கிளிநொச்சியைச் சேர்ந்த, 'ஹிப்ஹொப் சங்கி' (Hiphop Sangee) என்ற பெயரில் பரவலாக அறியப்படும் சொல்லிசைப் பாடகர் சங்கீத்சன் கணேஷ்குமார், இலங்கையின் கொடூரமான பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் யாழ்ப்பாணக் குற்றத் தடுப்புப் பிரிவினரால் ஜூன் 2 அன்று கைது செய்யப்பட்டார். அவர் ஜூன் 12 அன்று சாவகச்சேரி நீதவான் நீதிமன்றத்தால் நிபந்தனைகளுடனான பிணையில் விடுவிக்கப்பட்டார்.
சட்டமா அதிபரின் ஆலோசனையின் பேரில், பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் வழக்குத் தொடராமல் இருக்க முடிவெடுத்த பொலிஸ், அதற்குப் பதிலாக, இலங்கையின் குற்றவியல் சட்டத்தின் 120வது பிரிவின் கீழ் அவருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யும் நடவடிக்கைகளை அது மேற்கொண்டு வருகிறது.
ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக தலைமையிலான அரசாங்கம், இலங்கை முழுவதும் எழுந்த எதிர்ப்புகளையும், பல ஐரோப்பிய நாடுகளில் வாழும் தமிழ்ப் புலம்பெயர் சமூகங்களின் போராட்டங்களையும் எதிர்கொண்ட நிலையில், பின்வாங்கத் தள்ளப்பட்டது.
சங்கீத்சன், பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பைப் புகழ்ந்துரைக்கும் சொல்லிசைப் பாடல்களை எழுதி, பாடி, பரப்பியதாகக் கூறப்பட்ட குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டார். அவர் தனது பாடல்களைத் தானே எழுதி, இசையமைத்து, பாடி, டிக்டொக், இன்ஸ்டாகிரம் உட்பட சமூக ஊடகத் தளங்களில் வெளியிட்டு வருகிறார்.
இந்தக் கைது, கருத்துச் சுதந்திரம் மற்றும் கலைச் சுதந்திரத்தின் மீது மக்கள் விடுதலை முன்னணி / தேசிய மக்கள் சக்தி (ஜே.வி.பி./தே.ம.ச.) அரசாங்கம் மேற்கொண்டு வரும் பரந்தளவிலான தாக்குதலின் ஒரு பகுதியாகப் பரவலாகக் கண்டனம் செய்யப்பட்டது. இலங்கை முழுவதும் தமிழ் மற்றும் சிங்கள தொழிலாளர்கள், இளைஞர்கள், புத்திஜீவிகள் மற்றும் அரசியல் அமைப்புகள் மத்தியில் எதிர்ப்புப் போராட்டங்கள் வெடித்தன.
சோசலிச சமத்துவக் கட்சியும் (சோ.ச.க.), உலக சோசலிச வலைத் தளமும் (WSWS), இந்தக் கைதைக் கண்டனம் செய்ததோடு, சங்கீத்சனை உடனடியாகவும் நிபந்தனையின்றியும் விடுதலை செய்யுமாறு கோரின.
வடக்கு மற்றும் கிழக்கில் இந்தக் கைதுக்கும் பயங்கரவாத தடைச் சட்டத்துக்கும் எதிராக அதிகரித்து வந்த எதிர்ப்பு, அந்தப் பிராந்தியங்களில் ஜே.வி.பி./தே.ம.ச. அரசாங்கத்திற்கான ஆதரவைப் பாதிக்கக்கூடும் என்ற கவலையும் ஆளும் வட்டாரங்களுக்குள் நிலவியது.
