இலங்கையின் ஜே.வி.பி-தே.ம.ச. முன்னாள் இராணுவ அதிகாரிகள் மற்றும் வர்த்தக பிரதிநிதிகளுடன் கூட்டணி சேர்கின்றது

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.

மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) தலைமையிலான தேசிய மக்கள் சக்தி (தே.ம.ச.) ஜனநாயக மற்றும் சமூக உரிமைகளின் காப்பாளனாக காட்டிக்கொண்டு, உடனடி பொதுத் தேர்தலுக்கான பிரச்சாரத்தை தீவிரப்படுத்திக்கொண்டிருக்கின்றது.

11 பெப்ரவரி 2023 அன்று, ஜே.வி.பி.-தே.ம.ச. கூட்டிய ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரிகளின் கூட்டத்தில் உரையாற்றிய ஜே.வி.பி. தலைவர் அனுரகுமாரா திசாநாயக. உயர் இராணுவ அதிகாரிகள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்கள் ஜே.வி.பி. தலைவரின் பின்னால் அமர்ந்திருக்கிறார்கள்.

தேசிய மக்கள் சக்தியும் (தே.ம.ச.),  பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியும்  (ஐ.ம.ச.), விக்ரமசிங்கவின்  சிக்கன நடவடிக்கைகள் மற்றும் அதனோடு இணைந்த ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல்களுக்கு எதிராக அதிகரித்து வரும் வெகுஜன எதிர்ப்பை சுரண்டிக்கொள்ள முயற்சிக்கின்றன. அரசாங்கமானது இரண்டு வாரங்களுக்கு முன்பு, நாட்டின் அரசியலமைப்பையும், வாக்களிக்கும் மக்களின் அடிப்படை உரிமையையும் மீறி. உள்ளூராட்சி சபைகளுக்கான  தேர்தல்களைத் தடுத்தது. 

தே.ம.ச. மற்றும்  ஐ.ம.ச.யும் ஒரு பொதுத் தேர்தலுக்கு அழைப்பு விடுப்பது, ஜனநாயக உரிமைகள் மீதான அவற்றின் அன்பின் காரணமாக அல்ல. மாறாக, கடந்த எட்டு மாதங்களுக்கு முன்பு, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய இராஜபக்ஷ மற்றும் அவரது அரசாங்கத்தையும் வீழ்த்திய தொழிலாள வர்க்க வெகுஜன போராட்டங்கள் மீண்டும் வெடிப்பதை தடுப்பதற்கு விக்ரமசிங்க ஆட்சியால் முடியாமல் போய விடும் என அவை அஞ்சுவதாலேயே ஆகும். அதிகரித்து வரும் வெகுஜன கோபத்தை பாராளுமன்ற தேர்தல் அரசியலுக்குள்ளும், சர்வதேச நாணய நிதியம் கட்டளையிட்டுள்ள அதே சிக்கன நடவடிக்கைகளை அமல்படுத்துவதற்கு ஒரு புதிய முதலாளித்துவ அரசாங்கத்தை அமைப்பதன் பக்கமும் திசை திருப்பிவிடவே இரு கட்சிகளும் விரும்புகின்றன.

கல்விமான்கள், தொழிலறிஞர்கள், சிறு வணிகர் தட்டுக்கள் உட்பட உயர் மத்தியதர வர்க்கத்தினரின் ஒரு பகுதியை ஒன்றிணைத்து 2015 இல் ஜே.வி.பி.யால் தொடங்கப்பட்ட ஒரு பாராளுமன்ற முன்னணியே தே.ம.ச. ஆகும். 1983 ஆம் ஆண்டிலிருந்து முன்னெடுக்கப்பட்ட 26 ஆண்டுகால தமிழர்-விரோத இனவாத போருக்கான அதன் ஆதரவு மற்றும் பல்வேறு முதலாளித்துவ அரசாங்கங்களில் அது பங்கேற்றமை மற்றும் பல்வேறு கூட்டணி அரசாங்களுக்கு ஆதரவு வழங்கியமை போன்ற அதன் கடந்தகால அபகீர்த்திமிக்க வரலாற்றை மூடிமறைப்பதற்கு ஜே.வி.பி. இந்த முன்னணியை பயன்படுத்துகின்றது. அனுரகுமார திசாநாயக்கவே ஜே.வி.பி.யினதும் தே.ம.ச.யினதும் தலைவராக செயல்படுகிறார்.

