இலங்கையில் சிறைக் கலவரங்களுக்குப் பின்னர் கைதிகள் சித்திரவதையை எதிர்கொள்கின்றனர்

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.

இலங்கையின் கடலோர நகரமான நீர்கொழும்பில் ஜூலை 5–6 அன்று இடம்பெற்ற உயிரிழப்புகள் பலவற்றை ஏற்படுத்திய சிறைச்சாலை வன்முறையைத் தொடர்ந்து, அந்தக் கலவரத்தைத் தூண்டியதாக குற்றஞ்சாட்டப்பட்ட கைதிகள் சித்திரவதைக்கு உட்படுத்தப்படுகின்றனர் என்ற தகவல்கள் வெளிவருகின்றன.

உத்தியோகப்பூர்வ விளக்கத்தின்படி, சிறைச்சாலைக்குள் இயங்கியதாகக் கூறப்படும் போதைப்பொருள் கடத்தல் வலையமைப்பு அம்பலமானதைத் தொடர்ந்து வன்முறை வெடித்தது. கைதிகள் சிறை அதிகாரிகளைத் தாக்கி, ஆயுதங்களைக் கைப்பற்றி, தப்பிச் செல்ல முயன்ற பின்னரே அதிகாரிகள் தேவையான குறைந்தபட்ச பலத்தை மட்டுமே பயன்படுத்தியதாகவும் கூறப்படுகிறது.

2026 ஜூலை 10 அன்று நீதியமைச்சின் முன்பாக சிறைக்கைதிகளின் பாதுகாப்பு மற்றும் உரிமைகளுக்கான கூட்டமைப்பு நடத்திய ஆர்ப்பாட்டம்.

முதலில் உறுதிப்படுத்தப்பட்ட 27 உயிரிழப்புகளில், 20 பேர் கைதிகளும், ஏழு பேர் சிறை பொலிஸ் அதிகாரிகளும் ஆவர். மேலும், இரண்டு நாட்கள் நீடித்த மோதல்களில் 54 கைதிகளும் 23 அதிகாரிகளும் காயமடைந்தனர்.

வேறு சிறைச்சாலைகளுக்கு மாற்றப்பட்ட இரண்டு கைதிகள் ஜூலை 8 அன்றுவிளக்கமளிக்கப்படாத சூழ்நிலைகளில் உயிரிழந்தனர். அவர்களில் ஒருவர் பூஸ்ஸ உயர் பாதுகாப்புச் சிறைச்சாலைக்கும் மற்றொருவர் அங்குணுகொலபெலஸ்ஸ சிறைச்சாலைக்கும் மாற்றப்பட்டிருந்தனர். காயமடைந்திருந்த ஒரு சிறை அதிகாரி ஜூலை 9 அன்று உயிரிழந்ததால், மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 30 ஆக உயர்ந்தது.

மரணகரமான சிறைக் கலவரங்களுக்குப் பின்னர் உடனடியாக, நீர்கொழும்பு சிறைச்சாலை குற்றப்புலனாய்வு நடைபெறும் இடமாக அறிவிக்கப்பட்டது. இராணுவ பாதுகாப்பின் கீழ் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கைதிகள் நீர்கொழும்பிலிருந்து அங்குணுகொலபெலஸ்ஸ, போகம்பர, அனுராதபுரம், பொலன்னறுவை மற்றும் குருவிட்ட ஆகிய ஐந்து சிறைச்சாலைகளுக்கு மாற்றப்பட்டனர். ஒழுங்கை மீள நிலைநாட்டுவதற்காகவே இந்த மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டதாக நீதியமைச்சரும் சிறை அதிகாரிகளும் தெரிவித்தனர்.

இந்த மாற்றங்களை மேற்கொண்டபோது, தங்களது உறவினர்களைப் பற்றிய தகவல்களை அறிய நீர்கொழும்பு சிறைச்சாலைக்கு வெளியே திரண்டிருந்த குடும்பத்தினரின் வேதனையை சிறை அதிகாரிகள் முற்றிலும் புறக்கணித்தனர். பல மணி நேரமாக எந்தத் தகவலும் இன்றி தவித்த குடும்பத்தினரின் அவசர வேண்டுகோள்களுக்குப் பின்னரே, காயமடைந்த கைதிகள் தொடர்பான தகவல்களை நீர்கொழும்பு மருத்துவமனை வெளியிட்டது. இடம் மாற்றப்பட்ட கைதிகளின் உறவினர்கள், அவர்களது அன்புக்குரியவர்கள் எங்கு வைக்கப்பட்டுள்ளனர், அவர்கள் எந்த நிலையில் உள்ளனர் என்பதை தெரிவிக்குமாறு சிறை அதிகாரிகளிடம் கெஞ்சும் காட்சிகளை தொலைக்காட்சி ஒளிபரப்புகள் காட்டியுள்ளன. ஆனால், ஒவ்வொரு கைதியின் இருப்பிடத்தையும் உடல்நிலையையும் பற்றிய தெளிவான தகவலை வழங்க சிறை அதிகாரிகள் தொடர்ந்து மறுத்து வருகின்றனர்.

