுகளால் அழிக்கப்பட்டுள்ளதால் அல்லது தடைபட்டுள்ளதால் மீட்பு முயற்சிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பல பகுதிகளை இப்போது படகு அல்லது இராணுவ ஹெலிகாப்டர் மூலம் மட்டுமே அணுக முடியும்.
கடுமையாக பாதிக்கப்பட்ட பல பகுதிகளில் 48 மணி நேரத்திற்கும் மேலாக பரவலான மின் தடை மற்றும் தொலைத்தொடர்பு செயலிழப்புகள் ஏற்பட்டதால், பல சமூகங்கள் முற்றிலுமாக துண்டிக்கப்பட்டு, தாங்களாகவே உயிர்பிழைக்க நிர்ப்பந்திக்கப்பட்டன. டசின் கணக்கான இடங்களில் கூரைகளில் தவித்த மக்களை இராணுவ உலங்கு விமானத்தில் ஏற்றிச் செல்வதை தொலைக்காட்சி கானொளிகள் காட்டுகின்றன. இது ஆயிரக்கணக்கானோருக்கு எந்த எச்சரிக்கையும் கிடைக்கவில்லை என்பதையும், அவர்கள் கூரைகள் மற்றும் மரங்களில் ஏறி பாதுகாப்பு தேடத் தள்ளப்பட்டனர் என்பதையும் அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.
சரியான நேரத்தில் வெளியேற்றப்படாமையே அதிக உயிரிழப்புக்களுக்கு காரணமாக அமைந்தது. பல சந்தர்ப்பங்களில், அதிகாரிகள் எச்சரிக்கைகளை வழங்கத் தவறியதால் அல்லது கடைசி நிமிடத்தில் எச்சரிக்கை விடுத்ததால், முன்கணிக்க முன் நிலச்சரிவுகள் ஏற்பட்டன, இதனால் குடியிருப்பாளர்கள் வெளியேற நேரமிருக்கவில்லை.
சனிக்கிழமை மாலை, கண்டி மாவட்டத்தின் அலவதுகொட பொலிஸ் பிரிவில் உள்ள ரம்புக்-எல கிராமத்தில் ஏற்பட்ட ஒரு பெரிய நிலச்சரிவில் சுமார் 50 வீடுகள் புதைந்தன. சுமார் 50 பேர் காணாமல் போயிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. இதே போன்ற பிற சம்பவங்களில், கடுமையான வானிலையால், மீட்புக் குழுக்கள் சரியான நேரத்தில் அந்த இடத்தை அடைய முடியாமல் போனது. இதனால் உயிர் பிழைத்தவர்களைக் கண்டுபிடிக்கும் நம்பிக்கையை கைவிட நேர்ந்தது.
மீட்புப் பணிகளே ஆபத்தானதாகிவிட்டன. கவரம்மன பகுதியில், வெலிமடை-நுவரெலியா பிரதான வீதிக்கு குறுக்கே இடிந்து விழுந்த மண் மேட்டை அகற்ற வீதி அபிவிருத்தி அதிகாரசபை ஊழியர்கள் குழு அனுப்பப்பட்டது. இந்த நடவடிக்கையின் போது, ஒரு தொழிலாளி காணாமல் போனதுடன் இடிபாடுகளுக்கு அடியில் புதைந்திருந்த மற்றொருவர் உயிருடன் மீட்கப்பட்டார்.
நாடு முழுவதும் சிக்கித் தவிக்கும் மக்களிடமிருந்து சுத்தமான தண்ணீர், உணவு, உடைகள் மற்றும் பிற தேவைகளைக் கோரி நூற்றுக்கணக்கான அவநம்பிக்கையான வேண்டுகோள்கள் சமூக ஊடகங்களில் குறிப்பாக முகநூலில் நிரம்பி வழிகின்றன. அதிகரித்து வரும் வெள்ளத்தில் சிக்கியுள்ளவர்களை காப்பாற்ற மீட்புக் குழுக்கள், படகுகள் மற்றும் ஹெலிகாப்டர்களை அனுப்புமாறு அவசரமாக பலர் கோரினர். அரசாங்க உதவி மிகவும் போதுமானதாக இல்லை அல்லது கிடைக்கவே இல்லை என்ற புகார்கள் பரவலாக வெளிப்படுகின்றன.
மக்கள் விடுதலை முன்னணி / தேசிய மக்கள் சக்தி (ஜே.வி.பி./தே.ம.ச.) அரசாங்கம் 25,000 துருப்புக்களை அனுப்பியுள்ள நிலையிலும், பல பொதுமக்கள் உதவ முன்வந்துள்ள நிலையிலும், பேரழிவின் அளவு தேசிய மற்றும் சர்வதேச அளவில் ஒருங்கிணைந்த முயற்சிகளைக் கோருகிறது. இதுவரை, உதவியின் தேவையான அளவை நெருங்கும் அளவுக்கு எதையும் திரட்ட அரசாங்கம் தவறிவிட்டது.