தே.ம.ச., கடந்த ஜனவரியில் வணிக பிரதிநிதிகளை சந்தித்து, அதன் கொள்கைகள் எவ்வாறு இலாபத்தை அதிகரிக்கும் என்பதை விளக்கியது. கடந்த மாதம், இது ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களின் மாநாட்டை நடத்தியது. இரண்டு நிகழ்வுகளும், அது ஆட்சிக்கு வந்தால் தொழிலாளர்கள் மற்றும் ஏழைகள் மீது தே.ம.ச. திணிக்கவுள்ள ஈவிரக்கமற்ற முதலாளித்துவ சார்பு ஆட்சியை வெளிப்படுத்துகிறது.

பெரும் வணிகத்திற்கான வாக்குறுதிகள்

'தேசிய பொருளாதார மன்றம்' என்ற தலைப்பில் வணிக நிகழ்வொன்று ஜனவரி 24 அன்று கொழும்பில் உள்ள நான்கு நட்சத்திர கலாதரி ஹோட்டலில் நடைபெற்றது. பெரும் வணிக பிரதிநிதிகள் முதல் சிறு மற்றும் நடுத்தர தொழில்முனைவோர் உட்பட சுமார் 500 பேர் வரையானவர்கள் அதில் கலந்து கொண்டனர்.

தனது கட்சி மற்றும் அதன் பொருளாதாரக் கொள்கைகள் குறித்து “வணிக சமூகத்தித்திற்கு ஏதாவது சந்தேகங்கள் இருப்பின் அதை அகற்றுவதே” இந்தக் கூட்டத்தின் பிரதான நோக்கம் என்று திசாநாயக்க கூறினார். கடந்த காலத்தில் சோசலிசத்திற்காக போராடுவதாக ஜே.வி.பி. கூறித்திரிந்த போலிக் கதைகளை அவர் தெளிவாக மனதில் வைத்திருந்தார்.

'மக்கள் மத்தியில் பொருளாதார நன்மைகளின் சமமான விநியோகம்' என்ற கருத்து 'ஒரு கற்பனாவாதம்' என்று அறிவித்த அவர், 'நாங்கள் ஆட்சிக்கு வந்தால் பெரும் நிறுவனங்களை பறிமுதல் செய்வோம் என்று சிலர் கூறுகிறார்கள். இவை [கூற்றுக்கள்] முற்றிலும் பொய்யனவை,” என்றும் தெரிவித்தார்.

கொழும்பில் குவிந்துள்ள உற்பத்தி பொருளாதாரம் பின்தங்கிய தூர பகுதிகளுக்கும் விரிவாக்கப்படும் என தெரிவித்த அவர், இந்த பகுதிகளில் முதலீட்டாளர்களுக்கு தக்க உள்கட்டமைப்பு வசதிகள் வழங்கப்படும் என்று பங்கேற்பாளர்களுக்கு உறுதியளித்தார்.

'எரிசக்தி மற்றும் நிதி' துறைகளில் மட்டுமே அரசு ஈடுபடும் என்று தொடர்ந்த அவர், சுகாதாரம் மற்றும் கல்வித் துறைகள் உட்பட மற்ற அனைத்து துறைகளிலும் முதலீடு செய்ய தனியார் முதலீட்டாளர்களுக்கு முழு வாய்ப்புகள் வழங்கப்படும் என்று உறுதி வழங்கினார். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், இலவசக் கல்வி மற்றும் சுகாதாரத்தில் எஞ்சியிருப்பவையும் வெட்டும் பலகையின் மீது வைக்கப்பட்டுள்ளன. 

'நாம் ஒரு குறுகிய காலத்திற்கு எங்கள் வாழ்க்கை முறையை மாற்ற வேண்டும்,' என்று கூறிய அவர், 'இந்த நெருக்கடியிலிருந்து நாம் வெளியே வர வேண்டுமெனில், நாம் அதைச் செய்ய வேண்டும். வலிமிகுந்த நடவடிக்கைகளை எடுக்க நாங்கள் நிர்ப்பந்திக்கப்படுவோம்,” எனவும் வலியுறுத்தினார்.

