இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.
நவம்பர் 5 அன்று அறிவிக்கப்பட்டுள்ள நாடு தழுவிய ஒருநாள் வேலைநிறுத்தம் குறித்துக் கலந்தாலோசிப்பதற்காக, பிரான்சின் தொழிற்சங்கக் கூட்டமைப்புகள் புதன்கிழமை பிரதமர் செபாஸ்தியேன் லெகோர்னுவைச் சந்தித்தன. வேலைநிறுத்தங்களின் தலைமையைத் தொழிலாளர்களும் இளைஞர்களும் இந்தத் தொழிற்சங்க அதிகாரத்துவங்களிடம் விட்டுவிடலாம் என்று வாதிடும் அனைவருக்கும் இந்தச் சந்திப்பின் விளைவு ஒரு படுதோல்வியாக அமைந்தது. பரந்த வேலைநிறுத்தங்களைத் தாமதப்படுத்துவதற்காக இந்த அதிகாரத்துவங்கள் தம்மால் முடிந்த அனைத்தையும் செய்து வருகின்றன; வர்க்கப் போராட்டத்தின் கட்டுப்பாட்டை அவற்றின் கைகளிலிருந்து பறித்தெடுப்பதற்காக, தொழிலாளர்கள் சாமானிய தொழிலாளர்களின் நடவடிக்கைக் குழுக்களில் சுயாதீனமாக ஒழுங்கமைக்கப்பட வேண்டும்.
இந்தச் சந்திப்பு, பல வாரங்களாக வன்முறையாக ஒடுக்கப்பட்டு வரும் உயர்நிலைப் பள்ளி மாணவர் போராட்டங்களுக்குப் பின்னரும், அக்டோபர் 17 அன்று பிரான்சில் நடைபெற்ற வெகுஜனப் போராட்டத்திற்குப் பின்னரும், ஸ்பெயின் மற்றும் போர்த்துக்கல்லிலிருந்து பெல்ஜியம், இத்தாலி, அல்பேனியா, கிரீஸ் வரை பரவிவரும் வீட்டுவசதி மற்றும் போர்-எதிர்ப்புப் போராட்டங்களுக்குப் பின்னரும் நடைபெற்றது. ஜனாதிபதி இமானுவேல் மக்ரோன் சலுகைகள் எதையும் வழங்கப்போவதில்லை, முற்றிலும் ஒடுக்குமுறையையே சார்ந்திருக்கப் போகிறார் என்பது இப்போது தெளிவாகியுள்ளது. 10,000 பேருக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வார இறுதியில் நடைபெறவுள்ள அக்டோபர் 24 “மஞ்சள் அங்கி” போராட்டத்தை ஒடுக்குவதற்காக, பிரான்சின் பெரு நகரங்களில் ஊரடங்கு உத்தரவுகளை மக்ரோன் அமல்படுத்தி வருவதுடன், இராணுவத்தையும், இராணுவக் காவல்துறையின் அதிரடிப் படைகளையும், கவச வாகனங்களையும் களமிறக்கி வருகிறார்.
தொழிற்சங்கக் கூட்டமைப்புகளைச் சந்திப்பதற்கு முன்பே, ஊதியம் அல்லது சமூகக் கோரிக்கைகள் குறித்து அல்ல, நவம்பர் 5 அன்று காவல்துறை மேற்கொள்ளவிருக்கும் ஒடுக்குமுறை குறித்தே தாம் கலந்தாலோசிக்கப் போவதாக லெகோர்னு தெளிவுபடுத்தியிருந்தார். வன்முறையின் மூலம் சிலர் சிதைக்க முயலும், “இன்றியமையாத ஆர்ப்பாட்டச் சுதந்திரத்திற்கு உத்தரவாதம் அளிப்பதற்கான வழிகளும் வழிமுறைகளுமே” கலந்தாலோசனைக்குரிய பொருளாக இருக்கும் என்று அவரது அழைப்புக் கடிதம் குறிப்பிட்டது. இருந்தபோதிலும், தொழிற்சங்கத் தலைவர்கள் அந்தச் சந்திப்பில் கலந்துகொள்ளவே முடிவு செய்தனர்.