அரசாங்கத்தின் பேரழிவு தரும் பிரதிபலிப்புக்கு எதிராக பொதுமக்களின் சீற்றம் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், ஜனாதிபதி திசாநாயக்க சனிக்கிழமை அவசரகால நிலையைப் பிரகடனப்படுத்தி தனக்கென பரந்த அதிகாரங்களை கையில் எடுத்துக்கொண்டமை, மனிதாபிமான நெருக்கடியைத் தீர்ப்பதற்கன்றி, வளர்ந்து வரும் சமூக அமைதியின்மையைக் கட்டுப்படுத்துவதற்கே ஆகும். வெகுஜன கோபம் வெடிக்கும் என்ற அச்சத்தில், ஐக்கிய மக்கள் சக்தி, ஐக்கிய தேசியக் கட்சி உட்பட எதிர்க்கட்சிகள் ஏற்கனவே இத்தகைய நடவடிக்கைகளுக்கு அழைப்பு விடுத்து வந்தன,
உத்தியோகபூர்வ அவசரநிலை அறிவிக்கப்படுவதற்கு முன்பே, திசாநாயக்க, அனைத்து இடம்பெயர்வு முகாம்களையும் இராணுவ அதிகாரத்தின் கீழ் கொண்டு வந்து, முக்கிய துறைகளான பெட்ரோலியம், எரிவாயு, மின்சாரம், சுகாதாரம், நீர்ப்பாசனம் மற்றும் வீதி மற்றும் ரயில் பராமரிப்பு ஆகியவற்றை அத்தியாவசிய சேவைகள் விதிமுறைகளின் கீழ் கொண்டு வந்தார். ஒரு சம்பவத்தில், ஒரு இராணுவ அதிகாரி, களனி ஆற்றில் நீர் மட்டம் உயர்வதாக எச்சரித்து, வெல்லம்பிட்டி பகுதியில் வசிப்பவர்களை வெளியேறுமாறு ஒலிபெருக்கியைப் பயன்படுத்தி உத்தரவிட்டார்.
அவசரகால நிலை பிரகடனம் மற்றும் இடம்பெயர்வு முகாம்கள் மீதான இராணுவக் கட்டுப்பாடும் மக்களின் எதிர்ப்பை அடக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளன என்பது தெளிவாகிறது. தொழிலாள வர்க்கத்தின் வளர்ந்து வரும் எதிர்ப்புக்கு முகங்கொடுத்துள்ள ஜே.வி.பி./தே.ம.ச. ஆட்சி, சமூக மற்றும் ஜனநாயக உரிமைகளை நசுக்க எடுக்கும் பரந்த முயற்சிகளையும் இது பிரதிபலிக்கிறது.
ஞாயிற்றுக்கிழமை இரவு தொலைக்காட்சியில் உரையாற்றிய திசாநாயக்க, பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ தனது அரசாங்கம் அயராது பாடுபடுவதாக சித்தரிக்க ஒரு தீவிர முயற்சியை மேற்கொண்டார். இந்த நெருக்கடி 'ஒரு சிறிய சவால் அல்ல' என்று கூறிய அவர், 'குறுகிய, நடுத்தர மற்றும் நீண்ட கால அடிப்படையில் நாட்டை மீண்டும் கட்டியெழுப்ப' தனது நிர்வாகம் முன்னுரிமை கொடுத்துள்ளதாக கூறினார். உண்மையில், இது பேரழிவை நிர்வகிப்பதிலும் அர்த்தமுள்ள உதவிகளை வழங்குவதிலும் தனது அரசாங்கத்தின் மொத்த தோல்வியை இழிவாக மூடிமறைப்பதாகும்.
அவசரகால நிலையை நியாயப்படுத்திய திசாநாயக்க, 'நமது நாட்டை முன்பை விட சிறப்பாக மீண்டும் கட்டியெழுப்புவதற்கு' தேவையான 'சட்டப் பாதுகாப்பு மற்றும் நிதி ஒதுக்கீடுகளை வழங்குவதற்கு' இது அவசியம் என்று கூறி, அது அடக்குமுறை நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படாது என்று வலியுறுத்தினார். இது ஒரு முழுமையான பொய் ஆகும்.
ஜே.வி.பி./தே.ம.ச. அரசாங்கம் ஏற்கனவே சர்வதேச நாணய நிதியத்தால் கட்டளையிடப்பட்ட கொடூரமான சிக்கன நடவடிக்கைகளை அமல்படுத்தி வரும் நிலையில், திசாநாயக்கவின் வாக்குறுதிகள் ஆளும் வட்டாரங்களிலும் சர்வதேச முதலீட்டாளர்கள் மத்தியிலும் இருந்து அவரை விமர்சிப்பவர்களை சமாதானப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டிருந்தன.
