இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.
கியர் ஸ்டார்மர் மற்றும் தொழிற் கட்சி அரசாங்கத்தால் ஆதரிக்கப்படும் ஈரானுக்கு எதிரான குற்றவியல் அமெரிக்க-இஸ்ரேலியப் போரால், அச்சுறுத்தப்படும் மத்தியகிழக்கு முழுவதும், சுழன்றடிக்கும் ஒரு பெரும் நெருப்புச் சூறாவளிக்குள் இலட்சக்கணக்கான பிரிட்டிஷ் பிரஜைகள் தள்ளப்பட்டுள்ளனர். 'பிரிட்டிஷ் உயிர்களைப் பாதுகாக்கும் கடமை' பற்றிய ஸ்டார்மரின் பேச்சுக்கள் அருவருப்பான பொய்கள் ஆகும்.
சுமார் 300,000 பிரிட்டிஷ் குடிமக்கள், வான்பரப்பு மூடப்பட்டுள்ளதால் விமானங்கள் தரையிறக்கப்பட்டுள்ள வளைகுடா நாடுகளில் சிக்கியுள்ளனர். பலர் குறுகிய கால பயணமாக சென்றவர்கள் அல்லது இப்பகுதியின் சர்வதேச இடைமாறல் மையங்கள் வழியாகப் பயணம் செய்தவர்கள்.
வெளியுறவுச் செயலாளர் யுவேட் கூப்பர், ஐக்கயி இராஜ்ஜிய பிரஜைகள் உள்ளூர் ஆலோசனைகளைப் பின்பற்ற வேண்டும், “உதாரணமாக நாங்கள் பயணத் தொழிற்துறை, விமான நிறுவனங்கள் மற்றும் விமான நிலையங்களுடனும், அப்பகுதியில் உள்ள அரசாங்கங்களுடனும் நெருங்கிய தொடர்பில் இருக்கிறோம்,' என்று பிபிசியிடம் கூறினார்.
தி இன்டிபென்டன்ட் பத்திரிகையின்படி, ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தில் இருந்து பிரிட்டிஷ் குடிமக்களை பேருந்தில் 300 மைல்கள் தெற்கே உள்ள ஓமானின் தலைநகரான மஸ்கட்டிற்கு அழைத்துச் சென்று, அங்கிருந்து விமானத்தில் நாட்டிற்கு அழைத்து வருவதற்கான திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இருப்பினும், தற்போது பிரிட்டிஷ் ஏயார்வேஸ் அல்லது வேர்ஜின் அட்லாண்டிக் விமானங்கள் அங்கு பறப்பதில்லை.
கத்தார், பஹ்ரைன் மற்றும் குவைத்தில் உள்ள மக்களை சவுதி அரேபியாவின் ரியாத்திற்கு 400 மைல்கள் வரை - ஏழு மணி நேர வீதிப் பயணத்தின் மூலம் - இடமாற்றம் செய்வது கலந்துரையாடலில் உள்ள மற்றொரு திட்டம் ஆகும்.
தற்போதைய சூழ்நிலைகளில் இது மிகவும் கடினமானதாக இருக்கும். கார்டியன் செய்தியில் கூறிது போல், 'டொனால்ட் ட்ரம்பின் ஊக்குவிப்பால், வளைகுடா நாடுகள், தங்கள் பிரதேசம் மற்றும் உள்கட்டமைப்பின் மீது தெஹ்ரான் முன்னெடுக்கும் தொடர்ச்சியான 'கண்மூடித்தனமான தாக்குதல்களுக்கு' பதிலடியாக, ஈரானுக்கு எதிரான போரில் தங்கள் நடுநிலைமையை முடிவுக்குக் கொண்டுவரும் விளிம்பில் உள்ளன.' அப்படியானால், இது ஒரு பேரழிவாக மாறும். கத்தார் திங்களன்று இரண்டு ஈரானிய விமானங்களை சுட்டு வீழ்த்தியதாகக் கூறியது.
