இந்த மொழிபயெர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.
அமெரிக்காவும் ஈரானும் ஞாயிற்றுக்கிழமை ஒரு போர்நிறுத்த ஒப்பந்தத்தை அறிவித்தன் மூலம், பெப்ரவரி 28 அன்று ட்ரம்ப் நிர்வாகம் தொடங்கி வைத்து, ஆயிரக்கணக்கான மக்களின் உயிரைப் பறித்த ஒரு போர் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. 'இஸ்லாமிய குடியரசான ஈரானுடனான ஒப்பந்தம் இப்போது நிறைவடைந்துள்ளது,' என்று ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ட்ரூத் சோஷியல் தளத்தில் பதிவிட்டு, ஈரான் மீதான அமெரிக்க கடற்படை முற்றுகையை விலக்கிக் கொள்ளவும், ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறக்கவும் அவர் உத்தரவிட்டார். 'உலக நாடுகளின் கப்பல்களே, உங்கள் இயந்திரங்களை இயக்குங்கள். எண்ணெய் பாயட்டும்!' என்று அவர் எழுதினார்.
இந்த ஒப்பந்தத்தின் விதிமுறைகள் இன்னும் வெளியிடப்படவில்லை என்றாலும், ஒன்று மட்டும் ஏற்கனவே தெளிவாகத் தெரிகிறது: ட்ரம்ப் நிர்வாகம் எந்த நோக்கத்திற்காகப் போருக்குச் சென்றதோ, அதில் எதையுமே அது சாதிக்கவில்லை. ஈரான் அரசாங்கத்தைக் கவிழ்ப்பது, அதன் அணுசக்தி திட்டத்தை அழிப்பது, அதன் இராணுவத்தை தகர்ப்பது, ஹோர்முஸ் நீரிணையைக் கைப்பற்றுவது ஆகியவையே அதன் நோக்கங்களாக இருந்தன. ஆனால், இதில் எதையும் அது சாதிக்கவில்லை.
ஈரான் அரசாங்கத்தைக் கவிழ்க்க தான் ஒருபோதும் முயலவில்லை என்று கூறி ட்ரம்ப் இந்தத் தோல்விக்கு பதிலளித்தார். 'ஆட்சி மாற்றத்தைப் பொறுத்தவரை, நான் அதைப் பற்றி ஒருபோதும் கவலைப்படவில்லை,' என்று அவர் ஞாயிற்றுக்கிழமை வோல் ஸ்ட்ரீட் ஜேர்னலிடம் தெரிவித்தார்.
உண்மையில், அவரது நிர்வாகம் ஈரான் அரசாங்கத்தை வீழ்த்துவதற்காக அந்த ஆண்டு முழுவதும் உழைத்திருந்தது. ஆரம்பத்தில், அது ஈரானுக்குள் இருந்த போராட்டக்காரர்களுக்கு நிதியுதவியும் ஆயுதங்களும் வழங்கியது. 'நாங்கள் போராட்டக்காரர்களுக்கு துப்பாக்கிகளை அனுப்பினோம், அதுவும் நிறைய அனுப்பினோம்,' என்று ட்ரம்ப் ஏப்ரல் மாதத்தில் கூறியிருந்தார்.
இது தோல்வியடைந்தபோது, அமெரிக்காவும் இஸ்ரேலும் படுகொலை நடவடிக்கைகளில் இறங்கின. பெப்ரவரி 28 அன்று நடத்தப்பட்ட ஆரம்பக்கட்ட தாக்குதல்களில் ஈரானின் அதி உயர் தலைவர் அலி கொமேனி, புரட்சிகர காவல்படை தளபதி முகமது பக்பூர் மற்றும் பாதுகாப்பு அமைச்சர் அஜீஸ் நசீர்சாதே ஆகியோருடன் ராணுவத் தலைமையின் பெரும் பகுதியினரும் கொல்லப்பட்டனர். இருப்பினும், அரசாங்கம் சரிந்துவிடவில்லை. கொமேனியின் மகன் மொஜ்தபா அவருக்குப் பின் பொறுப்பேற்றார், மேலும் இளம் கொமேனியின் தேசிய பாதுகாப்பு பேரவைதான் ஞாயிற்றுக்கிழமை ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் அளித்தது.
