இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.
ஈரான் மீதான தீவிரமடைந்து வரும் ஏகாதிபத்தியப் போர் மற்றும் இலங்கையிலும் சர்வதேச அளவிலும் தொழிலாள வர்க்கம் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து கலந்துரையாடுவதற்காக, சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் அமைப்பு (IYSSE), “ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேலியப் போரை நிறுத்து!” என்ற தலைப்பில் ஒரு பகிரங்கக் கூட்டத்தை, ஏப்ரல் 7 செவ்வாய்க் கிழமை பிற்பகல் 3.30 மணிக்கு, பேராதனைப் பல்கலைக்கழகத்திற்கு அருகிலுள்ள ஹிந்தகலவில் உள்ள ஓரியண்ட் கல்வியியல் நிறுவனத்தில் நடத்தவுள்ளது.
சர்வதேச சட்டத்தை அப்பட்டமாக மீறி பெப்ரவரி 28 அன்று தொடங்கிய இந்தக் குற்றவியல் போர், நான்காவது வாரத்தில் நுழைந்துள்ள நிலையில், இது ஈரானிய மக்களுக்கு மட்டுமன்றி, ஒட்டுமொத்த மனிதகுலத்திற்கும் பேரழிவை ஏற்படுத்தும் ஒரு உலகளாவிய பெரும் தீயாக உருவெடுத்து வருவதை தெளிவாகக் காணக்கூடியதாக உள்ளது.
சுயேச்சையான மனித உரிமை அமைப்புகளின்படி, இந்தப் போரில் பிள்ளைகள் உட்பட 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஈரானியர்கள் ஏற்கனவே கொல்லப்பட்டுள்ளனர். ஈரானிய தகவல்களின்படி, 77 மருத்துவமனைகளும் 500 பாடசாலைகளும் அழிக்கப்பட்டுள்ளன.
இந்தப் போர் வளைகுடாப் பிராந்தியத்தில் உள்ள பல நாடுகளுக்கும் பரவியுள்ளதுடன், விநியோகச் சங்கிலிகள் தடைபட்டு, எரிபொருள், எரிவாயு, உரம் மற்றும் உணவுப் பொருட்களினதும் விலைகள் வேகமாக உயர்ந்து, உலகெங்கிலும் உள்ள உழைக்கும் மக்களின் வாழ்க்கையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்க-இஸ்ரேலிய தாக்குதல்களுக்குப் பதிலடியாக ஈரான் தடுத்து வைத்துள்ள, பிரதான எண்ணெய் போக்குவரத்துப் பாதையான ஹோர்முஸ் ஜலசந்தி, தனது காலக்கெடுவுக்குள் திறக்கப்படாவிட்டால், ஈரானின் அனைத்து எரிசக்தி வசதிகளையும் அழித்துவிடுவதாக பாசிச அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அச்சுறுத்தியுள்ளார்.
தனது பிரம்மாண்டமான இராணுவ பலத்தின் மூலம், நலிவடைந்து வரும் உலகப் பொருளாதாரத்தின் மீதான தனது ஆதிக்கத்தை மீண்டும் கட்டியெழுப்ப அமெரிக்கா மேற்கொள்ளும் தீவிர முயற்சியின் ஒரு பகுதியாக, ஈரான் உட்பட வளங்கள் நிறைந்த மத்திய கிழக்கு பிராந்தியத்தின் மீது தனது ஆதிக்கத்தை நிலைநாட்டுவதையும், அமெரிக்காவின் பொருளாதாரப் போட்டியாளர்களுக்கு எரிசக்தி விநியோகத்தை மறுப்பதையும் நோக்கமாகக் கொண்ட இந்தப் போர், சீனாவுக்கு எதிரான அமெரிக்காவின் போர் மூலோபாயத்தின் ஒரு அங்கமாகும்.
