இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.
ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக, ஈரானுக்கு எதிரான அமெரிக்க-இஸ்ரேலிய போர் தொடர்வதினால் இலங்கையில் ஏற்படும் தாக்கங்கள் குறித்துப் பேசுவதற்காக, மார்ச் 17 அன்று ஜனாதிபதி செயலகத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஊடகங்களுக்கு ஒரு “விசேட செய்தியாளர் சந்திப்பை” நடத்தினார். பொருளாதார வீழ்ச்சி குறித்து அவர் எச்சரித்தாலும், நிலைமையைச் சமாளிக்க அரசாங்கம் தன்னால் இயன்ற அனைத்தையும் செய்யும் என்று கூறினார். மக்களை பீதியடைய வேண்டாம் என்று அவர் வலியுறுத்தியதோடு, அமைதியைப் பேண உதவுமாறு பத்திரிகையாளர்களையும் அவர் கேட்டுக்கொண்டார்.
இருப்பினும், ஈரானுக்கு எதிரான சட்டவிரோத அமெரிக்க-இஸ்ரேலியப் போர் தொடர்பாக அவரது அரசாங்கம் காட்டும் “நடுநிலை” என்ற போலி முகமூடியை திசாநாயகவின் கருத்துக்கள் மீண்டும் ஒருமுறை அம்பலப்படுத்தியுள்ளன. “இப்போரின் தன்மை எத்தகையது எனில், இதில் சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்பினரும் தங்களின் சொந்த வரம்புகளையும் இலக்குகளையும் கவனமாகத் தேர்ந்தெடுத்துள்ளனர்… [அதில்] சீர்குலைப்பதும் அடங்கும்,” என்று அவர் கூறினார்.
'சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்பினர்' என்று கூறி பெயர்களைக் குறிப்பிட மறுப்பதன் மூலம், திசாநாயக, ஆக்கிரமிப்பாளர்களான அமெரிக்காவையும் இஸ்ரேலையும் பாதிக்கப்பட்ட நாடான ஈரானுடன் ஒரே தளத்தில் வைத்து, பாசிச ட்ரம்ப் நிர்வாகத்தை மூடிமறைக்கிறார். சர்வதேசச் சட்டத்தை அப்பட்டமாக மீறும் ஒரு காட்டுமிராண்டித்தனமான ஆக்கிரமிப்புப் போரை நடத்தும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தைக் கண்டிக்கக்கூட அவரது அரசாங்கம் மறுத்துவிட்டது.
அடுத்த கணமே, தனது அரசாங்கம் யாருடைய பக்கம் நிற்கிறது என்பதை ஜனாதிபதி மிகத் தெளிவாகக் கூறிவிட்டார். 'ஹோர்முஸ் ஜலசந்தியை மறிப்பது, எண்ணெய் சேமிப்புக் கிடங்குகளைத் தாக்குவது, எண்ணெய் போக்குவரத்துக் கப்பல்களைக் குறிவைப்பது மற்றும் துறைமுகங்களைத் தாக்குவது போன்ற நடவடிக்கைகள், எரிசக்தி சந்தையில் சர்வதேச அளவிலான நெருக்கடிக்கு வழிவகுத்துள்ளன' என்று அவர் அறிவித்தார்.
அவர் யாரைக் குற்றம் சாட்டுகிறார்? இடைவிடாத அமெரிக்க மற்றும் இஸ்ரேலியத் தாக்குதல்களுக்கும், அவற்றின் போர் விமானங்களை ஏவவும் போர்க்கப்பல்களுக்கு மீள் நிரப்பு செய்யவும் பயன்படுத்தப்படும் அமெரிக்கத் தளங்களுக்கு இடமளித்துள்ள பிராந்தியம் முழுவதுமுள்ள நாடுகளுக்கும் எதிராக பதிலடி கொடுப்பதால், நிச்சயமாக அவர் ஈரானையே குற்றம் சாட்டுகிறார்.
