இலங்கை சோசலிச சமத்துவக் கட்சியின் நான்காவது தேசிய பேராளர் மாநாட்டின் தீர்மானம்-பகுதி 2

ஜே.வி.பி. அரசாங்கத்திற்கும் முதலாளித்துவத்திற்கும் எதிரான போராட்டத்தில் சோ.ச.க.யின் மூலோபாயமும் வேலைத் திட்டமும்

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.

கொழும்பில் 2026 ஆகஸ்ட் 11 முதல் 13 வரை நடைபெற்ற சோசலிச சமத்துவக் கட்சியின் (இலங்கை) நான்காவது பேராளர் மாநாட்டின் பிரதான தீர்மானத்தின் இரண்டாம் பகுதியை நாங்கள் இங்கே வெளியிடுகிறோம். இத்தீர்மானம் மாநாட்டில் ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. இது மூன்று பகுதிகளாக வெளியிடப்படும். இதன் முதலாம் பாகம் அக்டோபர் 16 வெளியிடப்பட்டது.

அரசாங்க எதிர்ப்புப் போராட்டங்களில் சோசலிச வேலைத்திட்டத்திற்காக சோ.ச.க. மற்றும் IYSSE உறுப்பினர்களும் ஆதரவாளர்களும் பிரச்சாரம் செய்த போது.

2022 வெகுஜன எழுச்சியின் படிப்பினைகள்

47. 2022 ஏப்ரல் மற்றும் ஜூலைக்கு இடையில் இலங்கையை உலுக்கிய வெகுஜன எழுச்சியானது, சுதந்திரத்திற்குப் பின்னர் தீவில் ஏற்பட்ட மிக சக்திவாய்ந்த புரட்சிகர இயக்கங்களில் ஒன்றாகும். ஆழமடைந்து வரும் பூகோள பொருளாதார நெருக்கடியின் ஒரு பகுதியாக நாட்டில் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சியின் விளைவாக, அடிப்படை உணவுப் பொருட்கள், எரிபொருள் மற்றும் மருந்து போன்ற அத்தியாவசியப் பொருட்களின் தட்டுப்பாடு மற்றும் வானளவு உயர்ந்த விலைவாசி, மற்றும் பல மணிநேர மின்வெட்டு ஆகியவற்றால் மக்கள் எதிர்கொண்ட தாங்க முடியாத சூழ்நிலைகளுக்கு எதிராக இந்தப் போராட்டம் தன்னிச்சையாக வெடித்தது. இந்த இயக்கம் வேகமாக ஒரு நாடு தழுவிய எழுச்சியாக மாறியதுடன், போராட்டக்காரர்களின் ஒரு பகுதியினர் கொழும்பு காலிமுகத்திடலை ஆக்கிரமித்தனர்.

அவசரகால நிலை பிரகடனம், பொதுக் கூட்டங்களைத் தடை செய்யும் ஊரடங்கு உத்தரவுகள் மற்றும் இரண்டு முறை இராணுவத்தை அழைக்க அவர் மேற்கொண்ட முயற்சி உட்பட, அப்போதைய ஜனாதிபதி கோட்டாபய இராஜபக்ஷ அரச ஒடுக்குமுறையைக் கட்டவிழ்த்துவிட எடுத்த அனைத்து முயற்சிகளையும் இந்த மக்கள் இயக்கம் சவாலுக்கு உட்படுத்தியது. மக்கள் போராட்டங்களை அடக்க முடியாமல், ஜனாதிபதி இராஜபக்ஷ நாட்டை விட்டு ஓட நிர்ப்பந்திக்கப்பட்டதுடன், அவரது ஆட்சியும் சரிந்தது.

48. இராஜபக்ஷ அரசாங்கத்திற்கு எதிராக 2021 முதல் உருவாகி வந்த வெகுஜன எதிர்ப்பின் உச்சக்கட்டமே 2022 இல் வெடித்த வெகுஜன எழுச்சியாகும். இரசாயன உரம் மற்றும் ஏனைய விவசாய இரசாயனங்களின் இறக்குமதிக்கு அரசாங்கம் விதித்த தடைக்கு எதிராக —ஏற்கனவே மிகக் குறைவாக இருந்த உர மானியத்தை பாரதூர விளைவுகளுடன் ஒழித்தமைக்கு எதிராக— 2021 இன் நடுப்பகுதியிலும் பிற்பகுதியிலும் பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் போராடினர். இது அரசாங்கத்தின் கிராமப்புற ஆதரவுத் தளத்தின் சரிவை முடுக்கிவிட்டது. அதே நேம், கிட்டத்தட்ட 250,000 ஆசிரியர்களும் அதிபர்களும் 2021 ஜூலை முதல் அக்டோபர் வரை இணையவழி கற்பித்தலைப் புறக்கணித்து மூன்று மாதங்களுக்கும் மேலாக நீடித்த வேலைநிறுத்தத்தை மேற்கொண்டமை, பரந்த சமூக எதிர்ப்பின் எழுச்சியை சமிக்ஞை செய்தது.