சந்திப்புக்கு முன்னதாக, ஸ்ராலினிச பொதுத் தொழிலாளர் கூட்டமைப்பின் (CGT) செயலாளர் சோஃபி பினே RTL வானொலியில் பேசி, சமூகச் சலுகைகளைப் பெறுவதிலேயே சந்திப்பின் கவனத்தைக் குவிக்கப்போவதாகக் கூறினார். “நியாயமானதும் மிகப் பரந்ததுமான கோபம் நிலவுகிறது; இத்தகைய நிலைமைக்கு எவ்வாறு பதிலளிக்க வேண்டும் என்பதையே சிறிது நேரத்தில் பிரதமரிடம் நான் கூறப்போகிறேன்” என்று அவர் தெரிவித்தார். “ஒரு சமூக அணிதிரட்டலுக்கு ஒடுக்குமுறையால் பதிலளிக்கக் கூடாது; அதற்கு அரசியல் ரீதியாகப் பதிலளிக்க வேண்டும்.”
இது தொழிலாளர் வர்க்கத்தை முட்டாள்களாகக் கருதும் ஒரு ஏமாற்று நாடகம். ஏறத்தாழ 10 ஆண்டுகளாக நீடித்துவரும் மக்ரோனின் ஜனாதிபதி ஆட்சிக்குப் பின்னர், போராட்டங்களுக்கு அவர் அளிக்கும் ஒரே அரசியல் பதில் ஒடுக்குமுறைதான் என்பது அனைவருக்கும் நன்கு தெரியும். தொழிற்சங்கத் தலைவர்களுடனான சந்திப்பில், லெகோர்னுவைத் தவிர கலந்துகொண்ட மற்றொரு மூத்த அமைச்சர் உள்துறை அமைச்சர் லோரன் நுனேஸ் ஆவார். அக்டோபர் 24 மற்றும் நவம்பர் 5 ஆர்ப்பாட்டப் பேரணிகளை கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருக்கக் காவல்துறைக்கு தொழிற்சங்கத் தலைமைகளும் அவற்றின் பாதுகாப்புக் குழுக்களும் எவ்வாறு உதவ முடியும் என்பதையே நுனேஸ் கேட்டிருப்பார் என்பதில் எந்த ஐயமும் இல்லை.
இருப்பினும், சந்திப்புக்குப் பிறகு, அரசாங்கம் எந்தச் சலுகையையும் வழங்கவில்லை என்பதில் தாம் வியப்படைந்தும் ஏமாற்றமடைந்தும் இருப்பதைப் போலப் பினேயும் ஏனைய கூட்டமைப்புத் தலைவர்களும் நாடகமாடினர். ஆயினும், அவர்களில் எவரும் மேலும் வேலைநிறுத்த நடவடிக்கைகளுக்கு அழைப்பு விடுக்கவில்லை. உயர்நிலைப் பள்ளி மாணவர்களின் பெருந்திரள் போராட்டங்கள் தொடங்கி ஒரு மாதத்திற்கும் மேலாகிவிட்ட நிலையிலும், நவம்பர் 5 அன்றைய ஒருநாள் போராட்டத்துடன் தங்களை மட்டுப்படுத்திக்கொள்வதன் மூலம், போராடும் மாணவர் இளைஞர்களையும் “மஞ்சள் அங்கி” இயக்கத்தினரையும் அவர்கள் தொடர்ந்து தனிமைப்படுத்தி வருகின்றனர்.
பிரெஞ்சுக் கிறிஸ்தவத் தொழிலாளர் கூட்டமைப்பின் (CFTC) தலைவர் சிரில் சபானியே, இந்தச் சந்திப்பு “ஏமாற்றமளிப்பதாக” இருந்ததாகவும், “நாங்கள் விரும்பியவாறு சமூகக் கோபம் செவிமடுக்கப்படவில்லை” என்றும் கூறினார். “உறுதியான அறிவிப்புகள் எதுவும் வெளியாகவில்லை” என்று ஒப்புக்கொண்ட அவர், எதிர்காலத்தில் மக்ரோன் “குறைந்தபட்ச ஊதியத்தை முன்கூட்டியே உயர்த்துவது” குறித்துப் பரிசீலிக்கக்கூடும் என்று ஊகித்தார்.
