இந்திய வாக்காளர் நீக்கம்: மோடி அரசாங்கம் தொழிலாள வர்க்கத்தின் வாக்குரிமையைப் பறிப்பதற்கு மேற்கொள்ளும் நடவடிக்கை

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.

இந்தியாவின் தலைநகரான புதுடெல்லியில், வாக்காளர் பட்டியல்களில் இருந்து வாக்காளர்கள் நீக்கப்படுவதற்கு எதிராக அக்டோபர் 2 அன்று நடைபெற்ற போராட்டத்தின் மீது பொலிஸார் தாக்குதல் நடத்திய போது. [Photo: Deepak Singh/Facebook)]

தி இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகை வெளியிட்ட புலனாய்வு அறிக்கை, பிரதமர் நரேந்திர மோடியின் இந்து மேலாதிக்கவாத அரசாங்கத்தால் வாக்காளர் பட்டியல்களில் இருந்து சட்டவிரோதமாக வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளதன் அதிர்ச்சியூட்டும் அளவை அம்பலப்படுத்தியதைத் தொடர்ந்து, அக்டோபர் 2 வெள்ளிக்கிழமை முதல் இந்தியா முழுவதும் வெகுஜனப் போராட்டங்கள் வெடித்துள்ளன. வாக்காளர் பட்டியல்களை “திருத்தும்” வழக்கமான நடவடிக்கை என்று கூறப்பட்ட, வாக்காளர் பட்டியல்களின் விசேட தீவிரத் திருத்தம் (Special Intensive Revision), இதுவரை 130 மில்லியன் முதல் 150 மில்லியன் வரையிலான பெயர்களை நீக்குவதற்குப் பயன்படுத்தப்பட்டுள்ளதாக அந்த அறிக்கை வெளிப்படுத்தியது. இந்தியக் குடியரசின் வரலாற்றில் இதற்கு முன்னெப்போதும் இல்லாத அளவிலான வாக்காளர் நீக்கம் இதுவாகும்.

வடக்கிலிருந்து தெற்கு வரையிலும் கிழக்கிலிருந்து மேற்கு வரையிலும் உள்ள நகரங்களில் பரவியுள்ள இந்த ஆர்ப்பாட்டங்கள், தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரின் இராஜினாமாவைக் கோரி நடைபெறுகின்றன. ஆனால், ஸ்ராலினிச இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) (சிபிஎம்) மற்றும் குட்டி முதலாளித்துவ கரப்பான்பூச்சி ஜனதா கட்சி (சிஜேபி) உட்பட, இந்த இயக்கத்தின் தலைமைத்துவத்தில் இருக்கும் முதலாளித்துவ எதிர்க்கட்சிகள், இந்தப் போராட்டத்தை ஒரு அதிகாரியைப் பதவியிலிருந்து நீக்கும் மிகவும் குறுகிய கோரிக்கைக்குள் கட்டுப்படுத்துகின்றன. இளைஞர்கள் மற்றும் தொழிலாள வர்க்கத்திற்கு எதிராக வெளிப்படையாக பொலிஸ் அடக்குமுறையையும் எதேச்சாதிகார வழிமுறைகளையும் பயன்படுத்தி இப்போது ஆட்சி செய்துவரும் மோடியின் பாஜக அரசாங்கத்திற்கு பாராளுமன்றத்தில் பெரும்பான்மை இல்லாதபோதிலும் கூட, அதை கவிழ்க்குமாறு அவர்களில் எவரும் அழைப்பு விடுக்கவில்லை. தொழிலாள வர்க்கத்தின் சமூக வலிமையை அணிதிரட்டுவதற்கும், ஒப்பந்தத் தொழிலாளர் முறை, பரவலான வெகுஜனப் பட்டினி, சீரழிந்துள்ள அல்லது முற்றிலும் இல்லாத பொதுச் சேவைகள், பிரிட்டிஷ் ராஜ்ஜியத்தின் போது காணப்பட்டது போன்ற உச்சகட்ட சமூக சமத்துவமின்மை மற்றும் அவற்றை உருவாக்கிய முதலாளித்துவ சமூக ஒழுங்குக்கும எதிரான பரந்த போராட்டத்துடன் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்பதற்கான போராட்டத்தை இணைப்பதற்கும் அவர்கள் அனைவரும் எதிராக உள்ளனர்.

