ட்ரம்ப் போர் நிறுத்தத்தை அறிவித்த சில மணி நேரங்களிலேயே இஸ்ரேல் லெபனான் மீது 160 ஏவுகணைகளை வீசியது

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.

8 ஏப்ரல் 2026, புதன்கிழமை லெபனானின் பெய்ரூட்டில் நடத்தப்பட்ட பல இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்களைத் தொடர்ந்து புகை எழுகிறது. (AP புகைப்படம்/ஹசன் அம்மார்)

ஈரானுக்கு எதிரான ஏகாதிபத்தியப் போரில் ஜனாதிபதி ட்ரம்ப் போர்நிறுத்தத்தை அறிவித்த சில மணி நேரங்களிலேயே, இஸ்ரேலிய இராணுவம் புதன்கிழமை மத்திய பெய்ரூட் மற்றும் தெற்கு லெபனானில் உள்ள பல இடங்கள் மீது 160 ஏவுகணைகளை ஏவியது. எந்தவித முன்னறிவிப்பும் இன்றி அடர்த்தியான வணிக மற்றும் குடியிருப்புப் பகுதிகள் மீது நடத்தப்பட்ட இந்தத் தாக்குதல்களில் நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டதுடன் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

பெய்ரூட்டின் ஐந்து பகுதிகள், தெற்கு நகரமான டயர் மாவட்டம், அட்லூன், சிஹ் மற்றும் மராஹின் நுழைவாயில்கள், மற்றும் கியாம், பின்ட் ஜ்பெயில், மைஃபதூன் மற்றும் அல்-சரீரா ஆகிய பகுதிகளுக்கு அருகிலுள்ள இடங்களில் நடத்தப்பட்ட தாக்குதல்களில் குறைந்தபட்சம் 254 பேர் கொல்லப்பட்டதாகவும், 1,165 பேர் காயமடைந்ததாகவும் லெபனானின் பொதுமக்கள் பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது.

10 நிமிட காலத்திற்குள் இஸ்ரேல் நாடு முழுவதும் 'நூறுக்கும் மேற்பட்ட வான்வழித் தாக்குதல்களை' நடத்தியதைத் தொடர்ந்து, லெபனான் ஒரு 'ஆபத்தான பதற்ற அதிகரிப்பை' எதிர்கொண்டுள்ளதாக சுகாதார அமைச்சர் ரக்கான் நஸ்ஸரெடின் கூறியதாக அல் ஜசீரா செய்தி வெளியிட்டுள்ளது. 'ஆம்புலன்ஸ்கள் இன்னும் பாதிக்கப்பட்டவர்களை மருத்துவமனைகளுக்குக் கொண்டு செல்கின்றன. லெபனானின் சுகாதாரத்துறைக்கு உதவுமாறு சர்வதேச அமைப்புகளை நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்,' என்று நஸ்ஸரெடின் கூறினார்.

மார்ச் 2 அன்று, லெபனானில் ஒரு புதிய இராணுவ நடவடிக்கையைத் தொடங்கியதிலிருந்து, அந்நாடு முழுவதும் தனது மிகப்பெரிய ஒருங்கிணைந்த தாக்குதலை நடத்தியதாக இஸ்ரேலிய இராணுவம் கூறியுள்ளது. சுகாதார அமைச்சின் படி, இந்த நடவடிக்கையில் இதுவரை கிட்டத்தட்ட 1,497 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் 4,639 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

50 விமானங்கள் மூலம் சுமார் 160 குண்டுகளை வீசி, இஸ்ரேல் இந்த மாபெரும் வான்வழித் தாக்குதலை நடத்தியதாக நியூ யோர்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகளால் (IDF) 'நிலையாக இருளாக்கும் நடவடிக்கை' என்று பெயரிடப்பட்ட இந்தத் தாக்குதலில், ஆர்டிலறித் தாக்குதலும் அடங்கும்.

பெய்ரூட்டின் பரபரப்பான சந்திகளில் ஒன்றான கார்னிச் அல்-மஸ்ரா பகுதியில், வாகனங்களிலும் தரையிலும் கருகிய உடல்களைக் கண்டதாக அசோசியேட்டட் பிரஸ் பத்திரிகையாளர்கள் செய்தி வெளியிட்டுள்ளனர். லிட்டானி ஆற்றின் மீதான பாலங்களை இஸ்ரேல் அழித்ததாகவும், எல்லைக் கிராமங்களில் உள்ள வீடுகளை தரைமட்டமாக்குவதைத் தீவிரப்படுத்தியதாகவும் ராய்ட்டர்ஸ் மற்றும் ஏனைய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இது பொதுமக்களின் உள்கட்டமைப்புக்கு எதிரான ஒரு திட்டமிட்ட நடவடிக்கையைக் குறிக்கிறது.

