இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.
உலக சோசலிச வலைத் தளமும் நான்காம் அகிலத்தின் சர்வதேசக் குழுவும் ஏற்பாடு செய்திருந்த 2026 மே தின இணையவழிப் பேரணியில், சோசலிச சமத்துவக் கட்சியின் (அமெரிக்கா) தேசியச் செயலாளர் ஜோசப் கிஷோர் இந்த உரையை ஆற்றினார்.
அமெரிக்க வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத சூழ்நிலைகளில் இந்த மே தினத்தில் நாம் சந்திக்கிறோம். அமெரிக்கா குற்றவாளிகள் கும்பலால் வழிநடத்தப்படுவதுடன் அரசியல் பாதாள உலக கும்பலே அதிகாரத்தில் உள்ளது. ஈரானுக்கு எதிரான ட்ரம்ப் ஆட்சியின் போர் ஒரு குற்றச் செயலாகும். 1945 மற்றும் 1946 ஆம் ஆண்டுகளில் நடந்த நியூரம்பெர்க் விசாரணைகளில் நிறுவப்பட்ட தரங்களின்படி, இது போர்க்குற்றங்களின் மிக உயர்ந்த வகையான, அமைதிக்கு எதிரான குற்றமாக இருப்பதோடு நாஜி ஜேர்மனியின் தலைவர்கள் இந்த குற்றத்திற்காகவே தண்டிக்கப்பட்டனர்.
மற்றும் இதே அரசாங்கம், அமெரிக்க மக்களின் ஜனநாயக உரிமைகளுக்கு எதிராக ஒரு குற்றச் சதியில் ஈடுபட்டுள்ளது.
அது நீதிமன்ற உத்தரவுகளை மீறி, நிர்வாகக் கிளை எந்தவொரு நீதித்துறை கட்டுப்பாட்டிற்கும் கட்டுப்பட்டதல்ல என்ற கொள்கையை வலியுறுத்தியுள்ளது. அது அமெரிக்க நகரங்களுக்கு எதிராக இராணுவத்தையும் குடிவரவு மற்றும் சுங்க அமலாக்கத் துறை (ICE) துணை இராணுவப் படைகளையும் களமிறக்கியுள்ளது. குறிப்பாக மினியாபொலிஸ் பிராந்தியத்தில் மிகக் கொடூரமாக நடந்துகொள்ளும் மத்திய அரசு முகவர்கள், ரெனி நிக்கோல் குட் மற்றும் அலெக்ஸ் பிரெட்டி ஆகியோரை ஈவிரக்கமின்றி கொலை செய்தனர். 2026 இடைக்காலத் தேர்தல்களை முன்னிட்டு இராணுவச் சட்டத்தை அமல்படுத்துவதாக அது அச்சுறுத்தியுள்ளது. 'உள்ளிருக்கும் எதிரி'யைக் கண்டித்ததோடு, அரசியல் கருத்து வேறுபாடுகளைக் குற்றமாக்கும் நோக்கில் குறிப்பாணைகளையும் அது வெளியிட்டுள்ளது. ஜனாதிபதியாக, ட்ரம்ப் தான் விரும்பியதை எல்லாம் செய்ய முடியும் என்று அது வலியுறுத்தியுள்ளது.
ICE கெஸ்டபோ (அரச இரகசிய படை) முகவர்களின் பெரும் சோதனைகளில் பல்லாயிரக்கணக்கானோர் பிடிக்கப்பட்டு, வதை முகாம் போன்ற சூழலில் அடைக்கப்பட்டுள்ளனர். பிள்ளைகள் தங்கள் பெற்றோரிடமிருந்து பிரிக்கப்பட்டுள்ளனர். டிரம்ப் ஆட்சி, குற்றப் பதிவு இல்லாத பலர் உட்பட, குடியேறிகளை எல் சால்வடாரில் உள்ள CECOT சித்திரவதைக் கூடங்களுக்கு நாடு கடத்தியுள்ளது. தகுதியுடன் குடியுரிமை பெற்ற அமெரிக்கர்களின் குடியுரிமையை ரத்து செய்ய நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளதுடன், பிறப்புரிமைக் குடியுரிமையையே நிர்வாக ஆணை மூலம் ஒழிக்க முடியும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளது.
