இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.
இலங்கையின் ஒரு போலி இடது அமைப்பான, முன்னிலை சோசலிசக் கட்சியின் (மு.சோ.க.) மத்தியக் குழு, ஏகாதிபத்திய எதிர்ப்பு மற்றும் போர் எதிர்ப்பு வாய்சவடால்கள் நிறைந்த ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. ஈரான் மீதான அமெரிக்கப் போரை 'சந்தேகத்திற்கு இடமின்றிக் கண்டிக்கும்' அது, 'ஏகாதிபத்தியப் போரின் பேரழிவுக்கு எதிராக ஒரு உலகளாவிய மக்கள் சக்தியைக் கட்டியெழுப்!' அழைப்பு விடுக்கின்றது.
'அணுசக்தி நாடுகளுக்கு இடையே அதிகரித்து வரும் பதட்டங்கள் மனித இனத்தின் மற்றும் ஒட்டுமொத்த கிரகத்தின் உயிர்வாழ்வையே ஆபத்தில் ஆழ்த்தியுள்ளன' என்று எச்சரிக்கும் மு.சோ.க., 'ஏகாதிபத்தியப் போருக்கு எதிரான, தொழிலாளர் வர்க்கத் தலைமைத்துவத்தை மையமாகக் கொண்ட ஒரு சர்வதேச மக்கள் சக்தி, மனிதகுலத்தின் எதிர்காலத்தைப் பாதுகாப்பதற்கு இன்றியமையாதது' என்றும் வலியுறுத்துகிறது. போருக்கு எதிராக 'உலகளாவிய நடவடிக்கைகளை' அது முன்மொழிகிறது.
இந்த இடதுசாரி ஓசை கொண்ட வார்த்தை ஜாலங்கள், தொழிலாளர்களையும் இளைஞர்களையும் ஏமாற்றும் நோக்கம் கொண்டதாகும். போரைத் தடுக்கக்கூடிய ஒரே சமூக சக்தியான சர்வதேசத் தொழிலாளர் வர்க்கத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு ஐக்கியப்பட்ட போர் எதிர்ப்பு மற்றும் சோசலிச இயக்கத்திற்கு மு.சோ.க. அழைப்பு விடுக்கவில்லை. மாறாக, அது 'உலகளாவிய மக்கள் சக்தி' என்ற முகமூடியின் கீழ் போலி இடதுகள், ஸ்டாலினிச-மாவோயிச அமைப்புகள் மற்றும் முதலாளித்துவ தேசியவாதிகள் போன்ற சந்தர்ப்பவாதக் குழுக்களின் ஒரு சர்வதேசக் கூட்டணியையே முன்மொழிகிறது. இந்த அமைப்புகளுடனேயே மு.சோ.க. நெருக்கமாக செயற்படுவதுடன், இவற்றில் சில, இந்த மாதத் தொடக்கத்தில் நடைபெற்ற மு.சோ.க.யின் பேராளர் மாநாட்டிற்கும் அழைக்கப்பட்டிருந்தன.
அவற்றில் அடங்கும் அமைப்புகளாவன:
பிரான்சின் பாப்லோவாத புதிய முதலாளித்துவ எதிர்ப்பு கட்சி (NPA). இது உக்ரைனில் ரஷ்யாவிற்கு எதிரான அமெரிக்க-நேட்டோவின் பினாமிப் போரை ஆதரித்ததுடன், 2024 தேர்தல்களில் அடிபணியா பிரான்ஸ் அமைப்பின் தலைமையிலான போர் ஆதரவு தேசிய மக்கள் முன்னணிக்கும் ஆதரவளித்தது.
ஜெர்மனியின் ஒரு அதிதீவிர ஸ்டாலினிசக் குழுவான மார்க்சிய-லெனினிசக் கட்சி. இது ஈரானின் பதிலடியை, அமெரிக்க ஏகாதிபத்தியமும் இஸ்ரேலும் நடத்தும் ஆக்கிரமிப்புப் போருடன் சமப்படுத்துகிறது. இது அனைத்துத் தரப்பினரையும் 'போரை நிறுத்துமாறு' அழைப்புவிடுக்கிறது. எனினும், உண்மையில் இதன் பொருள் அமெரிக்க மற்றும் இஸ்ரேல் போர்க் குற்றவாளிகளுடன் கைகோர்ப்பதாகும்.
