போக்டன் சிரோட்டியுக்கை விடுதலை செய்வதற்கான பிரச்சாரம் குறித்து பிரித்தானியா மற்றும் பிரான்ஸைச் சேர்ந்த நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் உறுப்பினர்களை லண்டன் தமிழ் TV பேட்டி கண்டது

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.

ரஷ்யாவுக்கு எதிரான அமெரிக்க-நேட்டோ பினாமிப் போரை எதிர்த்ததற்காக ஜெலென்ஸ்கி ஆட்சியால் சிறையிலடைக்கப்பட்ட உக்ரேனிய சோசலிஸ்ட் போக்டன் சிரோட்டியுக்கை உடனடியாக விடுதலை செய்யக் கோரும் சர்வதேசப் பிரச்சாரத்தின் மீது கவனத்தை ஈர்க்கும் வகையில், பிரிட்டனில் உள்ள சோசலிச சமத்துவக் கட்சியைச் சேர்ந்த சிங்கம் தயானும், பிரான்சில் உள்ள சோசலிச சமத்துவக் கட்சியைச் சேர்ந்த அதியன் கந்தசாமியும் லண்டன் தமிழ் TV (London Tamil TV) நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

போல்ஷிவிக்-லெனினிஸ்டுகளின் இளம் காவலர் அமைப்பின் தலைவரான 27 வயதான போக்டன், 2024 ஏப்ரல் 24 அன்று கைது செய்யப்பட்டு கொடூரமான சிறையில் அடைக்கப்பட்டார். கடந்த மாதம், ஆகஸ்ட் 10 அன்று, தெற்கு உக்ரேனில் உள்ள மிகோலைவ் நீதிமன்றம், “இராணுவச் சட்டத்தின் கீழ் உயர் தேசத் துரோகம்” இழைத்ததாகக் குற்றம் சாட்டி, போக்டனுக்கு 15 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தது.

லண்டன் தமிழ் டிவியானது, YouTube ல் 95,000 சந்தாதாரர்களைக் கொண்டுள்ளது. “உக்ரேன்-ரஷ்ய மோதல் ஒரு உலகப் போருக்கு வித்திடுகிறதா?” என்ற தலைப்பில் நடைபெற்ற 31 நிமிட நிகழ்ச்சியில், தொகுப்பாளர் அனஸ், உக்ரேன் போர் பற்றியும் போக்டன் கைது செய்யப்பட்டு தண்டனை விதிக்கப்பட்டது குறித்தும் கேள்விகளை எழுப்பினார். இந்த நிகழ்ச்சியின் காணொளியை கீழே காணலாம்.

உக்ரேன் போரின் போக்கு குறித்த ஒரு கேள்விக்குப் பதிலளித்த அதியன், “இந்தப் போர் தீவிரமடைந்து வருவதை நாங்கள் இப்போது காண்கிறோம். உக்ரேனில் ரஷ்யாவுக்கு எதிரான அமெரிக்க-நேட்டோ தாக்குதல் என்பது, ரஷ்யாவைப் பல துண்டுகளாகப் பிளந்து, அதன் வளங்களைக் கொள்ளையடித்து, அதன் மூலம் மத்திய ஆசியாவைத் தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவருவதை நோக்கமாகக் கொண்டுள்ளது” எனக் கூறினார்.

உலகெங்கிலும் இதேபோன்ற மோதல் முனைகள் நிகழ்ந்துகொண்டிருக்கும் நிலையில், உக்ரேன் மூன்றாம் உலகப் போரின் ஒரு முனையாகச் செயற்படுகிறது என அவர் விளக்கினார். குறிப்பாக, காஸா மீதான இனப்படுகொலைத் தாக்குதல், லெபனான் மீதான தாக்குதல்கள், ஈரான் மீதான தாக்குதல்கள், மற்றும் வெனிசுவேலாவின் எண்ணெய் வளங்களைக் கொள்ளையடித்தல் ஆகியவை, இதர ஏகாதிபத்திய சக்திகளுடன் இணைந்து அமெரிக்க ஏகாதிபத்தியத்தால் இன்று கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ளன. இது மனிதகுலத்தைப் பேரழிவை நோக்கித் தள்ளுகிறது என்று அவர் மேலும் தெரிவித்தார்.