இலங்கையின் சிறைச்சாலை அமைப்பு மனிதாபிமானமற்ற நடத்தைக்கும் கைதிகள் மீது மேற்கொள்ளப்படும் கொடூரமான சித்திரவதைகளுக்கும் பேர்போனது என்ற காரணத்தால், இந்த நிலைமை நியாயமான அச்சங்களை எழுப்பியுள்ளது. ஜூலை 7 அன்று, சிறைக்கைதிகளின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான குழு (CPRP), நீர்கொழும்பு சிறைச்சாலையிலிருந்து மாற்றப்பட்ட கைதிகள் அவர்கள் அனுப்பப்பட்டுள்ள சிறைகளில் சித்திரவதைக்கு உட்படுத்தப்படுவதாகக் குற்றஞ்சாட்டியது. கலவரத்திற்குத் தலைமை தாங்கியதாக குற்றஞ்சாட்டப்பட்ட லசந்த பிரதீப் குமார உட்பட ஐந்து கைதிகள் இரகசிய தனிமைச் சிறையில் வைக்கப்பட்டுள்ளதாகவும், இது “அவர்களின் உயிருக்கு கடுமையான அச்சுறுத்தலை ஏற்படுத்துவதோடு, சித்திரவதைக்குள்ளாகும் மிக உயர்ந்த ஆபத்திற்கும் அவர்களை உள்ளாக்குகிறது” என்றும் சிறைக்கைதிகளின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான குழு எச்சரித்தது.

ஜூலை 8 அன்று, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு (HRCSL), சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகத்திற்கு அனுப்பிய கடிதத்தில், ஜூலை 7 மாலை மேற்குறிப்பிட்ட சிறைச்சாலைகளுக்கு மாற்றப்பட்ட பல கைதிகள் “சித்திரவதைக்கும் பிறவகையான மனிதாபிமானமற்ற செயல்களுக்கும்” உள்ளாக்கப்பட்டதாக தகவல் கிடைத்துள்ளதாகக் குறிப்பிட்டது. இதனை விசாரிப்பதற்காக மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அவசரப் பதிலளிப்பு பிரிவு அதே நாள் இரவு 8.30 மணிக்கு வெலிக்கடை சிறைச்சாலைக்குச் சென்றபோது, மனித உரிமைகள் ஆணைக்குழு சட்டத்தின் கீழ் எந்த நேரத்திலும் எந்தச் சிறைச்சாலையிலும் நுழைந்து விசாரணை நடத்த அதிகாரம் இருந்தபோதிலும், அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. மேலும், வேறு சிறைச்சாலைகளுக்கு மாற்றப்பட்ட கைதிகளும் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டு வருவதாக அந்தக் கடிதம் சுட்டிக்காட்டியது.

சர்வதேச மன்னிப்புச் சபை, கைதிகளின் நலநிலையைச் சரிபார்ப்பதற்காக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு முழுமையான அனுமதியை வழங்குவதோடு, “உடனடி விசாரணை” ஒன்றை முன்னெடுக்குமாறும் கோரி அறிக்கை வெளியிட்டது. அதிகரித்து வந்த அழுத்தத்தின் மத்தியில், மறுநாள் மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு அனுமதி வழங்கப்பட்ட போதிலும், இந்தத் தாமதம் உரிய நேரத்தில் விசாரணை நடத்துவதற்கான வாய்ப்பைப் பறித்துவிட்டதாக ஆணைக்குழு தெரிவித்தது. சிறைச்சாலைக்குள் நுழைவதற்கான அனுமதி ஏன் மறுக்கப்பட்டது என்பதை விளக்குமாறு, (கடமைகளை நிறைவேற்றும்) சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகத்தையும் வெலிக்கடை சிறைச்சாலையின் பிரதம சிறை அதிகாரியையும் ஆஜராகுமாறு அழைத்துள்ளதாக மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்தது.

