பிரான்சில் வெகுஜன அணிதிரட்டலுக்கு எதிராக அவசரகால நிலையைத் திணிக்கப்போவதாக மக்ரோன் அச்சுறுத்துகிறார்

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.

திங்களன்று மார்சேய்க்கு மேற்கொண்ட பயணத்தின்போது, தனது அரசாங்கத்துக்கு எதிரான இளைஞர்களினதும் தொழிலாளர்களினதும் வெகுஜன அணிதிரட்டலுக்கு எதிராக அவசரகால நிலையைத் திணிக்கப்போவதாக இமானுவேல் மக்ரோன் மீண்டும் அச்சுறுத்தினார். இன்று தொழிலாள வர்க்கம் எதிர்கொள்ளும் அரசியல் பணிகளை இந்த அச்சுறுத்தல் வெளிச்சத்துக்குக் கொண்டுவருகிறது. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க அணிதிரட்டலுக்கு அரசு எந்திரமும் ஆளும் வர்க்கமும் தீவிர வலதுசாரிச் சர்வாதிகாரத்தைத் திட்டமிடுவதன் மூலம் எதிர்வினையாற்றுகின்றன என்பதை இது உறுதிப்படுத்துகிறது.

கல்விக்காக அணிதிரண்ட இளைஞர்களும், எரிசக்தி விலைகளுக்கு எதிராகவும் வாங்கும் சக்திக்காகவும் அணிதிரண்ட “மஞ்சள் அங்கி” இயக்கத்தினரும், சிக்கன நடவடிக்கைகள், நவ-பாசிசம், பில்லியனர்கள், போர் ஆகியவற்றுக்கு எதிரான அவர்களின் கோரிக்கைகளும் பிரான்சிலுள்ள பல பத்து மில்லியன் மக்களின் கருத்துக்களைப் பிரதிபலிக்கின்றன. போராட்டங்கள் ஸ்பெயின், இத்தாலி, பெல்ஜியம், செர்பியா, அல்பேனியா, கிரீஸ் உள்ளிட்ட நாடுகளுக்கும் அதற்கு அப்பாலும் பரவிவரும் நிலையில், அவர்களின் போராட்டம் நூற்றுக்கணக்கான மில்லியன் ஐரோப்பியர்களின் உணர்வுகளைப் பிரதிபலிக்கிறது. போராடும் இளைஞர்களும் தொழிலாளர்களும் முதலாளித்துவ அரசுக்கு எதிராக ஜனநாயகத்தைப் பாதுகாக்க வேண்டும்.

மார்சேயில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், அக்டோபர் 17 மற்றும் 24 அணிதிரட்டல்களைக் குறிப்பிட்ட மக்ரோன், இயக்கம் தொடர்ந்து வளர்ந்தால் அவசரகால நிலையை நாடக்கூடும் என்று வலியுறுத்தினார்: “அவசரகால நிலையைப் பிரகடனம் செய்யாமலேயே நாங்கள் குடியரசு ஆட்சியையும் பொது ஒழுங்கையும் தக்கவைத்துக்கொண்டிருக்கிறோம். ஆனால், நிலைமைகள் மோசமடைந்தால், அது தடைசெய்யப்பட்ட ஒன்றோ அல்லது பரிசீலிக்கக்கூடாத ஒன்றோ என்று அர்த்தமல்ல.”

2015இல் பாரிஸில் நடந்த இஸ்லாமியவாதத் தாக்குதல்களுக்குப் பிறகு, பிரான்சுவா ஒலாந்த் ஆட்சியில் சோசலிஸ்ட் கட்சியால் (PS) திணிக்கப்பட்ட அவசரகால நிலை, அடிப்படை ஜனநாயக உரிமைகளை முடக்கும், சுதந்திரங்களை நசுக்கும் ஒரு நடைமுறையாகும். நீதிமன்ற உத்தரவின்றிச் சோதனை செய்யவும் பறிமுதல் செய்யவும், ஆர்ப்பாட்டங்களையும் பொதுக் கூட்டங்களையும் தடைசெய்யவும், தனிநபர்களைத் தடுத்து வைக்கவோ வீட்டுக்காவலில் வைக்கவோ, அவர்கள் பங்கேற்கும் அமைப்புகளைக் கலைக்கவும், பத்திரிகைகளைத் தணிக்கை செய்யவும், இராணுவ நீதிமன்றங்களை அமைக்கவும் இது அரசுக்கு அனுமதி அளிக்கிறது.

