முன்னோக்கு

ஈரானுக்கு எதிரான சட்டவிரோத அமெரிக்க-இஸ்ரேலிய போரில் ஐரோப்பிய ஏகாதிபத்தியமும் இணைகிறது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம். 

பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன், பிரான்ஸின் குரோசோன் பகுதியின் லோங் தீவிலுள்ள அணு ஆயுத நீர்மூழ்கிக் கப்பல் கடற்படைத் தளத்திற்குச் சென்று படைகளின் அணிவகுப்பைப் பார்வையிடுகிறார். [AP Photo/Yoan Valat]

ஈரானுக்கு எதிரான அமெரிக்க-இஸ்ரேலியப் போர், பலமுனைகளில் இடம்பெறும் பிராந்திய மோதலாகவும், பெருகிய முறையில் உலகளாவிய மோதலாகவும் வேகமாக விரிவடைந்து வருகிறது. இந்தப் போர் மத்திய கிழக்கு முழுவதும் பரவி வருவதுடன், ஐரோப்பிய ஏகாதிபத்திய வல்லரசுகளை இராணுவ நடவடிக்கைகளில் முன்னெப்போதையும் விட நேரடியாக இழுத்து வருகிறது.

மத்திய கிழக்கில், இஸ்ரேல் தனது நடவடிக்கைகளை ஈரானைத் தாண்டி லெபனானுக்கும் விரிவுபடுத்தியுள்ளது. பெய்ரூட்டின் மையப்பகுதியில் அதிக மக்கள் தொகை கொண்ட குடியிருப்புப் பகுதிகள் மீதான தாக்குதல்கள் உட்பட நாடு முழுவதும் இடைவிடாத தாக்குதல்களை இஸ்ரேல் நடத்தி வருகிறது. 800,000 க்கும் அதிகமான மக்கள் இந்தப் பகுதிகளிலிருந்து வெளியேற வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர். மேலும், 600 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டும், 1,444 பேர்கள் காயமடைந்தும் உள்ளனர்.

இந்த மோதல் ஏற்கனவே உலகச் சந்தைகளை உலுக்கி வருவதுடன், விலை உயர்விற்கும் வித்திட்டுள்ளது. மேலும், உலகின் கணிசமான அளவு எண்ணெய் போக்குவரத்து நடைபெறும் ஹோர்முஸ் நீரிணை, நேரடி மோதலுக்கான ஒரு வெடிப்புப் புள்ளியாக மாறியுமுள்ளது.

அதே சமயம், ஐரோப்பிய ஏகாதிபத்திய சக்திகள் “கப்பல் வழித்தடங்களைப் பாதுகாத்தல்” மற்றும் “தளங்களைப் பாதுகாத்தல்” என்ற மோசடியான பதாகையின் கீழ் — அரசியல் ரீதியாகவும் இராணுவ ரீதியாகவும் — உள்ளே இழுக்கப்படுகின்றன.

கடந்த செவ்வாயன்று, பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் அணு ஆயுதம் ஏந்திய சார்ல் டு கோல் விமானம் தாங்கி போர்க் கப்பலில் இறங்கி, மத்திய கிழக்கில் ஐரோப்பிய கடற்படைக் குழுவிற்கு பிரான்ஸ் தலைமை தாங்கும் என்று அறிவித்தார். ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேலியப் போர் “சர்வதேச சட்டத்தின் கட்டமைப்பிற்கு வெளியே நடத்தப்படுகிறது” என்று அவர் ஒப்புக்கொண்ட ஒரு வாரத்திற்குள்ளேயே, பிரான்சையும், அதன் ஐரோப்பிய நட்பு நாடுகளையும் இந்த சட்டவிரோதப் போரில் ஈடுபடுத்த உறுதியளித்தார்.

மக்ரோன் இந்தப் போரை சட்டவிரோதமானது என்று அறிவித்திருந்ததால், அவர் என்ன மாதிரியான அறிக்கைகளை வெளியிட்டிருப்பார் என்று ஒருவர் கற்பனை செய்து பார்க்க முடியும். ஆனால், பிரான்ஸ் இந்தப் போரை எதிர்க்கிறது என்று அவர் அறிவித்தாரா? மினாப்பில் குண்டுவீசி 160 பள்ளி மாணவிகள் படுகொலை செய்யப்பட்டது, மருத்துவமனைகள் மீதான குண்டுவீச்சு, ஈரானிய எரிபொருள் குதங்கள் மீது குண்டுவீசி ஈரானின் வான்பரப்பை நஞ்சாக்கியது உள்ளிட்ட ஈரானிய மக்களுக்கு எதிராக அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய படைகள் இழைத்த குற்றங்களை அவர் விமர்சித்தாரா? அமெரிக்கப் போர் விமானங்களுக்கு பிரெஞ்சு விமானப்படை தளங்கள் மூடப்படும் என்று அவர் அறிவித்தாரா? இல்லவே இல்லை. அவ்வாறு எதுவும் நடக்கவே இல்லை.