ஜூலை 8 அன்று, வேறு சிறைச்சாலைகளுக்கு மாற்றப்பட்ட பின்னர் இரண்டு கைதிகள் உயிரிழந்த சம்பவம், இலங்கையின் சிறைச்சாலை அமைப்பை உயிரைப் பறிக்கும், எந்தப் பொறுப்புக்கூறலும் இல்லாத ஓர் அடக்குமுறைக் கருவியாக உரிமைகள் அமைப்புகள் கருதுவது ஏன் என்பதைக் கூர்மையாக எடுத்துக்காட்டுகிறது. நீர்கொழும்பிலிருந்து பூஸ்ஸ உயர் பாதுகாப்புச் சிறைச்சாலைக்கு மாற்றப்பட்ட ஒரு கைதி உயிரிழந்தமைக்கு, “திடீர் உடல்நலக் குறைவே” காரணம் என்று மட்டுமே அதிகாரிகள் அறிவித்தனர். அவரது பெயர், மருத்துவ விவரங்கள் அல்லது சம்பவம் நடைபெற்ற காலவரிசை எதுவும் வெளியிடப்படவில்லை. இந்தச் சம்பவம் மிகவும் சந்தேகத்திற்குரியது என சர்வதேச மன்னிப்புச் சபை உடனடியாக சுட்டிக்காட்டியது. பூஸ்ஸ, இராணுவ நிர்வாகத்தின் கீழ் இயங்கும் ஒரு சிறைச்சாலை என்றும், அங்கு தடுத்து வைக்கப்பட்டவர்கள் ஆய்விலிருந்து மறைக்கப்பட்டதோடு, சுயாதீன மேற்பார்வையும் கடுமையாகக் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அது வலியுறுத்தியது.

அங்குணுகொலபெலஸ்ஸ சிறைச்சாலைக்கு மாற்றப்பட்ட மற்றொரு கைதியும், எந்தவிதமான பொது விளக்கமும் இன்றி ஜூலை 8 அன்று உயிரிழந்தார். இதற்கு சில வாரங்களுக்கு முன்னரே, அதே சிறைச்சாலையில் “திடீர் உடல்நலக் குறைவு” காரணமாக மற்றொருவர் உயிரிழந்ததாகக் கூறப்பட்டிருந்தது. இரகசியத்தன்மை, முன்னைய துஷ்பிரயோகங்கள் மற்றும் சிறைக்கைதிகளின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான குழு மற்றும் ஐக்கிய நாடுகள் சபை அமைப்புகளும் ஆவணப்படுத்தியுள்ள திட்டமிட்ட சித்திரவதைகளும் நிலவும் இந்தச் சூழலில், இந்தக் கைதிகள் இயற்கை காரணங்களால் அல்லாது வன்முறையான கொடூரமான நடத்தையின் விளைவாக உயிரிழந்திருக்கலாம் என்று சந்தேகிப்பது முற்றிலும் நியாயமானதாகும்.

போதைப்பொருளுக்கு அடிமையானதாகக் கூறப்படும் பாதாள உலகக் குற்றவாளிகள் தப்பிச் செல்ல முயன்றதைத் தடுக்க “தங்களது உயிரைத் தியாகம் செய்த வீரர்கள்” என்று சிறை அதிகாரிகளை சித்தரிக்கும் வெறித்தனமான ஊடகப் பிரச்சாரத்தின் மத்தியில், மாற்றப்பட்ட கைதிகளின் நிலை மேலும் மோசமடைந்துள்ளது. அரசாங்கத்தின் கட்டுக்கதைகளை எதிரொலிக்கும் வகையில், வலதுசாரி ஐலண்ட் பத்திரிகை, ஜூலை 8 தலையங்கத்தில் எழுதியதாவது: “போதைப்பொருள் மாஃபியா மீண்டும் தன் பலத்தைக் காட்டியுள்ளது. நாட்டை போதைப்பொருளிலிருந்து விடுவிப்பதற்கான இலட்சியமிக்க பிரச்சாரத்தை அரசாங்கம் தொடங்கியுள்ளது; அது முற்றிலும் சரியானதே. தற்போது நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்டு வரும் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைக்கு மக்கள் முழுமையான ஒத்துழைப்பை வழங்க வேண்டும்.”