போர் மூன்றாவது வாரத்தில் நுழைந்துள்ள நிலையில், ஈரான் ஹோர்முஸ் ஜலசந்தியை மூடியதால் ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் விலை 100 டொலருக்கும் மேல் உயர்ந்து, பொருளாதார அதிர்வுகள் பரவி வருகின்றன. இலங்கையில், பெட்ரோல் விலை சுமார் 8 சதவீதம் உயர்ந்துள்ளமை, சர்வதேச நாணய நிதியத்தால் அமல்படுத்தப்பட்டுள்ள சிக்கன நடவடிக்கைகளின் தாக்கத்தால் ஏற்கனவே பாதிக்கப்பட்டு வரும் உழைக்கும் மக்கள் மீது மேலும் சுமையை ஏற்றியுள்ளது.
2022 இல், இலங்கை வெளிநாட்டுக் கடனைத் திருப்பிச் செலுத்தத் தவறியதால், எரிபொருள் உட்படப் பெரும் விலை உயர்வுகளுக்கும் பற்றாக்குறைகளுக்கும் வழிவகுத்த நிகழ்வுகளை நினைவூட்டும் வகையில், பெட்ரோல் பங்கீட்டு முறை உட்பட நடவடிக்கைகளை இலங்கை அரசாங்கம் ஏற்கெனவே மேற்கொண்டு வருகிறது. 2022 இல் ஏற்பட்ட நிலைமைகளின் விளைவாக ஏற்பட்ட சமூக நெருக்கடி, ஒரு மாபெரும் எழுச்சிக்கும் அரசாங்கத்தின் வீழ்ச்சிக்கும் வழிவகுத்தது. அப்போதைய ஜனாதிபதி கோட்டாபய இராஜபக்ஷ நாட்டை விட்டுத் தப்பி ஓடினார்.
எரிபொருள் நிலையங்களுக்கு வெளியே மீண்டும் வரிசைகள் உருவாகியுள்ளதால் நிலைமையைக் கட்டுப்படுத்த பொலிஸ் நிறுத்தப்பட்டுள்ளது. 2022 இல் நடந்தது போலவே, கியூஆர் குறியீடு அடிப்படையிலான எரிபொருள் பங்கீட்டு முறையை அரசாங்கம் மீண்டும் அறிமுகப்படுத்தியுள்ளது. கொழும்பு எரிவாயு இறக்குமதியை அமெரிக்காவிற்கு மாற்றியுள்ளது.
எரிசக்தி பயன்பாட்டைக் கட்டுப்படுத்தும் நோக்கில், அத்தியாவசிய சேவைகளுக்கு விலக்கு அளித்து, சில பொதுச் சேவைகள் மற்றும் பாடசாலைகளுக்கு மறு அறிவிப்பு வரும் வரை ஒவ்வொரு புதன்கிழமையும் 'பொது விடுமுறை' அளிக்கப்படும் என்றும் அரசாங்கம் அறிவித்துள்ளது. வீட்டிலிருந்து பணிபுரியும் வாய்ப்புகளும் பரிசீலனையில் உள்ளதாக ஜனாதிபதி குறிப்பிட்டார்.
இலங்கை அரசாங்கத்தின் நிலைப்பாடு, பெருமளவில் இந்தியாவின் நிலைப்பாட்டை ஒத்திருக்கிறது. பிராந்திய ஸ்திரத்தன்மைக்கு ஏற்படும் அச்சுறுத்தல்கள் குறித்து 'ஆழ்ந்த கவலையை' வெளிப்படுத்துவதோடு, 'அதிகபட்ச நிதானத்தையும்' 'பதற்றத் தணிப்பையும்' வலியுறுத்தும் கொழும்பின் உத்தியோகபூர்வ அறிக்கைகள், அமெரிக்க ஏகாதிபத்தியம் மற்றும் இஸ்ரேலின் குற்றச்செயல்களை மூடிமறைக்கும் ஒரே மாதிரியான பாணியையே பின்பற்றுகின்றன.
