இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.
சோசலிச சமத்துவக் கட்சியின் (SEP) தேசியத் தலைவர் டேவிட் நோர்த் அவர்களால் வழங்கப்பட்ட, சோசலிச சமத்துவக் கட்சியின் (ஐக்கிய அமெரிக்கா) ஒன்பதாவது காங்கிரஸின் ஆரம்ப அறிக்கையின் அறிக்கையின் ஐந்தாவது பகுதியை இங்கே வெளியிடுகிறோம். (பகுதி 1, பகுதி 2 , பகுதி 3 மற்றும் பகுதி 4-ஐப் பார்க்கவும்). இந்தக் காங்கிரஸ் 2026 ஆகஸ்ட் 2 முதல் ஆகஸ்ட் 7 வரை நடைபெற்றது. இந்த அறிக்கை, ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்ட “சோசலிச சமத்துவக் கட்சியும் ஏகாதிபத்திய போருக்கு எதிரான போராட்டமும்” என்ற முதல் தீர்மானத்தை அறிமுகப்படுத்தியது.
V. தொழிலாள வர்க்கத்தின் தீவிரமயமாதலும் தலைமைத்துவ நெருக்கடியும்
71. 1914 முதல் 1945 வரையிலான சகாப்தம் எமக்கு வழங்கும் மிக முக்கியமான பாடமானது, தற்போதைய சூழலோடு நேரடித் தொடர்புடையது. உலகப் போரும் சமூகப் புரட்சியும் ஒரே நெருக்கடியின் ஒன்றோடொன்று பிணைந்த இரு கூறுகள் ஆகும். முதல் உலகப் போர், வெறும் மூன்றாண்டுகளுக்குள்ளேயே வரலாற்றிலேயே மிகப்பெரிய புரட்சிகர அலையை உருவாக்கியது. இரண்டாம் உலகப் போர் 1943–1948 காலகட்டத்தில் பெரும் கொந்தளிப்புகளைத் தோற்றுவித்தது. ஏகாதிபத்தியத்தினதும் ஸ்டாலினிசத்தினதும். கூட்டு முயற்சிகளால் மட்டுமே அவை கட்டுப்படுத்தப்பட்டன. மேலும் நிச்சயமாக, 1950-கள், 60-கள் மற்றும் 70-கள் வரை நீடித்த மாபெரும் காலனித்துவ-எதிர்ப்பு இயக்கங்கள் என்பவை, இரண்டாம் உலகப் போர் மற்றும் அந்தப் புரட்சிகர அலையின் தொடர் விளைவுகளாகவே அமைந்தன.
72. 1917-லும், இரண்டாம் உலகப் போரின் இறுதி ஆண்டுகளிலும் அதன் பின்னரும் நிகழ்ந்ததைப் போலவே, முழுமையான போர் என்பது தொழிலாள வர்க்கத்தின் முழுமையான அணிதிரட்டலையும், சமூக மற்றும் அரசியல் ரீதியான தீவிர மாற்றங்களை நோக்கிய செயல்முறையைத் தொடங்கி வைப்பதையும் கோருகிறது. தற்போதைய காலகட்டத்தின் ஆட்சியாளர்களுக்கு இந்த வரலாறு தெரியும். இது ஒவ்வொரு முதலாளித்துவ அரசின் நிறுவனரீதியான நினைவிலும் பதிந்துள்ளது. 1914-ல் தொடங்கிய ஏகாதிபத்தியப் போரினால் ஏற்பட்ட புரட்சிகர விளைவுகள் ஆளும் வர்க்கத்தை அச்சுறுத்திக்கொண்டே இருக்கின்றன. அக்டோபர் புரட்சியின் நூற்றாண்டு விழாவின்போது வலதுசாரி வரலாற்றாசிரியர் சீன் மெக்மீக்கின் எழுதியது போல: “1917-ல் தொடங்கி வைக்கப்பட்ட சித்தாந்த யுகத்தில் பிறந்த அணுஆயுதங்களைப் போல, லெனினிசத்தைப் பற்றிய சோகமான உண்மை என்னவென்றால், அது ஒருமுறை கண்டுபிடிக்கப்பட்டுவிட்டால், அதை மீண்டும் இல்லாமலாக்க முடியாது என்பதே.”[9]