49. 2022 ஏப்ரல் 28 மற்றும் மே 6 ஆகிய திகதிகளில் நடந்த இரண்டு பொது வேலைநிறுத்தங்களில் தொழிலாள வர்க்கத்தின் தீர்க்கமான மற்றும் புரட்சிகரமான பங்கு நிரூபிக்கப்பட்டது. அடுத்தடுத்து ஆட்சிக்கு வந்த அரசாங்கங்களாலும் ஆளும் வர்க்க மேல்தட்டினராலும் திட்டமிட்டு திணிக்கப்பட்ட சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் இனவாதப் பிரிவினைகளைக் கடந்து, வடக்கு, கிழக்கு மற்றும் பெருந்தோட்ட மாவட்டங்கள் உட்பட நாட்டின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும், அனைத்துத் துறைகளையும் சேர்ந்த மில்லியன் கணக்கான தொழிலாளர்கள் இந்த வேலைநிறுத்தங்களில் இணைந்ததால் நாடு ஸ்தம்பித்தது. இந்நடவடிக்கைகள் ஒட்டுமொத்த அரசியல் ஸ்தாபனத்தையும் உலுக்கியதுடன், கோட்டாபய இராஜபக்ஷ தப்பியோடி, இராஜினாமா செய்ததில் போய் முடிந்தன.

50. இந்த பிரமாண்டமான அணிதிரள்வுகள் இராஜபக்ஷ குடும்பத்திற்கு எதிரான வெகுஜன கோபத்தை மட்டுமல்லாது, [பாராளுமன்றத்தின்] '225 பேரும் வேண்டாம்' என்ற கோஷத்தில் வெளிப்பட்டவாறு, ஒட்டுமொத்த அரசியல் ஸ்தாபனம் மற்றும் பாராளுமன்ற ஒழுங்குமுறை மீதான ஆழமான விரோதப் போக்கையும் வெளிப்படுத்தின. இந்த கோரிக்கையானது அனைத்து நாடாளுமன்றக் கட்சிகளையும் பரந்த அளவில் நிராகரிப்பதை பிரதிபலித்ததுடன், தொழிலாள வர்க்கம் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான புறநிலை நிலைமைகளை வெளிப்படுத்தியது.

51. இருப்பினும், கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகளுக்குப் பிறகும், 2022 எழுச்சியின் காட்டிக்கொடுப்பை சுரண்டிக்கொண்டு ஆட்சிக்கு வந்த ஜே.வி.பி. தலைமையிலான அரசாங்கத்தின் கீழ், உழைக்கும் மக்கள் தீவிரமடைந்துவரும் சிக்கன நடவடிக்கைகள், விரிவுபடுத்தப்பட்ட அரச ஒடுக்குமுறை மற்றும் ஆழமடைந்து வரும் வறுமையையும் எதிர்கொள்கின்றனர். ஏன்? என்பதே இங்குள்ள தீர்க்கமான கேள்வியாகும். இந்த எழுச்சியின் அனுபவமும் அதன் பின்னணியும் ஆராயப்பட வேண்டும். 2022 இல் இரண்டு முரண்பட்ட முன்னோக்குகள் உருவெடுத்தன. எதிர்க்கட்சிகள், தொழிற்சங்கங்கள் மற்றும் போலி-இடது அமைப்புகளும் இந்த இயக்கத்தை பாராளுமன்றக் கட்டமைப்புக்குள் முடக்கி, முதலாளித்துவ ஆட்சியைக் பாதுகாப்பதற்காக திட்டமிட்டு வேலை செய்தன. இதற்கு நேர்மாறாக, சோ.ச.க., சர்வதேச சோசலிசத்திற்கான போராட்டத்தின் ஒரு பகுதியாக தொழிலாளர் மற்றும் விவசாயிகளின் அரசாங்கத்தை அமைப்பதற்கான சோசலிசக் கொள்கைகளின் பின்னால் கிராமப்புற ஏழைகளையும் ஒன்றிணைத்து, தொழிலாள வர்க்கத்தை சுயாதீனமாக அரசியல் ரீதியில் அணிதிரட்டுவதற்காகப் போராடியது.

52. பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி, ஜே.வி.பி./தே.ம.ச. மற்றும் போலி-இடது முன்னிலை சோசலிசக் கட்சியும், முதலாளித்துவ ஆட்சியைப் பாதுகாப்பதற்காக 'அனைத்துக் கட்சி இடைக்கால அரசாங்கத்தை' ஊக்குவித்தன. ஆரம்பத்திலிருந்தே, முதலாளித்துவ முறைமைக்கு இந்த வெகுஜன இயக்கம் ஏற்படுத்தியுள்ள அச்சுறுத்தலை உணர்ந்து கொண்ட ஜே.வி.பி., அதனை ஒடுக்கவே முயன்றது. 2022 ஏப்ரல் 7 அன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றிய ஜே.வி.பி. தலைவரும் தற்போதைய ஜனாதிபதியுமான அநுரகுமார திசாநாயக, மக்கள் எதிர்ப்பால் நாட்டில் வளர்ந்து வரும் 'அராஜகம்' குறித்து எச்சரித்ததுடன், கோட்டாபய இராஜபக்ஷ இராஜினாமா செய்தால், முதலாளித்துவ ஆட்சியை ஸ்திரப்படுத்துவதற்காக ஓர் இடைக்கால அரசாங்கத்தில் இணைவதற்குத் தனது கட்சி தயாராக இருப்பதாக, ஆளும் ஸ்ரீ.ல.பொ.ஐ.மு. முதல் எதிர்க்கட்சியான ஐ.ம.ச. வரையிலான அனைத்து பாராளுமன்றக் கட்சிகளுக்கும் வாக்குறுதி கொடுத்தார்.

53. வெகுஜன இயக்கத்தை முதலாளித்துவ பாராளுமன்றப் பாதைக்குள் திசைதிருப்பி சீர்குலைப்பதில் முன்னிலை சோசலிசக் கட்சி ஒரு மையப் பாத்திரத்தை ஆற்றியது. பொது வேலைநிறுத்தங்கள் தொழிலாள வர்க்கத்தின் பிரமாண்டமான சக்தியை நிரூபித்த வேளையில், அத்தகைய இடைக்கால அரசாங்கத்தை அமைப்பதற்காக அது ஐ.ம.ச. மற்றும் தமிழ் கட்சிகள் உட்பட முதலாளித்துவ கட்சிகளுடன் பேச்சுவார்த்தைகளை நடத்தியது. காலவரையற்ற வேலைநிறுத்தங்களுக்கு அழைப்பு விடுத்தால், இயக்கம் தங்களது கட்டுப்பாட்டை மீறிச் சென்றுவிடும் என்பதை நன்கு அறிந்திருந்த தொழிற்சங்க அதிகாரத்துவத்தினர், அதற்கு மறுத்து, தங்களது போராட்டங்களை வேண்டுமென்றே ஒருநாள் போராட்டங்களாக மட்டுமே மட்டுப்படுத்துவதற்கு முன்னிலை சோசலிசக் கட்சி உதவியது.

54. கோட்டாபய இராஜபக்ஷவின் இராஜினாமாவைத் தொடர்ந்து, இக்கட்சிகள் உடனடியாக ஓர் இடைக்கால நிர்வாகத்தை அமைத்து, பின்னர் புதிய தேர்தலை நடத்துவதற்கான பிரச்சாரத்தைத் தீவிரப்படுத்தின. இந்த வஞ்சகமான சூழ்ச்சிகளின் மூலம், ஜே.வி.பி. மற்றும் ஏனைய அனைத்து எதிர்க்கட்சிகளும், மதிப்பிழந்த பாராளுமன்றம் ஊடாக அமெரிக்க-சார்பு மற்றும் சர்வதேச நாணய நிதிய-சார்பு ஐ.தே.க. தலைவர் ரணில் விக்ரமசிங்கவை ஜனாதிபதி பதவியில் அமர்த்துவதற்கு வழிவகுத்தன. அவர் பதவியேற்றதும் சர்வதேச நாணய நிதியத்தினால் விதிக்கப்பட்ட கடுமையான சிக்கன நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்தத் தொடங்கினார்.

சோ.ச.க.யின் புரட்சிகர மாற்றீடு

2022 ஏப்ரல் 24 அன்று நடைபெற்ற, “வெகுஜனப் போராட்டங்களுக்கான ஒரு சோசலிச வேலைத்திட்டம்” என்ற தலைப்பில் சோ.ச.க./IYSSE நடத்திய இணையவழிக் கூட்டம்.