அமெரிக்க ஏகாதிபத்தியத்தால் ஏற்படும் இந்த அச்சுறுத்தல் சீனாவுடன் மட்டும் நின்றுவிடாததோடு ட்ரம்ப் ஏற்கனவே கிரீன்லாந்து, கனடா மற்றும் பனாமா கால்வாயைக் கைப்பற்றும் அளவுக்கு இதை விரிவுபடுத்தியுள்ளார். ஈரான் போருக்கு முன்பு, எரிசக்தி வளம் நிறைந்த வெனிசுவேலாவில் தனது பொம்மை ஆட்சியை நிறுவுவதற்காக, ட்ரம்ப் அமெரிக்க இராணுவத்தை அனுப்பியதுடன், தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதி மதுரோவையும் அவரது மனைவியையும் கடத்தினார். காசாவில் பாலஸ்தீனிய மக்கள் மீதான அமெரிக்க-இஸ்ரேலிய படுகொலை தொடர்கிறது.
சீனாவுக்கு எதிரான அமெரிக்க மூலோபாயத்தில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் அரசாங்கம், ஒரு பிரதான பிராந்தியப் பங்காளியாக இருப்பதுடன் இலங்கை ஜனாதிபதி அனுரகுமார திசாநாயகவின் அரசாங்கம் அந்த மூலோபாயத்தில் முழுமையாக ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் ஒரு இராணுவப் பயிற்சியை முடித்துக்கொண்டு திரும்பிக்கொண்டிருந்த ஈரானியக் கப்பலான ஐ.ஆர்.ஐ.எஸ். டெனா, இலங்கையின் காலிக்கு அருகே அமெரிக்கப் போர்க்கப்பல் ஒன்று ஏவிய நீர்மூழ்கிக் குண்டால் மூழ்கடிக்கப்பட்டதிலும், அக்கப்பலில் இருந்த 32 மாலுமிகளின் உயிர்களைக் காப்பாற்றியதிலும், மற்றொரு ஈரானியக் கப்பலைக் கொழும்புத் துறைமுகத்திற்குள் நுழைய அனுமதித்ததிலும், இலங்கை அரசாங்கம் “நடுநிலையாகவும்” “மனிதாபிமானத்துடனும்” செயல்பட்டதாகக் கூறப்படும் வாய்ச்சவடால்களுக்கு மாறாக, திசாநாயக அரசாங்கம், அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் இராஜதந்திர மற்றும் மூலோபாய நோக்கங்களுக்காக இணக்கமான ஒரு இடைத்தரகராகவே செயல்படுகிறது.
இந்தச் சூழலில், புது தில்லியோ அல்லது கொழும்போ, ஈரானிய டெனா கப்பல் மீதான அமெரிக்கத் தாக்குதலையோ, அதன் மாலுமிகள் படுகொலை செய்யப்பட்டதையோ, அல்லது சட்டவிரோதப் போரையோ கண்டனம் செய்யாமல் இருப்பது தற்செயலானதல்ல.
பாசிச ட்ரம்ப் நிர்வாகத்திடமோ அல்லது எந்தவொரு ஏகாதிபத்திய சக்தியிடமோ வேண்டுகோள் விடுப்பதால் இந்தப் போரை நிறுத்த முடியாது என்று சோசலிச சமத்துவக் கட்சி வலியுறுத்துகிறது. ஈரானிய மக்களின் பாதுகாப்பிற்கும், போர்க் குற்றவாளிகளைத் தோற்கடிப்பதற்கும், பூகோள முதலாளித்துவத்திற்கு எதிராக உலகத் தொழிலாள வர்க்கத்தை அரசியல் ரீதியில் அணிதிரட்டுவது அவசியமாகும். ஒரு சர்வதேச சோசலிச மூலோபாயத்தின் அடிப்படையில் மட்டுமே இதை அடைய முடியும்.
பேச்சாளர்கள், போருக்கான காரணங்கள், அதன் உலகளாவிய தாக்கங்கள், அதில் உள்ள வரலாற்று மற்றும் கோட்பாட்டுச் சிக்கல்கள், எல்லாவற்றிற்கும் மேலாக, அதை நிறுத்துவதற்கு தொழிலாள வர்க்கத்தின் அரசியல் தலையீட்டின் அவசியம் பற்றியும் கலந்துரையாடுவார்கள். இந்த முக்கியமான கலந்துரையாடலில் தொழிலாளர்களையும் மாணவர்களையும் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
திகதி: செவ்வாய், ஏப்ரல் 07
நேரம்: பிற்பகல் 3.30 மணி முதல் மாலை 6.00 மணி வரை
இடம்: ஓரியண்ட் கல்வி நிறுவனம், கலஹா வீதி, ஹிந்தகல, பேராதனை
