இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.
வட இலங்கையின் மீனவர்கள், தங்களின் வாழ்வாதாரத்திற்கு கடுமையான பாதிப்பை ஏற்படுத்தி வரும் இந்தியாவைச் சேர்ந்த வணிக மீன்பிடிப் படகுகளான ஆழ்கடல் இழுவை மீன்பிடி நடவடிக்கைகளுக்கு எதிராக ஆகஸ்ட் தொடக்கத்தில் போராட்டங்களை நடத்தியுள்ளனர்.
மீனவர்கள் இரு பக்கங்களிலிருந்தும் நெருக்குதலுக்கு உள்ளாகின்றனர்: ஒருபுறம் பெரிய மீன்பிடி நிறுவனங்களையும் மறுபுறம் மக்கள் விடுதலை முன்னணி தலைமையிலான தேசிய மக்கள் சக்தி (ஜே.வி.பி./தே.ம.ச.) அரசாங்கத்தால் நடைமுறைப்படுத்தப்படும் சர்வதேச நாணய நிதியம் கட்டளையிட்டுள்ள சிக்கன நடவடிக்கைகளையும் எதிர்கொள்கின்றனர்.
ஆகஸ்ட் 8 அன்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில், வட மாகாண மீனவர் சம்மேளனமானது இந்திய இழுவைப் படகுகள் இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைவது வட மாகாணத்தைக் கடந்து தெற்குக் கரையோரப் பகுதிகளுக்கும் பரவியுள்ளதாகத் தெரிவித்தது. சட்டவிரோத மீன்பிடியைத் தடுத்து நிறுத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அது கோரியது. இந்தச் சம்மேளனமும் இதேபோன்ற அமைப்புகளும் தமிழ் முதலாளித்துவக் கட்சிகளுடன் இணைந்து, மீனவ சமூகங்களுக்குள் நியாயமாக எழுந்துள்ள கோபத்தைப் பெரிய வர்த்தக நிறுவனங்களுக்கு எதிராகத் திருப்புவதற்குப் பதிலாக, இனவாத மற்றும் தேசியவாத திசைகளில் திருப்பிவிட முயல்கின்றன.
ஜூலை 29 அன்று நடைபெற்ற போராட்டத்தில், ஐம்பதுக்கும் மேற்பட்ட கல்நாரிழைப் படகுகளில் வந்த ஏறத்தாழ 300 மீனவர்கள் வட இலங்கையின் குறிகாட்டுவான் இறங்குதுறையில் ஒன்றுகூடினர். யாழ்ப்பாண நகரத்திலிருந்து 31 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள குறிகாட்டுவான் தீவு, போரினால் சீரழிக்கப்பட்ட யாழ்ப்பாணக் குடாநாட்டில் நயினாதீவு மற்றும் நெடுந்தீவு ஆகிய இடங்களுக்குச் செல்லும் படகுப் போக்குவரத்துக்கான மையமாகும்.
தீவின் மீனவ சமூகம் பேரழிவுகரமான இழப்புகளைச் சந்தித்ததைத் தொடர்ந்து வெடித்த பல போராட்டங்களில் இதுவும் ஒன்றாகும். ஜூலை 16 முதல் 18 வரையிலான மூன்று நாட்களில் மட்டும், இந்திய இழுவைப் படகுகளால் மீன்பிடி வலைகளுக்கு 50 மில்லியன் ரூபாய் பெறுமதியான சேதம் ஏற்பட்டது. ஆழ்கடல் இழுவை மீன்பிடிப் படகுகள் கடல் அடியிலும் பாரிய சேதத்தை ஏற்படுத்துவதுடன், மீன் வளங்களையும் குறைக்கின்றன.
கறுப்புக் கொடிகளை ஏந்தியவாறு, போராட்டக்காரர்கள் “எமது எல்லைகளை மீறாதீர்கள்” என்று முழக்கமிட்டனர். மீனவர்கள் தமது வாழ்வாதார இழப்பு தொடர்பாக உண்மையான குறைகளை வெளிப்படுத்தி வருகின்றனர். எனினும், போராட்ட ஏற்பாட்டாளர்கள் அவர்களின் கோபத்தை முதலாளித்துவ அமைப்புக்கும் பெரிய வர்த்தக நிறுவனங்களின் நலன்களைப் பாதுகாக்கும் அரசாங்கங்களுக்கும் எதிராகத் திருப்புவதற்குப் பதிலாக, பாக்கு நீரிணைக்கு அப்பால் உள்ள இந்திய மீனவர்களுக்கு எதிராகத் திருப்ப முயன்றனர்.