நீதியமைச்சர் ஹர்ஷண நாணயக்கார, சிறை அதிகாரிகள் ஒழுங்கை மீட்டெடுப்பதற்காக தற்காப்பு நோக்கில் “தேவையான குறைந்தபட்ச பலத்தை” மட்டுமே பயன்படுத்தியதாகக் கூறி, அவர்களை மீண்டும் மீண்டும் நியாயப்படுத்தி வந்துள்ளார். சிறை வாசலிலிருந்து துப்பாக்கிச் சூடு நடத்தும் காட்சியில் பதிவான ஒரு அதிகாரியை “பாதுகாக்குமாறு” சிறை அதிகாரிகள் அமைச்சரிடம் கோரிய பின்னர், நாணயக்கார அவர்களது விளக்கத்தை ஏற்றுக்கொண்டு, அந்த அதிகாரிகள் “நியாயமாக நடத்தப்படுவார்கள்” என்று வலியுறுத்தினார். இது, அந்தத் துப்பாக்கிச் சூட்டை அதிகாரபூர்வமாக நியாயப்படுத்துவதற்கான அரசியல் சமிக்ஞையாகும்.

ஜூலை 10 அன்று, நீர்கொழும்பு சிறைச்சாலை படுகொலைகள் குறித்து, சிரேஷ்ட சட்ட வைத்திய அதிகாரி வைத்தியர் சுஜீவ விக்கிரமசிங்க தலைமையிலான ஐந்து சிரேஷ்ட சட்ட மருத்துவ அதிகாரிகள் கொண்ட குழுவின் தடயவியல் கண்டறிதல்களை டெயிலி மிரர் வெளியிட்டது. நீர்கொழும்பு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்ட 28 சடலங்களில் 24 உடல்களுக்கு அந்தக் குழு பிரேதப் பரிசோதனை நடத்தியது. பரிசோதிக்கப்பட்ட 24 பேரில் 14 பேர் துப்பாக்கிக் காயங்களாலும், ஒன்பது பேர் மழுங்கிய பொருளால் ஏற்பட்ட கடுமையான தாக்குதல்களாலும் உயிரிழந்திருந்தனர் என அது கண்டறிந்தது. மேலும் விசாரணை தேவைப்படுவதால், ஒரு மரணம் தொடர்பாக (காரணம் உறுதிப்படுத்தப்படாத) திறந்த தீர்ப்பு வழங்கப்பட்டது.

பிரேதப் பரிசோதனை அறிக்கைகளின்படி, சிறை அதிகாரிகள் மழுங்கிய பொருளால் தலையில் ஏற்பட்ட கடுமையான காயங்களினால் உயிரிழந்துள்ளனர். இந்தக் கண்டறிதல்கள், கைதிகள் துப்பாக்கிகளைப் பறித்து காவலர்களை நோக்கிச் சுட்டதால், பாதுகாப்புப் படையினர் பதிலடியாக துப்பாக்கிச் சூடு நடத்த வேண்டிய நிலை ஏற்பட்டதாக ஜூலை 7 அன்று ஏபிசி நியூஸ் செய்திக்கு நீதியமைச்சர் நாணயக்கார தெரிவித்த கூற்றை நேரடியாக மறுக்கின்றன. அதேபோல், சிறை அதிகாரிகளின் நடவடிக்கையை நியாயப்படுத்திய பதில் சிறைச்சாலைகள் ஆணையாளர் பிரசாத் ஹேமந்த குமாரவின் பாதுகாப்பு வாதத்தையும் இக்கண்டறிதல்கள் மேலும் பலவீனப்படுத்துகின்றன.

உயிரிழந்த இந்த அதிகாரிகள் சாதாரண சிறைக் காவலர்கள் அல்லர். அரசுக்குச் சொந்தமான டெயிலி நியூஸ் பத்திரிகையின் தகவலின்படி, நீர்கொழும்பில் உயிரிழந்த ஏழு சிறை அதிகாரிகளும் இலங்கை சிறைச்சாலைகள் அவசர நடவடிக்கை மற்றும் தந்திரோபாயப் படை (Sri Lanka Prisons Emergency Action and Tactical – SPEAT) உறுப்பினர்களாக இருந்தனர். இந்தப் பிரிவு, முன்னாள் முப்படையினரைக் கொண்டு, “சிறைச்சாலைகளில் ஊழல் மற்றும் ஒழுங்கீனங்களைத் தடுப்பதற்காக” 2022 ஆம் ஆண்டு ஜனாதிபதி கோட்டாபய இராஜபக்ஷவின் ஆட்சிக்காலத்தில் சிறைச்சாலைகள் திணைக்களத்தின் கீழ் உருவாக்கப்பட்டது.