பா.ஜ.க.வின் வாக்காளர் பட்டியல் நீக்க நடவடிக்கைக்கும் வாக்களிப்பதற்கான புதிய தடைகளை அறிமுகப்படுத்துவதற்கும், 2026 இடைக்காலத் தேர்தல்களை இதேபோன்று முறைகேடாகத் தமக்குச் சாதகமாக்கிக்கொள்ள முயலும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பாராட்டு தெரிவித்துள்ளார். ஆகஸ்ட் மாதத்தில், குறிப்பாக, புகைப்பட அடையாள அட்டைகளைப் பயன்படுத்துவதையும் விசேட தீவிரத் திருத்தத்தையும் தூக்கிப்பிடித்த அவர், இந்தியாவின் தேர்தல் முறையையும் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரையும் பகிரங்கமாகப் பாராட்டினார். அமெரிக்காவின் SAVE America Act சட்டத்துக்கும், இந்தியாவின் விசேட தீவிரத் திருத்தத்தின் (SIR) சில அம்சங்களை ஒத்தவாறு அமெரிக்க வாக்காளர்களின் குடியுரிமை நிலையைச் சரிபார்ப்பதற்காக மத்திய அரசின் தரவுத்தளங்களைப் பயன்படுத்துவதற்கும் வக்காலத்து வாங்குவதற்காக ட்ரம்ப் இந்தியாவின் தேர்தல் முறையை உதாரணமாகக் குறிப்பிட்டார்.

ஏழைகள் மற்றும் புலம்பெயர் தொழிலாளர்களை இலக்குவைக்கும் வாக்காளர் நீக்கம்

வாக்காளர் பட்டியல்களில் இருந்து நீக்கப்பட்டவர்களில் பெரும்பான்மையானவர்கள் ஏழைகள், புலம்பெயர் தொழிலாளர்கள், தலித்துகள் மற்றும் முஸ்லிம்கள் ஆவர். துல்லியமாகச் சொல்வதானால், பா.ஜ.க.வுக்கு எதிராக வாக்களிக்கும் மக்கள் பிரிவினராவர். வாக்காளர் பட்டியல்களில் தொடர்ந்து இடம்பெறுவதற்கான தகுதியை நிரூபிக்கும் ஆவணங்களை வாக்காளர்கள் சமர்ப்பிக்க வேண்டும் என்று விசேட தீவிரத் திருத்த நடைமுறை கோருகிறது. இந்த நிபந்தனை குழப்பமானதாக இருப்பதுடன், முறையான அரசாங்க ஆவணங்கள் இல்லாத மில்லியன் கணக்கான மக்களால் இதை நிறைவேற்றுவது சாத்தியமும் இல்லை. தி இந்தியன் எக்ஸ்பிரஸ் நடத்திய புலனாய்வு விசாரணை ஆவணப்படுத்தியுள்ளபடி, தேர்தல் பட்டியல் தரவுத்தளத்தை டெல்லியில் மையப்படுத்துவதன் மூலம், களத்தில் பணியாற்றும் சட்டபூர்வமான தேர்தல் பதிவாளர்களைத் தவிர்த்தும், புதிய வாக்காளர்களைப் பதிவு செய்வதற்குப் பயன்படுத்தப்படும் படிவங்களில் “அங்கீகரிக்கப்படாத மற்றும் சட்டவிரோதமான” மாற்றங்களைச் செய்தும் இந்தத் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வாக்காளர்களை நீக்கும் இந்த நடவடிக்கையின் அளவைப் போலவே, அதற்குப் பயன்படுத்தப்படும் வழிமுறையும் பலவற்றை அம்பலப்படுத்துகிறது. இந்த ஆண்டு ஜூலை மாதத்தில், முதன்முறையாக வாக்களிப்பவர்களுக்கான புதிய வாக்காளர் பதிவுப் படிவமான படிவம் 6 இன் இணையவழிப் பதிப்பு வேண்டுமென்றே மாற்றப்பட்டது. மோடியின் நெருங்கிய நம்பிக்கைக்குரியவரான ஞானேஷ் குமாரின் உடந்தையுடன் இது செய்யப்பட்டிருக்கக்கூடும். விண்ணப்பதாரர்கள், அவர்களது பெற்றோர் அல்லது தாத்தா பாட்டி முந்தைய வாக்காளர் பட்டியல்களில் இடம்பெற்றிருந்தார்களா என்று அந்தப் படிவம் குறிப்பாகக் கேட்டது. இது, குறிப்பிட்ட வாக்காளர்களை பட்டியல்களில் இருந்து நீக்குவதற்கான முன்னெச்சரிக்கை அறிகுறியாக இருந்திருக்கக்கூடும்