இந்தச் சூழ்நிலைகளின் கீழ், அதிகாரிகள் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் வழக்கைத் தொடர்வதைத் தவிர்த்து, சட்டமா அதிபரின் ஆலோசனையின் பேரில் குற்றவியல் சட்டத்தின் 120வது பிரிவின் கீழ் நடவடிக்கைகளை முன்னெடுத்தனர். சங்கீத்சன் மூன்று நிபந்தனைகளின் அடிப்படையில் பிணையில் விடுவிக்கப்பட்டார். பிணை நிற்போர் கிளிநொச்சி மேல் நீதிமன்றத்தின் அதிகார வரம்பிற்குள் வசிப்பவர்களாக இருக்க வேண்டும்; தலா 100,000 ரூபாய் (சுமார் 312 அமெரிக்க டொலர்) படி இரண்டு சரீரப் பிணைகள் வைக்கப்பட வேண்டும்; அவர்களில் ஒருவர் அவரின் நெருங்கிய உறவினராக இருக்க வேண்டும்.
ஜே.வி.பி./தே.ம.ச. அரசாங்கத்தின் சில அரசியல்வாதிகளும் ஊடகங்களின் சில பிரிவுகளும் கூறியதற்கு மாறாக, சங்கீத்சன் அனைத்து குற்றச்சாட்டுகளிலிருந்தும் முழுமையாக விடுவிக்கப்படவில்லை. குற்றவியல் சட்டத்தின் 120வது பிரிவின் கீழ் அவர் குற்றவாளியாக நிரூபிக்கப்பட்டால், இரண்டு ஆண்டுகள் வரை அவருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்.
'வெறுப்புணர்வைத் தூண்டுதல் அல்லது தூண்ட முயற்சித்தல்' என்ற தலைப்பின் கீழுள்ள குற்றவியல் சட்டத்தின் 120வது பிரிவு, “வாய்மொழியாகப் பேசப்பட்ட அல்லது வாசிக்கப்பட வேண்டும் என்ற நோக்கத்துடன் எழுதப்பட்ட சொற்களாலோ, அல்லது அடையாளங்களாலோ, கண்ணுக்குப் புலப்படும் காட்சிப்படுத்தல்களாலோ, அல்லது வேறு வழியிலோ ஜனாதிபதி அல்லது இலங்கை அரசாங்கத்தின் மீது அதிருப்தி அல்லது எதிர்ப்புணர்வைத் தூண்டினாலோ அல்லது தூண்ட முயற்சித்தாலோ, அல்லது நீதி நிர்வாகத்தின் மீது வெறுப்பு அல்லது அவமதிப்பை ஏற்படுத்தினாலோ அல்லது ஏற்படுத்த முயற்சித்தாலோ, அல்லது மக்களிடையே அதிருப்தி அல்லது எதிர்ப்புணர்வை உருவாக்கினாலோ, அல்லது மக்களின் பல்வேறு பிரிவுகளுக்கிடையில் பகைமை அல்லது ஒற்றுமையின்மையைத் தூண்டினாலோ அல்லது தூண்ட முயற்சித்தாலோ, அவர் இரண்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனைக்கு உட்படுத்தப்படுவார்,” எனக் கூறுகிறது.
சங்கீத்சன் சார்பில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம். ஏ. சுமந்திரன் உட்பட பல வழக்கறிஞர்கள் ஆஜரான போதிலும், அவர் பிணையில் விடுவிக்கப்பட்டபோது, ஜே.வி.பி./தே.ம.ச. உடன் தொடர்புடைய வழக்கறிஞர்களான கைலைநாதன் சுபாகர் மற்றும் தர்மகுலசிங்கம் அஞ்சனனும் அங்கு இருந்தனர். சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்ட காணொளி ஒன்றில், தே.ம.ச. யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கே. இளங்குமரனுடன் சங்கீத்சன் சிறையிலிருந்து வெளியேறுவது காட்டப்பட்டது. இளங்குமரன் அப்போது ஊடகவியலாளர்களிடமும் கருத்துத் தெரிவித்தார்.