73. ஏகாதிபத்தியப் போரின் புற்றுநோய்ப் பரவல், வர்க்கப் போராட்டத்தின் உலகளாவிய விரிவாக்கத்தில் தனது இயங்கியல் எதிர்முனையைக் காண்கிறது. புரட்சிகர நனவின் முதிர்ச்சிக்கு ட்ரொட்ஸ்கி பயன்படுத்திய சொல்லில், இதன் வளர்ச்சி மூலக்கூற்று ரீதியாக, அதிகாரப்பூர்வ அரசியலின் பரப்பிற்குக் கீழே, சுரண்டல், போர் மற்றும் அரச வன்முறையின் மில்லியன் கணக்கான தனிநபர் அனுபவங்களில் நிகழ்கிறது. இவை அமைதியாகத் திரண்டு, ஒவ்வொரு அரசாங்கத்தையும் ஆச்சரியப்படுத்தும் ஒரு பலத்துடன் கூட்டு வெளிப்பாட்டைக் காணும் வரை தொடர்கின்றன. போர் உலகைப் போர்க் களங்களாகப் பிரிக்கும் இடத்தில், வர்க்கப் போராட்டம் அதனை ஒன்றிணைக்கிறது.
74. தொழிலாளர் வர்க்கத்தின் சர்வதேச ஐக்கியம், 1988 ஆகஸ்ட் 30 அன்று நடைபெற்ற வேர்க்கர்ஸ் லீக்கின் (Workers League) பதின்மூன்றாவது தேசியக் காங்கிரஸுக்கான தொடக்க அறிக்கையில் முன்கூட்டியே கணிக்கப்பட்டது:
புறநிலை ரீதியான பொருளாதாரப் போக்குகள் மற்றும் மார்க்சிசவாதிகளின் அகநிலைத் தாக்கம் ஆகிய இரண்டின் கூட்டு அழுத்தத்தின் கீழ், பாட்டாளி வர்க்கப் போராட்டங்களின் அடுத்த கட்டம் தவிர்க்கவியலாத வகையில் சர்வதேசவாதப் பாதையில் வளர்ச்சியடையும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். பாட்டாளி வர்க்கம் நடைமுறையில் தன்னை ஒரு சர்வதேச வர்க்கமாக வரையறுத்துக்கொள்ளும் போக்கு மேலும் வலுப்பெறும். இந்தப் இயல்பான செயல்முறையின் வெளிப்பாடாகத் தங்கள் கொள்கைகளைக் கொண்டுள்ள மார்க்சிய சர்வதேசவாதிகள், இச்செயல்முறையை வளர்த்தெடுத்து அதற்கு ஒரு தெளிவான வடிவத்தை அளிப்பார்கள்.[10]
75. 1988இல், உற்பத்தியின் உலகளாவிய ஒருங்கிணைப்பு, அதன் தற்போதைய அளவுடன் ஒப்பிடும்போது, மிகவும் ஆரம்ப நிலையிலேயே இருந்தது. ‘நாடு கடந்த நிறுவனம் அதன் பழைய பல்தேசிய அமைப்பு வடிவத்தை மாற்றீடு செய்யத் தொடங்கிய காலமது. அதற்குப் பிந்தைய நான்கு தசாப்தங்களில், அந்தச் செயல்முறை அதன் உச்சக்கட்ட முடிவை எட்டியுள்ளது. பழைய வகையிலான பன்னாட்டு நிறுவனம் என்பது, அடிப்படையில் வெளிநாடுகளில் செயல்பாடுகளைக் கொண்ட ஒரு தேசிய நிறுவனமாகவே இருந்தது. அதாவது, அமெரிக்க, ஜேர்மானிய அல்லது ஜப்பானிய நிறுவனங்கள் வெளிநாடுகளில் துணை நிறுவனங்களை அமைத்தாலும், அவற்றின் தயாரிப்புகள் தேசிய அடையாளத்துடனேயே திகழ்ந்தன. அந்த உலகம் இன்று இல்லை. உற்பத்தி என்பது இப்போது ஒற்றை, உலகளாவிய ஒருங்கிணைந்த செயல்முறையாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இந்த மாற்றியமைப்பின் விளைவாக, அந்தப் பொருட்களிலிருந்து அவற்றின் தேசிய அடையாளமும் நீக்கப்பட்டுவிட்டது..