அவசரகால நிலையின் ஊரடங்கு உத்தரவுகள், ஆர்ப்பாட்டத் தடைகள் தொடர்பான விதிகள், 2017இல் அதைப் பெயரளவில் முடிவுக்குக் கொண்டுவந்தபோது PS-ஆலும் மக்ரோனாலும் சாதாரணச் சட்டத்தில் நீட்டிக்கப்பட்டன; அவை தற்போது நடைபெற்றுவரும் போராட்டங்களை ஒடுக்குவதற்கு ஏற்கெனவே பயன்படுத்தப்பட்டுவருகின்றன.

ஜனாதிபதித் தேர்தலுக்கான அனைத்துக் கருத்துக்கணிப்புகளிலும் நவ-பாசிஸ்ட் மரின் லு பென் முன்னிலை வகிக்கும் நிலையில், அவசரகால நிலையை மீண்டும் நாடுவதன் அரசியல் உள்ளடக்கம் தெளிவாக உள்ளது. 1940இல், பெத்தேனுக்கு முழு அதிகாரங்களை வழங்கவும், குடியரசைக் கலைக்கவும், நாஜிகளுடன் ஒத்துழைத்த ஆட்சியை நிறுவவும் வாக்களித்தது பிரெஞ்சு நாடாளுமன்றமே. 2026இல், முதலாளித்துவ வர்க்கத்தின் பரந்த பிரிவுகள் தீவிர வலதுசாரிகளை அதிகாரத்துக்குக் கொண்டுவர முயல்கின்றன; பதவியிலிருந்து வெளியேறவிருக்கும் ஜனாதிபதி, பதவியேற்கக்கூடிய தேசிய பேரணி (National Rally - RN) அரசாங்கத்துக்குச் சர்வாதிகார அதிகாரங்களை ஒப்படைப்பது குறித்து பரிசீலித்து வருகிறார்.

RN அதிகாரத்தில் இல்லாத நிலையிலும், 34 சதவீதம் பேர் மட்டுமே சாதகமான கருத்தைக் கொண்டுள்ள லு பென் பிரெஞ்சு மக்களிடையே செல்வாக்கற்றவராகவே நீடிக்கும் நிலையிலும், RN-இன் வேலைத்திட்டத்திலிருந்து எடுக்கப்பட்ட சர்வாதிகார நடவடிக்கைகளின் பரந்த தொகுப்பை நிறைவேற்ற ஆளும் வர்க்கம் ஏற்கெனவே முயன்று வருகிறது.

ஜூலை 7 அன்று, ஒரு போலிஸ் அதிகாரி தனது ஆயுதத்தைப் பயன்படுத்தும் ஒவ்வொரு முறையும் “தற்காப்பு என்ற சட்ட அனுமானத்தை” நிலைநாட்டும் ஒரு மசோதாவைத் தேசிய சட்டமன்றம் முதல் வாசிப்பில் நிறைவேற்றியது. நாஹெலை போலிஸ் இரக்கமின்றிப் படுகொலை செய்ததற்கு எதிராக 2023இல் நடந்த போராட்டங்களுக்கும் கலவரங்களுக்கும் பிறகு, இந்த மசோதா “ஆயுதத்தின் நியாயமான பயன்பாடு என்ற சட்ட அனுமானத்தை” உருவாக்குகிறது. இந்த மசோதாவுக்கு எதிராக 720,000க்கும் மேற்பட்ட கையொப்பங்களைச் சேகரித்த மனுவைப் பொது விவாதத்தைத் தவிர்ப்பதற்காகச் சட்டமன்றம் கிடப்பில் போட்டது. இந்த மசோதாவைச் சர்வதேச மன்னிப்புச் சபை கண்டித்து, இது “கொல்வதற்கான உரிமம்” என்று சுட்டிக்காட்டியது.