இத்தாலியின் லோட்டா கம்யூனிஸ்டா மற்றும் நேபாளத்தின் விஞ்ஞான சோசலிச கம்யூனிஸ்ட் கட்சி. இந்த இரண்டு மாவோவாத அமைப்புகளும் மு.சோ.க.யின் சர்வதேச ஒத்துழைப்பாளர்களான குட்டிமுதலாளித்துவ அமைப்புகளில் அடங்கும்.
மு.சோ.க.யைப் போலவே, தொழிலாள வர்க்கத்தை சுயாதீனமாக அணிதிரட்டுவதையும் சோசலிசத்திற்கான போராட்டத்தையும் எதிர்ப்பது இந்தக் கட்சிகளின் குறிப்பிடத்தக்க பண்பாகும். ஏகாதிபத்தியத்தின் ஆதிக்கத்தில் உள்ள பூகோள முதலாளித்துவக் கட்டமைப்பிற்குள்ளேயே அவை 'தீர்வுகளை' நாடுகின்றன.
மு.சோ.க.யின் முழு அறிக்கையிலும் 'சோசலிசம்' என்ற வார்த்தை தவிர்க்கப்பட்டிருப்பது ஆச்சரியத்துக்குரியது அல்ல. அதன் அரசியலும், அதன் கூட்டாளிகளின் அரசியலைப் போலவே, ஏகாதிபத்திய சக்திகளுக்கு அழுத்தம் கொடுப்பதற்காக நடத்தப்படும் பயனற்ற போராட்ட இயக்கங்களைச் சுற்றியே சுழல்கின்றது. இது தொழிலாள வர்க்கத்தை அரசியல் ரீதியாக நிராயுதபாணியாக்குவதை மட்டுமே செய்யும். 'தொழிலாளர் வர்க்கத்தை மையமாகக் கொண்ட' ஒரு சர்வதேச இயக்கத்திற்காக மு.சோ.க. அழைப்பு விடுப்பதன் ஒரே அர்த்தம், தொழிலாளர்களை இந்த முதலாளித்துவ-சார்பு கூட்டணிக்கு அடிபணியச் செய்வதே ஆகும்.
மு.சோ.க.யின் உண்மையான நோக்குநிலை, கியூபத் தூதுவர் பத்ரிசியா லசாராவிற்கு அது விடுத்த அழைப்பின் மூலம் அடிக்கோடிட்டுக் காட்டப்பட்டது. அவர் மு.சோ.க. மாநாட்டிற்கு கியூப கம்யூனிஸ்ட் கட்சியின் வாழ்த்துக்களைத் தெரிவித்தார். அவர், அமெரிக்க அச்சுறுத்தல்களுக்கு எதிரான ஃபிடல் காஸ்ட்ரோவின் நிலைப்பாட்டை தூக்கிப் பிடிக்கும் அதேவேளை, 1991 இல் சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்ட பின்னர் துரிதமாக வலது பக்கம் நகர்ந்து, பூகோள முதலீட்டாளர்களுக்குத் தன்னைத் திறந்துவிட்ட, கியூப முதலாளித்துவ ஆட்சியையே பிரதிநிதித்துவப்படுத்துகிறார். தலையிடப்போவதாக ட்ரம்ப் நிர்வாகம் விடுக்கும் அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் இந்த நிகழ்வுப் போக்கு தற்போது துரிதமடைந்து வருகிறது.
பப்லோவாத-சார்பு சோசலிச மக்கள் மன்றம், மாவோவாத புதிய ஜனநாயக மார்க்சிய-லெனினிசக் கட்சி, தொழிற்சங்க அதிகாரிகள் மற்றும் அரசு சாரா அமைப்புகளினதும் செயற்பாட்டாளர்களை உள்ளடக்கி, மு.சோ.க. தலைமையில் அமைக்கப்பட்டுள்ள மக்கள் போராட்ட முன்னணியால், மார்ச் 5 ஏற்பாடு செய்யப்பட்ட பத்திரிகையாளர் சந்திப்பில், மு.சோ.க. தலைவர்களில் ஒருவரான துமிந்த நாகமுவவின் கருத்துக்கள், அதன் சந்தர்ப்பவாதப் போக்கை மேலும் அம்பலப்படுத்துகின்றன.
காசா மீதான அமெரிக்கத் தாக்குதல்கள், கியூபா மீதான தடைகள், வெனிசுலா ஜனாதிபதி கடத்தப்பட்டமை அல்லது ஈரான் மீதான போரை கண்டனம் செய்யத் தவறியதற்காக இலங்கை அரசாங்கத்தை நாகமுவ விமர்சித்த அதேநேரம், சவூதி அரேபியா மீதான ஈரானின் தாக்குதல் குறித்து உடனடியாகக் கவலைகளையும் வெளிப்படுத்தினார். ஆளும் மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) மற்றும் அதன் தேசிய மக்கள் சக்தியும் (தே.ம.ச.) அமெரிக்க ஏகாதிபத்தியத்தால் 'வசப்படுத்தப்பட்டுவிட்டன' என்று அவர் புலம்பினார்.