பிரெஞ்சு ஜனநாயகத் தொழிலாளர் கூட்டமைப்பின் (CFDT) செயலாளர் மரிலிஸ் லெயோன், நவம்பர் 5ஆம் தேதிக்குள் “ஊதியம் குறித்தும், அரசு ஊழியர்களின் சம்பளம் குறித்தும் உள்ள பிரச்சினைகளுக்கு” “சமூகப் பதில்கள் வழங்கப்படுவது அவசியம்” என்று கூறினார். “அரசாங்கம் உண்மையில் சரியான வேகத்தில் செயல்படவில்லை” என்றும் அவர் கூறினார்.
அரசாங்கம் சலுகைகள் எதையும் வழங்கவில்லை என்பதில் தாம் மிகுந்த வியப்பும் ஆத்திரமும் அடைந்ததால், நவம்பர் 5ஆம் தேதிக்கு முன்னதாக அல்லாவிட்டாலும், வேலைநிறுத்தங்களுக்கு அழைப்பு விடுக்க CGT திடீரெனத் தீர்மானித்துவிட்டதைப் போலப் பினே பாசாங்கு செய்தார். “பிரதமரும் அரசாங்கமும் எந்த நடவடிக்கையையும் அறிவிக்கவில்லை, எங்கள் கோரிக்கைகளைக் கணக்கில் எடுத்துக்கொள்ளவே இல்லை” என்று அவர் கூறினார். “அடுத்த கட்டத்திற்கு நகர வேண்டிய நேரம் இது. வேலைநிறுத்தங்கள் முன்னணிக்கு வர வேண்டும். இதனால்தான் அன்டெர்சான்திகாலுடன் (தொழிற்சங்கக் கூட்டணி) இணைந்து CGT, நவம்பர் 5 அன்று முடிந்தவரை பரந்த அணிதிரட்டலுக்கு அழைப்பு விடுக்கிறது” என்று அவர் தெரிவித்தார்.
பொது வேலைநிறுத்தத்திற்கு வெளிப்படையாக அழைப்பு விடுக்காமல், நவம்பர் 5 அன்று நடைபெறவுள்ள ஒருநாள் வேலைநிறுத்தத்திற்குப் பின்னர் CGT ஒன்றைப் பரிசீலிக்கக்கூடும் என்று பினே மழுப்பலான வார்த்தைகளில் சூசகமாகத் தெரிவித்தார். “நவம்பர் 5 அன்றும் அதற்குப் பின்னரும் வேலைநிறுத்தத்தைப் பரவலாக்குவதற்காக, தொழிலாளர்கள் எல்லா இடங்களிலும், அனைத்துப் பணியிடங்களிலும், ஒவ்வொரு நிர்வாகத்திலும், தங்கள் சக ஊழியர்கள் அனைவருடனும் பொதுச் சபைக் கூட்டங்களை நடத்த வேண்டும்” என்று அவர் கூறினார். “தொழிலாளர்கள் வேலையை நிறுத்தும்போது, நாடே ஸ்தம்பிக்கிறது, பொருளாதாரம் முடங்குகிறது, எங்கள் கோரிக்கைகள் செவிமடுக்கப்படும்.”
இது, சுயாதீனப் போராட்டத்தின் அவசியத்தை மறைப்பதற்காகவும், பிரான்சிலுள்ள தொழிலாளர்களையும் இளைஞர்களையும் சர்வதேச அளவில் தங்கள் வர்க்கச் சகோதர சகோதரிகள் நடத்தும் போராட்டங்களிலிருந்து துண்டிப்பதற்காகவும் தொழிலாளர்களுக்கும் இளைஞர்களுக்கும் பினே சொல்லும் ஒரு கட்டுக்கதையாகும். முதலாவதாக, CGT அதிகாரத்துவமே பொது வேலைநிறுத்தத்தை ஆதரிக்கவில்லை; அதற்கு அழைப்பும் விடுக்கவில்லை. 2023இல், மக்ரோனின் ஓய்வூதிய வெட்டுக்களுக்கு எதிராக மில்லியன் கணக்கான தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்திலும் இளைஞர்கள் போராட்டத்திலும் ஈடுபட்டிருந்தபோதும், பொது வேலைநிறுத்தத்திற்குப் பெருமளவிலான ஆதரவு இருப்பதைக் கருத்துக்கணிப்புகள் காட்டியபோதும், CGT அதை எதிர்த்து, அதற்குப் பதிலாகப் போராட்டங்களைச் சோர்வடையச் செய்து இறுதியில் முடிவுக்குக் கொண்டுவந்து, போராட்டத்தைக் காட்டிக்கொடுத்தது.