ஈரான் சுகாதார அமைச்சின் கணக்கீட்டின்படி, ஈரான் முழுவதும் நடத்தப்பட்ட குண்டுவீச்சு தாக்குதல்களில் குறைந்த பட்சம் 3,468 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன், ஏப்ரல் 13 அன்று ஒரு கடற்படை முற்றுகையும் விதிக்கப்பட்டது. அமெரிக்க போர் விமானங்கள் சிரிக் பகுதியில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்களுக்கு குடிநீர் வழங்கிய நீர் தேக்கங்களை அழித்ததோடு இந்த முற்றுகையை மீறிச் சென்ற எண்ணெய் விநியோகக் கப்பல்கள் மீதும் தாக்குதல் நடத்தியதுடன் இந்த வாரத்தில் செட்டபெல்லோ கப்பல் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் மூன்று இந்திய மாலுமிகள் கொல்லப்பட்டனர். இரண்டு மாதங்களுக்குப் பிறகும், இந்த முற்றுகையால் ஈரானைப் பணிய வைக்க முடியாமல் போனதோடு தெஹ்ரானின் உத்தரவின்படி ஞாயிற்றுக்கிழமை வரை ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்டே இருந்தது.
அமெரிக்க ஏகாதிபத்தியத்துடன் ஏற்படுத்திக்கொள்ளப்படும் எந்தவொரு ஒப்பந்தமும், அது எழுதப்பட்ட காகிதத்தின் அளவிற்குக்கூடப் பெறுமதியற்றது. 2015 ஆம் ஆண்டில், ஒபாமா நிர்வாகமானது கூட்டு விரிவான செயல் திட்டம் (JCPOA) என்று அழைக்கப்படும் அணுசக்தி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. இதன் கீழ், ஈரான் தனது அணுசக்தி செறிவூட்டலுக்கு கடுமையான கட்டுப்பாடுகளையும், ஊடுருவிச் சோதிக்கும் ஆய்வுகளையும் ஏற்றுக்கொண்டது. சர்வதேச அணுசக்தி முகமை (IAEA) தனது ஒவ்வொரு அறிக்கையிலும் உறுதிப்படுத்தியவாறு, ஈரான் தனது ஒப்பந்த விதிமுறைகளைக் கடைப்பிடித்திருந்த போதிலும், 2018 மே மாதம் ட்ரம்ப் இந்த ஒப்பந்தத்தை 'ஒரு மோசமான, ஒருதலைப்பட்சமான ஒப்பந்தம்' என்று கூறி கிழித்தெறிந்தார். இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட ஒபாமா, 'இப்போது உருவாகும் எந்தவொரு ஒப்பந்தமும், நாம் (அமெரிக்கா) அதிலிருந்து விலகுவதற்கு முன்பு... முதலில் நம்மிடம் இருந்த ஒப்பந்தத்தை விட கணிசமான அளவு வேறுபட்டதாகவோ அல்லது குறிப்பிடத்தக்க முன்னேற்றமானதாகவோ இருக்குமா என்பது சந்தேகமே' என்று ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.
இதே போன்றதொரு போக்கு கடந்த ஆண்டும் மீண்டும் நிகழ்ந்தது. இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையிலான பன்னிரண்டு நாள் போரை முடிவுக்குக் கொண்டுவர, 2025 ஜூனில் ட்ரம்ப் ஒரு 'முழுமையான போர்நிறுத்தத்தை' அறிவித்தார். அந்தப் போர்நிறுத்தம் பெப்ரவரி 28 வரை நீடித்த போதிலும், அமெரிக்காவும் இஸ்ரேலும் அதை மீறி, இப்போது தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ள இந்தப் போரைத் தொடங்கின.
ஞாயிற்றுக்கிழமை சமாதானத்தை அறிவித்த போதிலும், ட்ரம்ப் மீண்டும் போரைத் தொடங்குவதாக அச்சுறுத்தினார். ஈரான் இறுதி அணுசக்தி ஒப்பந்தத்தை எட்டத் தவறினால், தான் 'தெஹ்ரான் மீதான ராணுவத் தாக்குதல்களை மீண்டும் தொடங்குவேன்' என்று ஒரு தொலைபேசி அழைப்பில் அவர் கூறியதாக தி நியூ யோர்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. அல்லது, பிராந்தியத்தின் வருவாயில் 20 சதவீதத்திற்குப் பகரமாக அமெரிக்காவை 'மத்திய கிழக்கின் பாதுகாவலனாக' மாற்றுவேன் என்றும் அவர் கூறியுள்ளார்.
இந்த ஒப்பந்தம் ஒரு 60 நாள் போர்நிறுத்தமாகும். இதில் வெள்ளிக்கிழமை ஜெனிவாவில் அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ் மற்றும் ஈரான் அதிகாரிகளும் கையெழுத்திட உள்ளனர். ஈரானின் அணுசக்தி திட்டத்தின் எதிர்காலமும் அமெரிக்கத் தடைகளை நீக்குவதும் இந்த 60 நாள் பேச்சுவார்த்தைகளுக்கு உட்பட்டவையாக இருப்பதுடன் இதன் உத்தியோகப்பூர்வ எழுத்துப்படிவம் இன்னும் வெளியிடப்படவில்லை.