இருப்பினும், இலங்கையின் தென்கடற்கரையில் ஈரானின் ஐ.ஆர்.ஐ.எஸ். டெனா கப்பலை அமெரிக்கா மூழ்கடித்து நூற்றுக்கும் மேற்பட்ட மாலுமிகளை கொன்றமை பற்றி கொழும்பு மௌனம் காப்பது உட்பட, ஈரானுக்கு எதிரான அமெரிக்க-இஸ்ரேலியப் போரில் ஜே.வி.பி./தே.ம.ச. அரசாங்கத்தின் உடந்தையை நாகமுவவும் மு.சோ.க.யும் கண்டனம் செய்யத் தவறிவிட்டனர்.
வாஷிங்டன் மற்றும் டெல் அவிவ் உடனான ஜே.வி.பி./தே.ம.ச.யின் கூட்டணியை அம்பலப்படுத்துவதற்குப் பதிலாக, அவர் அரசாங்கத்திற்கு எச்சரிக்கையாக இருக்குமாறு அறிவுறுத்தினார்: 'அமெரிக்கா அல்லது சீனாவின் பக்கம் சேராதீர்கள்; இரண்டுமே ஒரு 'சாய்தளத்தின்' முனைகளில் அமர்ந்திருக்கின்றன; நாம் ஆபத்தில் இருக்கிறோம். இந்தப் போரில் அணிசேரா அணுகுமுறையைப் பின்பற்றுமாறு அரசாங்கத்திற்கு நாங்கள் கூறுகிறோம். இந்த நேரத்தில் அதுவே சிறந்ததாகும்.' மத்திய கிழக்கில் எண்ணெய் மீதான கட்டுப்பாட்டிற்காக அமெரிக்கா-சீனா இடையே நிலவும் போட்டியே இந்தப் போருக்கான மூல காரணம் என்றும் அவர் கூறினார்.
வெறுமனே ஏகாதிபத்தியத்தால் 'வசப்படுத்தப்பட்டுவிட்டதால்' ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேலியப் போரைக் கண்டிக்க ஜே.வி.பி./தே.ம.ச. மறுக்கவில்லை. ஏகாதிபத்திய-விரோத வாய்ச்சவடால்களை சிங்களப் பேரினவாதம், காஸ்ட்ரோவாதம் மற்றும் மாவோவாதத்துடனும் கலந்து ஒரு குட்டிமுதலாளித்துவ இயக்கமாக உருவெடுத்துள்ள ஜே.வி.பி., நீண்ட காலமாக 'அணிசேரா கொள்கையை' ஊக்குவித்து வருகிறது. தற்போது மு.சோ.க. பரிந்துரைக்கும் இந்தக் கொள்கை, போருக்கு எதிரானதோ அல்லது ஏகாதிபத்தியத்திற்கு எதிரானதோ அல்ல. இது, போர்களை நிறுத்துவதற்கு எந்த வகையிலும் உதவாத, ஏகாதிபத்திய சக்திகளுக்கு இடையில் சூட்சுமத்தைக் கையாள்வதற்கான ஒரு முயற்சி மட்டுமே.
பனிப்போரின் போது, 1960களில் இந்தோனேசியா, இந்தியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளின் ஆட்சிகளால், சோவியத் ஒன்றியத்திற்கும் அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கும் இடையில் தந்திரோபாயத்தை கையாள்வதற்காக முதன்முதலில் பயன்படுத்தப்பட்ட அணிசேரா கொள்கை, 1991இல் சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டவுடன் சரிந்தது. சீனாவுக்கு எதிரான அமெரிக்காவின் போர் தயாரிப்பில் இந்தியா இப்போது ஒரு முன்னணி மூலோபாயப் பங்காளியாக உள்ளதுடன் 2024 தேர்தல் வெற்றிக்குப் பிறகு ஜே.வி.பி./தே.ம.ச. கூட்டணி உட்பட, அடுத்தடுத்து அதிகாரத்துக்கு வந்த கொழும்பு அரசாங்கங்களும் அதனுடன் அணிசேர்ந்துள்ளன. ஈரான் மீதான தாக்குதலைக் கண்டிக்க மறுப்பதன் மூலமும், அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடன் அணிசேர்வதன் மூலமும், அது ஏகாதிபத்தியப் போர் முயற்சிகளை வெளிப்படையாக ஏற்றுக்கொண்டுள்ளது.