அடுத்து, இறந்த வாக்காளர்கள், ஒன்றுக்கு மேற்பட்ட முறை இடம்பெற்ற பதிவுகள் அல்லது தமது தொகுதியிலிருந்து நிரந்தரமாக வெளியேறிய நபர்களை நீக்குவதன் மூலம் வாக்காளர் பட்டியல்களின் துல்லியத்தைப் பேணுவதற்கான படிவம்-7, ஒரு கருவியாகப் பயன்படுத்தப்படுகிறது.

கர்நாடகா மற்றும் தெலுங்கானாவில் அதிக எண்ணிக்கையிலான முஸ்லிம் வாக்காளர்களை இலக்குவைத்து, முன்கூட்டியே நிரப்பப்பட்ட ஆயிரக்கணக்கான படிவம்-7 ஐ விநியோகிப்பதன் மூலம், பெருமளவிலான வாக்காளர் நீக்கங்களுக்கு பாஜக தலைவர்கள் வசதியளித்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன. விசேட தீவிரத் திருத்தத்தின்போது (SIR) வாக்காளர் பட்டியல்களைப் புதுப்பிப்பதற்கென நியமிக்கப்பட்ட உள்ளூர் அரசாங்க அல்லது அரை அரசாங்க ஊழியரான வாக்குச்சாவடி மட்ட அலுவலர் (BLO), கர்நாடகாவில் பா.ஜ.க. தலைவர்களுக்கு எதிராக முறையான பொலிஸ் முறைப்பாடுகளைப் பதிவு செய்துள்ளார்.

மேற்கு வங்கத்தில் இந்த வாக்காளர் நீக்கத்தின் அரசியல் தன்மை அப்பட்டமாக வெளிப்பட்டது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் நடைபெற்ற மாநிலத் தேர்தல்களுக்கு முன்னதாக, விசேட தீவிரத் திருத்தத்தின் மூலம் சுமார் 9 மில்லியன் பெயர்கள் நீக்கப்பட்டன. இது மொத்த வாக்காளர்களில் சுமார் 12 சதவீதமாகும். மேற்கு வங்கத்தை அதன் வரலாற்றில் முதன்முறையாக பா.ஜ.க. கைப்பற்றியது. மாநிலத் தேர்தல்கள் குறித்த தனது பகுப்பாய்வில் உலக சோசலிச வலைத் தளம் (WSWS) தெரிவித்ததாவது: “உச்ச நீதிமன்றத்தின் உடந்தையுடன், பாஜக ஆதரவாளர்களால் நிரப்பப்பட்ட தேர்தல் ஆணையம், கடுமையான சர்ச்சைக்குரிய அதன் விசேட தீவிரத் திருத்தத்தின் (SIR) கீழ், பெரும்பாலும் ஏழைகளையும் விகிதாசாரத்திற்கு அதிகமாக முஸ்லிம்களையும் இலக்குவைத்து, மில்லியன் கணக்கான வாக்காளர்களைத் எதேச்சதிகாரமாக வாக்காளர் பட்டியல்களில் இருந்து நீக்கியது.”