தனது தெற்குக் கடற்கரைக்கு அப்பால், அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல் ஏவிய நீர்மூழ்கி ஏவுகணையால் மூழ்கடிக்கப்பட்ட ஈரானியப் போர்க்கப்பலான ஐ.ஆர்.ஐ.எஸ். டெனாவிற்கு உதவிய இலங்கை கடற்படை, 32 பேரை உயிருடன் மீட்டது. இந்த தாக்குதலில் குறைந்தபட்சம் 108 மாலுமிகள் கொல்லப்பட்டனர். 208 மாலுமிகளை ஏற்றிச் சென்ற இரண்டாவது ஈரானிய கடற்படைக் கப்பலான ஐ.ஆர்.ஐ.எஸ். புஷேருக்கு ஆரம்பத்தில் நுழைவு மறுக்கப்பட்டு, பின்னர் துறைமுகத்தில் நங்கூரமிட கொழும்பு அனுமதித்தது.
சர்வதேச கடல் பகுதியில் நிராயுதபாணியான ஐ.ஆர்.ஐ.எஸ். டெனாவை அமெரிக்கா மூழ்கடித்ததை அரசாங்கம் கண்டிக்கவில்லை. எல்லாவற்றுக்கும் மேலாக, அதிகாரிகளும் அரசாங்க ஆதரவு ஊடகங்களும் இந்த மீட்பு நடவடிக்கையை ஒரு மனிதாபிமானச் செயலாகச் சித்தரித்த வேளை, அமெரிக்க வெளியுறவுத் துறை தகவல் பரிமாற்றம் ஒன்றை மேற்கோள் காட்டி ராய்ட்டர்ஸ் வெளியிட்ட ஒரு அறிக்கை, மீட்கப்பட்ட குழுவினரை ஈரானுக்குத் திரும்ப அனுமதிக்கக் கூடாது என்ற வாஷிங்டனின் கோரிக்கைகளுக்கு இலங்கை அரசாங்கம் இணங்கிவிட்டதாகக் குறிப்பிட்டது.
அதேசமயம், அரசாங்கம் தனது 'நடுநிலை' என்ற பாசாங்குத்தனமான நிலைப்பாட்டைத் தொடர்கிறது. மார்ச் 11 அன்று, ஈரான் தனது பிராந்திய அண்டை நாடுகள் மீது நடத்தும் 'கொடுமையான தாக்குதல்களை' கண்டிக்கும் ஐ.நா. பாதுகாப்புச் சபைத் தீர்மானத்திற்கு இணை ஆதரவளித்த சுமார் 130 ஐ.நா. உறுப்பினர்களுடன் சேர அது மறுத்துவிட்டது. அந்தத் தீர்மானம் வெளிப்படையாகவே அமெரிக்க சார்புத் தன்மை கொண்டதாக இருந்த காரணத்தால் மட்டுமே அது அவ்வாறு செய்தது.
பஹ்ரைன் தலைமையிலான தீர்மானத்தின் இணை ஆதரவாளர்களில் இந்தியாவும் அமெரிக்காவும் அடங்குகின்றன. அமெரிக்க இராணுவத் தளங்களைக் கொண்ட வளைகுடா நாடுகள் மீதான ஈரானின் தாக்குதல்களை 'மிகக் கடுமையாக' கண்டித்த அந்தத் தீர்மானம், ஈரானுக்கு எதிராக அமெரிக்காவும் இஸ்ரேலும் தொடர்ந்து நடத்தி வரும் குண்டு மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களை குறிப்பிடக்கூடத் தவறிவிட்டது.
திங்கட்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது, அரசுக்குச் சொந்தமான ஐடிஎன் தொலைக்காட்சியின் பத்திரிகையாளர் ஒருவர், திசாநாயகவிடம் முன்கூட்டியே தயாரிக்கப்பட்ட ஒரு கேள்வியை முன்வைத்தார்: தற்போதைய சூழ்நிலையில் அரசாங்கத்தால் தனது 'அணிசேரா கொள்கையை' கடைப்பிடிக்க முடியுமா? அந்தக் கேள்வியால் மகிழ்ச்சியடைந்த திசாநாயக, 'எந்தவொரு கடினமான சூழ்நிலையிலும் நாம் கடைப்பிடிக்க வேண்டிய நிலைப்பாடு இதுதான் என்று நான் நினைக்கிறேன்... ஒரு நாடாக நாம் இந்த நடுநிலையைக் கடைப்பிடிக்கிறோம்' என்றார்.