76. இன்று அமெரிக்கக் கார், ஜேர்மானிய இயந்திரக் கருவி, கொரியத் தொலைபேசி அல்லது சீனக் கணினி என்றெல்லாம் எதுவும் இல்லை. மிச்சிகனில் உருவாக்கப்படும் வாகனத்தில், டச்சு அச்சுக்கலை இயந்திரங்களால் தயாரிக்கப்பட்ட ஜப்பானிய உலோகத் தகடுகளில் தைவானில் உருவாக்கப்பட்ட குறைமின்கடத்திகள் (semiconductors) சியுடாட் ஜுவாரெஸ் மற்றும் ஹோண்டுராஸிலிருந்து வரும் மின்னிணைப்புக் கம்பிகள், சீனாவில் சுத்திகரிக்கப்பட்ட அரிய கனிமங்கள், பெங்களூர் மற்றும் சியாட்டிலில் எழுதப்பட்ட மென்பொருள், மற்றும் கினியன் பாக்சைட்டிலிருந்து உருக்கப்பட்ட அலுமினியம் ஆகியவை அடங்கியுள்ளன. ஒரு காலத்தில் ஒரு பொருளின் தேசிய மூலத்தைக் குறிப்பிட்ட மூலத்தின் அடையாளம் என்பது, இன்று ஒரு பொருளாதாரப் புனை கதையாக மாறிவிட்டது. அது மறைக்கும் முக்கிய உண்மை இதுதான்: ஒவ்வொரு குறிப்பிடத்தக்க பண்டமும் இப்போது, ஒவ்வொரு கண்டத்திலும் உள்ள தொழிலாளர்களின் கூட்டு உழைப்பை உள்ளடக்கிய, சிக்கலான உற்பத்தி வலைப்பின்னல்களைக் கொண்ட ஒரு உலகளாவிய உற்பத்திச் செயல்முறையின் விளைபொருளாகும்..
77. இன்று முதன்மையாகத் திகழ்வது, தேசிய எல்லைகளைக் கடந்து மேற்கொள்ளப்படும் உற்பத்தியின் ஒழுங்கமைப்பே ஆகும் —இது, எந்தவொரு தேசியப் பகுதியும் தற்சார்புடையதாகவோ அல்லது தன்னிச்சையாக இயங்கக்கூடியதாகவோ இல்லாத ஒரு தொடர்ச்சியான, ஒன்றுடனொன்று பிணைக்கப்பட்ட செயல்முறையாகும். உண்மையில், அந்தத் தொழிற்சாலை உலகம் முழுவதும் பரவியுள்ளது. குவாங்டாங், ஸ்டட்கார்ட், சாவ் பாலோ மற்றும் டெட்ராய்ட் ஆகிய இடங்களில் உள்ள தொழிலாளர்கள் ஒரே மாதிரியான பொருட்களைத் தனித்தனியாகவோ அல்லது இணையாகவோ மட்டும் உற்பத்தி செய்வதில்லை. மாறாக, அவர்கள் ஒரே உற்பத்திச் செயல்முறையின் வெவ்வேறு நிலைகளில், ஒரே பொருளை உருவாக்கும் பணியில் ஈடுபடுகிறார்கள்..
78. இந்த மாற்றத்திலிருந்து முதலாளித்துவ வர்க்கம் தனது சொந்த முடிவுகளை எடுத்துள்ளது: அதாவது, முழு உலகின் வளங்களும், சந்தைகளும், விநியோகப் பாதைகளும் இன்றியமையாத தேசிய நலன்கள் என்றும், அவை பலப்பிரயோகத்தின் மூலம் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் கருதுகிறது. ஆனால், அதே மாற்றம் தொழிலாளி வர்க்கத்தை இதற்கு நேர்மாறான ஒரு முடிவை நோக்கி இட்டுச் செல்கிறது.