போராட்டங்களுக்கு மோடி அரசாங்கம் அளித்த பதில் அதன் வழக்கமான அடக்குமுறைப் பாணியையே பிரதிபலித்தது. மகாத்மா காந்தியின் பிறந்த நாளான காந்தி ஜெயந்தியாகக் கொண்டாடப்படும் அக்டோபர் 2 வெள்ளிக்கிழமையன்று, புதுடெல்லி ஒரு கோட்டையாக மாற்றப்பட்டது. இந்திய குடிமக்கள் பாதுகாப்பு சட்டத் தொகுப்பு (பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா) 163ஆவது பிரிவின் கீழ், பாராளுமன்ற வீதி உட்பிரிவு முழுவதும் தடை உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன. ஐந்து அல்லது அதற்கு மேற்பட்டோர் கூடுவதற்கும், கோஷங்களை எழுப்புவதற்கும், உரையாற்றுவதற்கும், ஊர்வலங்களை நடத்துவதற்கும் தடை விதிக்கப்பட்டது. ஜந்தர் மந்தரில் போராட்டம் நடைபெற்ற இடத்திற்குச் செல்லும் இரண்டு பிரதான நுழைவுப் பாதைகளையும் தடுத்து நிறுத்துவதற்காக, சுமார் 4,000 பொலிஸ் உத்தியோகத்தர்களுடன் மத்திய ஆயுதப் பொலிஸ் படைகளும் விரைவு நடவடிக்கைப் படைப் பிரிவுகளும் பணியில் ஈடுபடுத்தப்பட்டன. டெல்லி மெட்ரோவின் 12 நிலையங்கள் மூடப்பட்டன. டெல்லியின் முன்னாள் ஆம் ஆத்மி கட்சி (AAP) முதலமைச்சர் அதிஷி மார்லேனா உட்பட 500க்கும் மேற்பட்ட போராட்டக்காரர்கள் தடுத்து வைக்கப்பட்டனர்.

ஏப்ரல் மாதத்தில் நொய்டாவில் தொழிலாளர்களின் எழுச்சிக்கு எதிராக அரசாங்கம் பயன்படுத்திய வழிமுறையும் இதுவாகும். அப்போது, கொடூரமான சுரண்டலுக்கு எதிராகப் பல்லாயிரக்கணக்கான ஒப்பந்தத் தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டபோது, அவர்கள் வெகுஜனக் கைதுகள், பொய்யான குற்றச்சாட்டுகளில் சிக்கவைத்தல் மற்றும் வன்முறையையும் எதிர்கொண்டனர். ஜூலை மாதத்தில், பாராளுமன்றத்தை நோக்கி பேரணி சென்ற பல்லாயிரக்கணக்கான மாணவர்களின் போராட்டங்களின்போது, பொலிஸார் கண்ணீர்ப்புகைக் குண்டுகளை வீசியும் தடியடிப் பிரயோகம் செய்தும் தாக்கினர். நிராயுதபாணி போராட்டக்காரர்களுக்கு எதிராகப் கனமாக ஆயுதம் ஏந்திய துணை இராணுவப் படைகள் களமிறக்கப்பட்டமை, ஆட்சியின் இதயத்தில் காணப்படும் பீதியை வெளிப்படுத்துகிறது. அது “அரசியல் மற்றும் சமூக எரிமலையின் உச்சியில் அமர்ந்திருப்பதை நன்கு அறிந்திருக்கிறது”.

சமூக ஊடகங்களில் பெரும் எதிர்ப்பலை எழுந்ததைத் தொடர்ந்து, வலதுசாரி ஆம் ஆத்மி கட்சியுடன் நெருங்கிய தொடர்புகளைக் கொண்டவரும், போஸ்டன் பல்கலைக்கழகத்தில் பயிற்சி பெற்ற தகவல் தொடர்பு உத்தியாளருமான அபிஜீத் டிப்கே என்பவரால் உருவாக்கப்பட்ட கரப்பான்பூச்சி ஜனதா கட்சியும் (CJP) எதிர்க்கட்சிகளும் இந்த ஆர்ப்பாட்டங்களுக்குத் தலைமை தாங்கின. உலக சோசலிச வலைத் தளம் ஆவணப்படுத்தியுள்ளபடி, கரப்பான்பூச்சி ஜனதா கட்சி என்பது “இந்தியாவின் உரிமைகள் மறுக்கப்பட்ட இளைஞர்களை” மீண்டும் முதலாளித்துவ அரசியலின் பாதைக்குள்ளேயே திருப்பிவிடுவதை நோக்கமாகக் கொண்ட ஒரு “அரசியல் பாதுகாப்பு வால்வு” ஆகும்.

