இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.
இலங்கையின் சோசலிச சமத்துவக் கட்சியின் (சோ.ச.க.) நான்காவது தேசிய பேராளர் மாநாடு செப்டம்பர் 11-13 அன்று நடைபெற்றது. போருக்கு எதிராகப் போராடியதற்காக 15 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட உக்ரேனிய சோசலிஸ்டான போக்டன் சிரோட்டியுக்கை விடுதலை செய்வதற்கான பிரச்சாரத்திற்கு ஆதரவாக பின்வரும் தீர்மானத்தை அது ஏகமனதாக நிறைவேற்றியது. போக்டனை விடுதலை செய்வதற்கான பிரச்சாரம் தொடர்பான மேலதிக தகவல்களுக்கு, freebogdan.org இணையதளத்தைப் பார்வையிடவும்.
1. சோசலிச சமத்துவக் கட்சியின் (இலங்கை) இந்த நான்காவது பேராளர் மாநாடு, போருக்கு எதிராகப் போராடியதற்காக ஆகஸ்ட் 11 அன்று 15 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட உக்ரேனிய சோசலிஸ்டான போக்டன் சிரோட்டியுக்கை விடுதலை செய்வதற்காகப் போராடுவதை எமது கட்சியின் மத்திய அரசியல் பணியாக அறிவிக்கிறது. போக்டன் எந்தவொரு உளவு அல்லது நாசவேலைச் செயலுக்காகவும் தண்டிக்கப்படவில்லை, மாறாக அவரது கருத்துக்களுக்காகவே — உலக சோசலிச வலைத் தளத்தில் வெளியிடப்பட்ட ஆறு கட்டுரைகளுக்காகவே — குற்றவாளியாகத் தீர்ப்பளிக்கப்பட்டார். இந்தத் தீர்ப்பு ட்ரொட்ஸ்கிசத்திற்கு எதிரானதும், 1938 முதல் நான்காம் அகிலம் போராடி வரும் வரலாற்று உண்மைக்கு எதிரானதுமான ஒரு தீர்ப்பாகும்.
2. போக்டனுக்கு எதிரான வழக்கை, தொழிலாள வர்க்கத்தின் மீது மற்றும் உக்ரேனுக்குள் பெருகிவரும் போர் எதிர்ப்பு உணர்வின் மீதானதுமான செலென்ஸ்கி ஆட்சியின் விரோதப் போக்கில் இருந்து பிரிக்க முடியாததாகும். இந்த ஆட்சி, நாஜி ஒத்துழைப்பாளரான பண்டேராவையும் Waffen-SS கலீசியா பிரிவையும் “தேசிய வீரர்கள்” என்று புனர்வாழ்வளிக்கிறது; தேர்தல்கள் இரத்து செய்யப்பட்டும் எதிர்க்கட்சிகள் தடை செய்யப்பட்டும் இராணுவச் சட்ட ஆணைகளின் மூலம் ஆட்சி செய்கிறது; இராணுவத்திலிருந்து விலகியதற்காக படையினருக்கு எதிராக 3 இலட்சத்துக்கும் அதிகமான குற்றவியல் வழக்குகளைத் தாக்கல் செய்துள்ளது; மற்றும் 2025ல், மக்கள் தொகையில் மூன்றில் இரண்டு பங்கினர் போருக்கு பேச்சுவார்த்தை மூலமான முடிவைக் கோரினர். போக்டனுக்கு விதிக்கப்பட்ட தண்டனையானது, இந்த எதிர்ப்பை அச்சுறுத்திப் பணிய வைப்பதற்கான ஆட்சியின் முயற்சியாகும் — போரை எதிர்ப்பதானது இத்தகைய கடுமையான தண்டனைகளைக் கொண்டுவரும் என்பதை நிரூபிப்பதே அதன் நோக்கமாகும். போக்டனைக் கண்டனம் செய்வதன் மூலம், ரஷ்யாவுக்கு எதிரான நேட்டோவின் பினாமிப் போரை நியாயப்படுத்த முன்வைக்கப்படும் “ஜனநாயகத்திற்கான போர்” என்ற மோசடியை பாசிச நீதிமன்றம் அம்பலப்படுத்தியுள்ளது.
