ஹோர்முஸ் நீரிணையை IRGC மூடியதை அடுத்து ஈரானின் மின் நிலையங்கள் மற்றும் பாலங்கள் மீது குண்டு வீசப்போவதாக ட்ரம்ப் அச்சுறுத்தல் விடுத்துள்ளார்.

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.

இஸ்லாமியப் புரட்சிகரப் பாதுகாப்புப் படையினர் (IRGC) ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் மூடியதை அடுத்து, ஈரானின் பொதுமக்களுக்கான மின்சாரக் கட்டமைப்பு மற்றும் பாலங்கள் மீது குண்டு வீசுவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஞாயிற்றுக்கிழமை அச்சுறுத்தினார். சனிக்கிழமை இரவு மற்றும் ஞாயிற்றுக்கிழமை காலை ட்ரூத் சமூக வலைத் தள பதிவுகளில், ஈரான் தனது நிபந்தனைகளை ஏற்காவிட்டால், 'ஈரானில் உள்ள ஒவ்வொரு மின் நிலையத்தையும், ஒவ்வொரு பாலத்தையும் அமெரிக்கா தகர்க்கப் போகிறது' என்று ட்ரம்ப் எழுதினார். 'இனிமேல் நல்லவராக நடிக்க முடியாது!' என்றும் அவர் கூறினார்.

ஃபொக்ஸ் நியூஸ் சண்டே நிகழ்ச்சியில் ஞாயிற்றுக்கிழமை ஒளிபரப்பப்பட்ட, முன்னரே பதிவு செய்யப்பட்ட ஒரு தொலைபேசி நேர்காணலில், தலைமை வெளிநாட்டுச் செய்தியாளர் ட்ரே யிங்ஸ்ட் உடன் பேசும்போது, 'அவர்களின் நாடு முழுவதும் பாலங்களும் மின் நிலையங்களும் இடிந்து விழுவதை நீங்கள் பார்க்கப் போகின்றீர்கள்' என்று ட்ரம்ப் கூறினார். எந்தவொரு உடன்பாடும் எட்டப்படாவிட்டால், 'எல்லாவற்றையும் தகர்த்துவிட்டு, எண்ணெய் வளத்தைக் கைப்பற்றுவது குறித்து பரிசீலித்து வருவதாக' அவர் கூறினார். ஏ.பி.சி.யின் திஸ் வீக் நிகழ்ச்சியில், ஹோர்முஸ் நீரிணையை அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையிலான 'ஒரு கூட்டு முயற்சியாக' இயக்க முடியும் என்று அவர் ஜொனாதன் கார்லிடம் கூறினார்.

ஓமான் வளைகுடாவில் ஈரான் கொடி ஏற்றப்பட்ட 'தௌஸ்கா' என்ற சரக்குக் கப்பலை, யுஎஸ்எஸ் ஸ்ப்ரூயன்ஸ் என்ற போர்க்கப்பல் கைப்பற்றி, அதன் இயந்திர அறைக்குள் சுட்டு, கடற்படை வீரர்களைக் கப்பலில் ஏற்றியதாக ட்ரம்ப் சமூக ஊடகங்களில் அறிவித்தார்.

ஈரானின் கெஷ்ம் தீவு துறைமுகத்தில் உள்ள ஒரு மீன்பிடித் தளத்தில் இருந்து பார்க்கும் போது, அமெரிக்க-இஸ்ரேல் இராணுவ நடவடிக்கையின் போது நடந்த பல சமீபத்திய வான்வழித் தாக்குதல்களால் ஏற்பட்ட சேதங்களையும் ஹோர்முஸ் நீரிணையில் கப்பல்கள் நிற்பதும் தெரிகின்றது. திங்கட்கிழமை, ஏப்ரல் 13, 2026. [AP Photo/Asghar Besharati]

திங்கட்கிழமை இஸ்லாமாபாத்தில் நடைபெறவிருந்ததாகக் கூறப்படும் இரண்டாவது சுற்றுப் பேச்சுவார்த்தைகளில் தெஹ்ரான் கலந்துகொள்ளாது என்று ஈரானின் அரசு செய்தி நிறுவனமான IRNA பின்னர் தெரிவித்தது. பாகிஸ்தான் தலைநகரம் ஞாயிற்றுக்கிழமை இரவு முடக்கப்பட்டதுடன், கூடுதலாக 10,000 பாதுகாப்புப் படையினர் அங்கு குவிக்கப்பட்டனர்.