ஈரான் மீது குண்டுகள் வீசப்பட்டுக் கொண்டிருக்கும் அதேவேளை, இந்த அரசாங்கம் அமெரிக்கத் தொழிலாள வர்க்கத்தின் மீது ஒரு போரை நடத்திக் கொண்டிருக்கிறது. பென்டகனுக்காக 1.5 டிரில்லியன் டொலர்களை ட்ரம்ப் கோரியுள்ளார், இது அமெரிக்க வரலாற்றிலேயே மிக உயர்ந்த இராணுவ நிதி ஒதுக்கீடாகும். கடந்த நூற்றாண்டில் அமெரிக்கத் தொழிலாள வர்க்கம் வென்றெடுத்த சுகாதார நன்மைகளான மெடிகெயர், மெடிகெய்ட், கல்வி, வீட்டுவசதி என ஒவ்வொரு சிறிய சமூக ஆதாயமும் அகற்றப்பட்டு போருக்காகச் செலவிடப்பட வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.
அதன் சமூகப் பண்புகளைப் பொறுத்தவரை, ட்ரம்ப் ஆட்சியானது ஜனநாயக ஆட்சி முறைகளுடன் பொருந்தாத, முன்னெப்போதும் இல்லாத அளவிலான சமூக ஏற்றத்தாழ்வுகளின் விளைவாக உருவாகியுள்ள தன்னலங்குழுவின் அரசாங்கமாகும்.
இந்த வேலைத் திட்டத்திற்கு மிகப்பெரிய வெகுஜன எதிர்ப்பு காணப்படுகின்றது. கடந்த மாதங்களில், அமெரிக்க வரலாற்றிலேயே மிகப்பெரிய போராட்டங்களை நாம் கண்டிருக்கிறோம். நகரங்களுக்கு நகரம், சிறு நகரங்கள் மற்றும் கிராமப்புறங்களிலும் கூட இலட்சக்கணக்கான மக்கள் வீதிகளில் இறங்கியுள்ளனர். கல்வியாளர்கள், சுகாதாரப் ஊழியர்கள், இறைச்சி பதப்படுத்தும் தொழிலாளர்கள் மற்றும் தொழிலாள வர்க்கத்தின் பிற பிரிவினரை உள்ளடக்கிய ஒரு வேலைநிறுத்த இயக்கம் வளர்ந்து வருகிறது. போராடுவதற்கான விருப்பம் அதிகரித்து வருகிறது.
இந்த எதிர்ப்பின் அளவு பெரிதாக இருந்தபோதிலும், 'எதிர்க்கட்சி' என்று அழைக்கப்படுபவை திவாலாகி, உடந்தையாக இருப்பதால் வெள்ளை மாளிகையில் உள்ள ஹிட்லரை நேசிக்கும் கும்பல் அதிகாரத்தில் நீடிக்கிறது.
ஜனநாயகக் கட்சியினர் என்ன செய்தார்கள் அல்லது செய்யவில்லை என்பதைக் கவனியுங்கள். ஜனவரி 6 ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சிக்குப் பிறகு, அதன் பின்னணியில் இருந்த சமூக மற்றும் அரசியல் சக்திகளை அவர்கள் மூடிமறைத்ததுடன் ரஷ்யாவுக்கு எதிரான போரில் குடியரசுக் கட்சியை ஒரு பங்காளியாக புணரமைக்க அவர்கள் செயற்பட்டனர். பைடன், நமக்கு ஒரு வலுவான குடியரசுக் கட்சி தேவை என்று அறிவித்த பின்னர், தனது நான்கு ஆண்டு பதவிக்காலத்தை போருக்காக அர்ப்பணித்தார். முதலில் ரஷ்யாவுக்கு எதிரான அமெரிக்க-நேட்டோ போரை கட்டவிழ்த்துவிட்டார், பின்னர் காசா இனப்படுகொலையைத் தொடங்கி வைத்தார்.
டிரம்ப் மீண்டும் பதவிக்கு வந்த பிறகு, ஜனநாயகக் கட்சியினர் 'ஒத்துழைப்பு' தருவதாக உறுதியளித்தனர். அவர்கள் அரசாங்கத்திற்கு நிதியளித்ததோடு, நிர்வாகம் அனைத்து அர்த்தமுள்ள சட்டக் கட்டுப்பாடுகளுக்கு புறம்பாக செயல்பட்டபோதும், தொடர்ந்து செயல்பட்டு வரும்போதும் கூட, அவரை பதவி நீக்குவதற்கு மறுத்தனர்.
“மன்னர்கள் வேண்டாம்” என்ற மாபெரும் ஆர்ப்பாட்டங்களில் அவர்களின் வகிபாகம் அம்பலமானது. இந்தப் போராட்டங்கள் சர்வாதிகாரத்திற்கு எதிரான ஆழ்ந்த பகைமையை வெளிப்படுத்திய போதிலும், அவை ஜனநாயகக் கட்சியாலும் அதன் துணை அமைப்புகளாலும், மையப் பிரச்சினையான போரை மூடிமறைக்கவே திட்டமிட்டு ஏற்பாடு செய்யப்பட்டன.