மும்பையில் சிஜேபியின் நடவடிக்கைகள் இதற்கு ஓர் எடுத்துக்காட்டாகும். அக்டோபர் 2 அன்று மும்பையில் நடைபெற்ற கட்சியின் போராட்டத்தின்போது, பொலிஸார் தங்களுடன் “ஒத்துழைத்ததற்காகவும்”, “டெல்லி பொலிஸாரைப் போல” தடியடிப் பிரயோகம் செய்யாததற்காகவும் மகாராஷ்டிரா பொலிஸாரை டிப்கே பகிரங்கமாகப் பாராட்டினார். சில நாட்களுக்குள், டெல்லிக்குப் பயணம் செய்த சிஜேபியின் தொண்டர்களுக்கு அதே பொலிஸார் அறிவித்தல்களை அனுப்பி, அவர்களது பயணம் மற்றும் செலவுகள் குறித்த விபரங்களைக் கோரினர். “1,000 முதல் 1,500 ரூபாய் வரையிலான ரயில் பயணச்சீட்டுக்குக்கூட பொலிஸார் இப்போது கணக்குக் கேட்க வேண்டுமா?” என்று கேள்வி எழுப்பிய டிப்கே, தான் “மனம் உடைந்துவிட்டதாக” கூறினார். முதலாளித்துவ அரசின் அடக்குமுறை எந்திரத்திடம் அதன் “சிறந்த இயல்புக்கு” அழைப்பு விடுப்பதன் மூலம் சலுகைகளை வென்றெடுக்கலாம் என்று கற்பனை செய்துகொள்ளும் ஓர் இயக்கத்தின் அப்பாவித்தனத்தை — அல்லது வேண்டுமென்றே அடைந்த சுய ஏமாற்றத்தை — இந்தச் சம்பவம் அம்பலப்படுத்துகிறது.

ஸ்ராலினிச இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) வகிக்கும் பாத்திரம் குறிப்பாக அழுகிப்போனதாகும். சி.பி.எம். மற்றும் அதன் மாணவர் முன்னணியான இந்திய மாணவர் சம்மேளனமும் இந்தப் போராட்டங்களில் பங்கேற்ற போதிலும், முதலாளித்துவ எதிர்க்கட்சிகளின் பாராளுமன்ற சூழ்ச்சிகளுக்கு இந்தப் போராட்டங்களை அடிபணியச் செய்வதற்காக மட்டுமே அவை அவ்வாறு செய்தன.

“பாஜகவை எதிர்த்துப் போராடுவது” என்ற பெயரில் வலதுசாரி அரசாங்கங்களுக்கு பல தசாப்தங்களாக முட்டுக்கொடுத்து வந்துள்ள சி.பி.எம்., மோடி அரசாங்கத்திற்கு எதிராகத் தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்டுவதில் அக்கறை கொண்டிருக்கவில்லை. அவ்வாறு அணிதிரட்டுவது காங்கிரஸ் கட்சியுடனும் இந்திய அரசுடனும் அது கொண்டுள்ள உறவுகளைப் பாதிக்கும். சிஜேபி “மிகுந்த கவனத்துடன் ஆய்வு செய்ய வேண்டிய” ஒரு போக்கு என்று அதன் பொதுச் செயலாளர் குறிப்பிட்டுள்ளமை, வீழ்ச்சியடைந்து வரும் தமது சொந்த தேர்தல் செல்வாக்கைப் புதுப்பிப்பதற்கு அந்தக் கட்சியுடனான கூட்டணி பயனுள்ளதாக இருக்குமா என்று கணக்கிடும் ஒரு கட்சியின் மொழியாகும். உலக சோசலிச வலைத் தளம் மீண்டும் மீண்டும் ஆவணப்படுத்தியுள்ளபடி, ஸ்ராலினிஸ்டுகள், வர்க்கப் போராட்டத்தை ஒடுக்கி, தொழிலாள வர்க்கத்தை காங்கிரஸ் கட்சியுடனும் ஏனைய வலதுசாரி சாதி அடிப்படையிலான மற்றும் இன-மத வகுப்புவாதக் கட்சிகளுடனும் பிணைத்துவைக்கின்ற, அரசியல் ஸ்தாபகத்தின் ஒருங்கிணைந்த பகுதியாகும்.

