இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.
ஏப்ரல் 7 அன்று, சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் அமைப்பும் (IYSSE), சோசலிச சமத்துவக் கட்சியும் (சோ.ச.க.), பேராதனைப் பல்கலைக்கழகத்திற்கு அருகிலுள்ள ஹிந்தகலவில் உள்ள ஓரியண்ட் கல்வி நிறுவனத்தில், “ஈரானுக்கு எதிரான அமெரிக்க-இஸ்ரேலின் சட்டவிரோதப் போரை நிறுத்து” என்ற தலைப்பிலான தொடர் போர் எதிர்ப்பு பகிரங்கக் கூட்டங்களில் இரண்டாவதை நடத்தின. இக்கூட்டத்தில் மாணவர்கள், தொழிலாளர்கள், பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் மற்றும் கட்சி ஆதரவாளர்களும் கலந்துகொண்டனர். சோ.ச.க. இந்த நிகழ்வைத் தனது முகநூல் பக்கத்தில் நேரலையாக ஒளிபரப்பியது. இக்கட்டுரை எழுதப்படும் நேரத்தில், பார்வையாளர்கள் அதனை 325 முறைக்கு மேல் பகிர்ந்திருந்ததுடன் 4,800 முறைக்கு மேல் பார்த்திருந்தனர்.
கூட்டத்திற்கு முன்னதாக, சோ.ச.க. மற்றும் ஐ.வை.எஸ்.எஸ்.இ. உறுப்பினர்களும் ஆதரவாளர்களும், இந்தக் குற்றவியல் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு அவசியமான மூலோபயாம் பற்றஇ தொழிலாளர்கள், இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் கலந்துரையாடும் வகையில், பேராதனைப் பல்கலைக்கழகத்திலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் பரந்த பிரச்சாரத்தை மேற்கொண்டனர்.
இந்தக் கலந்துரையாடல்களில் பங்கேற்றவர்களில் பெரும்பாலோர், போர் சம்பந்தமாக தங்கள் கோபத்தையும் எதிர்ப்பையும் வெளிப்படுத்தியதுடன், அதை எவ்வாறு நிறுத்துவது என்பது பற்றி தெளிவுபடுத்திக்கொள்ளவும் முயன்றனர். இது, ஏகாதிபத்தியப் போர் முன்னெடுப்பின் மூலக் காரணங்களையும், முதலாளித்துவ அமைப்பின் ஆழமடைந்து வரும் உலகளாவிய நெருக்கடியின் பின்னணியில் அதன் தாக்கங்களையும் புரிந்துகொள்வதில் இருந்த ஆழ்ந்த ஆர்வத்தை வெளிப்படுத்தியது. இந்தப் பிரச்சாரத்தின் போது, சிங்கள மற்றும் தமிழ் மொழிபெயர்ப்புகளைக் கொண்ட ஈரான் மீதான குற்றவியல் அமெரிக்க-இஸ்ரேலியப் போரை நிறுத்து என்ற சிறுபுத்தகத்தின் நூற்றுக்கும் மேற்பட்ட பிரதிகள் விற்பனை செய்யப்பட்டன.
கூட்டத்திற்கு முன்னதாக, சோ.ச.க. மற்றும் ஐ.வை.எஸ்.எஸ்.இ.யும், தொழிலாள வர்க்கத்தின் நனவான மற்றும் செயல்திறன்மிக்க ஒரு சர்வதேசப் போர் எதிர்ப்பு இயக்கத்தை உருவாக்குவதன் மூலம் ஈரானுக்கு எதிரான போரை முடிவுக்குக் கொண்டுவரக் கோரி, மதிய உணவு நேரத்தில் மறியல் போராட்டம் ஒன்றை நடத்தின. இந்தப் போராட்டத்தில் பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்திய ஆயிரக்கணக்கான பயணிகள் பார்வையிட்டதோடு மேலும் பல செய்தி இணையதளங்கள் இது குறித்து சாதகமான செய்திகளை வெளியிட்டன.