திசநாயக்க, இந்த 'வலி மிகுந்த நடவடிக்கைகள்' என்ன என்பதை தெரிவிக்கவில்லை என்றாலும், அவை இப்போது விக்கிரமசிங்க அரசாங்கத்தால் திணிக்கப்படும் அதே சர்வதேச நாணய நிதிய சிக்கன நடவடிக்கைளே அன்றி வேறல்ல. - மக்கள் 'வேதனைக்குரிய' நடவடிக்கைகளை சகித்துக் கொள்ள வேண்டும் மற்றும் அவர்களின் வாழ்க்கை முறையை மாற்ற வேண்டும் என, விக்கிரமசிங்கவின் அதே சொற்றொடர்களையே திசாநாயக்கவும் பயன்படுத்தினார். ஏனெனில் பொருளாதார நெருக்கடிக்கு முதலாளித்துவத்திடம் ஒரே ஒரு தீர்வு மட்டுமே உள்ளது: அது சுமையை உழைக்கும் மக்கள் மீது திணிப்பதாகும்.

அக்டோபர் 17 அன்று ஸ்வர்ணவாஹினி தொலைக்காட்சி கலந்துரையாடல் நிகழ்ச்சியில் தோன்றிய திஸாநாயக்க, நாடு வெளிநாட்டுக் கடன்களைத் திருப்பிச் செலுத்தாததால், 'சர்வதேச நாணய நிதியத்திடம் செல்வதைத் தவிர இலங்கைக்கு வேறு வழியில்லை' என்று கூறினார். 2008 இல் கிரேக்கத்தைத் தாக்கிய பொருளாதார நெருக்கடியும், 'தினசரி உணவை ஒரு நாளைக்கு இரண்டு பணிஸ்கள்' என்று மட்டுப்படுத்துவது உட்பட 'வேதனைக்குரிய' நடவடிக்கைகளின் வகையைச் சுட்டிக்காட்டுகிறது, என்று அவர் மற்றொரு கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கூறினார். 

“’இந்த நெருக்கடியில் இருந்து எங்களை காப்பாற்றுங்கள்’, என்று கூறி மக்கள் ஒரு புதிய அரசாங்கத்தை ஆட்சிக்கு கொண்டு வருவார்களெனில், அவர்கள் அத்தகைய அரசாங்கத்திற்கு கால அவகாசம் கொடுப்பார்கள். அத்தகைய சூழ்நிலையில் எங்கள் திட்டத்தை செயல்படுத்தலாம்!” என திஸநாயக்க தேசிய பொருளாதார மன்றத்தின் பங்கேற்பாளர்களுக்கு கூறினார்.

எவ்வாறாயினும், சர்வதேச நாணய நிதியம் கட்டளையிட்ட  தாங்க முடியாத கொள்கைகளுக்கு எதிராக தொழிலாளர்களும் ஏழைகளும் தவிர்க்க முடியாமல் போராட்டத்தில் இறங்குவார்கள். எந்தவொரு முதலாளித்துவ அரசாங்கத்தையும் போலவே, ஒரு தே.ம.ச. ஆட்சியும் தொழிற்சங்க எந்திரங்கள் மூலமாகவும், பொலிஸ் மற்றும் இராணுவத்தை கட்டவிழ்த்து விடுவதன் மூலமாகவும் இந்தப் போராட்டங்களை நசுக்குவதற்கு முயற்சிக்கும்.

இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு மூல காரணம் நாட்டின் 'அரசியல் கலாச்சாரம்' என்றும், இது அடுத்தடுத்து ஆட்சிக்கு வந்த அரசாங்கங்களின் கீழ், ஊழல், மோசடி, உறவினர் மற்றும் நண்பர்களுக்கு சலுகை வழங்கல் மற்றும்  வீண்விரயத்திலும் மூழ்கியிருப்பதாகவும் திஸாநாயக்க கூட்டத்தில் கூறினார். தே.ம.ச.யில் இவற்றை அகற்றக் கூடிய  ஊழலற்ற தூய்மையான நபர்கள் உள்ளனர், என்று அவர் வாதிட்டார்.

உண்மையில், இலங்கையின் பொருளாதார மற்றும் சமூக நெருக்கடியானது, கோவிட்-19 தொற்றுநோய் மற்றும் ரஷ்யாவிற்கு எதிரான அமெரிக்க-நேட்டோ போரினால் மோசமாக்கப்பட்டுள்ள உலக முதலாளித்துவத்தின் ஆழமான வரலாற்று நெருக்கடியின் விளைவாகும்.