ஈரான், தனது அரசாங்கம் மற்றும் மக்களின் மீது நடத்தப்படும் ஏகாதிபத்தியத் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் நிலையில், ஏற்கனவே ஐக்கிய அரபு இராஜ்ஜியம், கத்தார், குவைத், பஹ்ரைன் மற்றும் பிற இடங்களில் ஏவுகணைகள், ஆளில்லா விமானங்கள் மற்றும் சிதைவுகளும் விழுந்து வருகின்றன. ஹோட்டல்கள் மற்றும் விமான நிலையங்கள் தாக்கப்பட்டன. நியூ யோர்க் டைம்ஸ் வெளியிட்ட ஒரு செய்தித் தொகுப்பின்படி, ஐக்கிய அரபு அரசுகள், குவைத், கத்தார், பஹ்ரைன் மற்றும் ஓமான் முழுவதும் நான்கு பேர் கொல்லப்பட்டு நூறுக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
எந்த அச்சுறுத்தலும் ஏற்படுத்தாத ஒரு இறையாண்மை கொண்ட நாட்டிற்கு எதிராக நீண்ட காலமாகத் திட்டமிடப்பட்ட ஒரு ஆக்கிரமிப்புப் போரைத் தொடங்கிய அமெரிக்கா மற்றும் அதன் கூட்டாளிகளே இதற்கு முழுப் பொறுப்பாளிகள் ஆவர். போலிப் பேச்சுவார்த்தைகள் நடந்து கொண்டிருந்தபோதே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதுடன் அவை வெளிப்படையாகவே படுகொலை செய்வதையும் ஆட்சியை மாற்றுவதையும் நோக்கமாகக் கொண்டிருந்ததோடு 9 கோடிக்கும் அதிகமான மக்கள் தொகையைக் கொண்ட ஒரு தேசத்தை முழுமையாக சிதைக்கும் அபாயத்தை ஏற்படுத்தியுள்ளன.
பெரும்பான்மையான மக்களால் எதிர்க்கப்படும் ஒரு போருக்காக, தொழிற் கட்சி தனது பிரஜைகளின் உயிர்களை ஆபத்தில் சிக்க வைத்துள்ளது. திங்களன்று வெளியிடப்பட்ட ஒரு YouGov கருத்துக் கணிப்பின்படி, கருத்துத் தெரிவித்தவர்களில் கிட்டத்தட்ட பாதி பேர் (49 சதவீதமானோர்) ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேலிய குண்டுவீச்சை எதிர்த்த அதேநேரம், வெறும் 28 சதவீதம் பேர் மட்டுமே ஆதரவளித்தனர்.
மேலும் இது, ஏற்கனவே நவீன பிரிட்டிஷ் வரலாற்றில் மிக மோசமான ஒப்புதல் மதிப்பீடுகளைப் பெற்றுள்ள ஒரு அரசாங்கத்தால் செய்யப்பட்டுள்ளது. தனது தனிமைப்படுதலை உணர்ந்துள்ள தொழிற் கட்சியும், ஐக்கிய இராஜ்ஜியமும் அதன் கூட்டாளிகளும் உருவாக்கியுள்ள பேரழிவுகரமான சூழ்நிலையையும், இங்கிலாந்து குடிமக்களுக்கு ஏற்பட்டுள்ள அபாயங்களையும், தனது அதிகரித்து வரும் ஈடுபாட்டை நியாயப்படுத்தும் விதமாக இரக்கமின்றி பயன்படுத்த முயற்சிக்கிறன.
'தாக்குதல் நடத்தியமைக்காக' தெஹ்ரானை குற்றம் சாட்டிய ஸ்டார்மர், 'ஈரானின் கொடூரமான பிரதிபலிப்பானது நமது மக்கள், நமது நலன்கள் மற்றும் நமது கூட்டாளிகளுக்கு அச்சுறுத்தலாக ஆகியுள்ளமை தெளிவாவதோடு அதைப் புறக்கணிக்க முடியாது,' என்று நாடாளுமன்றத்தில் கூறினார்.
இதேபோல், அரசாங்கம் 'ஈரானிய ஏவுகணைகள் மற்றும் ஆளில்லா விமானங்களால் குறிவைக்கப்படும் ஏனைய வளைகுடா நாடுகளில், சுமார் 300,000 பிரிட்டிஷ் பிரஜைகள் உள்ள சூழ்நிலையை இப்போது எதிர்கொள்கின்றது என கூப்பர் இன்று காலை கூறினார். அதனால்தான் நாங்கள் தற்காப்பு நடவடிக்கைகளுக்கு ஆதரவளிக்கிறோம்' என்று கூறினார்.
இந்த 'தற்காப்பு நடவடிக்கை' என்பது, 'ஏவுகணை ஏவுதல்களுக்கு' எதிராக எனக் கூறிக்கொண்டு ஈரானியப் பிரதேசத்தில் தொடர்ச்சியான தாக்குதல்களை நடத்துவதைப் பற்றியதாகும்.