தேர்தல் ஆணையம்: பாஜகயின் ஒரு கருவி

இந்தியத் தேர்தல் ஆணையத்திற்கும் (ECI), தலைமைத் தேர்தல் ஆணையருக்கும் (CEC) இடையிலான உறவு, இந்த வாக்காளர் நீக்க நடவடிக்கையைப் புரிந்துகொள்வதற்கு மையமானதாகும். மோடி அரசாங்கத்தால் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்ட 2023 தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் ஏனைய தேர்தல் ஆணையர்கள் சட்டத்தின் கீழ், தேர்தல் ஆணையர்களைத் தெரிவுசெய்வதற்கான பெயரளவிலான சுயாதீன நடைமுறைகூட அகற்றப்பட்டு, பிரதமர், உள்துறை அமைச்சர், எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோரைக் கொண்ட குழுவிடம் அந்தப் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது. இதன் விளைவாக, இப்போது பா.ஜ.க.வின் அடிவருடிகள் மட்டுமே தெரிவுசெய்யப்படுகின்றனர். எதிர்க்கட்சித் தலைவர் தனது எதிர்ப்பைப் பதிவுசெய்திருந்த போதிலும், 2025 பெப்ரவரியில் ஞானேஷ் குமார் தலைமைத் தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டார்.

விசேட தீவிரத் திருத்தம் (SIR) 2025 அக்டோபரில் அறிவிக்கப்பட்டதுடன் அப்போதிருந்து அது இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்களில் அது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையத்திற்குள் முன்னெப்போதும் இல்லாத பிளவு ஏற்பட்டிருப்பதை தி இந்தியன் எக்ஸ்பிரஸ் நடத்திய புலனாய்வு விசாரணை அம்பலப்படுத்தியது. மூன்று தேர்தல் ஆணையர்களில் இருவரான சுக்பீர் சிங் சந்து மற்றும் விவேக் ஜோஷி, தங்களுக்குத் தெரியாமல் குமார் எடுத்த முடிவுகளுக்கு எதிராகப் பத்து மாத காலப்பகுதியில் குறைந்தது 14 முறையான ஆட்சேபனைகளைப் பதிவு செய்தனர். வாக்காளர் பதிவுப் படிவங்களில் செய்யப்பட்ட “அங்கீகரிக்கப்படாத மற்றும் சட்டவிரோதமான” மாற்றங்கள், “வாக்காளர் பட்டியல் தரவுத்தளத்தைப் படிப்படியாக மையப்படுத்துதல்” மற்றும் நீதித்துறை அதிகாரிகளால் மீண்டும் வாக்காளர் பட்டியல்களில் சேர்க்கப்பட்ட வாக்காளர்களுக்கு எதிராக மேல்முறையீடுகள் தாக்கல் செய்யப்பட்டமை ஆகியவை இந்த ஆட்சேபனைகளில் உள்ளடங்கின. இந்த ஆட்சேபனைகள் புறக்கணிக்கப்பட்டன.