வலதுசாரிகள் ஆதிக்கம் செலுத்தும் செனட்டில் இந்த மசோதா இலையுதிர்காலத்தில் விவாதிக்கப்படுவதற்காக இப்போது காத்திருக்கும் நிலையில், செனட்டில் தாக்கல் செய்யப்பட்டுள்ள “கலவரத்தில் ஈடுபடுபவர் செலுத்த வேண்டும்” மசோதாவையும் அரசாங்கம் முன்னெடுத்துவருகிறது. சொத்துச் சேதம் ஏற்பட்ட ஆர்ப்பாட்ட இடத்தில் இருந்த எவரையும் 10,000 யூரோ வரை செலுத்துமாறு கட்டாயப்படுத்துவதற்கு இது அரசுக்கு அதிகாரமளிக்கும். தண்டிக்கப்பட்டவர்களின் குடும்ப உதவித்தொகைகள், வீட்டுவசதி உதவிகள், பிற சமூக உதவிகளை நேரடியாகப் பறிமுதல் செய்வதன் மூலம் இந்தத் தொகையை அரசு வசூலிக்க முடியும்.

தண்டிக்கப்பட்டவர்களின் சமூக ஊடகக் கணக்குகளை முடக்கவும், சந்தேக நபர்களை அடையாளம் காண ட்ரோன்களை (ஆளில்லா விமானங்கள்) பயன்படுத்தவும், ஆர்ப்பாட்டம் நடைபெற்ற இடத்தில் இருந்த வெளிநாட்டவர்களை நாடுகடத்தவும் இந்த மசோதா அனுமதிக்கிறது. வன்முறையில் ஈடுபடும் நோக்குடன் குழுவாகக் கூடும் குற்றத்துக்கான தண்டனையை, ஓராண்டுச் சிறை, 15,000 யூரோ அபராதம் என்பதிலிருந்து மூன்றாண்டுச் சிறை, 45,000 யூரோ அபராதமாக இது உயர்த்துகிறது. தெளிவாகச் சொல்வதானால், ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்கும் எவர் மீதும் பாரிய நிதி அபாயங்களை இந்த மசோதா சுமத்துவதுடன், ஆர்ப்பாட்டம் செய்யும் உரிமைக்குக் கடுமையான அச்சுறுத்தலாகவும் அமைகிறது.

அதேவேளை, ஆர்ப்பாட்டக்காரர்களைக் குறிவைக்கும் போலிஸ் ஏற்பாடுகளை வலுப்படுத்துமாறு மக்ரோன் மீண்டும் அழைப்பு விடுத்தார். அக்டோபர் 24 அணிதிரட்டல்களின்போது “ஒழுங்கு பேணப்பட்டது” என்பதை அவர் ஒப்புக்கொண்டார்.

ஆனால் அவரது கூற்றுப்படி, அக்டோபர் 17 அன்று “மார்சேயிலும் பிற இடங்களிலும் போதுமான பாதுகாப்புப் படைகள் இருக்கவில்லை … நடந்ததை நாங்கள் சிறிதும் முன்கூட்டிக் கணிக்கவில்லை.” அவர் மேலும் கூறினார்: “அதிகாலையிலேயே, மிகவும் வழக்கத்துக்கு மாறான முறையில், இத்தனை தீவிர இடதுசாரிச் சக்திகள் அணிதிரளும் என்பது முன்கூட்டிக் கணிக்கப்படவில்லை. இந்தத் தீவிர இடதுசாரி அணிதிரட்டலுடன் சேர்ந்து, குற்றச்செயல்களில் ஈடுபடுவோரும் அங்கு வருவார்கள் என்பதையும் நாங்கள் கணிக்கவில்லை. போலிஸ் படைகள் தேவையான அளவில் நிறுத்தப்படவில்லை.”