மீனவர் பிரதிநிதியொருவர் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயகவுக்கு அனுப்பப்பட்ட கடிதத்தை வாசித்தார். அதில், “இந்திய-இலங்கை உறவுகளை மேம்படுத்துவதற்காக நாட்டின் ஒரு பிரிவினரின் வாழ்வாதாரத்தை சமரசம் செய்வது ஏற்றுக்கொள்ள முடியாதது” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இலங்கை கடற்பரப்புக்குள் இந்திய இழுவைப் படகுகள் நுழைவதைத் தடை செய்ய வேண்டும் என்றும், உள்ளூர் மீனவ சமூகத்தினர் பாரம்பரிய மீன்பிடித் தளங்களைத் தடையின்றிப் பயன்படுத்த அனுமதிக்க வேண்டும் என்றும் கோருவதுடன் ஏற்பாட்டாளர்கள் தமது கோரிக்கைகளை மட்டுப்படுத்திக் கொண்டனர்.
போராட்டத்தில் உரையாற்றிய தமிழ் முதலாளித்துவ அரசியல்வாதிகள், இலங்கையின் ஆளும் உயரடுக்கிற்கு எதிராக எழும் கோபத்தைத் தேசியவாத திசையில் திருப்பிவிட முயன்றனர்.
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் (ACTC) மற்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் (TNPF) தலைவரான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், வடபகுதி மீனவர்களை வறுமையில் வைத்திருப்பதாக அரசாங்கத்தின் மீது குற்றஞ்சாட்டினார். ஆனால், இதற்காக அவரால் முன்மொழியப்பட்ட தீர்வு, “நாட்டின் கடல் எல்லைகளைப் பாதுகாப்பதற்காக” கடற்படையைப் பயன்படுத்துவதாக இருந்தது.
வடக்கு மற்றும் கிழக்கிலிருந்து இராணுவத்தை முழுமையாக வெளியேற்ற வேண்டும் என்ற நீண்டகாலக் கோரிக்கைகளுடன், வடபகுதி மீனவர்களுக்கு எதிரான வன்முறைகளில் கடற்படை கொண்டுள்ள வரலாற்றைப் பொறுத்தவரையில், இந்தக் கோரிக்கையை அவர் எவ்வாறு நியாயப்படுத்துகிறார் என்று உலக சோசலிச வலைத் தளத்தின் செய்தியாளர் அவரிடம் கேட்டார். பொன்னம்பலம் இந்தக் கேள்வியை நிராகரித்ததுடன், கடற்படை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மீண்டும் வலியுறுத்தினார். பல தசாப்தங்களாகத் தமிழ் மக்களை கொடூரமாக ஒடுக்கிய அதே இராணுவம், இந்திய மீனவர்களுக்கு எதிராகப் பயன்படுத்தப்படும்போது தமிழ் மக்களின் பாதுகாவலனாகச் சித்தரிக்கப்படுகிறது.
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் ஆதிக்கம் செலுத்தும் ஊர்காவற்றுறை பிரதேச சபையின் தலைவரும், ஊர்காவற்றுறை மீனவர் சம்மேளனத்தின் தலைவருமான அண்ணலிங்கம் அண்ணராசாவும் இந்தப் போராட்டத்தில் உரையாற்றினார். இந்திய இழுவைப் படகுகள் தொடர்பாகப் பல ஆண்டுகளாக முறைப்பாடுகள் முன்வைக்கப்பட்ட போதிலும், கொழும்பு, புதுடில்லி அல்லது தமிழ்நாடு மாநில அரசாங்கம் எதுவும் போதுமான நடவடிக்கை எடுக்கவில்லை என்று அவர் குற்றஞ்சாட்டினார்.
இந்தப் பிரச்சினை ஒரு மாதத்திற்குள் தீர்க்கப்படாவிட்டால், மீனவர்கள் கொழும்பிலுள்ள ஜனாதிபதி செயலகத்தை நோக்கிப் பேரணியாகச் செல்வார்கள் என்று கூறி, ஜே.வி.பி./தே.ம.ச. அரசாங்கத்திற்கு அவர் ஒரு போலியான காலக்கெடுவை விதித்தார். இலங்கையிலும் இந்தியாவிலும் உள்ள ஏனைய தொழிலாளர்கள், மீனவர்கள் மற்றும் விவசாயிகளிடமிருந்து ஆதரவைக் கோருவதற்குப் பதிலாக, தமிழர்கள் ஒரு “தனித்துவமான தேசியச் சமூகம்” என்றும், தங்களது கடல் வளங்களும் வாழ்வாதாரமும் பறிக்கப்படும்போது அவர்களால் மௌனமாக இருக்க முடியாது என்றும் கூறி இனவாத வேண்டுகோளை முன்வைத்தார்.