உச்ச நீதிமன்றம் இந்த முழு விவகாரத்திலும் அழுகிப்போன பாத்திரத்தை வகித்துள்ளது. அது வசேட தீவிரத் திருத்த நடைமுறைக்கு ஒப்புதல் அளித்ததுடன் மேற்கு வங்கத்தில் வாக்காளர்கள் நீக்கப்பட்டதன் அளவு மறுக்க முடியாததாக ஆகியபோது, திருத்தத்தின் இறுதிக்கட்டத்தை மட்டும் தேர்தல் ஆணையத்திடமிருந்து அகற்றி, நீதித்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்த அதே வேளை, வாக்காளர்களை நீக்கும் நடவடிக்கையை அப்படியே விட்டுவைத்தது. வேலையற்ற இளைஞர்களை “ஒட்டுண்ணிகள்” மற்றும் “கரப்பான் பூச்சிகள்” என்று கண்டித்த தலைமை நீதிபதியைக் கொண்ட இந்த நீதிமன்றம், கடந்த மூன்று தசாப்தங்களாக இந்திய முதலாளித்துவ வர்க்கம் வலதுபுறமாக வன்முறையான திருப்பத்தை எடுத்துள்ளதற்கு ஏற்ப, இந்து மேலாதிக்கவாத பாஜக அரசாங்கத்தின் முடிவுகளுக்கு அங்கீகாரமளிக்கும் ஓர் அமைப்பாக மாறியுள்ளது. இடித்துத் தரைமட்டமாக்கப்பட்ட பாபர் மசூதியின் இடத்தில் இந்து தேசியவாத வழிபாட்டுத் தலத்தைக் கட்டுமாறு அரசாங்கத்திற்கு உத்தரவிட்ட அதன் 2019 தீர்ப்பு இதற்கு ஓர் எடுத்துக்காட்டாகும்.

இந்த வாக்காளர் நீக்க நடவடிக்கை, வாக்காளர் பட்டியல்களைக் கையாள்வதுடன் மட்டும் நின்றுவிடவில்லை. உத்தரப் பிரதேசத்தில், வாக்குரிமையை ஒடுக்குவதற்காகவே பொலிஸார் நேரடியாகப் பயன்படுத்தப்பட்டுள்ளனர். 2024 பொதுத் தேர்தலின்போது சம்பல் தொகுதியில், முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் கிராமங்களுக்குள் பொலிஸார் புகுந்து, வாக்களிப்பை நிறுத்துமாறு உத்தரவிட்டு, அடையாள அட்டைகளை அபகரித்துக்கொண்டு பெண்கள் மற்றும் முதியவர்கள் உட்பட வாக்காளர்கள் மீது தடியடிப் பிரயோகம் செய்தனர். 2022 ராம்பூர் இடைத்தேர்தலிலும் இதேபோன்ற வன்முறை இடம்பெற்றது. அங்கு வாக்குப்பதிவு 27.8 சதவீதமாகச் சரிந்ததுடன், இரண்டு தசாப்தங்களாக சமாஜ்வாதி கட்சியின் வசமிருந்த தொகுதியை பா.ஜ.க. கைப்பற்றியது. “வாக்காளர் மோசடியைத்” தடுப்பதற்காகவே தாங்கள் இவ்வாறு செயற்பட்டதாகப் பொலிஸார் கூறினர். ஆனால், உள்ளூர் தலைவர் ஒருவர் குறிப்பிட்டதுபோல், உண்மையில் நடந்தது பா.ஜ.க.வுக்கு ஆதரவாக வாக்களிக்குமாறு வாக்காளர்களை அச்சுறுத்துவதற்காக நடத்தப்பட்ட “பகிரங்கமான பொலிஸ் அடாவடித்தனமாகும்”.

ஞானேஷ் குமார் இராஜினாமா செய்ய வேண்டும் என்ற கோரிக்கை ஒரு முட்டுச்சந்தாகும். குமார், வெறுமனே ஒரு சமூக முறைமையின் அதிகாரியாக மட்டுமே செயற்படுகின்றார். இந்த முறைமையை எதிர்க்கட்சிகளும் சிஜேபியும், சவால் செய்யத் துணியாததால், இந்த ஒரு கோரிக்கையுடன் தங்களை மட்டுப்படுத்திக்கொள்கின்றன. தேர்தல் ஆணையம் என்பது பாஜகவால் “கைப்பற்றப்பட்ட” ஒரு நடுநிலையான நடுவர் அல்ல; மாறாக, அது முதலாளித்துவ அரசின் ஒரு கருவியாகும். வாக்காளர் பட்டியல்களில் சதி செய்வதானது, இந்தியாவில் முதலாளித்துவ ஆட்சியின் நெருக்கடியை அளவிடும் ஓர் அறிகுறியாகும். பாராளுமன்றத்தில் பெரும்பான்மை இல்லாத பா.ஜ.க., மக்கள் ஆதரவின் அடிப்படையில் தேர்தல்களில் வெற்றிபெற முடியாததால், பல்லாயிரக்கணக்கான வாக்காளர்களின் வாக்குரிமையைப் பறிப்பதை நாடுகிறது.