இந்த விளக்கம் எதையும் விளக்கவில்லை; அக்டோபர் 17 அன்று பாதுகாப்புப் படைகளின் பங்கு குறித்துத் தொழிலாளர்களும் இளைஞர்களும் எழுப்பும் கேள்விகளை அது மேலும் தீவிரப்படுத்தவே செய்யும். அக்டோபர் 17 அன்று கடைகளைக் குறிவைத்த வன்முறைக்கும், 24 அன்று நிலவிய மிகவும் அமைதியான சூழலுக்கும் இடையிலான வெளிப்படையான வேறுபாட்டை எது விளக்குகிறது?

அக்டோபர் 17 முதல் போராட்டங்கள் தொடர்பாகப் பிரான்சில் ஏறத்தாழ 3,700 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று உள்துறை அமைச்சகத்தின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இது மிகப் பெரிய எண்ணிக்கையாகும். ஆயினும், அக்டோபர் 24 அன்று சொத்துச் சேதங்கள் ஏன் நிகழவில்லை என்பதை இதைக் கொண்டு விளக்க முடியாது. ஏனெனில், சேதப்படுத்தும் நோக்குடன் ஆர்ப்பாட்டங்களில் பங்கேற்க விரும்பிய அனைவரையும் போலிஸ் இவ்வாறு கைது செய்திருந்தால், அக்டோபர் 17 அன்று பல்லாயிரக்கணக்கான போலிஸாரைக் குவித்திருந்த பிரம்மாண்டப் பாதுகாப்பு ஏற்பாடுகளைச் சில ஆயிரம் பேரே முறியடித்தனர் என்ற முடிவுக்கே வர வேண்டியிருக்கும்.

பிரான்சிலும் ஐரோப்பா முழுவதிலும், இளைஞர்களினதும் தொழிலாளர்களினதும் இயக்கம் பெரும்பாலும் தனது கோரிக்கைகளில் கவனம் குவிப்பதாகவும் அமைதியானதாகவும் உள்ளது. ஆர்ப்பாட்டங்களைத் தடைசெய்யும் முயற்சியும், ஆர்ப்பாட்டக்காரர்களைக் கலகக்காரர்கள் என்று முத்திரை குத்தும் முயற்சியும், மூலைக்குத் தள்ளப்பட்ட ஓர் அரசாங்கத்திடமிருந்தே வருகின்றன; அதன் போர், சர்வாதிகாரக் கொள்கைகள் தொழிலாளர்களால் நிராகரிக்கப்படுகின்றன. இந்த நிலைமைகளிலேயே, அக்டோபர் 17 அன்று கலகக்காரர்களைப் பாதுகாப்புப் படைகள் தமது நோக்கங்களுக்குப் பயன்படுத்தியிருக்கக்கூடுமா என்ற கேள்விகளைப் பல தொழிலாளர்கள் எழுப்புகின்றனர்.

நிலவும் சமூக, அரசியல் ஒழுங்குக்கு எதிரான ஆழமான எதிர்ப்பு, இப்போது ஐரோப்பா முழுவதும் மில்லியன் கணக்கான மக்களை அணிதிரட்டிவருகிறது. வெறும் ஒடுக்குமுறையையும் சுதந்திரங்களைப் பறிக்கும் சட்டங்களையும் நாடுவதன் மூலம், வர்க்கப் போராட்டத்தின் இந்த எழுச்சியை முதலாளித்துவ வர்க்கத்தால் நசுக்க முடியாது. ஆனால், பிரான்சில் முன்பு அமல்படுத்தப்பட்ட அவசரகால நிலையின் அனுபவத்திலிருந்தும் முக்கியமான அரசியல் படிப்பினைகளைப் பெற வேண்டும்.