தொழிலாள வர்க்கத்தால் பிரான்சையும் ஐரோப்பாவையும் ஸ்தம்பிக்கச் செய்ய முடியும்; பொருளாதாரத்தை முடக்கி, தனது மகத்தான, புரட்சிகர சமூக சக்தியை வெளிப்படுத்த முடியும். ஆனால் இதற்குச் சாமானிய தொழிலாளர்களின் சுயாதீனமான, சர்வதேச ஒழுங்கமைப்பு அவசியமாகும். ஒருநாள் போராட்டங்கள் மூலம் மக்ரோனைத் தனது போக்கின் பிழையை உணரச் செய்து, சமூகச் சமரசம் என்ற தேசியக் கொள்கையின் வழியாகப் பிரான்சின் நெருக்கடியைத் தீர்க்க வைக்கலாம் என்ற பினேயின் கருத்து ஒரு மாயையாகும். ஒரு உண்மையான பொது வேலைநிறுத்தத்தைத் தயார்படுத்தும் வேலைநிறுத்த அலை, வர்க்க மோதலைப் பாரிய அளவில் தீவிரப்படுத்தும்.
இரண்டாம் உலகப் போருக்கு முந்தைய இறுதி ஆண்டுகளில், 1936 பிரெஞ்சு பொது வேலைநிறுத்தத்திற்கு முன்னதாகத் தீவிரமடைந்துவந்த வர்க்கப் போராட்டத்தின் மத்தியில், பிரான்ஸ் எங்கே செல்கிறது? (Whither France?) என்ற நூலில் எழுதிய ட்ரொட்ஸ்கி பின்வருமாறு விளக்கினார்:
வர்க்கப் போராட்டம் குறிப்பிட்ட பிரிவுகளுக்கும் தனித்தனித் தொழில்களுக்கும் உரிய கோரிக்கைகளுக்கு மேலாக உயர்ந்து, தொழில்கள், வட்டாரங்கள் என்ற அனைத்துப் பிரிவுகளையும் கடந்து பரவி, கட்சிகளுக்கு இடையிலான எல்லைக்கோடுகளையும் சட்டபூர்வத்திற்கும் சட்டவிரோதத்திற்கும் இடையிலான எல்லைக்கோடுகளையும் அழித்து, பாட்டாளி வர்க்கத்தின் பெரும்பான்மையினரை முதலாளித்துவ வர்க்கத்திற்கும் அரசுக்கும் எதிரான செயலூக்கமிக்க எதிர்ப்பில் அணிதிரட்டும் காலகட்டத்தில் மட்டுமே பொது வேலைநிறுத்தம் சாத்தியமாகும். ஆயுதமேந்திய எழுச்சியைத் தவிர, பொது வேலைநிறுத்தத்தை விட உயர்ந்த தளத்தில் வேறெதுவும் இருக்க முடியாது. எத்தகைய முழக்கங்களின் கீழ் நடைபெற்றாலும், ஒவ்வொரு பொது வேலைநிறுத்தமும் தன்னை ஒரு வெளிப்படையான புரட்சிகர மோதலாக, அதிகாரத்திற்கான நேரடிப் போராட்டமாக மாற்றிக்கொள்ளும் உள்ளார்ந்த போக்கைக் கொண்டுள்ளது என்பதைத் தொழிலாள வர்க்க இயக்கத்தின் முழு வரலாறும் நிரூபிக்கிறது.
1930களில் இருந்ததற்குச் சற்றும் குறையாத உக்கிரத்துடன் இன்றைய வர்க்கப் போராட்டம் நடைபெறுகிறது. கடந்த தசாப்தத்தில் மக்ரோனின் கீழ் பதவி வகித்த ஒவ்வொரு பிரதமரும் சமூகச் சலுகைகளை வழங்க மறுத்து வருவது, தொழிலாளர்கள் இன்னும் பெரிய போராட்டங்களால் முறியடிக்கக்கூடிய வெறும் தனிப்பட்ட பிடிவாதத்தின் விளைவு அல்ல. அது முதலாளித்துவத்தின் சர்வதேச நெருக்கடியில், குறிப்பாகத் தீவிரமடைந்து வரும் உலகளாவிய போரிலும் ஐரோப்பிய நிதி நெருக்கடியிலும் புறநிலையாக வேரூன்றியுள்ளது.