3. போக்டனை விடுதலை செய்வதற்கான பிரச்சாரத்திற்கு பெருகிவரும் வெகுஜன ஆதரவைப் பற்றியும், அதற்கு முதலாளித்துவ ஊடகங்கள் மௌனச் சதியுடன் பிரதிபலித்துள்ளமை பற்றியும் பேராளர் மாநாடு மிகுந்த அக்கறையுடன் சுட்டிக்காட்டுகிறது. — பிரிட்டனில் அஞ்சல் ஊழியர்கள், இந்தியாவில் மாருதி சுஸூகி தொழிலாளர்கள், ஆஸ்திரேலியா, ஜேர்மனி, இலங்கை மற்றும் அமெரிக்காவில் உள்ள தொழிலாளர்களும், கிழக்கு ஐரோப்பாவிலிருந்து புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், மாணவர்கள் மற்றும் கலைஞர்கள் மற்றும் வரலாற்றாசிரியர்களுமாக உலகெங்கிலும் உள்ள தொழிலாளர்களும் இளைஞர்களும் போக்டனை விடுதலை செய்யுமாறு கோரியுள்ளனர். ஆயினும்கூட, எந்தவொரு பிரதான மேற்கத்திய செய்தி நிறுவனமும் இந்த வழக்கைப் பற்றி செய்தி வெளியிட்டிருக்காத அதேவேளை, உக்ரேனில் WSWS இணையதளமும் தடை செய்யப்பட்டுள்ளது. இது கவனக்குறைவினால் ஏற்பட்டதல்ல. ஒரு சிலர் மட்டுமே இந்தப் பிரச்சாரத்திற்கு ஆதரவாக நிற்கத் துணிந்துள்ள நிலையில், ஊடகங்களின் மௌனமானது செலென்ஸ்கி ஆட்சிக்கு வழங்கப்படும் அரசியல் பாதுகாப்பாகும். ஆளும் வர்க்கங்கள் எவ்வாறு தொழிலாள வர்க்கத்திற்கு எதிராக பாசிச உக்ரேனிய அரசுடன் நிற்கின்றனவோ, அதேபோல் ஒவ்வொரு நாட்டினதும் முதலாளித்துவ ஊடகங்களும் அவற்றுக்கு சேவை செய்யும் ஆளும் வர்க்கங்களுடன் நிற்கின்றன என்பதற்கு இதுவே மிகத் தெளிவான நிரூபணமாகும். இந்த மௌனத்தை உடைப்பதே ஒரு புரட்சிகர நடவடிக்கையாகும்.
4. ஆகவே, போக்டனை விடுதலை செய்வதற்கான பிரச்சாரம் ஒரு இரண்டாம் நிலையான அல்லது மனிதாபிமானப் பணியல்ல என்று பேராளர் மாநாடு தீர்மானிக்கிறது. அது, இரு ஆட்சிகளுக்கும் எதிராக, திட்டவட்டமானதும் வெற்றிகொள்ளக்கூடியதுமான போராட்டத்தில், ரஷ்ய மற்றும் உக்ரேனிய தொழிலாளர்கள் ஐக்கியப்பட வேண்டும் என்ற மைய விடயத்தை அது முன்வைப்பதால், அது போருக்கு எதிரான போராட்டத்தின் மிகவும் முன்னேற்றமான வடிவமாகும். போக்டனைப் பாதுகாப்பதற்கான போராட்டத்தில் இணையும் ஒவ்வொரு தொழிலாளரும், போருக்கு எதிரான போராட்டத்தில் இணைகிறார்.
5. பேராளர் மாநாடு பின்வரும் பணிகளுக்கு கட்சியை அர்ப்பணிக்கிறது: போர்-ஆதரவு தொழிற்சங்க அதிகாரத்துவங்களிலிருந்து சுயாதீனமாக, சாதாரண தொழிலாளர் குழுக்கள் மற்றும் தீர்மானங்களின் மூலம் தொழிற்சாலைகள் மற்றும் வேலைத்தளங்களில் பிரச்சாரத்தை கட்டியெழுப்புதல்; சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக இளைஞர் மற்றும் மாணவர் (IYSSE) அமைப்பின் ஊடாக இளைஞர்கள் மற்றும் மாணவர்களை நோக்கி பிரச்சாரத்தை திருப்புதல்; ஊடகங்களினதும் போலி-இடதுகளினதும் தணிக்கையையும் மௌனமும் தற்செயலான ஒன்றல்ல, மாறாக, அது அரசியல் நோக்கம் கொண்டதாகும் என்பதை அம்பலப்படுத்துதல்; ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்பதற்கான போராட்டத்துடன் இந்தப் பிரச்சாரத்தை ஐக்கியப்படுத்துதல்.
6. போக்டன் விடுதலை செய்யப்படும் வரை, பிரச்சாரத்தை அபிவிருத்தி செய்வதற்கான அனைத்து முயற்சிகளையும் இரட்டிப்பாக்குவதற்கு பேராளர் மாநாடு உறுதியளிக்கிறது. ஒரு பாசிச அரசின் நீதிமன்றங்களால் அவரது விடுதலையை வெல்ல முடியாது; போருக்கு முடிவு கட்டவும் அதன் இரு பக்கங்களிலும் உள்ள ஆட்சிகளைத் தூக்கியெறியவும் கூடிய ஒரே சமூக சக்தியான சர்வதேச தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்டுவதன் மூலமே அவரது விடுதலை வென்றெடுக்கப்படும். ரஷ்யா மற்றும் உக்ரேனின் தொழிலாளர்களே, ஐக்கியப்படுங்கள்!
மேலும் படிக்க
- பாசிச உக்ரேனிய நீதிமன்றம், போரை எதிர்க்கும் சோசலிசவாதியான போக்டன் சிரோட்டியுக்கிற்கு 15 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது
- போக்டன் சிரோட்டியுக்கின் மேல்முறையீடு ஓர் அரசியல் சதித்திட்டத்தை அம்பலப்படுத்துகிறது
- இலங்கையின் முன்னணி தமிழ் பத்திரிகை போக்டன் சிரோட்டியுக்கின் விடுதலையை கோரி கட்டுரை வெளியிட்டுள்ளது
