பகிரங்க கூட்டம்: காற்றாலை மின் திட்டத்திற்காக நிலம் அபகரிக்கப்படுவதை எதிர்த்திடு! போராட்ட ஒருங்கிணைப்பாளர் ஆனந்தநடராஜன் மீதான அரச பழிவாங்கலை நிறுத்து!

கிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரி பிரதேச செயலகப் பிரிவில் வசிப்பவர்களுக்குச் சொந்தமான நிலங்களை அரசாங்கம் வலுக்கட்டாயமாக கையகப்படுத்த மேற்கொள்ளும் தொடர்ச்சியான முயற்சிகளை எதிர்த்து, இலங்கை சோசலிச சமத்துவக் கட்சியும் பூநகரி பிரதேச தொழிலாளர்-விவசாயிகள்-மீனவர் நடவடிக்கைக் குழுவும் அக்டோபர் 02 அன்று, ஒரு பொதுக்கூட்டத்தை நடத்தவுள்ளன.

இக்கூட்டம் அக்டோபர் 02, காலை 10:00 மணிக்கு கிராஞ்சி பொதுநோக்கு மண்டபத்தில் (RDS) நடைபெறும்.

தங்கள் நில உரிமைகளைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடுவதற்காக நடைபெறும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்குமாறு தொழிலாளர்கள், மீனவர்கள், விவசாயிகள், இல்லத்தரசிகள் மற்றும் இளைஞர்களுக்கு நாங்கள் அழைப்பு விடுக்கிறோம். முன்னர், அரச நில அபகரிப்புக்கு எதிராக போராட்டங்களை ஒருங்கிணைத்த ஒன்றுபட்ட மக்கள் அமைப்பின் தலைவரான சங்கரப்பிள்ளை ஆனந்தநடராஜன் மீது அரச அதிகாரிகள் மேற்கொண்டுள்ள பழிவாங்கும் நடவடிக்கையையும் இக்கூட்டம் எதிர்க்கும்.

சர்வதேச நாணய நிதியத்தின் கட்டளைகளை பின்பற்றும் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயகவின் அரசாங்கம், கிராஞ்சிப் பகுதியில் காற்றாலை மின் திட்டத்திற்காக நிலத்தைக் கையகப்படுத்துவதில் உறுதியாக உள்ளது. சீமெந்து உற்பத்திக்கான சுண்ணாம்புக்கல்லை தோண்டியெடுப்பதற்காக, பொன்னாவெளியில் உள்ள 3,000 ஏக்கர் நிலத்தை தனியார் நிறுவனமான டோக்கியோ சீமெந்து கூட்டுத்தாபனத்துக்கு வழங்கும் திட்டத்தையும் அப்பகுதி மக்கள் எதிர்க்கின்றனர். மணல் அகழ்வுத் திட்டம் ஒன்றும் அரசாங்கத்தின் செயல்திட்டத்தில் இடம்பெற்றுள்ளது.

தாங்கள் சட்டப்பூர்வ நில உரிமைகளையும் வாழ்வாதாரங்களையும் இழந்துவிடுவோமோ என்று குடியிருப்பாளர்கள் அச்சமடைகின்றனர். அவர்கள், தங்களின் பரம்பரை நிலங்களை இழப்பது மட்டுமின்றி, விவசாய நிலங்களுக்குள் கடல்நீர் புகுதல், நிலத்தடி நீரில் உப்புத்தன்மை அதிகரித்தல், சுத்தமான குடிநீர் தட்டுப்பாடு தீவிரமடைதல் மற்றும் பல்வேறு சுற்றுச்சூழல் மற்றும் சமூகப் பிரச்சினைகளையும் எதிர்கொள்கின்றனர்.

ஏழைத் தொழிலாளர்கள், மீனவர்கள் மற்றும் விவசாயிகளான இப்பிரதேச மக்கள், 26 ஆண்டுகள் நீடித்த இரத்தக்களறி தமிழர்-விரோத இனவாத யுத்தத்தினால் கடுமையாகப் பாதிக்கப்பட்டவர்கள். போர் முடிந்து 17 ஆண்டுகள் கடந்த பின்னரும், அவர்கள் அந்தப் பேரழிவிலிருந்து மீள்வதற்காக ஒரு முடிவற்ற போராட்டத்தில் இன்னும் ஈடுபட்டுள்ளனர்.