ஆனால், எதிர்க்கட்சிகள் எந்தவொரு மாற்றீட்டையும் முன்வைக்கவில்லை. காங்கிரஸ் கட்சியும் அதன் இந்தியா கூட்டணியும் தொழிலாள வர்க்கத்திற்கு எதிரான வர்க்கப் போரில் இணை வடிவமைப்பாளர்களாக உள்ளன. பா.ஜ.க.வைப் போலவே, தொழிலாளர்களுக்கு எதிரானதும் முதலீட்டாளர்களுக்கு ஆதரவானதுமான சீர்திருத்தங்களுக்கும், அமெரிக்க ஏகாதிபத்தியத்துடன் புதுடெல்லி கொண்டுள்ள சீனாவுக்கு எதிரான போர்க் கூட்டணிக்கும் அவை தங்களை அர்ப்பணித்துக்கொண்டுள்ளன. ஸ்ராலினிச சி.பி.எம். கட்சியும் அதன் பழையதும் சிறியதுமான கூட்டாளியான இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியும் (CPI) எந்தவொரு மாற்றீடும் அல்ல. மாறாக, அவை பல தசாப்தங்களாக வர்க்கப் போராட்டத்தை ஒடுக்கி, பிற்போக்கு அரசாங்கங்களுக்கு முட்டுக்கொடுத்து வந்துள்ளதுடன், அவை அரசாங்கங்களை அமைத்த மாநிலங்களிலும் முதலீட்டாளர்களுக்கு ஆதரவான கொள்கைகளை நடைமுறைப்படுத்தியுள்ளன. சிஜேபி அணிதிரட்டும் இளைஞர்களின் கோபம் உண்மையானதாக இருந்தாலும், அந்தக் கோபத்தை மீண்டும் அது முதலாளித்துவ அரசியலுக்குள்ளேயே திருப்பிவிடுகிறது.

ஸ்ராலினிசக் கட்சிகள் உட்பட அனைத்துக் கட்சிகளும் பெருவணிக நலன்களின் அரசியல் பிரதிநிதிகளாக இருப்பதால், தற்போதுள்ள அரசியல் கட்டமைப்பிற்குள் எந்தவொரு தீர்வும் கிடையாது. வாக்காளர் நீக்க நடவடிக்கைக்கு எதிரான போராட்டம், ஒட்டுமொத்த முதலாளித்துவ ஒழுங்கமைப்புக்கு எதிரான போராட்டத்துடன் இணைக்கப்பட வேண்டும் -அதாவது, உலக சோசலிசப் புரட்சியின் ஒரு பகுதியாக, தொழிலாளர் அரசாங்கத்திற்காகவும் சமூகத்தை சோசலிச அடிப்படையில் மறுசீரமைப்பதற்காகவும் முன்னெடுக்கப்படும் போராட்டத்துடன் இணைக்கப்பட வேண்டும். காங்கிரஸ், பாஜக., ஸ்ராலினிஸ்டுகள் மற்றும் போலி இடதுசாரிகளிடமிருந்து சுயாதீனமாக தொழிலாள வர்க்கத்தை அரசியல் ரீதியில் அணிதிரட்டுவதன் மூலம் மட்டுமே மோடி அரசாங்கத்தைத் தோற்கடித்து, இந்திய உழைக்கும் மக்களின் ஜனநாயக மற்றும் சமூக அபிலாஷைகளை நிறைவேற்ற முடியும்.

Loading