“வழக்கறிஞர்கள் பாடகர்களைப் பயன்படுத்தி அரசியல் செய்கிறார்கள். இன்று அவர்கள் சமூக ஊடக வழக்கறிஞர்களாக மாறிவிட்டார்கள்,” என்று இளங்குமரன் கூறினார்.
ஜே.வி.பி./தே.ம.ச., சங்கீத்சனின் பாதுகாவலராகவும் கருத்துச் சுதந்திரத்தின் ஆதரவாளராகவும் தன்னைக் காட்டிக்கொள்ள பாசாங்குத்தனமாக முயன்றது. ஆனால், அந்த சொல்லிசைப் பாடகர் முதலில் ஏன் கொடூரமான பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டார் என்பது குறித்து இளங்குமரன் எதுவும் கூறவில்லை.
மற்றொரு தே.ம.ச. பாராளுமன்ற உறுப்பினரான ராஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி, சங்கீத்சனின் இல்லத்தில் வைத்து ஊடகங்களிடம் பேசுகையில், “அவரைக் கைது செய்ததில் ஏதோ தவறு நடந்திருக்க வேண்டும். அவர் ஒரு கலைஞர். அவர் கலைஞராக வாழட்டும். இந்த இளைஞர் எந்தத் தவறும் செய்யவில்லை,” என்று கூறினார்.
இந்தக் கருத்துக்கள், கைதுக்கு எதிராகவும் பயங்கரவாத தடைச் சட்டம் தொடர்ந்து நடைமுறையில் இருப்பதற்கு எதிராகவும் அதிகரித்து வரும் வெகஜன எதிர்ப்பைக் கட்டுப்படுத்தும் நோக்கில் முன்னெடுக்கப்பட்ட வெளிப்படையான சேதக் கட்டுப்பாட்டு முயற்சியாகும்.
அதேவேளையில், “இன, மத மற்றும் சமூக நல்லிணக்கச் சூழலில்” அரசாங்கம் செயற்படுவதாகக் கூறிய ஜெயச்சந்திரமூர்த்தி, அந்தப் பெறுமதிகளைப் பாடகர் ஊக்குவிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். நடைமுறையில், அரசாங்கத்தின் அரசியல் நிலைப்பாட்டுடன் தங்களை இணைத்துக்கொள்ளும் வரையில் மட்டுமே கலைஞர்கள் சகித்துக்கொள்ளப்படுவார்கள் என்ற எச்சரிக்கையையே அவர் சங்கீத்சனுக்கு விடுத்தார்.
அரசாங்கம் “இன, மத மற்றும் சமூக நல்லுறவையும்” “நல்லிணக்கத்தையும்” முன்னேற்றுவதாகக் கூறுவது முற்றிலும் பொய்யாகும். பல தசாப்தங்களாக, இலங்கையின் சிங்கள பேரினவாத ஆளும் வர்க்கம் —குறிப்பாக ஜே.வி.பி. வெற்று வாரத்தை ஜாலங்களை முன்வைத்தபடியே, சிங்கள இனவாதத்தையும் ஒற்றையாட்சி அரசையும் பாதுகாத்து வந்துள்ளது. அவர்களது கருத்துப்படி, தேசிய “நல்லிணக்கம்” என்பது ஒற்றையாட்சி அரசைப் பாதுகாப்பதையே குறிக்கிறது.
1956 ஆம் ஆண்டில் சிங்களத்தை ஒரே உத்தியோகபூர்வ மொழியாக நிறுவியதுடன், 1972 அரசியலமைப்பின் மூலம் பௌத்த மதத்திற்கு “முதன்மையான இடத்தை” வழங்கிய இலங்கையின் ஜனநாயக விரோத ஒற்றையாட்சி அரசியலமைப்புக் கட்டமைப்பை அவர்கள் அனைவரும் பாதுகாத்து வருகின்றனர்.