உண்மையிலேயே மூன்றாம் உலகப் போருக்கான அபாயம் உள்ளதா என்ற கேள்விக்குப் பதிலளித்த சிங்கம், தற்போதைய நிலைமைகள் நேரடியாக அதனை நோக்கியே சென்றுகொண்டிருக்கின்றன எனக் கூறினார். பிரிட்டிஷ் பிரதமர் ஆண்டி பேர்ன்ஹாமுக்கும் பிரெஞ்சு ஜனாதிபதி இமானுவேல் மக்ரோனுக்கும் இடையே சமீபத்தில் நடைபெற்ற ஒரு சந்திப்பின்போது, அவர்களது கலந்துரையாடல்கள் முதன்மையாகப் போரைத் தீவிரப்படுத்துவதிலேயே கவனம் செலுத்தின. தொலைதூர இலக்குகளை துல்லியமாகத் தாக்கக்கூடிய குரூஸ் ஏவுகணைகளை உக்ரேனில் உற்பத்தி செய்வதற்கான திட்டங்களுக்கு பேர்ன்ஹாமும் மக்ரோனும் உடன்பட்டுள்ளனர். உக்ரேனுக்குத் தமது படைகளை அனுப்பப் பிரான்ஸ் தயாராக நிற்கிறது. இந்த நடவடிக்கையை ரஷ்யா கடுமையாக எதிர்க்கிறது. இந்தச் சூழ்நிலைகள் இட்டுச்செல்வது, ஐரோப்பாவில் ஒரு பாரிய போர் வெடிப்பதற்கான நிலைமைகளை உருவாக்குவதை நோக்கியேயாகும் என்று சிங்கம் குறிப்பிட்டார்.

போர் அல்லது புரட்சி என்ற இரண்டில் ஒன்றைத் தெரிவுசெய்யவேண்டிய ஒரு நிலைமைக்கு மக்கள் தள்ளப்படுகின்றனர் என சிங்கம் மேலும் தெரிவித்தார்.

தன்னுடைய எரிபொருளைச் சுயமாக உற்பத்தி செய்ய முடியாத நிலையில், ரஷ்யாவுடனான உறவுகளைத் துண்டித்துக்கொள்ளும் துணிச்சல் ஐரோப்பாவுக்கு இருக்குமா என்ற ஒரு கேள்விக்குப் பதிலளித்த அதியன், ஜேர்மன் ஏகாதிபத்தியம் முதலாம் மற்றும் இரண்டாம் உலகப் போர்களின்போது ரஷ்யாவைத் தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரும் நோக்கத்துடன் இருமுறை படையெடுத்தது என விளக்கினார்.

அந்த இரண்டு முயற்சிகளும் தோல்வியடைந்த நிலையில், அது இப்போது ஒரு மூன்றாவது முயற்சியைத் தொடங்குவதை நாம் காண்கிறோம். இதனுடன் இணைந்து, அமெரிக்கா, பிரான்ஸ், பிரிட்டன் போன்ற ஏகாதிபத்திய நாடுகள் தமது சொந்த முயற்சிகளில் இறங்கியுள்ளன. இந்த மோதலுக்கான தயாரிப்பாக, அவை தற்போது கட்டாய இராணுவ ஆட்சேர்ப்பை அறிமுகப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. ஜேர்மனி தனது இராணுவம் மற்றும் உட்கட்டமைப்புக்காக 1 ட்ரில்லியன் யூரோக்களை ஒதுக்கீடு செய்வதன் மூலம் போருக்குத் தயாராகிக்கொண்டிருக்கிறது. அதன் முக்கிய வளங்களில் ஒன்றான ரஷ்யாவின் எரிபொருளைத் தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவருவதே அவற்றின் முதன்மை இலக்காகும். இது அடுத்த கட்டத்திற்கு முன்னேறி, இறுதியில் சீனாவுடனான ஒரு மோதலுக்கு இட்டுச்செல்லும் என்று அதியன் தெரிவித்தார்.

போக்டனின் கைதுக்கான காரணம் குறித்துப் பதிலளித்த அதியன், உலக சோசலிச வலைத் தளத்திற்குக் கட்டுரைகள் எழுதியதாகவும், அதன் ஆசிரியர்களுடன் தொடர்பைப் பேணியதாகவும் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது என்றும், இந்தப் போர்-எதிர்ப்பு அரசியல் நடவடிக்கைகளுக்காகவே அவர் மீது தேசத்துரோகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது என்றும் விளக்கினார். போக்டன் ரஷ்யாவின் ஒரு கருவி என்ற பொய்யை நிராகரித்த அதியன், தனது 2023 மே தின உரையில், இந்தப் போருக்கு எதிராக ஐக்கியப்பட்டு போராடுமாறு உக்ரேனிய, ரஷ்ய மற்றும் சர்வதேசத் தொழிலாளர்களுக்கு போக்டன் அழைப்பு விடுத்தார் என விளக்கினார்.