ஜே.வி.பி. இராணுவத்தின் ஆதரவை கோருகிறது

பெப்ரவரி 11 அன்று, தே.ம.ச., கொழும்பு, மஹரகமவில் அமைந்துள்ள தேசிய இளைஞர் மன்ற கேட்போர் கூடத்தில் ஓய்வுபெற்ற சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள் மற்றும் கீழ்நிலை அதிகாரிகளின் 1,000 பேர் கொண்ட மாநாட்டை நடத்தியது. இந்த  நிகழ்வில் உரையாற்றிய ஒரு ஓய்வுபெற்ற பெண் பிரிகேடியர், தே.ம.ச. இந்த அடுக்குகளுக்கு மத்தியில்  “முப்படைகளின் கூட்டு” ஒன்றை அமைப்பதற்கான வேலையைத் தொடங்கியுள்ளதாக, கூறினார்.

https://www.wsws.org/asset/1d7a7d64-b35b-4c9b-8138-68919a23a576?rendition=image1280

தனது கட்சி 'சுதந்திரப் போராட்டத்தின் புதிய வழிமுறையில்' நுழைந்துள்ளதாக பிரதான உரையாற்றிய திஸாநாயக்க அறிவித்தார்.  அதில் 'சட்டம், ஒழுங்கு மற்றும் இறையாண்மையின் கீழ் பொருளாதார வளர்ச்சியை துரிதப்படுத்துவோம்' என அவர் கூறினார்.

சபையில் இருந்த படையினரில் பலர், பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான இரத்தக் களரி இனவாதப் போரில் பங்குபற்றியவர்கள் ஆவர். அவர்களில் சிலர் ஊனமுற்றவர்களாக இருந்தனர்.

அதேநேரம், வடக்கிலும், தெற்கிலும் உள்ள மக்களுக்கு 'தமக்கென சொந்த கதைகள் உள்ளன' என்று கூறிய திஸாநாயக்க, வடக்கில் உள்ள தமிழ் மக்கள் மற்றும் தெற்கில் போரில் இறந்த இராணுவ சிப்பாய்களின் குடும்பங்கள் எதிர்கொள்ளும் அவலங்கள் குறித்து கவலை தெரிவித்தார்.

உண்மையில், சிங்கள ஜனரஞ்சக வாதத்திலும் பேரினவாதத்திலும் எப்போதும் ஊறிப்போன ஜே.வி.பி., ஏறத்தாழ மூன்று தசாப்த கால யுத்தத்தின் உறுதியான ஆதரவாளராக இருந்தது. அது மீண்டும் மீண்டும் இராணுவத்தை வலுப்படுத்த அழைப்பு விடுத்ததுடன் அதன் குற்றங்களையும் அட்டூழியங்களையும் நியாயப்படுத்தியது.

அவர்கள் கட்சியின் வேலைகளில் முக்கிய ஊக்கியாக இருப்பார்கள் என, மாநாட்டில் கலந்துகொண்ட படையினரிடம் திஸநாயக்க நேரடியாக வேண்டுகோள் விடுத்தார். 'நாங்கள் எதிர்பார்க்கும் மாற்றத்தின் மிக முக்கியமான பணியை உங்களால்தான் செய்ய முடியும்... நீங்கள் ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட சக்தி. இதை மாற்றுவதற்கு இப்படியொரு சக்தி தேவை... இராணுவம் என்பது அனைத்து துறைகளிலும் பரவி இருக்கின்ற… ஒரு பயிற்சி பெற்ற மனித வளம்,” என அவர் கூறினார்.

ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரலும் கிழக்கு மாகாணத்தின் முன்னாள் தளபதியுமான அருண ஜயசேகர எதிர்கால தே.ம.ச. அரசாங்கத்தில் பாதுகாப்பு அமைச்சராக இருப்பார் என்றும் திஸாநாயக்க அறிவித்தார். ஜெயசேகர மாநாட்டு மேடையில் இருந்தார்.

ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் அருண ஜெயசேகர 11 பெப்ரவரி 2023 அன்று ஓய்வுபெற்ற படையினரின் கூட்டத்தில் தே.ம.ச.யின் பாதுகாப்புத் திட்டத்தை சுருக்கமாக விளக்குகிறார்.

ஒரு தே.ம.ச. அரசாங்கம் அதன் வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் எந்த அரசியல் தலையீடும் இல்லை என்பதை உறுதிப்படுத்த இராணுவத்தின் மீது பெருமளவில் தங்கியிருக்கும் என்பதை ஜெயசேகர தெளிவுபடுத்தினார். “ஒரு சமூகத்தின் இருப்புக்கு சட்டம் ஒழுங்கை முக்கிய காரணியாக நாங்கள் கருதுகிறோம்,” என அவர் அறிவித்தார்.