2012 இல் ஜே.வி.பி.யில் ஏற்பட்ட பிளவினால் உருவான மு.சோ.க., சீனாவுக்கு எதிரான அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் இராணுவத் தயாரிப்புகளுக்கு மத்தியில் இந்த 'அணிசேரா' மோசடியைத் தொடர்கிறது. ஈரான் மீதான அமெரிக்காவின் சட்டவிரோதப் போரும், சீனவுக்கு எதிரான போர் தாயரிப்புகளில் ஒரு பகுதியாகும். மத்திய கிழக்கில் உள்ள எண்ணெய் மற்றும் எரிவாயு வளங்களைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் டிரம்ப் நிர்வாகம் இராணுவ பலத்தைப் பயன்படுத்துகிறது. அதனை சீனாவின் எரிசக்தி கொள்முதல்களுடன் ஒப்பிடுவது, வாஷிங்டனின் நவகாலனியப் போரையும் அதன் கொள்ளையடிக்கும் நோக்கங்களையும் மூடிமறைப்பதாகும்.
சீனா ஒரு ஏகாதிபத்திய சக்தி அல்ல. சீன கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சியானது, 1949 சீனப் புரட்சிக்குப் பிறகு நிறுவப்பட்ட ஒரு உருமாறிய தொழிலாளர் அரசை ஆண்டு வந்தது. இருப்பினும், 1980களில் உற்பத்தியின் பூகோளமயமாக்கலின் தாக்கத்தின் கீழ், சீன கம்யூனிஸ்ட் கட்சி படிப்படியாகப் புரட்சியின் வெற்றிகளைக் கலைத்து, முதலாளித்துவத்தை மீட்டெடுத்து, பெரும் வெளிநாட்டு முதலீட்டிற்கு வழி திறந்துவிட்டது. ரஷ்யாவைப் போலவே, அதுவும் பூகோள ஏகாதிபத்திய முறைமைக்குள் இணக்கத்தை நாடுகிறது.
நாகமுவ தனது உரையை முடிக்கும் போது, 'ஏகாதிபத்திய அமெரிக்கப் புவிசார் அரசியல் கொள்கையையும், ஈரானில் உள்ள மதத் தீவிரவாதத்தையும் எதிர்க்க வேண்டும்' என்றே அழைப்பு விடுத்தார். இது, ஈரானுக்கு எதிரான ட்ரம்ப் நிர்வாகத்தின் போரில் பயன்படுத்தப்படும் போலியான 'மனித உரிமைகள்' பிரச்சாரத்தை எதிரொலிக்கிறது. மதகுருமார்களின் ஆட்சிக்கு எதிராக ஈரானில் ஒரு சுதந்திரமான தொழிலாளர் வர்க்க இயக்கம் கட்டியெழுப்பப்பட வேண்டும், ஆனால் அது, வரலாற்று ரீதியாக ஒடுக்கப்பட்ட நாடான ஈரானை ஏகாதிபத்திய ஆக்கிரமிப்பிலிருந்து சந்தேகத்திற்கு இடமின்றிப் பாதுகாப்பதன் ஒரு பகுதியாக மட்டுமே கட்டியெழுப்ப வேண்டும்.
மு.சோ.க.யின் போலி ஏகாதிபத்திய எதிர்ப்பும், ஜே.வி.பி./தே.ம.ச. 'அணிசேரா கொள்கையை' கடைப்பிடிக்க வேண்டும் என்ற அதன் அறிவுரையும், அரசாங்கத்தின் பாதுகாவலர்களாகவும் அதை நியாயப்படுத்துபவர்களாகவும் அவர்கள் செயல்படும் விதத்தின் ஒரு பகுதியாகும். 2024இல் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக தேர்வுசெய்ப்பட்ட பின்னர், மு.சோ.க. அவரது ஆட்சியை 'மக்களின் எதிர்பார்ப்புகளின்' பிரதிபலிப்பாகப் புகழ்ந்துரைத்தது. கொழும்பு ஸ்தாபனத்தின் தோற்கடிக்கப்பட்ட, மதிப்பிழந்த கட்சிகளிடமிருந்து இந்த அரசாங்கத்தைப் பாதுகாப்பதாக அதன் தலைவர்கள் மீண்டும் மீண்டும் கூறி வருகின்றனர்.