வெளியுறவுச் செயலாளர், 'அந்தத் தாக்குதல்களில் பிரிட்டன் நேரடியாக ஈடுபடாது, மாறாக ஆதரவு வழங்குகிறது என்பதை முக்கியமாக கூற வேண்டும்' என்று வலியுறுத்தவும், 'இது எந்தவொரு அரசியல் அல்லது பொருளாதார அல்லது பரந்த உள்கட்டமைப்பு இலக்குகளுக்கும் ஆதரவளிப்பது பற்றியது அல்ல' என்று கூறிக்கொள்ளவும் மிகவும் சிரமப்பட்டார். அமெரிக்கா மற்றும் ஐக்கிய இராஜ்ஜியத்தின் நடவடிக்கைகளுக்கு இடையில் 'ஒரு தெளிவான வேறுபாடு உள்ளது' என்று அவர் கூறினார்.
மத்திய கிழக்குக்கான அமைச்சர் ஹமிஷ் ஃபால்கனர், 'பிரிட்டன் போரில் ஈடுபடவில்லை' என்று வலியுறுத்தினார்.
தொழிற் கட்சி அரசாங்கம், தொழிலாளர்களுக்கு கருப்பை வெள்ளையெனக் கூறுகின்றது. ஈரானுக்கு எதிராக அமெரிக்கா ஒரு சட்டவிரோதப் பிரச்சாரத்தை நடத்தி வரும் நிலையில், அமெரிக்க இராணுவத் தளங்களைப் பாதுகாக்க உதவுவதற்காக பிரிட்டிஷ் ஜெட் விமானங்கள் மத்திய கிழக்கின் வான்பரப்பிற்குச் செல்கின்றன, பிரிட்டிஷ் விமானத் தளங்கள் அமெரிக்க குண்டுவீச்சுகளுக்கு ஏவுதளங்களை வழங்குகின்றன மற்றும் சைப்ரஸில் உள்ள ஒரு பிரிட்டிஷ் தளம் இலக்கு வைக்கப்பட்டு டிரோன்களால் தாக்கப்பட்டு வருகின்றது. அதனால் அங்குள்ள குடும்பங்கள் வெளியேற்றப்பட்டுள்ளன.
ஈரானைப் புண்படுத்தும் தனது ஆர்வத்தில், பிரிட்டிஷ் படைகள் அமெரிக்கத் தாக்குதலுடன் முற்றிலும் பின்னிப் பிணைந்துள்ளன என்ற யதார்த்தத்தை நாடாளுமன்றத்தில் ஒப்புக்கொண்ட ஸ்டார்மர், 'சனிக்கிழமையன்று, ஈரான் பஹ்ரைனில் உள்ள ஒரு இராணுவத் தளத்தை ஏவுகணைகள் மற்றும் ஆளில்லா விமானங்கள் மூலம் தாக்கியது. அந்தத் தளத்தில் 300 பிரிட்டிஷ் வீரர்கள் இருந்தனர், அவர்களில் சிலர் தாக்குதல் நடந்த இடத்தில் இருந்து சில நூறு யார் தூரத்திற்குள் இருந்தனர்' என்று கூறினார்.
ஐக்கிய இராஜ்ஜியம் மத்திய கிழக்கில் எண்ணெய் மற்றும் ஆட்சி மாற்றத்திற்காக மற்றொரு இரத்தக்களரி போரில் தலைகீழாக மூழ்கிக்கொண்டிருக்கின்றது என்ற உண்மையை தொழிற் கட்சி அரசியல்வாதிகள் நிராகரிக்கத் தவிக்கின்றனர். தொழிலாள வர்க்கத்தின் பிரதிபலிப்பைப் பற்றி பீதியடைந்துள்ள, குழப்பமடைந்துள்ள கூப்பர், 'இது முற்றிலும் உண்மையல்ல' என்று அறிவித்தார்.
ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராக்கின் அனுபவங்கள் மறக்கப்படவில்லை. பாலஸ்தீனியர்களுக்கு எதிரான இஸ்ரேலின் பல ஆண்டுகால இனப்படுகொலை மற்றும் லெபனான், யேமன் மற்றும் ஈரானுக்கு எதிரான இராணுவத் தாக்குதல்களுக்கு பிரிட்டன் அளித்த உறுதியான ஆதரவின் மூலம் இந்த அனுபவங்கள் ஆழமாகப் பதியவைக்கப்பட்டுள்ளன. பிராந்தியத்தில் உள்ளவர்களுக்கு ஏற்பட்டுள்ள உடனடி அச்சுறுத்தல் மற்றும் இந்த மோதலால் உள்நாட்டில் ஏற்படும் பொருளாதார விளைவுகளால் வலுப்பெற்று, இந்த சமீபத்திய குற்றத்தை எதிர்த்து அதிக எண்ணிக்கையிலான மக்கள் வீதிகளில் இறங்கிப் போராடுவார்கள்.
விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்து வரும் எண்ணெய் விலைகள், மோட்டார் வாகன சங்கமான AAவின் தலைவர் எட்மண்ட் கிங்கை, தி டைம்ஸ் பத்திரிகையில் எச்சரிக்கை விடுக்க நிர்ப்பந்தித்தது, 'மத்திய கிழக்கு முழுவதும் நிலவும் குழப்பமும் குண்டுவீச்சும் உலகளவில் எண்ணெய் விநியோகத்தை சீர்குலைக்க ஒரு தூண்டுதலாக நிச்சயம் அமையும், இது விலை உயர்வுக்கு வழிவகுக்கும். எனவே ஓட்டுநர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும், அடுத்த 10 முதல் 12 நாட்களுக்குள் பெட்ரோல் நிலையங்களில் சாதனை விலைகளைக் காண நேரிடலாம்,” என அவர் தெரிவித்தார்.
விளைவுகள் இன்னும் பரந்தவை. எரிசக்தி நுண்ணறிவு நிறுவனமான ரிஸ்டாட் எனர்ஜியின் சிரேஷ்ட துணைத் தலைவரும், புவியியல் பகுப்பாய்வுத் தலைவருமான ஜோர்ஜ் லியோன், மின்சாரம் உற்பத்தி செய்ய மிக முக்கியமான உலகளாவிய எரிவாயு விநியோகத்தில் ஏற்படும் சீர்குலைவு குறித்து எச்சரித்தார்: 'அதிக மின்சார விலை, உலகப் பொருளாதாரம் முழுவதும் பரவி, குறிப்பாக இங்கிலாந்தில் பரவி, உயர் பணவீக்கத்திற்கு வழிவகுக்கும்.
'நிரப்பு நிலையங்களில் அதிக விலை மற்றும் மின்சாரக் கட்டண அதிகரிப்பும் நமக்கு நேரடி விளைவாக வரும் அதே நேரம், பணவீக்கம் அதிகரிக்கக்கூடும் என்பதால் பொருட்கள் மேலும் விலை உயரக் கூடிய இரண்டாம் நிலை விளைவும் உள்ளது.'
ஐக்கிய இராஜ்ஜியமானது ஏற்கனவே ஐரோப்பாவிலேயே மிக உயர்ந்த பணவீக்க விகிதங்கள் மற்றும் உள்நாட்டு எரிசக்தி மற்றும் சாலை எரிபொருள் விலை அதிகரிப்பு விகிதங்களை கொண்டுள்ளது.
ஸ்டார்மர் மற்றும் தொழிற் கட்சியும் இதைப் பொருட்படுத்தாமல் முன்நகர்வதானது, அவர்களின் அரசாங்கத்தின் கடும் பிற்போக்கு, வலதுசாரி பண்பை மட்டுமன்றி, பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் ஆழ்ந்த நெருக்கடியையும் நிரூபிக்கிறது. அது தனது நிலையை மேம்படுத்திக்கொள்ள, மத்திய கிழக்கில் மற்றொரு கொடூரமான அமெரிக்கப் போரில் அவநம்பிக்கையுடன் சூதாட்டத்தில் ஈடுபட்டுள்ளது. இவையே 'பிரிட்டிஷ் மக்களின் உயிர்களுக்கும்' அமைதிக்கும் உண்மையான அச்சுறுத்தல்கள் ஆகும்.
மேலும் படிக்க
- ஈரானுக்கு எதிரான அமெரிக்கப் போர் பலவீனமான உலகப் பொருளாதாரத்தையும் நலிவடைந்த நிதி அமைப்பையும் தாக்கும்
- ஈரானுக்கு எதிரான குற்றவியல் அமெரிக்க-இஸ்ரேலிய போரை நிறுத்து!
- “பில்லியனர்களை விட ஈரானிய மக்களுடன் தான் நமக்கு அதிக ஒற்றுமைகள் உள்ளன”: ஈரான் மீதான தாக்குதலை அமெரிக்கத் தொழிலாளர்கள் கண்டிக்கின்றனர்
- உலக சோசலிசப் புரட்சியே ஏகாதிபத்தியப் போர் மற்றும் பாசிசத்திற்கான பதிலாகும்