கிழக்கு லெபனானின் ஷமெஸ்டார் கிராமத்தில் ஒரு இறுதி ஊர்வலத்தின் மீதான தாக்குதலில் குறைந்த பட்சம் 10 பேர் கொல்லப்பட்டதாகவும், அட்லூன் என்ற கடலோர நகரத்தின் மீதான தாக்குதலில் மூன்று சிறுமிகள் கொல்லப்பட்டதாகவும் மிடில் ஈஸ்ட் ஐ செய்தி வெளியிட்டுள்ளது. தெற்கு லெபனானில் இஸ்ரேலிய பாதுகாப்புப் படையால் (IDF) பயன்படுத்தப்படும் இந்த உத்திகள், காசா இனப்படுகொலையின் உத்திகளைப் பின்பற்றுகின்றன; அதாவது, இந்தத் தாக்குதல்கள் 'பயங்கரவாதிகளை' இலக்காகக் கொண்டவை என்ற ஆதாரமற்ற கூற்றுக்களைக் கொண்டு நியாயப்படுத்தப்படும் வெகுஜனப் படுகொலைகள் ஆகும்.

நேரில் கண்டவர்கள், எங்கும் சிதறிய கண்ணாடிகள் மற்றும் முன்னறிவிப்பின்றி இடிந்து விழுந்த கட்டிடங்களுடன், வெடிப்புகளின் தாக்கத்தை விவரித்தனர். பெய்ரூட்டைச் சேர்ந்த ஒருவர் பிபிசி இடம் பேசிய போது, 'ஒரு பெரிய சத்தத்தைக் கேட்ட பிறகு, வெடிப்பின் அதிர்ச்சியால் நான் அறைக்குள் தூக்கி எறியப்பட்டேன்' என்று கூறினார்.

சுவர்களில் விரிசல்கள் மற்றும் உடைந்த ஜன்னல்கள் உட்பட அருகே இருந்த வீடுகளுக்கு சேதம் ஏற்பட்டதாக அல் ஜசீரா செய்தி வெளியிட்டது. அதேநேரம், தெற்கு லெபனானில், பொதுமக்கள் நடமாடுகின்ற தங்குகின்ற குடியிருப்புகள் மற்றும் சாலைகளுக்கு அருகில் இஸ்ரேலியர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியதை நேரில் கண்டவர்கள் விவரித்தனர்.

சமூக ஊடகங்களில் பரவி வரும் காணொளிக் காட்சிகள், குண்டுவெடிப்புகளால் ஏற்பட்ட பேரழிவையும் அதிக மக்கள் அடர்த்தி கொண்ட பெய்ரூட்டின் இடிபாடுகளில், பாதிக்கப்பட்டவர்களையும் உயிர் பிழைத்தவர்களையும் தேடும் அவசரகாலக் குழுக்களுக்குப் பொதுமக்கள் உதவி செய்வதையும் காட்டுகின்றன.

இஸ்ரேலியத் தாக்குதல்களை, அப்பாவிப் பொதுமக்களை இலக்காகக் கொண்ட போர்க்குற்றங்கள் என்று விவரித்து ஹிஸ்புல்லா ஒரு அறிக்கையை வெளியிட்டது. ஈரானின் வேண்டுகோளின் பேரில், போர்நிறுத்த ஒப்பந்தத்தில் லெபனானும் சேர்க்கப்பட்டதாகத் தாங்கள் புரிந்துகொண்டிருப்பதாகவும் ஹிஸ்புல்லா குறிப்பிட்டது. பிற்பகலில், ஈரானிய நாடாளுமன்ற சபாநாயகர் அந்த ஒப்பந்தம் மீறப்பட்டதாகக் கூறினார்.

இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வெளியிட்ட ஓர் அறிக்கை, போர்நிறுத்தத்தின் மோசடித் தன்மையை அம்பலப்படுத்தியது. போரில் இஸ்ரேலுக்கு இன்னும் நிறைவேற்ற வேண்டிய இலக்குகள் இருப்பதாகவும், அவற்றை 'ஒப்பந்தத்தின் மூலமாகவோ அல்லது மீண்டும் யுத்தத்தைத் தொடங்குவதன் மூலமாகவோ' அடையும் என்றும் அவர் கூறினார். 'தேவைப்படும் எந்தவொரு தருணத்திலும் மீண்டும் போருக்குத் திரும்ப நாங்கள் தயாராக இருக்கிறோம். எங்கள் விரல் விசையின் மீதே இருக்கின்றது,' என்றும் அவர் கூறினார்.

போர் நிறுத்தம் என்பது போரின் முடிவல்ல என்பதை வலியுறுத்த விரும்புவதாக கூறிய நெதன்யாகு, 'நமது அனைத்து இலக்குகளையும் அடைவதற்கான பாதையில் இது ஒரு இடைநிறுத்தம்' என்றும் அவர் குறிப்பிட்டார்.

பின்னர், ட்ரம்பின் அறிவிப்புக்கு முன்னதாகவே, இரண்டு வாரங்களுக்குத் தாக்குதல்களை நிறுத்தி வைக்கும் அமெரிக்காவின் முடிவு குறித்து இஸ்ரேலுக்குத் தெரிவிக்கப்பட்டது என்று அவர் கூறினார். லெபனானில் போர் நிறுத்தம் கோரியது உட்பட, 'அதன் அனைத்து முன்நிபந்தனைகளையும் கைவிட்ட பிறகே', ஹோர்முஸ் ஜலசந்தியைத் திறக்க ஈரான் ஒப்புக்கொண்டதாக நெதன்யாகு கூறினார்.