அதற்கு பதிலாக, ஸ்பெயின், நெதர்லாந்து, இத்தாலி மற்றும் கிரேக்க போர்க் கப்பல்களுடன் இணைந்து, பிரெஞ்சு விமானம் தாங்கி கப்பலும், அதன் பாதுகாப்புப் படைகளும் “ஒரு பெரிய நடவடிக்கையை ஒருங்கிணைக்கிறது... இது முற்றிலும் அமைதிக்கானது மற்றும் தற்காப்பு சார்ந்தது, ஆனால் கப்பல் போக்குவரத்தின் சுதந்திரத்தைப் பாதுகாப்பதற்கும் கடல்சார் பாதுகாப்பில் பங்கேற்பதற்கும், மிகவும் ஒழுங்கற்ற சூழலில் இது எமது பொறுப்பாகும்” என்று மக்ரோன் கூறினார். இது முதலில் மத்திய தரைக்கடல் மற்றும் செங்கடலை உள்ளடக்கியதாக இருக்கும் என்றாலும், இறுதியில் “சரியான சூழல் அமையும் போது, ஹோர்முஸ் நீரிணை வழியாக செல்வதையும் அதன் முறையான திறப்பையும் மீட்டெடுக்கும்” நிலைக்கு வளரும் என்றும் அவர் மேலும் கூறினார்.

இது பெயரளவில் இல்லாவிட்டாலும், ஈரானுக்கு எதிராக பிரான்ஸ் மற்றும் அதன் ஐரோப்பிய நட்பு நாடுகள் விடுத்த ஒரு போர்ப் பிரகடனமே ஆகும். ஐரோப்பிய போர்க் கப்பல்களின் ஆரம்பகால நிலைநிறுத்தம், அமெரிக்க-இஸ்ரேலிய குண்டுவீச்சுகளுக்கு எதிரான ஈரானின் பதிலடித் தாக்குதல்களிலிருந்து இஸ்ரேல் மற்றும் மத்திய கிழக்கில் உள்ள நேட்டோவின் தளங்களைப் பாதுகாக்கும் என்றாலும், இது தொடக்கத்திலிருந்தே ஹோர்முஸ் நீரிணையில் உள்ள ஈரானிய கடல் எல்லைக்குள் தலையிடுவதற்கான ஒரு முயற்சியாகவே கருதப்படுகிறது.

அமெரிக்க-இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு மற்றும் ஈரானின் எண்ணெய் ஏற்றுமதியை முற்றுகையிட இந்தியப் பெருங்கடலில் அமெரிக்கப் போர்க் கப்பல்கள் நிலைகொண்டுள்ளதுக்கு பதிலடியாக, ஈரான் ஹோர்முஸ் நீரிணையை முடக்கியுள்ளது. பாரசீக வளைகுடா பிராந்தியத்தில் உள்ள அமெரிக்கத் தளங்கள் மீது ஈரான் குண்டுவீச்சு நடத்தும் அதே வேளையில், உலகின் 20 சதவீத எண்ணெய், எரிவாயு மற்றும் மூன்றில் ஒரு பங்கு உரங்கள் உலகச் சந்தைகளுக்குச் செல்லும் இந்த முக்கியமான கடல் வழிப்பாதையை அது துண்டித்துள்ளது. இந்த முற்றுகையை மீறிச் செல்ல முயன்ற குறைந்தது ஒரு டசின் கப்பல்கள் மீது ஈரானியப் படைகள் தாக்குதல் நடத்தியுள்ளன. ஈரானின் கடற்கரையோரம் உள்ள பாதுகாக்கப்பட்ட தளங்களிலிருந்து கப்பல் எதிர்ப்பு ஏவுகணைகளை ஏவி இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.