'பாராளுமன்றத்திற்கு வெளியே ஒரு சக்தியை' உருவாக்கும் விதமாக, 'மக்கள் சபைகளை' அமைக்க மு.சோ.க. வலியுறுத்துகிறது. இந்த மக்கள் சபைகளின் கதவுகள் அனைத்து முதலாளித்துவக் கட்சிகளுக்கும் திறந்து வைக்கப்படும். 'மக்கள்நல' நடவடிக்கைகளை எடுக்குமாறு ஆட்சியில் உள்ள அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுப்பதே இந்த வெளி சக்தியின் பணியாகும். உண்மையில், மு.சோ.க.யின் அரசியல், தொழிலாள வர்க்கத்தையும் கிராமப்புற மக்களையும் ஒரு முதலாளித்துவ மற்றும் பாராளுமன்றக் கட்டமைப்பிற்குள் கட்டிவைக்கும் செயல்பாடாகும்.
அதன் 'உலகளாவிய மக்கள் சக்தி' என்பது இந்த தேசியவாதக் கொள்கையின் ஒரு நீட்சியாகும்—அதாவது, முதலாளித்துவ அரசாங்கங்கள் மற்றும் முதலாளித்துவ கட்சிகளுடன் ஒத்துழைக்கும் சர்வதேச அளவிலான பல்வேறு சந்தர்ப்பவாத அமைப்புகளின் ஒரு மக்கள் முன்னணியாகும். அது முன்மொழியும் “உலகளாவிய நடவடிக்கைகள்” போரை நிறுத்துமாறு ஏகாதிபத்திய சக்திகளிடம் வேண்டுகோள் விடுப்பதே ஆகும்.
தொழிலாளர்களும் இளைஞர்களும் மு.சோ.க.யின் முதலாளித்துவ சார்பு அரசியலை நிராகரித்து, போரையும் ஏகாதிபத்தியத்தையும் எதிர்த்துப் போராட புரட்சிகர சோசலிசத்தை நோக்கித் திரும்ப வேண்டும். நான்காம் அகிலத்தின் சர்வதேசக் குழுவும், அதன் பிரிவுகளும் மற்றும் உலக சோசலிச வலைத் தளமும் மட்டுமே அத்தகைய ஒரு வேலைத்திட்டத்தை முன்னெடுக்கின்றன: ஈரானுக்கு எதிரான அமெரிக்க-இஸ்ரேலிய நடவடிக்கைகளை உடனடியாகவும் நிபந்தனையின்றியும் நிறுத்த வேண்டும்; மத்திய கிழக்கிலிருந்து அமெரிக்கா முழுமையாக வெளியேறுவதோடு அதன் அனைத்துத் இராணுவத் தளங்களளையும் மூட வேண்டும்; நேட்டோவைக் கலைப்பதுடன் அமெரிக்க இராணுவ-உளவுத்துறை அமைப்பை அகற்ற வேண்டும்; கட்டுப்பாடுகள் மற்றும் பொருளாதாரப் போரை நிராகரிக்க வேண்டும்; போரைத் திட்டமிட்டவர்கள் முழுமையாகப் பொறுப்பாளிகளாக்கப்பட வேண்டும்; மற்றும் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாக்க வேண்டும்.
இந்தக் கோரிக்கைகள் ஏகாதிபத்தியத்திற்கான வேண்டுகோள்கள் அல்ல. மாறாக அவை நான்கு கொள்கைகளின் அடிப்படையில் சர்வதேசத் தொழிலாள வர்க்கத்தை சுயாதீனமாக அரசியல் ரீதியில் அணிதிரட்டுவதைக் கோருகின்றன: சர்வதேசத் தொழிலாள வர்க்கத் தலைமை; நிதி மூலதனத்திற்கும் போரை உருவாக்கும் இலாப முறைக்கும் எதிரான சோசலிச எதிர்ப்பு; அனைத்து முதலாளித்துவக் கட்சிகள் மற்றும் அமைப்புகளிடமிருந்து முழுமையான சுயாதீனம்; மற்றும் மூலோபாய அடித்தளமாக அனைத்துலகவாதம்.
மு.சோ.க.யின் சந்தர்ப்பவாதக் கொள்கைகளை நிராகரித்து, ஒரு வெகுஜனப் புரட்சிகரக் கட்சியையும் உண்மையான போர் எதிர்ப்பு இயக்கத்தையும் கட்டியெழுப்புவதற்காக சோசலிச சமத்துவக் கட்சியின் போராட்டத்தில் இணையுமாறு தொழிலாளர்களையும் இளைஞர்களையும் நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்.