புதன்கிழமை வெள்ளை மாளிகையில் நடந்த செய்தியாளர் சந்திப்பின் போது, ​​ட்ரம்பின் பத்திரிகைச் செயலாளர் கரோலின் லீவிட், 'லெபனான் போர் நிறுத்தத்தின் ஒரு பகுதியாக இல்லை' என்று கூறி, அதே கூற்றை மீண்டும் வலியுறுத்தினார். இருப்பினும், செவ்வாயன்று அறிவிக்கப்பட்ட ஒப்பந்தத்தை உருவாக்குவதில் பிரதான பங்காற்றிய பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீஃப், அன்றைய தினம் முன்னதாக ஒரு அறிக்கையை வெளியிட்டு, 'ஈரானும் அமெரிக்காவும், அவற்றின் கூட்டாளிகளுடன் சேர்ந்து, லெபனான் மற்றும் பிற இடங்கள் உட்பட எல்லா இடங்களிலும் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில், போர் நிறுத்தம் செய்ய ஒப்புக்கொண்டுள்ளன,' என்று அறிவித்திருந்தார்.

ஹோர்முஸ் ஜலசந்தி முழுமையாகவும் நிரந்தரமாகவும் திறக்கப்படும் என்பதல்ல, மாறாக கப்பல் போக்குவரத்து ஈரானியக் கட்டுப்பாடு, மேற்பார்வை மற்றும் சாத்தியமான கட்டணங்களுக்கு உட்பட்டதாகவே இருக்கும் என்பதே ஈரானின் நிலைப்பாடாகக் கூறப்பட்டது. இராணுவ மேற்பார்வையின் கீழ் ஜலசந்தி திறந்தே இருக்கும் என்று ஈரானிய அதிகாரிகள் கூறியதாக ஏபி செய்தி நிறுவனம் தெரிவித்த அதேநேரம், லெபனான் மீதான இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்களுக்குப் பதிலடியாக ஈரான் அதை மூடியதாக அமெரிக்க நேரலை ஒளிபரப்பு கூறியது. பின்னர் அந்த முடிவு மாற்றப்பட்டதாக செய்திகள் வெளிவந்தன.

லெபனானில் நடக்கும் நிகழ்வுகள், காசா போர்நிறுத்தத்தினதும் ட்ரம்ப் பேச்சுவார்த்தை நடத்திய 'சமாதானத் திட்டத்தினதும்' சம்பவங்களைப் பிரதிபலிக்கின்றன. இவை பாலஸ்தீனியர்களுக்கு எதிரான இஸ்ரேலிய இனப்படுகொலையைத் தொடர்வதற்கான ஒரு மூடிமறைப்பாகப் பயன்படுத்தப்படுவதோடு, அந்தப் பகுதியின் பாதிக்கும் மேற்பட்டவற்றை இஸ்ரேலியப் படைகள் நிரந்தரமாக ஆக்கிரமிப்பதற்கான கட்டமைப்பையும் அமைக்கின்றன. 10 அக்டோபர் 2025 அன்று ட்ரம்பின் காசா போர்நிறுத்தம் நடைமுறைக்கு வந்ததிலிருந்து, குறைந்தபட்சம் 723 பாலஸ்தீனியர்கள் இஸ்ரேலால் கொல்லப்பட்டுள்ளதோடு கிட்டத்தட்ட 2,000 பேர் காயமடைந்துள்ளனர்.

இஸ்ரேலிய அதிகாரிகளின் அறிக்கைகளின்படி, லெபனான் மீதான தாக்குதலின் மூலோபாய நோக்கங்களில், நாட்டின் 10 சதவீதப் பகுதியை நீண்டகாலத்துக்கு ஆக்கிரமித்து இணைத்துக் கொள்வதும் அடங்கும். பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ், லிட்டானி நதி வரை ஒரு 'பாதுகாப்பு மண்டலத்தை' அமைப்பதற்கும், 6 லட்சத்திற்கும் மேற்பட்ட குடியிருப்பாளர்களை அவர்களின் வீடுகளில் இருந்து வெளியேற்றுவதற்கும் திட்டங்களை அறிவித்துள்ளார். லெபனானின் எல்லைக் கிராமங்களைத் தரைமட்டமாக்குவதும், பாலங்களை அழிப்பதும் இத்திட்டத்தின் முக்கிய நோக்கங்களாகும்.

புதன்கிழமை லெபனானில் நடந்த நிகழ்வுகள், ஈரானுக்கு எதிரான அமெரிக்க தலைமையிலான போரை மீண்டும் தொடங்குவதற்கான ஒரு முன்னறிவிப்பாகும். நெதன்யாகு வெளிப்படையாகக் கூறியது போல், இந்த இரண்டு வார கால போர் நிறுத்தம், மத்திய கிழக்கில் ஏகாதிபத்தியத்தின் இலக்குகளை அடைவதற்கான ஒரு 'இடைநிலையே' ஆகும்.

Loading