55. அனைத்து அரசியல் கட்சிகள், அவற்றின் பின்னால் தொங்கும் போலி-இடதுகள் மற்றும் தொழிற்சங்க அதிகாரத்துவங்களுக்கு எதிராக, சோ.ச.க. மட்டுமே வெகுஜன எழுச்சிக்கான ஒரு புரட்சிகர சோசலிச வேலைத்திட்டத்தை முன்வைத்தது. அனைத்துக் கட்சி இடைக்கால அரசாங்கத்திற்கான அவர்களின் பிரச்சாரத்தை, முதலாளித்துவ ஆட்சியைப் பாதுகாப்பதற்கும் வெகுஜன இயக்கத்தை ஒடுக்கித் தோற்கடிப்பதற்கும் முன்வைக்கப்பட்ட ஒரு பொறி என குணாம்சப்படுத்தி, அதனை நிராகரிக்குமாறு தொழிலாளர் வர்க்கத்திற்கு நாம் திட்டவட்டமாக அழைப்பு விடுத்தோம். பாராளுமன்றக் கட்டமைப்புக்குள்ளும் முதலாளித்துவ முறைமைக்குள்ளும் தொழிலாளர்களும் ஏழைகளும் தங்களது சமூக மற்றும் வாழ்க்கை நிலைமைகளைப் பாதுகாப்பதற்கான எந்தவொரு தீர்வும் கிடையாது என்று சோ.ச.க. பிரகடனம் செய்தது. தங்களது போராட்டத்தை முன்னோக்கி நகர்த்துவதற்கு, தொழிற்சங்க அதிகாரத்துவங்கள் மற்றும் முதலாளித்துவக் கட்சிகளிடமிருந்து சுயாதீனமாக, ஒவ்வொரு தொழிற்சாலை, வேலைத்தளம், பெருந்தோட்டங்கள் மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளிலும் தொழிலாளர்கள் தங்களின் சொந்த நடவடிக்கை குழுக்களை உருவாக்கி, விடயங்களைத் தங்கள் கைகளில் எடுத்துக்கொள்ள வேண்டும் என நாங்கள் முன்மொழிந்தோம். அதேபோல், கிராமப்புற ஏழைகளும் தத்தமது பகுதிகளில் இத்தகைய குழுக்களை அமைக்க வேண்டியதன் அவசியத்தையும் விளக்கினோம்.

56. சோ.ச.க. தனது சொந்தப் பதாகையின் கீழ் வெகுஜன இயக்கத்திற்குள் தொடர்ந்து தலையீடு செய்ததுடன், கட்சியின் அறிக்கைகளின் பிரதிகளையும் விநியோகித்தது. 7 ஏப்ரல் 2022 அன்று, சோ.ச.க., “இலங்கையின் இராஜபக்ஷ அரசாங்கத்தை வீழ்த்து! நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை ஒழித்திடு! சிக்கன நடவடிக்கையும் பட்டினியும் வேண்டாம்! அனைவருக்கும் உணவு, எரிபொருள் மற்றும் மருந்துகளைப் பெறக்கூடிய ஒரு சோசலிச வேலைத்திட்டத்திற்காகப் போராடுவதற்கு நடவடிக்கைக் குழுக்களை உருவாக்கு!” என்ற தலைப்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்டது. உழைக்கும் மக்களின் பிரதான கோரிக்கையான “கோட்டா [கோட்டாபய இராஜபக்ஷ] பதவி விலக வேண்டும்!” என்பதற்கு சோ.ச.க.யின் ஆதரவை வெளிப்படுத்திய அதேவேளை, “ஆனால் அவருக்குப் பதிலாக எதைப் பதிலீடு செய்வது?” என்ற கேள்வியை நாங்கள் நேரடியாக எழுப்பினோம்: நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை ஒழிப்பது மற்றும் அனைத்து கொடூரமான சட்டங்களையும் நீக்குவதையும் சோ.ச.க. முன்மொழிந்ததோடு, “தொழிலாள வர்க்கம், கிராமப்புற ஏழைகள் மற்றும் இளைஞர்களின் உறுதியான போராட்டத்தின் மூலம் மட்டுமே அடையக்கூடிய இந்த இன்றியமையாத ஜனநாயக அரசியல் மாற்றங்களின் நோக்கம், சோசலிச வழிகளில் பொருளாதாரத்தின் அடிப்படை மறுசீரமைப்பை முன்னெடுப்பதே ஆகும்.” தொழிலாளர் வர்க்கம் “தனது சமூக சக்தியை அணிதிரட்டி, பிரமாண்டமான சமூக மற்றும் பொருளாதார நெருக்கடிக்குத் தனது சொந்தத் தீர்வை அமுல்படுத்த வேண்டும்... பரஸ்பர உதவிக்காக தொழிலாளர்கள் சர்வதேச அளவில் தங்களது வர்க்கத் தோழர்களை நாட முடியும், முதல் நடவடிக்கையாக மோடி அரசாங்கத்தின் சிக்கன நடவடிக்கை மற்றும் தனியார்மயமாக்கல் திட்ட நிரலுக்கு எதிராக கடந்த வாரம் இரண்டு நாள் பொது வேலைநிறுத்தத்தை நடத்திய இந்தியத் தொழிலாளர்களை முதற்கட்டமாகத் தொடர்புகொள்ள முடியும்.”

57. முன்னிலை சோசலிசக் கட்சி போன்ற போலி-இடதுகளின் உதவியுடன் கொழும்பு காலிமுகத்திடலில் உள்ள பிரதான போராட்டக் களத்தின் ஏற்பாட்டாளர்களால் பிறப்பிக்கப்பட்ட “அரசியல் பேசக்கூடாது” என்ற ஜனநாயக விரோத உத்தரவை, இந்த புரட்சிகர வேலைத்திட்டத்துடன், எங்கள் கட்சியும் சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக இளைஞர் மற்றும் மாணவர் (IYSSE) அமைப்பும், சவால் செய்தோம். வெகுஜன எழுச்சிக்குள் புரட்சிகர சோசலிச அரசியலுக்காக சோ.ச.க. முன்னெடுத்த போராட்டத்தைத் தடுத்து ஒதுக்குவதே அவர்களின் உண்மையான நோக்கமாக இருந்தது.