ஒரு சட்டவிரோத ஆக்கிரமிப்புப் போருக்கான ஆதரவை மூடிமறைக்க 'நடுநிலை' குறித்து இரட்டைப் பேச்சு பேசி இத்தகைய அரசியல் இரட்டை வேடம் போடுவது கொழும்பு அரசியல் ஸ்தாபனத்தில் புதிதல்ல. ஆனால், 2024இல் மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) தலைமையிலான அரசாங்கம் முதன்முறையாக ஆட்சிக்கு வந்தபோது, சர்வதேசப் பத்திரிகைகளில் அது 'இடதுசாரி' என்றும், 'மார்க்சிஸ்ட்' என்றும் கூட சித்தரிக்கப்பட்டது என்பதை நினைவுகூர வேண்டும்.
திசாநாயக ஒரு முன்னணி உறுப்பினராக இருக்கும் ஜே.வி.பி. ஆனது மாவோயிசம், காஸ்ட்ரோயிசம், 'ஆயுதப் போராட்டம்' ஆகியவற்றின் ஒரு கலவையின் அடிப்படையில் அது ஸ்தாபிக்கப்பட்ட காலத்திலிருந்தே, சோசலிச மற்றும் ஏகாதிபத்திய எதிர்ப்பு முழக்கங்களை எழுப்பும் ஒரு நீண்ட அரசியல் பின்னணியைக் கொண்டுள்ளது. ஜே.வி.பி. ஆட்சி அதிகாரத்துக்காக முயற்சித்ததால், பல தசாப்தங்களாக இவை அனைத்தும் படிப்படியாகக் கைவிடப்பட்டன.
குறிப்பாக 2022 ஆம் ஆண்டு மக்கள் எழுச்சிக்குப் பிறகு, ஜே.வி.பி. தலைவர்கள் ஏகாதிபத்திய சக்திகளுடன், அதிலும் குறிப்பாக அமெரிக்காவுடன், நெருங்கிய உறவுகளை வளர்த்துக் கொண்டனர். 2022 மே மாதம் அரசியல் கொந்தளிப்புகளுக்கு மத்தியில் கொழும்பில் இருந்த அமெரிக்கத் தூதர் ஜூலி சங், திசாநாயக்கவைச் சந்தித்த பின்னர், ஜே.வி.பி.யை 'மக்களுடன் ஒத்துப் போகும்' ஒரு கட்சியாகப் பகிரங்கமாகப் பாராட்டினார்.
ஆட்சியில் இருக்கும் திசாநாயக அரசாங்கம், சர்வதேச நாணய நிதியத்தின் கடுமையான சிக்கனக் கொள்கைகளை உறுதியுடன் செயல்படுத்தி வருவதோடு, சீனாவுக்கு எதிரான போருக்குத் தயாராகும் வகையில் மத்திய கிழக்கு மற்றும் இலத்தீன் அமெரிக்காவில் அப்பட்டமான ஆக்கிரமிப்புச் செயல்களை அரங்கேற்றி வரும் அமெரிக்க ஏகாதிபத்தியத்துடன் இராணுவ உறவுகளை ஆழப்படுத்தி வருகிறது.
உலகை ஒரு பெரும் பூகோள தீ சுவாலையை நோக்கித் தள்ளும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் போர் முனைப்புக்கு எதிராக, இலங்கையிலும் சர்வதேச அளவிலும் உள்ள தொழிலாளர் வர்க்கம், சோசலிசக் கொள்கைகளின் அடிப்படையில் ஒரு ஒருங்கிணைந்த போர் எதிர்ப்பு இயக்கத்தை கட்டியெழுப்ப வேண்டியது அவசரத் தேவையாகும். இலங்கையில், இது அமெரிக்க ஏகாதிபத்தியத்துடன் மறைமுகமாக இணைந்து, தொழிலாளர்கள் மற்றும் கிராமப்புற மக்கள் மீது ஈரான் போரின் விளைவாக புதிய சுமைகளைத் திணிக்கும் திசாநாயக அரசாங்கத்தின் போலியான 'நடுநிலை' நிலைப்பாட்டிற்கு எதிரான ஒரு உள்நாட்டு அரசியல் போராட்டத்தை நடத்துவதையும் உள்ளடக்கியுள்ளது.