79. உலகளாவிய விநியோகச் சங்கிலிகள், தகவல் தொடர்பு அமைப்புகள் மற்றும் ஒருங்கிணைக்கப்பட்ட உற்பத்தி வலைப் பின்னல்கள் ஆகியவை, ஒவ்வொரு கண்டத்திலும் உள்ள தொழிலாளர்கள் தாங்கள் ஒரே மாதிரியான வங்கிகளையும், ஒரே மாதிரியான நிறுவனங்களையும் மற்றும் ஒரே மாதிரியான அரசாங்கங்களையும் எதிர்கொள்கிறோம் என்பதைக் கண்டறிவதற்கான இரத்த நாளங்களாக (தமனிகளாக) செயல்படுகின்றன.
80. இந்த ஒன்றுகூடலின் மனித அடிப்படையானது, சர்வதேசத் தொழிலாளி வர்க்கம் அடைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க மற்றும் முன்னெப்போதும் இல்லாத அளவிலான வளர்ச்சியாகும். சர்வதேசத் தொழிலாளர் அமைப்புகளின் கணக்கீட்டின்படி, தற்போதைய உலகளாவிய தொழிலாளர் படை சுமார் 350 கோடி மனிதர்களைக் கொண்டுள்ளது. இது வரலாற்றிலேயே ஒன்றுதிரண்ட மிகப்பெரிய சமூக சக்தியாகும். அத்துடன், மனிதகுலத்தில் பெரும்பான்மையானோர் இப்போது நகரங்களில் வசிக்கின்றனர். இந்த மைல்கல் தற்போதைய நூற்றாண்டில்தான் முதன்முறையாக எட்டப்பட்டுள்ளது.
81. ஆசியாவின் தொழில் துறைத் தொழிலாளர் வர்க்கம் மட்டுமே, 1917-ல் இருந்த ஒட்டுமொத்த உலகப் பாட்டாளி வர்க்கத்தை விடப் பல மடங்கு பெரியதாகும். சுமார் 75 கோடி (முக்கால் பில்லியன்) எண்ணிக்கையைக் கொண்ட சீனாவின் தொழிலாளர் வர்க்கம், உலக வரலாற்றிலேயே மிகப்பெரியதாகும். இந்தியாவில் நடைபெற்ற பொது வேலைநிறுத்தங்கள், ஒரே நாளில் 20 கோடிக்கும் (200 மில்லியன்) அதிகமான தொழிலாளர்களை மீண்டும் மீண்டும் அணிதிரட்டியுள்ளன. இவை, மனிதகுலம் இதுவரை மேற்கொண்ட மிகப்பெரிய கூட்டு நடவடிக்கைகளாகும். நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு, தூய குடும்பம் (The Holy Family) என்ற நூலிருந்து மீண்டும் மீண்டும் சுட்டிக்காட்டும் ஒரு பத்தியில், இந்த வெகுஜன மக்களுக்கும் அவர்களின் வரலாற்றுப் பணிக்கும் இடையிலான தொடர்பை நிர்வகிக்கும் விதியை மார்க்ஸும் எங்கெல்ஸும் நிறுவினர்: எனவே, “வரலாற்று நடவடிக்கையின் முழுமையான தன்மையுடன் இணைந்து, அந்தச் செயலை மேற்கொள்ளும் மக்கள் திரளின் அளவும் அதிகரிக்கும். அரசியல் கண்ணோட்டத்தில், இந்த நுண்ணறிவு ஐன்ஸ்டீனின் E = mc² எனும் சமன்பாட்டைப் போலவே முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.
82. இந்தக் கூற்றை தலைகீழாகவும் வாசிக்கலாம். அவ்வாறு வாசிக்கும்போதே, எமது சகாப்தத்திற்கான அதன் முழுமையான முக்கியத்துவம் புலப்படுகிறது. இப்போது நடவடிக்கைக்குள் இழுக்கப்படும் வெகுஜனத்தின் அளவே, நெருங்கிவரும் வரலாற்று நடவடிக்கையின் முழுமையின் அளவுகோலாகும். நகரங்களில் குவிந்துள்ள, இதுவரை உருவாக்கப்பட்டதிலேயே மிகவும் ஒருங்கிணைந்த உற்பத்தி அமைப்பால் பிணைக்கப்பட்டுள்ள, அதேவேளையில் உலகப் போர், சர்வாதிகாரம் மற்றும் சமூக வறுமை ஆகியவற்றை ஒரே நேரத்தில் எதிர்கொள்ளும் மூன்றரை பில்லியன் மக்கள் கொண்ட ஒரு சமூக சக்தியை, வெறும் ஒரு போராட்டத்திற்காக வரலாறு ஒன்றிணைக்கவில்லை. இதுவரை மேற்கொள்ளப்பட்டதிலேயே மிக முழுமையான சமூக மாற்றத்திற்காகவே — அதாவது உலக சோசலிசப் புரட்சிக்காகவே — அந்தச் சக்தி ஒன்றிணைக்கப்பட்டு வருகிறது..