ஜே.வி.பி. இந்தப் பிற்போக்கு அரசியலமைப்புக் கட்டமைப்பைத் தொடர்ந்து பாதுகாத்து வருவதுடன், பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான இனவாதப் போருக்கும் ஆதரவளித்தது. 2024 ஜனாதிபதித் தேர்தலுக்கு ஐந்து நாட்களுக்கு முன்னர், அனுரகுமார திசாநாயக, விஜித ஹேரத்தை அகில இலங்கை பௌத்த சம்மேளனத்துக்கு அனுப்பி, தே.ம.ச. அரசாங்கம் ஒற்றையாட்சி அரசைப் பாதுகாப்பதோடு, பௌத்த மதத்திற்கும் முன்னுரிமை அளிக்கும் என்று அதன் தலைவர்களுக்கு உறுதியளித்தார்.
விடுதலையான பின்னர் உலக சோசலிச வலைத் தளத்திடம் (WSWS) பேசிய சங்கீத்சன் கூறியதாவது:
“நான் உள்ளே இருந்தேன். வெளியே என்ன நடந்தது என்பது எனக்குத் தெரியாது. என்னை விடுதலை செய்ய பலர் போராடியதை இப்போதுதான் அறிந்துகொண்டேன். அனைவருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.”
ஜனநாயக உரிமைகள் மீதான இந்தத் தாக்குதலுக்கு எதிராக உலக சோசலிச வலைத் தளம் தொடர்ச்சியான பிரச்சாரத்தை முன்னெடுத்து வருவதோடு இலங்கை முழுவதும் எழுத்தாளர்கள், திரைப்பட இயக்குநர்கள், கேலிச்சித்திரக் கலைஞர்கள் மற்றும் பிற புத்திஜீவிகளைத் தொடர்புகொண்டு, அறிக்கைகளை வெளியிடுவதோடு சங்கீத்சன், எழுத்தாளர் தீபச்செல்வன் மற்றும் ஊடகவியலாளர் கணபதிப்பிள்ளை குமணன் உட்பட கலைஞர்களின் கருத்துச் சுதந்திரத்தையும் ஜனநாயக உரிமைகளையும் பாதுகாக்கின்றது.
இனவாத அடிப்படையில் முன்னெடுக்கப்பட்ட சங்கீத்சனின் கருத்துச் சுதந்திரத்தின் மீதான தாக்குதல், திசாநாயக அரசாங்கம் எதேச்சாதிகார ஆட்சி முறைகளை நோக்கி வேகமாகத் திரும்பிவருவதன் ஒரு பகுதியாகும். ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல்கள், சர்வதேச நாணய நிதியத்தின் சிக்கனக் கொள்கைகளுக்கும் அமெரிக்கா-இஸ்ரேல் ஈரானுக்கு எதிராக முன்னெடுத்துள்ள போரால் மேலும் தீவிரமடைந்துள்ள பொருளாதார நெருக்கடிக்கு எதிராக தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் எதிர்ப்பு அதிகரித்து வரும் நிலையில், அரசியல் எதிர்ப்பை ஒடுக்குவதற்காக அரசாங்கம் மேலும் மேலும் அடக்குமுறையை நாடுகின்றது.
மேலும் படிக்க
- இலங்கை பொலிஸ் கொடூரமான பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தமிழ் சொல்லிசைக் கலைஞரை கைது செய்துள்ளது
- இலங்கையின் ஜே.வி.பி. அரசாங்கம் இனவாத தமிழர்-விரோத போரில் “வெற்றி” பெற்ற 17வது ஆண்டு நிறைவை நினைவுகூர்ந்தது
- இலங்கையில் அதிகரித்து வரும் நெருக்கடிக்கு மத்தியில் ஜே.வி.பி./தே.ம.ச. அரசாங்கம் தொழிலாளர்கள் மீது மேலும் தாக்குதல்களைத் தொடுக்கத் தயாராகின்றது