அரசியல் தலையீடு என்பதன் அர்த்தம் என்ன என்பதை ஜெயசேகர விரிவாகக் கூறவில்லை என்றாலும், தே.ம.ச. அரசாங்கத்தின் கீழ் தொழிலாள வர்க்க எதிர்ப்புக்கு இடமில்லை என்பது தெளிவாகிறது.

முன்னெப்போதுமில்லாதவாறு, முன்னாள் படையினரை நோக்கிய இந்த திருப்பம் மற்றும் ஒரு தே.ம.ச. அரசாங்கத்தின் கீழ் இராணுவத்தின் வகிபாகத்தை திஸாநாயக்க வலியுறுத்துவதானது, தொழிலாள வர்க்கத்திற்கு ஒரு எச்சரிக்கையாகும். எந்தவொரு தொழிலாள வர்க்க எழுச்சியையும் அடக்குவதற்கு ஆளும் வர்க்கம் இராணுவத்தை தயார்படுத்துகிறது என்பதற்கு இது மற்றொரு அறிகுறியாகும்.

பெப்ரவரி 17 அன்று தே.ம.ச.யை கண்டித்த ஐ.ம.ச. தலைவர் சஜித் பிரேமதாச, அதற்கு ஒரு புரட்சிகர வேலைத்திட்டம் இருப்பதாகவும், அனைத்து தனியார் சொத்துக்களையும் ஒழித்துவிடும் என்றும் அறிவித்தார். இது, தே.ம.ச.க்கு பெருவணிக மற்றும் மத்தியதர வர்க்கப் பிரிவினரின் ஆதரவைத் தடுப்பதற்கான அவநம்பிக்கையான முயற்சியாகும்.

பிரேமதாசவின் குற்றச்சாட்டில் கோபமடைந்த திஸாநாயக்க, 1980 ஜே.வி.பி. ஆவணத்தில் இருந்து எடுக்கப்பட்ட காலாவதியான 'அவதூறுகள்' என்று அந்த குற்றச்சாட்டுக்களை நிராகரித்தார். ''சோசலிச முகாமின்' சரிவு உட்பட உலகில் பரந்த மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. தகவல் தொடர்பு மற்றும் தொழில்நுட்பம் பெரும் பாய்ச்சலில் மாற்றமடைந்துள்ளன. இன்று இருப்பது 1980 இல் இருந்து வேறுபட்ட உலகம் ஆகும்,” என அறிவித்தார்.

'நாங்கள் உலகம், சமூகம் மற்றும் பொருளாதாரத்தில் நிகழும் மாற்றங்களை நன்கு புரிந்துகொண்டு, அவற்றை கிரகித்துக்கொண்டு, அதற்கேற்ப மாற்றங்களைச் செய்யக் கூடிய ஒரு நெகிழ்வான அரசியல் இயக்கம் ஆகும்' என்று அவர் கூறினார்.

எவ்வாறாயினும், ஜே.வி.பி.யின் உண்மையான வரலாற்றை திஸாநாயக்கவால் விளக்க முடியவில்லை. ஜே.வி.பி., 1966இல் குட்டி முதலாளித்துவ தீவிரவாதக் குழுவாக ஆரம்பிக்கப்பட்டதில் இருந்து, மாவோயிசம், கஸ்றோவாதம் மற்றும் சிங்கள ஜனரஞ்சகவாதத்தின் நச்சுக் கருத்தியல் கலவையை அடிப்படையாகக் கொண்டதாகும். மக்களை ஏமாற்றுவதற்கு சோசலிச வாய்சவடால்களை விடுவதைத் தவிர, இதற்கு மார்க்சியத்துடன் அல்லது சோசலிசத்துடன் எந்த தொடர்பும் கிடையாது. 

1980 களில் இருந்து உண்மையில் உலகில் பெரிய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. தேசிய பொருளாதார ஒழுங்குமுறையின் அடிப்படைக்கே குழிபறித்த உற்பத்தியின் பூகோளமயமாக்கலானது கிழக்கு ஐரோப்பாவில் ஸ்ராலினிச ஆட்சிகளின் சரிவுக்கும் சோவியத் ஒன்றியத்தின் கலைப்புக்கும் மற்றும் உலகெங்கிலும் உள்ள முதலாளித்துவ தேசியவாத அமைப்புகள் வலதுபுறம் கூர்மையாக திரும்புவதற்கும் வழிவகுத்தது.