மற்றொரு கூட்டுறவுச் சங்கத் தலைவர், மீனவர்கள் “எந்தவொரு மானியத்தையும்” விரும்பவில்லை என்றும், இந்திய ஆழ்கடல் இழுவைப் படகுகள் தொடர்பான பிரச்சினைக்குத் தீர்வு காண்பதன் மூலம் “எமது வாழ்க்கை நிலைமைகளையும் கடல் வளங்களையும் பாதுகாக்க முடியும்” என்றும் கூறினார். இது ஒரு மோசடியாகும்.
ஈரானுக்கு எதிரான அமெரிக்க-இஸ்ரேலியப் போரின் காரணமாக இந்த ஆண்டின் தொடக்கத்தில் எரிபொருள் விலைகள் கடுமையாக உயர்ந்தபோது, ஏற்கனவே பாவனைக் கட்டணங்களை அதிகரித்து மானியங்களை இரத்துச் செய்திருந்த சர்வதேச நாணய நிதியத்தால் கட்டளையிடப்பட்ட தாக்குதல்கள் மேலும் தீவிரமடைந்தன. எனினும், இதே கூட்டுறவுச் சம்மேளனங்கள் எந்தவொரு போராட்டத்திற்கும் அழைப்பு விடுக்கவில்லை.
நாடு முழுவதிலும் உள்ள மீனவர்களைப் போலவே, வடபகுதி மீனவர்களும் தீவிரமடைந்து வரும் வறுமை, கடன் சுமை, தரமற்ற வீடுகள், போதிய நீர், மின்சார வசதியின்மை ஆகியவற்றை எதிர்கொள்கின்றனர்.
பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக 1983 முதல் கொழும்பில் அடுத்தடுத்து ஆட்சியில் இருந்த அரசாங்கங்கள் முன்னெடுத்த 26 ஆண்டுகால இனவாதப் போரின்போது, வடபகுதி மீனவ சமூகம் கொடூரமான கட்டுப்பாடுகளையும் ஒடுக்குமுறைகளையும் எதிர்கொண்டது. ஏற்கனவே பேரழிவை ஏற்படுத்திய இந்தப் போரின் விளைவுகளுடன் வாழ்க்கை நிலைமைகள் மற்றும் சமூக நிலைமைகள் மீதான தொடர்ச்சியான தாக்குதல்கள், மேலும் சேர்ந்து கொண்டுள்ளன.
மீனவக் குடும்பத்தைச் சேர்ந்த ஆனந்தராசா பியாக்ஸ்மினி, போராட்டத்தின் போது உலக சோசலிச வலைத் தளத்தின் செய்தியாளர்களிடம் கூறியதாவது: “எங்கள் குடும்பம் முழுவதும் இந்த வாழ்வாதாரத்திலேயே தங்கியுள்ளது. திங்கட்கிழமை முதல் புதன்கிழமை இரவு வரை நாங்கள் தூங்காமல் இருந்து, வலைகளைத் தயார் செய்வதுடன் வியாழக்கிழமை மீன்பிடிக்கச் செல்லும் படகுகளில் அவற்றை ஏற்றுவதற்கும் உதவுகிறோம்.” இந்த வலைகளை வாங்குவதற்காகக் குடும்ப நகைகளை அடகு வைத்து கடன்களையும் பெற்றதாக அவர் மேலும் தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து கூறியதாவது: “அவர்கள் வியாழக்கிழமை கடலுக்குச் சென்று வலைகளை விரித்துவிட்டு திரும்பி வந்தார்கள். மறுநாள் உடனடியாக மீண்டும் கடலுக்குச் செல்ல முடியாததால், சனிக்கிழமை காலையில் மீண்டும் சென்றார்கள். பின்னர் அவர்கள் எங்களைத் தொலைபேசியில் அழைத்து, ‘ஒரு வலைகூட மிஞ்சவில்லை’ என்று கூறினார்கள். அந்த வார்த்தைகளைக் கேட்ட கணமே எங்கள் இதயங்கள் உடைந்துபோயின.”
நெடுந்தீவைச் சேர்ந்த ஒரு மீனவர், தாங்கள் தொடர்ந்து இத்தகைய நிலைமையை எதிர்கொண்டு வருவதாகவும், அது மேலும் மோசமடைந்து வருவதாகவும் விளக்கினார். அனலைதீவு, நயினாதீவு மற்றும் மன்னார் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மீனவர்களும் இதேபோன்ற அனுபவங்களை விவரித்தனர்.