83. 2020-ஆம் ஆண்டிற்கான முன்னோக்கு இந்த தசாப்தத்தின் தீர்க்கமான போக்காக அடையாளம் கண்ட தொழிலாள வர்க்கத்தின் தீவிரமடையும் போக்கு, தற்போது தெளிவாகவே நிகழ்ந்து வருகிறது. 2018-2019 காலகட்டத்தில் காணப்பட்ட உலகளாவிய எழுச்சிகளை — அதாவது பிரான்சில் மஞ்சள் சீருடை இயக்கம், சிலி முதல் சூடான் வரை நடைபெற்ற பாரிய வெகுஜன எழுச்சிகள் மற்றும் அமெரிக்காவில் மீண்டும் தொடங்கிய வேலைநிறுத்தப் போராட்டங்கள் ஆகியவற்றை — அந்த அறிக்கை தனது ஆய்வின் தொடக்கப் புள்ளியாகக் கொண்டிருந்தது. அதனைத் தொடர்ந்து வந்த ஆறரை ஆண்டுகால நிகழ்வுகள், இந்தப் போக்கு விரிவடைந்து வரும் அளவிலேயே தொடர்வதை உறுதிப்படுத்தியுள்ளன.
84. கோவிட் பெருந்தொற்று, திரளான தொற்றை உருவாக்கும் திட்டமிட்டக் கொள்கையின் மூலமாக முப்பது மில்லியனுக்கும் அதிகமான உயிர்களைப் பலிகொண்டது. இது, உயிரையே இலாபத்திற்குப் அடிபணிய வைக்கும் கொடூரமான வடிவத்தை அம்பலப்படுத்தியதோடு, அனைத்துக் கண்டங்களிலும் வேலைநிறுத்த அலைகளைத் தூண்டியது. பிரெஞ்சு ஓய்வூதியப் போராட்டங்கள், பிரிட்டிஷ் வேலைநிறுத்த அலைகள், அமெரிக்க வாகன, சரக்கு மற்றும் சுகாதாரத் துறை வேலைநிறுத்தங்கள், தெற்கு ஐரோப்பா மற்றும் தெற்காசியா முழுவதும் நடந்த பொது வேலைநிறுத்தங்கள், காஸா இனப்படுகொலைக்கு எதிரான இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்கள், மற்றும் மூன்று “மன்னர்கள் வேண்டாம்” போராட்டங்கள் —அமெரிக்க வரலாற்றில் ஒரே நாளில் நடந்த மிகப்பெரிய ஆர்ப்பாட்டங்கள்— ஆகிய அனைத்தும் ஒரு ஒற்றை ஏறுமுக வளைவரைப் போக்கை உருவாக்குகின்றன. அமெரிக்காவில் எண்பது ஆண்டுகளாக நிலவி வந்த ஒரு விலக்கப்பட்ட கருத்தாக்கமாக இருந்துவந்த சோசலிசம், மீண்டும் தலைதூக்கத் தொடங்கியுள்ளது. இது அமெரிக்க ஜனநாயக சோசலிஸ்டுகளால் (DSA) மீண்டும் ஜனநாயகக் கட்சியை நோக்கியே திருப்பப்படும் ஒரு சிதைந்த வடிவமாக இருந்தாலும், எந்தவொரு அமைப்பாலும் நிரந்தரமாகக் கட்டுப்படுத்த முடியாத ஒரு நனவான மாற்றத்தையே இவை வெளிப்படுத்துகின்றன.