பல குட்டி-முதலாளித்துவ தீவிர அமைப்புகளைப் போலவே, ஜே.வி.பி.யும் அதன் கொரில்லா போர் சீருடைகளையும் சோசலிச வாய்ச்சவாடல்களையும் வசதியான பாராளுமன்ற ஆசனங்களுக்காக பரிமாறிக்கொண்டு, முதலாளித்துவ அரசியல் ஸ்தாபனத்தில் தன்னை ஒருங்கிணைத்துக்கொண்டது.

கடந்த ஆண்டு, அது ஒரு இடைக்கால முதலாளித்துவ ஆட்சியையும் பொதுத் தேர்தலையும் முன்மொழிந்து, அரசாங்க-விரோத வெகுஜன எழுச்சியை அரசியல் ரீதியாக தடம் புரளச் செய்ததில் முக்கிய பங்குவகித்தது. இதே போன்ற முன்மொழிவுகளை ஐ.ம.ச.யும் முன்வைத்தது. இந்த திட்ட நிரலை தொழிற்சங்கங்கள் மற்றும் பல்வேறு போலி இடதுசாரிக் குழுக்களும் ஏற்றுக்கொண்டு மக்கள் இயக்கத்தைக் காட்டிக்கொடுத்து விக்கிரமசிங்கவை ஜனாதிபதியாக உயர்த்தின.

சர்வதேச நாணய நிதியத்தின் ஆணைகளை நடைமுறைப்படுத்துவதற்கு ஒரு புதிய முதலாளித்துவ அரசாங்கத்தை பதவிக்கு கொண்டுவர ஜே.வி.பி.-தே.ம.ச. முன்னெடுக்கும் பிற்போக்கு பிரச்சாரத்தை தொழிலாளர்களும் இளைஞர்களும் நிராகரிக்க வேண்டும். சோசலிச சமத்துவக் கட்சியால் முன்னெடுக்கப்படும் புரட்சிகர சோசலிச வேலைத்திட்டத்தில் தொழிலாள வர்க்கத்தை சுயாதீனமாக அணிதிரட்டுவதற்காக போராடுவதே இலங்கை தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களுக்கான ஒரே வழி ஆகும்.

ஒவ்வொரு வேலைத் தளத்திலும், தொழிற்சாலையிலும், பெருந்தோட்டத்திலும், அனைத்து முதலாளித்துவக் கட்சிகள் மற்றும் தொழிற்சங்கங்களில் இருந்து விலகி, சுயாதீனமாக தங்கள் சொந்த நடவடிக்கை குழுக்களை அமைக்கவும், ஜனநாயகத்துக்கும் சோசலிசத்துக்குமான தொழிலாளர்களதும் விவசாயிகளதும் மாநாட்டைக் கட்டியெழுப்பவும் சோசலிச சமத்துவக் கட்சி தொழிலாளர்களுக்கு அழைப்பு விடுக்கின்றது. அத்தகைய மாநாடு, தெற்காசியாவிலும் சர்வதேச அளவிலும் சோசலிசத்திற்கான பரந்த போராட்டத்தின் ஒரு பகுதியாக, ஒரு சோசலிச வேலைத்திட்டத்திற்கு அர்ப்பணித்துக்கொண்ட தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் அரசாங்கத்தை அமைப்பதற்காக, கிராமப்புற ஏழைகளையும் அணிதிரட்டிக்கொண்ட, தொழிலாள வர்க்கத்தின் ஒரு பாரிய புரட்சிகர இயக்கத்திற்கான அடிப்படையை உருவாக்கும்.

இலங்கையின் ஜே.வி.பி. 'நாட்டைக் காப்பாற்ற' அதிகாரத்தை பெற முயற்சிக்கின்றது

உள்ளூராட்சித் தேர்தல்கள் இரத்து செய்யப்படுவதற்கு எதிராக ஞாயிற்றுக்கிழமை நடந்த ஆர்ப்பாட்டத்தின் மீதான பொலிஸ் தாக்குதலை இலங்கை சோ.ச.க. கண்டிக்கிறது

சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள்: இலங்கை ஆளும் உயரடுக்கு அதன் கொடூரமான சாதனையை கொண்டாடுகிறது

Loading