ஈரானுக்கு எதிரான அமெரிக்க-இஸ்ரேல் போரின் 51வது நாளிலும், இன்னும் 72 மணி நேரத்தில் முடிவடையவிருந்த இரண்டு வார கால போர் நிறுத்தத்தின் 12வது நாளிலுமே ட்ரம்ப் இந்த அச்சுறுத்தலை விடுத்துள்ளதோடு ஈரானியக் கப்பலை அமெரிக்கா கைப்பற்றியுள்ளது. வெள்ளிக்கிழமை, ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி, ஹோர்முஸ் நீரிணை ஈரானியக் கடற்கரைக்கு அருகிலுள்ள ஒரு வழித்தடத்தில் வணிகக் கப்பல் போக்குவரத்திற்காகத் திறக்கப்பட்டுள்ளது என்று X தளத்தில் பதிவிட்டார்.

பெப்ரவரி 28 அன்று போர் தொடங்கியதிலிருந்து, முதல் முறையாக சரக்குப் போக்குவரத்தாக, வெள்ளிக்கிழமை மற்றும் சனிக்கிழமை காலையில் பத்தொன்பது கப்பல்கள் நீரிணையை கடந்து சென்றமை குறிப்பிடத்தக்கது. இருப்பினும், ஈரான் நீரிணையை மீண்டும் திறந்தமைக்கு அமெரிக்கா பதிலளிக்கவில்லை. ஏனெனில், அமெரிக்கக் கடற்படை ஈரானின் துறைமுகங்களை முற்றுகையிட்டிருந்ததால், ஈரானால் ஒரு பீப்பாய் எண்ணெயைக் கூட ஏற்றுமதி செய்ய முடியவில்லை.

சனிக்கிழமை மாலை, ஈரானிய அரசு ஊடகங்கள் மூலம் புரட்சிகரக் காவலர்கள் நீரிணையை மீண்டும் மூடப்படுவதாக அறிவித்தனர். 'பாரசீக வளைகுடா மற்றும் ஓமான் கடலில் நங்கூரமிட்டுள்ள இடத்திலிருந்து எந்தக் கப்பலும் நகரக்கூடாது,' என்று அந்த அறிக்கை எச்சரித்தது. 'விதிமீறும் கப்பல் குறிவைக்கப்படும்.' சில மணி நேரங்களுக்குள், இரண்டு கப்பல்கள் மீது ஐ.ஆர்.ஜி.சி.யின் துப்பாக்கிப் படகுகள் தாக்குதல் நடத்தின என்று பிரித்தானிய கடல்சார் வர்த்தக செயல்பாடுகள் அமைப்பால் அறிவிக்கப்பட்டது. அவற்றில் ஒரு எண்ணெய்க் கப்பல், தானியங்கி ஆயுதத் தாக்குதலுக்கு உள்ளானது; மற்றைய கொள்கலன் கப்பல், 'அடையாளம் தெரியாத எறிகணை ஒன்றால்' தாக்கப்பட்டது. இரண்டு கப்பல்களிலும் இந்தியக் கொடி பறந்தது; புது தில்லியின் வெளியுறவு அமைச்சு ஞாயிற்றுக்கிழமை காலை இதுபற்றி கேள்வியெழுப்ப ஈரானின் தூதரை வரவழைத்தது.

பிரெஞ்சு கப்பல் நிறுவனமான சி.எம்.ஏ. சி.ஜி.எம். தனது நான்கு கப்பல்களை நீரிணையின் நுழைவாயிலிலிருந்து திருப்பி அனுப்பியது. மெர்ஸ்க் நிறுவனம் தனது கப்பல் போக்குவரத்தை முற்றிலுமாக நிறுத்தியது. பிரென்ட் கச்சா எண்ணெய் விலை சனிக்கிழமையன்று ஒரு பீப்பாய் 95 டாலராக உயர்ந்தது.