திசநாயக்க அரசாங்கம், மக்களின் நியாயமான கவலைகளுக்குத் தீர்வு காணாமல், தனியார் இலாபத்தைப் பாதுகாப்பதற்காக, “பொருளாதார அபிவிருத்தி” என்ற பெயரில் இத் திட்டங்களைச் செயல்படுத்த முற்படுகிறது.

செப்டம்பர் 7 அன்று, வனவளத்துறையைச் சேர்ந்தவர்கள் என்று கூறிக்கொண்ட ஒரு குழுவினரால் ஒன்றுபட்ட மக்கள் அமைப்பின் தலைவர்களில் ஒருவரான ஆனந்தநடராஜன் கைது செய்யப்பட்டு, தாக்கப்பட்டு பொலிசிடம் ஒப்படைக்கப்பட்டார். ஆகஸ்ட் 7 அன்று பூநகரியில் நடைபெற்ற பெருந்திரளான மக்கள் பங்குபற்றிய மறியல் போராட்டம் உட்பட, நில அபகரிப்புக்கு எதிரான ஒன்றுபட்ட மக்கள் அமைப்பின் போராட்டங்களுக்குத் தலைமை தாங்கியதைத் தொடர்ந்தே அவர் கைது செய்யப்பட்டார். அரசுக்குச் சொந்தமான நிலத்தை சட்டவிரோதமாக ஆக்கிரமித்ததாகக் குற்றம் சாட்டி அவர் மீது வழக்குத் தொடர அரசு அதிகாரிகள் முயற்சித்து வருகின்றனர். இது மக்களிடையே நிலவும் எதிர்ப்புக் குரலை ஒடுக்குவதற்கான ஒரு முயற்சியாகும்.

கிளிநொச்சி மாவட்டத்தின் கிராஞ்சி, வேரவில், வலைப்பாடு, பொன்னாவெளி, பாலாவி ஆகிய கிராமங்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான மக்கள், தங்கள் பூர்வீக நிலங்களை இழக்கக்கூடாது என்பதில் உறுதியாக நின்று, அந்த நிலங்களைக் கையகப்படுத்த அரசாங்கம் மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு எதிராகப் பல மாதங்களாகப் போராடி வருகின்றனர்.

தமிழ் முதலாளித்துவக் கட்சிகளைப் பொறுத்தவரை, மக்களிடையே தாங்கள் இழந்த செல்வாக்கை மீண்டும் கட்டியெழுப்புவதற்கான ஒரு வழியாகவே அவை இந்தப் பிரச்சினையைப் பார்க்கின்றன. அரசாங்கத்தின் மீது அழுத்தம் கொடுத்துத் தீர்வு காணுமாறு மக்களைக் கோரும் ஒன்றுபட்ட மக்கள் அமைப்பின் தலைவர்களின் வேலைத்திட்டமும் ஒரு மாயையாகும். சர்வதேச நாணய நிதியத்தின் சிக்கன நடவடிக்கைகளைச் செயல்படுத்துவதன் மூலம் சர்வதேச மூலதனத்தினதும் இலங்கையின் பெருமுதலாளித்துவ வர்க்கத்தினதும் நலன்களுக்குச் சேவை செய்வதிலேயே, அரசாங்கம் முனைப்புடன் ஈடுபட்டுள்ளது.

சோசலிசக் கொள்கைகளுக்கான போராட்டத்தின் பாகமாக, பாதிக்கப்பட்ட மக்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான ஒரு வேலைத்திட்டம் பற்றி சோ.ச.க. மற்றும் பூநகரி பிரதேச தொழிலாளர்-விவசாயிகள்-மீனவர் நடவடிக்கைக் குழுவும் நடத்தும் கூட்டத்தில் கலந்துரையாடப்படும். இக்கூட்டத்திற்கு வருகைதந்து, இந்த முக்கியமான கலந்துரையாடலில் பங்கேற்குமாறு அழைப்பு விடுக்கின்றோம்.

இடம்: கிராஞ்சி பொதுநோக்கு மண்டபம் (RDS)

காலம்: ஓக்டோபர் 02, மு.ப 10

Loading