58. முதலாளித்துவ ஆட்சியைக் காப்பாற்றுவதற்காக “அனைத்துக் கட்சி உடன்பாட்டை” எட்டுவதை நோக்கமாகக் கொண்ட பேச்சுவார்த்தைகளில் இணையுமாறு 5 ஜூலை 2022 அன்று ஐ.ம.ச. விடுத்த நேரடி அழைப்பை சோ.ச.க. உறுதியாக நிராகரித்தது. அந்த அழைப்பை நிராகரித்து, சோ.ச.க.யின் பொதுச் செயலாளர் தீபால் ஜயசேகர, “ஐ.ம.ச. முன்மொழிந்துள்ளவாறு ஒரு “அனைத்துக் கட்சி அரசாங்கம்” அல்லது ஜே.வி.பி. முன்மொழிந்துள்ளவாறு ஒரு “ஐக்கிய அரசாங்கம்” மூலம் இந்த முதலாளித்துவ அரசு இயந்திரத்திற்கு ஒரு புதிய முகத்தை மாற்றுவதன் ஊடாக இந்த நெருக்கடிக்குத் தீர்வு காண முடியாது” என்று எழுதினார்.

59. வெகுஜன இயக்கத்தின் முன்னேற்றங்களை பகுப்பாய்வு செய்து, 20 ஜூலை 2022 அன்று ஒரு அறிக்கையை வெளியிட்ட சோ.ச.க., தொழிலாளர்கள் மற்றும் கிராமப்புற மக்களின் நடவடிக்கை குழுக்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளை அடிப்படையாகக் கொண்டு, “தொழிலாளர்கள் மற்றும் கிராமப்புற மக்களின் ஜனநாயகத்துக்கும் சோசலிசத்துக்குமான மாநாட்டிற்காக” ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க பிரச்சாரத்தைத் தொடங்கியது. அந்த அறிக்கை விளக்கியதாவது: “இடைக்கால அரசாங்கம் ஒன்றுக்கான பேச்சுவார்த்தைகளை நிராகரித்ததன் மூலம், அரசியல் ஸ்தாபனம் மற்றும் முதலாளித்துவ அரசின் ஜனநாயக விரோதச் சதிகளிலிருந்து முற்றிலும் சுயாதீனமாக, தனது சொந்த அரசியல் அதிகார மையத்தை தொழிலாளர் வர்க்கம் நிறுவ வேண்டும் என்பதை சோ.ச.க. புரிந்து கொண்டது. தொழிலாளர்கள் மற்றும் கிராமப்புற மக்களின் ஜனநாயகத்துக்கும் சோசலிசத்துக்குமான மாநாட்டிற்கான எமது அழைப்பின் முக்கியத்துவம் அதுவே ஆகும்.”

இந்த மாநாடு, சுரண்டப்படும் மக்களுக்காக உண்மையாக குரல் எழுப்பும் ஒரு புரட்சிகர அரசியல் மாற்றீடாகக் கருதப்பட்டது. அனைத்து வெளிநாட்டுக் கடன்களையும் அடைப்பதை நிராகரித்தல்; சர்வதேச நாணய நிதியத்தின் சிக்கன நடவடிக்கைகளை நிராகரித்தல்; கோடீஸ்வரர்களின் சொத்துக்களைப் பறிமுதல் செய்வதோடு, வங்கிகள் மற்றும் பிரதான நிறுவனங்களைத் தொழிலாளர்களின் கட்டுப்பாட்டின் கீழ் தேசியமயமாக்குதல்; விவசாயிகளின் கடன்களை இரத்து செய்து, உர மானியங்களை மீண்டும் வழங்குதல்; வாழ்க்கைச் செலவுக்கு ஏற்ப ஊதியத்துடன் அனைவருக்கும் வேலைவாய்ப்பை உறுதி செய்தல் உட்பட ஒரு பல்பூரணமான வேலைத்திட்டத்தை சோ.ச.க. முன்வைத்தது. இவற்றை நடைமுறைப்படுத்துவதற்கு, சோசலிசப் வழியில் சமூகத்தை மறுசீரமைக்க அர்ப்பணிப்புடன் செயல்படும் ஒரு தொழிலாளர் மற்றும் விவசாயிகளின் அரசாங்கத்தை அமைப்பது அவசியமாகும்.