நான்காவது ஜெனீவா உடன்படிக்கையின் கீழ், பொதுபயன்பாட்டு மின் நிலையங்கள், பாலங்கள் மற்றும் நீர் அமைப்புகள் மீது குண்டு வீசுவது ஒரு போர்க்குற்றமாகும். ஞாயிற்றுக்கிழமை அரசியல் நிகழ்ச்சிகளில், சிரேஷ்ட நிர்வாக அதிகாரிகள் இத்தகைய குற்றச் செயல்களை வெளிப்படையாக நியாயப்படுத்தினர். ஐக்கிய நாடுகள் சபையின் அமெரிக்கத் தூதர் மைக் வால்ட்ஸ், சி.பி.எஸ்.இன் 'பேஸ் தி நேஷன்' நிகழ்ச்சியில் பேசும்போது, “ஐ.ஆர்.ஜி.சி.யால் இயக்கப்படும் பாலங்களும் மின் உற்பத்தி நிலையங்களும் தற்போது மட்டுமன்றி வரலாற்று ரீதியாகவும் முற்றிலும் சட்டப்பூர்வமான இராணுவ இலக்குகளாகும். இது ஏதோ ஒரு வகையான போர்க்குற்றம் என்பது ஒரு தவறான, போலியான மற்றும் அபத்தமான கருத்தாகும்,” என அறிவித்தார்.

என்.பி.சி.யின் 'மீட் தி பிரஸ்' நிகழ்ச்சியில், 90 மில்லியன் மக்கள் தண்ணீர், மின்சாரம் மற்றும் குளிரூட்டலுக்காகச் சார்ந்திருக்கும் ஈரானிய பொது பயன்பாட்டு மின் கட்டமைப்பை அழிப்பதற்கு, இரண்டாம் உலகப் போரின்போது நேச நாடுகள் ஜெர்மனி மீது நடத்திய குண்டுவீச்சை வால்ட்ஸ் ஒரு முன்னுதாரணமாகக் குறிப்பிட்டார். சி.பி.எஸ். இன் மார்கரெட் பிரென்னன் அல்லது ஏ.பி.சி.யின் ஜொனாதன் கார்லோவோ, ட்ரம்பின் அச்சுறுத்தல்களுக்கும் சர்வதேச மனிதாபிமானச் சட்டத்திற்கும் இடையே உள்ள தெளிவான முரண்பாடு குறித்து வால்ட்ஸிடம் வலியுறுத்தி கேட்கவில்லை.

சி.என்.என்.இன் 'ஸ்டேட் ஆஃப் தி யூனியன்' நிகழ்ச்சியில், பிரதிநிதிகள் சபையின் குடியரசுக் கட்சித் தலைமையின் தலைவரான எலிஸ் ஸ்டெஃபனிக்கிடம், ஒரு ஜனாதிபதி 'ஒரு முழு நாகரிகத்தையும் அழித்துவிடுவேன்' என்று அச்சுறுத்த வேண்டுமா என ஜேக் டாப்பர் கேட்டார். அந்தக் கேள்விக்கு நேரடியாகப் பதிலளிக்க மறுத்த அவர், ட்ரம்பின் மொழி 'ஈரானிய ஆட்சியை' குறிவைத்து கூறப்பட்டதே அன்றி, ஒட்டுமொத்த நாட்டையும் அல்ல எனக்கூறி அதை நியாயப்படுத்தினார்.

லெபனானில் வெள்ளிக்கிழமை நள்ளிரவில் ஏற்படுத்தப்பட்ட போர் நிறுத்தம், 48 மணி நேரத்திற்குள் மீறப்பட்டது. சனிக்கிழமை காலை, பின்ட் ஜ்பெயில் மாவட்டத்தின் கூனைன் என்ற இடத்தில் இஸ்ரேலிய ஆளில்லா விமானம் ஒன்று மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் ஒருவரைக் கொன்றது. காசாவில் பயன்படுத்தப்படும் ஆக்கிரமிப்பு கட்டத்தை மாதிரியாகக் கொண்டு, லெபனானின் தெற்கில் உள்ள 55 நகரங்களுக்குப் பயன்படுத்தப்பட்ட 'மஞ்சள் கோடு' கோட்பாட்டின் கீழ் இந்தத் தாக்குதலை இஸ்ரேலிய இராணுவம் நியாயப்படுத்தியது. அதே தினம் காலையில், காந்தூரியே அருகே, ஐ.நா. அமைதிப்படையில் பணியாற்றி வந்த 17வது பாராசூட் பொறியாளர் படைப்பிரிவின் பிரெஞ்சு அலுவலர் சார்ஜென்ட் ஃப்ளோரியன் மொன்டோரியோ கொல்லப்பட்டதோடு அவருடன் பணியாற்றிய மூன்று வீரர்கள் காயமடைந்தனர்.