இலங்கையில் ஐ.வை.எஸ்.எஸ்.இ.யின் முன்னணி உறுப்பினரான சகுந்த ஹிரிமுத்துகொட இக்கூட்டத்திற்குத் தலைமை தாங்க, சோ.ச.க. பொதுச் செயலாளர் தீபால் ஜெயசேகர பிரதான அறிக்கையை வழங்கினார். தனது தொடக்க உரையில், ஈரான் மீதான முதல் அமெரிக்க-இஸ்ரேலியத் தாக்குதலை முன்னெடுத்த காலகட்டம், போரின் கொலைகார, கொடூர மற்றும் வன்முறைத் தன்மையை வெளிப்படுத்தியுள்ளது என்று ஹிரிமுத்துகொட கூறினார். மற்றய அனைத்து ஏகாதிபத்திய சக்திகளும் இந்தத் தாக்குதலுக்கு ஆதரவளிக்கின்றன என்றும் அவர் குறிப்பிட்டார்.
“ஈரான் முழுவதும் ஒரே இரவில் அழிக்கப்படும்” என்று அறிவித்து ஈரானை “கற்காலத்திற்குத் திருப்பி அனுப்புவேன்” என்ற டொனால்ட் ட்ரம்பின் அச்சுறுத்தல்களையும் தெஹ்ரானின் எரிசக்தி அமைப்பு குறிவைக்கப்பட்டதையும் ஹிரிமுதுகொட சுட்டிக்காட்டினார். அவர் பின்வருமாறு எச்சரித்தார்:
அவர் எரிசக்தி அமைப்பைத் தாக்கினால், அங்கே ஆபத்தான விளைவுகள் ஏற்படும். பாரிய அழிவு ஏற்கனவே ஏற்படுத்தப்பட்டுவிட்டது. ஈரானில் ஏற்கெனவே 2,000 பேர் உயிரிழந்துள்ளனர். ஒன்பது கோடி மக்கள் தொகை கொண்ட ஒரு நாட்டை அழித்துவிடுவதாக ட்ரம்ப் அச்சுறுத்துகிறார். இத்தகைய அச்சுறுத்தல்களை, 1930களில் ஜெர்மனியில் நாஜி ஆட்சியின் நடவடிக்கைகளுடன் ஒப்பிடலாம். இருப்பினும், அவர்கள் இனப்படுகொலையைப் பற்றிப் பேசியபோது, அது மக்களுக்குத் தெரியாமல், இரகசியமாகவே செய்யப்பட்டது. ட்ரம்ப் பட்டப்பகலில், சமூக ஊடகங்களிலும் பத்திரிகையாளர் சந்திப்புகளிலும் இதுபோன்ற அச்சுறுத்தல்களை விடுக்கிறார். இது முதலாளித்துவ அமைப்பின் முழுமையான வங்குரோத்தையும், வீழ்ச்சியின் உச்சகட்ட நிலையையும் அம்பலப்படுத்துகிறது.
ஈரான் மீதான போரின் சர்வதேசத் தன்மையைச் சுட்டிக்காட்டிய ஹிரிமுதுகொட, அதை நிறுத்துவது மனிதகுலத்தின் வாழ்வா சாவா பிரச்சினை என்று கூறினார். அந்தப் பொறுப்பு சர்வதேசத் தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்டுவதிலேயே சார்ந்துள்ளது. “தொழிலாளர் வர்க்கத்தில் போருக்கு எதிரான எதிர்ப்பு ஏற்கனவே வளர்ந்துள்ளது, ஆனால் அது போரின் வேர்களைப் பற்றிய விஞ்ஞானப்பூர்வமான புரிதலின் அடிப்படையில் கட்டியெழுப்பப்பட்ட ஒரு நனவான இயக்கமாக மாற்றப்பட வேண்டும்,” என்று ஹிரிமுதுகொட கூறினார்.