சிறிய அளவிலான மீன்பிடித் தொழிலின் பொருளாதார அடித்தளங்கள் சிதைந்து வருகின்றன. 60 வயதான மீனவர் ஒருவரின் மனைவியான குமாரேஸ்வரன் சாந்தினி, தங்களால் முன்னர் குறைந்த செலவுகளுடன் சமாளிக்க முடிந்ததாகவும், ஆனால் நிலைமை மாறிவிட்டதாகவும் உலக சோசலிச வலைத் தளத்திடம் தெரிவித்தார்: “இப்போது எரிபொருள் விலைகள் மிகப் பெரியளவில் அதிகரித்துள்ளன. ஒருவரால் தனியாக மீன்பிடிப் பயணத்திற்கான செலவுகளை ஏற்க முடியாது. அதனால்தான் இப்போது நான்கு அல்லது ஐந்து பேர் தங்களது பணத்தை ஒன்றாகச் சேர்த்து வலைகளை வாங்குவதற்கும், எரிபொருளைக் கொள்வனவு செய்வதற்கும், ஒரே படகை இணைந்து இயக்குவதற்கும் முன்வருகின்றனர்” என்று அவர் கூறினார். ஒரு வலை தொலைந்துவிட்டால், அந்தப் படகில் முதலீடு செய்த குடும்பங்கள் அதன் சுமையை ஏற்க வேண்டியிருக்கும். இதனால் அவர்கள் மேலும் கடனில் மூழ்குவார்கள்.
இந்த நெருக்கடியின் மையத்தில் பெண்கள் உள்ளனர். அவர்கள் மீன்பிடி வலைகளைத் தயார் செய்கின்றனர், கடன்களைப் பெறுவதற்கு ஏற்பாடு செய்கின்றனர், கடன் தவணைகளைச் செலுத்துகின்றனர், குடும்ப வரவு செலவுத் திட்டத்தைச் சமாளிப்பதற்காகப் போராடுகின்றனர். ஒரு பெண் உலக சோசலிச வலைத் தளத்திடம் கூறியதாவது: “பல குடும்பங்களுக்கு தங்களது கடன்களை எவ்வாறு திருப்பிச் செலுத்துவது என்று தெரியவில்லை. ஒரு கடனை அடைப்பதற்காகப் பணத்தைக் கடனாகப் பெறுகிறோம். பின்னர் மீண்டும் கடன் வாங்கி, அதற்கும் வட்டி செலுத்துகிறோம். இந்த முடிவில்லாத சுழற்சிக்குள் எங்களது வாழ்க்கை சிக்கியுள்ளது.”
மீன்பிடிப் பருவமே ஒரு பொறியாக மாறியுள்ளது. கார்த்திகை முதல் பங்குனி வரையிலான வடகீழ்ப் பருவமழைக் காலம், ஆண்டின் மிகச் சிறந்த வருமானத்தைப் பெற்றுத்தரும் காலமாகும். ஆனால், அதுவே மிக அதிக ஆபத்துகளையும் கொண்டுள்ளது. “ஒரேயொரு புயல் போதும்; வலைகள் காணாமல் போய்விடும், படகுகள் சேதமடையும், கடன் வாங்கி வாங்கிய அனைத்தும் ஒரே இரவில் அழிந்துவிடும்.”
இந்த ஏழைக் குடும்பங்களுக்கும் மீனவர் அமைப்புகளில் ஆதிக்கம் செலுத்தும் அதிகாரிகளுக்கும் இடையில் ஒரு பெரும் இடைவெளி நிலவுகிறது. உள்ளூர் கூட்டுறவுச் சங்கங்களில் ஏழை மீனவர்கள் அங்கம் வகித்தாலும், சம்மேளனங்களின் உயர்மட்டத் தலைமை தமிழ் உயரடுக்கினருடன் நெருக்கமான அரசியல் தொடர்புகளையும், மீன்பிடி அமைச்சு மற்றும் கடற்படை உட்பட அரச நிறுவனங்களுடன் உறவுகளையும் கொண்டுள்ளது.