லெபனான் அரசாங்கத்தின் புள்ளிவிவரங்கள் தற்போது (172 பிள்ளைகள் உட்பட) 2,167 பேர் கொல்லப்பட்டதாகவும், 7,061 பேர் காயமடைந்ததாகவும் காட்டுகின்ற. ஈரானில், அல் ஜசீராவின் உயிரிழப்பு கண்காணிப்புத் தரவுகளின்படி, (240 பெண்கள் மற்றும் 212 பிள்ளைகள் உட்பட) 2,076 பேர் இறந்துள்ளதுடன் 26,500 பேர் காயமடைந்துள்ளனர். சுயாதீன கண்காணிப்பு அமைப்பான HRANA மொத்த மரண எண்ணிக்கையை 3,636 எனக் குறிப்பிடுகிறது. போரில் 13 சிப்பாய்கள் உயிரிழந்ததை பென்டகன் உறுதி செய்துள்ளது. அமெரிக்காவில் ஒரு கேலன் பெட்ரோலின் சராசரி விலை தற்போது 4.09 டொலராக உள்ளது. இந்த ஆண்டு அதன் விலை 3 டொலருக்கு கீழே குறையாது என்று அமெரிக்க எரிசக்தித் துறை செயலாளர் கிறிஸ் ரைட் ஞாயிற்றுக்கிழமை சி.என்.என்.இல் தெரிவித்தார்.

ஜனநாயகக் கட்சி, ட்ரம்பின் போருக்கு ஒரு தீர்க்கமான தூணாக செயல்படுகிறது. ஞாயிற்றுக்கிழமை 'ஃபேஸ் தி நேஷன்' நிகழ்ச்சியில் அளித்த பேட்டியில், 2024 நவம்பரில் லெபனான் போர் நிறுத்தத்திற்கு மத்தியஸ்தம் செய்தவரும், பைடனின் சிரேஷ்ட எரிசக்தி ஆலோசகருமான அமோஸ் ஹோக்ஸ்டீன், ஒரு ஜனநாயகக் கட்சி நிர்வாகமும் ஈரான் மீது குண்டுவீசும் என்று கூறினார். முந்தைய நிர்வாகத்தின் அணுகுமுறை என்னவாக இருந்திருக்கும் என்று கேட்கப்பட்டபோது, ​​ஹோக்ஸ்டீன் கூறியதாவது: “2025 ஆம் ஆண்டின் வசந்த காலம், கோடை காலத்தில், இதே நிலையில் இருக்க வேண்டும் என்று நாங்கள் நினைத்தோம். நாங்கள் அவ்வாறே செய்தோம். போர் ஒத்திகைகளை நடத்தினோம். அதை எப்படி கையாள்வது என்பது குறித்து சில ஒத்திகைகளைச் செய்தோம், ஏனெனில் அது எங்கள் ஆட்சியின் கீழும் நடந்திருக்க வேண்டியிருந்திருக்கலாம்.”

ஹோக்ஸ்டீனின் இந்த ஒப்புதல், ஈரான் போருக்கான பழியை டிரம்ப் மீதோ அல்லது நெதன்யாகு மீதோ சுமத்த ஜனநாயகக் கட்சியினர் செய்யும் அனைத்து முயற்சிகளையும் அபத்தமாக்குகிறது. இந்தப் போர் என்பது அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் ஒரு கூட்டு, இருகட்சி கொள்கையாகும். இது இரு கட்சிகளாலும் தயாரிக்கப்பட்டு, தருணம் வரும்போது வெள்ளை மாளிகையில் யார் ஆட்சியில் இருந்தார்களோ அவர்களால் செயல்படுத்தப்பட்டது.