சோ.ச.க.யின் பொதுச் செயலாளர் தீபால் ஜயசேகர வரலாற்று ரீதியாக ஒடுக்கப்பட்ட ஒரு நாட்டிற்கு எதிரான அமெரிக்க-இஸ்ரேலிய ஏகாதிபத்திய ஆக்கிரமிப்பைக் கண்டித்து தனது உரையைத் தொடங்கினார். ஈரானின் எண்ணெய் மற்றும் எரிவாயு வளங்களைக் கைப்பற்றி, ஒட்டுமொத்த மத்திய கிழக்கிலும் அமெரிக்க ஆதிக்கத்தை நிலைநாட்டுவதே இதன் நோக்கம் என்று அவர் விளக்கினார். இந்தப் போர், சீனா மற்றும் ரஷ்யாவிற்கு எதிரான அமெரிக்காவின் போர் ஆயத்தங்களுடன் தொடர்புடையது என்றும், உலகின் மீது அமெரிக்க மேலாதிக்கத்தை நிலைநாட்டும் ஒரு பரந்த இயக்கத்தின் ஒரு பகுதியாகும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
தற்போதைய போர், ஒட்டுமொத்த உலகையும் ஒரு பேரழிவு தரும் உலகப் போருக்குள் தள்ளும் அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது என்று விளக்கிய அவர், உழைக்கும் வர்க்கத்தின் முன் ஒரு மாற்றீட்டை முன்வைத்தார்: “இந்த ஏகாதிபத்திய காட்டுமிராண்டித்தனத்தை தடுத்து நிறுத்த உலகத் தொழிலாள வர்க்கம் செயல்படுமா, அல்லது முதலாளித்துவம் ஒரு மூன்றாம் உலகப் போரின் மூலம் உலகை அழிவுக்கு இட்டுச் செல்லுமா?”
ஈரானுக்கு எதிரான போரில் ட்ரம்ப் நிர்வாகமும் அதனுடன் ஒத்துழைக்கும் ஐரோப்பிய அரசாங்கங்களும், கடுமையான சிக்கன நடவடிக்கைகளின் மூலம் முதலாளித்துவ நெருக்கடியின் முழுச் சுமையையும் போரின் செலவுகளையும் தொழிலாள வர்க்கத்தின் மீது சுமத்தும் அதே நேரம், தங்கள் நாட்டுக்குள் வர்க்கப் போரை நடத்தி வருகின்றன என்ற உண்மையை ஜயசேகர சுட்டிக்காட்டினார். “இது இந்த நாடுகளில் வளர்ந்து வரும் வர்க்கப் போராட்டத்தைத் தீவிரப்படுத்துவதோடு, தொழிலாள வர்க்கத்தின் ஒரு சர்வதேசப் போர் எதிர்ப்பு இயக்கத்தைக் கட்டியெழுப்புவதற்கு ஒரு புறநிலை அடிப்படையை வழங்குகிறது” என்று அவர் தெரிவித்தார்.
ஈரானுக்கு எதிரான போரில் நடுநிலை வகிப்பதாக இலங்கையில் உள்ள மக்கள் விடுதலை முன்னணி / தேசிய மக்கள் சக்தி (ஜே.வி.பி./தே.ம.ச.) அரசாங்கம் கூறிவருவதை ஜயசேகர அம்பலப்படுத்தினார். ஜே.வி.பி./தே.ம.ச. அரசாங்கத்தின் வெளிவிவகார அமைச்சு வெளியிட்ட சுருக்கமான அறிக்கையில், ஆக்கிரமிப்பாளர்களான அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் பெயர்கள் கூட குறிப்பிடப்படவில்லை, மாறாக, அனைத்துத் தரப்பினரும் தங்களைக் 'கட்டுப்படுத்திக்கொள்ள' வேண்டும் என்று மட்டுமே அது அழைப்பு விடுத்திருந்தது. ஈரானுக்கு எதிரான அமெரிக்க-இஸ்ரேலியப் போரில் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவின் அரசாங்கம் உடந்தையாக இருக்கின்றது என்று அவர் சுட்டிக்காட்டினார்.