2024 ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பாராளுமன்றத் தேர்தல் பிரச்சாரங்களின்போது, தமிழ் தேசியவாதக் கட்சிகளால் ஊக்குவிக்கப்பட்ட இந்திய எதிர்ப்பு உணர்வுகளை ஜே.வி.பி./தே.ம.ச. தலைவர்கள் பயன்படுத்திக் கொண்டனர். வாக்குகளைப் பெறுவதற்காக இந்திய இழுவைப் படகுகள் தொடர்பான பிரச்சினைக்குத் தீர்வு காண்பதாக அவர்கள் வாக்குறுதியளித்தனர். ஜே.வி.பி.யும் நீண்டகாலமாக இந்திய எதிர்ப்பு பேரினவாதத்தைக் கடைப்பிடித்து வந்துள்ளது.
வடபகுதி மீனவர்கள் எதிர்கொள்ளும் நெருக்கடிக்கு, இதே நெருக்கடியை எதிர்கொள்ளும் தமிழ்நாட்டின் ஏழை மீனவர்களை அவர்களுக்கு எதிராக நிறுத்துவதன் மூலம் தீர்வு காண முடியாது. அவர்களது மீன்பிடியும் குறைந்துவிட்டன. பெரிய மீன்பிடி இழுவைப் படகுகளால் ஏற்படும் அதே பாதிப்புகளையும் அவர்கள் எதிர்கொள்கின்றனர். இந்திய மீனவர்களில் 90 சதவீதமானோர் வறுமைக் கோட்டிற்குக் கீழே வாழ்கின்றனர். அதேவேளை, புதுடில்லி அரசாங்கம் மற்றும் மாநில அரசாங்கங்களின் ஆதரவுடன் பெரிய மீன்பிடி வர்த்தக நிறுவனங்கள் செழித்து வளர்கின்றன.
வர்க்கப் பிளவு பாக்கு நீரிணையின் ஊடாகச் செல்வதில்லை. மாறாக, ஒருபுறத்தில் தொழிலாள வர்க்கம் மற்றும் ஏழை மீனவர்கள் உட்பட ஒடுக்கப்பட்ட மக்களுக்கும், மறுபுறத்தில் இரு நாடுகளிலும் இவர்களைச் சுரண்டும் முதலாளித்துவ நலன்களுக்கும் இடையிலேயே அது நிலவுகிறது.
இலங்கையில் உள்ள சோசலிச சமத்துவக் கட்சி, இலங்கை மற்றும் இந்தியா முழுவதிலும் உள்ள மீனவர்கள் மற்றும் தொழிலாளர்கள் தேசிய எல்லைகள் மற்றும் இனவாதப் பிளவுகளைக் கடந்து, ஒரு வலுவான பொது போராட்டத்தில் ஒன்றிணைய வேண்டும் என அழைப்பு விடுக்கிறது. உழைக்கும் மக்களைப் பலவீனப்படுத்திப் பிளவுபடுத்துவதற்குச் சேவை செய்யும் தமிழ் முதலாளித்துவக் கட்சிகள் மற்றும் தொழிற்சங்க அதிகாரத்துவத்தினரால் பரப்பப்படும் தேசியவாத மற்றும் இராணுவவாத நஞ்சை நிராகரிக்குமாறு இலங்கை மீனவர்களுக்கு நாம் அழைப்பு விடுக்கிறோம்.
அதிகாரத்துவ சம்மேளனங்களில் இருந்து சுயாதீனமாக, பின்வரும் கோரிக்கைகளுக்காகப் போராடுவதற்கு மீனவர்கள் தமது சொந்த நடவடிக்கைக் குழுக்களை அமைக்க வேண்டும் என சோ.ச.க. அழைப்பு விடுக்கிறது:
- சிறிய அளவிலான மீனவர்களுக்கு வழங்கப்படும் மானியங்களை அதிகரித்து, மலிவான விலையில் மீன்பிடிக்குத் தேவையான உள்ளீடுகளை வழங்கு!
- கந்துவட்டி கடன்களை இரத்துச் செய்!
- இலங்கை மற்றும் இந்தியாவில் ஏழை மீனவர்கள் மீது விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை அகற்று!
- இடைத்தரகர்களின் சுரண்டலை நிறுத்தி, முறையான சந்தைப்படுத்தல் வசதிகளை வழங்கு!
இந்தக் கோரிக்கைகளுக்கான போராட்டத்தை, கொழும்பு அரசாங்கத்தின் சிக்கனக் கொள்கைகள், இராணுவவாதம் மற்றும் முதலாளித்துவ அமைப்பு முறைக்கும் எதிரான போராட்டத்திலிருந்து பிரிக்க முடியாது. தொழிலாளர்கள் சோ.ச.க. போராடி வருகின்ற சோசலிச மற்றும் அனைத்துலகவாத வேலைத்திட்டத்தை நோக்கித் திரும்ப வேண்டும்.