வியாழக்கிழமை, போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான போர் அதிகாரத் தீர்மானத்தின் மீது பிரதிநிதிகள் சபை வாக்கெடுப்பு நடத்தியது. அது 213-214 என்ற வாக்கு வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராக் போர்களில் பங்கேற்ற படையதிகாரியான மெய்ன் மாகாணத்தைச் சேர்ந்த ஜனநாயகக் கட்சி உறுப்பினர் ஜெராரெட் கோல்டன், இஸ்லாமாபாத் பேச்சுவார்த்தைகளில் போரைக் கட்டுப்படுத்துவது 'அமெரிக்காவின் நிலையை பலவீனப்படுத்தும்' என்று வாதிட்டு, ஜனநாயகக் கட்சியின் சார்பில் வாக்களித்த ஒரே நபர் ஆவார். செனட் சபையில், இதற்கு இணையான தீர்மானம் ஒன்று 47-52 என்ற வாக்கு வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இது தொடர்ச்சியாக நான்காவது தோல்வியாகும்.

அமெரிக்கப் போர்ச் செயலர் பீட் ஹெக்ஸெத்துக்கு எதிராக அரிசோனா ஜனநாயகக் கட்சிப் பிரதிநிதி யாசமின் அன்சாரி செவ்வாய்க்கிழமை தாக்கல் செய்த பதவி நீக்கத் தீர்மானக் குற்றச்சாட்டுகளுக்கு, பிரதிநிதிகள் சபையின் ஜனநாயகக் கட்சித் தலைமை உறுப்பினர்கள் யாரும் ஆதரவளிக்கவில்லை. இந்தத் தீர்மானங்கள், மினாபில் உள்ள ஒரு பெண்கள் பாடசாலையை அழித்து 160 க்கும் மேற்பட்ட சிறுவர்களைக் கொன்ற பெப்ரவரி 28 டோமஹாக் தாக்குதலை அடிப்படையாகக் கொண்டவை.

19 ஏப்ரல் 2026, ஞாயிற்றுக்கிழமை தொலைக்காட்சி நேர்காணல் நிகழ்ச்சிகள், பெரும் படுகொலைகளுக்கு குறிப்பிடத்தக்க எதிர்ப்பு இல்லாத ஒரு ஆளும் வர்க்கத்தின் சித்திரமாக உள்ளன. பதவியில் இருக்கும் ஜனாதிபதி, 90 மில்லியன் மக்கள் சார்ந்திருக்கும் பொது உள்கட்டமைப்பை அழித்துவிடுவதாக அச்சுறுத்துகிறார். ஐக்கிய நாடுகள் சபைக்கான அவரது தூதர், இரண்டாம் உலகப் போரில் டிரெஸ்டன் மீது நடத்தப்பட்ட குண்டுவீச்சை மேற்கோள் காட்டி அந்த அச்சுறுத்தலை நியாயப்படுத்துகிறார். முந்தைய நிர்வாகமும் இதே போன்ற தாக்குதல்களைப் போர் ஒத்திகை பார்த்ததாக, பைடனின் முன்னாள் மூத்த அதிகாரி ஒருவர் காணொளி வாயிலாக ஒப்புக்கொள்கிறார்.

ஈரான் மீதான போர் என்பது, ஈரான், லெபனான் மற்றும் பாலஸ்தீன மக்களுக்கு எதிராக, தங்களின் ஜெர்மானிய, பிரிட்டிஷ் மற்றும் பிரெஞ்சு கூட்டாளிகளின் ஆதரவுடன் செயல்படும் அமெரிக்க மூலதனத்தின் சார்பிலான இரு கட்சிகளின் கொள்கையாகும். பெருநிறுவன அமெரிக்காவால் முழுமையாகக் கட்டுப்படுத்தப்படும் தற்போதைய இரு கட்சி கட்டமைப்பின் மூலம், இந்தப் போருக்கு எதிரான போராட்டத்தை முன்னெடுக்க முடியாது. அதற்கு, நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் தலைமையில், சோசலிச அனைத்துலகவாத வேலைத்திட்டத்தின் அடிப்படையில், அமெரிக்க மற்றும் சர்வதேசத் தொழிலாள வர்க்கத்தை சுயாதீனமாக அணிதிரட்டுவது அவசியமாகும்.

Loading