85. வட அமெரிக்காவில், ஒரு சமூக சக்தியாக அழிந்துபோனதாக அறிவிக்கப்பட்ட ஒரு வர்க்கம், ஒவ்வொரு துறையிலும் மீண்டும் தனது போராட்டத்தைத் தொடங்கியுள்ளது—அமேசான் மற்றும் யுபிஎஸ் (UPS) நிறுவனங்களில் வெடித்த கிளர்ச்சிகள், மற்றும் கண்டம் தழுவிய அளவில் ஒருங்கிணைந்த தொழிலாளி வர்க்கத்தின் நுழைவை ஒரே சக்தியாக அறிவித்த மெக்சிக்கோவின் மாடமோரோசில் இடம்பெற்ற (Matamoros) தன்னிச்சையான வேலைநிறுத்தங்கள் ஆகியவை இதற்குச் சான்றாகும். தொழிற்சங்கங்களுக்குள், 90 சதவீதத்திற்கும் அதிகமான ஒப்பந்த நிராகரிப்புகளும், UAW தலைவர் தேர்தலுக்கான வில் லெஹ்மன் (Will Lehman) பிரச்சாரத்திற்கு கிடைத்த வரவேற்பும், தொழிற்சங்க அதிகாரத்துவத்திற்கு எதிரான கிளர்ச்சியைப் பதிவு செய்கின்றன. உலக ஏகாதிபத்தியத்தின் மிக முக்கிய மையப் பகுதியான அமெரிக்காவிலேயே இந்த நனவு விரிவடைந்து வருகிறது. மேலும், அமெரிக்க மேலாதிக்கமானது எந்தத் தொழிலாளி வர்க்கத்தின் அமைதியான சம்மதத்தை ஒரு முன்நிபந்தனையாகக் கொண்டுள்ளதோ, அதே தொழிலாளி வர்க்கத்திற்குள்ளேயே இது நிகழ்கிறது. இது அவர்களின் பொருளாதார மற்றும் அரசியல் போராட்டங்களை ஒரே நீரோட்டமாக ஒருங்கிணைக்கிறது.
86. ஆப்பிரிக்காவில், உலகின் மிக இளமையான மற்றும் மிக வேகமாக வளர்ந்து வரும் தொழிலாளி வர்க்கம், உலக வரலாற்றிலேயே முக்கியத்துவம் வாய்ந்த ஒரு புரட்சிகர சக்தியாக உருவெடுத்து வருகிறது. நைஜீரியாவில் நடைபெற்ற பொது வேலைநிறுத்தங்கள், நாடாளுமன்றத்தை முற்றுகையிட்ட கென்ய இளைஞர்களின் எழுச்சி மற்றும் தென் ஆப்பிரிக்கத் தொழிலாளி வர்க்கத்தின் வேலைநிறுத்தப் போராட்டங்கள் ஆகியவை, இருபத்தியோராம் நூற்றாண்டின் உலகப் புரட்சியின் மையத்தில் நிலைபெறவிருக்கும் ஒரு வர்க்கத்தின் ஆரம்பகட்ட நடவடிக்கைகளாகும்.
87. ரஷ்யாவிலும் சீனாவிலும், ஏகாதிபத்தியத்தின் சுற்றிவளைப்பும் ஆத்திரமூட்டல்களும், அந்த இரு தன்னலக்குழுக்களின் ஆட்சிகளும் தங்கியிருக்கும் அடக்குமுறையின் வரலாற்று நினைவுகளை மீண்டும் உயிர்ப்பிக்கின்றன. ரஷ்யாவில், கொள்ளையடிக்கப்பட்ட சோவியத் சொத்துக்களைப் பாதுகாப்பதற்காக நடத்தப்பட்ட போரில், தொழிலாளர்கள் உயிரிழந்தோர் பட்டியலில் இடம்பெறுகின்றனர். 1917-ஆம் ஆண்டிலிருந்து தொழிலாளர்கள் என்ன முடிவுக்கு வருவார்கள் என்று அஞ்சுவதால், அந்த ஆட்சி லெனினைக் கண்டிக்கிறது. சீனாவில், அதன் இராணுவச் செலவினங்களுக்கு நிகரான உள்நாட்டுப் பாதுகாப்புக்கான நிதி ஒதுக்கீட்டைக் கொண்ட ஒரு அரசு, சீன கம்யூனிஸ்ட் கட்சி தனது பிரதான எதிரியை எங்கே காண்கிறது என்பதற்குச் சான்றாக விளங்குகிறது. இந்த இரு நாடுகளிலும் வரவிருக்கும் இயக்கங்கள், வாஷிங்டனிலிருந்து ஒழுங்கமைக்கப்பட்ட வண்ணப் புரட்சிகளாக இருக்காது. அவை ஏகாதிபத்தியத்திற்கும் தேசிய தன்னலக்குழுக்களுக்கும் எதிராக ஒருசேர இயக்கப்படும். மேலும், ஸ்டாலினிசத்திற்கு எதிராக நான்காம் அகிலம் பாதுகாத்த மரபிலேயே அவற்றுக்கான பதில்களையும் கண்டறியும்.