தங்களுக்கு ஒதுக்கப்பட்ட வகிபாகத்தை ஆற்றுவதற்காகப் பலர் முன்வந்துள்ளனர். ஈரான் மீதான குண்டுவீச்சுக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு—அதாவது இரண்டு நாட்களுக்கு முன்பு!—நியூயார்க் மேயரும், அமெரிக்காவின் ஜனநாயக சோசலிஸ்ட் அமைப்பின் உறுப்பினருமான சோஹ்ரான் மம்தானி, வெள்ளை மாளிகையில் டிரம்பைச் சந்தித்து, தனது “கட்டுப்படி திட்டநிரல்” என்று சொல்லப்படுவதில் அந்தப் பாசிச அதிபரை ஒரு கூட்டாளியாக ஆதரித்தார். என்னவொரு மோசடி. பெர்னி சாண்டர்ஸ், அலெக்ஸாண்டிரியா ஒகாசியோ-கார்டெஸ் மற்றும் அவர்களது கூட்டாளிகள், அரசின் நிறுவனங்கள் மற்றும் ஜனநாயகக் கட்சியின் ஊடாக ட்ரம்பையும் பாசிசத்தையும் எதிர்க்க முடியும் என்ற பொய்யைப் பரப்புகிறார்கள்.
தொழிற்சங்க அமைப்பைப் பொறுத்தவரை, அது ஒரு போராட்டக் கருவியாகச் செயல்படாமல், அடக்கிவைக்கும் ஒரு பொறிமுறையாகவே செயல்படுகிறது. மினியாபோலிஸில், கீழிருந்து எழுந்த பொது வேலைநிறுத்தத்திற்கான அழைப்பை அது ஒடுக்கியது. தேசிய அளவில், ஈரானில் குண்டுகள் வீசப்பட்டபோது AFL-CIO மற்றும் பிராதன தொழிற்சங்கங்களும் மௌனம் காத்துவிட்டு, பின்னர் தங்களின் வழக்கமான பல்லவியான “நவம்பரில் வாக்களியுங்கள்!” என்பதற்குத் திரும்பின. தொழிலாளர்களின் ஒவ்வொரு வேலைநிறுத்தத்தையும் முடக்கவும், தனிமைப்படுத்தவும் அல்லது ஒடுக்கவும் அவை திட்டமிட்டுச் செயல்பட்டுள்ளன. சீர்திருத்தவாதி என்று அழைக்கப்படும் ஷான் ஃபெய்னின் கீழ் உள்ள ஐக்கிய வாகனத் தொழிலாளர் சங்க அதிகாரத்துவம், “அமெரிக்கா முதலில்” என்ற வெற்று வார்த்தைகளை ஊக்குவித்து, போரிலிருந்து பிரிக்க முடியாத தேசியவாதக் கட்டமைப்பிற்குத் தன்னைத் தகவமைத்துக் கொண்டுள்ளது.
ட்ரம்பின் குற்றங்கள் அவருடையவை மட்டுமல்ல. அவை அவருக்கு நிதியளித்த பெரும் செல்வந்தர்களின் குற்றங்கள் ஆகும். அவை அவரைச் சட்டப்பூர்வமாக்கிய பெருநிறுவன ஊடகங்களின் குற்றங்கள் ஆகும். அவை, அவருக்குத் துணை நின்ற நிறுவனங்கள், காங்கிரஸ், நீதிமன்றங்கள், ஜனநாயகக் கட்சி ஆகியவற்றின் குற்றங்கள் ஆகும். ட்ரம்பின் குற்றங்கள் ஆளும் வர்க்கத்தின் குற்றங்கள் ஆகும். அவை முதலாளித்துவத்தின் குற்றங்கள் ஆகும்.
இதனாலேயே சர்வாதிகாரத்திற்கு எதிரான போராட்டம், முதலாளித்துவத்திற்கு எதிரான போராட்டத்திலிருந்து பிரிக்க முடியாததாக உள்ளது.
இந்த ஆண்டு, அழியாத ஆவணமாகிய சுதந்திரப் பிரகடனத்தின் 250வது ஆண்டு நிறைவைக் குறிக்கிறது. மன்னர் ஜார்ஜுக்கு எதிராகப் பட்டியலிடப்பட்ட குறைகள், இன்று அமெரிக்க ஜனாதிபதிக்கான ஒரு குற்றப் பட்டியல் போலத் தோன்றுகின்றன. ஆணை மூலம் ஆட்சி, நிரந்தரப் படைகள், உரிமைகளை மறுத்தல், பேச்சு சுதந்திரத்தின் மீதான தாக்குதல்கள், மக்களின் விருப்பத்தை மிதித்தல் ஆகியவை இதில் அடங்கும்.