60. இந்த நடவடிக்கை குழுக்கள், 1917 ரஷ்யப் புரட்சியின் படிப்பினைகளைப் பெற்று, போராட்டங்களில் அவை தம்மை வளர்த்துக்கொண்டு நிரூபிக்கும் போது, அவை சுயாதீன தொழிலாளர் வர்க்க அரசியல் அதிகாரத்தின் உறுப்புகளாக -அதாவது சோவியத்துகளுக்கு இணையான தற்கால அமைப்புகளாக- மாறும் என சோ.ச.க. விளக்கியது. இலங்கைத் தொழிலாளர்களின் கூட்டாளிகள், முதலாளித்துவ எதிர்க்கட்சிகள் கட்சிகள் அல்ல, மாறாக உலகம் முழுதும் இருக்கும் அவர்களின் வர்க்க சகோதர சகோதரிகளே என்பதை வலியுறுத்திய கட்சி, அனைத்துலகக் குழுவினால் தொடங்கப்பட்ட தொழிலாளர் நடவடிக்கை குழுக்களின் சர்வதேச கூட்டணியின் (IWA-RFC) மூலம் தங்களது போராட்டங்களை ஒருங்கிணைக்க அழைப்பு விடுத்தது.

61. முன்னெப்பொழுதும் இல்லாத இந்த அரசியல் சூழ்நிலை குறித்து விளக்கிய அந்த அறிக்கை மேலும் குறிப்பிட்டதாவது:

“இலங்கையிலும் பூகோள ரீதியிலுமான முதலாளித்துவ நெருக்கடி, அறுபது வருடங்களுக்கு முன்னர் இருந்ததை விட இன்று மிக ஆழமானதாக உள்ளது. கடந்த மூன்று மாதங்களின் வெகுஜன எழுச்சியானது முதலாளித்துவ ஆட்சியின் ஆணி வேரையே உலுக்கியுள்ளது. ஆனால் லியோன் ட்ரொட்ஸ்கி ஒருமுறை விளக்கியது போல், தனது பலவீனத்தைப் புரிந்துகொள்வதுதான் முதலாளித்துவத்தின் பலம் ஆகும். அரசியல் அதிகாரம் அதன் கைகளில் விடப்பட்டால், அது சர்வதேச நாணய நிதியத்தின் சிக்கன திட்ட நிரலைத் திணிப்பதன் மூலமும், எந்தவொரு வெகுஜன எதிர்ப்பையும் நசுக்குவதன் மூலமும் ஈவிரக்கமின்றி அதன் நலன்களைப் பாதுகாக்கும்.”

“தொழிலாள வர்க்கத்தின் பலவீனம், தனது பலத்தை அது புரிந்து கொள்ளாததுதான் என்றும் ட்ரொட்ஸ்கி விளக்கினார். பாரியளவான வெகுஜனங்களின் போராட்டங்கள் பெரும் போர்க்குணம், உறுதிப்பாடு மற்றும் தைரியத்தை வெளிப்படுத்தியுள்ளன. ஆனால் உழைக்கும் மக்கள் அரசியல் ஸ்தாபகத்திற்கு கட்டுப்பட்டு, ஒரு முதலாளித்துவ இடைக்கால அரசாங்கத்தில் நம்பிக்கை வைத்தால், விளைவு தவிர்க்க முடியாமல் ஒரு பேரழிவானதாக இருக்கும்.”

62. முதலாளித்துவக் கட்சிகள் மற்றும் தொழிற்சங்க அதிகாரத்துவங்களின் செல்வாக்கிலிருந்து தொழிலாளர் வர்க்கம் விடுபடத் தவறியமையும், சோ.ச.க. முன்னோக்கை ஏற்றுக்கொள்ளத் தவறியமையும் பேரழிவு தரும் விளைவுகளை ஏற்படுத்தின. முன்னெப்பொழுதும் இல்லாத ஒடுக்குமுறையைக் கட்டவிழ்த்துவிட்ட விக்கிரமசிங்க, அவசரகால நிலைகளைப் பிரகடனப்படுத்தியதோடு போராட்டக்காரர்களுக்கு எதிராகப் பயங்கரவாதத் தடைச் சட்டத்தைப் பயன்படுத்தினார். மேலும், 22 ஜூலை 2022 அன்று, காலிமுகத்திடல் தற்காலிகப் போராட்டக் களத்தை வன்முறை மூலம் கலைப்பதற்காக அவர் 1,000 ஆயுதபாணி பொலிஸாரையும் இராணுவத்தையும் அனுப்பினார். பொருளாதார ரீதியாக, அவர் சர்வதேச நாணய நிதியத்தின் கொடூரமான சிக்கன நடவடிக்கைகளைத் திணித்தார். பிரதான துறைகளில் வேலைநிறுத்தங்களைத் தடை செய்வதற்காக அத்தியாவசிய பொதுச் சேவைகள் சட்டம் பயன்படுத்தப்பட்டது.