போலி இடது முன்னிலை சோசலிசக் கட்சியாலும் (மு.சோ.க.), பேராதனைப் பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளரும், பப்லோவாத ஐக்கிய செயலகத்தின் இலங்கைப் பிரிவான சோசலிச மக்கள் மன்றத்தின் தலைவருமான கல்ப இராஜபக்ஷவாலும் ஊக்குவிக்கப்படும் “அணிசேரா” கொள்கை எனப்படுபவை குறித்தும் பேச்சாளர் விளக்கினார். அவர்கள் தற்போதைய சூழலில் அத்தகைய கொள்கையைப் பின்பற்றுவதே சிறந்த வழி என, ஜே.வி.பி./தே.ம.ச. அரசாங்கத்திற்கு அறிவுறுத்தியுள்ளனர்.
பனிப்போரின் போது, அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கும் ஸ்ராலினிச அதிகாரத்துவத்தின் கீழ் இருந்த சோவியத் ஒன்றியத்திற்கும் இடையில் சூட்சுமமாக செயல்படும் முயற்சியாக, 1960களில் இந்தியா மற்றும் இந்தோனேசியா போன்ற சில முன்னாள் காலனித்துவ நாடுகளால் முதன்முதலில் முன்வைக்கப்பட்ட “அணிசேரா” கொள்கையானது, ஏகாதிபத்திய எதிர்ப்பு அல்லது போர்-எதிர்ப்பு கொள்கை அல்ல என்று அவர் விளக்கினார்.
தமது உரையின் இறுதிப் பகுதியில், அரசியல் ஸ்தாபனத்தின் அனைத்துக் கட்சிகளுக்கும் மற்றும் அவர்களின் போலி இடது ஆதரவாளர்களுக்கும் எதிரான சோ.ச.க.யின் நிலைப்பாட்டை ஜயசேகர விரிவாக எடுத்துரைத்தார்.
'எங்கள் நிலைப்பாடு ஒரு சோசலிச மற்றும் சர்வதேசவாத அடிப்படையிலானதாகும்,' என்று அவர் கூறினார். 'ஏகாதிபத்தியப் போர் வெறியர்களிடம் வேண்டுகோளல் விடுப்பதன் மூலம் இந்தப் போரை நிறுத்த முடியாது. சோசலிச முன்னோக்கின் அடிப்படையில் சர்வதேசத் தொழிலாள வர்க்கத்தை சுயாதீனமாக அணிதிரட்டுவதன் மூலம் மட்டுமே இந்தக் கொடூரமான போரை நிறுத்த முடியும்.'
அனைத்து முதலாளித்துவ அரசியல் கட்சிகள் மற்றும் அவற்றின் போலி இடது மற்றும் தொழிற்சங்க கிளைகளிடமிருந்து சுயாதீனமாக ஒழுங்கமைக்கப்பட்ட சுயாதீனமான நடவடிக்கைக் குழுக்களை, ஒவ்வொரு வேலைத்தளத்திலும், தொழிற்சாலை மற்றும் குடியிருப்புப் பகுதியிலும் உருவாக்குவது தொழிலாள வர்க்கத்தின் அவசரப் பணி என்பதை அவர் வலியுறுத்தினார்.
போர் இயந்திரத்தை நிறுத்தும் திறன் கொண்ட தொழிலாளர் வர்க்கம், இந்த சுயதீன நடவடிக்கைக் குழுக்கள் மூலம், போக்குவரத்து, பிற சேவைகள், துறைமுகங்கள் மற்றும் எண்ணெய் விநியோகம் போன்ற போர் முயற்சிகளைத் தொடர்வதற்கு இன்றியமையாத துறைகளில், வேலைநிறுத்த நடவடிக்கைகளை ஒழுங்கமைக்க வேண்டும். தொழிலாள வர்க்கத்தின் ஒரு சர்வதேச போர் எதிர்ப்பு இயக்கத்தைக் கட்டியெழுப்புவதற்கான போராட்டத்தை முன்னெடுத்துச் செல்ல, மாணவர்களும் இளைஞர்களும் ஐ.வை.எஸ்.எஸ்.இ.யில் இணைய வேண்டும். சோசலிசக் கொள்கைகளின் அடிப்படையில், போருக்கு எதிரான இந்தப் போராட்டத்தில் தொழிலாளர் வர்க்கத்தை வழிநடத்த, சோ.ச.க.யை ஒரு வெகுஜனப் புரட்சிகரக் கட்சியாகக் கட்டியெழுப்புவது இந்தச் சூழ்நிலையில் முற்றிலும் இன்றியமையாதது.