சார்ல் டு கோல் கப்பலில் இருந்த மாலுமிகள் மத்தியில் ஆற்றிய ஏழு நிமிட மேலோட்டமான உரையில், மக்ரோன் தனது கருத்துக்களால் எழுந்த எந்தக் கேள்விகளுக்கும் பதிலளிக்கவில்லை. ட்ரம்ப் நிர்வாகம் ஐரோப்பாவின் மீது வர்த்தகப் போர் வரிகளை விதித்து, டென்மார்க்கிற்குச் சொந்தமான கிரீன்லாந்தைப் படையெடுத்துக் கைப்பற்றுவதாக அச்சுறுத்திய சில மாதங்களிலேயே, ஐரோப்பிய சக்திகள் ஏன் ட்ரம்பின் சட்டவிரோதப் போருக்கு ஆதரவாக நிற்கின்றன என்பதை விளக்க அவர் எந்த முயற்சியும் எடுக்கவில்லை.

ஹார்முஸ் நீரிணை வழியாக பலவந்தமாகச் செல்வதற்கு எந்த நிபந்தனைகளின் கீழ் மக்ரோன் சார்ல் டு கோல் போர்க் கப்பலை அனுப்புவார் என்பதையும் அவர் குறிப்பிடவில்லை. ஒருபுறம், நீரிணை மூடப்பட்டதால் நிதிச் சந்தைகளில் ஏற்பட்ட பீதியைக் குறைப்பதும் — இதனால் கச்சா எண்ணெயின் விலை ஒரு பீப்பாய்க்கு 100 டாலருக்கும் அதிகமாக உயர்ந்துள்ளது — விரைவில் நீரிணை மீண்டும் திறக்கப்படும் என்ற தோற்றத்தை உருவாக்குவதுமே அவரது உரையின் நோக்கமாக இருந்தது.

இருப்பினும், மிக அடிப்படையாக, ஹார்முஸ் நீரிணை மீதான முற்றுகையை உடைப்பது குறித்த மக்ரோனின் கணக்கீடுகளை விவரிப்பது அவரது கொள்கையின் குற்றவியல் தன்மையை வெளிப்படுத்தும். தற்போது, அமெரிக்கப் போர்க் கப்பல்கள், அவற்றின் ஐரோப்பியப் பிரதிநிதிகளைப் போலவே, ஈரானிய ஏவுகணைகளின் வரம்பிற்கு வெளியே இருக்க நீரிணையில் இருந்து நூற்றுக்கணக்கான கிலோமீட்டர் தொலைவில் தரித்து நிற்கின்றன. ஈரானிய கடற்கரையிலிருந்து சில கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஹார்முஸ் நீரிணைக்குள் அவர்கள் நுழைய வேண்டுமானால், அமெரிக்க-இஸ்ரேலிய சரமாரியான தரைமட்டமாக்கும் தாக்குதல்கள் மூலம் ஈரானின் எதிர்ப்பை முழுமையாக ஒடுக்க வேண்டும். அப்போதுதான், அந்தப் போர்க் கப்பல்கள் ஏவுகணை அல்லது பீரங்கித் தாக்குதல்களுக்கு அஞ்சாமல் நீரிணைக்குள் நுழைய முடியும்.

இந்தக் கொள்கை “அமைதிக்கானது மற்றும் தற்காப்பு சார்ந்தது” என்ற மக்ரோனின் கூற்று பிரான்ஸ் மற்றும் உலக மக்களின் அறிவாற்றலை அவமதிப்பதாகும். இந்தப் பிராந்தியம் முழுவதிலும் உள்ள அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய இலக்குகள் மீது ஈரான் தொடர்ந்து பாலிஸ்டிக் ஏவுகணைகளை வீசி வரும் நிலையில், ஈரானை நசுக்குவதற்கு காட்டுமிராண்டித்தனமான அளவிலான வன்முறை தேவைப்படும் என்பது தெளிவாகிறது.

ஈரானுக்கு எதிரான போரில், நேட்டோ ஏகாதிபத்திய சக்திகள் காஸா இனப்படுகொலையின் வழிமுறைகளை ஒரு பிராந்திய மற்றும் இறுதியில் உலகளாவிய போருக்குப் பயன்படுத்துகின்றன. லெபனான் மீதான இஸ்ரேலின் இடைவிடாத குண்டுவீச்சுக்கள், அமெரிக்க மற்றும் ஐரோப்பிய போர்க் கப்பல்களால் வழங்கப்பட்ட வான் பாதுகாப்பு குடையின் கீழ் மேற்கொள்ளப்படுகிறது. சார்ல் டு கோல் போர்க் கப்பலை செங்கடலுக்கு அனுப்புவதாக மக்ரோன் அளித்த வாக்குறுதி, யேமன் மீது மீண்டும் குண்டுவீச்சைத் தொடங்கும் திட்டங்களைக் குறிக்கிறது. அங்கு ஹவுதி போராளிகள் ஈரானுக்கு எதிரான போருக்குப் பதிலடியாக இஸ்ரேல் மீது தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.