63. தொழிலாளர் வர்க்கம் புரட்சிகர சோசலிசப் பாதையை எடுக்கத் தவறியமையானது, வெகுஜன எழுச்சிக்குள் சோ.ச.க.யின் கொள்கை ரீதியான அரசியல் தலையீட்டின் முக்கியத்துவத்தையோ அல்லது தொழிலாள வர்க்கத்தின் புறநிலை புரட்சிகர ஆற்றலையோ எவ்வகையிலும் குறைத்து மதிப்பிடவில்லை. இது பிரதானமாக, ஸ்டாலினிச மற்றும் சமூக ஜனநாயக அதிகாரத்துவங்கள் மற்றும் பப்லோவாத திருத்தல்வாதக் குழுக்கள் போன்ற பல்வேறு போக்குகளினால் பல தசாப்தங்களாக இழைக்கப்பட்ட காட்டிக்கொடுப்புகளின் காரணமாக, தொழிலாள வர்க்கத்திற்குள் சோசலிச மற்றும் மார்க்சிச கலாச்சாரமும் நனவும் சிதைக்கப்பட்டதன் துன்பகரமான விளைவே ஆகும். சர்வதேச தொழிலாள வர்க்கத்திற்குள் சோசலிச மற்றும் மார்க்சிச கலாச்சாரத்தை மீண்டும் கட்டியெழுப்புவதற்காக, அதற்கு முந்தைய டிசம்பரில் சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டதைத் தொடர்ந்து, 1992 இல் நடைபெற்ற அனைத்துலகக் குழுவின் அமர்வில் எடுக்கப்பட்ட முன்முயற்சியின் பிரமாண்டமான முக்கியத்துவத்தை இது அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

ஆட்சியை நோக்கிய ஜே.வி.பி.யின் வளர்ச்சி

64. 2022 போராட்டம் காட்டிக்கொடுக்கப்பட்டமையே ஜே.வி.பி. ஆட்சி பீடம் ஏறுவதற்கு வழிவகுத்தது. 2024 செப்டம்பரில், ஜே.வி.பி. தலைவர் அநுரகுமார திசாநாயக 42.3 சதவீத வாக்குகளுடன் ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து நவம்பர் மாதம் நடந்த பாராளுமன்றத் தேர்தலில் ஜே.வி.பி./தே.ம.ச. கூட்டணி 61.6 சதவீத வாக்குகளைப் பெற்று, 225 ஆசனங்களில் 159 ஆசனங்களை வென்று அமோக வெற்றி பெற்றது —இது 2019 இல் அவர்கள் பெற்றிருந்த 3.1 சதவீத வாக்குகளிலிருந்து ஏற்பட்ட ஒரு பிரமாண்ட பாய்ச்சலாகும். பாரம்பரிய அரசியல் கட்சிகளுக்கு எதிரான வெகுஜன கோபத்தை ஜே.வி.பி. தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டதுடன், தன்னை 'அரசியல் ஸ்தாபனத்திற்கு எதிரான' ஒரு மாற்றீடாகப் பொய்யாகக் காட்டிக்கொண்ட அதேவேளை, சர்வதேச ஊடகங்கள் அதற்கு 'இடதுசாரி' என்றும் 'சோசலிசம்' என்றும் வினோதமான முறையில் முத்திரை குத்தின.

65. தேர்தல் பிரச்சாரங்களின் போது, சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தத்தை 'மீளப் பேச்சுவார்த்தை' நடத்துவோம் என்றும், ஏழைகளைப் பாதுகாப்போம், ஊதியத்தை உயர்த்துவோம், ஜனநாயக சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்துவோம், நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையையும் பயங்கரவாதத் தடைச் சட்டம் போன்ற ஒடுக்குமுறைச் சட்டங்களையும் ஒழிப்போம் என்றும் ஜே.வி.பி. உறுதியளித்தது. மேலும், 'தேசிய ஒற்றுமையை' கட்டியெழுப்புவது, உள்நாட்டுப் போரின் போதும் அதன் பின்னரும் கைது செய்யப்பட்ட அரசியல் கைதிகளை விடுவிப்பது, மற்றும் வடக்கு கிழக்கில் இராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பொதுமக்களின் நிலங்களைத் திரும்ப ஒப்படைப்பது போன்ற வாக்குறுதிகளையும் வழங்கியது. இவை அனைத்தும் வெறும் வாக்குகளைப் பெறுவதற்காகக் கூறப்பட்ட பொய்கள் என்பது இப்போது நிரூபிக்கப்பட்டுள்ளது. இதற்கு நேர்மாறாக, தொழிலதிபர்களுடனான சந்திப்புகளின் போது, சர்வதேச நாணய நிதியத்தின் முழு வேலைத்திட்டத்தையும் தாங்கள் அமல்படுத்துவோம் என்று ஜே.வி.பி. தலைவர்கள் ஆளும் வர்க்கத்திற்கு உறுதியளித்திருந்தனர். 2024 ஜனாதிபதித் தேர்தலுக்குச் சில மாதங்களுக்கு முன்பே, தொழிலாளர்களின் மட்டுப்படுத்தப்பட்ட வேலைநிறுத்தங்கள் மற்றும் போராட்டங்களைக் கூட ஜே.வி.பி.யின் தொழிற்சங்கங்கள் தடுத்து நிறுத்தியதுடன் இப்போது அவை இந்த அரசாங்கத்தின் கருவிகளாகச் செயல்பட்டு வருகின்றன.