நவம்பர் 30 அன்று சண்டே டைம்ஸ் வெளியிட்ட செய்தியின்படி, நவம்பர் மாத நடுப்பகுதியில் வளிமண்டலவியல் திணைக்களமானது ஒரு பெரிய சூறாவளியாக உருவாகக்கூடிய வளிமண்டல நிலைமைகள் குறித்து எச்சரிக்கைகளை வெளியிட்டிருந்தது.
உலக வானிலை ஆய்வு அமைப்பின் இலங்கையின் நிரந்தர பிரதிநிதியான அதுல கருணாநாயக்க, நவம்பர் 12 அன்று 'அத தெரண பிக் ஃபோகஸ்' நிகழ்ச்சியின் போது, பகிரங்கமாக எச்சரிக்கைகளை விடுத்தார். இருப்பினும், பத்திரிகையின் அரசியல் பத்தியின்படி, 'பேரழிவின் முழு அளவும் வெளிப்படையாகத் தெரியும் வரை எந்த ஆயத்தக் கூட்டங்களும் நடக்கவில்லை, பெரிய பொது அறிவிப்புகளும் வெளியிடப்படவில்லை, இது நாட்டை பல ஆண்டுகளில் மிக மோசமான இயற்கை பேரழிவுகளில் ஒன்றில் மூழ்கடித்தது.'
இந்தோனேசியாவின் காலநிலை ஆராய்ச்சி மையத்தின் விஞ்ஞானி கலாநிதி தாசுன் அமரசிங்க, சண்டே ஐலண்ட் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில், “இயற்கை பேரழிவுகள் எதுவும் இல்லை. இவை நிர்வாக பேரழிவுகள். இலங்கை தன்னைப் பாதுகாத்த முறைமைகளையே அழித்துவிட்டது. இப்போது நடப்பது அரசியல் ரீதியில் தவறான நிர்வகிப்பின் முன்கணிக்கக்கூடிய விளைவுதான்” என்று கூறினார். அவரது கருத்துக்கள் சரியாக இருந்தாலும், டிட்வா சூறாவளியின் தீவிரத்திற்கு நேரடியாகப் பங்களித்துள்ள புவி வெப்பமடைதலைத் தடுப்பதற்கு, சர்வதேச அளவில் அரசாங்கங்கள் போதுமான நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்பதை அவர் அவதானிக்கவில்லை.
'திட்டமிடப்படாத அபிவிருத்தி நடவடிக்கைகள், ஈரநில அழிப்பு மற்றும் அரசியல் தலையீடு' ஆகியவற்றை பற்றி சூறாவளியால் பாதிக்கப்பட்டவர்கள் வெளிப்படையாகக் குற்றம் சாட்டியதை சுட்டிக் காட்டிய அதேவேளை, காலனித்துவ கால பெருந்தோட்டத் திட்டங்களின் பங்கை அமரசிங்க புறக்கணித்தார். மத்திய மலைப்பகுதிகளில் ஏற்பட்ட மரணகரமான நிலச்சரிவுகள் காலனித்துவ ஆட்சியின் கீழ் எடுக்கப்பட்ட முடிவுகளில் ஆழமாக வேரூன்றியுள்ளன. பிரிட்டிஷ் ஏகாதிபத்தியவாதிகள் எந்த விஞ்ஞனப்பூர்வமான மதிப்பீட்டையும் செய்யாமல் தேயிலை மற்றும் ரப்பர் தோட்டங்களை உருவாக்க, பூர்வீக காடுகளை அழித்து, ஆழமாக வேரூன்றிய தாவரங்களை அகற்றி, மேலோட்டமாக வேரூன்றிய ஒற்றைப் பயிர்களை நாட்டினர். செங்குத்தான சரிவுகளில் அமைக்கப்பட்ட பெருந்தோட்ட உள்கட்டமைப்பானது மலைகளை அரிப்புக்கும் சரிவுக்கும் உள்ளாகக் கூடியதாக ஆக்கியது.
இன்று, பெரும்மழை இந்த கட்டமைப்பு பலவீனங்களை பாரியளவில் விரிவாக்கி, ஒரு காலத்தில் இலாபகரமான பெருந்தோட்டங்களை கொலைக் களங்களாக மாற்றுவதுடன் நூற்றுக்கணக்கான உயிரிழப்புகளுக்கு பங்களிக்கிறது.
மேலும் படிக்க
- அழிவுகரமான "டிட்வா" புயல் இலங்கை முழுவதும் நூற்றுக்கணக்கானவர்களின் மரணத்துடன் பிரமாண்டமான பேரிடரை ஏற்படுத்துகிறது
- இலங்கை அரசாங்கத்தின் 2026 வரவு-செலவுத் திட்டம் சர்வதேச நாணய நிதியத்தின் சிக்கன நடவடிக்கைகளை தீவிரப்படுத்துகிறது
- இலங்கை ஜனாதிபதி அதிகரித்துவரும் அமைதியின்மைக்கு மத்தியில் தோட்டத் தொழிலாளர்களுக்கு அற்ப சம்பள அதிகரிப்பு தருவதாக வாக்குறுதியளிக்கிறார்