ஒரு புதிய உலகப் போரின் கொள்ளைப் பொருட்களில் முடிந்தவரை பெரிய பங்கைப் பெறும் முயற்சியில், ஐரோப்பா முழுவதிலுமுள்ள நாடுகளைப் போலவே பிரான்சும் ரஷ்யாவுக்கு எதிரான நேட்டோவின் போரைத் தீவிரப்படுத்தி வருவதுடன், பல பத்து பில்லியன் யூரோக்களை அதிகரிக்கப்பட்ட இராணுவச் செலவினங்களுக்கும் தொழில்துறையின் இராணுவமயமாக்கலுக்கும் கொட்டி வருகிறது. இராணுவப் பலத்திற்காக ஏனைய நாடுகளுடன் போட்டியிடும் அதேவேளையில், பிற ஐரோப்பிய நாடுகளைப் போலவே பிரான்சும், தனது மிகப் பெரியதும் தாக்குப்பிடிக்க முடியாததுமான 3.5 டிரில்லியன் யூரோ கடனுக்கான வட்டியையும் தவணைகளையும் செலுத்துவதற்கு மேலும் மேலும் அதிகமான வருவாயை ஒதுக்கி வருகிறது.
இது, சிக்கன நடவடிக்கைகள், போர், காவல்துறை அரசு ஒடுக்குமுறை மற்றும் நவ-பாசிசத்தை ஆழமாக எதிர்க்கும் தொழிலாளர்களுடனும் இளைஞர்களுடனும் ஆளும் வர்க்கத்தை நேரடி மோதலின் பாதையில் தள்ளுகிறது. தற்போது ஐரோப்பா முழுவதும் விரிவடைந்து வரும் சிக்கன நடவடிக்கைகள், போர் மற்றும் ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டங்களைத் தொழிலாள வர்க்கத்தின் ஐக்கியப்பட்ட இயக்கமாக ஒன்றிணைக்கும் திறன்கொண்ட ஓர் அரசியல் முன்னோக்கைத் தெளிவாக முன்வைத்து, போராட்டத்திற்கான அமைப்புகளைக் கட்டியெழுப்புவதே தொழிலாளர்களுக்குப் புறநிலையாக முன்வைக்கப்பட்டுள்ள பணியாகும்.
புதன்கிழமையன்று கிரீஸில் கல்விக்கான தேசிய நடவடிக்கை தினம் நடைபெற்றது; அதில் மாணவர்களும் தொழிலாளர்களும் பிரான்சிலுள்ள இளைஞர்களுடன் ஒருமைப்பாடு தெரிவித்து ஆர்ப்பாட்டம் செய்தனர். ஸ்பெயினில் நடைபெற்று வரும் வீட்டுவசதிக்கான வெகுஜனப் போராட்டங்களுக்கு இணையாக, ஏதென்ஸின் சின்டாக்மா சதுக்கத்தில் போராட்டக்காரர்கள் கூடாரங்களை அமைத்ததைத் தொடர்ந்து, ஏதென்ஸில் 10,000 பேர் அணிவகுத்தனர்; தெசலோனிகி, பட்ராஸ், யோவானினா, லாரிசா, கிரீட் உள்ளிட்ட கிரீஸின் டஜன் கணக்கான நகரங்களில் சிறிய அளவிலான போராட்டங்கள் நடைபெற்றன.
இத்தாலியில் புதன்கிழமை, குறைந்தது 100,000 பேர் அணிவகுத்த தேசிய நடவடிக்கை தினத்தைத் தொடர்ந்து, ஜெனோவாவில் பொதுப் போக்குவரத்து வேலைநிறுத்தம் நடைபெற்றது; ஒரு டஜனுக்கும் மேற்பட்ட ஆர்ப்பாட்டப் பேரணிகளும் நடைபெற்றன; ட்ரென்டோவில் 1,000 மாணவர்களும் சான் செவெரோவில் 2,000 மாணவர்களும் அணிவகுத்தனர். அக்டோபர் 30 அன்று மேலும் ஒரு தேசிய நடவடிக்கை தினம் திட்டமிடப்பட்டுள்ளது; அன்று இராணுவமயமாக்கலுக்கு எதிரான ஐரோப்பியத் துறைமுகத் தொழிலாளர்களின் சர்வதேச வேலைநிறுத்தமும் நடைபெறும்.