66. ஜே.வி.பி.யின் முகமூடி மிக விரைவாகக் கிழிந்தது. 2024 நவம்பர் 23 அன்று—புதிய நாடாளுமன்றம் கூடிய முதல் நாளிலேயே—சர்வதேச நாணய நிதியத்தின் வேலைத்திட்டத்தை தனது அரசாங்கம் முழுமையாக அமல்படுத்தும் என்று அறிவித்த திசாநாயக, பேச்சுவார்த்தை நடத்துவோம் என்ற தேர்தல் வாக்குறுதியைக் கைவிட்டார். 2025 பெப்ரவரி வரவுசெலவுத் திட்டத்தில், அரச ஊழியர்களுக்கு மிகக் குறைந்த அளவு ஊதிய உயர்வு வழங்கிய அதேவேளை, அவர்களுக்கான கொடுப்பனவுகளை வெட்டிக் குறைத்ததுடன், பெறுமதி சேர் வரியை அதிகரித்ததோடு ஏனைய பிற்போக்கு வரிகளைத் தொடர்ந்ததுடன், அரசாங்கச் செலவினங்களில் பாதியளவான 4.5 ட்ரில்லியன் ரூபாவை, கடனைத் திருப்பிச் செலுத்துவதற்காக ஒதுக்கியது. பயங்கரவாதத் தடைச் சட்டம் மற்றும் ஏனைய ஒடுக்குமுறைச் சட்டங்களை ஒழிப்பதாக அளித்த வாக்குறுதியை அரசாங்கம் மீறியதுடன், அவற்றை தொழிலாளர்கள், இளைஞர்கள் மற்றும் அரசியல் எதிரிகளுக்கு எதிராகப் பயன்படுத்தியதோடு, இப்போது அதே போன்ற ஒடுக்குமுறை அதிகாரங்களைக் கொண்ட, சில அம்சங்களில் அதையும் தாண்டிச் செல்லக்கூடிய, புதிய, 'பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டத்தை'  அறிமுகப்படுத்தியுள்ளது.

ஐ.நா. பொதுச் சபையின் 80ஆவது அமர்வின்போது நடைபெற்ற இரவு விருந்தில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் அவரது மனைவியுடன் இலங்கை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க [Photo: President’s Media Division]

67. ஜே.வி.பி. அரசாங்கம் தனது கடந்தகால ஏகாதிபத்திய எதிர்ப்பு வாய்ச்சவடால்களின் எஞ்சிய பகுதிகளையும் கைவிட்டு, சீனாவுக்கு எதிரான அமெரிக்காவின் இராணுவ-மூலோபாயத் தாக்குதலுக்குள் கொழும்பை இன்னும் நெருக்கமாக இணைத்துள்ளதுடன், இஸ்ரேலுடனான உறவுகளையும் பலப்படுத்தியுள்ளது—இதன் மூலம் தனது வலதுசாரி முன்னோடியான விக்ரமசிங்கவின் கொள்கைகளையே அது தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றது. ஈரானுக்கு எதிரான அமெரிக்க-இஸ்ரேலின் குற்றவியல் போர் குறித்த ஜே.வி.பி. அரசாங்கத்தின் பிரதிபலிப்பு இதனை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. பிராந்திய ஸ்திர நிலைமை மற்றும் சர்வதேச அமைதிக்குமான அச்சுறுத்தல் குறித்து 'ஆழ்ந்த கவலை' தெரிவித்து அதன் வெளிவிவகார அமைச்சு வெளியிட்ட அறிக்கையில், 'அதிகபட்ச நிதானத்தை' பேணவும், 'மோதலைத் தணிக்கவும்' அழைப்பு விடுத்த போதிலும், ஆக்கிரமிப்பாளர்களான அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் பெயரையோ அல்லது ஈரானால் ஆத்திரமூட்டப்படாமலேயே அதன் மீது நடத்தப்படும் இப்போரினால் பாதிக்கப்பட்டுள்ள ஈரானின் பெயரையோ குறிப்பிட அது மறுத்துவிட்டது. பாலஸ்தீனியர்களுக்கு எதிராக காசாவில் அமெரிக்க ஆதரவுடன் இஸ்ரேல் நடத்தி வரும் இனப்படுகொலை போர் குறித்தும் இதே நிலைப்பாட்டையே எடுத்த அது, அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் பெயரைக் குறிப்பிடாமல், மோதலைத் தணிக்கவும் நிதானத்தைக் கடைப்பிடிக்கவும் பயனற்ற கோரிக்கைகளை விடுத்தது.

தொடரும்…

Loading