அமெரிக்க ஏகாதிபத்தியம் தனது உலகளாவிய மேலாதிக்கத்தைத் தக்கவைத்துக் கொள்ள ஒரு மூன்றாவது ஏகாதிபத்திய உலகப் போரைத் தொடங்கியுள்ளது. இது முதன்மையாக சீனா மற்றும் ரஷ்யாவை இலக்காகக் கொண்டுள்ளது. வெனிசுவேலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவைக் கடத்தி, வெனிசுவேலாவின் எண்ணெயை ஒப்படைக்க வேண்டும் என்று வாஷிங்டன் கோரிய சில மாதங்களிலேயே, ரஷ்யா மற்றும் சீனாவுடன் நட்புறவு கொண்ட மற்றும் சீனாவிற்கு எரிசக்தி வழங்கும் முக்கியமான நாடாக இருக்கும் மற்றொரு நாட்டுடன் (ஈரான்) அது மீண்டும் போரில் ஈடுபட்டுள்ளது.

இந்தப் போர் சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் மீது ஏகாதிபத்தியம் தொடுத்துள்ள வர்க்கப் போரில் இருந்து பிரிக்க முடியாதது. பெட்ரோலிய வேதிப்பொருட்கள் மற்றும் உரங்களின் விநியோகத்தைத் துண்டிக்கும் வகையில், மத்திய கிழக்கிற்கான கப்பல் போக்குவரத்து வழித் தடங்களை முற்றுகையிடுவதன் மூலம், அதிக ஆற்றல் தேவைப்படும் தொழில்துறை நடவடிக்கைகளின் சரிவு, உணவு உற்பத்தி வீழ்ச்சி மற்றும் ஒரு பொருளாதார மந்தநிலை ஆகியவற்றைத் தூண்டுவதற்கு அவர்கள் அச்சுறுத்துகின்றனர். இத்தகைய வீழ்ச்சியின் முக்கிய பலிகடாக்கள் உலகின் உழைக்கும் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களாகவே இருப்பார்கள்.

பிரான்சின் உதாரணம் ஒரு அத்தியாவசிய உண்மையை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது: தேசிய அளவில் எடுக்கப்படும் கொள்கைகள் மூலம், முதலாளித்துவம் பேரழிவை நோக்கிச் செல்வதைத் தடுப்பது சாத்தியமற்றது. ஐரோப்பிய அரசாங்கங்களும், ஆளும் வர்க்கங்களும் வாஷிங்டனுடன் தங்களுக்குள்ள கசப்பான பொருளாதார மற்றும் மூலோபாய மோதல்களை நன்கு உணர்ந்துள்ளன. இருப்பினும் இவர்கள், காஸா முதல் வெனிசுவேலா மற்றும் ஈரான் வரை, வாஷிங்டன் தனது மறைந்து வரும் உலகளாவிய மேலாதிக்கத்தை வன்முறை மூலம் நிலைநாட்ட முயலும்போது, மீண்டும் மீண்டும் வாஷிங்டனின் பக்கமே நிற்கிறார்கள்.

இந்தக் கொள்கையை உந்தித் தள்ளும் அடிப்படைப் பொருள்சார் நலன்கள் குறித்து கடந்த வார இறுதியில் உலக சோசலிச வலைத் தளம் நடத்திய அவசர இணையவழி கருத்தரங்கில் விளக்கப்பட்டன. உலக சோசலிச வலைத் தளத்தின் சர்வதேச ஆசிரியர் குழுவின் தலைவர் டேவிட் நோர்த் இந்த கருத்தரங்கில் விளக்கியது போல், போரின் அடிப்படையான நோக்கம் “20-ஆம் நூற்றாண்டை முற்றிலுமாக அழிப்பதாகும் — அதாவது, 20 ஆம் நூற்றாண்டின் தேசிய ஜனநாயக மற்றும் சோசலிசத்துக்கான போராட்டங்களின் அனைத்து விளைவுகளையும் துடைத்தெறிவது; இவை அனைத்தும் ஏதோ ஒரு பெரிய தவறு என்பது போலவும், மீண்டும் காலனித்துவ ஆதிக்கத்தை நிலைநாட்டி ஏகாதிபத்தியம் ஆள முடியும் என்பது போலவும் செயல்படுவதாகும்.” இதன் மூலம், ஏகாதிபத்தியம் உலகத் தொழிலாளர்களுக்கு விடுக்கும் பிரகடனம் இதுதான்: “நீங்கள் அடிமைகளாகவே இருந்தீர்கள், அடிமைகளாகவே நீடிப்பீர்கள்.”