ஆனால், அந்தப் புரட்சிகரப் பாரம்பரியத்தின் படிப்பினை, ஊழல் நிறைந்த ஆளும் வர்க்கத்திடம் நிதானத்தைக் கடைப்பிடிக்குமாறு கெஞ்சுவது அல்ல. ஒடுக்குமுறையானது எதிர்ப்பை உருவாக்குவதும், அடிப்படை அரசியல் பிரச்சினைகள் போராட்டத்தின் மூலமே தீர்க்கப்படுகின்றன என்பதும் உண்மை. அரசாங்கங்கள் மக்களின் உரிமைகளுக்கு அழிவுகரமானதாக மாறும்போது, “அதை மாற்றுவதோ அல்லது ஒழிப்பதோ மக்களின் உரிமையாகும்” என்று சுதந்திரப் பிரகடனம் கூறுகிறது.
எவ்வாறெனினும், இன்று முதலாளித்துவ அமைப்பை வைத்துக்கொண்டு ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்பது சாத்தியமில்லை. சோசலிச சமத்துவக் கட்சியானது, ஜனநாயகக் கட்சியிலிருந்து சுயாதீனமாகவும் தொழிற்சங்க எந்திரத்தை எதிர்த்தும், போர் மற்றும் சர்வாதிகாரத்திற்கு எதிராகத் தொழிலாள வர்க்கத்தின் ஒரு வெகுஜன இயக்கத்தைக் கட்டியெழுப்ப அழைப்பு விடுக்கிறது. இதன் பொருள், தொழிலாளர் நடவடிக்கை குழுக்களின் சர்வதேசக் கூட்டணியின் ஒரு பகுதியாக, வேலைத் தளங்களிலும் சுற்றுப்புறங்களிலும் நடவடிக்கைக் குழுக்களை உருவாக்குவதாகும். இவை, தொழில்துறைகள் மற்றும் தேசிய எல்லைகளைக் கடந்து தொழிலாளர்களை ஒருங்கிணைத்து, ஆட்குறைப்பு, அடக்குமுறை மற்றும் போருக்கும் எதிரான நடவடிக்கைகளை ஒருங்கிணைக்கின்ற ஜனநாயக கட்டுப்பாட்டுடன் இயங்கும் போராட்ட அமைப்புகளாகும்.
தொழிலாளர் வர்க்கம் ஒரு மாபெரும் உலகளாவிய சமூக சக்தியாகும். உற்பத்திச் செயல்முறையின் மூலமே அது சர்வதேச அளவில் இணைக்கப்பட்டுள்ளது. வரலாறு எழுப்பும் கேள்வி என்னவென்றால், இந்தப் புறநிலைச் சூழல்களும், இந்தப் புறநிலை வலிமையும், பெரும்பான்மையினரின் நலன்களுக்காகச் சமூகத்தை மறுசீரமைக்கும் ஒரு சர்வதேச இயக்கமாக நனவுப்பூர்வமாக உருமாற்றப்படுமா என்பதுதான். அதற்கு அரசியல் தலைமை தேவை. அதற்கு ஒரு கட்சி தேவை. அதற்கு மார்க்சியம் மற்றும் ட்ரொட்ஸ்கியத்தின் அடித்தளங்கள் மற்றும் மரபுகளின் அடிப்படையிலும், நான்காம் அகிலத்தின் வேலைத்திட்டத்தின் அடிப்படையிலும் ஒரு சோசலிச நனவை உருவாக்குவது அவசியமாகும்.
இதற்காகவே சோசலிச சமத்துவக் கட்சி போராடுகிறது. ஆபத்து பிரமாண்டமானதாக இருப்பது போலவே, தொழிலாள வர்க்கத்தின் சக்தியும் பிரமாண்டமானதாகும். அமெரிக்காவிலும் உலகெங்கிலும் ஒரு புரட்சிகர சோசலிச இயக்கத்தைக் கட்டியெழுப்புவன் மூலம், ஏகாதிபத்தியப் போர் மற்றும் காட்டுமிராண்டித்தனம், பாசிசம் மற்றும் சர்வாதிகாரம், தன்னலக் குழு ஆட்சி மற்றும் முதலாளித்துவத்துக்கும் எதிரான ஒரு நனவுப்பூர்வமான போராட்டமாக இந்த சக்தியை உருமாற்றுவதே நமது பணியாகும்.
இந்த மே தினத்தில், இந்தக் கூட்டத்திற்கு செவிமடுக்கும் ஒவ்வொரு தொழிலாளிக்கும், ஒவ்வொரு இளைஞருக்கும், ஒவ்வொரு மாணவருக்கும் அவசியமான முடிவை எடுப்பதோடு எங்களுடன் இணைந்து சோசலிச சமத்துவக் கட்சியை கட்டியெழுப்புங்கள் என நான் வேண்டுகோள் விடுக்கின்றேன்.