போக்டன் ஒரு போர்-எதிர்ப்பு நிலைப்பாட்டைப் பேணினார். அவர் ரஷ்யா விவகாரத்தில் புட்டினுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுக்கவில்லை. உக்ரேன் விவகாரத்தில் ஜெலென்ஸ்கிக்கு ஆதரவான நிலைப்பாட்டையும் அவர் எடுக்கவில்லை. மாறாக, இது எமது போர் அல்ல—இது இருதரப்பிலும் உள்ள முதலாளித்துவ வர்க்கத்தின் நலன்களுக்காகவும் ஏகாதிபத்திய நலன்களுக்காகவும் நடத்தப்படும் ஒரு போர் என்பதே போக்டனின் அரசியல் நிலைப்பாடாக இருந்தது.

மேலும், உலக சோசலிச வலைத் தளத்திற்குக் கட்டுரைகள் எழுதியதற்காக விதிக்கப்பட்ட இந்தத் தண்டனை, பேச்சு சுதந்திரத்திற்கு எதிரான ஒரு நேரடித் தாக்குதலாகும். மேலும் இது உண்மையுடன் எந்தத் தொடர்பையும் கொண்டிருக்கவில்லை. உக்ரேனியச் சட்டத்தின் கீழும் மனித உரிமைகள் தொடர்பான ஐரோப்பிய சாசனத்தின் கீழும், இந்த தண்டனைத் தீர்ப்பு சட்டவிரோதமானது மற்றும் கண்டிக்கப்படவேண்டியது. உக்ரேனியச் சிறைச்சாலைகளுக்குள் நிலவும் நிலைமைகள் மிகக் கொடூரமானவை என்பதாலும் அவரது உடல்நிலை மோசமாக இருப்பதாலும், போக்டனைப் பொறுத்தவரை, 15 ஆண்டு சிறைத்தண்டனை என்பது ஒரு மரண தண்டனைக்குச் சமமானதாகும்.

போக்டனின் விடுதலையை உறுதிசெய்வது மிக முக்கியமானது. ஜெலென்ஸ்கியின் தீவிர-வலது அரசாங்கத்தின் போர் முயற்சிக்கு எதிராகக் குரல் எழுப்பத் துணியும் உக்ரேனில் உள்ள எவருக்கும் விதிக்கப்படும் கடுமையான தண்டனைக்கு போக்டனின் வழக்கு ஒரு அப்பட்டமான உதாரணமாக அமைகிறது என அதியன் கூறினார்.

சர்வதேச தொழிலாள வர்க்கம் இதனைக் கடுமையாகக் கண்டிக்கவேண்டும். இன்று, ஆயிரக்கணக்கான மக்கள் போக்டனின் விடுதலையைக் கோரி உக்ரேனிய நீதிமன்றத்திற்குக் கடிதங்களை அனுப்பிக்கொண்டிருக்கின்றனர். கல்விமான்கள், எழுத்தாளர்கள், தொழிலாளர்கள் மற்றும் மாணவர்கள் என அனைவரும் அவரது விடுதலைக்காகப் போராடிக்கொண்டிருக்கின்றனர். இந்தப் போராட்டத்தின் ஒரு பாகமாகவே இன்று உங்களுடன் நாங்கள் உரையாடிக்கொண்டிருக்கிறோம். தொழிலாளர்கள் பேசும் மொழி எதுவாக இருந்தாலும், உலகெங்கிலும் உள்ள அவர்கள் இந்த ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டத்தில் இணைந்து, போக்டனின் விடுதலையை உறுதிசெய்வதற்குப் பங்களிக்கவேண்டும் என கேட்டுக்கொண்டு அவர் நிறைவுசெய்தார்.

போக்டனின் வழக்கு குறித்து மேலும் அறியவும், மனுவில் கையொப்பமிடவும், freebogdan.org ஐப் பார்வையிடுங்கள்.

Loading