ஒரு தசாப்தத்திற்கும் மேலாக, குறிப்பாக 2022-ல் உக்ரேனில் நேட்டோ-ரஷ்ய போர் வெடித்ததில் இருந்து ஐரோப்பிய சக்திகள், தாங்கள் மீள் ஆயுதபாணியாவதுக்கு நிதி திரட்டுவதற்காக தொழிலாளர்களைத் தொடர்ந்து தாக்கி வருகின்றன. இரண்டாம் உலகப் போரில், ஐரோப்பாவில் நாஜி ஆட்சி வீழ்ந்த பிறகு, பிரெஞ்சுத் தொழிலாளர்கள் போராடி வென்றெடுத்த சமூகச் சலுகைகளை மக்ரோன் ரத்து செய்து வருகிறார். சமூக நலச் செலவினங்களுக்காக ஒதுக்கப்பட வேண்டிய நூற்றுக்கணக்கான பில்லியன் யூரோக்களை போர் இயந்திரத்தின் பக்கம் அவர் திருப்பி வருகிறார். 2023-ஆம் ஆண்டில், பெரும் எதிர்ப்பு மற்றும் பாரிய வேலைநிறுத்தங்களுக்கு மத்தியிலும் அவர் ஓய்வூதியங்களை வெட்டிக் குறைத்தார். இந்தப் போராட்டத்தை முடக்கவும், காட்டிக்கொடுக்கவும் தொழிற்சங்க அதிகாரத்துவங்களையும் புதிய மக்கள் முன்னணியிலுள்ள கட்சிகளையும் அவர் பயன்படுத்திக் கொண்டார்.

வாஷிங்டனை இராணுவ ரீதியாக எதிர்கொள்ளும் அளவுக்கு இன்னும் பலவீனமாக இருப்பதால், ஐரோப்பிய சக்திகள் அமெரிக்காவின் போர்களுக்குக் கோழைத்தனமான உடந்தையுடன் பதிலளிக்கின்றன. அமெரிக்காவின் குடையின் கீழ், தங்களின் சொந்த ஏகாதிபத்திய நலன்களை உறுதிப்படுத்தவும், தொழிலாளர்கள் மீதான தங்களின் வர்க்கப் போரைத் தொடரவும் அவை முயல்கின்றன. தங்களது சொந்த நாட்டு மக்களிடையே நிலவும் வெடிப்புமிக்க அதிருப்திக்கு அஞ்சி, அமெரிக்க மற்றும் சர்வதேச தொழிலாள வர்க்கத்திடையே ஈரான் போருக்கு எழுந்துள்ள பரவலான எதிர்ப்பைக் கண்டு அவை மிகுந்தளவில் பீதியடைந்துள்ளன.

உலக சோசலிச வலைத் தளத்தின் இணையவழி கருத்தரங்கில் விளக்கப்பட்டது போல், இதற்கு மாற்றாக இருப்பது தொழிலாள வர்க்கத்தில் ஒரு சர்வதேச மற்றும் சோசலிச போர்-எதிர்ப்பு இயக்கத்தைக் கட்டியெழுப்புவதாகும்:

“தொழிலாள வர்க்கம் சக்தியற்றது அல்ல. யுத்தம், பொருளாதார நெருக்கடி மற்றும் தொழிலாள வர்க்கத்தின் வாழ்க்கைத்தரத்தின் மீதான தாக்குதல்களுக்கு எதிராகவும், அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் பிற இடங்களில் பாசிசம் மற்றும் சர்வாதிகாரத்தின் வளர்ச்சிக்கு எதிராகவும், பதிலடி கொடுக்கும் வகையில் அது எதிர்வினையாற்றும். ஆனால், உலக அளவில் உருவாகி வரும் இந்த இயக்கத்திற்கு ஒரு அரசியல் தலைமை தேவை. அது சர்வதேச ரீதியானதாகவும், வரலாறு நெடுகிலும் நடந்த புரட்சிகரப் போராட்டங்களின் பாடங்களில் அது வேரூன்றியதாகவும் இருக்க வேண்டும்.”

Loading