ஸ்பெயினின் கலீசியப் பிராந்தியத்திலுள்ள லா கொருன்யா நகரில், தீவிர வலதுசாரி வோக்ஸ் (Vox) கட்சியின் கூட்டத்திற்கு எதிராக மரியா பிட்டா சதுக்கத்தில் 5,000 பேர் ஆர்ப்பாட்டம் செய்தனர். “ஸ்பானிய தேசியவாதிகளே, எங்கள் தெருக்களைவிட்டு வெளியேறுங்கள்”, “பாசிஸ்டுகளே, கலீசியாவைவிட்டு வெளியேறுங்கள்”, “நாங்கள் பாசிச-எதிர்ப்பாளர்கள்” போன்ற முழக்கங்களைப் போராட்டக்காரர்கள் எழுப்பினர். வோக்ஸ் கூட்டம் முடிவடைந்த பின்னர், ஸ்பானியக் காவல்துறை ரப்பர் குண்டுகளைச் சுட்டும், கண்ணீர்ப்புகைக் குண்டுகளை வீசியும், இருவரைக் கைது செய்தும் ஆர்ப்பாட்டத்தின் மீது தாக்குதல் நடத்தியது. மாணவர் குழுக்கள், நவம்பர் 11 அன்று நடைபெறவுள்ள நாடு தழுவிய ஒருநாள் வேலைநிறுத்தத்திற்கு முன்னதாக, இந்த ஒடுக்குமுறைக்கு எதிராக மேலும் ஆர்ப்பாட்டங்களை நடத்தத் திட்டமிட்டு வருகின்றன.
மக்ரோனுடனான பிரெஞ்சுத் தொழிற்சங்கங்களின் சந்திப்பு என்ற இந்த அரசியல் ஏமாற்று நாடகம் ஓர் எச்சரிக்கையாகும்: போராடுவதற்கு இந்த அதிகாரத்துவங்களின் கால அட்டவணைகளுக்காகத் தொழிலாளர்கள் காத்திருக்க முடியாது. பிரான்சின் சோசலிச சமத்துவக் கட்சி (PES) விளக்கியுள்ளபடி, மாற்று என்பது
பள்ளிகளிலும் பல்கலைக்கழகங்களிலும் பணியிடங்களிலும் குடியிருப்புப் பகுதிகளிலும், போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டுக் கட்டுப்படுத்தப்படும், தொழிற்சங்க அதிகாரத்துவங்களிடமிருந்தும் முதலாளித்துவக் கட்சிகளிடமிருந்தும் சுயாதீனமான நடவடிக்கைக் குழுக்களைக் கட்டியெழுப்புவதாகும். இந்தக் குழுக்கள் போராட்டத்தின் கட்டுப்பாட்டை அதிகாரத்துவங்களின் கைகளிலிருந்து பறித்தெடுக்க வேண்டும். சிக்கன நடவடிக்கைகள், ஒடுக்குமுறை, போர் ஆகியவற்றுக்கு எதிரான பொது வேலைநிறுத்தத்திற்குத் தயாராவதற்காக, பிரான்சிலுள்ள தொழிலாளர்களையும் இளைஞர்களையும், ஐரோப்பா முழுவதும் உலகெங்கிலும் இப்போது போராட்டத்தில் நுழைந்துவருகின்ற தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களுடன் அவை ஒன்றிணைக்க வேண்டும்.
இதற்கு ஒரு புரட்சிகர அரசியல் முன்னோக்கு அவசியம்: பாசிசம், போர், முதலாளித்துவம் ஆகியவற்றுக்கு எதிராகத் தொழிலாளர் அதிகாரத்திற்கும் ஐரோப்பிய ஐக்கிய சோசலிச அரசுகளுக்குமான போராட்டம்.