88. இந்த இயக்கத்திற்கும் அதன் அரசியல் வெளிப்பாட்டிற்கும் இடையில் நிற்பது புரட்சிகர தலைமையின் நெருக்கடியாகும். இந்த தலைமைமைப் பிரச்சினை தானாகவே தீர்ந்துவிடும் என்று நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு (ICFI) ஒருபோதும் கருதியதில்லை. வெகுஜன இயக்கங்கள் இன்னமும் அரசியல் ரீதியாகச் சிறைபிடிக்கப்பட்ட நிலையிலேயே உள்ளன. “மன்னர்கள் வேண்டாம்” போராட்டங்கள், போரின் கட்சியான ஜனநாயகக் கட்சியை நோக்கியே மீண்டும் திசைதிருப்பப்பட்டுள்ளன. தொழிற்சங்க அதிகாரத்துவங்கள், போர்ப் பொருளாதாரத்தின் தொழில்முறைப் பொலிஸாராக மேன்மேலும் பகிரங்கமாகச் செயல்படுகின்றன.
89. மில்லியன் கணக்கான உறுப்பினர்களைக் கொண்ட AFL-CIO தொழிற்சங்கமானது, ஈரான் போர் குறித்து எந்த அறிக்கையும் வெளியிடவில்லை. UAW தொழிற்சங்கத் தலைவர், இரண்டாம் உலகப் போரின் “ஜனநாயகத்தின் ஆயுதக் களஞ்சியம்” என்ற பழைய ஏகாதிபத்தியப் புராணத்தைத் தனது முன்மாதிரியாகக் குறிப்பிடுகிறார். அவர் தலைமைதாங்கும் தொழிற்சங்க இயந்திரம், வேலைநிறுத்த வாக்கெடுப்புகளைக் சீர்குலைத்து, 90 சதவீதத்திற்கும் அதிகமான வாக்கு வித்தியாசத்தில் உறுப்பினர்களால் நிராகரிக்கப்பட்ட ஒப்பந்தங்களை வலுக்கட்டாயமாகத் திணிக்கிறது. மேலும், சாமானிய உறுப்பினர்களின் எதிர்ப்பை தணிக்கை, முறைகேடான தேர்தல்கள் மற்றும் மிரட்டல்கள் மூலம் அது எதிர்கொள்கிறது. வில் லேஹ்மனின் பிரச்சாரம் மற்றும் அவரது சட்டப் போராட்டங்கள் விரிவாக ஆவணப்படுத்தியுள்ளவாறு, அரசு மற்றும் முதலாளிகளுடன் இந்த தொழிற்சங்க அதிகாரத்துவம் கொண்டுள்ள கூட்டணியை இனி உறுப்பினர்களிடம் தர்க்கரீதியான வாதங்கள் மூலம் நியாயப்படுத்த முடியாது என்பதே இதற்குக் காரணமாகும்..
90. தொழிற்சங்க அதிகாரத்துவங்களிடமிருந்து தொழிலாளர்களுக்கே அதிகாரத்தை மாற்றுவது என்ற முன்னோக்கின் அடிப்படையில், 2021 ஆம் ஆண்டில் சாமானிய தொழிலாளர் குழுக்களின் சர்வதேச தொழிலாளர் கூட்டணி (IWA-RFC) தொடங்கப்பட்டது.
தொடரும்…