முதலாளித்துவத் தன்னலக்குழுவுக்கும் நவ-பாசிசத்துக்கும் எதிராக ஜனநாயகத்தைப் பாதுகாக்கும் பணியை நாடாளுமன்றக் கட்சிகளிடமோ தொழிற்சங்க அதிகாரத்துவங்களிடமோ தொழிலாளர் வர்க்கமும் இளைஞர்களும் விட்டுவிட முடியாது. இந்த அமைப்புகள், எல்லாவற்றிற்கும் மேலாக, முதலாளித்துவ அரசு எந்திரத்துக்குள் பேச்சுவார்த்தை நடத்துவதையே நோக்கமாகக் கொண்டுள்ளன. ஒரு சர்வாதிகாரத் திட்டத்தை அவை கோட்பாட்டு ரீதியிலோ வர்க்க அடிப்படையிலோ எதிர்ப்பதில்லை.

பாதுகாப்புப் படைகளுக்குக் “கொல்வதற்கான உரிமம்” வழங்குவது குறித்துச் சட்டமன்றத்தில் நடந்த வாக்கெடுப்பு காட்டுவதுபோல, போலிஸ் ஒடுக்குமுறை தொடர்பான RN-இன் நிலைப்பாடுகளுக்குச் சட்டமன்றத்தில் ஒரு பெரும்பான்மை வென்றெடுக்கப்பட்டுவிட்டது. மேலும், சட்டமன்றத்திலுள்ள அடிபணியாத பிரான்ஸ் (LFI) சிறுபான்மையினர், போலிஸ் அரசுக்கும் RN-க்கும் எதிரான ஜனநாயக உரிமைகளுக்கான உறுதியான அரசியல் பாதுகாப்பு அல்ல. உண்மையில், 2015 நவம்பரில், PS விரும்பிய அவசரகால நிலைக்கு மெலோன்சோனின் நாடாளுமன்றக் குழு வாக்களித்தது.

ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்பதற்கு, போராடும் தொழிலாள வர்க்கத்தின் முடிந்தவரை பரந்த அணிதிரட்டல் அவசியமாகும். மாணவர்கள் மீதான போலிஸ் ஒடுக்குமுறை பிரெஞ்சு வரலாற்றின் மிகப் பெரிய பொது வேலைநிறுத்தத்தைத் தூண்டிய 1968 மே நிகழ்வுகள் மீண்டும் நிகழுமா என்ற கேள்வி, தொழிலாளர்களிடையேயும் இளைஞர்களிடையேயும் ஏற்கெனவே பரவலாக எழுப்பப்பட்டுவருகிறது. பிரெஞ்சு அளவிலும், அதைவிட முக்கியமாக ஐரோப்பிய அளவிலும் ஒரு புதிய பொது வேலைநிறுத்தத்துக்குத் தயாராவதற்காகத் தொழிலாள வர்க்கத்தை ஒழுங்கமைத்து அணிதிரட்டுவதே இப்போதைய பணியாகும்.

இதை நிறைவேற்றத் தொழிலாளர்களும் இளைஞர்களும், தொழிற்சங்கங்களின் செயலற்ற காத்திருப்புக் கொள்கையைக் கடந்து செல்வதற்காகவும், இந்த நிலைமையிலிருந்து எழும் அரசியல் பணிகள் குறித்துத் தொழிலாள வர்க்கத்துக்குள் மேலும் பரந்த அளவில் கலந்தாலோசிப்பதற்காகவும், தொழிற்சங்க எந்திரங்களுடன் முறித்துக்கொண்டு சுயாதீனமான நடவடிக்கைக் குழுக்களில் தம்மை ஒழுங்கமைத்துக்கொள்ள வேண்டும்.

எல்லாவற்றுக்கும் மேலாக, ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்பதற்கு, முதலாளித்துவத் தன்னலக்குழுவிடமிருந்து அதிகாரத்தைப் பறிப்பதற்கான தொழிலாள வர்க்கத்தின் போராட்டம் தேவைப்படும் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். ஜனநாயகத்தின் பாதுகாப்பு, தொழிலாளர் அதிகாரத்துக்கும், ஐரோப்பிய ஒன்றியத்துக்குப் பதிலாக ஐரோப்பிய ஐக்கிய சோசலிச அரசுகளை நிறுவுவதற்குமான போராட்டத்தின் வழியாகவே செல்கிறது.

Loading