2026 ஜூலை 10 அன்று நீதியமைச்சின் முன்பாக சிறைக்கைதிகளின் பாதுகாப்பையும் உரிமைகளையும் கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஒரு பகுதியினர்.

ஜூலை 9 அன்று பிரபலமான ஒரு யூ டியூப் கலந்துரையாடல் நிகழ்ச்சிக்கு வழங்கிய பேட்டியில், சிறைக்கைதிகளின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான குழுவின் ஒருங்கிணைப்பாளர் சுதேஷ் நந்திமால் சில்வா, சிறைச்சாலைகள் அவசர நடவடிக்கை மற்றும் தந்திரோபாயப் படையினர் மேற்கொண்ட ஆத்திரமூட்டும் நடவடிக்கைகளே ஜூலை 6 காலை இடம்பெற்ற மோதலை தூண்டிவிட்டதாகக் குற்றஞ்சாட்டினார். ஏற்கனவே பதற்றம் நிறைந்தும் மிகுந்த நெரிசலுடனும் இருந்த சிறைச்சாலையில், கைதிகளை மண்டியிட்டு சிறை அதிகாரிகளிடம் மன்னிப்புக் கேட்குமாறு அந்தப் படையினர் கட்டாயப்படுத்தியமையே பதற்றத்தை மேலும் தீவிரப்படுத்தியதாக அவர் கூறினார்.

சிறைக்கைதிகளின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான குழு, உயிரிழந்த கைதிகளின் உறவினர்கள் உட்பட சுமார் 150 பேருடன் இணைந்து ஜூலை 9 அன்று கொழும்பில் நீதியமைச்சின் முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்தியது. கைதிகளுக்கு நீதி வழங்கப்பட வேண்டும் என்றும், தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகள் பற்றிய துல்லியமான தகவல்கள் உடனடியாக வெளியிடப்பட வேண்டும் என்றும் ஆர்ப்பாட்டக்காரர்கள் கோரினர். அவர்கள் ஏந்தியிருந்த பதாகைகளில்: “நீர்கொழும்பு கைதிகள் மீது கை வைக்காதே,” “இன்று கைதிகள்; நாளை நீங்கள்,” “கைதிகளுக்கு எதிரான வேட்டையை நிறுத்து,” “கைதிகளைத் தாக்குவதையும் கொலை செய்வதையும் நிறுத்து,” மற்றும் “கைதிகள் பற்றிய தகவல்களை உடனடியாக வழங்கு” என்ற வாசகங்கள் இடம்பெற்றிருந்தன.

கடந்த மாதம், சித்திரவதையைத் தடுப்பதற்கான ஐக்கிய நாடுகள் சபையின் உபகுழுவிற்கு சிறைக்கைதிகளின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான குழு சமர்ப்பித்த விரிவான அறிக்கை, இலங்கையின் சிறைச்சாலை அமைப்பானது திட்டமிட்ட சித்திரவதை, ஆகக் கூடிய நெரிசல் மற்றும் நிறுவன ரீதியான தண்டனையிலிருந்து விலக்களிப்பு ஆகியவற்றால் குறிக்கப்படுவதாக அம்பலப்படுத்தியது.

அந்த அறிக்கையின்படி, கைதிகள் வெறும் 1.2 சதுர மீட்டர் இடத்திலேயே அடைக்கப்பட்டு, மாறி மாறித் தூங்கவோ அல்லது கழிப்பறைகளுக்கு அருகிலோ உறங்க கட்டாயப்படுத்தப்படுகின்றனர். அவர்கள் அசுத்தமான, மனிதாபிமானமற்ற சூழ்நிலைகளில் வாழ்கின்றனர். கடுமையான தாக்குதல்கள், நீரில் மூழ்கடித்து சித்திரவதை செய்தல், தலைகீழாக தொங்கவிடுதல், புலனுணர்வுகளை மறுத்தல், பாலியல் துஷ்பிரயோகம், அத்துடன் மருத்துவப் பணியாளர்கள் அல்லாதவர்களால் அவமானகரமான முறையில் உடல் உள்பகுதி சோதனைகள் மேற்கொள்ளப்படுதல் உட்பட வழக்கமான சித்திரவதைகள் இடம்பெறுவதாகவும் அந்த அறிக்கை குற்றஞ்சாட்டுகிறது.