பேச்சாளர்களின் உரைகளைத் தொடர்ந்து, ஒரு நேரடி கேள்வி-பதில் அமர்வு நடைபெற்றது.
கலந்துகொண்டவர்களால் எழுப்பப்பட்ட கேள்விகள், “சோ.ச.க.யை ஒரு வெகுஜனக் கட்சியாக மாற்றுவது எப்படி,” “முதலாளித்துவ அரசாங்கங்களால் சோசலிசக் கருத்துக்களும் இளைஞர்களும் ஒடுக்கப்படுவதை எதிர்கொள்வது எப்படி,” மற்றும் ஒரு சர்வதேசப் போர் எதிர்ப்பு இயக்கத்தை ஒழுங்கமைப்பது எப்படி என்பனவற்றை மையமாகக் கொண்டிருந்தன.
தனது பதில்களில், போரை எவ்வாறு நிறுத்துவது மற்றும் அதற்கு என்ன செய்ய வேண்டும் என்பது குறித்த பிரச்சினைகளுக்கு ஜயசேகர பதிலளித்தார். தற்போதைய காட்டுமிராண்டித்தனத்தின் மூல காரணங்களான முதலாளித்துவம் மற்றும் ஏகாதிபத்தியத்திற்கு எதிரான சமரசமற்ற எதிர்ப்பின் அடிப்படையில் தொழிலாளர்களும் இளைஞர்களும் ஒரு இயக்கத்தை உருவாக்க வேண்டும் என்று சோ.ச.க., நான்காம் அகிலத்தின் அனைத்துலகக்த குழு மற்றும் உலக சோசலிச வலைத் தளமும் முன்மொழிகின்றன என அவர் விளக்கினார்.
முதலாளித்துவ அமைப்பின் உலகளாவிய நெருக்கடியிலிருந்தே போர் தலைதூக்குகின்றது என்று அவர் விளக்கினார். எனவே, முற்போக்கான அடிப்படையில் போரை நிறுத்துவதற்கு, தொழிலாள வர்க்கத்தின் ஒரு சர்வதேசப் போர் எதிர்ப்பு இயக்கமானது சோசலிசத்திற்கான போராட்டத்தை அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டும். பூகோளமயமாக்கப்பட்ட பொருளாதாரத்திற்கும் போட்டி தேசிய-அரசு அமைப்புக்கும் இடையிலான முரண்பாடு, மற்றும் சமூகமயமாக்கப்பட்ட உற்பத்திக்கும் இலாபத்தால் உந்தப்படும் தனியார் உடைமைக்கும் இடையிலான முரண்பாடு ஆகிய முதலாளித்துவத்தின் அடிப்படை முரண்பாடுகளே ஏகாதிபத்தியப் போருக்குப் பின்னால் உள்ள காரணிகளாகும். எனவே, ஏகாதிபத்தியப் போருக்கு எதிரான போராட்டம் என்பது தவிர்க்க முடியாதவாறு முதலாளித்துவத்திற்கு எதிரான போராட்டமாகும்.
இந்த முரண்பாடுகளுக்கு ஆளும் வர்க்கத்தின் பதிலிறுப்பு, ஒரு பேரழிவு தரும் உலகப் போரை நோக்கிய உந்துதலுக்கு வழிவகுக்கின்றது என்று அவர் எச்சரித்தார். 1917 அக்டோபர் புரட்சியின் வரலாற்று அனுபவம், தொழிலாளர் வர்க்கம் அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றுவதன் மூலம் ஏகாதிபத்தியப் போரைத் தடுத்து நிறுத்த முடியும் என்பதை நடைமுறையில் நிரூபித்தது. அதன் தாக்கம் முதலாம் உலகப் போரை முடிவுக்குக் கொண்டுவரப் பங்களித்தது. அதன் பின்னர், ஐரோப்பியத் தொழிலாளர் வர்க்கம் தனது சொந்தப் போராட்டங்களை முன்னெடுத்தமை போரைத் தொடர்வது பற்றிய ஆளும் வர்க்கங்களின் அச்சங்களை ஆழப்படுத்தியது.
தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் மீதான முதலாளித்துவ அரசாங்கத்தின் அடக்குமுறைகள் குறித்துப் பேசிய சோ.ச.க. பொதுச் செயலாளர், பிரதமரின் தலையீட்டைத் தொடர்ந்து கடந்த ஆண்டு பேராதனைப் பல்கலைக்கழகத்தில் ஐ.எம்.எப். சிக்கன நடவடிக்கைகள் சம்பந்தமாக ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டத்திற்கு தடை விதிக்கப்பட்டமை போன்ற நிலைமைகளை சோ.ச.க. மற்றும் ஐ.வை.எஸ்.எஸ்.இ. எதிர்கொள்ளும்போது, அவற்றை பாதுகாக்குமாறு வேண்டுகோள் விடுத்து அவர்கள் தொழிலாள வர்க்கத்தையும் இளைஞர்களையும் நோக்கி திரும்பினர் என்று கூறினார். இத்தகைய அணுகுமுறையின் மூலம் சோ.ச.க. தன்னை வலுப்படுத்திக் கொள்கிறது. இறுதியில் அந்தக் கூட்டம் நடத்தப்பட முடியாவிட்டாலும், தொழிலாளர்கள், இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் கட்சி நடத்திய பிரச்சாரம், ஜே.வி.பி./தே.ம.ச. அரசாங்கத்தின் போலி ஜனநாயக வார்த்தை ஜாலங்களை அம்பலப்படுத்தியது.
சோ.ச.க. மற்றும் முன்னிலை சோசலிசக் கட்சிக்கும் இடையிலான அரசியல் வேறுபாடுகள் பற்றிய கேள்விக்கு பதிலளித்த ஜயசேகர, அரசியல் முன்னோக்கு அல்லது வர்க்க அடிப்படையில், சோ.ச.க. மற்றும் அதன் முன்னோடியான புரட்சிகர கம்யூனிட் கழகத்திற்கும் முன்னிலை சோசலிசக் கட்சிக்கும் இடையில் எந்த ஒருமைப்பாடும் கிடையாது என்று விளக்கினார். உயர் மத்தியதர வர்க்கத்தினரை அடிப்படையாகக் கொண்ட முன்னிலை சோசலிசக் கட்சி, தொழிலாளர் வர்க்கத்திற்கு விரோதமானது. அது தொழிலாளர்களையும் இளைஞர்களையும் குழப்பி அவர்களை முதலாளித்துவத்துடன் கட்டிவைக்க செயல்படுகிறது என்று அவர் கூறினார். மாற்று 'இடைக்கால' முதலாளித்துவ அரசாங்கமொன்றை அமைக்க அழைப்பு விடுத்ததன் மூலம், 2022இல் நடந்த வெகுஜன எழுச்சி இயக்கத்தை மீண்டும் முதலாளித்துவ பாராளுமன்றத்தின் பக்கமும் முதலாளித்துவ அரசின் பக்கமும் திருப்பிவிட முன்னிலை சோசலிசக் கட்சி செயல்பட்டமை, அந்த போலி இடது கட்சியின் துரோகப் பாத்திரத்தை அம்பலப்படுத்தியதாக அவர் சுட்டிக்காட்டினார்.
மேலும் படிக்க
- இலங்கைத் தமிழ் முதலாளித்துவக் கட்சிகள் ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேலியப் போரை ஆதரிக்கின்றன
- ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேல் போர் குறித்தும் அதை எவ்வாறு நிறுத்துவது என்பது பற்றியும் இலங்கைத் தொழிலாளர்களும் மாணவர்களும் கலந்துரையாடுகின்றனர்
- இலங்கையின் போலி இடது முன்னிலை சோசலிசக் கட்சி ஈரான் போருக்கு எதிராகப் போலியான “உலக மக்கள் சக்திக்கு” அழைப்பு விடுக்கிறது