போரைப் பற்றிய ட்ரம்பின் விளக்கங்களைப் போலவே, இந்த ஒப்பந்தத்தைப் பற்றிய அவரது கூற்றுக்களும் வெற்றுத்தனமானவையாகவே இருந்தன. ஹோர்முஸ் நீரிணை 'நிரந்தரமாக சுங்கக்கட்டணம் இல்லாததாக' இருக்கும் என்று அவர் பெருமையாகக் கூறிய போதிலும், இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் வெறும் 60 நாட்களுக்கு மட்டுமே சுங்கக்கட்டணங்களை நிறுத்தி வைக்கிறது. போருக்கு முன்பு ஈரான் எந்த சுங்கக்கட்டணமும் வசூலிக்கவில்லை—இந்த ஒப்பந்தம் போருக்கு முந்தைய நிலையையே மீண்டும் கொண்டுவருகிறது. ஈரானின் அணுசக்திப் பொருட்கள் மீதான ஆய்வு குறித்து ட்ரம்ப் கூறுகையில், பொறுத்திருந்து செய்யலாம் என்றார்: 'அந்த அணுசக்தி துகள்களைப் பற்றி நாங்கள் உள்ளே சென்று ஆய்வு செய்யத் தயாராக இருக்கும்போது பார்த்துக்கொள்ளலாம்... இதில் எந்த அவசரமும் இல்லை.'
இந்த ஒப்பந்தம் இஸ்ரேல் இதற்கு இணையாக நடத்திய போரில் 3,700க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ள லெபனானையும் பெயரளவில் உள்ளடக்கியுள்ளது. இந்த ஒப்பந்த அறிவிப்புக்கு சில மணி நேரங்களுக்கு முன்பு, இஸ்ரேல் பெய்ரூட்டின் தெற்கு புறநகர்ப் பகுதியில் குண்டுவீசி மூன்று பேரைக் கொன்றமை, ஒப்பந்தத்தையே கிட்டத்தட்ட முறியடிக்கும் நிலைக்குக் கொண்டுசென்றது. இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு 'விவேகமின்றி' செயல்பட்டதாகக் கூறிய ட்ரம்ப், அனைத்து தரப்பினரையும் 'பின்வாங்குமாறு' கூறினார். இந்தப் பேச்சுவார்த்தைகளில் ஒரு தரப்பாக இல்லாத இஸ்ரேல், இந்த ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் அளிக்காததோடு இஸ்ரேலின் அனைத்து அரசியல் கட்சிகளைச் சேர்ந்த அரசியல்வாதிகளும் இதனைக் கண்டித்துள்ளனர்.
ஈரானுடனான ஒப்பந்தத்தை நோக்கிய ட்ரம்பின் நகர்வுகளுக்கு ஜனநாயகக் கட்சியினரின் பிரதிபலிப்பு, அவர் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் நலன்களைப் பாதுகாக்கத் தவறிவிட்டார் என்ற குற்றச்சாட்டையே மையமாகக் கொண்டிருந்தது. மாசசூசெட்ஸ் மாநிலத்தின் ஜனநாயகக் கட்சி பிரதிநிதி செத் மோல்டன், 'அடிப்படையில் டொனால்ட் ட்ரம்ப்பினால் ஈரானின் அதி உயர் தலைவரிடம் சமர்ப்பிக்கப்பட்ட ஒரு சரணாகதி ஆவணம்' என்று இந்த ஒப்பந்தத்தின் விதிமுறைகளை வகைப்படுத்தினார்.
என்பிசி ஊடகத்தின் மீட் தி பிரஸ் நிகழ்ச்சியில், இந்தப் போரினால் அமெரிக்காவின் நிலைமை மோசமடைந்துள்ளது என்று புலம்பிய சபையின் சிறுபான்மைத் தலைவர் ஹக்கீம் ஜெப்ரீஸ், 'நிலைமை நமக்குச் சாதகமாக இல்லை. மோசமாகியுள்ளது. உண்மையில், ஈரான் இப்போது இன்னும் வலிமையாக உள்ளது' என்றார்.
இங்கு ஒரு எச்சரிக்கை விடுக்கப்பட வேண்டும். கடந்த நான்கு மாதங்களில் ஏற்பட்ட தோல்விகளும் பின்னடைவுகளும் எத்தகையவையாக இருந்தாலும், அமெரிக்க ஏகாதிபத்தியம் மத்திய கிழக்கையும் உலகையும் இராணுவ பலத்தால் தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருவதற்கான தனது முயற்சிகளை மேலும் தீவிரப்படுத்தவே செய்யும்.