இராணுவம் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் பல தடுப்புக்காவல் நிலையங்கள் குறித்தும் அந்த அறிக்கை கவலை வெளியிடுகிறது. அங்கு கைதிகள் ஆய்வுகளிலிருந்து மறைக்கப்படுவதாகவும், வழக்கறிஞர்களும் உறவினர்களும் அச்சுறுத்தல்களுக்கு உள்ளாக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. 2024 ஜனவரி முதல் 2025 மே வரை தடுப்புக்காவலில் குறைந்தது 173 பேர் உயிரிழந்துள்ளதை மேற்கோள்காட்டி, துஷ்பிரயோகங்களுக்கு பொறுப்புக்கூறல் இல்லாததையும் அந்த அறிக்கை கண்டிக்கிறது. மேலும், பொதுமக்களுடன் ஒப்பிடும்போது காசநோய் பரவல் விகிதம் 100 மடங்கு அதிகமாக இருக்கின்றமை, மருத்துவப் பணியாளர்கள் பற்றாக்குறை, பரவலான மனநலப் பிரச்சினைகள், மற்றும் பெண் கைதிகளுக்கு அடிப்படை சுகாதாரப் பொருட்கள் போதுமான அளவில் கிடைக்காமை ஆகியவற்றை எடுத்துக்காட்டி, சிறைச்சாலைகளில் நிலவும் கடுமையான சுகாதார நெருக்கடியையும் அது சுட்டிக்காட்டுகிறது.

11,762 கைதிகளை மட்டுமே தங்க வைக்கும் வகையில் கட்டப்பட்ட இலங்கையின் சிறைச்சாலைகளில் தற்போது 42,000 கைதிகளுக்கும் மேல் அடைக்கப்பட்டுள்ளனர். இது அவற்றின் நிர்ணயிக்கப்பட்ட கொள்ளளவை விட கிட்டத்தட்ட நான்கு மடங்காகும். சுமார் 900 கைதிகளுக்காகக் கட்டப்பட்ட நீர்கொழும்பு சிறைச்சாலையில், படுகொலை நடந்த சமயத்தில் சுமார் 2,400 கைதிகள் அடைக்கப்பட்டிருந்தனர். இந்த நரகத்தை ஒத்த சூழ்நிலைகள், எளிதில் வன்முறை மோதல்களாக வெடிக்கக்கூடிய பதற்றங்களை தவிர்க்க முடியாமல் உருவாக்குகின்றன.

நாட்டிலுள்ள சிறைக்கைதிகளில் சுமார் 75 சதவீதம் பேர் விசாரணைக்காகக் காத்திருக்கும் விளக்கமறியல் கைதிகளாக உள்ளனர். இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளரும் வழக்கறிஞருமான அம்பிகா சற்குணநாதனின் கூற்றுப்படி, 2023 ஆம் ஆண்டில் சிறையில் அடைக்கப்பட்டவர்களில் 67.8 சதவீதம் பேர் அபராதத் தொகையை செலுத்த இயலாத காரணத்தால் சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். இது “வறுமையைக் குற்றமாக்குவதாகும்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையிலும் சர்வதேச அளவிலும் உள்ள தொழிலாள வர்க்கம், இவற்றிலிருந்து அவசியமான அரசியல் முடிவுகளை எடுக்க வேண்டும். சிறைச்சாலைப் படுகொலைகள் தற்செயலான விதிவிலக்குகள் அல்ல; ஆழமடைந்து வரும் சமூக நெருக்கடிக்கு மேலும் மேலும் கொடூரமான அடக்குமுறைகளின் மூலம் பதிலளிக்கும் முதலாளித்துவ அரசின் தவிர்க்க முடியாத வெளிப்பாடுகளாகும். சிறைச்சாலை வன்முறைக்கும் அரசின் கொலைகளுக்கும் எதிரான போராட்டம், முதலாளித்துவ அமைப்புக்கு எதிரான போராட்டத்திலிருந்து பிரிக்க முடியாததாகும்.

ஆளும் மக்கள் விடுதலை முன்னணி/தேசிய மக்கள் சக்தி உட்பட அனைத்து முதலாளித்துவக் கட்சிகளிலிருந்தும் அரசியல் ரீதியில் சுயாதீனமாகி, சோசலிச முன்னோக்குடன் ஆயுதபாணியாகும் தொழிலாளர் வர்க்கத்தின் ஒரு புரட்சிகர இயக்கத்தால் மட்டுமே இந்தக் கொடூரங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும்.

Loading